1பின்பு சாமுவேல் சவுலை நோக்கி: இஸ்ரவேலராகிய தம்முடைய ஜனங்கள்மேல் உம்மை ராஜாவாக அபிஷேகம்பண்ணுகிறதற்குக் கர்த்தர் என்னை அனுப்பினாரே; இப்போதும் கர்த்தருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேளும்:
2சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன்.
3இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்று போடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான்.
4அப்பொழுது சவுல்: இதை ஜனங்களுக்கு அறியப்படுத்தி, தெலாயிமிலே அவர்களைத் தொகை பார்த்தான்; அவர்கள் இரண்டு லட்சம் காலாட்களும், யூதா ஜனங்கள் பதினாயிரம்பேருமாயிருந்தார்கள்.
5சவுல் அமலேக்குடைய பட்டணமட்டும் வந்து, பள்ளத்தாக்கிலே ஒரு பதிவிடையை வைத்தான்.
6சவுல் கேனியரை நோக்கி: நான் அமலேக்கியரோடேகூட உங்களையும் வாரிக்கொள்ளாதபடிக்கு, நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டு விலகிப்போங்கள்; இஸ்ரவேல் எகிப்திலிருந்து வந்தபோது, நீங்கள் அவர்கள் எல்லாருக்கும் தயவுசெய்தீர்கள் என்றான்; அப்படியே கேனியர் அமலேக்கியரின் நடுவிலிருந்து விலகிப்போனார்கள்.
7அப்பொழுது சவுல்: ஆவிலாதுவக்கி எகிப்திற்கு எதிரேயிருக்கிற சூருக்குப்போகும் எல்லைமட்டும் இருந்த அமலேக்கியரை மடங்கடித்து,
8அமலேக்கியரின் ராஜாவாகிய ஆகாகை உயிரோடே பிடித்தான்; ஜனங்கள் யாவரையும் பட்டயக் கருக்கினாலே சங்காரம்பண்ணினான்.
9சவுலும் ஜனங்களும் ஆகாகையும், ஆடுமாடுகளில் முதல்தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப்போட மனதில்லாமல் தப்பவைத்து, அற்பமானவைகளும் உதவாதவைகளுமான சகல வஸ்துக்களையும் முற்றிலும் அழித்துப்போட்டார்கள்.
10அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை சாமுவேலுக்கு உண்டாகி, அவர் சொன்னது:
11நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது; அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமற்போனான் என்றார்; அப்பொழுது சாமுவேல் மனம் நொந்து, இராமுழுதும் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்.
12மறுநாள் அதிகாலமே சாமுவேல் சவுலைச் சந்திக்கப்போனான்; அப்பொழுது சவுல் கர்மேலுக்கு வந்து, தனக்கு ஒரு ஜெயஸ்தம்பம் நாட்டி, பின்பு பல இடங்களில் சென்று கில்காலுக்குப் போனான் என்று, சாமுவேலுக்கு அறிவிக்கப்பட்டது.
13சாமுவேல் சவுலினிடத்தில் போனான்; சவுல் அவனை நோக்கி: நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்; கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்றினேன் என்றான்.
14அதற்குச் சாமுவேல்: அப்படியானால் என் காதுகளில் விழுகிற ஆடுகளின் சத்தமும், எனக்குக் கேட்கிற மாடுகளின் சத்தமும் என்ன என்றான்.
15அதற்குச் சவுல்: அமலேக்கியரிடத்திலிருந்து அவைகளைக் கொண்டு வந்தார்கள்; ஜனங்கள் ஆடுமாடுகளில் நலமானவைகளை உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்குத் தப்பவைத்தார்கள்; மற்றவைகளை முற்றிலும் அழித்துப்போட்டோம் என்றான்.
16அப்பொழுது சாமுவேல்: அந்தப் பேச்சை விடும், கர்த்தர் இந்த இராத்திரியிலே எனக்குச் சொன்னதை உமக்கு அறிவிக்கிறேன் என்று சவுலோடே சொன்னான். அவன்: சொல்லும் என்றான்.
17அப்பொழுது சாமுவேல்: நீர் உம்முடைய பார்வைக்குச் சிறியவராயிருந்தபோது அல்லவோ இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவரானீர்; கர்த்தர் உம்மை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணுவித்தாரே.
