1மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்து வருஷம் எருசலேமில் அரசாண்டான்.
2கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே, அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
3அவன் தன் தகப்பனாகிய எசேக்கியா தகர்த்துப்போட்ட மேடைகளைத் திரும்பவும் கட்டி, பாகால்களுக்குப் பலிபீடங்களை எடுப்பித்து, விக்கிரகத்தோப்புகளை உண்டாக்கி, வானத்தின் சேனையையெல்லாம் பணிந்துகொண்டு, அவைகளைச் சேவித்து,
4எருசலேமிலே என் நாமம் என்றென்றைக்கும் விளங்கும் என்று கர்த்தர் சொன்ன தம்முடைய ஆலயத்திலே பலிபீடங்களைக் கட்டி,
5கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் வானத்தின் சேனைகளுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டினான்.
6அவன் இன்னோம் குமாரரின் பள்ளத்தாக்கிலே தன் குமாரரைத் தீமிதிக்கப்பண்ணி, நாளும் நிமித்தமும் பார்த்து, பில்லிசூனியங்களை அநுசரித்து, அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்கு மிகுதியும் பொல்லாப்பானதைச் செய்தான்.
7இந்த ஆலயத்திலும், இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் நான் தெரிந்துகொண்ட எருசலேமிலும், என் நாமத்தை என்றென்றைக்கும் விளங்கப்பண்ணுவேன் என்றும்,
8நான் மோசேயைக்கொண்டு இஸ்ரவேலுக்குக் கொடுத்த சகல நியாயப்பிரமாணத்திற்கும் கட்டளைகளுக்கும் நியாயங்களுக்கும் ஒத்தபடியே அவர்களுக்கு நான் கற்பித்தவைகளையெல்லாம் அவர்கள் செய்யச் சாவதானமாய் இருந்தார்களேயாகில், நான் இனி அவர்கள் காலை அவர்கள் பிதாக்களுக்கு நிலைப்படுத்திவைத்த தேசத்திலிருந்து விலகப்பண்ணுவதில்லையென்றும், தேவன் தாவீதோடும் அவன் குமாரனாகிய சாலொமோனோடும் சொல்லியிருந்த தேவனுடைய ஆலயத்தில்தானே, அவன் தான் பண்ணுவித்த விக்கிரகமாகிய சிலையை ஸ்தாபித்தான்.
9அப்படியே கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அழித்த ஜாதிகளைப் பார்க்கிலும், யூதாவும் எருசலேமின் குடிகளும் பொல்லாப்புச் செய்யதக்கதாய், மனாசே அவர்களை வழிதப்பிப்போகப்பண்ணினான்.
10கர்த்தர் மனாசேயோடும் அவனுடைய ஜனத்தோடும் பேசினபோதிலும், அவர்கள் கவனிக்காதே போனார்கள்.
11ஆகையால் கர்த்தர்: அசீரியா ராஜாவின் சேனாபதிகளை அவர்கள்மேல் வரப்பண்ணினார்; அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச்சங்கிலியால் அவனைக் கட்டிப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.
12இப்படி அவன் நெருக்கப்படுகையில், தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கெஞ்சி, தன் பிதாக்களின் தேவனுக்கு முன்பாக மிகவும் தன்னைத் தாழ்த்தினான்.
13அவரை நோக்கி, அவன் விண்ணப்பம்பண்ணிக்கொண்டிருக்கிறபோது, அவர் அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவன் ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப எருசலேமிலுள்ள தன்னுடைய ராஜ்யத்திற்கு வரப்பண்ணினார்; கர்த்தரே தேவன் என்று அப்பொழுது மனாசே அறிந்தான்.
14பின்பு அவன் தாவீதுடைய நகரத்தின் வெளி அலங்கத்தைக் கீயோனுக்கு மேற்கேயிருக்கிற பள்ளத்தாக்கு தொடங்கி மீன்வாசல்மட்டும் கட்டி, ஓபேலைச் சுற்றிலும் அதை வளைத்து, அதை மிகவும் உயர்த்தி, யூதாவிலுள்ள அரணான பட்டணங்களிலெல்லாம் இராணுவத்தலைவரை வைத்து,
15கர்த்தருடைய ஆலயத்திலிருந்து அந்நிய தேவர்களையும் அந்த விக்கிரகத்தையும் எடுத்துப்போட்டு, கர்த்தருடைய ஆலயமுள்ள மலையிலும் எருசலேமிலும் தான் கட்டியிருந்த எல்லாப் பலிபீடங்களையும் அகற்றி, பட்டணத்திற்குப் புறம்பாகப் போடுவித்து,
16கர்த்தருடைய பலிபீடத்தைச் செப்பனிட்டு, அதின்மேல் சமாதானபலிகளையும் ஸ்தோத்திர பலிகளையும் செலுத்தி, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைச் சேவிக்கவேண்டும் என்று யூதாவுக்குக் கட்டளையிட்டான்.
