‹ முகப்புமுழுத் திட்டம்

ஆகஸ்ட் 28 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்ஆகஸ்ட் 28அடுத்த நாள் ›
குடும்பம்

I சாமுவேல் 20

முழு அதிகாரம் ›

1தாவீது ராமாவுக்கடுத்த நாயோதிலிருந்து ஓடிப்போய், யோனத்தான் முன்பாக வந்து: உம்முடைய தகப்பன் என் பிராணனை வாங்கத் தேடுகிறாரே, நான் செய்தது என்ன? என் அக்கிரமம் என்ன? நான் அவருக்குச் செய்த துரோகம் என்ன? என்றான்.

2அதற்கு அவன்: அப்படி ஒருக்காலும் வாராது; நீர் சாவதில்லை, இதோ, எனக்கு அறிவிக்காமல் என் தகப்பன் பெரிய காரியமானாலும், சிறிய காரியமானாலும் ஒன்றும் செய்கிறதில்லை; இந்தக் காரியத்தை என் தகப்பன் எனக்கு மறைப்பானேன்? அப்படி இருக்கமாட்டாது என்றான்.

3அப்பொழுது தாவீது: உம்முடைய கண்களில் எனக்குத் தயை கிடைத்தது என்று உம்முடைய தகப்பன் நன்றாய் அறிவார்; ஆகையால் யோனத்தானுக்கு மனநோவு உண்டாகாதபடிக்கு அவன் இதை அறியப்போகாது என்பார்; மரணத்திற்கும் எனக்கும் ஒரு அடி தூரமாத்திரம் இருக்கிறது என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு நிச்சயமாய்ச் சொல்லுகிறேன் என்று மறுமொழி சொல்லி ஆணையிட்டான்.

4அப்பொழுது யோனத்தான் தாவீதைப் பார்த்து: உமது மனவிருப்பம் இன்னது என்று சொல்லும், அதின்படி உமக்குச் செய்வேன் என்றான்.

5தாவீது யோனத்தானை நோக்கி: இதோ, நாளைக்கு அமாவாசி, நான் ராஜாவோடே பந்தியிருந்து சாப்பிடவேண்டியதாயிருக்கும்; ஆனாலும் நான் மூன்றாம் நாள் சாயங்காலமட்டும் வெளியிலே ஒளித்திருக்கும்படி எனக்கு உத்தரவு கொடும்.

6உம்முடைய தகப்பன் என்னைக்குறித்து விசாரித்தால், தன் ஊராகிய பெத்லகேமிலே தன் குடும்பத்தார் யாவரும் வருஷத்துக்கு ஒருதரம் பலியிட வருகிறபடியால் தாவீது அவ்விடத்திற்குப் போக என்னிடத்தில் வருந்திக் கேட்டான் என்று நீர் சொல்லும்.

7அதற்கு அவர் நல்லது என்றால், உம்முடைய அடியானுக்குச் சமாதானம் இருக்கும்; அவருக்கு எரிச்சலுண்டானால், அவராலே பொல்லாப்புத் தீர்மானப்பட்டிருக்கிறது என்று அறிந்துகொள்வீர்.

8ஆகையால் உம்முடைய அடியானுக்குத் தயை செய்யவேண்டும்; கர்த்தருக்கு முன்பாக உம்முடைய அடியானோடே உடன்படிக்கை பண்ணியிருக்கிறீரே; என்னில் ஒரு அக்கிரமம் இருந்ததேயானால், நீரே என்னைக் கொன்றுபோடும்; நீர் என்னை உம்முடைய தகப்பனிடத்துக்குக் கொண்டு போகவேண்டியது என்ன என்றான்.

9அப்பொழுது யோனத்தான்: அப்படி உமக்கு வராதிருப்பதாக; உமக்குப் பொல்லாப்புச் செய்ய என் தகப்பனாலே தீர்மானித்திருக்கிறது என்று நான் நிச்சயமாய் அறிந்தேனானால் நான் அதை உமக்கு அறிவிக்காதிருப்பேனா என்றான்.

10தாவீது யோனத்தானை நோக்கி: உம்முடைய தகப்பன் கடினமான உத்தரம் சொன்னால் அதை யார் எனக்கு அறிவிப்பார் என்றான்.

