‹ முகப்புமுழுத் திட்டம்

டிசம்பர் 6 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்டிசம்பர் 6அடுத்த நாள் ›
குடும்பம்

II நாளாகமம் 6:12-42

முழு அதிகாரம் ›

12கர்த்தருடைய பலிபீடத்திற்கு முன்னே இஸ்ரவேல் சபையார் எல்லாருக்கும் எதிராக நின்று தன் கைகளை விரித்தான்.

13சாலொமோன் ஐந்து முழ நீளமும், ஐந்து முழ அகலமும், மூன்று முழ உயரமுமான ஒரு வெண்கலப் பிரசங்கபீடத்தை உண்டாக்கி, அதை நடுப்பிராகாரத்திலே வைத்திருந்தான்; அதின்மேல் அவன் நின்று, இஸ்ரவேலின் சபையார் எல்லாருக்கும் எதிராக முழங்காற்படியிட்டு, தன் கைகளை வானத்திற்கு நேராக விரித்து:

14இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, வானத்திலும், பூமியிலும் உமக்கு ஒப்பான தேவனில்லை; தங்கள் முழு இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடக்கிற உமது அடியாருக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காத்துவருகிறீர்.

15தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியானுக்குச் செய்த வாக்குத்தத்தத்தைக் காத்தருளினீர்; உம்முடைய வாக்கினால் அதைச் சொன்னீர்; உம்முடைய கரத்தினால் அதை இந்நாளில் இருக்கிறபடி நிறைவேற்றினீர்.

16இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியானை நோக்கி: நீ எனக்கு முன்பாக நடந்தது போல, உன் குமாரரும் என் நியாயப்பிரமாணத்தில் நடக்கும்படி தங்கள் வழியைக் காப்பார்களேயானால், இஸ்ரவேலின் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் புருஷன் எனக்கு முன்பாக உனக்கு இல்லாமற்போவதில்லை என்று சொன்னதை இப்பொழுது அவனுக்கு நிறைவேற்றும்.

17இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் உமது அடியானாகிய தாவீதுக்குச் சொன்ன உம்முடைய வார்த்தை மெய் என்று விளங்குவதாக.

18தேவன் மெய்யாக மனுஷரோடே பூமியிலே வாசம்பண்ணுவாரோ? இதோ, வானங்களும், வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?

19என் தேவனாகிய கர்த்தாவே, உமது அடியேன் உமது சந்நிதியில் செய்கிற விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டு, உமது அடியேனுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் திருவுளத்தில் கொண்டருளும்.

20உமது அடியேன் இவ்விடத்திலே செய்யும் விண்ணப்பத்தைக் கேட்க, என் நாமம் விளங்குமென்று நீர் சொன்ன ஸ்தலமாகிய இந்த ஆலயத்தின்மேல் உம்முடைய கண்கள் இரவும் பகலும் திறந்திருப்பதாக.

21உமது அடியேனும், இந்த ஸ்தலத்திலே விண்ணப்பம் செய்யப்போகிற உமது ஜனமாகிய இஸ்ரவேலும் பண்ணும் ஜெபங்களைக் கேட்டருளும்; பரலோகமாகிய உம்முடைய வாசஸ்தலத்திலே நீர் அதைக் கேட்பீராக, கேட்டு மன்னிப்பீராக.

22ஒருவன் தன் அயலானுக்குக் குற்றம் செய்திருக்கையில், இவன் அவனை ஆணையிடச் சொல்லும்போது, அந்த ஆணை இந்த ஆலயத்திலே உம்முடைய பலிபீடத்திற்கு முன்பாக வந்தால்,

23அப்பொழுது பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு, துன்மார்க்கனுடைய நடக்கையை அவன் தலையின்மேல் சுமரப்பண்ணி, அவனுக்கு நீதியைச் சரிக்கட்டவும், நீதிமானுக்கு அவனுடைய நீதிக்குத்தக்கதாய்ச் செய்து அவனை நீதிமானாக்கவுந்தக்கதாய், உமது அடியாரை நியாயந்தீர்ப்பீராக.