17ஆகிலும் ஜனங்கள் இன்னும் மேடைகளில் பலியிட்டுவந்தார்கள்; என்றாலும் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கென்றே அப்படிச் செய்தார்கள்.
18மனாசேயின் மற்ற வர்த்தமானங்களும், அவன் தன் தேவனை நோக்கிப் பண்ணின விண்ணப்பமும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தில் அவனோடே பேசின ஞானதிருஷ்டிக்காரரின் வார்த்தைகளும், இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.
19அவனுடைய விண்ணப்பமும், அவன் கெஞ்சுதலுக்குக் கர்த்தர் இரங்கினதும், அவன் தன்னைத் தாழ்த்தினதற்கு முன்னே பண்ணின அவனுடைய எல்லாப் பாவமும் துரோகமும், அவன் மேடைகளைக் கட்டி விக்கிரகத் தோப்புகளையும் சிலைகளையும் ஸ்தாபித்த இடங்களும், ஓசாயின் பிரபந்தத்தில் எழுதியிருக்கிறது.
20மனாசே தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனை அவன் வீட்டிலே அடக்கம் பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய ஆமோன் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
21ஆமோன் ராஜாவாகிறபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, இரண்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான்.
22அவன் தன் தகப்பனாகிய மனாசே செய்ததுபோல கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; தன் தகப்பனாகிய மனாசே பண்ணுவித்திருந்த விக்கிரகங்களுக்கெல்லாம் ஆமோன் பலியிட்டு, அவைகளைச் சேவித்தான்.
23தன் தகப்பனாகிய மனாசே தன்னைத் தாழ்த்திக்கொண்டதுபோல, இந்த ஆமோன் என்பவன் கர்த்தருக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தாமல் மேன்மேலும் அக்கிரமம் செய்துவந்தான்.
24அவன் ஊழியக்காரர் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, அவன் அரமனையிலே அவனைக் கொன்று போட்டார்கள்.
25அப்பொழுது தேசத்து ஜனங்கள் ஆமோன் என்னும் ராஜாவுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணின யாவரையும் வெட்டிப்போட்டு, அவன் குமாரனாகிய யோசியாவை அவன் ஸ்தானத்தில் ராஜாவாக்கினார்கள்.
1இவைகளுக்குப்பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள்: அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நீயாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்.
2தன் வேசித்தனத்தினால் பூமியைக் கெடுத்த மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக்கொடுத்து, தம்முடைய ஊழியக்காரரின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே என்றார்கள்.
3மறுபடியும் அவர்கள்: அல்லேலூயா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள்.
4இருபத்துநான்கு மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் வணக்கமாய் விழுந்து: ஆமென், அல்லேலூயா, என்று சொல்லி, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனைத் தொழுதுகொண்டார்கள்.
5மேலும், நமது தேவனுடைய ஊழியக்காரரே, அவருக்குப் பயப்படுகிற சிறியோரும் பெரியோருமானவர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள் என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து பிறந்தது.
6அப்பொழுது திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம்போலவும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தமுண்டாகி: அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார்.
7நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக்கேட்டேன்.
8சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே.
9பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்.
10அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான்.
11பின்பு, பரலோகம் திறந்திருக்கக்கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்.
12அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப் போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது.
13இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.
14பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந்தரித்தவர்களாய், வெள்ளைக் குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின் சென்றார்கள்.
15புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது; இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார்.
16ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.
17பின்பு ஒரு தூதன் சூரியனில் நிற்கக்கண்டேன்; அவன் வானத்தின் மத்தியில் பறக்கிற சகல பறவைகளையும் பார்த்து:
18நீங்கள் ராஜாக்களின் மாம்சத்தையும், சேனைத்தலைவர்களின் மாம்சத்தையும், பலவான்களின் மாம்சத்தையும், குதிரைகளின் மாம்சத்தையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களின் மாம்சத்தையும், சுயாதீனர் அடிமைகள், சிறியோர் பெரியோர், இவர்களெல்லாருடைய மாம்சத்தையும் பட்சிக்கும்படிக்கு, மகா தேவன் கொடுக்கும் விருந்துக்குக் கூடிவாருங்கள் என்று மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டான்.
