1யோசேப்பு பார்வோனிடத்தில் போய்: என் தகப்பனும் என் சகோதரரும், தங்கள் ஆடுமாடுகளோடும் தங்களுக்கு உண்டான எல்லாவற்றோடுங்கூடக் கானான்தேசத்திலிருந்து வந்தார்கள்; இப்பொழுது கோசேன் நாட்டில் இருக்கிறார்கள் என்று சொல்லி;
2தன் சகோதரரில் ஐந்துபேரைப் பார்வோனுக்கு முன்பாகக் கொண்டுபோய் நிறுத்தினான்.
3பார்வோன் அவனுடைய சகோதரரை நோக்கி: உங்கள் தொழில் என்ன என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: உமது அடியாராகிய நாங்களும் எங்கள் பிதாக்களும் மந்தை மேய்க்கிறவர்கள் என்று பார்வோனிடத்தில் சொன்னதுமன்றி,
4கானான் தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருக்கிறது; உமது அடியாரின் மந்தைகளுக்கு மேய்ச்சல் இல்லாமையால், இத்தேசத்திலே தங்கவந்தோம்; உமது அடியாராகிய நாங்கள் கோசேன் நாட்டிலே குடியிருக்கும்படி தயவுசெய்யவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள்.
5அப்பொழுது பார்வோன் யோசேப்பை நோக்கி: உன் தகப்பனும் உன் சகோதரரும் உன்னிடத்தில் வந்திருக்கிறார்களே.
6எகிப்துதேசம் உனக்கு முன்பாக இருக்கிறது; தேசத்திலுள்ள நல்ல இடத்திலே உன் தகப்பனையும் உன் சகோதரரையும் குடியேறும்படி செய்; அவர்கள் கோசேன் நாட்டிலே குடியிருக்கலாம்; அவர்களுக்குள்ளே திறமையுள்ளவர்கள் உண்டென்று உனக்குத் தெரிந்திருந்தால், அவர்களை என் ஆடுமாடுகளை விசாரிக்கிறதற்குத் தலைவராக வைக்கலாம் என்றான்.
7பின்பு, யோசேப்பு தன் தகப்பனாகிய யாக்கோபை அழைத்துக்கொண்டுவந்து, அவனைப் பார்வோனுக்கு முன்பாக நிறுத்தினான். யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்தான்.
8பார்வோன் யாக்கோபை நோக்கி: உமக்கு வயது என்ன என்று கேட்டான்.
9அதற்கு யாக்கோபு: நான் பரதேசியாய்ச் சஞ்சரித்த நாட்கள் நூற்றுமுப்பது வருஷம்; என் ஆயுசு நாட்கள் கொஞ்சமும் சஞ்சலமுள்ளதுமாயிருக்கிறது; அவைகள் பரதேசிகளாய்ச் சஞ்சரித்த என் பிதாக்களுடைய ஆயுசு நாட்களுக்கு வந்து எட்டவில்லை என்று பார்வோனுடனே சொன்னான்.
10பின்னும் யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்து, அவன் சமுகத்தினின்று புறப்பட்டுப்போனான்.
11பார்வோன் கட்டளையிட்டபடியே, யோசேப்பு தன் தகப்பனுக்கும் தன் சகோதரருக்கும் எகிப்துதேசத்திலே நல்ல நாடாகிய ராமசேஸ் என்னும் நாட்டிலே சுதந்திரம் கொடுத்து, அவர்களைக் குடியேற்றினான்.
12யோசேப்பு தன் தகப்பனையும் தன் சகோதரரையும் தன் தகப்பனுடைய குடும்பத்தார் அனைவரையும், அவரவர்கள் குடும்பத்திற்குத்தக்கதாய் ஆகாரம் கொடுத்து ஆதரித்துவந்தான்.
13பஞ்சம் மிகவும் கொடிதாயிருந்தது; தேசமெங்கும் ஆகாரம் கிடையாமற்போயிற்று; எகிப்துதேசமும் கானான்தேசமும் பஞ்சத்தினாலே மெலிந்துபோயிற்று.
14யோசேப்பு எகிப்துதேசத்திலும் கானான்தேசத்திலுமுள்ள பணத்தையெல்லாம் தானியம் கொண்டவர்களிடத்தில் வாங்கி, அதைப் பார்வோன் அரமனையிலே கொண்டுபோய்ச் சேர்த்தான்.
15எகிப்துதேசத்திலும் கானான்தேசத்திலுமுள்ள பணம் செலவழிந்தபோது, எகிப்தியர் எல்லாரும் யோசேப்பினிடத்தில் வந்து: எங்களுக்கு ஆகாரம் தாரும்; பணம் இல்லை, அதினால் நாங்கள் உமது சமுகத்தில் சாகவேண்டுமோ என்றார்கள்.
