‹ முகப்புமுழுத் திட்டம்

ஆகஸ்ட் 27 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்ஆகஸ்ட் 27அடுத்த நாள் ›
குடும்பம்

I சாமுவேல் 19

முழு அதிகாரம் ›

1தாவீதைக் கொன்றுபோடும்படிக்கு, சவுல் தன் குமாரனாகிய யோனத்தானோடும் தன் ஊழியக்காரர் எல்லாரோடும் பேசினான்.

2சவுலின் குமாரனாகிய யோனத்தானோ, தாவீதின்மேல் மிகவும் பிரியமாயிருந்தான்; அதனால் யோனத்தான் தாவீதுக்கு அதை அறிவித்து: என் தகப்பனாகிய சவுல் உம்மைக் கொன்றுபோட வகை தேடுகிறார்; இப்போதும் நாளைக்காலமே நீர் எச்சரிக்கையாயிருந்து, மறைவான இடத்தில் ஒளித்துக்கொண்டிரும்.

3நான் புறப்பட்டுவந்து, நீர் வெளியிலிருக்கும் இடத்தில் என் தகப்பன் பக்கத்திலே நின்று, உமக்காக என் தகப்பனோடே பேசி, நடக்கும் காரியத்தைக் கண்டு, உமக்கு அறிவிப்பேன் என்றான்.

4அப்படியே யோனத்தான் தன் தகப்பனாகிய சவுலோடே தாவீதுக்காக நலமாய்ப் பேசி, ராஜா தம்முடைய அடியானாகிய தாவீதுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதிருப்பாராக; அவன் உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்யவில்லை; அவன் செய்கைகள் உமக்கு மெத்த உபயோகமாயிருக்கிறதே.

5அவன் தன் பிராணனைத் தன் கையிலே வைத்துக்கொண்டு, அந்தப் பெலிஸ்தனைக் கொன்றதினாலே, கர்த்தர் இஸ்ரவேலுக்கெல்லாம் பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டதை நீர் கண்டு, சந்தோஷப்பட்டீரே; இப்போதும் முகாந்தரமில்லாமல் தாவீதைக் கொல்லுகிறதினால், குற்றமில்லாத இரத்தத்திற்கு விரோதமாக நீர் பாவஞ்செய்வானேன் என்றான்.

6சவுல் யோனத்தானுடைய சொல்லைக்கேட்டு: அவன் கொலை செய்யப்படுவதில்லை என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டான்.

7பின்பு யோனத்தான் தாவீதை அழைத்து, அந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்து, அவனைச் சவுலண்டையிலே கூட்டிக்கொண்டுபோய் விட்டான்; அப்படியே அவன் முன்போலவே அவனுடைய சமுகத்தில் இருந்தான்.

8மறுபடியும் ஒரு யுத்தம் உண்டாயிற்று; அப்பொழுது தாவீது புறப்பட்டுப் போய், பெலிஸ்தரோடே யுத்தம்பண்ணி, அவர்களுக்குள் மகா சங்காரம்பண்ணினதினால் அவர்கள் அவனுக்கு முன்பாக முறிந்தோடிப்போனார்கள்.

9கர்த்தரால் விடப்பட்ட பொல்லாத ஆவி சவுலின்மேல் வந்தது; அவன் தன் வீட்டில் உட்கார்ந்து, தன் ஈட்டியைக் கையிலே பிடித்துக்கொண்டிருந்தான்; தாவீது தன் கையினாலே சுரமண்டலம் வாசித்தான்.

10அப்பொழுது சவுல்: தாவீதை ஈட்டியினாலே சுவரோடே சேர்த்து உருவக்குத்திப்போடப் பார்த்தான்; ஆனாலும் இவன் சவுலுக்கு விலகினதினாலே, அவன் எறிந்த ஈட்டி சுவரிலே பட்டது; தாவீதோ அன்று இராத்திரி ஓடிப்போய், தன்னைத் தப்புவித்துக்கொண்டான்.