24உம்முடைய ஜனங்களாகிய இஸ்ரவேலர் உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்ததினிமித்தம் சத்துருவுக்கு முன்பாக முறிந்துபோய், உம்மிடத்திற்குத் திரும்பி, உம்முடைய நாமத்தை அறிக்கைபண்ணி, இந்த ஆலயத்திலே உம்முடைய சந்நிதியில் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் செய்தால்,

25பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு, உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தை மன்னித்து, அவர்களுக்கும் அவர்கள் பிதாக்களுக்கும் நீர் கொடுத்த தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவீராக.

26அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்ததினால், வானம் அடைபட்டு மழை பெய்யாதிருக்கும்போது, அவர்கள் இந்த ஸ்தலத்திற்கு நேராக விண்ணப்பஞ்செய்து, உம்முடைய நாமத்தை அறிக்கைபண்ணி, தேவரீர் தங்களைக் கிலேசப்படுத்துகையில் தங்கள் பாவங்களை விட்டுத் திரும்பினால்,

27பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு, உமது அடியாரும் உமது ஜனமாகிய இஸ்ரவேலும் செய்த பாவத்தை மன்னித்து, அவர்கள் நடக்கவேண்டிய நல்வழியை அவர்களுக்குப் போதித்து, தேவரீர் உமது ஜனத்திற்குச் சுதந்தரமாகக் கொடுத்த உம்முடைய தேசத்தில் மழைபெய்யக் கட்டளையிடுவீராக.

28தேசத்திலே பஞ்சம் உண்டாகிறபோதும், கொள்ளைநோய் உண்டாகிறபோதும், வறட்சி, சாவி, வெட்டுக்கிளி, பச்சைக்கிளி உண்டாகிறபோதும், அவர்களுடைய சத்துருக்கள் அவர்கள் வாசஞ்செய்கிற தேசத்திலே அவர்களை முற்றிக்கை போடுகிறபோதும், யாதொரு வாதையாகிலும் யாதொரு வியாதியாகிலும் வந்திருக்கிறபோதும்,

29எந்த மனுஷனானாலும், இஸ்ரவேலாகிய உம்முடைய ஜனத்தில் எவனானாலும், தன் தன் வாதையையும் வியாகுலத்தையும் உணர்ந்து, இந்த ஆலயத்திற்கு நேராகத் தன் கைகளை விரித்துச் செய்யும் சகல விண்ணப்பத்தையும், சகல வேண்டுதலையும்,

30உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு மன்னித்து,

31தேவரீர் எங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குப் பயப்பட்டு, உம்முடைய வழிகளில் நடக்கும்படிக்கு தேவரீர் ஒருவரே மனுப்புத்திரரின் இருதயத்தை அறிந்தவரானதால், நீர் அவனவன் இருதயத்தை அறிந்திருக்கிறபடியே அவனவனுடைய எல்லா வழிகளுக்கும் தக்கதாய்ச் செய்து பலன் அளிப்பீராக.

32உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் ஜாதியல்லாத அந்நிய ஜாதியார் உம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தமும், உம்முடைய பலத்த கரத்தினிமித்தமும், ஓங்கிய உம்முடைய புயத்தினிமித்தமும், தூரதேசங்களிலிருந்து வந்து, இந்த ஆலயத்துக்கு நேராக நின்று விண்ணப்பம்பண்ணினால்,

33உமது வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருக்கிற தேவரீர் அதைக் கேட்டு, பூமியின் ஜனங்களெல்லாரும் உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலைப்போல, உம்முடைய நாமத்தை அறிந்து உமக்குப் பயப்பட்டு, நான் கட்டின இந்த ஆலயத்திற்கு உம்முடைய நாமம் தரிக்கப்பட்டதென்று அறியும்படிக்கு, அந்த அந்நிய ஜாதியான் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியே தேவரீர் செய்வீராக.

34நீர் உம்முடைய ஜனங்களை அனுப்பும் வழியிலே அவர்கள் தங்கள் சத்துருக்களோடு யுத்தம்பண்ணப் புறப்படும்போது, நீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்துக்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக விண்ணப்பம்பண்ணினால்,

35பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரிப்பீராக.