19பின்பு, மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய சேனையோடும் யுத்தம்பண்ணும்படிக்குக் கூடிவரக்கண்டேன்.
20அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள்.
21மற்றவர்கள் குதிரையின்மேல் ஏறினவருடைய வாயிலிருந்து புறப்படுகிற பட்டயத்தால் கொல்லப்பட்டார்கள்; அவர்களுடைய மாம்சத்தினால் பறவைகள் யாவும் திருப்தியடைந்தன.
1மல்கியாவைக்கொண்டு கர்த்தர் இஸ்ரவேலுக்குச் சொன்ன வார்த்தையின் பாரம்.
2நான் உங்களைச் சிநேகித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அதற்கு நீங்கள்: எங்களை எப்படிச் சிநேகித்தீர் என்கிறீர்கள்; கர்த்தர் சொல்லுகிறார்: ஏசா யாக்கோபுக்குச் சகோதரன் அல்லவோ? ஆகிலும் யாக்கோபை நான் சிநேகித்தேன்.
3ஏசாவையோ நான் வெறுத்தேன்; அவனுடைய மலைகளைப் பாழும், அவனுடைய சுதந்தரத்தை வனாந்தரத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தாவும் ஆக்கினேன்.
4ஏதோமியர்: நாம் எளிமைப்பட்டோம்: ஆனாலும் பாழானவைகளைத் திரும்பக் கட்டுவோம் என்று சொல்லுகிறார்கள்; அதற்குக் கர்த்தர்: அவர்கள் கட்டுவார்கள், நான் இடிப்பேன், அவர்கள் துன்மார்க்கத்தின் எல்லையென்றும், கர்த்தர் என்றைக்கும் சினம்வைக்கிற ஜனமென்றும் சொல்லப்படுவார்கள் என்கிறார்.
5இதை உங்கள் கண்கள் காணும். அப்பொழுது நீங்கள்: கர்த்தர் இஸ்ரவேலுடைய எல்லை துவக்கி மகிமைப்படுத்தப்படுவார் என்பீர்கள்.
6குமாரன் தன் பிதாவையும், ஊழியக்காரன் தன் எஜமானையும் கனம்பண்ணுகிறார்களே; நான் பிதாவானால் என் கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே என்று சேனைகளின் கர்த்தர் தமது நாமத்தை அசட்டைபண்ணுகிற ஆசாரியர்களாகிய உங்களைக் கேட்கிறார்; அதற்கு நீங்கள்: உமது நாமத்தை எதினாலே அசட்டைபண்ணினோம் என்கிறீர்கள்.
7என் பீடத்தின்மேல் அசுத்தமான அப்பத்தைப் படைக்கிறதினாலேயே; ஆனாலும் உம்மை எதினாலே அசுத்தப்படுத்தினோம் என்கிறீர்கள்; கர்த்தருடைய பந்தி எண்ணமற்றுப்போயிற்றென்று நீங்கள் சொல்லுகிறதினாலேயே.
8நீங்கள் கண் ஊனமானதைப் பலியிடக்கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல, நீங்கள் காலூனமானதையும் நசல் பிடித்ததையும் கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல என்கிறீர்களே; அதை நீ உன் அதிபதிக்குச் செலுத்து, அவன் உன்மேல் பிரியமாயிருப்பானோ? உன் முகத்தைப் பார்ப்பானோ என்று சேனைகளின் கர்த்தர் கேட்கிறார்.
9இப்போதும் தேவனுடைய சமுகத்தை நோக்கிக் கெஞ்சுங்கள்; அப்பொழுது நம்மேல் இரங்குவார்; இது உங்களாலே வந்த காரியம்; அவர் உங்களை அங்கீகரிப்பாரோ என்று சேனைகளின் கர்த்தர் கேட்கிறார்.
10உங்களில் எவன் கூலியில்லாமல் கதவுகளைப் பூட்டுவான்; என் பலிபீடத்தின்மேல் அக்கினியைக் கூலியில்லாமல் கொளுத்தவுமாட்டீர்கள்; உங்கள்பேரில் எனக்குப் பிரியமில்லையென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் கைகளிலுள்ள காணிக்கை எனக்கு உகந்ததல்ல.
11சூரியன் உதிக்கிற திசை தொடங்கி, அது அஸ்தமிக்கிற திசைவரைக்கும், என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும்; எல்லா இடங்களிலும் என் நாமத்துக்குத் தூபமும் சுத்தமான காணிக்கையும் செலுத்தப்படும்; என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
12நீங்களோ கர்த்தருடைய பந்தி அசுத்தமானது என்றும், அதின் ஆகாரமாகிய அதின் பலன் அற்பமானது என்று சொல்லுகிறதினாலே, என் நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறீர்கள்.
