‹ முகப்புமுழுத் திட்டம்

பிப்ரவரி 11 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்பிப்ரவரி 11அடுத்த நாள் ›
குடும்பம்

ஆதியாகமம் 44

முழு அதிகாரம் ›

1பின்பு, அவன் தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ இந்த மனிதருடைய சாக்குகளை அவர்கள் ஏற்றிக்கொண்டுபோகத்தக்க பாரமாய்த் தானியத்தினாலே நிரப்பி, அவனவன் பணத்தை அவனவன் சாக்கின் வாயிலே போட்டு,

2இளையவனுடைய சாக்கின் வாயிலே வெள்ளிப்பாத்திரமாகிய என் பானபாத்திரத்தையும் தானியத்துக்கு அவன் கொடுத்த பணத்தையும் போடு என்று கட்டளையிட்டான்; யோசேப்பு சொன்னபடியே அவன் செய்தான்.

3அதிகாலையிலே அந்த மனிதர்கள் தங்கள் கழுதைகளை ஓட்டிக்கொண்டுபோகும்படி அனுப்பிவிடப்பட்டார்கள்.

4அவர்கள் பட்டணத்தை விட்டுப்புறப்பட்டு, வெகுதூரம் போவதற்கு முன்னே, யோசேப்பு தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ புறப்பட்டுப்போய், அந்த மனிதரைப் பின்தொடர்ந்து, அவர்களைப் பிடித்து: நீங்கள் நன்மைக்குத் தீமை செய்தது என்ன?

5அது என் எஜமான் பானம்பண்ணுகிற பாத்திரம் அல்லவா? அது போனவகை ஞானதிருஷ்டியால் அவருக்குத் தெரியாதா? நீங்கள் செய்தது தகாதகாரியம் என்று அவர்களோடே சொல் என்றான்.

6அவன் அவர்களைத் தொடர்ந்து பிடித்து, தன்னிடத்தில் சொல்லியிருந்த வார்த்தைகளை அவர்களுக்குச் சொன்னான்.

7அதற்கு அவர்கள்: எங்கள் ஆண்டவன் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லுகிறது என்ன? இப்படிப்பட்ட காரியத்துக்கும் உம்முடைய அடியாராகிய எங்களுக்கும் வெகுதூரம்.

8எங்கள் சாக்குகளின் வாயிலே நாங்கள் கண்ட பணத்தைக் கானான்தேசத்திலிருந்து திரும்ப உம்மிடத்துக்குக் கொண்டுவந்தோமே; நாங்கள் உம்முடைய எஜமானின் வீட்டிலிருந்து வெள்ளியையாகிலும், பொன்னையாகிலும் திருடிக்கொண்டு போவோமா?

9உம்முடைய அடியாருக்குள்ளே அது எவனிடத்தில் காணப்படுமோ அவன் கொலையுண்ணக்கடவன்; நாங்களும் எங்கள் ஆண்டவனுக்கு அடிமைகளாவோம் என்றார்கள்.

10அதற்கு அவன்: நீங்கள் சொன்னபடியே ஆகட்டும்; எவனிடத்தில் அது காணப்படுமோ, அவன் எனக்கு அடிமையாவான்; நீங்கள் குற்றமற்றிருப்பீர்கள் என்றான்.

11அப்பொழுது அவர்கள் துரிதமாய் அவனவன் தன்தன் சாக்கைத் தரையிலே இறக்கி, தங்கள் சாக்குகளைத் திறந்து வைத்தார்கள்.

12மூத்தவன் சாக்குமுதல் இளையவன் சாக்குமட்டும் அவன் சோதிக்கும்போது, அந்தப் பாத்திரம் பென்யமீனுடைய சாக்கிலே கண்டுபிடிக்கப்பட்டது.

13அப்பொழுது அவர்கள் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, அவனவன் கழுதையின்மேல் பொதியை ஏற்றிக்கொண்டு, பட்டணத்திற்குத் திரும்பினார்கள்.