18இப்போதும் கர்த்தர்: நீ போய் அமலேக்கியராகிய அந்தப் பாவிகளைச் சங்கரித்து, அவர்களை நிர்மூலமாக்கித் தீருமட்டும், அவர்களோடு யுத்தம்பண்ணு என்று சொல்லி, உம்மை அந்த வழியாய் அனுப்பினார்.
19இப்படியிருக்க, நீர் கர்த்தருடைய சொல்லைக்கேளாமல், கொள்ளையின்மேல் பறந்து, கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தது என்ன என்றான்.
20சவுல் சாமுவேலை நோக்கி: நான் கர்த்தருடைய சொல்லைக் கேட்டு, கர்த்தர் என்னை அனுப்பின வழியாய்ப் போய், அமலேக்கின் ராஜாவாகிய ஆகாகைக் கொண்டுவந்து, அமலேக்கியரைச் சங்காரம் பண்ணினேன்.
21ஜனங்களோ உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குக் கில்காலிலே பலியிடுகிறதற்காக, கொள்ளையிலே சாபத்தீடாகும் ஆடுமாடுகளிலே பிரதானமானவைகளைப் பிடித்துக்கொண்டு வந்தார்கள் என்றான்.
22அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்.
23இரண்டகம்பண்ணுதல் பில்லிசூனிய பாவத்திற்கும், முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது; நீர் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினார் என்றான்.
24அப்பொழுது சவுல் சாமுவேலை நோக்கி: நான் கர்த்தருடைய கட்டளையையும் உம்முடைய வார்த்தைகளையும் மீறினதினாலே பாவஞ்செய்தேன்; நான் ஜனங்களுக்குப் பயந்து, அவர்கள் சொல்லைக் கேட்டேன்.
25இப்போதும் நீர் என் பாவத்தை மன்னித்து, நான் கர்த்தரைப் பணிந்துகொள்ளும்படிக்கு, என்னோடேகூடத் திரும்பிவாரும் என்றான்.
26சாமுவேல் சவுலைப் பார்த்து: நான் உம்மோடேகூடத் திரும்பிவருவதில்லை; கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தீர்; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, கர்த்தர் உம்மையும் புறக்கணித்துத் தள்ளினார் என்றான்.
27போகும்படி சாமுவேல் திரும்புகிறபோது, சவுல், அவன் சால்வையின் தொங்கலைப் பிடித்துக் கொண்டான், அது கிழிந்துபோயிற்று.
28அப்பொழுது சாமுவேல் அவனை நோக்கி: கர்த்தர் இன்று உம்மிடத்திலிருந்த இஸ்ரவேலின் ராஜ்யத்தைக் கிழித்துப்போட்டு, உம்மைப்பார்க்கிலும் உத்தமனாயிருக்கிற உம்முடைய தோழனுக்கு அதைக் கொடுத்தார்.
29இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறதும் இல்லை; தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை; மனம் மாற அவர் மனுஷன் அல்ல என்றான்.
30அதற்கு அவன்: நான் பாவஞ்செய்தேன்; இப்போது என் ஜனத்தின் மூப்பருக்கு முன்பாகவும், இஸ்ரவேலுக்கு முன்பாகவும் நீர் என்னைக் கனம்பண்ணி, நான் உம்முடைய தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொள்ளும்படிக்கு, என்னோடேகூடத் திரும்பிவாரும் என்றான்.
31அப்பொழுது சாமுவேல் திரும்பிச் சவுலுக்குப் பின்சென்றான்; சவுல் கர்த்தரைப் பணிந்துகொண்டான்.
32பின்பு சாமுவேல்: அமலேக்கின் ராஜாவாகிய ஆகாகை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்; ஆகாக் சந்தோஷமாய் அவனிடத்தில் வந்து, மரணத்தின் கசப்பு அற்றுப்போனது நிச்சயம் என்றான்.
33சாமுவேல்: உன் பட்டயம் ஸ்திரீகளைப் பிள்ளையற்றவர்களாக்கினதுபோல, ஸ்திரீகளுக்குள்ளே உன் தாயும் பிள்ளையற்றவளாவாள் என்று சொல்லி, சாமுவேல் கில்காலிலே கர்த்தருக்கு முன்பாக ஆகாகைத் துண்டித்துப் போட்டான்.