36பாவஞ்செய்யாத மனுஷன் இல்லையே; ஆகையால் அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, தேவரீர் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்கள் சத்துருக்கள் கையில் அவர்களை ஒப்புக்கொடுக்கிறதினால், அவர்களைச் சிறைபிடிக்கிறவர்கள் அவர்களைத் தூரத்திலாகிலும் சமீபத்திலாகிலும் இருக்கிற தங்கள் தேசத்திற்குக் கொண்டுபோயிருக்கையில்,

37அவர்கள் சிறைபட்டுப்போன தேசத்திலே தங்களில் உணர்வடைந்து, மனத்திரும்பி: நாங்கள் பாவஞ்செய்து அக்கிரமம்பண்ணி, துன்மார்க்கமாய் நடந்தோம் என்று தங்கள் சிறையிருப்பான தேசத்திலே உம்மை நோக்கிக் கெஞ்சி,

38தாங்கள் சிறைகளாகக் கொண்டுபோகப்பட்ட தங்கள் சிறையிருப்பான தேசத்திலே, தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் உம்மிடத்தில் திரும்பி, தேவரீர் தங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தங்கள் தேசத்திற்கும், தேவரீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்திற்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக உம்மை நோக்கி விண்ணப்பம்பண்ணினால்,

39உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் ஜெபங்களையும் கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரித்து, உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்த உம்முடைய ஜனத்திற்கு மன்னித்தருளும்.

40இப்போதும் என் தேவனே, இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் விண்ணப்பத்திற்கு உம்முடைய கண்கள் திறந்தவைகளும், உம்முடைய செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருப்பதாக.

41தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய தாபர ஸ்தலத்திற்கு தேவரீர் உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் எழுந்தருளும்; தேவனாகிய கர்த்தாவே, உமது ஆசாரியர் இரட்சிப்பைத் தரித்து, உம்முடைய பரிசுத்தவான்கள் நன்மையிலே மகிழ்வார்களாக.

42தேவனாகிய கர்த்தாவே, நீர் அபிஷேகம்பண்ணினவனின் முகத்தைப் புறக்கணியாமல், உம்முடைய தாசனாகிய தாவீதுக்கு வாக்குத்தத்தம்பண்ணின கிருபைகளை நினைத்தருளும் என்றான்.

1இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்; பிறப்பித்தவரிடத்தில் அன்புகூருகிற எவனும் அவரால் பிறப்பிக்கப்பட்டவனிடத்திலும் அன்புகூருகிறான்.

2நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருகிறோமென்று அறிந்துகொள்ளுகிறோம்.

3நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.

4தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.

5இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?

6இயேசுகிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்; ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறவர்.

7(பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;

8பூலோகத்திலே) சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.

9நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது; தேவன் தமது குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே.

10தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான்; தேவனை விசுவாசியாதவனோ, தேவன் தம்முடைய குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சியை விசுவாசியாததினால், அவரைப் பொய்யராக்குகிறான்.

11தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம்.

12குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.

13உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்.

14நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.

15நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்.

16மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்; யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே; மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன்.

17அநீதியெல்லாம் பாவந்தான்; என்றாலும் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவமுமுண்டு.

18தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம்; தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத்தொடான்.

19நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்.

20அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.

21பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக. ஆமென்.

தனிவாசிப்பு

1ஆபகூக் என்னும் தீர்க்கதரிசி தரிசனமாய்க் கண்ட பாரம்.

2கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் கேளாமலிருக்கிறீரே! கொடுமையினிமித்தம் நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் இரட்சியாமலிருக்கிறீரே!

3நீர் எனக்கு அக்கிரமத்தைக் காண்பித்து, என்னைத் தீவினையைப் பார்க்கப்பண்ணுகிறதென்ன? கொள்ளையும் கொடுமையும் எனக்கு எதிரே நிற்கிறது; வழக்கையும் வாதையும் எழுப்புகிறவர்கள் உண்டு.

