‹ முகப்புமுழுத் திட்டம்

பிப்ரவரி 12 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்பிப்ரவரி 12அடுத்த நாள் ›
குடும்பம்

ஆதியாகமம் 45

முழு அதிகாரம் ›

1அப்பொழுது யோசேப்பு தன் அருகே நின்ற எல்லாருக்கும் முன்பாகத் தன்னை அடக்கிக்கொண்டிருக்கக்கூடாமல்: யாவரையும் என்னைவிட்டு வெளியே போகப்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டான். யோசேப்பு தன் சகோதரருக்குத் தன்னை வெளிப்படுத்துகையில், ஒருவரும் அவன் அருகில் நிற்கவில்லை.

2அவன் சத்தமிட்டு அழுதான்; அதை எகிப்தியர் கேட்டார்கள், பார்வோனின் வீட்டாரும் கேட்டார்கள்.

3யோசேப்பு தன் சகோதரரைப்பார்த்து: நான் யோசேப்பு; என் தகப்பனார் இன்னும் உயிரோடே இருக்கிறாரா என்றான். அவனுடைய சகோதரர் அவனுக்கு முன்பாகக் கலக்கமுற்றிருந்ததினாலே, அவனுக்கு உத்தரம் சொல்லக்கூடாமல் இருந்தார்கள்.

4அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: என் கிட்ட வாருங்கள் என்றான். அவர்கள் கிட்டப்போனார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் எகிப்துக்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான்.

5என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப்போட்டதினால், நீங்கள் சஞ்சலப்படவேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்.

6தேசத்தில் இப்பொழுது இரண்டு வருஷமாகப் பஞ்சம் உண்டாயிருக்கிறது; இன்னும் ஐந்து வருஷம் உழவும் அறுப்பும் இல்லாமல் பஞ்சம் இருக்கும்.

7பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க உங்களை ஆதரிக்கிறதற்காகவும், பெரிய ரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார்.

8ஆதலால் நீங்கள் அல்ல, தேவனே என்னை இவ்விடத்துக்கு அனுப்பி, என்னைப் பார்வோனுக்குத் தகப்பனாகவும், அவர் குடும்பம் அனைத்திற்கும் கர்த்தனாகவும், எகிப்துதேசம் முழுதுக்கும் அதிபதியாகவும் வைத்தார்.

9நீங்கள் சீக்கிரமாய் என் தகப்பனிடத்தில் போய்: தேவன் என்னை எகிப்துதேசம் முழுவதுக்கும் அதிபதியாக வைத்தார்; என்னிடத்தில் வாரும், தாமதிக்க வேண்டாம்.

10நீரும், உம்முடைய பிள்ளைகளும், அவர்களுடைய பிள்ளைகளும், உம்முடைய ஆடுமாடுகளோடும் உமக்கு உண்டாயிருக்கிற யாவற்றோடும் கோசேன் நாட்டில் வாசம்பண்ணி என் சமீபத்தில் இருக்கலாம்.

11உமக்கும் உம்முடைய குடும்பத்தாருக்கும் உமக்கு இருக்கிற யாவற்றிற்கும் வறுமை வராதபடிக்கு, அங்கே உம்மைப் பராமரிப்பேன்; இன்னும் ஐந்து வருஷம் பஞ்சம் இருக்கும் என்று, உம்முடைய குமாரனாகிய யோசேப்பு சொல்லச்சொன்னான் என்று சொல்லுங்கள்.

12இதோ, உங்களோடே பேசுகிற வாய் என் வாய்தான் என்பதை உங்கள் கண்களும் என் தம்பியாகிய பென்யமீனின் கண்களும் காண்கிறதே.

13எகிப்திலே எனக்கு உண்டாயிருக்கிற சகல மகிமையையும், நீங்கள் கண்ட யாவையும் என் தகப்பனுக்கு அறிவித்து, அவர் சீக்கிரமாய் இவ்விடத்துக்கு வரும்படி செய்யுங்கள் என்று சொல்லி;

14தன் தம்பியாகிய பென்யமீனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான்; பென்யமீனும் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான்.

15பின்பு தன் சகோதரர் யாவரையும் முத்தஞ்செய்து, அவர்களையும் கட்டிக்கொண்டு அழுதான். அதற்குப்பின் அவன் சகோதரர் அவனோடே சம்பாஷித்தார்கள்.

16யோசேப்பின் சகோதரர் வந்தார்கள் என்கிற சமாசாரம் பார்வோன் அரமனையில் பிரசித்தமானபோது, பார்வோனும் அவனுடைய ஊழியக்காரரும் சந்தோஷம் அடைந்தார்கள்.