16அதற்கு யோசேப்பு: உங்களிடத்தில் பணம் இல்லாமற்போனால், உங்கள் ஆடுமாடுகளைக் கொடுங்கள்; அவைகளுக்குப் பதிலாக உங்களுக்குத் தானியம் கொடுக்கிறேன் என்றான்.
17அவர்கள் தங்கள் ஆடுமாடு முதலானவைகளை யோசேப்பினிடத்தில் கொண்டுவந்தார்கள்; யோசேப்பு குதிரைகளையும் ஆடுகளையும் மாடுகளையும் கழுதைகளையும் வாங்கிக்கொண்டு, அந்த வருஷம் அவர்களுடைய ஆடுமாடு முதலான எல்லாவற்றிற்கும் பதிலாக அவர்களுக்கு ஆகாரம் கொடுத்து, அவர்களை ஆதரித்தான்.
18அந்த வருஷம் முடிந்தபின், மறுவருஷத்திலே அவர்கள் அவனிடத்தில் வந்து: பணமும் செலவழிந்துபோயிற்று; எங்கள் ஆடுமாடு முதலானவைகளும் எங்கள் ஆண்டவனைச் சேர்ந்தது; எங்கள் சரீரமும் எங்கள் நிலமுமே ஒழிய, எங்கள் ஆண்டவனுக்கு முன்பாக மீதியானது ஒன்றும் இல்லை; இது எங்கள் ஆண்டவனுக்குத் தெரியாத காரியம் அல்ல.
19நாங்களும் எங்கள் நிலங்களும் உம்முடைய கண்களுக்கு முன்பாக அழிந்து போகலாமா? நீர் எங்களையும் எங்கள் நிலங்களையும் வாங்கிக்கொண்டு, ஆகாரம் கொடுக்கவேண்டும்; நாங்களும் எங்கள் நிலங்களும் பார்வோனுக்கு ஆதீனமாயிருப்போம்; நாங்கள் சாகாமல் உயிரோடிருக்கவும், நிலங்கள் பாழாய்ப் போகாமலிருக்கவும், எங்களுக்கு விதைத்தானியத்தைத் தாரும் என்றார்கள்.
20அப்படியே எகிப்தியர் தங்களுக்குப் பஞ்சம் மேலிட்டபடியால் அவரவர் தங்கள் தங்கள் வயல் நிலங்களை விற்றார்கள்; யோசேப்பு எகிப்தின் நிலங்கள் யாவையும் பார்வோனுக்காகக் கொண்டான்; இவ்விதமாய் அந்தப் பூமி பார்வோனுடையதாயிற்று.
21மேலும் அவன் எகிப்தின் ஒரு எல்லைமுதல் மறு எல்லைவரைக்குமுள்ள ஜனங்களை அந்தந்தப் பட்டணங்களில் குடிமாறிப்போகப்பண்ணினான்.
22ஆசாரியருடைய நிலத்தை மாத்திரம் அவன் கொள்ளவில்லை; அது பார்வோனாலே ஆசாரியருக்கு மானியமாகக் கொடுக்கப்பட்டிருந்ததினாலும், பார்வோன் அவர்களுக்குக் கொடுத்த மானியத்தினாலே அவர்கள் ஜீவனம் பண்ணிவந்ததினாலும், அவர்கள் தங்கள் நிலத்தை விற்கவில்லை.
23பின்னும் யோசேப்பு ஜனங்களை நோக்கி: இதோ, இன்று உங்களையும் உங்கள் நிலங்களையும் பார்வோனுக்காக வாங்கிக்கொண்டேன்; இதோ, உங்களுக்குக் கொடுக்கப்படுகிற விதைத் தானியம், இதை நிலத்தில் விதையுங்கள்.
24விளைவில் ஐந்தில் ஒரு பங்கைப் பார்வோனுக்குக் கொடுக்கவேண்டும்; மற்ற நாலு பங்கும் வயலுக்கு விதையாகவும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் ஆகாரமாகவும் உங்களுடையதாயிருக்கட்டும் என்றான்.
25அப்பொழுது அவர்கள்: நீர் எங்கள் பிராணனைக் காப்பாற்றினீர்; எங்கள் ஆண்டவனுடைய கண்களில் எங்களுக்குத் தயவு கிடைக்கவேண்டும்; நாங்கள் பார்வோனுக்கு அடிமைகளாயிருக்கிறோம் என்றார்கள்.