14யூதாவும் அவன் சகோதரரும் யோசேப்பின் வீட்டுக்குப் போனார்கள். யோசேப்பு அதுவரையும் அங்கே இருந்தான்; அவனுக்கு முன்பாகத் தரையிலே விழுந்தார்கள்.

15யோசேப்பு அவர்களை நோக்கி: நீங்கள் என்ன காரியம் செய்தீர்கள்? என்னைப் போலொத்த மனிதனுக்கு ஞானதிருஷ்டியினால் காரியம் தெரியவரும் என்று அறியாமற்போனீர்களா என்றான்.

16அதற்கு யூதா: என் ஆண்டவனாகிய உம்மிடத்தில் நாங்கள் என்ன சொல்லுவோம்? என்னத்தைப் பேசுவோம்? எதினாலே எங்கள் நீதியை விளங்கப்பண்ணுவோம்? உம்முடைய அடியாரின் அக்கிரமத்தை தேவன் விளங்கப்பண்ணினார்; பாத்திரத்தை வைத்திருக்கிறவனும் நாங்களும் என் ஆண்டவனுக்கு அடிமைகள் என்றான்.

17அதற்கு அவன்: அப்படிப்பட்ட செய்கை எனக்குத் தூரமாயிருப்பதாக; எவன் வசத்தில் பாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டதோ, அவனே எனக்கு அடிமையாயிருப்பான்; நீங்களோ சமாதானத்தோடே உங்கள் தகப்பனிடத்துக்குப் போங்கள் என்றான்.

18அப்பொழுது யூதா அவனண்டையிலே சேர்ந்து: ஆ, என் ஆண்டவனே, உமது அடியேன் உம்முடைய செவிகள் கேட்க ஒரு வார்த்தை சொல்லுகிறேன் கேட்பீராக; அடியேன்மேல் உமது கோபம் மூளாதிருப்பதாக; நீர் பார்வோனுக்கு ஒப்பாயிருக்கிறீர்.

19உங்களுக்குத் தகப்பனாவது சகோதரனாவது உண்டா என்று என் ஆண்டவன் உம்முடைய அடியாரிடத்தில் கேட்டீர்.

20அதற்கு நாங்கள்: எங்களுக்கு முதிர்வயதுள்ள தகப்பனாரும், அவருக்கு முதிர்வயதிலே பிறந்த ஒரு இளைஞனும் உண்டு என்றும், அவனுடைய தமையன் இறந்துபோனான் என்றும், அவன் ஒருவன்மாத்திரமே அவனைப்பெற்ற தாயாருக்கு இருப்பதினால் தகப்பனார் அவன்மேல் பட்சமாயிருக்கிறார் என்றும் என் ஆண்டவனுக்குச் சொன்னோம்.

21அப்பொழுது நீர்: அவனை என்னிடத்துக்குக் கொண்டுவாருங்கள்; என் கண்களினால் அவனைப் பார்க்கவேண்டும் என்று உமது அடியாருக்குச் சொன்னீர்.

22நாங்கள் ஆண்டவனை நோக்கி: அந்த இளைஞன் தன் தகப்பனைவிட்டுப் பிரியக்கூடாது, பிரிந்தால் அவர் இறந்துபோவார் என்று சொன்னோம்.

23அதற்கு நீர்: உங்கள் இளைய சகோதரனைக் கொண்டுவராவிட்டால், நீங்கள் இனி என் முகத்தைக் காண்பதில்லை என்று உமது அடியாருக்குச் சொன்னீர்.

24நாங்கள் உமது அடியானாகிய என் தகப்பனாரிடத்துக்குப் போனபோது, என் ஆண்டவனுடைய வார்த்தைகளை அவருக்கு அறிவித்தோம்.

25எங்கள் தகப்பனார் எங்களை நோக்கி: நீங்கள் திரும்பப்போய், நமக்குக் கொஞ்சம் தானியம் கொள்ளுங்கள் என்று சொன்னார்.

26அதற்கு: நாங்கள் போகக்கூடாது; எங்கள் இளைய சகோதரன் எங்களோடே வந்தால் போவோம்; எங்கள் இளைய சகோதரன் எங்களோடே வராவிட்டால், நாங்கள் அந்தப் புருஷனுடைய முகத்தைக்காணக்கூடாது என்றோம்.