11அப்பொழுது யோனத்தான் தாவீதைப் பார்த்து: ஊருக்கு வெளியே போவோம் வாரும் என்றான்; இருவரும் வெளியே புறப்பட்டுப்போனார்கள்.

12அப்பொழுது யோனத்தான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை முன்னிட்டுத் தாவீதை நோக்கி: நான் நாளையாவது மறுநாளிலாவது என் தகப்பனுடைய மனதை அறிந்துகொண்டு, அவர் தாவீதின்மேல் தயவாயிருக்கிறார் என்று கண்டும், அதை அப்போது உமது செவிகளுக்கு வெளிப்படுத்தும்படிக்கு, உமக்குச் சொல்லியனுப்பாதிருந்தால்,

13இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் யோனத்தானுக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர்; ஆனாலும் உமக்குத் தீங்குசெய்ய என் தகப்பனுக்குப் பிரியமாயிருந்தால், அதை உமது செவிகளுக்கு வெளிப்படுத்தி, நீர் சமாதானத்தோடே போகும்படிக்கு உம்மை அனுப்பிவிடுவேன்; கர்த்தர் என் தகப்பனோடு இருந்ததுபோல், உம்மோடும் இருப்பாராக.

14மேலும், நான் உயிரோடிருக்கையில், நான் சாகாதபடிக்கு நீர் கர்த்தரின் நிமித்தமாய் எனக்குத் தயை செய்யவேண்டியதும் அல்லாமல்,

15கர்த்தர் தாவீதின் சத்துருக்களாகிய ஒவ்வொருவரையும் பூமியின்மேல் இராதபடிக்கு, வேர் அறுக்கும்போதும், நீர் என்றைக்கும் உமது தயவை என் வீட்டைவிட்டு அகற்றிவிடாமலும் இருக்கவேண்டும் என்றான்.

16இப்படி யோனத்தான் தாவீதின் குடும்பத்தோடே உடன்படிக்கைபண்ணி, தாவீதுடைய சத்துருக்களின் கையிலே கர்த்தர் கணக்குக் கேட்பாராக என்று சொல்லி,

17யோனத்தான் தாவீதை மிகவும் சிநேகித்தபடியினால், பின்னும் அவனுக்கு ஆணையிட்டான்; தன் உயிரைச் சிநேகித்ததுபோல அவனைச் சிநேகித்தான்.

18பின்பு யோனத்தான் தாவீதைப் பார்த்து: நாளைக்கு அமாவாசி, நீர் உட்கார வேண்டிய இடம் காலியாயிருப்பதினால் உம்மைக்குறித்து விசாரிக்கப்படும்.

19காரியம் நடந்தபோது, மூன்றாம் நாளிலே நீர் ஒளித்திருக்கும் இடத்திற்குத் தீவிரித்து வந்து, ஏசேல் என்னும் கல்லண்டையிலே உட்கார்ந்திரும்.

20அப்பொழுது நான் குறிப்பு வைத்து எய்கிறதுபோல, அதற்குப் பக்கமாக மூன்று அம்புகளை எய்து:

21நீ போய், அந்த அம்புகளைத் தேடி வா என்று ஒரு பிள்ளையாண்டானை அனுப்புவேன்; இதோ, அம்புகள் உனக்கு இப்புறத்திலே கிடக்கிறது, அவைகளை எடுத்துக்கொண்டுவா என்று பிள்ளையாண்டானிடத்தில் நான் சொன்னால், நீர் வாரும்; அப்பொழுது ஒன்றும் இல்லை, உமக்குச் சமாதானம் இருக்கும் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.

22இதோ, அம்புகள் உனக்கு அப்புறத்திலே கிடக்கிறது என்று நான் அந்தப் பிள்ளையாண்டானிடத்தில் சொன்னால், நீர் போய்விடும்; அப்பொழுது கர்த்தர் உம்மைப் போகச்சொல்லுகிறார் என்று அறியும்.

23நீரும் நானும் பேசிக்கொண்ட காரியத்திற்கு, இதோ, கர்த்தர் எனக்கும் உமக்கும் என்றைக்கும் நடுநிற்கும் சாட்சி என்றான்.

24அப்படியே தாவீது வெளியிலே ஒளித்துக்கொண்டிருந்தான்; அமாவாசியானபோது ராஜா போஜனம் பண்ண உட்கார்ந்தான்.

