1அப்பொழுது யூதா ஜனங்கள் எல்லாரும் பதினாறு வயதான உசியாவை அழைத்துவந்து, அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினார்கள்.
2ராஜா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, இவன் ஏலோதைக் கட்டி, அதைத் திரும்ப யூதாவின் வசமாக்கிக் கொண்டான்.
3உசியா ராஜாவாகிறபோது, பதினாறு வயதாயிருந்து, ஐம்பத்திரண்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; எருசலேம் நகரத்தாளான அவன் தாயின் பேர் எக்கோலியாள்.
4அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து,
5தேவனுடைய தரிசனங்களில் புத்திமானாயிருந்த சகரியாவின் நாட்களிலே தேவனைத் தேட மனதிணங்கியிருந்தான்; அவன் கர்த்தரைத் தேடின நாட்களில் தேவன் அவன் காரியங்களை வாய்க்கச் செய்தார்.
6அவன் புறப்பட்டுப்போய், பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணி, காத்தின் அலங்கத்தையும், யப்னேயின் அலங்கத்தையும், அஸ்தோத்தின் அலங்கத்தையும் இடித்துப்போட்டு, அஸ்தோத் நாட்டிலும் பெலிஸ்தருக்குள்ளும் பட்டணங்களைக் கட்டினான்.
7பெலிஸ்தரையும் கூர்பாகாலிலே குடியிருக்கிற அரபியரையும் மெகுனியரையும் வெல்ல, தேவன் அவனுக்குத் துணை நின்றார்.
8அம்மோனியர் உசியாவுக்குக் காணிக்கைகளைக் கொடுத்தார்கள்; அவனுடைய கீர்த்தி எகிப்தின் எல்லைமட்டும் எட்டினது; அவன் மிகவும் பெலங்கொண்டான்.
9உசியா எருசலேமிலே மூலைவாசல்மேலும், பள்ளத்தாக்கு வாசல்மேலும், அலங்கத்துக் கோடிகள்மேலும் கோபுரங்களைக் கட்டி அவைகளைப் பலப்படுத்தினான்.
10அவனுக்குப் பள்ளத்தாக்கிலும் சமபூமியிலும் அநேகம் ஆடுமாடுகளும், மலைகளிலேயும், வயல்வெளியிலேயும், பயிர்க்குடிகளும், திராட்சத்தோட்டக்காரரும் உண்டாயிருந்தபடியினால், அவன் வனாந்தரத்திலே கோபுரங்களைக் கட்டி, அநேக துரவுகளை வெட்டினான்; அவன் வெள்ளாண்மைப் பிரியனாயிருந்தான்.
11உசியாவுக்கு யுத்தவீரரின் சேனையும் இருந்தது; அது சம்பிரதியாகிய ஏயெலினாலும் ஆதிக்கக்காரனாகிய மாசேயாவினாலும் இலக்கம்பார்க்கப்பட்டபடியே, ராஜாவின் பிரபுக்களில் ஒருவனாகிய அனனியாவின்கீழ் வகுப்பு வகுப்பாய்ச் சேவகம்பண்ணப் புறப்பட்டது.
12பராக்கிரமசாலிகளான வம்சத்தலைவரின் தொகையெல்லாம் இரண்டாயிரத்து அறுநூறு.
13இவர்கள் கையின்கீழ்ச் சத்துருக்களுக்கு விரோதமாக ராஜாவுக்குத் துணை நிற்க, பராக்கிரமத்தோடே யுத்தம்பண்ணுகிற மூன்றுலட்சத்து ஏழாயிரத்து ஐந்நூறுபேரான சேனை இருந்தது.
14இந்தச் சேனையிலுள்ளவருக்கெல்லாம் உசியா கேடகங்களையும், ஈட்டிகளையும், தலைச்சீராக்களையும், மார்க்கவசங்களையும், வில்லுகளையும், கல்லெறிகிற கவண்களையும் ஆயத்தப்படுத்தினான்.