27அப்பொழுது உம்முடைய அடியானாகிய என் தகப்பனார்: என் மனைவி எனக்கு இரண்டு பிள்ளைகளைப் பெற்றாள்;

28அவர்களில் ஒருவன் என்னிடத்திலிருந்து போய்விட்டான், அவன் பீறுண்டுபோயிருப்பான் என்றிருந்தேன், இதுவரைக்கும் அவனைக் காணாதிருக்கிறேன், இதெல்லாம் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.

29நீங்கள் இவனையும் என்னை விட்டுப்பிரித்து அழைத்துப்போகுமிடத்தில் இவனுக்கு மோசம் நேரிட்டால், என் நரைமயிரை வியாகுலத்தோடே பாதாளத்தில் இறங்கப்பண்ணுவீர்கள் என்றார்.

30ஆகையால் இளையவனை விட்டு, நான் என் தகப்பனாகிய உமது அடியானிடத்துக்குப் போனால், அவருடைய ஜீவன் இவனுடைய ஜீவனோடே ஒன்றாய் இணைக்கப்பட்டிருக்கிறபடியினால்,

31அவர் இளையவன் வரவில்லை என்று அறிந்தமாத்திரத்தில் இறந்துபோவார்; இப்படி உமது அடியாராகிய நாங்கள் உமது அடியானாகிய எங்கள் தகப்பனுடைய நரைமயிரை வியாகுலத்துடனே பாதாளத்தில் இறங்கப்பண்ணுவோம்.

32இந்த இளையவனுக்காக உமது அடியானாகிய நான் என் தகப்பனுக்கு உத்தரவாதி; அன்றியும், நான் இவனை உம்மிடத்துக்குக் கொண்டுவராவிட்டால், நான் எந்நாளும் உமக்கு முன்பாகக் குற்றவாளியாயிருப்பேன் என்று அவருக்குச் சொல்லியிருக்கிறேன்.

33இப்படியிருக்க, இளையவன் தன் சகோதரரோடேகூடப் போகவிடும்படி மன்றாடுகிறேன்; உம்முடைய அடியானாகிய நான் இளையவனுக்குப் பதிலாக இங்கே என் ஆண்டவனுக்கு அடிமையாயிருக்கிறேன்.

34இளையவனை விட்டு, எப்படி என் தகப்பனிடத்துக்குப் போவேன்? போனால் என் தகப்பனுக்கு நேரிடும் தீங்கை நான் எப்படிக் காண்பேன் என்றான்.

1இரண்டு நாளைக்குப்பின்பு புளிப்பில்லாத அப்பஞ்சாப்பிடுகிற பஸ்காபண்டிகை வந்தது. அப்பொழுது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும், அவரைத் தந்திரமாய்ப் பிடித்துக் கொலைசெய்யும்படி வகைதேடினார்கள்.

2ஆகிலும் ஜனங்களுக்குள்ளே கலகம் உண்டாகாதபடிக்கு, பண்டிகையிலே அப்படிச் செய்யலாகாது என்றார்கள்.

3அவர் பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டிலே போஜனபந்தியிருக்கையில், ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற நளதம் என்னும் உத்தம தைலமுள்ள வெள்ளைக்கல் பரணியைக் கொண்டுவந்து, அதை உடைத்து, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள்.

4அப்பொழுது சிலர் தங்களுக்குள்ளே விசனமடைந்து: இந்தத் தைலத்தை இப்படி வீணாய்ச் செலவழிப்பானேன்?

5இதை முந்நூறு பணத்துக்கு அதிகமான கிரயத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்று சொல்லி, அவளைக்குறித்து முறுமுறுத்தார்கள்.

6இயேசு அவர்களை நோக்கி: அவளை விட்டுவிடுங்கள்; ஏன் அவளைத் தொந்தரவுபடுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள்.

