‹ முகப்புமுழுத் திட்டம்

டிசம்பர் 5 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்டிசம்பர் 5அடுத்த நாள் ›
குடும்பம்

II நாளாகமம் 5:1-6:11

முழு அதிகாரம் ›
II நாளாகமம் 5

1கர்த்தருடைய ஆலயத்துக்காகச் சாலொமோன் செய்த வேலையெல்லாம் முடிந்தபோது, சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீது பரிசுத்தம்பண்ணும்படி நேர்ந்தவைகளைக் கொண்டுவந்து, வெள்ளியையும், பொன்னையும், சகல பணிமுட்டுகளையும், தேவனுடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் வைத்தான்.

2பின்பு கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியைச் சீயோன் என்னும் தாவீதின் நகரத்திலிருந்து கொண்டுவரும்படி சாலொமோன் இஸ்ரவேலின் மூப்பரையும், கோத்திரப் பிரப்புக்களாகிய இஸ்ரவேல் புத்திரரின் வம்சத் தலைவர் எல்லாரையும் எருசலேமிலே கூடிவரச்செய்தான்.

3அப்படியே இஸ்ரவேலர் எல்லாரும் ஏழாம் மாதத்தின் பண்டிகையிலே ராஜாவினிடத்தில் கூடிவந்தார்கள்.

4இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் வந்தபின்பு லேவியர் பெட்டியை எடுத்து,

5பெட்டியையும், ஆசரிப்புக் கூடாரத்தையும், கூடாரத்திலிருக்கிற பரிசுத்த பணிமுட்டுகளையும் கொண்டுவந்தார்கள்; அவைகளைக் கொண்டுவந்தவர்கள் லேவியரான ஆசாரியரே.

6ராஜாவாகிய சாலொமோனும், அவனோடே கூடின இஸ்ரவேல் சபையார் அனைவரும், பெட்டிக்கு முன்பாக எண்ணிக்கைக்கும் தொகைக்கும் அடங்காத ஏராளமான ஆடுமாடுகளைப் பலியிட்டார்கள்.

7அப்படியே ஆசாரியர் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை, ஆலயத்தின் சந்நிதியாகிய மகா பரிசுத்தமான ஸ்தலத்திலே, கேருபீன்களுடைய செட்டைகளுக்குக் கீழாகக் கொண்டுவந்து வைத்தார்கள்.

8கேருபீன்கள், பெட்டியிருக்கும் ஸ்தானத்தின்மேல், தங்கள் இரண்டிரண்டு செட்டைகளை விரித்து உயர இருந்து பெட்டியையும் அதின் தண்டுகளையும் மூடிக்கொண்டிருந்தது.

9பெட்டியிலிருக்கிற தண்டுகளின் முனைகள் சந்நிதி ஸ்தலத்திற்கு முன்னே காணப்படத்தக்கதாய் அந்தத் தண்டுகளை இழுத்தார்கள்; புறம்பே அவைகள் காணப்படவில்லை; அது இந்நாள்வரைக்கும் அங்கே இருக்கிறது.

10இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து புறப்பட்டபின், கர்த்தர் ஓரேபிலே அவர்களோடு உடன்படிக்கை பண்ணினபோது, மோசே அந்தப் பெட்டியிலே வைத்த இரண்டு கற்பலகைகளே அல்லாமல் அதிலே வேறொன்றும் இருந்ததில்லை.

11வகுப்புகளின் முறைகளைப் பாராமல், ஆசாரியர் எல்லோரும் தங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொண்டார்கள்.

12ஆசாப், ஏமான், எதுத்தூனுடைய கூட்டத்தாரும், அவர்களுடைய குமாரர் சகோதரருடைய கூட்டத்தாருமாகிய பாடகரான லேவியரனைவரும் மெல்லிய புடவைகளைத் தரித்து, கைத்தாளங்களையும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் பிடித்துப் பலிபீடத்திற்குக் கிழக்கே நின்றார்கள்; அவர்களோடும் கூடப் பூரிகைகளை ஊதுகிற ஆசாரியர்கள் நூற்றிருபதுபேர் நின்றார்கள்.

