‹ முகப்புமுழுத் திட்டம்

டிசம்பர் 27 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்டிசம்பர் 27அடுத்த நாள் ›
குடும்பம்

II நாளாகமம் 32

முழு அதிகாரம் ›

1இக்காரியங்கள் நடந்தேறிவருகையில் அசீரியா ராஜாவாகிய சனகெரிப் வந்து, யூதாவுக்குள் பிரவேசித்து, அரணான பட்டணங்களுக்கு எதிராகப் பாளயமிறங்கி, அவைகளைத் தன் வசமாக்கிக் கொள்ள நினைத்தான்.

2சனகெரிப் வந்து, எருசலேமின்மேல் யுத்தம்பண்ண நோக்கங்கொண்டிருப்பதை எசேக்கியா கண்டபோது,

3நகரத்திற்குப் புறம்பேயிருக்கிற ஊற்றுகளைத் தூர்த்துப்போட, தன் பிரபுக்களோடும் தன் பராக்கிரமசாலிகளோடும் ஆலோசனைபண்ணினான்; அதற்கு அவர்கள் உதவியாயிருந்தார்கள்.

4அசீரியா ராஜாக்கள் வந்து, அதிக தண்ணீரைக் கண்டுபிடிப்பானேன் என்று சொல்லி, அநேகம் ஜனங்கள் கூடி, எல்லா ஊற்றுகளையும் நாட்டின் நடுவில் பாயும் ஓடையையும் தூர்த்துப்போட்டார்கள்.

5அவன் திடன்கொண்டு, இடிந்துபோன மதிலையெல்லாம் கட்டி, அவைகளையும் வெளியிலுள்ள மற்ற மதிலையும் கொத்தளங்கள்மட்டும் உயர்த்தி, தாவீது நகரத்தின் கோட்டையைப் பலப்படுத்த, திரளான ஆயுதங்களையும் கேடகங்களையும்பண்ணி,

6ஜனத்தின்மேல் படைத்தலைவரை வைத்து, அவர்களை நகரவாசலின் வீதியிலே தன்னண்டையில் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி:

7நீங்கள் திடன்கொண்டு தைரியமாயிருங்கள்; அசீரியா ராஜாவுக்கும் அவனோடிருக்கிற ஏராளமான கூட்டத்திற்கும் பயப்படாமலும் கலங்காமலுமிருங்கள்; அவனோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்.

8அவனோடிருக்கிறது மாம்ச புயம், நமக்குத் துணைநின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே என்று சொல்லி, அவர்களைத் தேற்றினான்; யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சொன்ன இந்த வார்த்தைகளின்மேல் ஜனங்கள் நம்பிக்கை வைத்தார்கள்.

9இதின்பின்பு அசீரியா ராஜாவாகிய சனகெரிப் தன் முழுச் சேனையுடன் லாகீசுக்கு எதிராய் முற்றிக்கைபோட்டிருக்கையில், யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவிடத்துக்கும், எருசலேமிலுள்ள யூதா ஜனங்கள் யாவரிடத்துக்கும் தன் ஊழியக்காரரை அனுப்பி:

10அசீரியா ராஜாவாகிய சனகெரிப் சொல்லுகிறது என்னவென்றால், முற்றிக்கை போடப்பட்ட எருசலேமிலே நீங்கள் இருக்கும்படிக்கு, நீங்கள் எதின்மேல் நம்பிக்கையாயிருக்கிறீர்கள்?

11நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மை அசீரியருடைய ராஜாவின் கைக்குத் தப்புவிப்பார் என்று எசேக்கியா சொல்லி, நீங்கள் பசியினாலும் தாகத்தினாலும் சாகும்படி உங்களைப் போதிக்கிறான் அல்லவா?

12அவருடைய மேடைகளையும் அவருடைய பலிபீடங்களையும் தள்ளிவிட்டவனும், ஒரே பலிபீடத்திற்கு முன்பாகப் பணிந்து, அதின்மேல் தூபங்காட்டுங்கள் என்று யூதாவுக்கும் எருசலேமியருக்கும் சொன்னவனும் அந்த எசேக்கியாதான் அல்லவா?

13நானும் என் பிதாக்களும் தேசத்துச் சகல ஜனங்களுக்கும் செய்ததை அறியீர்களோ? அந்த தேசங்களுடைய ஜாதிகளின் தேவர்கள் அவர்கள் தேசத்தை நம்முடைய கைக்குத் தப்புவிக்க அவர்களுக்குப் பெலன் இருந்ததோ?

