‹ முகப்புமுழுத் திட்டம்

பிப்ரவரி 13 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்பிப்ரவரி 13அடுத்த நாள் ›
குடும்பம்

ஆதியாகமம் 46

முழு அதிகாரம் ›

1இஸ்ரவேல் தனக்கு உண்டான யாவையும் சேர்த்துக்கொண்டு புறப்பட்டுப் பெயெர்செபாவுக்குப் போய், தன் தகப்பனாகிய ஈசாக்குடைய தேவனுக்குப் பலியிட்டான்.

2அன்று இரவிலே தேவன் இஸ்ரவேலுக்குத் தரிசனமாகி: யாக்கோபே, யாக்கோபே என்று கூப்பிட்டார்; அவன் இதோ, அடியேன் என்றான்.

3அப்பொழுது அவர்: நான் தேவன், நான் உன் தகப்பனுடைய தேவன்; நீ எகிப்துதேசத்துக்குப்போகப் பயப்படவேண்டாம்; அங்கே உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன்.

4நான் உன்னுடனே எகிப்துக்கு வருவேன்; நான் உன்னைத் திரும்பவும் வரப்பண்ணுவேன்; யோசேப்பு தன் கையால் உன் கண்களை மூடுவான் என்று சொன்னார்.

5அதற்குப்பின்பு, யாக்கோபு பெயெர்செபாவிலிருந்து பிரயாணம் புறப்பட்டான். இஸ்ரவேலின் குமாரர் தங்கள் தகப்பனாகிய யாக்கோபையும் தங்கள் குழந்தைகளையும் தங்கள் மனைவிகளையும் பார்வோன் அனுப்பின வண்டிகளின்மேல் ஏற்றிக்கொண்டு,

6தங்கள் ஆடுமாடுகளையும் தாங்கள் கானான் தேசத்தில் சம்பாதித்த தங்கள் பொருட்களையும் சேர்த்துக்கொண்டு, யாக்கோபும் அவன் சந்ததியார் யாவரும் எகிப்துக்குப் போனார்கள்.

7அவன் தன் குமாரரையும் தன் குமாரரின் குமாரரையும் தன் குமாரத்திகளையும் தன் குமாரரின் குமாரத்திகளையும் தன் சந்ததியார் அனைவரையும் எகிப்துக்குத் தன்னோடே அழைத்துக்கொண்டுபோனான்.

8எகிப்துக்கு வந்த இஸ்ரவேலரின் நாமங்களாவன: யாக்கோபும் அவனுடைய குமாரரும்; யாக்கோபுடைய மூத்தகுமாரனான ரூபன்.

9ரூபனுடைய குமாரர் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ என்பவர்கள்.

10சிமியோனுடைய குமாரர் எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சொகார், கானானிய ஸ்திரீயின் குமாரனாகிய சவுல் என்பவர்கள்.

11லேவியினுடைய குமாரர் கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.

12யூதாவினுடைய குமாரர் ஏர், ஓனான், சேலா, பாரேஸ், சேரா என்பவர்கள்; அவர்களில் ஏரும் ஓனானும் கானான்தேசத்தில் இறந்துபோனார்கள்; பாரேசுடைய குமாரர் எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.

13இசக்காருடைய குமாரர் தோலா, பூவா, யோபு, சிம்ரோன் என்பவர்கள்.

14செபுலோனுடைய குமாரர் செரேத், ஏலோன், யக்லேல் என்பவர்கள்.

15இவர்கள் லேயாளின் சந்ததியார்; அவள் இவர்களையும் தீனாள் என்னும் ஒரு குமாரத்தியையும் பதான் அராமிலே யாக்கோபுக்குப் பெற்றாள்; அவன் குமாரரும் அவன் குமாரத்திகளுமாகிய எல்லாரும் முப்பத்துமூன்றுபேர்.

16காத்துடைய குமாரர், சிப்பியோன், அகி, சூனி, எஸ்போன், ஏரி, அரோதி, அரேலி என்பவர்கள்.

17ஆசேருடைய குமாரர் இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா என்பவர்கள்; இவர்களுடைய சகோதரி செராக்கு என்பவள்; பெரீயாவின் குமாரர் ஏபேர், மல்கியேல் என்பவர்கள்.