34பின்பு சாமுவேல் ராமாவுக்குப் போனான்; சவுலோ தன் ஊராகிய கிபியாவிலிருக்கிற தன் வீட்டுக்குப் போய்விட்டான்.
35சவுல் மரணமடையும் நாள்மட்டும் சாமுவேல் அப்புறம் அவனைக் கண்டு பேசவில்லை; இஸ்ரவேலின்மேல் சவுலை ராஜாவாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டதினிமித்தம், சாமுவேல் சவுலுக்காகத் துக்கித்துக் கொண்டிருந்தான்.
1எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.
2ஆதலால் அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்; அப்படி எதிர்த்து நிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்ளுகிறார்கள்.
3மேலும் அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல, துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்; ஆகையால் நீ அதிகாரத்திற்குப் பயப்படாதிருக்கவேண்டுமானால், நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும்.
4உனக்கு நன்மை உண்டாகும்பொருட்டு, அவன் தேவவூழியக்காரனாயிருக்கிறான். நீ தீமைசெய்தால் பயந்திரு; பட்டயத்தை அவன் விருதாவாய்ப் பிடித்திருக்கவில்லை; தீமைசெய்கிறவன்மேல் கோபாக்கினை வரப்பண்ணும்படி, அவன் நீதியைச் செலுத்துகிற தேவவூழியக்காரனாயிருக்கிறானே.
5ஆகையால், நீங்கள் கோபாக்கினையினிமித்தம் மாத்திரமல்ல, மனச்சாட்சியினிமித்தமும் கீழ்ப்படியவேண்டும்.
6இதற்காகவே நீங்கள் வரியையும் கொடுக்கிறீர்கள். அவர்கள் இந்த வேலையைப் பார்த்துவருகிற தேவவூழியக்காரராயிருக்கிறார்களே.
7ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்.
8ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்.
9எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சியாதிருப்பாயாக என்கிற இந்தக் கற்பனைகளும், வேறே எந்தக் கற்பனையும், உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது.
10அன்பானது பிறனுக்குப் பொல்லாங்கு செய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது.
11நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப்பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது.
12இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று; ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம்.
13களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும், பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்.
14துர்யிச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.
1சிதேக்கியா ராஜாவாகிறபோது இருபத்தொரு வயதாயிருந்தான்; அவன் பதினொரு வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; அவனுடைய தாயின் பேர் அமூத்தாள், அவள் லீப்னா ஊரானாகிய எரேமியாவின் குமாரத்தி.
2யோயாக்கீம் செய்தபடியெல்லாம் அவனும் கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
3எருசலேமையும் யூதாவையும் கர்த்தர் தம்முடைய சமுகத்தைவிட்டு அகற்றித் தீருமளவும், அவைகளின் மேலுள்ள அவருடைய கோபத்தினால் இப்படி நடந்ததும் அல்லாமல், சிதேக்கியா பாபிலோன் ராஜாவுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினான்.
4அவன் ராஜ்யபாரம்பண்ணும் ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதம் பத்தாந்தேதியிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும், அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதற்கு எதிராகப் பாளயமிறங்கி, சுற்றிலும் அதற்கு எதிராகக் கொத்தளங்களைக் கட்டினார்கள்.
5அப்படியே சிதேக்கியா ராஜாவின் பதினோராம் வருஷமட்டும் நகரம் முற்றிக்கை போடப்பட்டிருந்தது.
6நாலாம் மாதம் ஒன்பதாம் தேதியிலே பஞ்சம் நகரத்திலே அதிகரித்து, தேசத்தின் ஜனத்துக்கு ஆகாரமில்லாமல்போயிற்று.
7நகரத்தின் மதில் இடிக்கப்பட்டது; அப்பொழுது கல்தேயர் நகரத்தைச் சூழ்ந்திருக்கையில், யுத்த மனுஷர் எல்லாரும் இராத்திரிகாலத்தில் ஓடி, ராஜாவுடைய தோட்டத்தின் வழியே இரண்டு மதில்களுக்கும் நடுவான வாசலால் நகரத்திலிருந்து புறப்பட்டு, வயல்வெளியின் வழியே போய்விட்டார்கள்.