15கோபுரங்கள்மேலும் அலங்கக்கோடிகள்மேலும் நின்று அம்புகளையும் பெரிய கற்களையும் பிரயோகிக்கிறதற்கு நிபுணரான தொழிலாளிகள் கற்பித்த யந்திரங்களையும் அவன் எருசலேமில் உண்டாக்கினான்; அப்படியே அவன் கீர்த்தி வெகுதூரம் பரம்பிற்று; அவன் பலப்படுமட்டும் ஆச்சரியமாய் அவனுக்கு அநுகூலமுண்டாயிற்று.
16அவன் பலப்பட்டபோது, தனக்குக் கேடுண்டாகுமட்டும், அவனுடைய மனம் மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து, தூபபீடத்தின்மேல் தூபங்காட்ட கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான்.
17ஆசாரியனாகிய அசரியாவும், அவனோடேகூடக் கர்த்தரின் ஆசாரியரான பராக்கிரமசாலிகளாகிய எண்பதுபேரும், அவன் பிறகே உட்பிரவேசித்து,
18ராஜாவாகிய உசியாவோடு எதிர்த்து நின்று: உசியாவே, கர்த்தருக்குத் தூபங்காட்டுகிறது உமக்கு அடுத்ததல்ல; தூபங்காட்டுகிறது பரிசுத்தமாக்கப்பட்ட ஆரோனின் குமாரராகிய ஆசாரியருக்கே அடுக்கும்; பரிசுத்த ஸ்தலத்தை விட்டு வெளியே போம்; மீறுதல் செய்தீர்; இது தேவனாகிய கர்த்தராலே உமக்கு மேன்மையாக லபியாது என்றார்கள்.
19அப்பொழுது உசியா கோபங்கொண்டான்; அவன் தூபகலசத்தைத் தன் கையிலே பிடித்து, ஆசாரியரோடே கோபமாய்ப் பேசுகிறபோது, ஆசாரிருக்கு முன்பாகக் கர்த்தருடைய ஆலயத்திலே தூபபீடத்தின் முன்நிற்கிற அவனுடைய நெற்றியிலே குஷ்டரோகம் தோன்றிற்று.
20பிரதான ஆசாரியனாகிய அசரியாவும் சகல ஆசாரியரும் அவனைப் பார்க்கும்போது, இதோ, அவன் தன் நெற்றியிலே குஷ்டரோகம் பிடித்தவனென்று கண்டு, அவனைத் தீவிரமாய் அங்கேயிருந்து வெளிப்படப்பண்ணினார்கள்; கர்த்தர் தன்னை அடித்ததினால் அவன் தானும் வெளியே போகத் தீவிரப்பட்டான்.
21ராஜாவாகிய உசியா தன் மரணநாள்மட்டும் குஷ்டரோகியாயிருந்து, கர்த்தருடைய ஆலயத்துக்குப் புறம்பாக்கப்பட்டபடியினால், ஒரு தனித்த வீட்டிலே குஷ்டரோகியாய் வாசம்பண்ணினான்; அவன் குமாரனாகிய யோதாம் ராஜாவின் அரமனை விசாரிப்புக்காரனாயிருந்து, தேசத்தின் ஜனங்களை நியாயம் விசாரித்தான்.
22உசியாவின் ஆதியோடந்த நடபடியான மற்ற வர்த்தமானங்களை ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி எழுதினான்.
23உசியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்த பின்பு, ஜனங்கள் அவனைக் குஷ்டரோகியென்று சொல்லி, அவனை அவன் பிதாக்களண்டையில், ராஜாக்களை அடக்கம்பண்ணுகிற இடத்திற்கு அருகான நிலத்திலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய யோதாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
1பின்பு நான் கடற்கரை மணலின்மேல் நின்றேன். அப்பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பிவரக் கண்டேன்; அதற்கு ஏழு தலைகளும் பத்துக்கொம்புகளும் இருந்தன; அதின் கொம்புகளின்மேல் பத்து முடிகளும், அதின் தலைகளின்மேல் தூஷணமான நாமமும் இருந்தன.
