‹ முகப்புமுழுத் திட்டம்

ஆகஸ்ட் 30 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்ஆகஸ்ட் 30அடுத்த நாள் ›
குடும்பம்

I சாமுவேல் 23

முழு அதிகாரம் ›

1இதோ, பெலிஸ்தர் கேகிலாவின்மேல் யுத்தம்பண்ணி, களஞ்சியங்களைக் கொள்ளையிடுகிறார்கள் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது.

2அப்பொழுது தாவீது: நான் போய், அந்தப் பெலிஸ்தரை முறிய அடிக்கலாமா என்று கர்த்தரிடத்தில் விசாரித்ததற்கு, கர்த்தர்: நீ போ; பெலிஸ்தரை முறிய அடித்து, கேகிலாவை இரட்சிப்பாயாக என்று தாவீதுக்குச் சொன்னார்.

3ஆனாலும் தாவீதின் மனுஷர் அவனை நோக்கி: இதோ, நாங்கள் இங்கே யூதாவிலே இருக்கும்போதே பயப்படுகிறோம்; நாங்கள் பெலிஸ்தருடைய சேனைகளை எதிர்க்கிறதற்கு கேகிலாவுக்குப் போனால், எவ்வளவு அதிகம் என்றார்கள்.

4அப்பொழுது தாவீது திரும்பவும் கர்த்தரிடத்தில் விசாரித்தபோது, கர்த்தர் அவனுக்கு உத்தரமாக: நீ எழும்பி, கேகிலாவுக்குப் போ; நான் பெலிஸ்தரை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்.

5அப்படியே தாவீது தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டு, கேகிலாவுக்குப் போய், பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணி, அவர்களில் அநேகம்பேரை வெட்டி, அவர்கள் ஆடுமாடுகளை ஓட்டிக்கொண்டு போனான்; இவ்விதமாய் கேகிலாவின் குடிகளை இரட்சித்தான்.

6அகிமெலேக்கின் குமாரனாகிய அபியத்தார் கேகிலாவில் இருக்கிற தாவீதினிடத்தில் தப்பியோடுகிறபோது, அவனிடத்தில் ஒரு ஏபோத்து இருந்தது.

7தாவீது கேகிலாவுக்கு வந்தான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, தேவன் அவனை என் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் கதவுகளும் தாழ்ப்பாள்களுமுள்ள பட்டணத்திற்குள் பிரவேசித்ததினால், அடைபட்டிருக்கிறான் என்று சவுல் சொல்லி,

8தாவீதையும் அவன் மனுஷரையும் முற்றிக்கை போடும்படிக்கு, கேகிலாவுக்குப் போக, எல்லா ஜனத்தையும் யுத்தத்திற்கு அழைப்பித்தான்.

9தனக்குப் பொல்லாப்புச் செய்யச் சவுல் எத்தனம்பண்ணுகிறான் என்று தாவீது அறிந்துகொண்டபோது, ஆசாரியனாகிய அபியத்தாரை நோக்கி: ஏபோத்தை இங்கே கொண்டுவா என்றான்.

10அப்பொழுது தாவீது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, சவுல் கேகிலாவுக்கு வந்து, என்னிமித்தம் பட்டணத்தை அழிக்க வகைதேடுகிறான் என்று உமது அடியானாகிய நான் நிச்சயமாய்க் கேள்விப்பட்டேன்.

11கேகிலா பட்டணத்தார் என்னை அவன் கையில் ஒப்புக்கொடுப்பார்களோ, உம்முடைய அடியான் கேள்விப்பட்டபடி சவுல் வருவானோ, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, இதை உம்முடைய அடியானுக்குத் தெரிவிக்கவேண்டும் என்றான். அதற்குக் கர்த்தர்: அவன் வருவான் என்றார்.

12கேகிலா பட்டணத்தார் என்னையும் என் மனுஷரையும் சவுலின் கையில் ஒப்புக்கொடுப்பார்களோ என்று தாவீது கேட்டதற்கு, கர்த்தர்: ஒப்புக்கொடுப்பார்கள் என்றார்.

