‹ முகப்புமுழுத் திட்டம்

டிசம்பர் 23 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்டிசம்பர் 23அடுத்த நாள் ›
குடும்பம்

II நாளாகமம் 27-28

முழு அதிகாரம் ›
II நாளாகமம் 27

1யோதாம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினாறு வருஷம் எருசலேமிலே அரசாண்டான்; சாதோக்கின் குமாரத்தியாகிய அவன் தாயின் பேர் எருசாள்.

2அவன் தன் தகப்பனாகிய உசியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் அவனைப்போலக் கர்த்தரின் ஆலயத்திற்குள் பிரவேசியாதிருந்தான்; ஜனங்கள் இன்னும் தங்ளைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.

3அவன் கர்த்தருடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினதுமல்லாமல், ஓபேலின் மதிலின்மேல் அநேக கட்டடங்களையும் கட்டினான்.

4யூதாவின் மலைகளிலே பட்டணங்களையும், காடுகளிலே கோட்டைகளையும் கோபுரங்களையும் கட்டினான்.

5அவன் அம்மோன் புத்திரருடைய ராஜாவோடு யுத்தம்பண்ணி அவர்களை மேற்கொண்டான்; ஆதலால் அம்மோன் புத்திரர் அவனுக்கு அந்த வருஷத்திலே நூறு தாலந்து வெள்ளியையும், பதினாயிரங்கலக் கோதுமையையும், பதினாயிரங்கலம் வாற்கோதுமையையும் கொடுத்தார்கள்; இரண்டாம் மூன்றாம் வருஷத்திலும் அம்மோன் புத்திரர் அப்படியே அவனுக்குச் செலுத்தினார்கள்.

6யோதாம் தன் வழிகளைத் தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நேராக்கினதினால் பலப்பட்டான்.

7யோதாமின் மற்ற வர்த்தமானங்களும், அவனுடைய சகல யுத்தங்களும், அவனுடைய நடைகளும், இஸ்ரவேல் யூதா ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.

8அவன் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினாறு வருஷம் எருசலேமில் அரசாண்டான்.

9யோதாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனைத் தாவீதின் நகரத்திலே அடக்கம் பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய ஆகாஸ் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

II நாளாகமம் 28

1ஆகாஸ் ராஜாவாகிறபோது இருபது வயதாயிருந்து, பதினாறு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; ஆனாலும் அவன், தன் தகப்பனாகிய தாவீதைப்போல், கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்யாமல்,

2இஸ்ரவேல் ராஜாக்களின் வழிகளில் நடந்து, பாகால்களுக்கு வார்ப்பு விக்கிரகங்களைச் செய்தான்.

3அவன் இன்னோம் குமாரரின் பள்ளத்தாக்கிலே தூபங்காட்டி, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே தன் குமாரரை அக்கினியிலே தகித்துப்போட்டு,

4மேடைகளிலும், மலைகளிலும், பச்சையான சகல மரங்களின் கீழும் பலியிட்டுத் தூபங்காட்டி வந்தான்.

5ஆகையால் அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனைச் சீரியருடைய ராஜாவின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் அவனை முறிய அடித்து, அவனுக்கு இருக்கிறவர்களிலே பெரிய கூட்டத்தைச் சிறைபிடித்துத் தமஸ்குவுக்குக் கொண்டு போனார்கள்; அவன் இஸ்ரவேலுடைய ராஜாவின் கையிலும் ஒப்புக்கொடுக்கப்பட்டான்; இவன் அவனை வெகுவாய் முறிய அடித்தான்.

6எப்படியெனில், யூதா மனுஷர் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டபடியினால், ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா அவர்களில் ஒரே நாளில் லட்சத்திருபதினாயிரம்பேரைக் கொன்று போட்டான்; அவர்கள் எல்லாரும் மகா வீரராயிருந்தவர்கள்.

7அன்றியும் எப்பிராயீமின் பராக்கிரமசாலியான சிக்ரியும், ராஜாவின் குமாரனாகிய மாசேயாவையும், அரமனைத் தலைவனாகிய அஸ்ரிக்காமையும், ராஜாவுக்கு இரண்டாவதான எல்க்கானாவையும் கொன்றுபோட்டான்.

8இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சகோதரரில் இரண்டு லட்சம்பேராகிய ஸ்திரீகளையும் குமாரரையும் குமாரத்திகளையும் சிறைபிடித்து, அவர்களுடைய அநேக திரவியங்களைக் கொள்ளையிட்டு, கொள்ளைப்பொருளைச் சமாரியாவுக்குக் கொண்டுபோனார்கள்.

9அங்கே ஓதேத் என்னும் பேருள்ள கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவன் இருந்தான்; அவன் சமாரியாவுக்கு வருகிற சேனைக்கு எதிராகப் போய், அவர்களை நோக்கி: இதோ, உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் யூதாவின்மேல் கோபங்கொண்டபடியினால் அவர்களை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார்; நீங்களோ வானபரியந்தம் எட்டுகிற உக்கிரத்தோடே அவர்களைச் சங்காரம் பண்ணினீர்கள்.

10இப்போதும் யூதாவின் புத்திரரையும் எருசலேமியரையும் நீங்கள் உங்களுக்கு வேலைக்காரராகவும் வேலைக்காரிகளாகவும் கீழ்ப்படுத்தவேண்டும் என்று நினைக்கிறீர்கள்; ஆனாலும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமான குற்றங்கள் உங்களிடத்திலும் இல்லையோ?

11ஆதலால் நீங்கள் எனக்குச் செவிகொடுத்து, நீங்கள் உங்கள் சகோதரரிடத்தில் சிறைபிடித்துக்கொண்டுவந்தவர்களைத் திரும்ப அனுப்பிவிடுங்கள்; கர்த்தருடைய உக்கிரமான கோபம் உங்கள்மேல் இருக்கிறது என்றான்.

12அப்பொழுது எப்பிராயீம் புத்திரரின் தலைவரில் சிலபேராகிய யோகனானின் குமாரன் அசரியாவும், மெஷிலெமோத்தின் குமாரன் பெரகியாவும், சல்லூமின் குமாரன் எகிஸ்கியாவும், அத்லாயின் குமாரன் அமாசாவும் யுத்தத்திலிருந்து வந்தவர்களுக்கு விரோதமாக எழும்பி,

13அவர்களை நோக்கி: நீங்கள் சிறைபிடித்த இவர்களை இங்கே உள்ளே கொண்டுவரவேண்டாம்; நம்மேல் திரளான குற்றமும், இஸ்ரவேலின்மேல் உக்கிரமான கோபமும் இருக்கையில், நீங்கள் கர்த்தருக்கு முன்பாக நம்மேல் குற்றம் சுமரப்பண்ணத்தக்கதாய், நம்முடைய பாவங்களையும் நம்முடைய குற்றங்களையும் அதிகமாக்க நினைக்கிறீர்கள் என்றார்கள்.

14அப்பொழுது ஆயுதபாணிகளானவர்கள் சிறைபிடித்தவர்களையும், கொள்ளையுடைமைகளையும், பிரபுக்களுக்கு முன்பாகவும் சமஸ்த சபைக்கு முன்பாகவும் விட்டுவிட்டார்கள்.

15அப்பொழுது பேர் குறிக்கப்பட்ட மனுஷர் எழும்பி, சிறைபிடிக்கப்பட்டவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களில் வஸ்திரமில்லாத சகலருக்கும் கொள்ளையில் எடுக்கப்பட்ட வஸ்திரங்களைக் கொடுத்து, உடுப்பையும் பாதரட்சைகளையும் போடுவித்து, அவர்களுக்குச் சாப்பிடவும் குடிக்கவும் கொடுத்து, அவர்களுக்கு எண்ணெய் வார்த்து, அவர்களில் பலட்சயமானவர்களையெல்லாம் கழுதைகள்மேல் ஏற்றி, பேரீச்சமரங்களின் பட்டணமாகிய எரிகோவிலே அவர்கள் சகோதரரிடத்துக்குக் கொண்டுவந்துவிட்டு, சமாரியாவுக்குத் திரும்பினார்கள்.

16அக்காலத்திலே ஆகாஸ் என்னும் ராஜா, அசீரியாவின் ராஜாக்கள் தனக்கு ஒத்தாசைபண்ண அவர்களிடத்துக்கு ஆட்களை அனுப்பினான்.

17ஏதோமியரும் கூடவந்து, யூதாவை முறிய அடித்து, சிலரைச் சிறைபிடித்துப்போயிருந்தார்கள்.

