‹ முகப்புமுழுத் திட்டம்

ஆகஸ்ட் 4 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்ஆகஸ்ட் 4அடுத்த நாள் ›
குடும்பம்

நியாயாதிபதிகள் 18

முழு அதிகாரம் ›

1அந்நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை; தாண் கோத்திரத்தார் குடியிருக்கிறதற்கு, தங்களுக்குச் சுதந்தரம் தேடினார்கள்; அந்நாள்வரைக்கும் அவர்களுக்கு இஸ்ரவேல் கோத்திரங்கள் நடுவே போந்த சுதந்தரம் கிடைக்கவில்லை.

2ஆகையால் தேசத்தை உளவுபார்த்து வரும்படி, தாண் புத்திரர் தங்கள் கோத்திரத்திலே பலத்த மனுஷராகிய ஐந்து பேரைத் தங்கள் எல்லைகளில் இருக்கிற சோராவிலும் எஸ்தாவோலிலுமிருந்து அனுப்பி: நீங்கள் போய், தேசத்தை ஆராய்ந்துபார்த்து வாருங்கள் என்று அவர்களோடே சொன்னார்கள்; அவர்கள் எப்பிராயீம் மலைத்தேசத்தில் இருக்கிற மீகாவின் வீடுமட்டும் போய், அங்கே இராத்தங்கினார்கள்.

3அவர்கள் மீகாவின் வீட்டண்டை இருக்கையில் லேவியனான வாலிபனுடைய சத்தத்தை அறிந்து, அங்கே அவனிடத்தில் போய்: உன்னை இங்கே அழைத்து வந்தது யார்? இவ்விடத்தில் என்ன செய்கிறாய்? உனக்கு இங்கே இருக்கிறது என்ன என்று அவனிடத்தில் கேட்டார்கள்.

4அதற்கு அவன்: இன்ன இன்னபடி மீகா எனக்குச் செய்தான்; எனக்குச் சம்பளம் பொருந்தினான்; அவனுக்கு ஆசாரியனானேன் என்றான்.

5அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: எங்கள் பிரயாணம் அநுகூலமாய் முடியுமா என்று நாங்கள் அறியும்படி தேவனிடத்தில் கேள் என்றார்கள்.

6அவர்களுக்கு அந்த ஆசாரியன்: சமாதானத்தோடே போங்கள்; உங்கள் பிரயாணம் கர்த்தருக்கு ஏற்றது என்றான்.

7அப்பொழுது அந்த ஐந்து மனுஷரும் புறப்பட்டு, லாயீசுக்குப் போய், அதில் குடியிருக்கிற ஜனங்கள் சீதோனியருடைய வழக்கத்தின்படியே, பயமில்லாமல் அமரிக்கையும் சுகமுமாய் இருக்கிறதையும், தேசத்திலே அவர்களை அடக்கி ஆள யாதொரு அதிகாரியும் இல்லை என்பதையும், அவர்கள் சீதோனியருக்குத் தூரமானவர்கள் என்பதையும், அவர்களுக்கு ஒருவரோடும் கவை காரியம் இல்லை என்பதையும் கண்டு,

8சோராவிலும் எஸ்தாவோலிலும் இருக்கிற தங்கள் சகோதரரிடத்திற்குத் திரும்பிவந்தார்கள். அவர்கள் சகோதரர்: நீங்கள் கொண்டுவருகிற செய்தி என்ன என்று அவர்களைக் கேட்டார்கள்.

9அதற்கு அவர்கள்: எழும்புங்கள், அவர்களுக்கு விரோதமாய்ப் போவோம் வாருங்கள்; அந்த தேசத்தைப் பார்த்தோம், அது மிகவும் நன்றாயிருக்கிறது, நீங்கள் சும்மாயிருப்பீர்களா? அந்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி புறப்பட்டுப்போக அசதியாயிராதேயுங்கள்.

10நீங்கள் அங்கே சேரும்போது, சுகமாய்க் குடியிருக்கிற ஜனங்களிடத்தில் சேருவீர்கள்; அந்த தேசம் விஸ்தாரமாயிருக்கிறது; தேவன் அதை உங்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்; அது பூமியிலுள்ள சகல வஸ்துவும் குறைவில்லாமலிருக்கிற இடம் என்றார்கள்.