11தாவீதைக் காவல்பண்ணி, மறுநாள் காலமே அவனைக் கொன்று போடும்படிக்கு, சவுல் அவன் வீட்டிற்குச் சேவகரை அனுப்பினான்; இதைத் தாவீதுக்கு அவன் மனைவியாகிய மீகாள் அறிவித்து: நீர் இன்று இராத்திரியில் உம்முடைய பிராணனைத் தப்புவித்துக் கொள்ளாவிட்டால், நாளைக்கு நீர் கொன்று போடப்படுவீர் என்று சொல்லி,

12மீகாள் தாவீதை ஜன்னல் வழியாய் இறக்கிவிட்டாள்; அவன் தப்பி ஓடிப்போனான்.

13மீகாளோ ஒரு சுரூபத்தை எடுத்து, கட்டிலின்மேல் வைத்து, அதின் தலைமாட்டிலே ஒரு வெள்ளாட்டுத் தோலைப் போட்டு, துப்பட்டியினால் மூடி வைத்தாள்.

14தாவீதைக் கொண்டுவரச் சவுல் சேவகரை அனுப்பினபோது, அவர் வியாதியாயிருக்கிறார் என்றாள்.

15அப்பொழுது தாவீதைப் பார்க்கிறதற்குச் சவுல் சேவகரை அனுப்பி, அவனைக் கொன்றுபோடும்படிக்கு, கட்டிலோடே அவனை என்னிடத்திற்கு எடுத்துக்கொண்டு வாருங்கள் என்றான்.

16சேவகர் வந்தபோது, இதோ, சுரூபம் கட்டிலின்மேலும், வெள்ளாட்டுத்தோல் அதின் தலைமாட்டிலும் கிடக்கக் கண்டார்கள்.

17அப்பொழுது சவுல்: நீ இப்படி என்னை ஏய்த்து, என் பகைஞனைத் தப்பவிட்டு அனுப்பினது என்ன என்று மீகாளிடத்தில் கேட்டான். மீகாள் சவுலை நோக்கி: என்னைப் போகவிடு, நான் உன்னை ஏன் கொல்லவேண்டும் என்று அவர் என்னிடத்தில் சொன்னார் என்றாள்.

18தாவீது தப்பி, ராமாவிலிருந்த சாமுவேலிடத்திற்குப் போய், சவுல் தனக்குச் செய்தது எல்லாவற்றையும் அவனுக்கு அறிவித்தான்; பின்பு அவனும் சாமுவேலும் போய், நாயோதிலே தங்கியிருந்தார்கள்.

19தாவீது ராமாவுக்கடுத்த நாயோதிலே இருக்கிறான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டது.

20அப்பொழுது சவுல்: தாவீதைக் கொண்டுவரச் சேவகரை அனுப்பினான்; அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் கூட்டத்தையும், சாமுவேல் அவர்களின் தலைவனாக நிற்கிறதையும் கண்டார்கள்; அப்பொழுது சவுலினுடைய சேவகரின்மேல் தேவனுடைய ஆவி இறங்கினதினால் அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.

21இது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் வேறே சேவகரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்; மூன்றாந்தரமும் சவுல் சேவகரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.

22அப்பொழுது அவனும் ராமாவுக்குப் போய், சேக்குவிலிருக்கிற பெரிய கிணற்றண்டையிலே வந்து, சாமுவேலும் தாவீதும் எங்கே என்று கேட்டான்; அதோ ராமாவுக்கடுத்த நாயோதிலே இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது.

23அப்பொழுது ராமாவுக்கடுத்த நாயோதிற்குப் போனான்; அவன் மேலும் தேவனுடைய ஆவி இறங்கினதினால் அவன் ராமாவுக்கடுத்த நாயோதிலே சேருமட்டும், தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டே நடந்துவந்து,

24தானும் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போட்டு, சாமுவேலுக்கு முன்பாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, அன்று பகல்முழுவதும் இராமுழுவதும் வஸ்திரம் இல்லாமல் விழுந்துகிடந்தான்; ஆகையினாலே சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ என்பார்கள்.