13இதோ, இது எவ்வளவு வருத்தமென்று சொல்லி, அதை ஒரு திரணமாய்ப் பேசி, பீறுண்டதையும் கால் ஊனமானதையும் நசல்கொண்டதையும் கொண்டுவந்து காணிக்கையாகச் செலுத்துகிறீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அதை உங்கள் கைகளில் அங்கீகரித்துக்கொள்வேனோ என்று கர்த்தர் கேட்கிறார்.
14தன் மந்தையில் கடா இருக்கையில் கெட்டுப்போனதை ஆண்டவருக்கு நேர்ந்துகொண்டு பலியிடுகிற கபடஸ்தன் சபிக்கப்பட்டவன்; என் நாமம் ஜாதிகளுக்குள்ளே பயங்கரமாயிருக்கும்; நான் மகத்துவமான ராஜா என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
1இயேசு இவைகளைச் சொன்னபின்பு, தம்முடைய சீஷருடனேகூட கெதரோன் என்னும் ஆற்றுக்கு அப்புறம் போனார்; அங்கே ஒரு தோட்டம் இருந்தது, அதிலே அவரும் அவருடைய சீஷரும் பிரவேசித்தார்கள்.
2இயேசு தம்முடைய சீஷருடனேகூட அடிக்கடி அங்கே போயிருந்தபடியினால், அவரைக் காட்டிக்கொடுக்கிற யூதாசும் அந்த இடத்தை அறிந்திருந்தான்.
3யூதாஸ் போர்ச்சேவகரின் கூட்டத்தையும் பிரதான ஆசாரியர் பரிசேயர் என்பவர்களால் அனுப்பப்பட்ட ஊழியக்காரரையும் கூட்டிக்கொண்டு, பந்தங்களோடும் தீவட்டிகளோடும் ஆயுதங்களோடும் அவ்விடத்திற்கு வந்தான்.
4இயேசு தமக்கு நேரிடப்போகிற எல்லாவற்றையும் அறிந்து, எதிர்கொண்டுபோய், அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்றார்.
5அவருக்கு அவர்கள் பிரதியுத்தரமாக: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். அதற்கு இயேசு: நான்தான் என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களுடனேகூட நின்றான்.
6நான்தான் என்று அவர் அவர்களிடத்தில் சொன்னவுடனே, அவர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள்.
7அவர் மறுபடியும் அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்டார். அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள்.
8இயேசு பிரதியுத்தரமாக: நான்தானென்று உங்களுக்குச் சொன்னேனே; என்னைத் தேடுகிறதுண்டானால், இவர்களைப் போகவிடுங்கள் என்றார்.
9நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழந்துபோகவில்லையென்று அவர் சொல்லிய வசனம் நிறைவேறத்தக்கதாக இப்படி நடந்தது.
10அப்பொழுது சீமோன்பேதுரு, தன்னிடத்திலிருந்த பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான்; அந்த வேலைக்காரனுக்கு மல்குஸ் என்று பேர்.
11அப்பொழுது இயேசு பேதுருவை நோக்கி: உன் பட்டயத்தை உறையிலே போடு; பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ என்றார்.
12அப்பொழுது போர்ச்சேவகரும், ஆயிரம் போர்ச்சேவகருக்குத் தலைவனும், யூதருடைய ஊழியக்காரரும் இயேசுவைப்பிடித்து, அவரைக் கட்டி,
13முதலாவது அவரை அன்னா என்பவனிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அவன் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவுக்கு மாமனாயிருந்தான்.
14ஜனங்களுக்காக ஒரே மனுஷன் சாகிறது நலமாயிருக்குமென்று யூதருக்கு ஆலோசனை சொன்னவன் இந்தக் காய்பாவே.
15சீமோன் பேதுருவும் வேறொரு சீஷனும் இயேசுவுக்குப் பின்சென்றார்கள். அந்தச் சீஷன் பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்ததினால் இயேசுவுடனேகூடப் பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் பிரவேசித்தான்.
16பேதுரு வாசலருகே வெளியே நின்றான். அப்பொழுது பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்த மற்றச் சீஷன் வெளியே வந்து, வாசல்காக்கிறவர்களுடனே பேசி, பேதுருவை உள்ளே அழைத்துக்கொண்டுபோனான்.
17அப்பொழுது வாசல்காக்கிற வேலைக்காரி பேதுருவை நோக்கி: நீயும் அந்த மனுஷனுடைய சீஷரில் ஒருவனல்லவா என்றாள். அவன்: நான் அல்ல என்றான்.