11அப்பொழுது சோராவிலும் எஸ்தாவோலிலும் இருக்கிற தாண்கோத்திரத்தாரில் அறுநூறுபேர் ஆயுதபாணிகளாய் அங்கேயிருந்து புறப்பட்டுப்போய்,

12யூதாவிலுள்ள கீரியாத்யாரீமிலே பாளயமிறங்கினார்கள்; ஆதலால் அது இந்நாள்வரைக்கும் மக்னிதான் என்னப்படும்; அது கீரியாத்யாரீமின் பின்னாலே இருக்கிறது.

13பின்பு அவர்கள் அங்கேயிருந்து எப்பிராயீம் மலைக்குப் போய், மீகாவின் வீடு மட்டும் வந்தார்கள்.

14அப்பொழுது லாயீசின் நாட்டை உளவுபார்க்கப் போய்வந்த ஐந்து மனுஷர் தங்கள் சகோதரரைப் பார்த்து: இந்த வீடுகளில் ஏபோத்தும் சுரூபங்களும் வெட்டப்பட்ட விக்கிரகமும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகமும் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா; இப்போதும் நீங்கள் செய்யவேண்டியதை யோசித்துக் கொள்ளுங்கள் என்றார்கள்.

15அப்பொழுது அவ்விடத்திற்குத் திரும்பி, மீகாவின் வீட்டில் இருக்கிற லேவியனான வாலிபனின் வீட்டிலே வந்து, அவனிடத்தில் சுகசெய்தி விசாரித்தார்கள்.

16ஆயுதபாணிகளாகிய தாண் புத்திரர் அறுநூறுபேரும் வாசற்படியிலே நின்றார்கள்.

17ஆசாரியனும் ஆயுதபாணிகளாகிய அறுநூறுபேரும் வாசற்படியிலே நிற்கையில், தேசத்தை உளவுபார்க்கப் போய் வந்த அந்த ஐந்து மனுஷர் உள்ளே புகுந்து, வெட்டப்பட்ட விக்கிரகத்தையும் ஏபோத்தையும் சுரூபங்களையும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு வந்தார்கள்.

18அவர்கள் மீகாவின் வீட்டிற்குள் புகுந்து, வெட்டப்பட்ட விக்கிரகத்தையும் ஏபோத்தையும் சுரூபங்களையும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு வருகிறபோது, ஆசாரியன் அவர்களைப் பார்த்து: நீங்கள் செய்கிறது என்ன என்று கேட்டான்.

19அதற்கு அவர்கள்: நீ பேசாதே, உன் வாயை மூடிக்கொண்டு, எங்களோடேகூட வந்து எங்களுக்குத் தகப்பனும் ஆசாரியனுமாயிரு; நீ ஒரே ஒருவன் வீட்டுக்கு ஆசாரியனாயிருக்கிறது நல்லதோ? இஸ்ரவேலில் ஒரு கோத்திரத்திற்கும் வம்சத்திற்கும் ஆசாரியனாயிருக்கிறது நல்லதோ? என்றார்கள்.

20அப்பொழுது ஆசாரியனுடைய மனது இதமியப்பட்டு, அவன் ஏபோத்தையும் சுரூபங்களையும் வெட்டப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு, ஜனங்களுக்குள்ளே புகுந்தான்.

21அவர்கள் திரும்பும்படி புறப்பட்டு, பிள்ளைகளையும், ஆடுமாடுகளையும், பண்டம்பாடிகளையும், தங்களுக்கு முன்னே போகும்படி செய்தார்கள்.

22அவர்கள் புறப்பட்டு, மீகாவின் வீட்டை விட்டுக் கொஞ்சந்தூரம் போனபோது, மீகாவின் வீட்டிற்கு அயல்வீட்டார் கூட்டங்கூடி, தாண் புத்திரரைத் தொடர்ந்துவந்து,

23அவர்களைப் பார்த்துக் கூப்பிட்டார்கள்; அவர்கள் திரும்பிப்பார்த்து, மீகாவை நோக்கி: நீ இப்படிக் கூட்டத்துடன் வருகிற காரியம் என்ன என்று கேட்டார்கள்.

24அதற்கு அவன்: நான் உண்டுபண்ணின என்னுடைய தெய்வங்களையும் அந்த ஆசாரியனையுங்கூட நீங்கள் கொண்டு போகிறீர்களே; இனி எனக்கு என்ன இருக்கிறது; நீ கூப்பிடுகிற காரியம் என்ன என்று நீங்கள் என்னிடத்தில் எப்படிக் கேட்கலாம் என்றான்.