7தரித்திரர் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள், உங்களுக்கு மனதுண்டாகும்போதெல்லாம் நீங்கள் அவர்களுக்கு நன்மை செய்யலாம், நானோ எப்போதும் உங்களிடத்தில் இரேன்.

8இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்; நான் அடக்கம்பண்ணப்படுவதற்கு எத்தனமாக, என் சரீரத்தில் தைலம்பூச முந்திக்கொண்டாள்.

9இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

10அப்பொழுது, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் அவரைப் பிரதான ஆசாரியருக்குக் காட்டிக்கொடுக்கும்படி அவர்களிடத்திற்குப்போனான்.

11அவர்கள் அதைக் கேட்டு, சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணங்கொடுப்போம் என்று வாக்குத்தத்தம் பண்ணினார்கள்; அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்குத் தகுந்த சமயம் பார்த்துக்கொண்டிருந்தான்.

12பஸ்காவைப் பலியிடும் நாளாகிய புளிப்பில்லாத அப்பஞ்சாப்பிடுகிற முதலாம் நாளிலே, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: நீர் பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே போய் ஆயத்தம்பண்ணச் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள்.

13அவர் தம்முடைய சீஷரில் இரண்டுபேரை நோக்கி: நீங்கள் நகரத்திற்குள்ளே போங்கள், அங்கே தண்ணீர்க்குடம் சுமந்துவருகிற ஒரு மனுஷன் உங்களுக்கு எதிர்ப்படுவான், அவன் பின்னே போங்கள்;

14அவன் எந்த வீட்டிற்குள் பிரவேசிக்கிறானோ அந்த வீட்டு எஜமானை நீங்கள் நோக்கி: நான் என் சீஷரோடுகூடப் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கேயென்று போதகர் கேட்கிறார் என்று சொல்லுங்கள்.

15அவன் கம்பளம் முதலானவைகள் விரித்து ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற விஸ்தாரமான மேல்வீட்டறையை உங்களுக்குக் காண்பிப்பான்; அங்கே நமக்காக ஆயத்தம்பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.

16அப்படியே, அவருடைய சீஷர் புறப்பட்டு நகரத்தில் போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே கண்டு, பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள்.

17சாயங்காலமானபோது, அவர் பன்னிருவரோடுங்கூட அவ்விடத்திற்கு வந்தார்.

18அவர்கள் பந்தியமர்ந்து போஜனம்பண்ணுகையில், இயேசு அவர்களை நோக்கி: என்னுடனே புசிக்கிற உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

19அப்பொழுது அவர்கள் துக்கமடைந்து: நானோ? நானோ? என்று ஒவ்வொருவரும், அவரிடத்தில் கேட்கத் தொடங்கினார்கள்.

20அவர் பிரதியுத்தரமாக: என்னுடனேகூடத் தாலத்தில் கையிடுகிறவனாகிய பன்னிருவரிலொருவனே அவன் என்று சொல்லி;

21மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ! அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார்.

22அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார்.

23பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்களெல்லாரும் அதிலே பானம்பண்ணினார்கள்.

24அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இது அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.

25நான் தேவனுடைய ராஜ்யத்தில் நவமான ரசத்தைப் பானம்பண்ணும் நாள்வரைக்கும் திராட்சப்பழரசத்தை இனி நான் பானம்பண்ணுவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

26அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள்.

27அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள் சிதறடிக்கப்படும், என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்களெல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்.

28ஆகிலும் நான் உயிர்த்தெழுந்தபின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போவேன் என்றார்.

29அதற்குப் பேதுரு: உமதுநிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் இடறலடையேன் என்றான்.

30இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு, இந்த இராத்திரியிலே, சேவல் இரண்டுதரம் கூவுகிறதற்குமுன்னே, நீ மூன்றுதரம் என்னை மறுதலிப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

31அதற்கு அவன்: நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்று உறுதியாய்ச் சொன்னான்; எல்லாரும் அப்படியே சொன்னார்கள்.