17பார்வோன் யோசேப்பை நோக்கி: நீ உன் சகோதரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் கழுதைகளின்மேல் பொதியேற்றிக்கொண்டு புறப்பட்டு, கானான்தேசத்துக்குப் போய்,

18உங்கள் தகப்பனையும் உங்கள் குடும்பத்தாரையும் கூட்டிக்கொண்டு, என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு எகிப்துதேசத்தின் நன்மையைத் தருவேன்; தேசத்தின் கொழுமையைச் சாப்பிடுவீர்கள்.

19நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காகவும் உங்கள் மனைவிகளுக்காகவும் வண்டிகளை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுபோய், அவர்களையும் உங்கள் தகப்பனுடனே ஏற்றிக்கொண்டு வாருங்கள்.

20உங்கள் தட்டுமுட்டுகளைக் குறித்துக் கவலைப்படவேண்டாம்; எகிப்துதேசமெங்குமுள்ள நன்மை உங்களுடையாதாயிருக்கும் என்று சொல்லச் சொல்லி, உனக்கு நான் இட்ட கட்டளைப்படியே செய் என்றான்.

21இஸ்ரவேலின் குமாரர் அப்படியே செய்தார்கள், யோசேப்பு பார்வோனுடைய கட்டளையின்படியே அவர்களுக்கு வண்டிகளைக் கொடுத்ததுமன்றி, வழிக்கு ஆகாரத்தையும்,

22அவர்களில் ஒவ்வொருவனுக்கும் மாற்று வஸ்திரங்களையும் கொடுத்தான்; பென்யமீனுக்கோ முந்நூறு வெள்ளிக்காசையும் ஐந்து மாற்று வஸ்திரங்களையும் கொடுத்தான்.

23அப்படியே தன் தகப்பனுக்குப் பத்துக் கழுதைகளின்மேல் எகிப்தின் உச்சிதமான பதார்த்தங்களும், பத்துக் கோளிகைக் கழுதைகளின்மேல் தன் தகப்பனுக்காக வழிக்குத் தானியமும் அப்பமும் மற்றத் தின்பண்டங்களும் ஏற்றி அனுப்பினான்.

24மேலும், நீங்கள் போகும் வழியிலே சண்டைபண்ணிக்கொள்ளாதிருங்கள் என்று அவன் தன் சகோதரருக்குச் சொல்லி அனுப்பினான்; அவர்கள் புறப்பட்டுப்போனார்கள்.

25அவர்கள் எகிப்திலிருந்து போய், கானான்தேசத்திலே தங்கள் தகப்பனாகிய யாக்கோபினிடத்தில் வந்து:

26யோசேப்பு உயிரோடிருக்கிறான், அவன் எகிப்துதேசத்துக்கெல்லாம் அதிபதியாயிருக்கிறான் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அவன் இருதயம் மூர்ச்சை அடைந்தது; அவன் அவர்களை நம்பவில்லை.

27அவர்கள் யோசேப்பு தங்களுடனே சொன்ன வார்த்தைகள் யாவையும் அவனுக்குச் சொன்னபோதும், தன்னை ஏற்றிக்கொண்டு போகும்படி யோசேப்பு அனுப்பின வண்டிகளை அவன் கண்டபோதும், அவர்களுடைய தகப்பனாகிய யாக்கோபின் ஆவி உயிர்த்தது.

28அப்பொழுது இஸ்ரவேல்: என் குமாரனாகிய யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறானே, இது போதும்; நான் மரணமடையுமுன்னே போய் அவனைப் பார்ப்பேன் என்றான்.

1பொழுது விடிந்தவுடனே, பிரதான ஆசாரியரும் மூப்பரும் வேதபாரகரும் ஆலோசனைச் சங்கத்தாரனைவரும் கூடி ஆலோசனைபண்ணி, இயேசுவைக் கட்டிக்கொண்டுபோய், பிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள்.

2பிலாத்து அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு அவர்: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.

3பிரதான ஆசாரியர்கள் அவர்மேல் அநேகங்குற்றங்களைச் சாட்டினார்கள். அவரோ மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.

4அப்பொழுது பிலாத்து மறுபடியும் அவரை நோக்கி: இதோ, இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே, அதற்கு நீ உத்தரவு ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான்.

5இயேசுவோ அப்பொழுதும் உத்தரவு ஒன்றும் சொல்லவில்லை; அதினால் பிலாத்து ஆச்சரியப்பட்டான்.