25தாண் புத்திரர் அவனைப் பார்த்து: எங்கள் காதுகள் கேட்க கூக்குரல் இடாதே, இட்டால் கோபிகள் உங்கள் மேல் விழுவார்கள்; அப்பொழுது உன் ஜீவனுக்கும் உன் வீட்டாரின் ஜீவனுக்கும் மோசம் வருவித்துக்கொள்வாய் என்று சொல்லி,

26தங்கள் வழியே நடந்துபோனார்கள்; அவர்கள் தன்னைப்பார்க்கிலும் பலத்தவர்கள் என்று மீகா கண்டு, அவன் தன் வீட்டுக்குத் திரும்பினான்.

27அவர்களோ மீகா உண்டுபண்ணினவைகளையும், அவனுடைய ஆசாரியனையும் கொண்டுபோய், பயமில்லாமல் சுகமாயிருக்கிற லாயீஸ் ஊர் ஜனங்களிடத்தில் சேர்த்து, அவர்களைப் பட்டயக் கருக்கினால் வெட்டி, பட்டணத்தை அக்கினியால் சுட்டெரித்துப்போட்டார்கள்.

28அது சீதோனுக்குத் தூரமாயிருந்தது; வேறே மனுஷரோடே அவர்களுக்குச் சம்பந்தமில்லாமலும் இருந்தபடியால், அவர்களைத் தப்புவிப்பார் ஒருவரும் இல்லை; அந்தப் பட்டணம் பெத்ரேகோபுக்குச் சமீபமான பள்ளத்தாக்கில் இருந்தது; அவர்கள் அதைத் திரும்பக் கட்டி, அதிலே குடியிருந்து,

29பூர்வத்திலே லாயீஸ் என்னும் பேர்கொண்டிருந்த அந்தப் பட்டணத்திற்கு இஸ்ரவேலுக்குப் பிறந்த தங்கள் தகப்பனாகிய தாணுடைய நாமத்தின்படியே தாண் என்று பேரிட்டார்கள்.

30அப்பொழுது தாண் புத்திரர் அந்தச் சுரூபத்தைத் தங்களுக்கு ஸ்தாபித்துக்கொண்டார்கள்; மனாசேயின் குமாரனாகிய கெர்சோனின் மகன் யோனத்தானும், அவன் குமாரரும் அந்தத் தேசத்தார் சிறைப்பட்டுப்போன நாள்மட்டும், தாண் கோத்திரத்தாருக்கு ஆசாரியராயிருந்தார்கள்.

31தேவனுடைய ஆலயம் சீலோவிலிருந்த காலமுழுதும் அவர்கள் மீகா உண்டுபண்ணின சுரூபத்தை வைத்துக்கொண்டிருந்தார்கள்.

அப்போஸ்தலர் 22

முழு அதிகாரம் ›

1சகோதரரே, பிதாக்களே, நான் இப்பொழுது உங்களுக்குச் சொல்லப்போகிற நியாயங்களுக்குச் செவிகொடுப்பீர்களாக என்றான்.

2அவன் எபிரெயுபாஷையிலே தங்களுடனே பேசுகிறதை அவர்கள் கேட்டபொழுது, அதிக அமைதலாயிருந்தார்கள். அப்பொழுது அவன்:

3நான் யூதன், சிலிசியாநாட்டிலுள்ள தர்சுபட்டணத்திலே பிறந்து, இந்த நகரத்திலே கமாலியேலின் பாதத்தருகே வளர்ந்து, முன்னோர்களுடைய வேதப்பிரமாணத்தின்படியே திட்டமாய்ப் போதிக்கப்பட்டு, இன்றையத்தினம் நீங்களெல்லாரும் தேவனைக்குறித்து வைராக்கியமுள்ளவர்களாயிருக்கிறதுபோல நானும் வைராக்கியமுள்ளவனாயிருந்தேன்.

4நான் இந்த மார்க்கத்தாராகிய புருஷரையும் ஸ்திரீகளையும் கட்டி, சிறைச்சாலைகளில் ஒப்புவித்து, மரணபரியந்தம் துன்பப்படுத்தினேன்.

5அதற்குப் பிரதான ஆசாரியரும் மூப்பர் யாவரும் சாட்சிகொடுப்பார்கள்; அவர்கள் கையிலே நான் சகோதரருக்கு நிருபங்களை வாங்கிக்கொண்டு, தமஸ்குவிலிருக்கிறவர்களும் தண்டிக்கப்படும்படிக்கு, அவர்களைக் கட்டி, எருசலேமுக்குக் கொண்டுவரும்படி அவ்விடத்திற்குப்போனேன்.