32பின்பு கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: நான் ஜெபம்பண்ணுமளவும் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி;

33பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் தம்மோடே கூட்டிக்கொண்டுபோய், திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.

34அப்பொழுது அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள் என்று சொல்லி,

35சற்று அப்புறம்போய், தரையிலே விழுந்து, அந்த வேளை தம்மைவிட்டு நீங்கிப்போகக்கூடுமானால் அது நீங்கவேண்டுமென்று வேண்டிக்கொண்டு:

36அப்பா பிதாவே, எல்லாம் உம்மாலே கூடும்; இந்தப் பாத்திரத்தை என்னிடத்திலிருந்து எடுத்துப்போடும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்றார்.

37பின்பு அவர் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக்கண்டு, பேதுருவை நோக்கி: சீமோனே, நித்திரைபண்ணுகிறாயா? ஒரு மணிநேரம் நீ விழித்திருக்கக்கூடாதா?

38நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.

39அவர் மறுபடியும் போய் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார்.

40அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தபடியால், தாங்கள் மறுமொழியாக அவருக்குச் சொல்லுவது இன்னதென்று அறியாதிருந்தார்கள்.

41அவர் மூன்றாந்தரம் வந்து: இனி நித்திரைப்பண்ணி இளைப்பாறுங்கள்; போதும், வேளை வந்தது, இதோ, மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறார்.

42என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போவோம் என்றார்.

43உடனே, அவர் இப்படிப் பேசுகையில், பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடேகூடப் பிரதான ஆசாரியரும், வேதபாரகரும் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள், பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டுவந்தார்கள்.

44அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன் தான், அவனைப் பிடித்துப் பத்திரமாய்க் கொண்டுபோங்கள் என்று அவர்களுக்குக் குறிப்புச் சொல்லியிருந்தான்.

45அவன் வந்தவுடனே, அவரண்டையில் சேர்ந்து: ரபீ, ரபீ, என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான்.

46அப்பொழுது அவர்கள் அவர்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள்.

47அப்பொழுது கூடநின்றவர்களில் ஒருவன் கத்தியை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதறவெட்டினான்.

48இயேசு அவர்களை நோக்கி: கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்;

49நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; ஆனாலும் வேதவாக்கியங்கள் நிறைவேற வேண்டியதாயிருக்கிறது என்றார்.

50அப்பொழுது எல்லாரும் அவரை விட்டு ஓடிப்போனார்கள்.

51ஒரு வாலிபன் ஒரு துப்பட்டியை மாத்திரம் தன்மேல் போர்த்துக்கொண்டு அவர் பின்னே போனான்; அவனைப் பிடித்தார்கள்.

52அவன் தன் துப்பட்டியைப் போட்டுவிட்டு, நிர்வாணமாய் அவர்களை விட்டு ஓடிப்போனான்.

53இயேசுவை அவர்கள் பிரதான ஆசாரியனிடத்தில் கொண்டுபோனார்கள்; அங்கே ஆசாரியர் மூப்பர் வேதபாரகர் எல்லாரும் கூடிவந்திருந்தார்கள்.

54பேதுரு தூரத்திலே அவருக்குப் பின்சென்று, பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் வந்து, சேவகரோடேகூட உட்கார்ந்து, நெருப்பண்டையிலே குளிர்க்காய்ந்துகொண்டிருந்தான்.

55அப்பொழுது பிரதான ஆசாரியரும் ஆலோசனைசங்கத்தாரனைவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாகச் சாட்சி தேடினார்கள்; அகப்படவில்லை.

56அநேகர் அவருக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லியும், அந்தச் சாட்சிகள் ஒவ்வவில்லை.

57அப்பொழுது சிலர் எழுந்து, கைவேலையாகிய இந்தத் தேவாலயத்தை நான் இடித்துப்போட்டு, கைவேலையல்லாத வேறொன்றை மூன்று நாளைக்குள்ளே கட்டுவேன் என்று இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம் என்று,

58அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொன்னார்கள்.

59அப்படிச் சொல்லியும் அவர்கள் சாட்சி ஒவ்வாமற்போயிற்று.