8ஆனாலும் கல்தேயருடைய இராணுவத்தார் ராஜாவைப் பின்தொடர்ந்து, எரிகோவின் சமனான பூமியில் சிதேக்கியாவைக் கிட்டினார்கள்; அப்பொழுது அவனுடைய இராணுவத்தார் எல்லாரும் அவனைவிட்டுச் சிதறிப்போயிருந்தார்கள்.
9அவர்கள் ராஜாவைப் பிடித்து, அவனை ஆமாத் தேசத்தின் ஊராகிய ரிப்லாவுக்குப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடத்துக்குக் கொண்டுபோனார்கள்; அங்கே இவனுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுத்தான்.
10பின்பு பாபிலோன் ராஜா சிதேக்கியாவின் குமாரரை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டினான்; யூதாவின் பிரபுக்களெல்லாரையும் ரிப்லாவிலே வெட்டினான்.
11சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி, அவனுக்கு இரண்டு விலங்குகளைப் போடுவித்தான்; பின்பு பாபிலோன் ராஜா அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய், அவன் மரணமடையும் நாள்மட்டும் அவனைக் காவல் வீட்டில் அடைத்துவைத்தான்.
12ஐந்தாம் மாதம் பத்தாந்தேதியிலே, பாபிலோன் ராஜாவுக்கு முன்பாக நிற்கிறவனாகிய காவற்சேனாதிபதியான நேபுசராதான் எருசலேமுக்கு வந்தான்; அது நேபுகாத்நேச்சார் என்னும் ராஜா பாபிலோனை அரசாளுகிற பத்தொன்பதாம் வருஷமாயிருந்தது.
13அவன் கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜாவின் அரமனையையும், எருசலேமிலுள்ள எல்லா வீடுகளையும், ஒவ்வொரு பெரிய மனிதனுடைய வீட்டையும் அக்கினியினால் சுட்டெரித்துப்போட்டான்.
14காவற்சேனாதிபதியோடிருந்த கல்தேயரின் இராணுவத்தாரெல்லாரும் எருசலேமைச் சுற்றிலும் இருந்த அலங்கங்களை இடித்துப்போட்டார்கள்.
15ஜனத்தில் ஏழைகளான சிலரையும் நகரத்தில் மீதியான மற்ற ஜனத்தையும், பாபிலோன் ராஜாவின் வசமாக ஓடிவந்துவிட்டவர்களையும், மற்ற ஜனங்களையும் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் சிறைகளாகக் கொண்டுபோனான்.
16ஆனால் தேசத்தாரில் ஏழைகளான சிலரைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் திராட்சத்தோட்டக்காரராகவும் பயிரிடுங்குடிகளாகவும் விட்டுவைத்தான்.
17கர்த்தருடைய ஆலயத்திலிருந்த வெண்கலத் தூண்களையும், கர்த்தருடைய ஆலயத்திலிருந்த ஆதாரங்களையும், வெண்கலக் கடல்தொட்டியையும் கல்தேயர் உடைத்துப்போட்டு, அவைகளின் வெண்கலத்தையெல்லாம் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டுபோனார்கள்.
18செப்புச்சட்டிகளையும், சாம்பல் எடுக்கும் கரண்டிகளையும், வெட்டுக்கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், ஆராதனைக்குரிய சகல வெண்கலப்பணிமுட்டுகளையும் எடுத்துக்கொண்டுபோனார்கள்.
19பசும்பொன்னும் சுத்தவெள்ளியுமான கிண்ணங்களையும், தூபகலசங்களையும், கலங்களையும், சட்டிகளையும், விளக்குத்தண்டுகளையும், கலயங்களையும், கரகங்களையும் காவற்சேனாதிபதி எடுத்துக்கொண்டான்.
20சாலொமோன் ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்காகச் செய்து வைத்த இரண்டு தூண்களும் ஒரு கடல்தொட்டியும் ஆதாரங்களின் கீழ்நின்ற பன்னிரண்டு வெண்கல ரிஷபங்களும் ஆகிய இவைகளுக்குரிய வெண்கலத்துக்கு நிறையில்லை.