6அப்படி நான் பிரயாணப்பட்டுத் தமஸ்குவுக்குச் சமீபமானபோது, மத்தியான வேளையிலே, சடிதியாய் வானத்திலிருந்து பேரொளி உண்டாகி, என்னைச் சுற்றிப் பிரகாசித்தது.

7நான் தரையிலே விழுந்தேன். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன்.

8அதற்கு நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அவர்: நீ துன்பப்படுத்துகிற நசரேயனாகிய இயேசு நானே என்றார்.

9என்னுடனேகூட இருந்தவர்கள் வெளிச்சத்தைக் கண்டு, பயமடைந்தார்கள்; என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை.

10அப்பொழுது நான்: ஆண்டவரே, நான் என்னசெய்யவேண்டும் என்றேன். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, தமஸ்குவுக்குப் போ; நீ செய்யும்படி நியமிக்கப்பட்டதெல்லாம் அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்.

11அந்த ஒளியின் மகிமையினாலே நான் பார்வையற்றுப்போனபடியினால், என்னோடிருந்தவர்களால் கைலாகுகொடுத்து வழிநடத்தப்பட்டுத் தமஸ்குவுக்கு வந்தேன்.

12அப்பொழுது வேதப்பிரமாணத்தின்படியே பக்தியுள்ளவனும், அங்கே குடியிருக்கிற சகல யூதராலும் நல்லவனென்று சாட்சிபெற்றவனுமாகிய அனனியா என்னும் ஒருவன்,

13என்னிடத்தில் வந்துநின்று: சகோதரனாகிய சவுலே, பார்வைடைவாயாக என்றான்; அந்நேரமே நான் பார்வையடைந்து, அவனை ஏறிட்டுப்பார்த்தேன்.

14அப்பொழுது அவன்: நம்முடைய முன்னோர்களின் தேவனுடைய திருவுளத்தை நீ அறியவும், நீதிபரரைத் தரிசிக்கவும், அவருடைய திருவாய்மொழியைக் கேட்கவும், அவர் உன்னை முன்னமே தெரிந்துகொண்டார்.

15நீ கண்டவைகளையும் கேட்டவைகளையும் குறித்துச் சகல மனுஷருக்கு முன்பாக அவருக்குச் சாட்சியாயிருப்பாய்.

16இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஞானஸ்நானம்பெற்று, உன் பாவங்கள்போகக் கழுவப்படு என்றான்.

17பின்பு நான் எருசலேமுக்குத் திரும்பிவந்து, தேவாலயத்திலே ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், ஞானதிருஷ்டியடைந்து, அவரைத் தரிசித்தேன்.

18அவர் என்னை நோக்கி: நீ என்னைக்குறித்துச் சொல்லும் சாட்சியை இவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்; ஆதலால் நீ தாமதம்பண்ணாமல் சீக்கிரமாய் எருசலேமைவிட்டுப் புறப்பட்டுப்போ என்றார்.

19அதற்கு நான்: ஆண்டவரே, உம்மிடத்தில் விசுவாசமாயிருக்கிறவர்களை நான் காவலில் வைத்து ஜெப ஆலயங்களிலே அடித்ததையும்,

20உம்முடைய சாட்சியாகிய ஸ்தேவானுடைய இரத்தம் சிந்தப்படுகிறபோது, நானும் அருகே நின்று, அவனைக் கொலைசெய்வதற்குச் சம்மதித்து, அவனைக் கொலைசெய்தவர்களின் வஸ்திரங்களைக் காத்துக்கொண்டிருந்ததையும், இவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றேன்.

21அதற்கு அவர்: நீ போ, நான் உன்னைத் தூரமாய்ப் புறஜாதிகளிடத்திலே அனுப்புவேன் என்று சொன்னார் என்றான்.

22இந்த வார்த்தைவரைக்கும் அவனுக்குச் செவிகொடுத்தார்கள். பின்பு: இப்படிப்பட்டவனை பூமியிலிருந்து அகற்றவேண்டும்; இவன் உயிரோடிருக்கிறது நியாயமல்லவென்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னார்கள்.

23இவ்விதமாய் அவர்கள் கூக்குரலிட்டுத் தங்கள் மேல்வஸ்திரங்களை எறிந்துவிட்டு, ஆகாயத்திலே புழுதியைத் தூற்றிக்கொண்டிருக்கையில்,

24சேனாதிபதி அவனைக் கோட்டைக்குள்ளே கொண்டுவரும்படி கட்டளையிட்டு, அவர்கள் அவனுக்கு விரோதமாய் இப்படிக் கூக்குரலிட்ட முகாந்தரத்தை அறியும்படிக்கு அவனைச் சவுக்கால் அடித்து விசாரிக்கச் சொன்னான்.