6காவல்பண்ணப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்க வேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்ளுவார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் பிலாத்துவுக்கு வழக்கமாயிருந்தது.

7கலகம்பண்ணி அந்தக் கலகத்தில் கொலைசெய்து, அதற்காகக் காவல்பண்ணப்பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட ஒருவன் இருந்தான்.

8ஜனங்கள், வழக்கத்தின்படியே தங்களுக்கு ஒருவனை விடுதலையாக்கவேண்டுமென்று சத்தமிட்டுக் கேட்டுக்கொள்ளத்தொடங்கினார்கள்.

9பொறாமையினாலே பிரதான ஆசாரியர்கள் அவரை ஒப்புக்கொடுத்தார்களென்று பிலாத்து அறிந்து.

10அவர்களை நோக்கி: நான் யூதருடைய ராஜாவை உங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்றிருக்கிறீர்களா என்று கேட்டான்.

11பரபாசைத் தங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்ளும்படி, பிரதான ஆசாரியர்கள் அவர்களை ஏவிவிட்டார்கள்.

12பிலாத்து மறுபடியும் அவர்களை நோக்கி: அப்படியானால், யூதருடைய ராஜாவென்று நீங்கள் சொல்லுகிறவனை நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.

13அவனைச் சிலுவையில் அறையும் என்று மறுபடியும் சத்தமிட்டுச் சொன்னார்கள்.

14அதற்குப் பிலாத்து: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும் என்று பின்னும் அதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்.

15அப்பொழுது பிலாத்து ஜனங்களைப் பிரியப்படுத்த மனதுள்ளவனாய், பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.

16அப்பொழுது போர்ச்சேவகர் அவரைத் தேசாதிபதியின் அரமனையாகிய மாளிகையில் கொண்டுபோய், அவ்விடத்தில் போர்ச்சேவகருடைய கூட்டமுழுவதையும் கூடிவரச்செய்து,

17சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள்முடியைப் பின்னி அவருக்குச் சூட்டி:

18யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரை வாழ்த்தி,

19அவரைச் சிரசில் கோலால் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்கால்படியிட்டு அவரை வணங்கினார்கள்.

20அவரைப் பரியாசம்பண்ணினபின்பு, சிவப்பான அங்கியைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள்.

21சிரேனே ஊரானும், அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அவ்வழியே வருகையில், அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம் பண்ணினார்கள்.

22கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவரைக் கொண்டுபோய்,

23வெள்ளைப்போளம் கலந்த திராட்சரசத்தை அவருக்குக் குடிக்கக்கொடுத்தார்கள்; அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

24அப்பொழுது அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். அதன்பின்பு அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டு, ஒவ்வொருவன் ஒவ்வொரு பங்கை எடுத்துக்கொள்ளும்படி அவைகளைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்.

25அவரைச் சிலுவையில் அறைந்தபோது மூன்றாம்மணி வேளையாயிருந்தது.

26அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும்பொருட்டு, யூதருடைய ராஜா என்று எழுதி, சிலுவையின்மேல் கட்டினார்கள்.

27அல்லாமலும், அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும் அவருடைய இடதுபக்கத்தில் ஒருவனுமாக, இரண்டு கள்ளரை அவரோடேகூடச் சிலுவைகளில் அறைந்தார்கள்.

28அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்கிற வேதவாக்கியம் அதனாலே நிறைவேறிற்று.

29அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி: ஆ! ஆ! தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே.

30உன்னை நீயே இரட்சித்துக்கொள்; சிலுவையிலிருந்திறங்கிவா என்று அவரைத் தூஷித்தார்கள்.

31அப்படியே பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் தங்களுக்குள்ளே பரியாசம்பண்ணி: மற்றவர்களை இரட்சித்தான், தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ளத்திராணியில்லை.

32நாம் கண்டு விசுவாசிக்கத்தக்கதாக இஸ்ரவேலுக்கு ராஜாவாகிய கிறிஸ்து இப்பொழுது சிலுவையிலிருந்திறங்கட்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டவர்களும் அவரை நிந்தித்தார்கள்.

33ஆறாம்மணி நேரமுதல் ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று.

34ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.

35அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இதோ, எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள்.

36ஒருவன் ஓடி, கடற்காளானைக் காடியிலே தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக்கொடுத்து: பொறுங்கள், எலியா இவனை இறக்கவருவானோ பார்ப்போம் என்றான்.

37இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார்.

38அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது.