I கொரிந்தியர் 1

முழு அதிகாரம் ›

1தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனாகிய பவுலும், சகோதரனாகிய சொஸ்தெனேயும்,

2கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது:

3நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

4கிறிஸ்துவைப்பற்றிய சாட்சி உங்களுக்குள்ளே ஸ்திரப்படுத்தப்பட்டபடியே,

5நீங்கள் இயேசுகிறிஸ்துவுக்குள்ளாய் எல்லா உபதேசத்திலும் எல்லா அறிவிலும், மற்றெல்லாவற்றிலும், சம்பூரணமுள்ளவர்களாக்கப்பட்டிருக்கிறபடியால்,

6அவர் மூலமாய் உங்களுக்கு அளிக்கப்பட்ட தேவகிருபைக்காக, நான் உங்களைக்குறித்து எப்பொழுதும் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.

7அப்படியே நீங்கள் யாதொரு வரத்திலும் குறைவில்லாதவர்களாய், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படுவதற்குக் காத்திருக்கிறீர்கள்.

8நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி முடிவுபரியந்தம் அவர் உங்களை ஸ்திரப்படுத்துவார்.

9தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்.

10சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.

11ஏனெனில், என் சகோதரரே, உங்களுக்குள்ளே வாக்குவாதங்கள் உண்டென்று குலோவேயாளின் வீட்டாரால் உங்களைக்குறித்து எனக்கு அறிவிக்கப்பட்டது.

12உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன்.

13கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா? பவுலா உங்களுக்காகச் சிலுவையிலறையப்பட்டான்? பவுலின் நாமத்தினாலேயா ஞானஸ்நானம் பெற்றீர்கள்?

14என் நாமத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தேனென்று ஒருவனும் சொல்லாதபடிக்கு,

15நான் கிறிஸ்புவுக்கும் காயுவுக்குமேயன்றி, உங்களில் வேறொருவனுக்கும் ஞானஸ்நானங் கொடுக்கவில்லை; இதற்காக தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.

16ஸ்தேவானுடைய வீட்டாருக்கும் நான் ஞானஸ்நானங்கொடுத்ததுண்டு. இதுவுமல்லாமல் இன்னும் யாருக்காவது நான் ஞானஸ்நானங்கொடுத்தேனோ இல்லையோ அறியேன்.

17ஞானஸ்நானத்தைக் கொடுக்கும்படி கிறிஸ்து என்னை அனுப்பவில்லை; சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவே அனுப்பினார்; கிறிஸ்துவின் சிலுவை வீணாய்ப் போகாதபடிக்கு, சாதுரிய ஞானமில்லாமல் பிரசங்கிக்கவே அனுப்பினார்.

18சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.

19அந்தப்படி: ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேன் என்று எழுதியிருக்கிறது.

20ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா?

21எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று.

22யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள்;

23நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமாயும் இருக்கிறார்.

24ஆகிலும் யூதரானாலும் கிரேக்கரானாலும் எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்குக் கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாயிருக்கிறார்.

25இந்தப்படி, தேவனுடைய பைத்தியம் என்னப்படுவது மனுஷருடைய ஞானத்திலும் அதிக ஞானமாயிருக்கிறது; தேவனுடைய பலவீனம் என்னப்படுவது மனுஷருடைய பலத்திலும் அதிக பலமாயிருக்கிறது.

26எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை.

27ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.

28உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்.

29மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார்.

30அந்தப்படி, நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டிருக்கிறீர்கள். எழுதியிருக்கிறபடி, மேன்மை பாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டத்தக்கதாக,

31அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.

தனிவாசிப்பு

1ஐயோ! பொன் மங்கி, பசும்பொன் மாறி, பரிசுத்த ஸ்தலத்தின் கற்கள் சகல வீதிகளின் முனையிலும் கொட்டுண்டுபோயிற்றே.

2ஐயோ! தங்கத்துக்கொப்பான விலையேறப்பெற்ற சீயோன் குமாரர் குயவனுடைய கைவேலையான மண்பாண்டங்களாய் எண்ணப்படுகிறார்களே.