25அந்தப்படி அவர்கள் அவனை வாரினால் அழுந்தக் கட்டும்போது, பவுல் சமீபமாய் நின்ற நூற்றுக்கு அதிபதியை நோக்கி: ரோமனும் நியாயம் விசாரிக்கப்படாதவனுமாயிருக்கிற மனுஷனை அடிக்கிறது உங்களுக்கு நியாயமா என்றான்.

26நூற்றுக்கு அதிபதி அதைக்கேட்டு, சேனாதிபதியினிடத்திற்குப் போய், அதை அறிவித்து: நீர் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாயிரும்; இந்த மனுஷன் ரோமன் என்றான்.

27அப்பொழுது சேனாதிபதி பவுலினிடத்தில் வந்து: நீ ரோமனா? எனக்குச் சொல் என்றான். அதற்கு அவன்: நான் ரோமன்தான் என்றான்.

28சேனாதிபதி பிரதியுத்தரமாக: நான் மிகுந்த திரவியத்தினாலே இந்தச் சிலாக்கியத்தைச் சம்பாதித்தேன் என்றான். அதற்குப் பவுல்: நானோ இந்தச் சிலாக்கியத்திற்குரியவனாகப் பிறந்தேன் என்றான்.

29அவனை அடித்து விசாரிக்கும்படி எத்தனமாயிருந்தவர்கள் உடனே அவனை விட்டுவிட்டார்கள். சேனாதிபதி அவன் ரோமனென்று அறிந்து, அவனைக் கட்டுவித்ததற்காகப் பயந்தான்.

30பவுலின்மேல் யூதராலே ஏற்படுத்தப்பட்ட குற்றம் இன்னதென்று நிச்சயமாய் அறிய விரும்பி, அவன் மறுநாளிலே அவனைக் கட்டவிழ்த்து, பிரதான ஆசாரியரையும் ஆலோசனைச் சங்கத்தார் அனைவரையும் கூடிவரும்படி கட்டளையிட்டு, அவனைக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக நிறுத்தினான்.

தனிவாசிப்பு

1நேபுகாத்நேச்சாரின் பதினெட்டாம் வருஷத்துக்குச் சரியான யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா அரசாண்ட பத்தாம் வருஷத்தில், கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை:

2அப்பொழுது பாபிலோன் ராஜாவின் சேனை எருசலேமை முற்றிக்கை போட்டிருந்தது; ஏரேமியா தீர்க்கதரிசியோ, யூதா ராஜாவின் அரமனையிலுள்ள காவற்சாலையின் முற்றத்திலே அடைக்கப்பட்டிருந்தான்.

3ஏனென்றால், இதோ, இந்த நகரத்தைப் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கிறேன்; அவன் இதைப் பிடிப்பான் என்று கர்த்தர் சொல்லுகிறாரென்றும்,

4யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா கல்தேயருடைய கைக்குத் தப்பிப்போகாமல் பாபிலோன் ராஜாவின் கையில் நிச்சயமாக ஒப்புக்கொடுக்கப்படுவான்; அவன் வாய் இவன் வாயோடே பேசும், அவன் கண்கள் இவன் கண்களைக் காணும்.

5அவன் சிதேக்கியாவைப் பாபிலோனுக்குக் கொண்டுபோவான்; நான் அவனைச் சந்திக்குமட்டும் அங்கே அவன் இருப்பான்; நீங்கள் கல்தேயரோடே யுத்தம்பண்ணினாலும் உங்களுக்கு வாய்ப்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறாரென்றும், நீ தீர்க்கதரிசனஞ்சொல்லவேண்டியது என்ன என்று சொல்லி, யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா அங்கே அவனை அடைத்து வைத்தான்.

6அதற்கு எரேமியா சொன்னது: கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

7இதோ, உன் பெரிய தகப்பனாகிய சல்லூமின் குமாரன் அனாமெயேல் உன்னிடத்தில் வந்து: ஆனதோத்திலிருக்கிற என் நிலத்தை நீ வாங்கிக்கொள்; அதைக் கொள்ளுகிறதற்கு உனக்கே மீட்கும் அதிகாரம் அடுத்ததென்று சொல்வான் என்று உரைத்தார்.