13ஆகையால் தாவீதும் ஏறக்குறைய அறுநூறுபேராகிய அவன் மனுஷரும் எழும்பி, கேகிலாவை விட்டுப் புறப்பட்டு, போகக்கூடிய இடத்திற்குப் போனார்கள்; தாவீது கேகிலாவிலிருந்து தப்பிப்போனான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, தான் புறப்படுகிறதை நிறுத்திவிட்டான்.

14தாவீது வனாந்தரத்திலுள்ள அரணான ஸ்தலங்களிலே தங்கி, சீப் என்னும் வனாந்தரத்திலிருக்கிற ஒரு மலையிலே தரித்திருந்தான்; சவுல் அனுதினமும் அவனைத் தேடியும், தேவன் அவனை அவன் கையில் ஒப்புக்கொடுக்கவில்லை.

15தன் பிராணனை வாங்கத் தேடும்படிக்கு, சவுல் புறப்பட்டான் என்று தாவீது அறிந்தபடியினாலே, தாவீது சீப் வனாந்தரத்திலுள்ள ஒரு காட்டிலே இருந்தான்.

16அப்பொழுது சவுலின் குமாரனாகிய யோனத்தான் எழுந்து, காட்டிலிருக்கிற தாவீதினிடத்தில் போய், தேவனுக்குள் அவன் கையைத் திடப்படுத்தி:

17நீர் பயப்படவேண்டாம்; என் தகப்பனாகிய சவுலின் கை உம்மைக் கண்டு பிடிக்கமாட்டாது; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருப்பீர்; அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாயிருப்பேன்; அப்படி நடக்கும் என்று என் தகப்பனாகிய சவுலும் அறிந்திருக்கிறார் என்றான்.

18அவர்கள் இருவரும் கர்த்தருக்கு முன்பாக உடன்படிக்கைபண்ணின பின்பு, தாவீது காட்டில் இருந்து விட்டான்; யோனத்தானோ தன் வீட்டிற்குப் போனான்.

19பின்பு சீப் ஊரார் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எங்களிடத்தில் எஷிமோனுக்குத் தெற்கே ஆகிலா என்னும் மலைக்காட்டிலுள்ள அரணிப்பான இடங்களில் ஒளித்துக்கொண்டிருக்கிறான் அல்லவா?

20இப்போதும் ராஜாவே, நீர் உம்முடைய மனவிருப்பத்தின்படி இறங்கி வாரும்; அவனை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்க, எங்களால் ஆகும் என்றார்கள்.

21அதற்கு சவுல்: நீங்கள் என்மேல் தயை வைத்ததினாலே, கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பீர்களாக.

22நீங்கள் போய், அவன் கால் நடமாடுகிற இடத்தைப் பார்த்து, அங்கே அவனைக் கண்டவன் யார் என்பதையும் இன்னும் நன்றாய் விசாரித்து அறியுங்கள்; அவன் மகா தந்திரவாதி என்று எனக்குத் தெரிய வந்தது.

23அவன் ஒளித்துக்கொண்டிருக்கும் எல்லா மறைவிடங்களையும் பார்த்தறிந்து கொண்டு, நிச்சய செய்தி எனக்குக் கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் உங்களோடே கூடவந்து, அவன் தேசத்தில் இருந்தால், யூதாவிலிருக்கிற சகல ஆயிரங்களுக்குள்ளும் அவனைத் தேடிப் போவேன் என்றான்.

24அப்பொழுது அவர்கள் எழுந்து, சவுலுக்கு முன்னாலே சீப் ஊருக்குப் போனார்கள்; தாவீதும் அவன் மனுஷரும் எஷிமோனுக்குத் தெற்கான அந்தர வெளியாகிய மாகோன் வனாந்தரத்தில் இருந்தார்கள்.

25சவுலும் அவன் மனுஷரும் தாவீதைத் தேடவருகிறார்கள் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் கன்மலையிலிருந்து இறங்கி, மாகோன் வனாந்தரத்திலே தங்கினான்; அதைச் சவுல் கேள்விப்பட்டு, மாகோன் வனாந்தரத்திலே தாவீதைப் பின்தொடர்ந்தான்.