18பெலிஸ்தரும் யூதாவிலே சமபூமியிலும் தெற்கேயும் இருக்கிற பட்டணங்களின்மேல் விழுந்து, பெத்ஷிமேசையும், ஆயலோனையும், கெதெரோத்தையும், சொக்கோவையும் அதின் கிராமங்களையும், திம்னாவையும் அதின் கிராமங்களையும், கிம்சோவையும் அதின் கிராமங்களையும்பிடித்து அங்கே குடியேறினார்கள்.

19யூதாவின் ராஜாவாகிய ஆகாசினிமித்தம் கர்த்தர் யூதாவைத் தாழ்த்தினார்; அவன் யூதாவைச் சீர்குலைத்து, கர்த்தருக்கு விரோதமாய் மிகவும் துரோகம்பண்ணினான்.

20அசீரியாவின் ராஜாவாகிய தில்காத்பில்நேசர் அவனிடத்தில் வந்தான்; அவனை நெருக்கினானே அல்லாமல் அவனைப் பலப்படுத்தவில்லை.

21ஆகாஸ் கர்த்தருடைய ஆலயத்தில் ஒரு பங்கும், ராஜ அரமனையில் ஒரு பங்கும், பிரபுக்களின் கையில் ஒரு பங்கும் எடுத்து, அசீரியாவின் ராஜாவுக்குக் கொடுத்தும், அவனுக்கு உதவி கிடைக்கவில்லை.

22தான் நெருக்கப்படுகிற காலத்திலும் கர்த்தருக்கு விரோதமாய் அந்த ஆகாஸ் என்னும் ராஜா துரோகம்பண்ணிக்கொண்டே இருந்தான்.

23எப்படியென்றால்: சீரியா ராஜாக்களின் தெய்வங்கள் அவர்களுக்குத் துணை செய்கிறபடியினால், அவர்கள் எனக்கும் துணைசெய்ய அவர்களுக்குப் பலியிடுவேன் என்று சொல்லி, தன்னை முறிய அடித்த தமஸ்குவின் தெய்வங்களுக்கு அவன் பலியிட்டான்; ஆனாலும் அது அவனும் இஸ்ரவேல் அனைத்தும் நாசமாகிறதற்கு ஏதுவாயிற்று.

24ஆகாஸ் தேவனுடைய ஆலயத்தின் பணிமுட்டுகளைச் சேர்த்து, தேவனுடைய ஆலயத்தின் பணிமுட்டுகளைத் துண்டுதுண்டாக்கி, கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைப் பூட்டிப்போட்டு, எருசலேமில் மூலைக்குமூலை பலிபீடங்களை உண்டுபண்ணி,

25அந்நிய தெய்வங்களுக்குத் தூபங்காட்டும்படிக்கு, யூதாவின் ஒவ்வொரு பட்டணத்திலும் மேடைகளை உண்டுபண்ணி; தன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபமூட்டினான்.

26அவனுடைய மற்ற வர்த்தமானங்களும், அவனுடைய ஆதியோடந்தமான சகல நடபடிகளும் யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.

27ஆகாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனை எருசலேம் நகரத்தில் அடக்கம் பண்ணினார்கள்; ஆனாலும் இஸ்ரவேல் ராஜாக்களின் கல்லறைகளில் அவனைக் கொண்டுவந்து வைக்கவில்லை; அவன் குமாரனாகிய எசேக்கியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

வெளிப்படுத்தின விசேஷம் 14

முழு அதிகாரம் ›

1பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேரையும் நிற்கக்கண்டேன்.

2அல்லாமலும், பெருவெள்ள இரைச்சல்போலவும். பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக்கேட்டேன்; நான் கேட்ட சத்தம் சுரமண்டலக்காரர் தங்கள் சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசையைப்போலிருந்தது.

3அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும், நான்கு ஜீவன்களுக்கு முன்பாகவும், மூப்பர்களுக்கு முன்பாகவும் புதுப்பாட்டைப் பாடினார்கள்; அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட இலட்சத்து நாற்பத்துநாலாயிரம் பேரேயல்லாமல் வேறொருவரும் கற்றுக்கொள்ளக்கூடாதிருந்தது.

4ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே; கற்புள்ளவர்கள் இவர்களே; ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்.

5இவர்களுடைய வாயிலே கபடம் காணப்படவில்லை; இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்குமுன்பாக மாசில்லாதவர்களாயிருக்கிறார்கள்.