8அப்படியே என் பெரிய தகப்பன் மகனாகிய அனாமெயேல், கர்த்தருடைய வார்த்தையின்படி காவற்சாலையின் முற்றத்தில் என்னிடத்துக்கு வந்து: பென்யமீன் நாட்டு ஆனதோத்தூரிலுள்ள என் நிலத்தை நீர் வாங்கிக்கொள்ளும்; சுதந்தரபாத்தியம் உமக்குண்டு, அதை மீட்கும் அதிகாரம் உமக்கு அடுத்தது; அதை வாங்கிக்கொள்ளும் என்றான்; அப்பொழுது அது கர்த்தருடைய வார்த்தை என்று அறிந்துகொண்டேன்.

9ஆகையால் என் பெரிய தகப்பன் மகனாகிய அனாமெயேலின் கையில், நான் ஆனதோத்திலிருக்கிற அவனுடைய நிலத்தைக்கொண்டு, அதின் விலைக்கிரயமாகிய பதினேழு சேக்கலிடை வெள்ளியை அவனுக்கு நிறுத்துக்கொடுத்தேன்.

10நான் பத்திரத்தில் கையெழுத்தையும், முத்திரையையும் போட்டு, சாட்சிகளை வைத்து, வெள்ளியைத் தராசிலே நிறுத்துக்கொடுத்தபின்பு,

11நான் சட்டத்துக்கும் வழக்கத்துக்கும் ஏற்றபடி முத்திரைபோடப்பட்ட கிரயப்பத்திரத்தையும் திறந்திருக்கிற பிரதியையும் எடுத்து,

12என் பெரிய தகப்பன் மகனாகிய அனாமெயேலுடைய கண்களுக்கு முன்பாகவும், கிரயப்பத்திரத்தில் கையெழுத்துப்போட்ட சாட்சிகளுடைய கண்களுக்கு முன்பாகவும், காவற்சாலையின் முற்றத்தில் உட்கார்ந்திருந்த எல்லா யூதருடைய கண்களுக்கு முன்பாகவும், அதை மாசெயாவின் குமாரனாகிய நேரியாவின் மகனான பாருக்கினிடத்தில் கொடுத்து,

13அவர்களுடைய கண்களுக்கு முன்பாகப் பாருக்கை நோக்கி:

14இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீ முத்திரைபோடப்பட்ட கிரயப்பத்திரமும், திறந்திருக்கிற பிரதிபத்திரமுமாகிய இந்தச் சாசனங்களை வாங்கி, அவைகள் அநேக நாளிருக்கும்படிக்கு அவைகளை ஒரு மண்பாண்டத்திலே வை.

15ஏனெனில் இனி இந்த தேசத்தில் வீடுகளும் நிலங்களும் திராட்சத்தோட்டங்களும் கொள்ளப்படுமென்று, இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றேன்.

16நான் கிரயப்பத்திரத்தை நேரியாவின் குமாரனாகிய பாருக்கினிடத்தில் கொடுத்தபின்பு, நான் கர்த்தரை நோக்கிப் பண்ணின விண்ணப்பமாவது:

17ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, தேவரீர் உம்முடைய மகாபலத்தினாலும், நீட்டப்பட்ட உம்முடைய புயத்தினாலும், வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்; உம்மாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை.

18ஆயிரம் தலைமுறைகளுக்கும் கிருபை செய்கிறவரும், பிதாக்களுடைய அக்கிரமத்தை அவர்களுடைய பின்னடியார் பிள்ளைகளின் மடியிலே சரிக்கட்டுகிறவருமாகிய சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள மகத்துவமும் வல்லமையுமுள்ள தேவனே,

19யோசனையிலே பெரியவரும், செயலிலே வல்லவருமாயிருக்கிறீர்; அவனவனுக்கு அவனவனுடைய வழிக்குத்தக்கதாகவும், அவனவனுடைய கிரியைகளின் பலனுக்குத்தக்கதாகவும் அளிக்கும்படி, உம்முடைய கண்கள் மனுபுத்திரருடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கின்றன.