26சவுல் மலையின் இந்தப்பக்கத்திலும், தாவீதும், அவன் மனுஷரும் மலையின் அந்தப்பக்கத்திலும் நடந்தார்கள்; சவுலுக்குத் தப்பிப்போக, தாவீது தீவிரித்தபோது, சவுலும் அவன் மனுஷரும் தாவீதையும் அவன் மனுஷரையும் பிடிக்கத்தக்கதாய் அவர்களை வளைந்து கொண்டார்கள்.

27அந்தச் சமயத்தில் ஒரு ஆள் சவுலிடத்தில் வந்து: நீர் சீக்கிரமாய் வாரும்; பெலிஸ்தர் தேசத்தின்மேல் படையெடுத்து வந்திருக்கிறார்கள் என்றான்.

28அதனால் சவுல் தாவீதைப் பின்தொடருகிறதை விட்டுத் திரும்பி, பெலிஸ்தரை எதிர்க்கும்படி போனான்; ஆதலால் அவ்விடத்திற்குச் சேலா அம்மாலிகோத் என்று பேரிட்டார்கள்.

29தாவீது அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு, என்கேதியிலுள்ள அரணிப்பான இடங்களில் தங்கினான்.

I கொரிந்தியர் 4

முழு அதிகாரம் ›

1இப்படியாக, எந்த மனுஷனும் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியக்காரரென்றும், தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரரென்றும் எண்ணிக்கொள்ளக்கடவன்.

2மேலும், உக்கிராணக்காரன் உண்மையுள்ளவனென்று காணப்படுவது அவனுக்கு அவசியமாம்.

3ஆயினும் நான் உங்களாலேயாவது மனுஷருடைய நியாயநாளின் விசாரணையினாலேயாவது தீர்ப்பைப் பெறுவது எனக்கு மிகவும் அற்ப காரியமாயிருக்கிறது; நானும் என்னைக்குறித்துத் தீர்ப்புச்சொல்லுகிறதில்லை.

4என்னிடத்தில் நான் யாதொரு குற்றத்தையும் அறியேன்; ஆகிலும் அதினாலே நான் நீதிமானாகிறதில்லை; என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே.

5ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள்; இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.

6சகோதரரே, எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்று நீங்கள் எங்களாலே கற்றுக்கொள்ளவும், ஒருவனும் ஒருவனினிமித்தம் மற்றொருவனுக்கு விரோதமாய் இறுமாப்படையாதிருக்கவும், நான் உங்கள்நிமித்தம் என்னையும் அப்பொல்லோவையும் திருஷ்டாந்தமாக வைத்து, இவைகளை எழுதினேன்.

7அன்றியும் உன்னை விசேஷித்தவனாகும்படி செய்கிறவர் யார்? உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது? நீ பெற்றுக்கொண்டவனானால் பெற்றுக்கொள்ளாதவன்போல் ஏன் மேன்மைபாராட்டுகிறாய்?

8இப்பொழுது திருப்தியடைந்திருக்கிறீர்களே, இப்பொழுது ஐசுவரியவான்களாயிருக்கிறீர்களே, எங்களையல்லாமல் ஆளுகிறீர்களே; நீங்கள் ஆளுகிறவர்களானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உங்களுடனேகூட நாங்களும் ஆளுவோமே.

9எங்களுக்குத் தோன்றுகிறபடி தேவன் அப்போஸ்தலர்களாகிய எங்களை மரணத்துக்குக் குறிக்கப்பட்டவர்கள்போலக் கடைசியானவர்களாய்க் காணப்படப்பண்ணினார்; நாங்கள் உலகத்துக்கும் தூதருக்கும் மனுஷருக்கும் வேடிக்கையானோம்.

10நாங்கள் கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரர், நீங்கள் கிறிஸ்துவில் புத்திசாலிகள்; நாங்கள் பலவீனர், நீங்கள் பலவான்கள்; நீங்கள் கனவான்கள், நாங்கள் கனவீனர்.