18இவர்கள் லாபான் தன் குமாரத்தியாகிய வேயாளுக்குக் கொடுத்த சில்பாளுடைய பிள்ளைகள்; அவள் இந்தப் பதினாறுபேரையும் யாக்கோபுக்குப் பெற்றாள்.

19யாக்கோபின் மனைவியாகிய ராகேலுடைய குமாரர் யோசேப்பு, பென்யமீன் என்பவர்கள்.

20யோசேப்புக்கு எகிப்துதேசத்திலே மனாசேயும் எப்பிராயீமும் பிறந்தார்கள்; அவர்களை ஓன்பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத் அவனுக்குப் பெற்றாள்.

21பென்யமீனுடைய குமாரர் பேலா, பெகேர், அஸ்பேல், கேரா, நாகமான், ஏகி, ரோஷ், முப்பிம், உப்பிம், ஆர்து என்பவர்கள்.

22ராகேல் யாக்கோபுக்குப் பெற்ற குமாரராகிய இவர்கள் எல்லாரும் பதினாலுபேர்.

23தாணுடைய குமாரன் உசீம் என்பவன்.

24நப்தலியின் குமாரர் யாத்சியேல், கூனி, எத்செர், சில்லேம் என்பவர்கள்.

25இவர்கள் லாபான் தன் குமாரத்தியாகிய ராகேலுக்குக் கொடுத்த பில்காள் யாக்கோபுக்குப் பெற்றவர்கள்; இவர்கள் எல்லாரும் ஏழுபேர்.

26யாக்கோபுடைய குமாரரின் மனைவிகளைத் தவிர, அவனுடைய கர்ப்பப்பிறப்பாயிருந்து அவன் மூலமாய் எகிப்திலே வந்தவர்கள் எல்லாரும் அறுபத்தாறுபேர்.

27யோசேப்புக்கு எகிப்திலே பிறந்த குமாரர் இரண்டுபேர்; ஆக எகிப்துக்குப் போன யாக்கோபின் குடும்பத்தார் எழுபதுபேர்.

28கோசேன் நாட்டிலே தன்னை யோசேப்பு சந்திக்க வரும்படி சொல்ல, யூதாவைத் தனக்கு முன்னாக அவனிடத்தில் யாக்கோபு அனுப்பினான்; அவர்கள் கோசேனிலே சேர்ந்தார்கள்.

29யோசேப்பு தன் இரதத்தை ஆயத்தப்படுத்தி, அதின்மேல் ஏறி, தன் தகப்பனாகிய இஸ்ரவேலைச் சந்திக்கும்படி போய், அவனைக் கண்டு, அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு, வெகுநேரம் அவன் கழுத்தை விடாமல் அழுதான்.

30அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பைப் பார்த்து: நீ இன்னும் உயிரோடிருக்கிறாயே, நான் உன் முகத்தைக் கண்டேன், எனக்கு இப்போது மரணம் வந்தாலும் வரட்டும் என்றான்.

31பின்பு, யோசேப்பு தன் சகோதரரையும் தன் தகப்பனுடைய குடும்பத்தாரையும் நோக்கி: நான் பார்வோனிடத்துக்குப் போய், கானான்தேசத்திலிருந்து என் சகோதரரும் என் தகப்பன் குடும்பத்தாரும் என்னிடத்தில் வந்திருக்கிறார்கள்.

32அவர்கள் மேய்ப்பர்கள், ஆடுமாடுகளை மேய்க்கிறது அவர்கள் தொழில்; அவர்கள் தங்கள் ஆடுமாடுகளையும் தங்களுக்கு உண்டான எல்லாவற்றையும் கொண்டுவந்தார்கள் என்று அவருக்குச் சொல்லுகிறேன்.

33பார்வோன் உங்களை அழைத்து, உங்கள் தொழில் என்ன என்று கேட்டால்,

34நீங்கள், கோசேன் நாட்டிலே குடியிருக்கும்படி, அவனை நோக்கி: எங்கள் பிதாக்களைப்போல, உமது அடியாராகிய நாங்களும் எங்கள் சிறுவயதுமுதல் இதுவரைக்கும் மேய்ப்பர்களாயிருக்கிறோம் என்று சொல்லுங்கள்; மேய்ப்பர்கள் எல்லாரும் எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கிறார்கள் என்றான்.