20இஸ்ரவேலிலும் மற்ற மனுஷருக்குள்ளும் இந்நாள்வரைக்கும் விளங்குகிற அடையாளங்களையும் அற்புதங்களையும் தேவரீர் எகிப்துதேசத்திலே செய்து, இந்நாளில் நிற்கும் கீர்த்தியை உமக்கு உண்டாக்கி,

21இஸ்ரவேலாகிய உமது ஜனத்தை அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், பலத்த கையினாலும் ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரத்தினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணி,

22அவர்களுடைய பிதாக்களுக்கு நீர் கொடுப்பேன் என்று ஆணையிட்ட பாலும் தேனும் ஓடிய தேசமாயிருக்கிற இந்த தேசத்தை அவர்களுக்குக் கொடுத்தீர்.

23அவர்கள் அதற்குள் பிரவேசித்து, அதைச் சுதந்தரித்துக் கொண்டார்கள்; ஆனாலும் அவர்கள் உமது சத்தத்துக்குச் செவிகொடாமலும், உமது நியாயப்பிரமாணத்தில் நடவாமலும், செய்யும்படி நீர் அவர்களுக்குக் கற்பித்ததொன்றையும் செய்யாமலும் போனார்கள்; ஆதலால் இந்தத் தீங்கையெல்லாம் அவர்களுக்கு நேரிடப்பண்ணினீர்.

24இதோ, கொத்தளங்கள் போடப்பட்டிருக்கிறது; நகரத்தைப் பிடிக்க வருகிறார்கள்; பட்டயத்தினிமித்தமும், பஞ்சத்தினிமித்தமும், கொள்ளை நோயினிமித்தமும் இந்த நகரம் அதற்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிற கல்தேயரின் கையிலே கொடுக்கப்படுகிறது; நீர் சொன்னபடி சம்பவிக்கிறது; இதோ, நீர் அதைப் பார்க்கிறீர்.

25கர்த்தராகிய ஆண்டவரே, நகரம் கல்தேயரின் கையிலே கொடுக்கப்படுகிறதாயிருந்தும், தேவரீர் என்னை நோக்கி: நீ உனக்கு ஒரு நிலத்தை விலைக்கிரயமாகக்கொண்டு, அதற்குச் சாட்சிகளை வையென்று சொன்னீரே என்றேன்.

26அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி, அவர்:

27இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?

28ஆதலால், இதோ, நான் இந்த நகரத்தைக் கல்தேயரின் கையிலும், பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலும் ஒப்புக்கொடுக்கிறேன், அவன் இதைப் பிடிப்பான் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

29இந்த நகரத்துக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிற கல்தேயர் உட்பிரவேசித்து, இந்த நகரத்தைத் தீக்கொளுத்தி, இதைச் சுட்டெரிப்பார்கள்; எனக்குக் கோபமுண்டாக்கும்படி எந்த வீடுகளின்மேல் பாகாலுக்குத் தூபங்காட்டி, அந்நிய தேவர்களுக்குப் பானபலிகளை வார்த்தார்களோ, அந்த வீடுகளையும் சுட்டெரிப்பார்கள்.

30இஸ்ரவேல் புத்திரரும் யூதா புத்திரரும் தங்கள் சிறுவயதுமுதல் என் பார்வைக்குப் பொல்லாப்பானதையே செய்து வந்தார்கள்; இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கைகளின் செய்கையினாலே எனக்குக் கோபத்தையே உண்டாக்கி வந்தார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

31அவர்கள் இந்த நகரத்தைக் கட்டின நாள்முதற்கொண்டு, இந்நாள்வரைக்கும் அது எனக்குக் கோபமுண்டாகவும், எனக்கு உக்கிரமுண்டாக்கவும், நான் அதை என் முகத்தை விட்டு அகற்றுகிறதற்கு ஏதுவாகவும் இருந்தது.

32எனக்குக் கோபமுண்டாகும்படிக்கு இஸ்ரவேல் புத்திரரும், யூதா புத்திரரும், அவர்கள் ராஜாக்களும், அவர்கள் பிரபுக்களும், அவர்கள் ஆசாரியர்களும், அவர்கள் தீர்க்கதரிசிகளும், யூதாவின் மனுஷரும், எருசலேமின் குடிகளும் செய்த எல்லாப் பொல்லாப்பினிமித்தமும் இப்படி நடக்கும்.

33முகத்தையல்ல, முதுகை எனக்குக் காட்டினார்கள்; நான் ஏற்கனவே அவர்களுக்கு உபதேசித்தும் அவர்கள் புத்தியை ஏற்றுக்கொள்ளச் செவிகொடாமற்போனார்கள்.

34அவர்கள் என் நாமம் தரிக்கப்பட்ட ஆலயத்தைத் தீட்டுப்படுத்தும்படிக்கு, தங்கள் அருவருப்புகளை அதிலே வைத்தார்கள்.

