1சவுல் பெலிஸ்தரைப் பின்தொடர்ந்து திரும்பி வந்தபோது, இதோ, தாவீது என்கேதியின் வனாந்தரத்தில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது.
2அப்பொழுது சவுல்: இஸ்ரவேல் அனைத்திலும் தெரிந்துகொள்ளப்பட்ட மூவாயிரம்பேரைக் கூட்டிக்கொண்டு, தாவீதையும் அவன் மனுஷரையும் வரையாடுகளுள்ள கன்மலைகளின்மேல் தேடப்போனான்.
3வழியோரத்திலிருக்கிற ஆட்டுத்தொழுவங்களிடத்தில் அவன் வந்தபோது, அங்கே ஒரு கெபி இருந்தது; அதிலே சவுல் மலஜலாதிக்குப் போனான்; தாவீதும் அவன் மனுஷரும் அந்தக் கெபியின் பக்கங்களில் உட்கார்ந்திருந்தார்கள்.
4அப்பொழுது தாவீதின் மனுஷர் அவனை நோக்கி: இதோ, நான் உன் சத்துருவை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன்; உன் பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்வாயாக என்று கர்த்தர் உன்னோடே சொன்ன நாள் இதுதானே என்றார்கள்; தாவீது எழுந்திருந்துபோய், சவுலுடைய சால்வையின் தொங்கலை மெள்ள அறுத்துக்கொண்டான்.
5தாவீது சவுலின் சால்வைத் தொங்கலை அறுத்துக்கொண்டதினிமித்தம் அவன் மனது அடித்துக்கொண்டிருந்தது.
6அவன் தன் மனுஷரைப் பார்த்து: கர்த்தர் அபிஷேகம்பண்ணின என் ஆண்டவன்மேல் என் கையைப் போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காப்பாராக; அவர் கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவர் என்று சொல்லி,
7தன் மனுஷரைச் சவுலின்மேல் எழும்ப ஒட்டாமல், இவ்வார்த்தைகளினால் அவர்களைத் தடை பண்ணினான்; சவுல் எழுந்திருந்து, கெபியைவிட்டு, வழியே நடந்து போனான்.
8அப்பொழுது தாவீதும் எழுந்து, கெபியிலிருந்து புறப்பட்டு, சவுலுக்குப் பின்னாகப் போய்: ராஜாவாகிய என் ஆண்டவனே என்று கூப்பிட்டான்; சவுல் திரும்பிப்பார்த்தபோது, தாவீது தரை மட்டும் முகங்குனிந்து வணங்கி,
9சவுலை நோக்கி: தாவீது உமக்குப் பொல்லாப்புச் செய்யப்பார்க்கிறான் என்று சொல்லுகிற மனுஷருடைய வார்த்தைகளை ஏன் கேட்கிறீர்?
10இதோ, கர்த்தர் இன்று கெபியில் உம்மை என் கையில் ஒப்புக்கொடுத்தார் என்பதை இன்றையதினம் உம்முடைய கண்கள் கண்டதே, உம்மைக் கொன்றுபோடவேண்டும் என்று சிலர் சொன்னார்கள்; ஆனாலும் என் கை உம்மைத் தப்பவிட்டது; என் ஆண்டவன்மேல் என் கையைப் போடேன்; அவர் கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவராமே என்றேன்.
11என் தகப்பனே பாரும்; என் கையிலிருக்கிற உம்முடைய சால்வையின் தொங்கலைப் பாரும்; உம்மைக் கொன்று போடாமல், உம்முடைய சால்வையின் தொங்கலை அறுத்துக்கொண்டேன்; என் கையிலே பொல்லாப்பும் துரோகமும் இல்லை என்றும், உமக்கு நான் குற்றம் செய்யவில்லை என்றும் அறிந்துகொள்ளும்; நீரோ என் பிராணனை வாங்க, அதை வேட்டையாடுகிறீர்.
12கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயம் விசாரித்து, கர்த்தர் தாமே என் காரியத்தில் உமக்கு நீதியைச் சரிக்கட்டுவாராக; உம்முடையபேரில் நான் கைபோடுவதில்லை.
13முதியோர் மொழிப்படியே, ஆகாதவர்களிடத்திலே ஆகாமியம் பிறக்கும்; ஆகையால் உம்முடைய பேரில் நான் கைபோடுவதில்லை.
14இஸ்ரவேலின் ராஜா யாரைத் தேடப் புறப்பட்டார்? ஒரு செத்த நாயையா, ஒரு தெள்ளுப்பூச்சியையா, நீர் யாரைப் பின்தொடருகிறீர்?
15கர்த்தர் நியாயாதிபதியாயிருந்து, எனக்கும் உமக்கும் நியாயந்தீர்த்து, எனக்காக வழக்காடி, நான் உம்முடைய கைக்குத் தப்ப என்னை விடுவிப்பாராக என்றான்.