21அந்தத் தூண்களோவெனில், ஒவ்வொரு தூண் பதினெட்டுமுழ உயரமாயிருந்தது; பன்னிரண்டு முழ நூல் அதைச் சுற்றும்; நாலு விரற்கடை அதின் கனம்; உள்ளே குழாயாயிருந்தது.
22அதின்மேல் வெண்கலக் குமிழ் இருந்தது; ஒரு குமிழின் உயரம் ஐந்து முழம், குமிழிலே சுற்றிலும் பின்னலும் மாதளம்பழங்களும் செய்திருந்தது; எல்லாம் வெண்கலமாயிருந்தது; அதற்குச் சரியாய் மற்றத் தூணுக்கும் மாதளம்பழங்களும் செய்திருந்தது.
23தொண்ணூற்றாறு மாதளம்பழங்கள் நான்கு திசைகளுக்கும் எதிராகச் செய்திருந்தது; குமிழைச் சுற்றிலும் செய்திருந்த மாதளம்பழங்கள் நூறு.
24காவற்சேனாதிபதி பிரதானஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாசற்படியின் மூன்று காவற்காரரையும் பிடித்துக்கொண்டுபோனான்.
25நகரத்திலோவென்றால் அவன் யுத்தமனுஷரின் விசாரிப்புக்காரனாகிய பிரதானி ஒருவனையும், ராஜாவின் மந்திரிகளில் நகரத்தில் அகப்பட்ட ஏழுபேரையும், தேசத்தின் ஜனத்தைச் சேவகம் எழுதுகிற தலைமையான சம்பிரதியையும், தேசத்து ஜனத்திலே பட்டணத்தின் நடுவில் அகப்பட்ட அறுபது பேரையும் பிடித்துக்கொண்டுபோனான்.
26அவர்களைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் பிடித்து, அவர்களை ரிப்லாவுக்குப் பாபிலோன் ராஜாவினிடத்திற்குக் கொண்டுபோய்விட்டான்.
27அப்பொழுது பாபிலோன் ராஜா ஆமாத் என்னும் தேசத்தின் பட்டணமாகிய ரிப்லாவிலே அவர்களை வெட்டிக்கொன்றுபோட்டான்; இவ்விதமாக யூதர்கள் தங்கள் தேசத்திலிருந்து சிறைகளாய்க் கொண்டுபோகப்பட்டார்கள்.
28நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போன ஜனங்களின் தொகை எவ்வளவென்றால், ஏழாம் வருஷத்தில் மூவாயிரத்து இருபத்து மூன்று யூதரும்,
29நேபுகாத்நேச்சாருடைய பதினெட்டாம் வருஷத்தில் எருசலேமிலிருந்து எண்ணூற்று முப்பத்திரண்டு பேர்களும் கொண்டுபோகப்பட்டார்கள்.
30நேபுகாத்நேச்சாருடைய இருபத்துமூன்றாம் வருஷத்தில் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் யூதரில் எழுநூற்று நாற்பத்தைந்துபேர்களைச் சிறைபிடித்துக்கொண்டுபோனான்; ஆக நாலாயிரத்து அறுநூறு பேர்களாம்.
31யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனுடைய சிறையிருப்பின் முப்பத்தேழாம் வருஷம் பன்னிரண்டாம் மாதம் இருபத்தைந்தாம் தேதியிலே, ஏவில்மெரொதாக் என்னும் பாபிலோன் ராஜா, தான் ராஜாவான வருஷத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து வெளிப்படப்பண்ணி, அவன் தலையை உயர்த்தி.
32அவனோடே அன்பாய்ப் பேசி, அவனுடைய ஆசனத்தைத் தன்னோடே பாபிலோனில் இருந்த ராஜாக்களுடைய ஆசனங்களுக்கு மேலாக வைத்து,
33அவனுடைய சிறையிருப்பு வஸ்திரங்களை மாற்றினான்; அவன் உயிரோடிருந்த சகல நாளும் தன் சமுகத்தில் நித்தம் போஜனம்பண்ணும்படிசெய்தான்.
34அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவனுடைய மரணநாள் பரியந்தமும், அவனுடைய செலவுக்காகப் பாபிலோன் ராஜாவினால் கட்டளையான அநுதினத் திட்டத்தின்படி, அநுதினமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டுவந்தது.
1கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருக்காலும் வெட்கமடையாதபடி செய்யும்; உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும்.