35அவர்கள் மோளேகுக்கென்று தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தீக்கடக்கப்பண்ணும்படி இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கிலிருக்கிற பாகாலின் மேடைகளைக் கட்டினார்கள்; யூதாவைப் பாவஞ் செய்யப்பண்ணுவதற்கு அவர்கள் இந்த அருவருப்பான காரியத்தைச் செய்யவேண்டுமென்று நான் அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை, அது என் மனதிலே தோன்றினதுமில்லை.

36இப்படியிருக்கையில் பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும், பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டுப்போகும் என்று நீங்கள் சொல்லுகிற இந்த நகரத்தைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:

37இதோ, என் சினத்திலும், என் கோபத்திலும், என் மகா உக்கிரத்திலும், நான் அவர்களைத் துரத்தின எல்லா தேசங்களிலுமிருந்து அவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களை இந்த ஸ்தலத்துக்குத் திரும்பிவரவும் இதிலே சுகமாய்த் தங்கியிருக்கவும் பண்ணுவேன்.

38அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்.

39அவர்கள் தங்களுக்கும், தங்கள் பின்னடியாருக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் நன்மையுண்டாகும்படி சகல நாட்களிலும் எனக்குப் பயப்படும்படிக்கு, நான் அவர்களுக்கு ஒரே இருதயத்தையும் ஒரே வழியையும் கட்டளையிட்டு,

40அவர்களுக்கு நன்மை செய்யும்படி, நான் அவர்களை விட்டுப் பின்வாங்குவதில்லையென்கிற நித்திய உடன்படிக்கையை அவர்களோடே பண்ணி, அவர்கள் என்னைவிட்டு அகன்றுபோகாதபடிக்கு, எனக்குப் பயப்படும்பயத்தை அவர்கள் இருதயத்திலே வைத்து,

41அவர்களுக்கு நன்மை செய்யும்படி அவர்கள்மேல் சந்தோஷமாயிருந்து, என் முழு இருதயத்தோடும் என் முழு ஆத்துமாவோடும் அவர்களை இந்த தேசத்திலே நிச்சயமாய் நாட்டுவேன்.

42நான் இந்த ஜனத்தின்மேல் இந்தப் பெரிய தீங்கையெல்லாம் வரப்பண்ணினதுபோல, அவர்களைக்குறித்துச் சொன்ன எல்லா நன்மையையும் அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

43மனுஷனும் மிருகமுமில்லாதபடிக்குப் பாழாய்ப்போயிற்று என்றும், கல்தேயரின் கையிலே ஒப்புக்கொடுக்கப்பட்டுப்போயிற்று என்றும், நீங்கள் சொல்லுகிற இந்த தேசத்திலே நிலங்கள் கொள்ளப்படும்.

44பென்யமீன் தேசத்திலும், எருசலேமின் சுற்றுப்புறங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், மலைக்காடான பட்டணங்களிலும், பள்ளத்தாக்கான பட்டணங்களிலும், தென்திசைப் பட்டணங்களிலும், நிலங்கள் விலைக்கிரயமாகக் கொள்ளப்படுகிற பத்திரங்களில் கையெழுத்துப் போடுகிறதும் முத்திரையிடுகிறதும் அதற்குச் சாட்சி வைக்கிறதும் உண்டாயிருக்கும்; அவர்கள் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

சங்கீதம் 1-2

முழு அதிகாரம் ›
சங்கீதம் 1

1துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,

2கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

3அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.

4துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்.

5ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.

6கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும்.

சங்கீதம் 2

1ஜாதிகள் கொந்தளிப்பானேன்? ஐனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்?

2கர்த்தருக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம்பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் இராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி:

3அவர்கள் கட்டுகளை அறுத்து, அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம் என்கிறார்கள்.

4பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார்.

5அப்பொழுது அவர் தமது கோபத்திலே அவர்களோடே பேசுவார். தமது உக்கிரத்திலே அவர்களைக் கலங்கப்பண்ணுவார்.

6நான் என்னுடைய பரிசுத்தபர்வதமாகிய சீயோனில் என்னுடைய இராஜாவை அபிஷேகம்பண்ணி வைத்தேன் என்றார்.

7தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி, "நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்;

8என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;

9இரும்புக் கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர்" என்று சொன்னார்.

10இப்போதும் இராஜாக்களே, உணர்வடையுங்கள், பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள்.

11பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்.

12குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com