3திமிங்கிலங்கள் முதலாய்க் கொங்கைகளை நீட்டி, தங்கள் குட்டிகளுக்குப் பால் கொடுக்கும்; என் ஜனமாகிய குமாரத்தியோ வனாந்தரத்திலுள்ள தீக்குருவியைப்போல் குரூரமாயிருக்கிறாளே.

4குழந்தைகளின் நாவு தாகத்தால் மேல்வாயோடே ஒட்டிக்கொண்டிருக்கிறது; பிள்ளைகள் அப்பங்கேட்கிறார்கள், அவர்களுக்கு கொடுப்பாரில்லை.

5ருசியான பதார்த்தங்களைச் சாப்பிட்டவர்கள் வீதிகளில் பாழாய்க்கிடக்கிறார்கள்; இரத்தாம்பரம் உடுத்தி வளர்ந்தவர்கள் குப்பைமேடுகளை அணைத்துக்கொள்ளுகிறார்கள்.

6கைச்செய்கை இல்லாமல் ஒரு நிமிஷத்திலே கவிழ்க்கப்பட்ட சோதோமின் பாவத்துக்கு வந்த தண்டனையைப்பார்க்கிலும் என் ஜனமாகிய குமாரத்தியின் அக்கிரமத்துக்கு வந்த தண்டனை பெரிதாயிருக்கிறது.

7அவளுடைய நசரேயர் உறைந்த மழையைப்பார்க்கிலும் சுத்தமும், பாலைப்பார்க்கிலும் வெண்மையும், பவளத்தைப்பார்க்கிலும் சிவப்பும், இந்திரநீலத்தைப்பார்க்கிலும் மேனியுமாயிருந்தார்கள்.

8இப்பொழுதோ அவர்களுடைய முகம் கரியிலும் கறுத்துப்போயிற்று; வீதிகளில் அறியப்படார்கள்; அவர்கள் தோல் அவர்கள் எலும்புகளோடு ஒட்டிக்கொண்டு, காய்ந்த மரத்துக்கு ஒப்பாயிற்று.

9பசியினால் கொலையுண்டவர்களைப்பார்க்கிலும் பட்டயத்தால் கொலையுண்டவர்கள் பாக்கியவான்களாயிருக்கிறார்கள்; அவர்கள் வயலின் வரத்தில்லாமையால் குத்துண்டு, கரைந்து போகிறார்கள்.

10இரக்கமுள்ள ஸ்திரீகளின் கைகள் தங்கள் பிள்ளைகளைச் சமைத்தன, என் ஜனமாகிய குமாரத்தியின் அழிவில் அவைகள் அவர்களுக்கு ஆகாரமாயின.

11கர்த்தர் தமது கோபத்தை நிறைவேற்றி, தமது உக்கிரகோபத்தை ஊற்றி, சீயோனில் அக்கினியைக் கொளுத்தினார்; அது அதின் அஸ்திபாரங்களைப் பட்சித்துப்போட்டது.

12சத்துருவும் பகைஞனும் எருசலேமின் வாசல்களுக்குள் பிரவேசிப்பான் என்கிறதைப் பூமியின் ராஜாக்களும் பூச்சக்கரத்தின் சகல குடிகளும் நம்பமாட்டாதிருந்தார்கள்.

13அதின் நடுவில் நீதிமான்களின் இரத்தத்தைச் சிந்தின அதின் தீர்க்கதரிசிகளின் பாவங்களினாலும், அதின் ஆசாரியர்களின் அக்கிரமங்களினாலும் இப்படி வந்தது.

14குருடர்போல வீதிகளில் அலைந்து, ஒருவரும் அவர்கள் வஸ்திரங்களைத் தொடக்கூடாதபடி இரத்தத்தால் கறைப்பட்டிருந்தார்கள்.

15விலகுங்கள், தீட்டுப்பட்டவர்களே, தொடாமல் விலகுங்கள், விலகுங்கள், என்று அவர்களை நோக்கிக் கூப்பிட்டார்கள்; மெய்யாய்ப் பறந்தோடி அலைந்து போனார்கள்; இனி தங்கித் தரிக்கமாட்டார்கள் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லப்பட்டது.