25ராஜா சுவரண்டையிலிருக்கிற தன் இடத்தில் எப்போதும்போல் உட்கார்ந்தபோது, யோனத்தான் எழுந்திருந்தான்; அப்னேரோ சவுலுடைய பக்கத்தில் உட்கார்ந்தான்; தாவீது இருக்கும் இடம் காலியாயிருந்தது.

26ஆனாலும் அவன் தீட்டாயிருக்கிறானாக்கும், அவன் தீட்டுப்பட்டுத்தான் இருக்கவேண்டும் என்று அன்றையதினம் சவுல் ஒன்றும் சொல்லவில்லை.

27அமாவாசிக்கு மறுநாளிலும் தாவீது இருக்கும் இடம் காலியாயிருந்தது; அப்பொழுது சவுல்: ஈசாயின் மகன் நேற்றும் இன்றும் போஜனத்துக்கு வராதேபோனது என்ன என்று தன் குமாரனாகிய யோனத்தானைக் கேட்டான்.

28யோனத்தான் சவுலுக்குப் பிரதியுத்தரமாக: பெத்லெகேம்மட்டும் போக, தாவீது என்னிடத்தில் வருந்திக்கேட்டு,

29அங்கே நான் போகவேண்டும்; எங்கள் குடும்பத்தார் ஊரிலே பலியிடப் போகிறார்கள்; என் தமையன் என்னை வரும்படி கட்டளையிட்டார்; உம்முடைய கண்களில் எனக்குத் தயை கிடைத்ததானால், நான் என் சகோதரரைப் பார்க்கிறதற்குப் போக எனக்கு உத்தரவு கொடும் என்றான்; இதனாலேதான் அவன் ராஜாவின் பந்திக்கு வரவில்லை என்றான்.

30அப்பொழுது சவுல் யோனத்தான்மேல் கோபமூண்டவனாகி, அவனைப் பார்த்து: இரண்டகமும் மாறுபாடுமுள்ளவளின் மகனே, நீ உனக்கு வெட்கமாகவும், உன் தாயின் மானத்திற்கு வெட்கமாகவும், ஈசாயின் மகனைத் தோழனாகத் தெரிந்து கொண்டிருக்கிறதை நான் அறியேனோ?

31ஈசாயின் மகன் பூமியின்மேல் உயிரோடிருக்கும் நாள்வரையும் நீயானாலும், உன் ராஜ்யபாரமானாலும் நிலைப்படுவதில்லை; இப்போதே அவனை அழைப்பித்து, என்னிடத்தில் கொண்டுவா; அவன் சாகவேண்டும் என்றான்.

32யோனத்தான் தன் தகப்பனாகிய சவுலுக்குப் பிரதியுத்தரமாக; அவன் ஏன் கொல்லப்படவேண்டும்? அவன் என்ன செய்தான் என்றான்.

33அப்பொழுது சவுல்: அவனைக் குத்திப்போட அவன்மேல் ஈட்டியை எறிந்தான்; ஆகையால் தாவீதைக் கொன்றுபோடத் தன் தகப்பன் தீர்மானித்திருக்கிறான் என்பதை யோனத்தான் அறிந்துகொண்டு,

34கோபதாபமாய் பந்தியைவிட்டு எழுந்திருந்துபோய், அமாவாசியின் மறுநாளாகிய அன்றையதினம் போஜனம்பண்ணாதிருந்தான்; தன் தகப்பன் தாவீதை நிந்தித்துச் சொன்னது அவனுக்கு மனநோவாயிருந்தது.

35மறுநாள் காலமே, யோனத்தான் தாவீதுக்குக் குறித்த நேரத்திலே ஒரு சிறுபிள்ளையாண்டானைக் கூட்டிக்கொண்டு, வெளியே புறப்பட்டுப்போய்:

36பிள்ளையாண்டானை நோக்கி: நீ ஓடி, நான் எய்கிற அம்புகளைத் தேடி எடுத்துக்கொண்டுவா என்று சொல்லி, அந்தப் பிள்ளையாண்டான் ஓடும்போது, அவனுக்கு அப்பாலே போகும்படி ஒரு அம்பை எய்தான்.