13அவர்கள் ஒருமிக்கப் பூரிகைகளை ஊதி, ஏகசத்தமாய் கர்த்தரைத் துதித்து ஸ்தோத்திரித்துப் பாடினார்கள்; ஆசாரியர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படுகையிலும், பாடகர் பூரிகைகள் தாளங்கள் கீதவாத்தியங்களுடைய சத்தத்தை தொனிக்கப்பண்ணி, கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது என்று அவரை ஸ்தோத்திரிக்கையிலும், கர்த்தருடைய வீடாகிய தேவாலயம் மேகத்தினால் நிறையப்பட்டது.

14அந்த மேகத்தினிமித்தம் ஆசாரியர்கள் ஊழியஞ்செய்து நிற்கக்கூடாமற் போயிற்று; கர்த்தருடைய மகிமை தேவனுடைய ஆலயத்தை நிரப்பிற்று.

II நாளாகமம் 6

1அப்பொழுது சாலொமோன்: காரிருளிலே வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார் என்றும்,

2தேவரீர் வாசம்பண்ணத்தக்க வீடும், நீர் என்றைக்கும் தங்கத்தக்க நிலையான ஸ்தானமுமாகிய ஆலயத்தை உமக்குக் கட்டினேன் என்றும் சொல்லி,

3ராஜா முகம் திரும்பி, இஸ்ரவேல் சபையார் எல்லாரையும் ஆசீர்வதித்தான்; இஸ்ரவேல் சபையார் எல்லாரும் நின்றார்கள்.

4அவன் சொன்னது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் என் தகப்பனாகிய தாவீதுக்குத் தம்முடைய வாக்கினால் சொன்னதை, தம்முடைய கரத்தினால் நிறைவேற்றினார்.

5அவர்: நான் என் ஜனத்தை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நாள்முதற்கொண்டு, என் நாமம் விளங்கும்படி, ஒரு ஆலயத்தைக் கட்டவேண்டுமென்று நான் இஸ்ரவேலுடைய எல்லாக்கோத்திரங்களிலுமுள்ள வேறே யாதொரு பட்டணத்தைத் தெரிந்துகொள்ளாமலும், என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கும்படி வேறே ஒருவரைத் தெரிந்துகொள்ளாமலும்,

6என் நாமம் விளங்கும் ஸ்தானமாக எருசலேமையும், என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கத் தாவீதையும் தெரிந்துகொண்டேன் என்றார்.

7இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் என் தகப்பனாகிய தாவீதின் மனதில் இருந்தது.

8ஆனாலும் கர்த்தர் என் தகப்பனாகிய தாவீதை நோக்கி: என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் உன் மனதிலே இருந்தது நல்ல காரியந்தான்.

9ஆகிலும் நீ அந்த ஆலயத்தைக் கட்டமாட்டாய்; உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் குமாரனே என் நாமத்திற்கு அந்த ஆலயத்தைக் கட்டுவான் என்றார்.

10இப்போதும் கர்த்தர் சொல்லிய தமது வார்த்தையை நிறைவேற்றினார்; கர்த்தர் சொன்னபடியே, நான் என் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்தில் எழும்பி, இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டி,

11கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருடனே பண்ணின உடன்படிக்கையிருக்கிற பெட்டியை அதிலே வைத்தேன் என்று சொல்லி,

1பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங்கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.

2தேவ ஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது.

3மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.

4பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.

5அவர்கள் உலகத்துக்குரியவர்கள், ஆகையால் உலகத்துக்குரியவர்களைப் பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக்கும்.

6நாங்கள் தேவனால் உண்டானவர்கள்; தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான்; தேவனால் உண்டாயிராதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை; இதினாலே சத்திய ஆவி இன்னதென்றும் வஞ்சக ஆவி இன்னதென்றும் அறிந்திருக்கிறோம்.

7பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.

8அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்.

9தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.

10நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.

11பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்.

12தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும்.

13அவர் தம்முடைய ஆவியில் நமக்குத் தந்தருளினதினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை அறிந்திருக்கிறோம்.

14பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம்.

15இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான்.

16தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.

17நியாயத்தீர்ப்புநாளிலே நமக்குத் தைரியமுண்டாயிருக்கத்தக்கதாக அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது; ஏனென்றால், அவர் இருக்கிறபிரகாரமாக நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம்.

18அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல.

19அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்.

20தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?

21தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம்.