2நான் கண்ட மிருகம் சிறுத்தையைப் போலிருந்தது; அதின் கால்கள் கரடியின் கால்களைப்போலவும், அதின் வாய் சிங்கத்தின் வாயைப்போலவும் இருந்தன; வலுசர்ப்பமானது தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது.
3அதின் தலைகளிலொன்று சாவுக்கேதுவாய்க் காயப்பட்டிருக்கக் கண்டேன்; ஆனாலும் சாவுக்கேதுவான அந்தக் காயம் சொஸ்தமாக்கப்பட்டது. பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே அந்த மிருகத்தைப் பின்பற்றி,
4அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரங்கொடுத்த வலுசர்ப்பத்தை வணங்கினார்கள். அல்லாமலும்: மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? அதினோடே யுத்தம்பண்ணத்தக்கவன் யார்? என்று சொல்லி, மிருகத்தையும் வணங்கினார்கள்.
5பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; அல்லாமலும், நாற்பத்திரண்டுமாதம் யுத்தம்பண்ண அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது.
6அது தேவனைத் தூஷிக்கும்படி தன் வாயைத் திறந்து, அவருடைய நாமத்தையும், அவருடைய வாசஸ்தலத்தையும், பரலோகத்தில் வாசமாயிருக்கிறவர்களையும் தூஷித்தது.
7மேலும், பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி அவர்களை ஜெயிக்கும்படிக்கு அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டதுமல்லாமல், ஒவ்வொரு கோத்திரத்தின்மேலும் பாஷைக்காரர்மேலும் ஜாதிகள்மேலும் அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது.
8உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள்.
9காதுள்ளவனெவனோ அவன் கேட்கக்கடவன்.
10சிறைப்படுத்திக்கொண்டு போகிறவன் சிறைப்பட்டுப்போவான்; பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்படவேண்டும். பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே விளங்கும்.
11பின்பு, வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பக் கண்டேன்; அது ஒரு ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்து, வலுசர்ப்பத்தைப்போலப் பேசினது.
12அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடப்பித்து, சாவுக்கேதுவான காயம் ஆறச்சொஸ்தமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதின் குடிகளும் வணங்கும்படிசெய்தது.
13அன்றியும், அது மனுஷருக்கு முன்பாக வானத்திலிருந்து பூமியின்மேல் அக்கினியை இறங்கப்பண்ணத்தக்கதாகப் பெரிய அற்புதங்களை நடப்பித்து,
14மிருகத்தின்முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்கி, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று.
15மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது.
16அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும்,
17அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங்கூடாதபடிக்கும் செய்தது.
18இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக் கடவன்; அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.
1ஆதிராக் தேசத்துக்கு விரோதமானதும், தமஸ்குவின்மேல் வந்து தங்குவதுமான கர்த்தருடைய வார்த்தையாகிய பாரம்; மனுஷரின் கண்களும் இஸ்ரவேலுடைய சகல கோத்திரங்களின் கண்களும் கர்த்தரை நோக்கிக்கொண்டிருக்கும்.
2ஆமாத்தும், மிகவும் ஞானமுள்ள தீருவும் சீதோனும் அதின் எல்லைக்குள்ளாயிருக்கும்.
3தீரு தனக்கு அரணைக் கட்டி, தூளைப்போல் வெள்ளியையும், வீதிகளின் சேற்றைப்போல் பசும்பொன்னையும் சேர்த்துவைத்தது.
4இதோ, ஆண்டவர் அதைத் தள்ளிவிட்டு, சமுத்திரத்தில் அதின் பலத்தை முறித்துப்போடுவார்; அது அக்கினிக்கு இரையாகும்.