37யோனத்தான் எய்த அம்பிருக்கும் இடமட்டும் பிள்ளையாண்டான் போனபோது, அம்பு உனக்கு இன்னும் அப்பால் இருக்கிறது அல்லவா என்று யோனத்தான் பிள்ளையாண்டானுக்குப் பிறகேயிருந்து கூப்பிட்டான்.

38நீ தரித்து நிற்காமல் தீவிரித்துப் பொட்டெனப்போ என்றும் யோனத்தான் பிள்ளையாண்டானுக்குப் பிறகேயிருந்து கூப்பிட்டான்; அப்படியே யோனத்தானின் பிள்ளையாண்டான் அம்புகளைப் பொறுக்கி, தன் எஜமானிடத்தில் கொண்டு வந்தான்.

39அந்தக் காரியம் யோனத்தானுக்கும் தாவீதுக்கும் தெரிந்திருந்ததேயல்லாமல், அந்தப் பிள்ளையாண்டானுக்கு ஒன்றும் தெரியாதிருந்தது.

40அப்பொழுது யோனத்தான்: தன் ஆயுதங்களைப் பிள்ளையாண்டானிடத்தில் கொடுத்து, இவைகளைப் பட்டணத்திற்குக் கொண்டுபோ என்றான்.

41பிள்ளையாண்டான் போனபின்பு, தாவீது தென்புறமான இடத்திலிருந்து எழுந்து வந்து, தரையிலே முகங்குப்புற விழுந்து, மூன்று விசை வணங்கினான்; அவர்கள் ஒருவரை ஒருவர் முத்தஞ்செய்து அழுதார்கள்; தாவீது மிகவும் அழுதான்.

42அப்பொழுது யோனத்தான் தாவீதை நோக்கி: நீர் சமாதானத்தோடே போம், கர்த்தர் என்றைக்கும் எனக்கும் உமக்கும், என் சந்ததிக்கும் உமது சந்ததிக்கும், நடுநிற்கும் சாட்சி என்று சொல்லி, கர்த்தருடைய நாமத்தைக்கொண்டு நாம் இருவரும் ஆணையிட்டுக்கொண்டதை நினைத்துக்கொள்ளும் என்றான். (43) பின்பு அவன் எழுந்து புறப்பட்டுப் போனான்; யோனத்தானோ பட்டணத்திற்குப் போய்விட்டான்.

I கொரிந்தியர் 2

முழு அதிகாரம் ›

1சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்தபோது, தேவனைப்பற்றிய சாட்சியைச் சிறந்த வசனிப்போடாவது ஞானத்தோடாவது அறிவிக்கிறவனாக வரவில்லை.

2இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்.

3அல்லாமலும் நான் பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடத்தில் இருந்தேன்.

4உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு,

5என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது.

6அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல,

7உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம்.

8அதை இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே.

9எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை;

10நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார்.

11மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்.

12நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.

13அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக்காண்பிக்கிறோம்.

14ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்.

15ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.

16கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்? எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது.

தனிவாசிப்பு

1கர்த்தாவே, எங்களுக்கு நேரிட்டதை நினைத்தருளும்; எங்கள் நிந்தையை நோக்கிப்பாரும்.

2எங்கள் சுதந்தரம் அந்நியர் வசமாகவும், எங்கள் வீடுகள் புறத்தேசத்தார் வசமாகவும் தாண்டிப்போயின.

3திக்கற்றவர்களானோம், தகப்பன் இல்லை; எங்கள் தாய்கள் விதவைகளைப்போல இருக்கிறார்கள்.

4எங்கள் தண்ணீரைப் பணத்துக்கு வாங்கிக்குடிக்கிறோம்; எங்கள் விறகு விலைக்கிரயமாய் வருகிறது.

5பாரஞ்சுமந்து எங்கள் கழுத்து நோகிறது; நாங்கள் உழைக்கிறோம், எங்களுக்கு இளைப்பாறுதல் இல்லை.

6அப்பத்தால் திருப்தியாகும்படி எகிப்தியருக்கும் அசீரியருக்கும் எங்களைக் கையளித்தோம்.

7எங்கள் பிதாக்கள் பாவஞ்செய்து மாண்டுபோனார்கள்; நாங்கள் அவர்களுடைய அக்கிரமங்களைச் சுமக்கிறோம்.