26ஐந்தில் ஒன்று பார்வோனுக்குச் சேரும் வாரம் என்று யோசேப்பு இட்ட கட்டளைப்படி எகிப்து தேசத்திலே இந்நாள்வரைக்கும் நடந்துவருகிறது; ஆசாரியரின் நிலம் மாத்திரம் பார்வோனைச் சேராமல் நீங்கலாயிருந்தது.
27இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலுள்ள கோசேன் நாட்டிலே குடியிருந்தார்கள்; அங்கே நிலங்களைக் கையாட்சி செய்து, மிகவும் பலுகிப் பெருகினார்கள்.
28யாக்கோபு எகிப்து தேசத்திலே பதினேழு வருஷம் இருந்தான்; யாக்கோபுடைய ஆயுசு நாட்கள் நூற்றுநாற்பத்தேழு வருஷம்.
29இஸ்ரவேல் மரணமடையும் காலம் சமீபித்தது. அப்பொழுது அவன் தன் குமாரனாகிய யோசேப்பை வரவழைத்து, அவனை நோக்கி: என்மேல் உனக்குத் தயவுண்டானால், உன் கையை என் தொடையின்கீழ் வைத்து என்மேல் பட்சமும் உண்மையுமுள்ளவனாயிரு; என்னை எகிப்திலே அடக்கம் பண்ணாதிருப்பாயாக.
30நான் என் பிதாக்களோடே படுத்துக்கொள்ளவேண்டும்; ஆகையால், நீ என்னை எகிப்திலிருந்து எடுத்துக்கொண்டுபோய், அவர்களை அடக்கம்பண்ணியிருக்கிற நிலத்திலே என்னையும் அடக்கம்பண்ணு என்றான். அதற்கு அவன்: உமது சொற்படி செய்வேன் என்றான்.
31அப்பொழுது அவன்: எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்; அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான். அப்பொழுது இஸ்ரவேல் கட்டிலின் தலைமாட்டிலே சாய்ந்து தொழுதுகொண்டான்.
1மகா கனம்பொருந்திய தேயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை,
2ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக் குறித்துச் சரித்திரம் எழுத அநேகம்பேர் ஏற்பட்டபடியினால்,
3ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டுமென்று,
4அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று.
5யூதேயாதேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வகுப்பில் சகரியா என்னும் பேர்கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி ஆரோனுடைய குமாரத்திகளில் ஒருத்தி, அவள் பேர் எலிசபெத்து.
6அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்.
7எலிசபெத்து மலடியாயிருந்தபடியினால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் வயது சென்றவர்களாயும் இருந்தார்கள்.
8அப்படியிருக்க, அவன் தன் ஆசாரியவகுப்பின் முறைப்படி தேவசந்நிதியிலே ஆசாரிய ஊழியம் செய்துவருகிற காலத்தில்,
9ஆசாரிய ஊழிய முறைமையின்படி அவன் தேவாலயத்துக்குள் பிரவேசித்துத் தூபங்காட்டுகிறதற்குச் சீட்டைப் பெற்றான்.
10தூபங்காட்டுகிற வேளையிலே ஜனங்களெல்லாரும் கூட்டமாய் வெளியே ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
11அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூபபீடத்தின் வலதுபக்கத்திலே நின்று அவனுக்குத் தரிசனமானான்.
12சகரியா அவனைக்கண்டு கலங்கி, பயமடைந்தான்.
13தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக.
14உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள்.
15அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான்.
16அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான்.
17பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான்.
18அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எதினால் அறிவேன்; நான் கிழவனாயிருக்கிறேன், என் மனைவியும் வயதுசென்றவளாயிருக்கிறாளே என்றான்.
19தேவதூதன் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவசந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்;
20இதோ, தகுந்தகாலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசியாதபடியினால் இவைகள் சம்பவிக்கும் நாள்மட்டும் நீ பேசக்கூடாமல் ஊமையாயிருப்பாய் என்றான்.
21ஜனங்கள் சகரியாவுக்குக் காத்திருந்து, அவன் தேவாலயத்தில் தாமதித்ததினால் ஆச்சரியப்பட்டார்கள்.
22அவன் வெளியே வந்தபோது அவர்களிடத்தில் பேசக்கூடாமலிருந்தான்; அதினாலே தேவாலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டானென்று அறிந்தார்கள். அவனும் அவர்களுக்குச் சைகைகாட்டி ஊமையாயிருந்தான்.
23அவனுடைய ஊழியத்தின் நாட்கள் நிறைவேறினவுடனே தன் வீட்டுக்குப்போனான்.