60அப்பொழுது பிரதான ஆசாரியன் எழுந்து நடுவே நின்று, இயேசுவை நோக்கி: இவர்கள் உனக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான்.

61அவரோ ஒரு உத்தரவும் சொல்லாமல் பேசாதிருந்தார். மறுபடியும் பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டான்.

62அதற்கு இயேசு: நான் அவர்தான்; மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார்.

63பிரதான ஆசாரியன் இதைக் கேட்டவுடனே, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன?

64தேவதூஷணத்தைக் கேட்டீர்களே, உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்றான். அதற்கு அவர்களெல்லாரும்: இவன் மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்று தீர்மானம்பண்ணினார்கள்.

65அப்பொழுது சிலர் அவர்மேல் துப்பவும், அவருடைய முகத்தை மூடவும், அவரைக் குட்டவும், ஞானதிருஷ்டியினாலே பார்த்துச் சொல் என்று சொல்லவும் தொடங்கினார்கள்; வேலைக்காரரும் அவரைக் கன்னத்தில் அறைந்தார்கள்.

66அத்தருணத்திலே பேதுரு கீழே அரமனை முற்றத்திலிருக்கையில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரிகளில் ஒருத்தி வந்து,

67குளிர்க்காய்ந்துகொண்டிருக்கிற பேதுருவைக் கண்டு, அவனை உற்றுப்பார்த்து: நீயும் நசரேயனாகிய இயேசுவோடே இருந்தாய் என்றாள்.

68அதற்கு அவன்: நான் அறியேன்; நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று மறுதலித்து, வெளியே வாசல் மண்டபத்துக்குப் போனான்; அப்பொழுது சேவல் கூவிற்று.

69வேலைக்காரி அவனை மறுபடியும் கண்டு: இவன் அவர்களில் ஒருவன் என்று அருகே நின்றவர்களுக்குச் சொன்னாள்.

70அவன் மறுபடியும் மறுதலித்தான். சற்றுநேரத்துக்குப்பின்பு மறுபடியும் அருகே நிற்கிறவர்கள் பேதுருவைப் பார்த்து: மெய்யாகவே நீ அவர்களில் ஒருவன், நீ கலிலேயன், உன் பேச்சு அதற்கு ஒத்திருக்கிறது என்றார்கள்.

71அதற்கு அவன்: நீங்கள் சொல்லுகிற மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினான்.

72உடனே சேவல் இரண்டாந்தரம் கூவிற்று. சேவல் இரண்டுதரம் கூவுகிறதற்குமுன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று இயேசு தனக்குச் சொன்ன வார்த்தையைப் பேதுரு நினைவுகூர்ந்து, மிகவும் அழுதான்.

தனிவாசிப்பு

1என் ஆத்துமா ஜீவனை அரோசிக்கிறது, நான் என் துயரத்துக்கு எனக்குள்ளே இடங்கொடுத்து, என் மனச்சஞ்சலத்தினாலே பேசுவேன்.

2நான் தேவனை நோக்கி: என்னைக் குற்றவாளியென்று தீர்க்காதிரும்; நீர் எதினிமித்தம் என்னோடே வழக்காடுகிறீர், அதை எனக்குத் தெரியப்படுத்தும் என்பேன்.

3நீர் என்னை ஒடுக்கி, உம்முடைய கைகளின் கிரியையை வெறுத்து, துன்மார்க்கரின் யோசனையைக் கிருபையாய்ப் பார்க்கிறது உமக்கு நன்றாயிருக்குமோ?

4மாம்சக்கண்கள் உமக்கு உண்டோ? மனுஷன் பார்க்கிறபிரகாரமாய்ப் பார்க்கிறீரோ?

5நீர் என் அக்கிரமத்தைக் கிண்டிக்கிளப்பி, என் பாவத்தை ஆராய்ந்து விசாரிக்கிறதற்கு,

6உம்முடைய நாட்கள் ஒரு மனுஷனுடைய நாட்களைப்போலவும், உம்முடைய வருஷங்கள் ஒரு புருஷனுடைய ஜீவகாலத்தைப்போலவும் இருக்கிறதோ?