8அடிமைகள் எங்களை ஆளுகிறார்கள்; எங்களை அவர்கள் கையிலிருந்து விடுவிப்பாரில்லை.

9வனாந்தரத்தில் இருக்கிற பட்டயத்தினால் பிராணமோசத்துக்கு ஏதுவானவர்களாய் எங்கள் அப்பத்தை தேடுகிறோம்.

10பஞ்சத்தின் கொடுமையினால் எங்கள் தோல் அடுப்பங்கரையைப்போல் கறுத்துப்போயிற்று.

11சீயோனில் இருந்த ஸ்திரீகளையும் யூதா பட்டணங்களில் இருந்த கன்னிகைகளையும் அவமானப்படுத்தினார்கள்.

12பிரபுக்களுடைய கைகளை அவர்கள் கட்டி, அவர்களை ஏறத்தூக்கினார்கள்; முதியோரின் முகங்கள் மதிக்கப்படவில்லை.

13வாலிபரை எந்திரம் அரைக்கக்கொண்டுபோனார்கள்; இளைஞர் விறகு சுமந்து இடறிவிழுகிறார்கள்.

14முதியோர்கள் வாசல்களில் உட்காருகிறதும், வாலிபர் கின்னரங்களை வாசிக்கிறதும் நின்றுபோயிற்று.

15எங்கள் இருதயத்தின் களிகூருதல் ஒழிந்துபோயிற்று; எங்கள் சந்தோஷம் துக்கமாய் மாறிற்று.

16எங்கள் தலையிலிருந்து கிரீடம் விழுந்தது; ஐயோ! நாங்கள் பாவஞ்செய்தோமே.

17அதினால் எங்கள் இருதயம் பலட்சயமாயிற்று; அதினால் எங்கள் கண்கள் இருண்டுபோயின.

18பாழாய்க்கிடக்கிற சீயோன் மலையின்மேல் நரிகள் ஓடித்திரிகிறது.

19கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய சிங்காசனம் தலைமுறை தலைமுறையாக நிலைநிற்கும்.

20தேவரீர் என்றைக்கும் எங்களை மறந்து, நெடுங்காலமாக எங்களைக் கைவிட்டிருப்பதென்ன?

21கர்த்தாவே, எங்களை உம்மிடத்தில் திருப்பிக்கொள்ளும், அப்பொழுது திரும்புவோம்; பூர்வகாலத்திலிருந்ததுபோல எங்கள் நாட்களைப் புதியவைகளாக்கும்.

22எங்களை முற்றிலும் வெறுத்துவிடுவீரோ? எங்கள்பேரில் கடுங்கோபமாயிருக்கிறீரே!

1துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும்; அவன் கண்களுக்குமுன் தெய்வபயம் இல்லை.

2அவன், தன் அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படுமளவும், தன் பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே இச்சகம் பேசுகிறான்.

3அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது; புத்தியாய் நடந்துகொள்வதையும் நன்மை செய்வதையும் விட்டுவிட்டான்.

4அவன் தன் படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசித்து, நல்லதல்லாத வழியிலே நிலைத்து, பொல்லாப்பை வெறுக்காதிருக்கிறான்.

5கர்த்தாவே, உமது கிருபை வானங்களில் விளங்குகிறது; உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தம் எட்டுகிறது.

6உமது நீதி மகத்தான பர்வதங்கள் போலவும், உமது நியாயங்கள் மகா ஆழமாகவும் இருக்கிறது; கர்த்தாவே, மனுஷரையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர்.

7தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்.

8உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர்.

9ஜீவவூற்று உம்மிடத்தில் இருக்கிறது; உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம்.

10உம்மை அறிந்தவர்கள்மேல் உமது கிருபையையும், செம்மையான இருதயமுள்ளவர்கள்மேல் உமது நீதியையும் பாராட்டியருளும்.

11பெருமைக்காரரின் கால் என்மேல் வராமலும், துன்மார்க்கருடைய கை என்னைப் பறக்கடியாமலும் இருப்பதாக.

12அதோ அக்கிரமக்காரர் விழுந்தார்கள்; எழுந்திருக்கமாட்டாமல் தள்ளுண்டுபோனார்கள்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com