16கர்த்தருடைய கோபம் அவர்களைச் சிதறடித்தது, அவர்களை இனி அவர் நோக்கார்; ஆசாரியருடைய முகத்தைப் பாராமலும் முதியோரை மதியாமலும்போனார்கள்.

17இன்னும் எங்களுக்குச் சகாயம் வருமென்று நாங்கள் வீணாய் எதிர்பார்த்திருந்ததினாலே எங்கள் கண்கள் பூத்துப்போயின; இரட்சிக்கமாட்டாத ஜாதிக்கு எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.

18நாங்கள் எங்கள் வீதிகளில் நடவாதபடிக்கு எங்கள் அடிச்சுவடுகளை வேட்டையாடினார்கள்; எங்கள் முடிவு சமீபித்தது; எங்கள் நாட்கள் நிறைவேறிப்போயின; எங்கள் முடிவு வந்துவிட்டது.

19எங்களைப் பின்தொடர்ந்தவர்கள் ஆகாயத்துக் கழுகுகளைப்பார்க்கிலும் வேகமாயிருந்தார்கள்; பர்வதங்கள்மேல் எங்களைப் பின்தொடர்ந்தார்கள்; வனாந்தரத்தில் எங்களுக்குப் பதிவிருந்தார்கள்.

20கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவனும், எங்கள் நாசியின் சுவாசமாயிருந்தவனும், அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டான்; அவனுடைய நிழலிலே ஜாதிகளுக்குள்ளே பிழைத்திருப்போம் என்று அவனைக்குறித்துச் சொல்லியிருந்தோமே.

21ஊத்ஸ்தேசவாசியாகிய ஏதோம் குமாரத்தியே, சந்தோஷித்துக் களிகூரு; பாத்திரம் உன்னிடத்திற்கும் தாண்டிவரும், அப்பொழுது நீ வெறித்து, மானபங்கமாய்க்கிடப்பாய்.

22சீயோன் குமாரத்தியே, உன் அக்கிரமத்துக்கு வரும் தண்டனை தீர்ந்தது; அவர் இனி உன்னை அப்புறம் சிறைப்பட்டுப்போகவிடார்; ஏதோம் குமாரத்தியே, உன் அக்கிரமத்தை அவர் விசாரிப்பார்; உன் பாவங்களை வெளிப்படுத்துவார்.

1கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம் பண்ணும்.

2நீர் கேடகத்தையும் பரிசையையும் பிடித்து, எனக்கு ஒத்தாசையாக எழுந்து நில்லும்.

3என்னைத் துன்பப்படுத்துகிறவர்களோடு எதிர்த்து நின்று, ஈட்டியையோங்கி அவர்களை மறித்து: நான் உன் இரட்சிப்பு என்று என் ஆத்துமாவுக்குச் சொல்லும்.

4என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கப்பட்டுக் கலங்குவார்களாக; எனக்குத் தீங்குசெய்ய நினைக்கிறவர்கள் நாணமடைவார்களாக.

5அவர்கள் காற்றுமுகத்தில் பறக்கும் பதரைப்போலாவார்களாக; கர்த்தருடைய தூதன் அவர்களைத் துரத்துவானாக.

6அவர்களுடைய வழி இருளும் சறுக்கலுமாயிருப்பதாக; கர்த்தருடைய தூதன் அவர்களைப் பின்தொடருவானாக.

7முகாந்தரமில்லாமல் எனக்காகத் தங்கள் வலையைக் குழியில் ஒளித்துவைத்தார்கள்; முகாந்தரமில்லாமல் என் ஆத்துமாவுக்குப் படுகுழி வெட்டினார்கள்.

8அவன் நினையாத அழிவு அவனுக்கு வரவும், அவன் மறைவாய் வைத்த வலை அவனையே பிடிக்கவுங்கடவது; அவனே அந்தக் குழியில் விழுந்து அழிவானாக.

9என் ஆத்துமா கர்த்தரில் களிகூர்ந்து, அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும்.