14உங்கள் தேவன் உங்களை என் கைக்குத் தப்புவிக்கக்கூடும்படிக்கு, என் பிதாக்கள் பாழாக்கின அந்த ஜாதிகளுடைய எல்லா தேவர்களிலும் எவன் தன் ஜனத்தை என் கைக்குத் தப்புவிக்கப் பலவானாயிருந்தான்?

15இப்போதும் எசேக்கியா உங்களை வஞ்சிக்கவும், இப்படி உங்களைப் போதிக்கவும் இடங்கொடுக்கவேண்டாம்; நீங்கள் அவனை நம்பவும் வேண்டாம்; ஏனென்றால் எந்த ஜாதியின் தேவனும், எந்த ராஜ்யத்தின் தேவனும் தன் ஜனத்தை என் கைக்கும் என் பிதாக்களின் கைக்கும் தப்புவிக்கக்கூடாதிருந்ததே; உங்கள் தேவன் உங்களை என் கைக்குத் தப்புவிப்பது எப்படி என்கிறார் என்று சொல்லி,

16அவனுடைய ஊழியக்காரர் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகவும், அவருடைய தாசனாகிய எசேக்கியாவுக்கு விரோதமாகவும் பின்னும் அதிகமாய்ப் பேசினார்கள்.

17தேசங்களுடைய ஜாதிகளின் தேவர்கள் தங்கள் ஜனங்களை என் கைக்குத் தப்புவிக்காதிருந்ததுபோல, எசேக்கியாவின் தேவனும் தன் ஜனங்களை என் கைக்குத் தப்புவிப்பதில்லையென்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நிந்திக்கவும், அவருக்கு விரோதமாகப் பேசவும் அவன் நிருபங்களையும் எழுதினான்.

18அவர்கள் அலங்கத்தின்மேலிருக்கிற எருசலேமின் ஜனங்களைப் பயப்படுத்தி, கலங்கப்பண்ணி, தாங்கள் நகரத்தைப்பிடிக்கும்படி, அவர்களைப் பார்த்து: யூதபாஷையிலே மகா சத்தமாய்க் கூப்பிட்டு,

19மனுஷர் கைவேலையினால் செய்யப்பட்டதும், பூச்சக்கரத்து ஜனங்களால் தொழுதுகொள்ளப்பட்டதுமாயிருக்கிற தேவர்களைக் குறித்துப் பேசுகிறபிரகாரமாக எருசலேமின் தேவனையும் குறித்துப் பேசினார்கள்.

20இதினிமித்தம் ராஜாவாகிய எசேக்கியாவும் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா தீர்க்கதரிசியும் பிரார்த்தித்து, வானத்தை நோக்கி அபயமிட்டார்கள்.

21அப்பொழுது கர்த்தர் ஒரு தூதனை அனுப்பினார்; அவன் அசீரியருடைய ராஜாவின் பாளயத்திலுள்ள சகல பராக்கிரமசாலிகளையும், தலைவரையும், சேனாபதிகளையும் அதம்பண்ணினான்; அப்படியே சனகெரிப் செத்தமுகமாய்த் தன் தேசத்திற்குத் திரும்பினான்; அங்கே அவன் தன் தேவனுடைய கோவிலுக்குள் பிரவேசிக்கிறபோது, அவனுடைய கர்ப்பப்பிறப்பான சிலர் அவனைப் பட்டயத்தால் வெட்டிப்போட்டார்கள்.

22இப்படிக் கர்த்தர் எசேக்கியாவையும் எருசலேமின் குடிகளையும் அசீரியருடைய ராஜாவாகிய. சனகெரிபின் கைக்கும் மற்ற எல்லாருடைய கைக்கும் நீங்கலாக்கி இரட்சித்து, அவர்களைச் சுற்றுப்புறத்தாருக்கு விலக்கி ஆதரித்து நடத்தினார்.

23அநேகம்பேர் கர்த்தருக்கென்று எருசலேமுக்குக் காணிக்கைகளையும், யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்கு உச்சிதங்களையும் கொண்டுவந்தார்கள்; அவன் இதற்குப்பிற்பாடு சகல ஜாதிகளின் பார்வைக்கும் மேன்மைப்பட்டவனாயிருந்தான்.

24அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அவன் கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணும்போது, அவர் அவனுக்கு வாக்குத்தத்தம்பண்ணி, அவனுக்கு ஒரு அற்புதத்தைக் கட்டளையிட்டார்.