18குளிர்காலமானபடியினாலே ஊழியக்காரரும் சேவகரும் கரிநெருப்புண்டாக்கி, நின்று, குளிர்காய்ந்துகொண்டிருந்தார்கள்; அவர்களுடனேகூடப் பேதுருவும் நின்று குளிர்காய்ந்து கொண்டிருந்தான்.
19பிரதான ஆசாரியன் இயேசுவினிடத்தில் அவருடைய சீஷரைக்குறித்தும் போதகத்தைக்குறித்தும் விசாரித்தான்.
20இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினேன்; ஜெப ஆலயங்களிலேயும் யூதர்களெல்லாரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித்தேன்; அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை.
21நீர் என்னிடத்தில் விசாரிக்கவேண்டியதென்ன? நான் சொன்னவைகளைக் கேட்டவர்களிடத்தில் விசாரியும்; நான் பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றார்.
22இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.
23இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.
24பின்பு அன்னா என்பவன் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்கு அவரைக் கட்டுண்டவராக அனுப்பினான்.
25சீமோன்பேதுரு நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான். அப்பொழுது சிலர் அவனை நோக்கி: நீயும் அவனுடைய சீஷரில் ஒருவனல்லவா என்றார்கள். அவன்: நான் அல்ல என்று மறுதலித்தான்.
26பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரரில் பேதுரு காதறவெட்டினவனுக்கு இனத்தானாகிய ஒருவன் அவனை நோக்கி: நான் உன்னை அவனுடனேகூடத் தோட்டத்திலே காணவில்லையா என்றான்.
27அப்பொழுது பேதுரு மறுபடியும் மறுதலித்தான்; உடனே சேவல் கூவிற்று.
28அவர்கள் காய்பாவினிடத்திலிருந்து இயேசுவைத் தேசாதிபதியின் அரமனைக்குக் கொண்டுபோனார்கள்; அப்பொழுது விடியற்காலமாயிருந்தது. தீட்டுப்படாமல் பஸ்காவைப் புசிக்கத்தக்கதாக, அவர்கள் தேசாதிபதியின் அரமனைக்குள் பிரவேசியாதிருந்தார்கள்.
29ஆதலால் பிலாத்து அவர்களிடத்தில் வெளியே வந்து: இந்த மனுஷன்மேல் என்ன குற்றஞ்சாட்டுகிறீர்கள் என்றான்.
30அவர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: இவன் குற்றவாளியாயிராவிட்டால், இவனை உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கமாட்டோம் என்றார்கள்.
31அப்பொழுது பிலாத்து அவர்களை நோக்கி: இவனை நீங்களே கொண்டுபோய், உங்கள் நியாயப்பிரமாணத்தின்படி நியாயந்தீருங்கள் என்றான். அதற்கு யூதர்கள்: ஒருவனையும் மரண ஆக்கினை செய்ய எங்களுக்கு அதிகாரமில்லை என்றார்கள்.
32தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப்போகிறாரென்பதைக்குறித்து இயேசு குறிப்பாய்ச் சொல்லியிருந்த வார்த்தை நிறைவேறத்தக்கதாக இப்படிச் சொன்னார்கள்.
33அப்பொழுது பிலாத்து மறுபடியும் அரமனைக்குள் பிரவேசித்து, இயேசுவை அழைத்து: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான்.
34இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நீராய் இப்படிச் சொல்லுகிறீரோ? அல்லது மற்றவர்கள் என்னைக்குறித்து இப்படி உமக்குச் சொன்னார்களோ என்றார்.
35பிலாத்து பிரதியுத்தரமாக: நான் யூதனா? உன் ஜனங்களும் பிரதான ஆசாரியரும் உன்னை என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள், நீ என்ன செய்தாய் என்றான்.
36இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார்.
37அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்.
38அதற்குப் பிலாத்து: சத்தியமாவது என்ன என்றான். மறுபடியும் அவன் யூதர்களிடத்தில் வெளியே வந்து: நான் அவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன்.
39பஸ்கா பண்டிகையில் நான் உங்களுக்கு ஒருவனை விடுதலைபண்ணுகிற வழக்கமுண்டே; ஆகையால் யூதருடைய ராஜாவை நான் உங்களுக்காக விடுதலைபண்ண உங்களுக்கு மனதுண்டா என்றான்.
40அப்பொழுது: அவர்களெல்லாரும் இவனையல்ல, பரபாசை விடுதலைபண்ணவேண்டும் என்று மறுபடியும் சத்தமிட்டார்கள்; அந்தப் பரபாசென்பவன் கள்ளனாயிருந்தான்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com