தனிவாசிப்பு

1இரத்தப்பழிகளின் நகரத்திற்கு ஐயோ! அது வஞ்சகத்தினாலும் கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது; கொள்ளை ஓயாமல் நடக்கிறது.

2சவுக்குகளின் ஓசையும், உருளைகளின் அதிர்ச்சியும், குதிரைகளின் பாய்ச்சலும், இரதங்கள் கடகடவென்று ஓடுகிற சத்தமும்,

3வீரர் குதிரை ஏறுகிறதும், பட்டயங்கள் துலங்குகிறதும், ஈட்டிகள் மின்னுகிறதும், வெட்டுண்டவர்களின் திரளும், பிரேதங்களின் ஏராளமும் அங்கே உண்டாயிருக்கும்; பிணங்களுக்குத் தொகையில்லை; அவர்கள் பிணங்களில் இடறிவிழுகிறார்கள்.

4தன் வேசித்தனங்களினால் ஜாதிகளையும், தன் சூனியங்களினால் வம்சங்களையும் விற்கிற மகா சூனியக்காரியும் ரூபவதியுமாயிருக்கிற வேசியினுடைய திரளான வேசித்தனங்களினிமித்தம்,

5இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து உன் வஸ்திரத்து ஓரங்களை உன் முகமட்டும் தூக்கியெடுத்து, ஜாதிகளுக்கு உன் நிர்வாணத்தையும், ராஜ்யங்களுக்கு உன் மானத்தையும் தெரியப்பண்ணி,

6உன்மேல் தீட்டானவைகளை எறிந்து, உன்னைக் கனவீனப்படுத்தி, உன்னை வேடிக்கையாக்கிப்போடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

7அப்பொழுது உன்னைக் காண்கிறவனெல்லாம் நினிவே பாழாய்ப்போயிற்று, அதற்காகப் புலம்புகிறவர் யார்? ஆறுதல் சொல்லுகிறவர்களை உனக்கு எங்கே தேடுவேனென்று சொல்லி, உன்னைவிட்டோடிப் போவான்.

8நதிகள் மத்தியிலிருந்த நோ அம்மோனைப்பார்க்கிலும் நீ சிரேஷ்டமோ? அதைச் சுற்றிலும் தண்ணீர் இருந்தது; சமுத்திரம் அதின் அரணும், சமுத்திரக்கால் அதின் மதிலுமாயிருந்தது.

9எத்தியோப்பியாவும் எகிப்தும் எண்ணிறந்த சேனையால் அதற்குப் பெலனாக இருந்தது; பூத்தும் லூபீமும் அதற்குச் சகாயமாயிருந்தது.

10ஆயினும் அவள் குடிவிலக்கப்பட்டுச் சிறையிருப்பிலே கொண்டுபோகப்பட்டாள்; அவள் குழந்தைகள் எல்லா வீதிகளின் முகனைகளிலும் மோதியடிக்கப்பட்டார்கள்; அவளுடைய கனவான்கள் பேரில் சீட்டுப்போட்டார்கள்; அவளுடைய பெரியவர்கள் எல்லாரும் சங்கிலிகளால் கட்டப்பட்டார்கள்.

11நீயும் வெறிகொண்டு ஒளித்துக்கொள்வாய்; நீயும் உன் சத்துருவுக்குத் தப்ப அரணான கோட்டையைத் தேடுவாய்.

12உன் அரண்களெல்லாம் முதல் பழுக்கும் பழங்களுள்ள அத்திமரங்களைப்போல் இருக்கும்; அவைகள் குலுக்கப்பட்டால் அவைகளின் பழம் தின்கிறவன் வாயிலே விழும்.

13இதோ, உன் நடுவில் இருக்கிற ஜனங்கள் பேடிகள்; உன் தேசத்தின் வாசல்கள் உன் சத்துருவுக்குமுன் திறவுண்டுபோகும்; அக்கினி உன் தாழ்ப்பாள்களைப் பட்சிக்கும்.

14முற்றிகைக்குத் தண்ணீர் மொண்டு வை. உன் அரண்களைப் பலப்படுத்து; சேற்றிலே போய்க் களிமண்ணை மிதி, சூளையைக் கெட்டிப்படுத்து.