25எசேக்கியா தனக்குச் செய்யப்பட்ட உபகாரத்திற்குத்தக்கதாய் நடவாமல் மனமேட்டிமையானான்; ஆகையால் அவன்மேலும், யூதாவின்மேலும், எருசலேமின்மேலும் கடுங்கோபம் மூண்டது.

26எசேக்கியாவின் மனமேட்டிமையினிமித்தம் அவனும் எருசலேமின் குடிகளும் தங்களைத் தாழ்த்தினபடியினால், கர்த்தருடைய கடுங்கோபம் எசேக்கியாவின் நாட்களிலே அவர்கள்மேல் வரவில்லை.

27எசேக்கியாவுக்கு மிகுதியான ஐசுவரியமும் கனமும் உண்டாயிருந்தது; வெள்ளியும், பொன்னும், இரத்தினங்களும் கந்தவர்க்கங்களும், கேடகங்களும், விநோதமான ஆபரணங்களும் வைக்கும்படியான பொக்கிஷசாலைகளையும்,

28தனக்கு வந்துகொண்டிருந்த தானியமும் திராட்சரசமும் எண்ணெயும் வைக்கும்படியான பண்டகசாலைகளையும், சகல வகையுள்ள மிருகஜீவன்களுக்குக் கொட்டாரங்களையும், மந்தைகளுக்குத் தொழுவங்களையும் உண்டாக்கினான்.

29அவன் தனக்குப் பட்டணங்களைக் கட்டுவித்து ஏராளமான ஆடுமாடுகளை வைத்திருந்தான்; தேவன் அவனுக்கு மகாதிரளான ஆஸ்தியைக் கொடுத்தார்.

30இந்த எசேக்கியா கீயோன் என்னும் ஆற்றிலே அணைகட்டி, அதின் தண்ணீரை மேற்கேயிருந்து தாழத் தாவீதின் நகரத்திற்கு நேராகத் திருப்பினான்; எசேக்கியா செய்ததெல்லாம் வாய்த்தது.

31ஆகிலும் பாபிலோன் பிரபுக்களின் ஸ்தானாபதிகள் தேசத்திலே நடந்த அற்புதத்தைக் கேட்க அவனிடத்துக்கு அனுப்பப்பட்ட விஷயத்தில் அவன் இருதயத்தில் உண்டான எல்லாவற்றையும் அறியும்படி அவனைச் சோதிக்கிறதற்காக தேவன் அவனைக் கைவிட்டார்.

32எசேக்கியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்த நன்மைகளும் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகத்திலும், யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்திலும் எழுதியிருக்கிறது.

33எசேக்கியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனைத் தாவீது வம்சத்தாரின் கல்லறைகளில் பிரதானமான கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள்; யூதாவனைத்தும் எருசலேமின் குடிகளும் அவன் மரித்தபோது அவனைக் கனம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய மனாசே அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

வெளிப்படுத்தின விசேஷம் 18

முழு அதிகாரம் ›

1இவைகளுக்குப்பின்பு, வேறொரு தூதன் மிகுந்த அதிகாரமுடையவனாய், வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; அவனுடைய மகிமையினால் பூமி பிரகாசமாயிற்று.

2அவன் பலத்த சத்தமிட்டு: மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! அது பேய்களுடைய குடியிருப்பும், சகலவித அசுத்த ஆவிகளுடைய காவல்வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுடைய கூடுமாயிற்று.

3அவளுடைய வேசித்தனத்தின் உக்கிரமான மதுவை எல்லா ஜாதிகளும் குடித்தார்கள்; பூமியின் ராஜாக்கள் அவளோடே வேசித்தனம்பண்ணினார்கள்; பூமியின் வர்த்தகர் அவளுடைய செல்வச்செருக்கின் மிகுதியினால் ஐசுவரியவான்களானார்கள் என்று விளம்பினான்.

4பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.

5அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது, அவளுடைய அநியாயங்களை தேவன் நினைவுகூர்ந்தார்.

6அவள் உங்களுக்குப் பலனளித்ததுபோல நீங்களும் அவளுக்குப் பலனளியுங்கள்; அவளுடைய கிரியைகளுக்குத்தக்கதாக அவளுக்கு இரட்டிப்பாகக் கொடுத்துத் தீருங்கள்; அவள் உங்களுக்குக் கலந்துகொடுத்த பாத்திரத்திலே இரட்டிப்பாக அவளுக்குக் கலந்துகொடுங்கள்.