24அந்நாட்களுக்குப்பின்பு, அவன் மனைவியாகிய எலிசபெத்து கர்ப்பவதியாகி: ஜனங்களுக்குள்ளே எனக்கு உண்டாயிருந்த நிந்தையை நீக்கும்படியாகக் கர்த்தர் இந்த நாட்களில் என்மேல் கடாட்சம் வைத்து,
25எனக்கு இப்படிச் செய்தருளினார் என்று சொல்லி, ஐந்து மாதம் வெளிப்படாதிருந்தாள்.
26ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில்,
27தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிகையின் பேர் மரியாள்.
28அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்.
29அவளோ அவனைக் கண்டு, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.
30தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய்.
31இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.
32அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.
33அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான்.
34அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள்.
35தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக; பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.
36இதோ, உனக்கு இனத்தாளாயிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள்; மலடியென்னப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம்.
37தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை என்றான்.
38அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான்.
1இதோ, இவைகளெல்லாவற்றையும் என் கண் கண்டு, என் காது கேட்டு அறிந்திருக்கிறது.
2நீங்கள் அறிந்திருக்கிறதை நானும் அறிந்திருக்கிறேன்; நான் உங்களுக்குத் தாழ்ந்தவன் அல்ல.
3சர்வவல்லவரோடே நான் பேசினால் நல்லது; தேவனோடே நியாயத்திற்காக வழக்காட விரும்புவேன்.
4நீங்கள் பொய்யைப் பிணைக்கிறவர்கள்; நீங்கள் எல்லாரும் காரியத்துக்குதவாத வைத்தியர்கள்.
5நீங்கள் பேசாமலிருந்தால் நலமாகும்; அது உங்களுக்கு ஞானமாயிருக்கும்.
6நீங்கள் என் நியாயத்தைக் கேட்டு, என் உதடுகள் சொல்லும் விசேஷங்களைக் கவனியுங்கள்.
7நீங்கள் தேவனுக்காக நியாயக்கேடாய்ப் பேசி, அவருக்காக வஞ்சகமாய் வசனிக்கவேண்டுமோ?
8அவருக்கு முகதாட்சிணியம்பண்ணுவீர்களோ? தேவனுக்காக வழக்காடுவீர்களோ?
9அவர் உங்களை ஆராய்ந்துபார்த்தால் அது உங்களுக்கு நலமாயிருக்குமோ? மனுஷனைப் பரியாசம் பண்ணுகிறதுபோல அவரைப் பரியாசம்பண்ணுவீர்களோ?
10நீங்கள் அந்தரங்கமாய் முகதாட்சிணியம்பண்ணினால், அவர் உங்களை எவ்விதத்திலும் கண்டிப்பார்.
11அவருடைய மகத்துவம் உங்களைத் திடுக்கிடப்பண்ணாதோ? அவருடைய பயங்கரம் உங்களைப் பிடிக்கமாட்டாதோ?
12உங்கள் பேரை நினைக்கப்பண்ணும் அடையாளங்கள் சாம்பலுக்குச் சரி; உங்கள் மேட்டிமைகள் சேற்றுக்குவியல்களுக்குச் சமானம்.
13நீங்கள் மவுனமாயிருங்கள், நான் பேசுகிறேன், எனக்கு வருகிறது வரட்டும்.
14நான் என் பற்களினால் என் சதையைப் பிடுங்கி, என் பிராணனை என் கையிலே வைப்பானேன்?
15அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக ரூபகாரம்பண்ணுவேன்.
16அவரே என் இரட்சிப்பு; மாயக்காரனோ அவர் சந்நிதியில் சேரான்.
17என் வசனத்தையும், நான் சொல்லிக் காண்பிக்கிறதையும், உங்கள் செவிகளால் கவனமாய்க் கேளுங்கள்.
18இதோ, என் நியாயங்களை அணியணியாக வைத்தேன்; என் நீதி விளங்கும் என்று அறிவேன்.
19என்னோடே வழக்காடவேண்டுமென்று இருக்கிறவன் யார்? நான் மவுனமாயிருந்தால் ஜீவித்துப்போவேனே.
20இரண்டு காரியங்களை மாத்திரம் எனக்குச் செய்யாதிருப்பீராக; அப்பொழுது உமது முகத்துக்கு முன்பாக ஒளித்துக்கொள்ளாதிருப்பேன்.
21உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும்; உம்முடைய பயங்கரம் என்னைக் கலங்கப்பண்ணாதிருப்பதாக.
22நீர் கூப்பிடும், நான் உத்தரவு கொடுப்பேன்; அல்லது நான் பேசுவேன்; நீர் எனக்கு மறுமொழி சொல்லும்.