15அங்கே அக்கினி உன்னைப் பட்சிக்கும், பட்டயம் உன்னைச் சங்கரிக்கும்; அது பச்சைக்கிளிகளைப்போல் உன்னைப்பட்சித்துப்போடும்; உன்னைப் பச்சைக்கிளிகளத்தனையாக்கிக்கொள், உன்னை வெட்டுக்கிளிகளத்தனையாக்கிக்கொள்.

16உன் வர்த்தகரை வானத்து நட்சத்திரங்களிலும் அதிகமாக்கினாய்; இந்தப் பச்சைக்கிளிகள் பரவிப்பறந்துபோகும்.

17உன் மகுடவர்த்தனர் வெட்டுக்கிளிகளுக்கும், உன் தளகர்த்தர் பெருங்கிளிகளுக்கும் சமானமாயிருக்கிறார்கள்; அவைகள் குளிர்ச்சியானநாளில் வேலிகளில் பாளையமிறங்கி, சூரியன் உதித்தமாத்திரத்தில் பறந்துபோகும்; பின்பு அவைகள் இருக்கும் இடம் இன்னதென்று தெரியாது.

18அசீரியா ராஜாவே, உன் மேய்ப்பர்கள் உறங்குவார்கள்; உன் பிரபலஸ்தர் படுத்திருப்பார்கள்; உன் ஜனங்கள் பர்வதங்களின்மேல் சிதறியிருக்கிறார்கள், அவைகளைக் கூட்டிச் சேர்ப்பவன் இல்லை.

19உன் நொறுங்குதலுக்குப் பரிகாரம் இல்லை; உன் காயம் கொடியது; உன் செய்தியைக் கேட்பவர் யாவரும் உன்பேரில் கைகொட்டுவார்கள்; உன் பொல்லாப்பு எந்நேரமும் யார் பேரிலேதான் பாயாமற்போயிற்று?

1அவர் எரிகோவில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோகையில்,

2ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன்,

3இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல்,

4அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான்.

5இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்து பார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார்.

6அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக்கொண்டுபோனான்.

7அதைக் கண்ட யாவரும்: இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படி போனார் என்று முறுமுறுத்தார்கள்.

8சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான்.

9இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே.

10இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.

11அவர்கள் இவைகளைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் எருசலேமுக்குச் சமீபித்திருந்தபடியினாலும், தேவனுடைய ராஜ்யம் சீக்கிரமாய் வெளிப்படுமென்று அவர்கள் நினைத்தபடியினாலும், அவர் ஒரு உவமையைச் சொன்னார்:

12பிரபுவாகிய ஒருவன் ஒரு ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவரும்படி தூரதேசத்துக்குப் போகப் புறப்பட்டான்.

13புறப்படும்போது, அவன் தன் ஊழியக்காரரில் பத்துப்பேரை அழைத்து, அவர்களிடத்தில் பத்துராத்தல் திரவியங்கொடுத்து: நான் திரும்பிவருமளவும் இதைக்கொண்டு வியாபாரம்பண்ணுங்கள் என்று சொன்னான்.

14அவனுடைய ஊரார் அவனைப் பகைத்து, இவன் எங்கள்மேல் ராஜாவாயிருக்கிறது எங்களுக்கு மனதில்லையென்று சொல்லும்படி அவன் பின்னே ஸ்தானாதிபதிகளை அனுப்பினார்கள்.

15அவன் ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தபோது, தன்னிடத்தில் திரவியம் வாங்கியிருந்த அந்த ஊழியக்காரரில் அவனவன் வியாபாரம்பண்ணிச் சம்பாதித்தது இவ்வளவென்று அறியும்படி, அவர்களைத் தன்னிடத்தில் அழைத்துவரச் சொன்னான்.

16அப்பொழுது முந்தினவன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் பத்துராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான்.

17எஜமான் அவனை நோக்கி: நல்லது உத்தம ஊழியக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் பத்துப் பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்.

18அப்படியே இரண்டாம் ஊழியக்காரன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் ஐந்துராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான்.

19அவனையும் அவன் நோக்கி: நீயும் ஐந்து பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்.

20பின்பு வேறொருவன் வந்து: ஆண்டவனே, இதோ, உம்முடைய ராத்தல், இதை ஒரு சீலையிலே வைத்திருந்தேன்.