16தாவீது இந்த வார்த்தைகளைச் சவுலோடே சொல்லி முடிந்தபின்பு, சவுல்: என் குமாரனாகிய தாவீதே, இது உன்னுடைய சத்தமல்லவா என்று சொல்லி, சத்தமிட்டு அழுது,
17தாவீதைப் பார்த்து: நீ என்னைப்பார்க்கிலும் நீதிமான்; நீ எனக்கு நன்மை செய்தாய்; நானோ உனக்கு தீமை செய்தேன்.
18நீ எனக்கு நன்மை செய்ததை இன்று விளங்கப்பண்ணினாய்; கர்த்தர் என்னை உன் கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், நீ என்னைக் கொன்று போடவில்லை.
19ஒருவன் தன் மாற்றானைக் கண்டு பிடித்தால், அவனைச் சுகமே போகவிடுவானோ? இன்று நீ எனக்குச் செய்த நன்மைக்காகக் கர்த்தர் உனக்கு நன்மை செய்வாராக.
20நீ நிச்சயமாக ராஜாவாய் இருப்பாய் என்றும், இஸ்ரவேலின் ராஜ்யபாரம் உன் கையில் நிலைவரப்படும் என்றும் அறிவேன்.
21இப்போதும் நீ எனக்குப் பின்னிருக்கும் என் சந்ததியை வேரறுப்பதில்லை என்றும், என் தகப்பன் வீட்டாரில் என் பெயரை அழித்துப்போடுவதில்லை என்றும் கர்த்தர்மேல் எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்.
22அப்பொழுது தாவீது சவுலுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான்; பின்பு, சவுல் தன் வீட்டுக்குப் புறப்பட்டுப்போனான்; தாவீதும் அவன் மனுஷரும் அரணிப்பான இடத்திற்கு ஏறிப்போனார்கள்.
1உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே; ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே.
2இப்படிப்பட்ட காரியஞ்செய்தவனை நீங்கள் உங்களைவிட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருக்கிறீர்கள்.
3நான் சரீரத்தினாலே உங்களுக்குத் தூரமாயிருந்தும், ஆவியினாலே உங்களோடேகூட இருக்கிறவனாய், இப்படிச் செய்தவனைக்குறித்து நான் கூட இருக்கிறதுபோல,
4நீங்களும், என்னுடைய ஆவியும், நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அதிகாரத்தோடே கூடிவந்திருக்கையில்,
5அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன்.
6நீங்கள் மேன்மைபாராட்டுகிறது நல்லதல்ல; கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா?
7ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்தமாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.
8ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.
9விபசாரக்காரரோடே கலந்திருக்கக்கூடாதென்று நிருபத்தில் உங்களுக்கு எழுதினேன்.
10ஆனாலும், இவ்வுலகத்திலுள்ள விபசாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரகாராதனைக்காரர் இவர்களோடு எவ்வளவும் கலந்திருக்கக்கூடாதென்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டு நீங்கிப்போகவேண்டியதாயிருக்குமே.
11நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது.
12புறம்பே இருக்கிறவர்களைக்குறித்துத் தீர்ப்புச்செய்கிறது என் காரியமா? உள்ளே இருக்கிறவர்களைக்குறித்தல்லவோ நீங்கள் தீர்ப்புச்செய்கிறீர்கள்?
13புறம்பே இருக்கிறவர்களைக்குறித்து தேவனே தீர்ப்புச் செய்வார். ஆகையால் அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டுத் தள்ளிப்போடுங்கள்.
1பின்பு அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ காண்கிறதைப் புசி; இந்தச் சுருளை நீ புசித்து, இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் போய் அவர்களோடே பேசு என்றார்.
2அப்படியே என் வாயைத் திறந்தேன்; அப்பொழுது அவர் அந்தச் சுருளை எனக்குப் புசிக்கக்கொடுத்து:
3மனுபுத்திரனே, நான் உனக்குக் கொடுக்கிற இந்தச் சுருளை நீ உன் வயிற்றிலே உட்கொண்டு, அதினால் உன் குடல்களை நிரப்புவாயாக என்றார்; அப்பொழுது நான் அதைப் புசித்தேன்; அது என் வாய்க்குத் தேனைப்போல் தித்திப்பாயிருந்தது.
4பின்பு அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ போய், இஸ்ரவேல் சந்ததியாரிடத்திலே சேர்ந்து, என் வார்த்தைகளைக் கொண்டு அவர்களோடே பேசு.
5விளங்காத பேச்சும், கடினமான பாஷையுமுள்ள ஜனத்தண்டைக்கல்ல, இஸ்ரவேல் சந்ததியாரிடத்திற்கே நீ அனுப்பப்படுகிறாய்.