11இந்நேரம்வரைக்கும் பசியுள்ளவர்களும், தாகமுள்ளவர்களும், நிர்வாணிகளும், குட்டுண்டவர்களும், தங்க இடமில்லாதவர்களுமாயிருக்கிறோம்.

12எங்கள் கைகளினாலே வேலைசெய்து, பாடுபடுகிறோம்; வையப்பட்டு, ஆசீர்வதிக்கிறோம்; துன்பப்பட்டு, சகிக்கிறோம்.

13தூஷிக்கப்பட்டு, வேண்டிக்கொள்ளுகிறோம்; இந்நாள்வரைக்கும் உலகத்தின் குப்பையைப்போலவும், எல்லாரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலவுமானோம்.

14உங்களை வெட்கப்படுத்தும்படிக்கு நான் இவைகளை எழுதவில்லை, நீங்கள் எனக்குப் பிரியமான பிள்ளைகளென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.

15கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார் அநேகர் உங்களுக்கு இல்லையே; கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தினால் நான் உங்களைப் பெற்றேன்.

16ஆகையால், என்னைப் பின்பற்றுகிறவர்களாகுங்களென்று உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன்.

17இதினிமித்தமாக, எனக்குப் பிரியமும், கர்த்தருக்குள் உண்மையுமுள்ள என் குமாரனாகிய தீமோத்தேயுவை உங்களிடத்தில் அனுப்பினேன்; நான் எங்கும் எந்தச் சபையிலும் போதித்துவருகிற பிரகாரம் கிறிஸ்துவுக்குள்ளான என் நடக்கைகளை அவன் உங்களுக்கு ஞாபகப்படுத்துவான்.

18நான் உங்களிடத்திற்கு வருகிறதில்லை என்கிறதற்காகச் சிலர் இறுமாப்படைந்திருக்கிறார்கள்.

19ஆகிலும் கர்த்தருக்குச் சித்தமானால் நான் சீக்கிரமாய் உங்களிடத்திற்கு வந்து, இறுமாப்படைந்திருக்கிறவர்களுடைய பேச்சையல்ல, அவர்களுடைய பெலத்தையே அறிந்துகொள்வேன்.

20தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது.

21உங்களுக்கு என்ன வேண்டும்? நான் பிரம்போடு உங்களிடத்தில் வரவேண்டுமோ? அல்லது அன்போடும் சாந்தமுள்ள ஆவியோடும் வரவேண்டுமோ?

தனிவாசிப்பு

எசேக்கியேல் 2

முழு அதிகாரம் ›

1அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, உன் காலூன்றி நில்; உன்னுடனே பேசுவேன் என்றார்.

2இப்படி அவர் என்னோடே பேசும்போது, ஆவி எனக்குள் வந்து, என்னைக் காலூன்றி நிற்கும்படி செய்தது; அப்பொழுது அவர் என்னுடனே பேசுகிறதைக்கேட்டேன்.

3அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, எனக்கு விரோதமாய் எழும்பின கலகக்கார ஜாதியாகிய இஸ்ரவேல் புத்திரரிடத்திற்கு நான் உன்னை அனுப்புகிறேன்; அவர்களும் அவர்கள் பிதாக்களும் இந்நாள்வரைக்கும் எனக்கு விரோதமாய்த் துரோகஞ்செய்தார்கள்.

4அவர்கள் கடினமுகமும் முரட்டாட்ட இருதயமுமுள்ள புத்திரர்; அவர்களிடத்திற்கு நான் உன்னை அனுப்புகிறேன்; கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைக்கிறார் என்று அவர்களோடே சொல்லு.

5கலகவீட்டாராகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, தங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசி உண்டென்கிறதை அவர்கள் அறியவேண்டும்.

6மனுபுத்திரனே, நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; அவர்கள் வார்த்தைகளுக்கும் அஞ்சவேண்டாம்; நெரிஞ்சில்களுக்குள்ளும் முள்ளுகளுக்குள்ளும் நீ தங்கியிருந்தாலும், நீ தேள்களுக்குள் வாசம்பண்ணினாலும், நீ அவர்கள் வார்த்தைகளுக்குப் பயப்படாமலும் அவர்கள் முகத்துக்குக் கலங்காமலுமிரு; அவர்கள் கலகவீட்டார்.