7நான் துன்மார்க்கன் அல்ல என்பது உமக்குத் தெரியும்; உம்முடைய கைக்கு என்னைத் தப்புவிக்கிறவன் இல்லை.

8உம்முடைய கரங்கள் என்னையும் எனக்குரிய எல்லாவற்றையும் உருவாக்கிப் படைத்திருந்தும், என்னை நிர்மூலமாக்குகிறீர்.

9களிமண்போல என்னை உருவாக்கினீர் என்பதையும், என்னைத் திரும்பத் தூளாகப்போகப்பண்ணுவீர் என்பதையும் நினைத்தருளும்.

10நீர் என்னைப் பால்போல் வார்த்து, தயிர்போல் உறையப்பண்ணினீர் அல்லவோ?

11தோலையும் சதையையும் எனக்குத் தரித்து, எலும்புகளாலும் நரம்புகளாலும் என்னை இசைத்தீர்.

12எனக்கு ஜீவனைத் தந்ததும் அல்லாமல், தயவையும் எனக்குப் பாராட்டினீர்; உம்முடைய பராமரிப்பு என் ஆவியைக் காப்பாற்றினது.

13இவைகள் உம்முடைய உள்ளத்தில் மறைந்திருந்தாலும், இது உமக்குள் இருக்கிறது என்று அறிவேன்.

14நான் பாவஞ்செய்தால், அதை நீர் என்னிடத்தில் விசாரித்து, என் அக்கிரமத்தை என்மேல் சுமத்தாமல் விடீர்.

15நான் துன்மார்க்கனாயிருந்தால் எனக்கு ஐயோ! நான் நீதிமானாயிருந்தாலும் என் தலையை நான் எடுக்கமாட்டேன்; அவமானத்தால் நிரப்பப்பட்டேன்; நீர் என் சிறுமையைப் பார்த்தருளும், அது அதிகரிக்கிறது.

16சிங்கத்தைப்போல என்னை வேட்டையாடி, எனக்கு விரோதமாய் உமது அதிசய வல்லமையை விளங்கப்பண்ணுகிறீர்.

17நீர் உம்முடைய சாட்சிகளை எனக்கு விரோதமாய் இரட்டிக்கப்பண்ணுகிறீர்; என்மேல் உம்முடைய கோபத்தை அதிகரிக்கப்பண்ணுகிறீர்; போராட்டத்தின்மேல் போராட்டம் அதிகரிக்கிறது.

18நீர் என்னைக் கர்ப்பத்திலிருந்து புறப்படப்பண்ணினது என்ன? ஒரு கண்ணும் என்னைக் காணாதபடி, நான் அப்பொழுதே ஜீவித்துப்போனால் நலமாமே.

19நான் ஒருக்காலும் இல்லாதது போலிருந்து, கர்ப்பத்திலிருந்து பிரேதக்குழிக்குக் கொண்டுபோகப்பட்டிருப்பேன்.

20என் நாட்கள் கொஞ்சமல்லவோ?

21காரிருளும் மரணாந்தகாரமுமான இருண்ட தேசமும், இருள்சூழ்ந்த ஒழுங்கில்லாத மரணாந்தகாரமுள்ள தேசமும், ஒளியும் இருளாகும் தேசமுமாகிய, போனால் திரும்பிவராத தேசத்துக்கு, நான் போகுமுன்னே,

22நான் சற்று இளைப்பாறும்படி நீர் என்னைவிட்டு ஓய்ந்திரும் என்றான்.

1விசுவாசத்தில் பலவீனமுள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் அவனுடைய மன ஐயங்களைக் குற்றமாய் நிர்ணயிக்காமலிருங்கள்.

2ஒருவன் எந்தப் பதார்த்தத்தையும் புசிக்கலாமென்று நம்புகிறான்; பலவீனனோ மரக்கறிகளைமாத்திரம் புசிக்கிறான்.