6பின்பு வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து,

7மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளைவந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்கள் என்று கூறினான்.

8வேறொரு தூதன் பின்சென்று: பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது! தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக் கொடுத்தாளே! என்றான்.

9அவர்களுக்குப் பின்னே மூன்றாம் தூதன் வந்து, மிகுந்த சத்தமிட்டு: மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவனெவனோ,

10அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்குமுன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாகவும், அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான்.

11அவர்களுடைய வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய நாமத்தின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிற எவனுக்கும் இரவும் பகலும் இளைப்பாறுதலிராது.

12தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும் என்று கூறினான்.

13பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது: கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது; அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள்; அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போகும்; ஆவியானவரும் ஆம் என்று திருவுளம்பற்றுகிறார் என்று சொல்லிற்று.

14பின்பு நான் பார்த்தபோது, இதோ, வெண்மையான மேகத்தையும், அந்த மேகத்தின்மேல் மனுஷகுமாரனுக்கொப்பானவராய்த் தமது சிரசின்மேல் பொற்கிரீடத்தையும் தமது கையிலே கருக்குள்ள அரிவாளையுமுடைய ஒருவர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டேன்.

15அப்பொழுது வேறொரு தூதன் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு, மேகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறவரை நோக்கி: பூமியின் பயிர் முதிர்ந்தது, அறுக்கிறதற்குக் காலம் வந்தது, ஆகையால் உம்முடைய அரிவாளை நீட்டி அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான்.

16அப்பொழுது மேகத்தின்மேல் உட்கார்ந்தவர் தமது அரிவாளைப் பூமியின்மேல் நீட்டினார், பூமியின் விளைவு அறுப்புண்டது.

17பின்பு வேறொரு தூதனும் கருக்குள்ள அரிவாளைப் பிடித்துக்கொண்டு பரலோகத்திலுள்ள தேவாலயத்திலிருந்து புறப்பட்டுவந்தான்.

18அக்கினியின்மேல் அதிகாரமுள்ள வேறொரு தூதனும் பலிபீடத்திலிருந்து புறப்பட்டுவந்து, கருக்குள்ள அரிவாளைப் பிடித்திருக்கிறவனை நோக்கி: பூமியின் திராட்சப்பழங்கள் பழுத்திருக்கிறது, கருக்குள்ள உமது அரிவாளை நீட்டி, அதின் குலைகளை அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தத்தோடே சொன்னான்.

19அப்பொழுது அந்தத் தூதன் தன் அரிவாளைப் பூமியின்மேலே நீட்டி, பூமியின் திராட்சப்பழங்களை அறுத்து, தேவனுடைய கோபாக்கினையென்னும் பெரிய ஆலையிலே போட்டான்;

20நகரத்திற்குப் புறம்பேயுள்ள அந்த ஆலையிலே அது மிதிக்கப்பட்டது; அந்த ஆலையிலிருந்து ஆயிரத்தறுநூறு ஸ்தாதி தூரத்திற்கு இரத்தம் புறப்பட்டுக் குதிரைகளின் கடிவாளங்கள்மட்டும் பெருகிவந்தது.

தனிவாசிப்பு

1பின்மாரிகாலத்து மழையைக் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்ளுங்கள்; அப்பொழுது கர்த்தர் மின்னல்களை உண்டாக்கி, வயல்வெளியில் அவரவருக்குப் பயிருண்டாக அவர்களுக்கு மழையைக் கட்டளையிடுவார்.

2சுரூபங்கள் அபத்தமானதைச் சொல்லிற்று; குறிசொல்லுகிறவர்கள் பொய்யைத்தரித்தார்கள்; சொப்பனக்காரர் வீணானதைச் சொல்லி, வியர்த்தமாகத் தேற்றரவுபண்ணினார்கள்; ஆகையால் ஜனங்கள் ஆடுகளைப்போலச் சிதறி, மேய்ப்பனில்லாததினால் சிறுமைப்பட்டார்கள்.

3மேய்ப்பருக்கு விரோதமாக என் கோபம் மூண்டது; கடாக்களைத் தண்டித்தேன்; சேனைகளின் கர்த்தர் யூதா வம்சத்தாராகிய தமது மந்தையை விசாரித்து, அவர்களை யுத்தத்திலே தமது சிறந்த குதிரையாக நிறுத்துவார்.