5அஸ்கலோன் அதைக் கண்டு பயப்படும், காத்சாவும் அதைக் கண்டு மிகவும் துக்கிக்கும், எக்ரோனும் தன் நம்பிக்கை அற்றுப்போனபடியால் மிகவும் பிரலாபிக்கும்; காத்சாவில் ராஜா அழிந்துபோவான்; அஸ்கலோன் குடியற்றிருக்கும்.
6அஸ்தோத்தில் வேசிப்பிள்ளைகள் வாசம்பண்ணுவார்கள்; நான் பெலிஸ்தரின் கர்வத்தை அழிப்பேன்.
7அவனுடைய இரத்தத்தை அவன் வாயிலிருந்தும், அவனுடைய அருவருப்புகளை அவன் பல்லுகளின் நடுவிலிருந்தும் நீக்கிப்போடுவேன்; அவனோ நம்முடைய தேவனுக்கென்று மீதியாக வைக்கப்பட்டு, யூதாவிலே பிரபுவைப்போல இருப்பான்; எக்ரோன் எபூசியனைப்போல இருப்பான்.
8சேனையானது புறப்படும்போதும், திரும்பி வரும்போதும், என் ஆலயம் காக்கப்படும்படி அதைச் சுற்றிலும் பாளயம்போடுவேன்; இனி ஒடுக்குகிறவன் அவர்களிடத்தில் கடந்துவருவதில்லை; அதை என் கண்களினாலே பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
9சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்.
10எப்பிராயீமினின்று இரதங்களையும் எருசலேமினின்று குதிரைகளையும் அற்றுப்போகப்பண்ணுவேன், யுத்தவில்லும் இல்லாமற்போகும்; அவர் ஜாதிகளுக்குச் சமாதானம் கூறுவார்; அவருடைய ஆளுகை ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கி பூமியின் எல்லைகள்பரியந்தமும் செல்லும்.
11உனக்கு நான் செய்வதென்னவென்றால், தண்ணீரில்லாத குழியிலே அடைபட்டிருக்கிற உன்னுடையவர்களை நான் உன் உடன்படிக்கையின் இரத்தத்தினாலே விடுதலைபண்ணுவேன்.
12நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்.
13நான் எனக்கென்று யூதாவை நாணேற்றி, எப்பிராயீமிலே வில்லை நிரப்பி, சீயோனே, உன் புத்திரரைக் கிரேக்குதேசப் புத்திரருக்கு விரோதமாக எழுப்பி, உன்னைப் பராக்கிரமசாலியின் பட்டயத்துக்கு ஒப்பாக்குவேன்.
14அவர்கள் பட்சத்தில் கர்த்தர் காணப்படுவார்; அவருடைய அம்பு மின்னலைப்போலப் புறப்படும்; கர்த்தராகிய ஆண்டவர் எக்காளம் ஊதி, தென்திசைச் சுழல்காற்றுகளோடே நடந்துவருவார்.
15சேனைகளின் கர்த்தர் அவர்களைக் காப்பாற்றுவார்; அவர்கள் பட்சித்து, கவண்கற்களால் கீழ்ப்படுத்திக்கொள்வார்கள்; அவர்கள் குடித்துக் களிப்பினால் ஆரவாரிப்பார்கள்; பானபாத்திரங்கள்போலவும், பலிபீடத்தின் கோடிகளைப்போலவும் நிறைந்திருப்பார்கள்.
16அந்நாளில் அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் தம்முடைய ஜனமான மந்தையாகிய அவர்களை இரட்சிப்பார்; அவர்கள் அவருடைய தேசத்தில் ஏற்றப்பட்ட கொடிகளின் கிரீடத்தில் பதிந்திருப்பார்கள்.
17அவருடைய காருண்யம் எத்தனை பெரியது? அவருடைய சௌந்தரியம் எத்தனை பெரியது? தானியம் வாலிபரையும், புது திராட்சரசம் கன்னிகைகளையும் வளர்க்கும்.