21நீர் வைக்காததை எடுக்கிறவரும், விதைக்காததை அறுக்கிறவருமான கடினமுள்ள மனுஷனென்று அறிந்து, உமக்குப் பயந்திருந்தேன் என்றான்.

22அதற்கு அவன்: பொல்லாத ஊழியக்காரனே, உன் வாய்ச்சொல்லைக்கொண்டே உன்னை நியாயந்தீர்க்கிறேன். நான் வைக்காததை எடுக்கிறவனும், விதைக்காததை அறுக்கிறவனுமான கடினமுள்ள மனுஷனென்று அறிந்தாயே,

23பின்னை ஏன் நீ என் திரவியத்தைக் காசுக்கடையிலே வைக்கவில்லை; வைத்திருந்தால் நான் வரும்போது, அதை வட்டியோடே வரப்பற்றிக்கொள்ளுவேனே என்று சொல்லி;

24சமீபமாய் நிற்கிறவர்களை நோக்கி: அந்த ராத்தலை அவன் கையிலிருந்தெடுத்து, பத்துராத்தல் உள்ளவனுக்குக் கொடுங்கள் என்றான்.

25அதற்கு அவர்கள்: ஆண்டவனே, அவனுக்குப் பத்துராத்தல் இருக்கிறதே என்றார்கள்.

26அதற்கு அவன்: உள்ளவன் எவனுக்குங்கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

27அன்றியும் தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு மனதில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய சத்துருக்களை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் என்று சொன்னான் என்றார்.

28இவைகளை அவர் சொன்னபின்பு எருசலேமுக்குப் புறப்பட்டு, முந்தி நடந்துபோனார்.

29அவர் ஒலிவமலையென்னப்பட்ட மலையின் அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்குச் சமீபித்தபோது, தம்முடைய சீஷரில் இரண்டுபேரை நோக்கி:

30உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள், அதிலே பிரவேசிக்கும்போது மனுஷரிலொருவனும் ஒருக்காலும் ஏறியிராத கழுதைக்குட்டியைக் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அதை அவிழ்த்துக்கொண்டு வாருங்கள்.

31அதை ஏன் அவிழ்க்கிறீர்களென்று யாராவது உங்களிடத்தில் கேட்டால், அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள் என்றார்.

32அனுப்பப்பட்டவர்கள் போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே கண்டார்கள்.

33கழுதைக்குட்டியை அவர்கள் அவிழ்க்கும்போது, அதற்கு உடையவர்கள்: குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று கேட்டார்கள்.

34அதற்கு அவர்கள்: அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லி,

35அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தங்கள் வஸ்திரங்களை அதின்மேல் போட்டு, இயேசுவை அதின்மேல் ஏற்றினார்கள்.

36அவர் போகையில், அவர்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்.

37அவர் ஒலிவமலையின் அடிவாரத்துக்குச் சமீபமாய் வருகையில் திரளான கூட்டமாகிய சீஷரெல்லாரும் தாங்கள் கண்ட சகல அற்புதங்களையுங்குறித்துச் சந்தோஷப்பட்டு,

38கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக என்று மிகுந்த சத்தத்தோடே தேவனைப் புகழ்ந்தார்கள்.

39அப்பொழுது கூட்டத்திலிருந்த பரிசேயரில் சிலர் அவரை நோக்கி: போதகரே, உம்முடைய சீஷரை அதட்டும் என்றார்கள்.

40அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

41அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுது,

42உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது.

43உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி,

44உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் உனக்குவரும் என்றார்.

45பின்பு அவர் தேவாலயத்தில் பிரவேசித்து, அதிலே விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் புறம்பே துரத்தத்தொடங்கி:

46என்னுடைய வீடு ஜெபவீடாயிருக்கிறதென்று எழுதியிருக்கிறது, நீங்களோ அதைக் கள்ளர்குகையாக்கினீர்கள் என்றார்.

47அவர் நாடோறும் தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தார். பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும் அவரைக் கொலைசெய்ய வகைதேடியும்,

48ஜனங்களெல்லாரும் அவருக்குச் செவிகொடுத்து அவரை அண்டிக்கொண்டிருந்தபடியால், அதை இன்னபடி செய்யலாமென்று வகைகாணாதிருந்தார்கள்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com