2உமது செவியை எனக்குச் சாய்த்து, சீக்கிரமாய் என்னைத் தப்புவியும்; நீர் எனக்குப் பலத்த துருகமும், எனக்கு அடைக்கலமான அரணுமாயிரும்.
3என் கன்மலையும் என் கோட்டையும் நீரே; உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி, என்னை நடத்தியருளும்.
4அவர்கள் எனக்கு மறைவாய் வைத்த வலைக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; தேவரீரே எனக்கு அரண்.
5உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்; சத்தியபரனாகிய கர்த்தாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர்.
6வீண்மாயைகளைப் பற்றிக்கொள்ளுகிறவர்களை நான் வெறுத்து, கர்த்தரையே நம்பியிருக்கிறேன்.
7உமது, கிருபையிலே களிகூர்ந்து மகிழுவேன்; நீர் என் உபத்திரவத்தைப் பார்த்து, என் ஆத்தும வியாகுலங்களை அறிந்திருக்கிறீர்.
8சத்துருவின் கையில் என்னை ஒப்புக்கொடாமல், என் பாதங்களை விசாலத்திலே நிறுத்தினீர்.
9எனக்கு இரங்கும் கர்த்தாவே, நான் நெருக்கப்படுகிறேன்; துக்கத்தினால் என் கண்ணும் என் ஆத்துமாவும் என் வயிறுங்கூடக் கருகிப்போயிற்று.
10என் பிராணன் சஞ்சலத்தினாலும், என் வருஷங்கள் தவிப்பினாலும் கழிந்துபோயிற்று; என் அக்கிரமத்தினாலே என் பெலன் குறைந்து, என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று.
11என் சத்துருக்களாகிய யாவர் நிமித்தமும், நான் என் அயலாருக்கு நிந்தையும், எனக்கு அறிமுகமானவர்களுக்கு அருக்களிப்புமானேன்; வீதியிலே என்னைக் கண்டவர்கள் எனக்கு விலகி ஓடிப்போனார்கள்.
12செத்தவனைப்போல எல்லாராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்; உடைந்த பாத்திரத்தைப்போலானேன்.
13அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன்; எனக்கு விரோதமாக அவர்கள் ஏகமாய் ஆலோசனை பண்ணுகிறதினால் திகில் என்னைச் சூழ்ந்துகொண்டது; என் பிராணனை வாங்கத்தேடுகிறார்கள்.
14நானோ, கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நீரே என் தேவன் என்று சொன்னேன்.
15என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது; என் சத்துருக்களின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் என்னைத் தப்புவியும்.
16நீர் உமது முகத்தை உமது ஊழியக்காரன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உமது கிருபையினாலே என்னை இரட்சியும்.
17கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; துன்மார்க்கர் வெட்கப்பட்டுப் பாதாளத்தில் மவுனமாயிருக்கட்டும்.
18நீதிமானுக்கு விரோதமாய்ப் பெருமையோடும் இகழ்ச்சியோடும் கடினமாய்ப் பேசுகிற பொய் உதடுகள் கட்டப்பட்டுப்போவதாக.
19உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டு பண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது!
20மனுஷருடைய அகங்காரத்துக்கு அவர்களை உமது சமுகத்தின் மறைவிலே மறைத்து, நாவுகளின் சண்டைக்கு அவர்களை விலக்கி, உமது கூடாரத்திலே ஒளித்துவைத்துக் காப்பாற்றுகிறீர்.
21கர்த்தர் அரணான நகரத்தில் எனக்குத் தமது கிருபையை அதிசயமாய் விளங்கப்பண்ணினபடியால், அவருக்கு ஸ்தோத்திரம்.
22உம்முடைய கண்களுக்கு முன்பாக இராதபடிக்கு வெட்டுண்டேன் என்று நான் என் மனக்கலக்கத்திலே சொன்னேன்; ஆனாலும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டபோது, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டீர்.
23கர்த்தருடைய பரிசுத்தவான்களே, நீங்களெல்லாரும் அவரில் அன்பு கூருங்கள்; உண்மையானவனைக் கர்த்தர் தற்காத்து, இடும்பு செய்கிறவனுக்குப் பூரணமாய்ப் பதிலளிப்பார்.
24கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com