1பஸ்கா பண்டிகை வர ஆறுநாளைக்கு முன்னே இயேசு தாம் மரணத்திலிருந்து எழுப்பின லாசரு இருந்த பெத்தானியாவுக்கு வந்தார்.
2அங்கே அவருக்கு இராவிருந்துபண்ணினார்கள்; மார்த்தாள் பணிவிடை செய்தாள்; லாசருவும் அவருடனேகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவனாயிருந்தான்.
3அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது.
4அப்பொழுது அவருடைய சீஷரில் ஒருவனும் அவரைக் காட்டிகொடுக்கப்போகிறவனுமாகிய சீமோனுடைய குமாரனான யூதாஸ்காரியோத்து:
5இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன என்றான்.
6அவன் தரித்திரரைக்குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனானபடியினாலும் இப்படிச் சொன்னான்.
7அப்பொழுது இயேசு: இவளை விட்டுவிடு, என்னை அடக்கம்பண்ணும் நாளுக்காக இதை வைத்திருந்தாள்.
8தரித்திரர் எப்பொழுதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; நான் எப்பொழுதும் உங்களிடத்தில் இரேன் என்றார்.
9அப்பொழுது யூதரில் திரளான ஜனங்கள் அவர் அங்கேயிருக்கிறதை அறிந்து, இயேசுவினிமித்தமாகமாத்திரம் அல்ல, அவர் மரித்தோரிலிருந்தெழுப்பின லாசருவைக் காணும்படியாகவும் வந்தார்கள்.
10லாசருவினிமித்தமாக யூதர்களில் அநேகர் போய், இயேசுவினிடத்தில் விசுவாசம்வைத்தபடியால்,
11பிரதான ஆசாரியர்கள் லாசருவையும் கொலைசெய்ய ஆலோசனைபண்ணினார்கள்.
12மறுநாளிலே இயேசு எருசலேமுக்கு வருகிறாரென்று பண்டிகைக்கு வந்த திரளான ஜனங்கள் கேள்விப்பட்டு,
13குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டுபோகும்படி புறப்பட்டு: ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள்.
14அல்லாமலும்: சீயோன் குமாரத்தியே, பயப்படாதே, உன் ராஜா கழுதைக்குட்டியின்மேல் ஏறிவருகிறார் என்று எழுதியிருக்கிறபிரகாரமாக,
15இயேசு ஒரு கழுதைக்குட்டியைக் கண்டு அதின்மேல் ஏறிப்போனார்.
16இவைகளை அவருடைய சீஷர்கள் துவக்கத்திலே அறியவில்லை. இயேசு மகிமையடைந்த பின்பு, இப்படி அவரைக்குறித்து எழுதியிருக்கிறதையும், தாங்கள் இப்படி அவருக்குச் செய்ததையும் நினைவுகூர்ந்தார்கள்.
17அன்றியும் அவருடனேகூட இருந்த ஜனங்கள் அவர் லாசருவைக் கல்லறையிலிருந்து வெளியே வரவழைத்து, அவனை உயிரோடே எழுப்பினாரென்று சாட்சி கொடுத்தார்கள்.
18அப்படிப்பட்ட அற்புதத்தை அவர் செய்தார் என்று ஜனங்கள் கேள்விப்பட்டதினால் அவர்கள் அவருக்கு எதிர்கொண்டுபோனார்கள்.
19அப்பொழுது பரிசேயர் ஒருவரையொருவர் நோக்கி: நீங்கள் செய்கிறதெல்லாம் வீணென்று அறிகிறதில்லையா? இதோ, உலகமே அவனுக்குப் பின்சென்று போயிற்றே என்றார்கள்.
20பண்டிகையில் ஆராதனை செய்யவந்தவர்களில் சில கிரேக்கர் இருந்தார்கள்.