39அவருக்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி அவர் இப்படிக் கூப்பிட்டு ஜீவனை விட்டதைக் கண்டபோது: மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன் என்றான்.

40சில ஸ்திரீகளும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் கலிலேயாவிலிருந்தபோது அவருக்குப் பின்சென்று ஊழியஞ்செய்துவந்த மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும்,

41அவருடனேகூட எருசலேமுக்கு வந்திருந்த வேறே அநேக ஸ்திரீகளும் அவர்களோடே இருந்தார்கள்.

42ஓய்வுநாளுக்கு முந்தினநாள் ஆயத்தநாளாயிருந்தபடியால், சாயங்காலமானபோது.

43கனம்பொருந்திய ஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரானும் தேவனுடைய ராஜ்யம் வரக் காத்திருந்தவனுமாகிய யோசேப்பு என்பவன் வந்து, பிலாத்துவினிடத்தில் துணிந்துபோய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான்.

44அவர் இத்தனை சீக்கிரத்தில் மரித்துப்போனாரா என்று பிலாத்து ஆச்சரியப்பட்டு, நூற்றுக்கு அதிபதியை அழைப்பித்து: அவர் இதற்குள்ளே மரித்தது நிச்சயமா என்று கேட்டான்.

45நூற்றுக்கு அதிபதியினாலே அதை அறிந்துகொண்டபின்பு, சரீரத்தை யோசேப்பினிடத்தில் கொடுத்தான்.

46அவன் போய், மெல்லிய துப்பட்டியை வாங்கிக்கொண்டுவந்து, அவரை இறக்கி, அந்தத் துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டியிருந்த கல்லறையிலே அவரை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு கல்லைப் புரட்டிவைத்தான்.

47அவரை வைத்த இடத்தை மகதலேனா மரியாளும் யோசேயின் தாயாகிய மரியாளும் பார்த்தார்கள்.

தனிவாசிப்பு

1அப்பொழுது நாகமாத்தியனாகிய சோப்பார் பிரதியுத்தரமாக:

2ஏராளமான வார்த்தைகளுக்கு உத்தரவு சொல்லவேண்டாமோ? வாய்ச்சாலகன் நீதிமானாய் விளங்குவானோ?

3உம்முடைய வீம்புவார்த்தைகளுக்கு மனுஷர் மவுனமாயிருப்பார்களோ? நீர் பரியாசம்பண்ணும்போது, ஒருவரும் உம்மை வெட்கப்படுத்தவேண்டாமோ?

4என் சொல் சுத்தம் என்றும், நான் தேவரீருடைய பார்வைக்குத் துப்புரவானவன் என்றும் நீர் சொல்லுகிறீர்.

5ஆனாலும் தேவன் பேசி, உமக்கு விரோதமாய்த் தம்முடைய உதடுகளைத் திறந்து,

6உமக்கு ஞானத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தினால் நலமாயிருக்கும்; உள்ளபடி பார்த்தால், அது இரட்டிப்புள்ளதாயிருக்கிறது; ஆகையால் உம்முடைய அக்கிரமத்திற்கேற்றபடி தேவன் உம்மைத் தண்டிக்கவில்லையென்று அறிந்துகொள்ளும்.

7தேவனுடைய அந்தரங்க ஞானத்தை நீர் ஆராய்ந்து, சர்வவல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியக்கூடுமோ?

8அது வானபரியந்தம் உயர்ந்தது; உம்மால் என்ன ஆகும்? அது பாதாளத்திலும் ஆழமானது, நீர் அறியக்கூடியது என்ன?

9அதின் அளவு பூமியைப்பார்க்கிலும் நீளமும், சமுத்திரத்தைப்பார்க்கிலும் அகலமுமாயிருக்கிறது.

10அவர் பிடித்தாலும், அவர் அடைத்தாலும், அவர் நியாயத்தில் கொண்டுவந்து நிறுத்தினாலும், அவரைத் தடைபண்ணுகிறவன் யார்?

11மனுஷருடைய மாயத்தை அவர் அறிவார்; அக்கிரமத்தை அவர் கண்டும், அதைக் கவனியாதிருப்பாரோ?

12புத்தியில்லாத மனுஷன் காட்டுக்கழுதைக்குட்டிக்கு ஒப்பாகப் பிறந்திருந்தாலும், பெருநெஞ்சுள்ளவனாயிருக்கிறான்.

13நீர் உம்முடைய இருதயத்தை ஆயத்தப்படுத்தி, உம்முடைய கைகளை அவருக்கு நேராக விரித்தால் நலமாயிருக்கும்.