6விளங்காத பேச்சும், தாங்கள் சொல்லும் வார்த்தைகளை நீ அறியாத கடினமான பாஷையுமுள்ள அநேகமான ஜனங்களிடத்திற்கு நீ அனுப்பப்படவில்லை; நான் அவர்களிடத்திற்கு உன்னை அனுப்பினாலும், அவர்கள் உனக்குச் செவிகொடுப்பார்களோ?
7இஸ்ரவேல் வீட்டாரோவெனில், உனக்குச் செவிகொடுக்கமாட்டார்கள்; எனக்கே செவிகொடுக்கமாட்டோம் என்கிறார்களே; இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரும் கடினமான நெற்றியும் முரட்டாட்டமுள்ள இருதயமும் உள்ளவர்கள்.
8இதோ, உன் முகத்தை அவர்கள் முகத்துக்கு எதிராகவும், உன் நெற்றியை அவர்கள் நெற்றிக்கு எதிராகவும் கெட்டியாக்கினேன்.
9உன் நெற்றியை வச்சிரக்கல்லைப்போலாக்கினேன், கன்மலையைப்பார்க்கிலும் கெட்டியாக்கினேன்; அவர்கள் கலகமுள்ள வீட்டாரென்று நீ அவர்களுக்குப் பயப்படாமலும் அவர்கள் முகங்களுக்குக் கலங்காமலும் இரு என்றார்.
10பின்னும் அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நான் உன்னுடனே சொல்லும் என் வார்த்தைகளையெல்லாம் நீ உன் செவிகளாலே கேட்டு, உன் இருதயத்தில் ஏற்றுக்கொண்டு,
11நீ போய், சிறைப்பட்ட உன் ஜனத்தின் புத்திரரிடத்திலே சேர்ந்து, அவர்கள் கேட்டாலும் கேளாவிட்டாலும் அவர்களோடே பேசி, கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைக்கிறார் என்று அவர்களோடே சொல் என்றார்.
12அப்பொழுது ஆவி, என்னை உயர எடுத்துக்கொண்டது; கர்த்தருடைய ஸ்தானத்திலிருந்து விளங்கிய அவருடைய மகிமைக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக என்று எனக்குப் பின்னாக கூப்பிட்ட மகா சத்தத்தின் இரைச்சலைக் கேட்டேன்.
13ஒன்றோடொன்று இணைந்திருக்கிற ஜீவன்களுடைய செட்டைகளின் இரைச்சலையும், அதற்கெதிரே ஓடிய சக்கரங்களின் இரைச்சலையும், மகா சத்தத்தின் இரைச்சலையும் கேட்டேன்.
14ஆவி என்னை உயர எடுத்துக்கொண்டது; நான் என் ஆவியின் உக்கிரத்தினாலே மனங்கசந்து போனேன்; ஆனாலும் கர்த்தருடைய கரம் என்மேல் பலமாக இருந்தது.
15கேபார் நதியண்டையிலே தெலாபீபிலே தாபரிக்கிற சிறைப்பட்டவர்களிடத்துக்கு நான் வந்து, அவர்கள் தாபரிக்கிற ஸ்தலத்திலே தாபரித்து, ஏழுநாள் அவர்கள் நடுவிலே பிரமித்தவனாய்த் தங்கினேன்.
16ஏழுநாள் முடிந்தபின்பு கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
17மனுபுத்திரனே, உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவலாளனாக வைத்தேன்; நீ என் வாயினாலே வார்த்தையைக் கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக.
18சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கமான வழியில் இராதபடிக்கு எச்சரிக்கும்படியாகவும், அவனை உயிரோடே காக்கும்படியாகவும், அதை அவனுக்குச் சொல்லாமலும், நீ அவனை எச்சரிக்காமலும் இருந்தால், அந்த துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; அவன் இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன்.
19நீ துன்மார்க்கனை எச்சரித்தும், அவன் தன் துன்மார்க்கத்தையும் தன் ஆகாத வழியையும் விட்டுத் திரும்பாமற்போவானாகில், அவன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; நீயோவென்றால் உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய்.
20அப்படியே, நீதிமான் தன் நீதியை விட்டுத் திரும்பி, நீதிகேடு செய்யும்போதும், நான் அவன்முன் இடறலை வைக்கும்போதும், அவன் சாவான்; நீ அவனை எச்சரிக்காதபடியினாலே அவன் தன் பாவத்திலே சாவான்; அவன் செய்த நீதிகள் நினைக்கப்படுவதில்லை; அவனுடைய இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன்.