4ஆகையால் நியாயப்பிரமாணம் பெலனற்றதாகி, நியாயம் ஒருபோதும் செல்லாமற்போகிறது; துன்மார்க்கன் நீதிமானை வளைந்துகொள்ளுகிறான்; ஆதலால் நியாயம் புரட்டப்படுகிறது.

5நீங்கள் புறஜாதிகளை நோக்கிப்பார்த்து, ஆச்சரியப்பட்டுப் பிரமியுங்கள்; விவரிக்கப்பட்டாலும் நீங்கள் விசுவாசியாத ஒரு கிரியையை உங்கள் நாட்களில் நடப்பிப்பேன்.

6இதோ, நான் கல்தேயரென்னும் கொடிதும் வேகமுமான ஜாதியாரை எழுப்புவேன்; அவர்கள் தங்களுடையதல்லாத வாசஸ்தலங்களைக் கட்டிக்கொள்ள தேசத்தின் விசாலங்களில் நடந்துவருவார்கள்.

7அவர்கள் கெடியும் பயங்கரமுமானவர்கள்; அவர்களுடைய நியாயமும் அவர்களுடைய மேன்மையும் அவர்களாலேயே உண்டாகும்.

8அவர்களுடைய குதிரைகள் சிவிங்கிகளிலும் வேகமும், சாயங்காலத்தில் திரிகிற ஓநாய்களிலும் தீவிரமுமாயிருக்கும்; அவர்களுடைய குதிரைவீரர் பரவுவார்கள்; அவர்களுடைய குதிரைவீரர் தூரத்திலிருந்து வருவார்கள்; இரைக்குத் தீவிரிக்கிற கழுகுகளைப்போல் பறந்து வருவார்கள்.

9அவர்களெல்லாரும் கொடுமை செய்யவருவார்கள்; அவர்களுடைய முகங்கள் சுவறச் செய்யும் கீழ்க்காற்றைப்போலிருக்கும்; அவர்கள் மணலத்தனை ஜனங்களைச் சிறைபிடித்துச் சேர்ப்பார்கள்.

10அவர்கள் ராஜாக்களை ஆகடியம்பண்ணுவார்கள்; அதிபதிகள் அவர்களுக்குப் பரியாசமாயிருப்பார்கள்; அவர்கள் அரண்களையெல்லாம் பார்த்து நகைத்து, மண்மேடுகளைக் குவித்து அவைகளைப் பிடிப்பார்கள்.

11அப்பொழுது அவனுடைய மனம்மாற, அவன் தன் பெலன் தன் தேவனாலே உண்டானதென்று சொல்லி மிஞ்சிப்போய்க் குற்றவாளியாவான்.

12கர்த்தாவே, நீர் பூர்வகாலமுதல் என் தேவனும், என் பரிசுத்தருமானவர் அல்லவா? நாங்கள் சாவதில்லை; கர்த்தாவே, நியாயத்தீர்ப்புச் செய்ய அவனை வைத்தீர்; கன்மலையே, தண்டனை செய்ய அவனை நியமித்தீர்.

13தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே; பின்னை துரோகிகளை நீர் நோக்கிக் கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைப் பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மௌனமாயிருக்கிறதென்ன?

14மனுஷரைச் சமுத்திரத்து மச்சங்களுக்கும், அதிகாரியில்லாத ஊர்வனவற்றிற்கும் சமானமாக்குகிறதென்ன?

15அவர்களெல்லாரையும் தூண்டிலினால் இழுத்துக்கொள்ளுகிறான்; அவர்களைத் தன் வலையினால் பிடித்து, தன் பறியிலே சேர்த்துக்கொள்ளுகிறான்; அதினால் சந்தோஷப்பட்டுக் களிகூருகிறான்.

16ஆகையால் அவைகளினால் தன் பங்கு கொழுப்புள்ளதும், தன் போஜனம் ருசிகரமுள்ளதுமாயிற்று என்று சொல்லி அவன் தன் வலைக்குப் பலியிட்டுத் தன் பறிக்குத் தூபங்காட்டுகிறான்.

17இதற்காக அவன் தன் வலையை இழுத்து அதிலுள்ளவைகளைக் கொட்டிக்கொண்டிருந்து, இரக்கமில்லாமல் ஜாதிகளை எப்போதும் கொன்றுபோடவேண்டுமோ?