3புசிக்கிறவன் புசியாதிருக்கிறவனை அற்பமாயெண்ணாதிருப்பானாக; புசியாதிருக்கிறவனும் புசிக்கிறவனைக் குற்றவாளியாகத் தீர்க்காதிருப்பானாக; தேவன் அவனை ஏற்றுக்கொண்டாரே.

4மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி; அவன் நிலைநிறுத்தப்படுவான்; தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே.

5அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொருநாளிலும் விசேஷமாக எண்ணுகிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான்; அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன்.

6நாட்களை விசேஷித்துக்கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளுகிறான்; நாட்களை விசேஷித்துக்கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளாதிருக்கிறான். புசிக்கிறவன் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறபடியால், கர்த்தருக்கென்று புசிக்கிறான்; புசியாதிருக்கிறவனும் கர்த்தருக்கென்று புசியாதிருந்து, தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறான்.

7நம்மில் ஒருவனும் தனக்கென்று பிழைக்கிறதுமில்லை, ஒருவனும் தனக்கென்று மரிக்கிறதுமில்லை.

8நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம்.

9கிறிஸ்துவும் மரித்தோர்மேலும் ஜீவனுள்ளோர்மேலும் ஆண்டவராயிருக்கும்பொருட்டு, மரித்தும் எழுந்தும் பிழைத்துமிருக்கிறார்.

10இப்படியிருக்க, நீ உன் சகோதரனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன? நீ உன் சகோதரனை அற்பமாய் எண்ணுகிறதென்ன? நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே.

11அந்தப்படி: முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் தேவனை அறிக்கைபண்ணும் என்று என் ஜீவனைக்கொண்டு உரைக்கிறேன் என்பதாய்க் கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது.

12ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்து தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்.

13இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

14ஒரு பொருளும் தன்னிலே தீட்டுள்ளதல்லவென்று கர்த்தராகிய இயேசுவுக்குள் அறிந்து நிச்சயித்திருக்கிறேன்; ஒரு பொருளைத் தீட்டுள்ளதென்று எண்ணிக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு அது தீட்டுள்ளதாயிருக்கும்.

15போஜனத்தினாலே உன் சகோதரனுக்கு விசனமுண்டாக்கினால், நீ அன்பாய் நடக்கிறவனல்ல; அவனை உன் போஜனத்தினாலே கெடுக்காதே, கிறிஸ்து அவனுக்காக மரித்தாரே.

16உங்கள் நன்மை தூஷிக்கப்பட இடங்கொடாதிருங்கள்.

17தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.

18இவைகளிலே கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்கிறவன் தேவனுக்குப்பிரியனும் மனுஷரால் அங்கிகரிக்கப்பட்டவனுமாயிருக்கிறான்.

19ஆனபடியால் சமாதானத்துக்கடுத்தவைகளையும், அந்நியோந்நிய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும் நாடக்கடவோம்.

20போஜனத்தினிமித்தம் தேவனுடைய கிரியையை அழித்துப்போடாதே. எந்தப் பதார்த்தமும் சுத்தமுள்ளதுதான்; ஆனாலும் இடறலுண்டாகப் புசிக்கிறவனுக்கு அது தீமையாயிருக்கும்.

21மாம்சம் புசிக்கிறதும், மதுபானம்பண்ணுகிறதும், மற்றெதையாகிலும் செய்கிறதும், உன் சகோதரன் இடறுகிறதற்காவது, தவறுகிறதற்காவது பலவீனப்படுகிறதற்காவது ஏதுவாயிருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமலிருப்பதே நன்மையாயிருக்கும்.

22உனக்கு விசுவாசமிருந்தால் அது தேவனுக்கு முன்பாக உன்மட்டும் இருக்கட்டும். நல்லதென்று நிச்சயித்த காரியத்தில் தன்னைக் குற்றவாளியாக்காதவன் பாக்கியவான்.

23ஒருவன் சமுசயப்படுகிறவனாய்ப் புசித்தால், அவன் விசுவாசமில்லாமல் புசிக்கிறபடியினால், ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுகிறான். விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com