23என் அக்கிரமங்களும் பாவங்களும் எத்தனை? என் மீறுதலையும் என்பாவத்தையும் எனக்கு உணர்த்தும்.
24நீர் உமது முகத்தை மறைத்து, என்னை உமக்குப் பகைஞனாக எண்ணுவானேன்?
25காற்றடித்த சருகை நொறுக்குவீரோ? காய்ந்துபோன துரும்பைப் பின்தொடருவீரோ?
26மகா கசப்பான தீர்ப்புகளை என்பேரில் எழுதுகிறீர்; என் சிறுவயதின் அக்கிரமங்களை எனக்குப் பலிக்கப்பண்ணுகிறீர்.
27என் கால்களைத் தொழுவடித்துப்போட்டு, என் வழிகளையெல்லாம் காவல்பண்ணுகிறீர்; என் காலடிகளில் அடையாளத்தைப் போடுகிறீர்.
28இப்படிப்பட்டவன் அழுகிப்போகிற வஸ்துபோலவும், பொட்டரித்த வஸ்திரம் போலவும் அழிந்து போவான்.
1தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனாகிய பவுலும், சகோதரனாகிய சொஸ்தெனேயும்,
2கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது:
3நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
4கிறிஸ்துவைப்பற்றிய சாட்சி உங்களுக்குள்ளே ஸ்திரப்படுத்தப்பட்டபடியே,
5நீங்கள் இயேசுகிறிஸ்துவுக்குள்ளாய் எல்லா உபதேசத்திலும் எல்லா அறிவிலும், மற்றெல்லாவற்றிலும், சம்பூரணமுள்ளவர்களாக்கப்பட்டிருக்கிறபடியால்,
6அவர் மூலமாய் உங்களுக்கு அளிக்கப்பட்ட தேவகிருபைக்காக, நான் உங்களைக்குறித்து எப்பொழுதும் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
7அப்படியே நீங்கள் யாதொரு வரத்திலும் குறைவில்லாதவர்களாய், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படுவதற்குக் காத்திருக்கிறீர்கள்.
8நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி முடிவுபரியந்தம் அவர் உங்களை ஸ்திரப்படுத்துவார்.
9தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்.
10சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
11ஏனெனில், என் சகோதரரே, உங்களுக்குள்ளே வாக்குவாதங்கள் உண்டென்று குலோவேயாளின் வீட்டாரால் உங்களைக்குறித்து எனக்கு அறிவிக்கப்பட்டது.
12உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன்.
13கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா? பவுலா உங்களுக்காகச் சிலுவையிலறையப்பட்டான்? பவுலின் நாமத்தினாலேயா ஞானஸ்நானம் பெற்றீர்கள்?
14என் நாமத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தேனென்று ஒருவனும் சொல்லாதபடிக்கு,
15நான் கிறிஸ்புவுக்கும் காயுவுக்குமேயன்றி, உங்களில் வேறொருவனுக்கும் ஞானஸ்நானங் கொடுக்கவில்லை; இதற்காக தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
16ஸ்தேவானுடைய வீட்டாருக்கும் நான் ஞானஸ்நானங்கொடுத்ததுண்டு. இதுவுமல்லாமல் இன்னும் யாருக்காவது நான் ஞானஸ்நானங்கொடுத்தேனோ இல்லையோ அறியேன்.
17ஞானஸ்நானத்தைக் கொடுக்கும்படி கிறிஸ்து என்னை அனுப்பவில்லை; சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவே அனுப்பினார்; கிறிஸ்துவின் சிலுவை வீணாய்ப் போகாதபடிக்கு, சாதுரிய ஞானமில்லாமல் பிரசங்கிக்கவே அனுப்பினார்.
18சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.
19அந்தப்படி: ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேன் என்று எழுதியிருக்கிறது.
20ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா?
21எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று.
22யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள்;
23நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமாயும் இருக்கிறார்.
24ஆகிலும் யூதரானாலும் கிரேக்கரானாலும் எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்குக் கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாயிருக்கிறார்.
25இந்தப்படி, தேவனுடைய பைத்தியம் என்னப்படுவது மனுஷருடைய ஞானத்திலும் அதிக ஞானமாயிருக்கிறது; தேவனுடைய பலவீனம் என்னப்படுவது மனுஷருடைய பலத்திலும் அதிக பலமாயிருக்கிறது.
26எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை.
27ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.
28உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்.
29மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார்.
30அந்தப்படி, நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டிருக்கிறீர்கள். எழுதியிருக்கிறபடி, மேன்மை பாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டத்தக்கதாக,
31அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com