1அந்நாட்களில் ஒன்றில், அவர் தேவாலயத்திலே ஜனங்களுக்கு உபதேசித்து, சுவிசேஷத்தைப் பிரசங்கித்தபோது, பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் அவரிடத்தில் கூடிவந்து:

2நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? அதை எங்களுக்குச் சொல்லும் என்றார்கள்.

3அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: நானும் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுங்கள்.

4யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ? என்று கேட்டார்.

5அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணி: தேவனால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று கேட்பார்.

6மனுஷரால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், ஜனங்களெல்லாரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறபடியினால் நம்மேல் கல்லெறிவார்கள் என்று சொல்லி:

7அது யாரால் உண்டாயிற்றோ, எங்களுக்குத் தெரியாது என்று பிரதியுத்தரம் சொன்னார்கள்.

8அப்பொழுது இயேசு: நானும் இன்ன அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லேன் என்றார்.

9பின்பு அவர் ஜனங்களுக்குச் சொல்லத்தொடங்கின உவமையாவது: ஒரு மனுஷன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைத் தோட்டக்காரருக்குக் குத்தகையாக விட்டு, நெடுநாளாகப் புறத்தேசத்துக்குப் போயிருந்தான்.

10அந்தத் தோட்டக்காரர் திராட்சத்தோட்டத்தின் கனிகளில் தன் பாகத்தைக் கொடுத்தனுப்பும்படி, பருவகாலத்திலே அவர்களிடத்தில் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான். அந்தத் தோட்டக்காரர் அவனை அடித்து, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள்.

11பின்பு அவன் வேறொரு ஊழியக்காரனை அனுப்பினான்; அவனையும் அவர்கள் அடித்து, அவமானப்படுத்தி, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள்.

12அவன் மூன்றாந்தரமும் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான்; அவனையும் அவர்கள் காயப்படுத்தி, துரத்திவிட்டார்கள்.

13அப்பொழுது திராட்சத்தோட்டத்தின் எஜமான்: நான் என்ன செய்யலாம், எனக்குப் பிரியமான குமாரனை அனுப்பினால், அவனையாகிலும் கண்டு அஞ்சுவார்கள் என்று எண்ணி, அவனை அனுப்பினான்.

14தோட்டக்காரர் அவனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி, சுதந்தரம் நம்முடையதாகும்படிக்கு இவனைக் கொல்லுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு,

15அவனைத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளி, கொன்றுபோட்டார்கள். இப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் அவர்களை என்னசெய்வான்?

16அவன் வந்து அந்தத் தோட்டக்காரரைச் சங்கரித்து, திராட்சத்தோட்டத்தை வேறு தோட்டக்காரரிடத்தில் கொடுப்பான் அல்லவா என்றார். அவர்கள் அதைக்கேட்டு, அப்படியாகாதிருப்பதாக என்றார்கள்.

17அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று என்று எழுதியிருக்கிற வேதவாக்கியத்தின் கருத்தென்ன?

18அந்தக் கல்லின்மேல் விழுகிறவன் எவனோ அவன் நொறுங்கிப்போவான், அது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்றார்.

19பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் தங்களைக்குறித்து இந்த உவமையைச் சொன்னாரென்று அறிந்து, அந்நேரத்திலே அவரைப் பிடிக்க வகைதேடியும் ஜனங்களுக்குப் பயந்திருந்தார்கள்.

20அவர்கள் சமயம் பார்த்து, தேசாதிபதியின் ஆளுகைக்கும் அதிகாரத்துக்கும் அவரை ஒப்புக்கொடுக்கும்படி அவருடைய பேச்சிலே குற்றங்கண்டுபிடிக்கலாமென்று, தங்களை உண்மையுள்ளவர்களாய்க் காண்பிக்கிற வேவுகாரரை அவரிடத்தில் அனுப்பினார்கள்.

21அவர்கள் வந்து: போதகரே, நீர் நிதானமாய்ப் பேசி உபதேசிக்கிறீரென்றும், முகதாட்சணியமில்லாமல் தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறீரென்றும் அறிந்திருக்கிறோம்.

22இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ அல்லவோ, எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள்.

23அவர்களுடைய தந்திரத்தை அவர் அறிந்து, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்?

24ஒரு பணத்தை எனக்குக் காண்பியுங்கள். இதிலிருக்கிற சொரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார். அதற்கு அவர்கள்: இராயனுடையது என்றார்கள்.

25அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.

26அவர்கள் அவரை ஜனங்களுக்கு முன்பாகப் பேச்சிலே குற்றம்பிடிக்கக்கூடாமல், அவர் சொன்ன உத்தரவைக் குறித்து ஆச்சரியப்பட்டு, மவுனமாயிருந்தார்கள்.

27உ.யிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிற சதுசேயரில் சிலர் அவரிடத்தில் வந்து:

28போதகரே, ஒருவன் மனைவியையுடையவனாயிருந்து பிள்ளையில்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம்பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானமுண்டாக்கவேண்டும் என்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே.

29சகோதரர் ஏழுபேரிருந்தார்கள், அவர்களில் மூத்தவன் ஒரு பெண்ணை விவாகம்பண்ணி, பிள்ளையில்லாமல் இறந்துபோனான்.

30பின்பு இரண்டாஞ்சகோதரன் அவளை விவாகம்பண்ணி, அவனும் பிள்ளையில்லாமல் இறந்துபோனான்.

31மூன்றாஞ்சகோதரனும் அவளை விவாகம்பண்ணினான். அப்படியே ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணி, பிள்ளையில்லாமல் இறந்துபோனார்கள்.

32எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள்.

33இவ்விதமாய் ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணியிருக்க, உயிர்த்தெழுதலில் அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள் என்று கேட்டார்கள்.

34இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் பெண்கொண்டும் பெண்கொடுத்தும் வருகிறார்கள்.

35மறுமையையும் மரித்தோரிலிருந்தெழுந்திருக்குதலையும் அடையப் பாத்திரராக எண்ணப்படுகிறவர்களோ பெண்கொள்வதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை.

36அவர்கள் இனி மரிக்கவுமாட்டார்கள்; அவர்கள் உயிர்த்தெழுதலின் பிள்ளைகளானபடியால் தேவதூதருக்கு ஒப்பானவர்களுமாய், தேவனுக்குப் பிள்ளைகளுமாயிருப்பார்கள்.

37அன்றியும் மரித்தோர் எழுந்திருப்பார்களென்பதை மோசேயும் முட்செடியைப்பற்றிய வாசகத்தில் காண்பித்திருக்கிறார். எப்படியெனில், கர்த்தரை ஆபிரகாமின் தேவனென்றும் ஈசாக்கின் தேவனென்றும் யாக்கோபின் தேவனென்றும் சொல்லியிருக்கிறார்.

38அவர் மரித்தோரின் தேவனாயிராமல், ஜீவனுள்ளோரின் தேவனாயிருக்கிறார்; எல்லாரும் அவருக்குப் பிழைத்திருக்கிறார்களே என்றார்.

39அப்பொழுது வேதபாரகரில் சிலர் அதைக் கேட்டு: போதகரே, நன்றாய்ச் சொன்னீர் என்றார்கள்.

40அதன்பின்பு அவர்கள் அவரிடத்தில் வேறொன்றுங்கேட்கத் துணியவில்லை.

41அவர் அவர்களை நோக்கி: கிறிஸ்து தாவீதின் குமாரனென்று எப்படிச் சொல்லுகிறார்கள்?

42நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று,

43கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று தாவீது தானே சங்கீத புஸ்தகத்தில் சொல்லுகிறானே.

44தாவீது அவரை ஆண்டவரென்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார்.

45பின்பு ஜனங்களெல்லாரும் கேட்கையில் அவர் தம்முடைய சீஷரை நோக்கி:

46நீண்ட அங்கிகளைத் தரித்துக்கொண்டு திரியவும், சந்தை வெளிகளில் வந்தனங்களை அடையவும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி,

47விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிற வேதபாரகரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள், அவர்கள் அதிக ஆக்கினையை அடைவார்கள் என்றார்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com