14உம்முடைய கையிலே அக்கிரமம் இருந்தால், அதைத் தூரத்தில் அகற்றிவிட்டு, அநியாயம் உம்முடைய கூடாரங்களில் வாசமாயிருக்கவொட்டாதிரும்.

15அப்பொழுது உம்முடைய முகத்தை மாசில்லாமல் ஏறெடுத்து, பயப்படாமல் திடன்கொண்டிருப்பீர்.

16அப்பொழுது நீர் வருத்தத்தை மறந்து, கடந்துபோன தண்ணீரைப்போல அதை நினைப்பீர்.

17அப்பொழுது உம்முடைய ஆயுசுகாலம் பட்டப்பகலைப்பார்க்கிலும் பிரகாசமாயிருக்கும்; இருள் அடைந்த நீர் விடியற்காலத்தைப்போலிருப்பீர்.

18நம்பிக்கை உண்டாயிருக்கிறதினால் திடனாயிருப்பீர்; தோண்டி ஆராய்ந்து சுகமாய்ப் படுத்துக்கொள்வீர்.

19பயப்படுத்துவாரில்லாமல் நித்திரை செய்வீர்; அநேகர் உமது முகத்தை நோக்கி விண்ணப்பம் பண்ணுவார்கள்.

20துன்மார்க்கருடைய கண்கள் பூத்துப்போய், அவர்கள் அடைக்கலம் அவர்களை விட்டொழிந்து, அவர்கள் நம்பிக்கை சாகிறவன் சுவாசம்போல் அழிந்துபோகும் என்றான்.

1அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும்.

2நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்னையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்.

3கிறிஸ்துவும் தமக்கே பிரியமாய் நடவாமல்: உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தைகள் என்மேல் விழுந்தது என்று எழுதியிருக்கிறபடியே நடந்தார்.

4தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.

5நீங்கள் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்தும்படிக்கு,

6பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஏகசிந்தையுள்ளவர்களாயிருக்கும்படி உங்களுக்கு அநுக்கிரகஞ்செய்வாராக.

7ஆதலால் தேவனுக்கு மகிமையுண்டாக, கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்.

8மேலும், பிதாக்களுக்குப்பண்ணப்பட்ட வாக்குத்தத்தங்களை உறுதியாக்கும்படிக்கு, தேவனுடைய சத்தியத்தினிமித்தம் இயேசுகிறிஸ்து விருத்தசேதனமுள்ளவர்களுக்கு ஊழியக்காரரானாரென்றும்;

9புறஜாதியாரும் இரக்கம்பெற்றதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்துகிறார்களென்றும் சொல்லுகிறேன். அந்தப்படி: இதினிமித்தம் நான் புறஜாதிகளுக்குள்ளே உம்மை அறிக்கைபண்ணி, உம்முடைய நாமத்தைச் சொல்லி, சங்கீதம் பாடுவேன் என்று எழுதியிருக்கிறது.

10மேலும், புறஜாதிகளே, அவருடைய ஜனங்களோடேகூடக் களிகூருங்கள் என்கிறார்.

11மேலும், புறஜாதிகளே, எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே, எல்லாரும் அவரைப் புகழுங்கள் என்றும் சொல்லுகிறார்.

12மேலும், ஈசாயின் வேரும் புறஜாதியாரை ஆளும்படிக்கு எழும்புகிறவருமாகிய ஒருவர் தோன்றுவார்; அவரிடத்தில் புறஜாதியார் நம்பிக்கை வைப்பார்கள் என்று ஏசாயா சொல்லுகிறான்.

13பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக.

14என் சகோதரரே, நீங்கள் நற்குணத்தினால் நிறைந்தவர்களும், சகல அறிவினாலும் நிரப்பப்பட்டவர்களும், ஒருவருக்கொருவர் புத்திசொல்ல வல்லவர்களுமாயிருக்கிறீர்களென்று நானும் உங்களைக் குறித்து நிச்சயித்திருக்கிறேன்.

15அப்படியிருந்தும், சகோதரரே, புறஜாதியாராகிய பலி பரிசுத்த ஆவியினாலே பரிசுத்தமாக்கப்பட்டு, தேவனுக்குப் பிரியமான பலியாகும்படிக்கு, நான் தேவனுடைய சுவிசேஷ ஊழியத்தை நடத்தும் ஆசாரியனாயிருந்து புறஜாதிகளுக்கு இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனாகும்பொருட்டு,

16தேவன் எனக்கு அளித்த கிருபையினாலே உங்களுக்கு ஞாபகப்படுத்தும்படிக்கு இவைகளை நான் அதிக தைரியமாய் எழுதினேன்.