7அவள் தன்னை மகிமைப்படுத்தி, செல்வச்செருக்காய் வாழ்ந்ததெவ்வளவோ அவ்வளவாய் வாதையையும் துக்கத்தையும் அவளுக்குக் கொடுங்கள். நான் ராஜஸ்திரீயாய் வீற்றிருக்கிறேன்; நான் கைம்பெண்ணல்ல, நான் துக்கத்தைக் காண்பதில்லையென்று அவள் தன் இருதயத்திலே எண்ணினாள்.

8ஆகையால் அவளுக்கு வரும் வாதைகளாகிய சாவும் துக்கமும் பஞ்சமும் ஒரே நாளிலே வரும்; அவள் அக்கினியினாலே சுட்டெரிக்கப்படுவாள்; அவளுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் தேவனாகிய கர்த்தர் வல்லமையுள்ளவர்.

9அவளுடனே வேசித்தனஞ்செய்து செல்வச்செருக்காய் வாழ்ந்த பூமியின் ராஜாக்களும் அவள் வேகிறதினால் உண்டான புகையைக் காணும்போது அவளுக்காக அழுது புலம்பி,

10அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று: ஐயையோ! பாபிலோன், மகா நகரமே! பலமான பட்டணமே! ஒரே நாழிகையில் உனக்கு ஆக்கினை வந்ததே! என்பார்கள்.

11பூமியின் வர்த்தகர்களும் தங்கள் தங்கள் சரக்குகளாகிய பொன்னையும், வெள்ளியையும், இரத்தினங்களையும், முத்துக்களையும், சல்லாவையும், இரத்தாம்பரத்தையும், பட்டாடைகளையும், சிவப்பாடைகளையும்,

12சகலவித வாசனைக் கட்டைகளையும், தந்தத்தினால் செய்திருக்கிற சகலவித வஸ்துக்களையும், விலையுயர்ந்த மரத்தினாலும் வெண்கலத்தினாலும் இரும்பினாலும் வெள்ளைக் கல்லினாலும் செய்திருக்கிற சகலவித வஸ்துக்களையும்,

13இலவங்கப்பட்டையையும், தூபவர்க்கங்களையும், தைலங்களையும், சாம்பிராணியையும், திராட்சரசத்தையும், எண்ணெயையும், மெல்லிய மாவையும், கோதுமையையும், மாடுகளையும், ஆடுகளையும், குதிரைகளையும், இரதங்களையும், அடிமைகளையும், மனுஷருடைய ஆத்துமாக்களையும் இனிக் கொள்வாரில்லாதபடியால், அவளுக்காக அழுது புலம்புவார்கள்.

14உன் ஆத்துமா இச்சித்த பழவர்க்கங்கள் உன்னைவிட்டு நீங்கிப்போயின; கொழுமையானவைகளும் சம்பிரமமானவைகளும் உன்னைவிட்டு நீங்கிப்போயின; நீ அவைகளை இனிக் காண்பதில்லை.

15இப்படிப்பட்டவைகளைக் கொண்டு வர்த்தகம்பண்ணி, அவளால் ஐசுவரியவான்களானவர்கள் அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று;

16ஐயையோ! சல்லாவும் இரத்தாம்பரமும் சிவப்பாடையும் தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டிருந்த மகா நகரமே! ஒரு நாழிகையிலே இவ்வளவு ஐசுவரியமும் அழிந்துபோயிற்றே! என்று சொல்லி, அழுது துக்கிப்பார்கள்.

17மாலுமிகள் யாவரும், கப்பல்களில் யாத்திரைபண்ணுகிறவர்கள் யாவரும், கப்பலாட்களும், சமுத்திரத்திலே தொழில்செய்கிற யாவரும் தூரத்திலே நின்று,

18அவள் வேகிறதினால் உண்டான புகையைப் பார்த்து: இந்த மகா நகரத்திற்கொப்பான நகரம் உண்டோ என்று சத்தமிட்டு,

19தங்கள் தலைகள்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு: ஐயையோ, மகா நகரமே! சமுத்திரத்திலே கப்பல்களையுடைய அனைவரும் இவளுடைய உச்சிதமான சம்பூரணத்தினால் ஐசுவரியவான்களானார்களே! ஒரு நாழிகையிலே இவள் பாழாய்ப்போனாளே! என்று அழுது துக்கித்து ஓலமிடுவார்கள்.

20பரலோகமே! பரிசுத்தவான்களாகிய அப்போஸ்தலர்களே! தீர்க்கதரிசிகளே! அவளைக்குறித்துக் களிகூருங்கள். உங்கள் நிமித்தம் தேவன் அவளை நியாயந்தீர்த்தாரே! என்று தூதன் சொன்னான்.