4அவர்களிலிருந்து கோடிக்கல்லும், அவர்களிலிருந்து கூடாரமுளையும், அவர்களிலிருந்து யுத்தவில்லும் வரும்; அவர்களிலிருந்து ஆளுகிற யாவரும் ஏகமாய்ப் புறப்படுவார்கள்.

5அவர்கள் யுத்தத்திலே தங்கள் சத்துருக்களை வீதிகளின் சேற்றில் மிதிக்கிற பராக்கிரமசாலிகளைப்போல இருந்து யுத்தம்பண்ணுவார்கள்; கர்த்தர் அவர்களோடேகூட இருப்பார்; குதிரைகளின்மேல் ஏறிவருகிறவர்கள் வெட்கப்படுவார்கள்.

6நான் யூதா வம்சத்தாரைப் பலப்படுத்தி, யோசேப்பு வம்சத்தாரை இரட்சித்து, அவர்களைத் திரும்ப நிலைக்கப்பண்ணுவேன்; நான் அவர்களுக்கு இரங்கினேன்; அவர்கள் என்னால் ஒருக்காலும் தள்ளிவிடப்படாதவர்களைப்போல் இருப்பார்கள்; நான் அவர்களுடைய தேவனாகிய கர்த்தர், நான் அவர்களுக்குச் செவிகொடுப்பேன்.

7எப்பிராயீமர் பராக்கிரமரைப்போல இருப்பார்கள்; மதுபானத்தால் களிப்பதுபோல, அவர்களுடைய இருதயம் களிக்கும்; அவர்களுடைய பிள்ளைகளும் அதைக் கண்டு மகிழுவார்கள்; அவர்கள் இருதயம் கர்த்தருக்குள் களிகூரும்.

8நான் அவர்களைப் பார்த்துப் பயில்போட்டு அவர்களைக் கூட்டிக்கொள்ளுவேன்; அவர்களை மீட்டுக்கொண்டேன்; அவர்கள் பெருகியிருந்ததுபோலவே பெருகிப்போவார்கள்.

9நான் அவர்களை ஜனங்களுக்குள்ளே இறைத்தபின்பு, அவர்கள் தூரதேசங்களிலே என்னை நினைத்து தங்கள் பிள்ளைகளோடுங்கூடப் பிழைத்துத் திரும்புவார்கள்.

10நான் அவர்களை எகிப்து தேசத்திலிருந்து திரும்பிவரப்பண்ணி, அவர்களை அசீரியாவிலிருந்து கூட்டிக்கொண்டு, அவர்களைக் கீலேயாத் தேசத்துக்கும் லீபனோனுக்கும் வரப்பண்ணுவேன்; அவர்களுக்கு இடம் போதாமற்போகும்.

11இடுக்கமென்கிற சமுத்திரத்தைக் கடக்கையில் அவர் சமுத்திரத்தின் அலைகளை அடிப்பார்; அப்பொழுது நதியின் ஆழங்கள் எல்லாம் வறண்டுபோகும்; அசீரியாவின் கர்வம் தாழ்த்தப்படும், எகிப்தின் கொடுங்கோல் விலகிப்போகும்.

12நான் அவர்களைக் கர்த்தருக்குள் பலப்படுத்துவேன்; அவர்கள் அவருடைய நாமத்திலே நடந்துகொள்ளுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

1பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்.

2சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினபின்பு, அவர்கள் போஜனம்பண்ணிக்கொண்டிருக்கையில்;

3தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தாரென்பதையும், தாம் தேவனிடத்திலிருந்து வந்ததையும், தேவனிடத்திற்குப் போகிறதையும் இயேசு அறிந்து;

4போஜனத்தை விட்டெழுந்து, வஸ்திரங்களைக் கழற்றிவைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டு,

5பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார்.

6அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்தபோது, அவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவலாமா என்றான்.

7இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய் என்றார்.

8பேதுரு அவரை நோக்கி: நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவப்படாது என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார்.

9அதற்குச் சீமோன் பேதுரு: ஆண்டவரே, என் கால்களைமாத்திரமல்ல, என் கைகளையும் என் தலையையும்கூட கழுவவேண்டும் என்றான்.

10இயேசு அவனை நோக்கி: முழுகினவன் தன் கால்களைமாத்திரம் கழுவவேண்டியதாயிருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான்; நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள்; ஆகிலும் எல்லாரும் அல்ல என்றார்.