21நீதிமான் பாவஞ் செய்யாதபடிக்கு நீ நீதிமானை எச்சரித்தபின்பு அவன் பாவஞ்செய்யாவிட்டால், அவன் பிழைக்கவே பிழைப்பான்; அவன் எச்சரிக்கப்பட்டான்; நீயும் உன் ஆத்துமாவைத் தப்புவித்தாய் என்றார்.
22அவ்விடத்திலே கர்த்தருடைய கரம் என்மேல் அமர்ந்தது; அவர்: நீ எழுந்திருந்து பள்ளத்தாக்குக்குப் புறப்பட்டுப்போ, அங்கே உன்னுடனே பேசுவேன் என்றார்.
23அப்படியே நான் எழுந்திருந்து, பள்ளத்தாக்குக்குப் புறப்பட்டுப் போனேன்; இதோ, கேபார் நதியண்டையிலே நான் கண்ட மகிமைக்குச் சரியாக அங்கே கர்த்தருடைய மகிமை விளங்கினது; அப்பொழுது நான் முகங்குப்புற விழுந்தேன்.
24உடனே ஆவி எனக்குள்ளே புகுந்து, என்னைக் காலூன்றி நிற்கும்படி செய்தது, அப்பொழுது அவர் என்னுடனே பேசி: நீ போய், உன் வீட்டுக்குள்ளே உன்னை அடைத்துக்கொண்டிரு.
25இதோ, மனுபுத்திரனே, உன் மேல் கயிறுகளைப்போட்டு, அவைகளால் உன்னைக் கட்டப்போகிறார்கள்; ஆகையால் நீ அவர்களுக்குள்ளே போகவேண்டாம்.
26நான் உன் நாவை உன் மேல்வாயோடே ஒட்டிக்கொள்ளப்பண்ணுவேன்; நீ அவர்களைக் கடிந்து கொள்ளுகிற மனுஷனாயிராமல், ஊமையனாயிருப்பாய்; அவர்கள் கலகவீட்டார்.
27நான் உன்னோடே பேசும்போது, உன் வாயைத் திறப்பேன்; அப்பொழுது கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைத்தார் என்று அவர்களோடே சொல்வாய்; கேட்கிறவன் கேட்கட்டும், கேளாதவன் கேளாதிருக்கட்டும்; அவர்கள் கலகவீட்டார்.
1என் நாவினால் பாவஞ்செய்யாதபடிக்கு நான் என் வழிகளைக் காத்து, துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்குமட்டும் என் வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன் என்றேன்.
2நான் மவுனமாகி, ஊமையனாயிருந்தேன், நலமானதையும் பேசாமல் அமர்ந்திருந்தேன்; ஆனாலும் என் துக்கம் அதிகரித்தது;
3என் இருதயம் எனக்குள்ளே அனல்கொண்டது; நான் தியானிக்கையில் அக்கினி மூண்டது; அப்பொழுது என் நாவினால் விண்ணப்பம் செய்தேன்.
4கர்த்தாவே, நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி என்முடிவையும், என் நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும்.
5இதோ, என் நாட்களை நாலு விரற்கடையளவாக்கினீர்; என் ஆயுசு உமது பார்வைக்கு இல்லாதது போலிருக்கிறது; எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம். (சேலா)
6வேஷமாகவே மனுஷன் திரிகிறான்; விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்; ஆஸ்தியைச் சேர்க்கிறான். யார் அதை வாரிக்கொள்ளுவான் என்று அறியான்.
7இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என் நம்பிக்கை.
8என் மீறுதல்கள் எல்லாவற்றிலுமிருந்து என்னை விடுதலையாக்கும், மூடனுடைய நிந்தனைக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்.
9நீரே இதைச் செய்தீர் என்று நான் என் வாயைத் திறவாமல் மவுனமாயிருந்தேன்.
10என்னிலிருந்து உம்முடைய வாதையை எடுத்துப்போடும்; உமது கரத்தின் அடிகளால் நான் சோர்ந்து போனேன்.
11அக்கிரமத்தினிமித்தம் நீர் மனுஷனைக் கடிந்துகொண்டு தண்டிக்கிறபோது, அவன் வடிவைப் பொட்டரிப்பைப்போல் அழியப்பண்ணுகிறீர்; நிச்சயமாக எந்த மனுஷனும் மாயையே. (சேலா)
12கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேட்டு, என் கூப்பிடுதலுக்குச் செவிகொடும்; என் கண்ணீருக்கு மவுனமாயிராதேயும்; என் பிதாக்களெல்லாரையும்போல நானும் உமக்குமுன்பாக அந்நியனும் பரதேசியுமாயிருக்கிறேன்.
13நான் இனி இராமற்போகுமுன்னே, தேறுதலடையும்படி என்னிடத்தில் பொறுமையாயிரும்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com