21அப்பொழுது, பலமுள்ள தூதனொருவன் பெரிய எந்திரக்கல்லையொத்த ஒரு கல்லை எடுத்துச் சமுத்திரத்திலே எறிந்து: இப்படியே பாபிலோன் மகா நகரம் வேகமாய்த் தள்ளுண்டு, இனி ஒருபோதும் காணப்படாமற்போகும்.

22சுரமண்டலக்காரரும், கீதவாத்தியக்காரரும், நாகசுரக்காரரும், எக்காளக்காரருமானவர்களுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை; எந்தத் தொழிலாளியும் இனி உன்னிடத்தில் காணப்படுவதுமில்லை; எந்திரசத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை.

23விளக்குவெளிச்சம் இனி உன்னிடத்தில் பிரகாசிப்பதுமில்லை; மணவாளனும் மணவாட்டியுமானவர்களுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை. உன் வர்த்தகர் பூமியில் பெரியோர்களாயிருந்தார்களே; உன் சூனியத்தால் எல்லா ஜாதிகளும் மோசம்போனார்களே.

24தீர்க்கதரிசிகளுடைய இரத்தமும் பரிசுத்தவான்களுடைய இரத்தமும் பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தமும் அவளிடத்தில் காணப்பட்டது என்று விளம்பினான்.

தனிவாசிப்பு

1இதோ, கர்த்தருடைய நாள் வருகிறது, உன்னில் கொள்ளையானது உன் நடுவிலே பங்கிடப்படும்.

2எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணச் சகல ஜாதிகளையும் கூட்டுவேன்; நகரம் பிடிக்கப்படும்; வீடுகள் கொள்ளையாகும்; ஸ்திரீகள் அவமானப்படுவார்கள்; நகரத்தாரில் பாதி மனுஷர் சிறைப்பட்டுப்போவார்கள்; மீதியான ஜனமோ நகரத்தை விட்டு அறுப்புண்டுபோவதில்லை.

3கர்த்தர் புறப்பட்டு, யுத்தநாளிலே போராடுவதுபோல் அந்த ஜாதிகளோடே போராடுவார்.

4அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோகும்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும்.

5அப்பொழுது என் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாய் ஓடிப்போவீர்கள்; மலைகளின் பள்ளத்தாக்கு ஆத்சால்மட்டும் போகும்; நீங்கள் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களில் பூமியதிர்ச்சிக்குத் தப்பி ஓடிப்போனதுபோல் ஓடிப்போவீர்கள்; என் தேவனாகிய கர்த்தர் வருவார்; தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள்.

6அந்நாளில் வெளிச்சம் இல்லாமல், ஒருவேளை பிரகாசமும் ஒருவேளை மப்புமாயிருக்கும்.

7ஒருநாள் உண்டு, அது கர்த்தருக்குத் தெரிந்தது; அது பகலுமல்ல இரவுமல்ல; ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும்.

8அந்நாளிலே ஜீவதண்ணீர்கள் எருசலேமிலிருந்து புறப்பட்டு, பாதி கிழக்குச் சமுத்திரத்துக்கும், பாதி மேற்குச் சமுத்திரத்துக்கும் போய், மாரிகாலத்துக்கும் கோடைகாலத்துக்கும் இருக்கும்.

9அப்பொழுது கர்த்தர் பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்.

10தேசமெல்லாம் கேபாதொடங்கி எருசலேமுக்குத் தெற்கே இருக்கிற ரிம்மோன்வரைக்கும் சமபூமியாகத் திருத்தப்படும்; எருசலேமோ உயர்ந்ததாகி, தன் ஸ்தானத்திலே பென்யமீன் வாசல்தொடங்கி முதல்வாசலென்கிற ஸ்தலமட்டும் கோடிவாசல் வரைக்கும், அனானெயேல் கோபுரம் துவக்கி ராஜாவின் திராட்ச ஆலைகள்மட்டும் குடியேற்றப்பட்டிருக்கும்.

11அதிலே ஜனங்கள் வாசம்பண்ணுவார்கள்; இனிச் சங்கரிப்பில்லாமல் எருசலேம் சுகமாய்த் தங்கியிருக்கும்.

12எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணின எல்லா ஜனங்களையும் கர்த்தர் வாதிக்கும் வாதையாவது: அவர்கள் காலூன்றி நிற்கையிலும் அவர்களுடைய சதை அழிந்துபோகும்; அவர்கள் கண்கள் தங்கள் குழிகளிலே கெட்டுப்போகும்; அவர்கள் நாவு அவர்கள் வாயிலே அழுகிப்போகும்.

13அந்நாளிலே கர்த்தரால் பெரிய கலக்கம் அவர்களுக்குள் உண்டாகும்; அவனவன் தன்தன் அயலானின் கையைப் பிடிப்பான்; அவனவனுடைய கை அவனவன் அயலானுடைய கைக்கு விரோதமாக எழும்பும்.

14யூதாவும் எருசலேமிலே யுத்தம்பண்ணும்; அப்பொழுது சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளுடைய ஆஸ்தியாகிய பொன்னும் வெள்ளியும் வஸ்திரங்களும் மகா திரளாகக் கூட்டப்படும்.

15அந்தப்பாளையங்களில் இருக்கும் குதிரைகள், கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள், கழுதைகள் முதலான எல்லா மிருகஜீவன்களுக்கும் வரும் வாதையும், அந்த வாதையைப்போலவே இருக்கும்.

16பின்பு, எருசலேமுக்கு விரோதமாக வந்திருந்த எல்லா ஜாதிகளிலும் மீதியான யாவரும் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ளும்படிக்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிக்கும்படிக்கும், வருஷாவருஷம் வருவார்கள்.

17அப்பொழுது பூமியின் வம்சங்களில் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ள எருசலேமுக்கு வராதவர்கள் எவர்களோ அவர்கள்மேல் மழை வருஷிப்பதில்லை.

18மழை வருஷிக்காத எகிப்தின் வம்சம் வராமலும் சேராமலும்போனால், கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராத ஜாதிகளைக் கர்த்தர் வாதிக்கும் வாதையே அவர்கள்மேலும்வரும்.

19இது எகிப்தியருடைய பாவத்துக்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராத சகல ஜாதிகளுடைய பாவத்துக்கும் வரும் ஆக்கினை.

20அந்நாளிலே குதிரைகளின் மணிகளிலே கர்த்தருக்குப் பரிசுத்தம் என்னும் விலாசம் எழுதியிருக்கும்; கர்த்தருடைய ஆலயத்திலுள்ள பானைகள் பலிபீடத்துக்கு முன்பாக இருக்கிற பாத்திரங்களைப் போலிருக்கும்.

21அப்பொழுது எருசலேமிலும் யூதாவிலுமுள்ள எல்லாப் பானைகளும் சேனைகளின் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்; பலியிடுகிற யாவரும் வந்து அவைகளில் எடுத்து, அவைகளில் சமைப்பார்கள்; அந்நாள்முதல் சேனைகளுடைய கர்த்தரின் ஆலயத்திலே யாதொரு கானானியனும் இருப்பதில்லை.

1இயேசு இவைகளைச் சொன்னபின்பு தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து:

2பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்.

3ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.

4பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன்.

5பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினால் இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்.

6நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாயிருந்தார்கள், அவர்களை எனக்குத் தந்தீர், அவர்கள் உம்முடைய வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள்.

7நீர் எனக்குத் தந்தவைகளெல்லாம் உம்மாலே உண்டாயினவென்று இப்பொழுது அறிந்திருக்கிறார்கள்.

8நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்; அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாய் அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள்.

9நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே.

10என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்; அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன்.

11நான் இனி உலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும்.

12நான் அவர்களுடனேகூட உலகத்திலிருக்கையில் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன்; நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக்கொண்டுவந்தேன்; வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, கேட்டின் மகன் கெட்டுப்போனானேயல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை.

13இப்பொழுது நான் உம்மிடத்திற்கு வருகிறேன்; அவர்கள் என் சந்தோஷத்தை நிறைவாய் அடையும்படி உலகத்தில் இருக்கையில் இவைகளைச் சொல்லுகிறேன்.

14நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது.

15நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.

16நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல.

17உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.

18நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன்.

19அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன்.

20நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும், வேண்டிக்கொள்ளுகிறேன்.

21அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.

22நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.

23ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.

24பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்கவிரும்புகிறேன்.

25நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியவில்லை, நான் உம்மை அறிந்திருக்கிறேன்; நீர் என்னை அனுப்பினதை இவர்களும் அறிந்திருக்கிறார்கள்.

26நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும்படிக்கும், நானும் அவர்களிலிருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன் என்றார்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com