17ஆதலால் நான் தேவனுக்குரியவைகளைக்குறித்து இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மேன்மைபாராட்ட எனக்கு இடமுண்டு.

18புறஜாதியாரை வார்த்தையினாலும் செய்கையினாலும் கீழ்ப்படியப்பண்ணும்படிக்கு, அற்புத அடையாளங்களின் பலத்தினாலும், தேவ ஆவியின் பலத்தினாலும், கிறிஸ்துவானவர் என்னைக்கொண்டு நடப்பித்தவைகளைச் சொல்வதல்லாமல் வெறொன்றையும் சொல்ல நான் துணிவதில்லை.

19இப்படி எருசலேம் துவக்கிச் சுற்றிலும், இல்லிரிக்கம் தேசம்வரைக்கும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பூரணமாய்ப் பிரசங்கித்திருக்கிறேன்.

20மேலும் அவருடைய செய்தியை அறியாதிருந்தவர்கள் காண்பார்களென்றும், கேள்விப்படாதிருந்தவர்கள் உணர்ந்துகொள்வார்களென்றும் எழுதியிருக்கிறபடியே,

21நான் மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டாதபடிக்கு கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நாடுகிறேன்.

22உங்களிடத்தில் வருகிறதற்கு இதினாலே அநேகந்தரம் தடைபட்டேன்.

23இப்பொழுது இந்தத் திசைகளிலே எனக்கு இடமில்லாதபடியினாலும், உங்களிடத்தில் வரும்படி அனேக வருஷமாய் எனக்கு மிகுந்த விருப்பம் உண்டாயிருக்கிறபடியினாலும்,

24நான் ஸ்பானியா தேசத்திற்குப் பிரயாணம்பண்ணுகையில் உங்களிடத்தில் வந்து, உங்களைக் கண்டுகொள்ளவும், உங்களிடத்தில் சற்றுத் திருப்தியடைந்த பின்பு, அவ்விடத்திற்கு உங்களால் வழிவிட்டனுப்பப்படவும், எனக்குச் சமயங்கிடைக்குமென்று நம்பியிருக்கிறேன்.

25இப்பொழுதோ பரிசுத்தவான்களுக்கு உதவிசெய்யுங்காரியமாக நான் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ண எத்தனமாயிருக்கிறேன்.

26மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ளவர்கள் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குள்ளே இருக்கிற தரித்திரருக்காகச் சில பொருள்சகாயம்செய்ய விருப்பங்கொண்டிருக்கிறார்கள்;

27இப்படிச்செய்வது நல்லதென்று எண்ணினார்கள்; இப்படிச் செய்கிறதற்கு அவர்கள் கடனாளிகளாயும் இருக்கிறார்கள். எப்படியென்றால், புறஜாதியார் அவர்களுடைய ஞானநன்மைகளில் பங்குபெற்றிருக்க, சரீரநன்மைகளால் அவர்களுக்கு உதவிசெய்ய இவர்கள் கடனாளிகளாயிருக்கிறார்களே.

28இந்தக் காரியத்தை நான் நிறைவேற்றி, இந்தப் பலனை அவர்கள் கையிலே பத்திரமாய் ஒப்புவித்தபின்பு, உங்கள் ஊர் வழியாய் ஸ்பானியாவுக்குப் போவேன்.

29நான் உங்களிடத்தில் வரும்போது கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் சம்பூரணமான ஆசீர்வாதத்தோடே வருவேனென்று அறிந்திருக்கிறேன்.

30மேலும் சகோதரரே, தேவசித்தத்தினாலே நான் சந்தோஷத்துடனே உங்களிடத்தில் வந்து உங்களோடு இளைப்பாறும்படியாக,

31யூதேயாவிலிருக்கிற அவிசுவாசிகளுக்கு நான் தப்புவிக்கப்படும்படிக்கும், நான் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குச் செய்யப்போகிற தர்மசகாயம் அவர்களால் அங்கிகரிக்கப்படும்படிக்கும்,

32நீங்கள் தேவனை நோக்கிச் செய்யும் ஜெபங்களில், நான் போராடுவதுபோல நீங்களும் என்னோடுகூடப் போராடவேண்டுமென்று நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிமித்தமும், ஆவியானவருடைய அன்பினிமித்தமும், உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.

33சமாதானத்தின் தேவன் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக. ஆமென்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com