21அவர்கள் கலிலேயா நாட்டுப் பெத்சாயிதா ஊரானாகிய பிலிப்புவினிடத்தில் வந்து: ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம் என்று அவனைக் கேட்டுக்கொண்டார்கள்.
22பிலிப்பு வந்து, அதை அந்திரேயாவுக்கு அறிவித்தான்; பின்பு அந்திரேயாவும் பிலிப்புவும் அதை இயேசுவுக்கு அறிவித்தார்கள்.
23அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மகிமைப்படும்படியான வேளை வந்தது.
24மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்.
25தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அவன் அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான்.
26ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.
27இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ; ஆகிலும், இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன்.
28பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று.
29அங்கே நின்று கொண்டிருந்து, அதைக் கேட்ட ஜனங்கள்: இடிமுழக்கமுண்டாயிற்று என்றார்கள். வேறுசிலர்: தேவதூதன் அவருடனே பேசினான் என்றார்கள்.
30இயேசு அவர்களை நோக்கி: இந்தச் சத்தம் என்னிமித்தம் உண்டாகாமல் உங்கள் நிமித்தமே உண்டாயிற்று.
31இப்பொழுதே இந்த உலகத்துக்கு நியாயத்தீர்ப்பு உண்டாகிறது; இப்பொழுதே இந்த உலகத்தின் அதிபதி புறம்பாகத் தள்ளப்படுவான்.
32நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன் என்றார்.
33தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப்போகிறாரென்பதைக் குறிக்கும்படி இப்படிச் சொன்னார்.
34ஜனங்கள் அவரை நோக்கி: கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார் என்று வேதத்தில் சொல்லியதை நாங்கள் கேட்டிருக்கிறோம், அப்படியிருக்க மனுஷகுமாரன் உயர்த்தப்படவேண்டியதென்று எப்படிச் சொல்லுகிறீர்; இந்த மனுஷகுமாரன் யார் என்றார்கள்.
35அதற்கு இயேசு: இன்னும் கொஞ்சக்காலம் ஒளி உங்களிடத்தில் இருக்கும்; இருளில் நீங்கள் அகப்படாதபடிக்கு ஒளி உங்களோடிருக்கையில் நடவுங்கள்; இருளில் நடக்கிறவன் தான் போகிற இடம் இன்னதென்று அறியான்.
36ஒளி உங்களோடிருக்கையில் நீங்கள் ஒளியின் பிள்ளைகளாகும்படிக்கு, ஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள் என்றார். இவைகளை இயேசு சொல்லி, அவர்களைவிட்டு மறைந்தார்.
37அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை.
38கர்த்தாவே, எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன வசனம் நிறைவேறும்படி இப்படி நடந்தது.
39ஆகையால் அவர்கள் விசுவாசிக்கமாட்டாமல்போனார்கள். ஏனெனில் ஏசாயா பின்னும்:
40அவர்கள் கண்களினால் காணாமலும், இருதயத்தினால் உணராமலும், குணப்படாமலும் இருக்கும்படிக்கும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமல் இருக்கும்படிக்கும், அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி, அவர்கள் இருதயத்தைக் கடினமாக்கினார் என்றான்.
41ஏசாயா அவருடைய மகிமையைக் கண்டு, அவரைக்குறித்துப் பேசுகிறபோது இவைகளைச் சொன்னான்.
42ஆகிலும் அதிகாரிகளிலும் அநேகர் அவரிடத்தில் விசுவாசம்வைத்தார்கள். அப்படியிருந்தும் ஜெப ஆலயத்துக்குப் புறம்பாக்கப்படாதபடி, பரிசேயர்நிமித்தம் அதை அறிக்கைபண்ணாதிருந்தார்கள்.
43அவர்கள் தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பினார்கள்.
44அப்பொழுது இயேசு சத்தமிட்டு: என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான்.
45என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான்.
46என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்.
47ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன்.
48என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.
49நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.
50அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்; ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com