11தம்மைக் காட்டிக்கொடுக்கிறவனை அவர் அறிந்திருந்தபடியினால் நீங்களெல்லாரும் சுத்தமுள்ளவர்கள் அல்ல என்றார்.

12அவர்களுடைய கால்களை அவர் கழுவினபின்பு. தம்முடைய வஸ்திரங்களைத் தரித்துக்கொண்டு, திரும்ப உட்கார்ந்து, அவர்களை நோக்கி: நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா?

13நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான்.

14ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்.

15நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.

16மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல.

17நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாயிருப்பீர்கள்.

18உங்களெல்லாரையுங்குறித்து நான் பேசவில்லை, நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்; ஆகிலும் வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, என்னுடனே அப்பம் புசிக்கிறவன் என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.

19அது நடக்கும்போது நானே அவரென்று நீங்கள் விசுவாசிக்கும்பொருட்டு, இப்பொழுது அது நடப்பதற்கு முன்னமே அதை உங்களுக்குச் சொல்லுகிறேன்.

20நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான், என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

21இயேசு இவைகளைச் சொன்னபின்பு. ஆவியிலே கலங்கி: உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேனென்று சாட்சியாகச் சொன்னார்.

22அப்பொழுது யாரைக்குறித்துப் பேசுகிறாரோ என்று சீஷர்கள் ஐயப்பட்டு, ஒருவரையொருவர் நோக்கிப்பார்த்தார்கள்.

23அந்தச் சமயத்தில் அவருடைய சீஷரில் இயேசுவுக்கு அன்பானவனாயிருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான்.

24யாரைக்குறித்துச் சொல்லுகிறாரென்று விசாரிக்கும்படி சீமோன் பேதுரு அவனுக்குச் சைகைகாட்டினான்.

25அப்பொழுது அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு: ஆண்டவரே, அவன் யார் என்றான்.

26இயேசு பிரதியுத்தரமாக: நான் இந்தத் துணிக்கையைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ, அவன்தான் என்று சொல்லி, துணிக்கையைத் தோய்த்து, சீமோன் குமாரனாகிய யூதாஸ்காரியோத்துக்குக் கொடுத்தார்.

27அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய் என்றார்.

28அவர் இப்படி அவனுடனே சொன்னதின் கருத்தைப் பந்தியிருந்தவர்களில் ஒருவனும் அறியவில்லை.

29யூதாஸ் பணப்பையை வைத்துக்கொண்டிருந்தபடியினால், அவன் போய், பண்டிகைக்குத் தேவையானவைகளைக் கொள்ளும்படிக்காவது, தரித்திரருக்கு ஏதாகிலும் கொடுக்கும்படிக்காவது, இயேசு அவனுடனே சொல்லியிருப்பார் என்று சிலர் நினைத்தார்கள்.

30அவன் அந்தத் துணிக்கையை வாங்கினவுடனே புறப்பட்டுப்போனான்; அப்பொழுது இராக்காலமாயிருந்தது.

31அவன் புறப்பட்டுப்போனபின்பு இயேசு: இப்பொழுது மனுஷகுமாரன் மகிமைப்படுகிறார், தேவனும் அவரில் மகிமைப்படுகிறார்.

32தேவன் அவரில் மகிமைப்பட்டிருந்தால், தேவன் அவரைத் தம்மில் மகிமைப்படுத்துவார், சீக்கிரமாய் அவரை மகிமைப்படுத்துவார்.

33பிள்ளைகளே, இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருப்பேன்; நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; ஆனாலும் நான் போகிற இடத்துக்கு நீங்கள் வரக்கூடாதென்று நான் யூதரோடே சொன்னதுபோல இப்பொழுது உங்களோடும் சொல்லுகிறேன்.

34நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.

35நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.

36சீமோன்பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் போகிற இடத்துக்கு இப்பொழுது நீ என் பின்னே வரக்கூடாது, பிற்பாடு என் பின்னே வருவாய் என்றார்.

37பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, நான் இப்பொழுது உமக்குப்பின்னே ஏன் வரக்கூடாது? உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன் என்றான்.

38இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்காக உன் ஜீவனைக் கொடுப்பாயோ? சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாயென்று, மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com