7கலகக்காரராகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, நீ என் வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்லு.

8மனுபுத்திரனே, நீ அந்தக் கலகவீட்டாரைப்போலக் கலகக்காரனாயிராமல், நான் உன்னோடே சொல்லுகிறதைக் கேள்; உன் வாயைத் திறந்து நான் உனக்குக் கொடுக்கிறதைப் புசி என்றார்.

9அப்பொழுது இதோ, என்னிடத்திற்கு நீட்டப்பட்ட ஒரு கையைக் கண்டேன்; அந்தக் கையிலே ஒரு புஸ்தகச்சுருள் இருந்தது.

10அவர் அதை எனக்கு முன்பாக விரித்தார்; அதில் உள்ளும் புறம்பும் எழுதப்பட்டிருந்தது; அதிலே புலம்பல்களும், தவிப்பும், ஐயோ என்பதும் எழுதியிருந்தது.

1கர்த்தாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ளாதேயும்; உம்முடைய உக்கிரத்தில் என்னைத் தண்டியாதேயும்.

2உம்முடைய அம்புகள் எனக்குள்ளே தைத்திருக்கிறது; உமது கை என்னை இருத்துகிறது.

3உமது கோபத்தினால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை; என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை.

4என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகிற்று, அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கக்கூடாத பாரமாயிற்று.

5என் மதிகேட்டினிமித்தம் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது.

6நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள் முழுவதும் துக்கப்பட்டுத் திரிகிறேன்.

7என் குடல்கள் எரிபந்தமாய் எரிகிறது; என் மாம்சத்தில் ஆரோக்கியம் இல்லை.

8நான் பெலனற்றுப்போய், மிகவும் நொறுக்கப்பட்டேன்; என் இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறேன்.

9ஆண்டவரே, என் ஏங்கலெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; என் தவிப்பு உமக்கு மறைவாயிருக்கவில்லை.

10என் உள்ளம் குழம்பி அலைகிறது; என் பெலன் என்னை விட்டு விலகி, என் கண்களின் ஒளி முதலாய் இல்லாமற்போயிற்று.

11என் சிநேகிதரும் என் தோழரும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்; என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள்.

12என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்; எனக்குப் பொல்லாங்கு தேடுகிறவர்கள் கேடானவைகளைப் பேசி, நாள்முழுவதும் வஞ்சனைகளை யோசிக்கிறார்கள்.

13நானோ செவிடனைப்போலக் கேளாதவனாகவும், ஊமையனைப்போல வாய் திறவாதவனாகவும் இருக்கிறேன்.

14காதுகேளாதவனும், தன் வாயில் மறுஉத்தரவுகள் இல்லாதவனுமாயிருக்கிற மனுஷனைப் போலானேன்.

15கர்த்தாவே, உமக்குக் காத்திருக்கிறேன்; என் தேவனாகிய ஆண்டவரே, நீர் மறுஉத்தரவு கொடுப்பீர்.

16அவர்கள் என்னிமித்தம் சந்தோஷப்படாதபடிக்கு இப்படிச் சொன்னேன்; என் கால் தவறும்போது என்மேல் பெருமை பாராட்டுவார்களே.

17நான் தடுமாறி விழ ஏதுவாயிருக்கிறேன்; என் துக்கம் எப்பொழுதும் என் முன்பாக இருக்கிறது.

18என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு, என் பாவத்தினிமித்தம் விசாரப்படுகிறேன்.

19என் சத்துருக்கள் வாழ்ந்து பலத்திருக்கிறார்கள்; முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் பெருகியிருக்கிறார்கள்.

20நான் நன்மையைப் பின்பற்றுகிறபடியால், நன்மைக்குத் தீமை செய்கிறவர்கள் என்னை விரோதிக்கிறார்கள்.

21கர்த்தாவே, என்னைக் கைவிடாதேயும்; என் தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும்.

22என் இரட்சிப்பாகிய ஆண்டவரே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com