10சிறுமைப்பட்டவனை அவனிலும் பலவானுடைய கைக்கும், சிறுமையும் எளிமையுமானவனைக் கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிக்கிற உமக்கொப்பானவர் யார் கர்த்தாவே, என்று என் எலும்புகளெல்லாம் சொல்லும்.

11கொடுமையான சாட்சிகள் எழும்பி, நான் அறியாததை என்னிடத்தில் கேட்கிறார்கள்.

12நான் செய்த நன்மைக்குப் பதிலாகத் தீமைசெய்கிறார்கள்; என் ஆத்துமா திக்கற்றுப்போகப் பார்க்கிறார்கள்.

13அவர்கள் வியாதியாயிருந்தபோது இரட்டு என் உடுப்பாயிருந்தது; நான் உபவாசத்தால் என் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினேன்; என் ஜெபமும் என் மடியிலே திரும்பவந்தது.

14நான் அவனை என் சிநேகிதனாகவும் சகோதரனாகவும் பாவித்து நடந்துகொண்டேன்; தாய்க்காகத் துக்கிக்கிறவனைப்போல் துக்கவஸ்திரம் தரித்துத் தலைகவிழ்த்து நடந்தேன்.

15ஆனாலும் எனக்கு ஆபத்துண்டானபோது அவர்கள் சந்தோஷப்பட்டுக் கூட்டங்கூடினார்கள்; நீசரும் நான் அறியாதவர்களும் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, ஓயாமல் என்னை நிந்தித்தார்கள்.

16அப்பத்திற்காக இச்சகம் பேசுகிற பரியாசக்காரரோடே சேர்ந்துகொண்டு என்பேரில் பற்கடிக்கிறார்கள்.

17ஆண்டவரே, எதுவரைக்கும் இதைப் பார்த்துக்கொண்டிருப்பீர்? என் ஆத்துமாவை அழிவுக்கும், எனக்கு அருமையானதைச் சிங்கக்குட்டிகளுக்கும் தப்புவியும்.

18மகா சபையிலே உம்மைத் துதிப்பேன், திரளான ஜனங்களுக்குள்ளே உம்மைப் புகழுவேன்.

19வீணாய் எனக்குச் சத்துருக்களானவர்கள் என்னிமித்தம் சந்தோஷியாமலும், முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் கண் சிமிட்டாமலும் இருப்பார்களாக.

20அவர்கள் சமாதானமாய்ப் பேசாமல், தேசத்திலே அமைதலாயிருக்கிறவர்களுக்கு விரோதமாய் வஞ்சகமான காரியங்களைக் கருதுகிறார்கள்.

21எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாய்த் திறந்து, ஆ ஆ, ஆ ஆ, எங்கள் கண் கண்டது என்கிறார்கள்.

22கர்த்தாவே, நீர் இதைக் கண்டீர், மவுனமாயிராதேயும்; ஆண்டவரே, எனக்குத் தூரமாகாதேயும்.

23என் தேவனே, என் ஆண்டவரே, எனக்கு நியாயஞ்செய்யவும் என் வழக்கைத் தீர்க்கவும் விழித்துக்கொண்டு எழுந்தருளும்.

24என் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நீதியின்படி என்னை நியாயம் விசாரியும், என்னைக்குறித்து அவர்களை மகிழவொட்டாதிரும்.

25அவர்கள் தங்கள் இருதயத்திலே: ஆ ஆ, இதுவே நாங்கள் விரும்பினது என்று சொல்லாதபடிக்கும், அவனை விழுங்கிவிட்டோம் என்று பேசாதபடிக்கும் செய்யும்.

26எனக்கு நேரிட்ட ஆபத்துக்காகச் சந்தோஷிக்கிறவர்கள் ஏகமாய் வெட்கி நாணி, எனக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டுகிறவர்கள் வெட்கத்தாலும் இலச்சையாலும் மூடப்படக்கடவர்கள்.

27என் நீதிவிளங்க விரும்புகிறவர்கள் கெம்பீரித்து மகிழ்ந்து, தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிற கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்போதும் சொல்லக்கடவர்கள்.

28என் நாவு உமது நீதியையும், நாள்முழுவதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com