1ஓய்வுநாளானபின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக்கொண்டு.

2வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிறபோது கல்லறையினிடத்தில் வந்து,

3கல்லறையின் வாசலிலிருக்கிற கல்லை நமக்காக எவன் புரட்டித்தள்ளுவான் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

4அந்தக் கல் மிகவும் பெரிதாயிருந்தது; அவர்கள் ஏறிட்டுப்பார்க்கிறபோது, அது தள்ளப்பட்டிருக்கக் கண்டார்கள்.

5அவர்கள் கல்லறைக்குள் பிரவேசித்து, வெள்ளையங்கி தரித்தவனாய் வலதுபக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபனைக் கண்டு பயந்தார்கள்.

6அவன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார்; அவர் இங்கேயில்லை; இதோ, அவரை வைத்த இடம்.

7நீங்கள் அவருடைய சீஷரிடத்திற்கும் பேதுருவினிடத்திற்கும் போய்: உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார், அவர் உங்களுக்குச் சொன்னபடியே அங்கே அவரைக் காண்பீர்கள் என்று, அவர்களுக்குச் சொல்லுங்கள் என்றான்.

8நடுக்கமும் திகிலும் அவர்களைப் பிடித்தபடியால், அவர்கள் சீக்கிரமாய் வெளியே வந்து, கல்லறையை விட்டு ஓடினார்கள்; அவர்கள் பயந்திருந்தபடியினால் ஒருவருக்கும் ஒன்றும் சொல்லாமற்போனார்கள்.

9வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார்.

10அவளிடத்திலிருந்து அவர் ஏழு பிசாசுகளைத் துரத்தியிருந்தார். அவள் புறப்பட்டு, அவரோடேகூட இருந்தவர்கள் துக்கப்பட்டு அழுதுகொண்டிருக்கையில், அவர்களிடத்தில் போய், அந்தச் செய்தியை அறிவித்தாள்.

11அவர் உயிரோடிருக்கிறாரென்றும் அவளுக்குக் காணப்பட்டார் என்றும் அவர்கள் கேட்டபொழுது நம்பவில்லை.

12அதன்பின்பு அவர்களில் இரண்டுபேர் ஒரு கிராமத்துக்கு நடந்துபோகிறபொழுது அவர்களுக்கு மறுரூபமாய்த் தரிசனமானார்.

13அவர்களும் போய், அதை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்களையும் அவர்கள் நம்பவில்லை.

14அதன்பின்பு பதினொருவரும் போஜனபந்தியிலிருக்கையில் அவர்களுக்கு அவர் தரிசனமாகி, உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமற்போனதினிமித்தம் அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்தும் இருதய கடினத்தைக்குறித்தும் அவர்களைக் கடிந்துகொண்டார்.

15பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.

16விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.

17விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;

18சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.

19இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசினபின்பு, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார்.

20அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென்.

தனிவாசிப்பு

1யோபு பிரதியுத்தரமாக:

2ஆம், நீங்களே ஞானமுள்ள ஜனங்கள்; உங்களுடனே ஞானம் சாகும்.

3உங்களைப்போல எனக்கும் புத்தியுண்டு; உங்களிலும் நான் தாழ்ந்தவன் அல்ல; இப்படிப்பட்டவைகளை அறியாதவன் யார்?

4என் சிநேகிதரால் நான் நிந்திக்கப்பட்டு, தேவனை நோக்கிப் பிரார்த்திப்பேன்; அவர் எனக்கு மறு உத்தரவு அருளுவார்; உத்தமனாகிய நீதிமான் பரியாசம்பண்ணப்படுகிறான்.

5ஆபத்துக்குள்ளானவன் சுகமாயிருக்கிறவனுடைய நினைவில் இகழ்ச்சியடைகிறான்; காலிடறினவர்களுக்கு இது நேரிடும்.

6கள்ளருடைய கூடாரங்களில் செல்வமுண்டு; தேவனைக் கோபப்படுத்துகிறவர்களுக்குச் சாங்கோபாங்கமுண்டு; அவர்கள் கையிலே தேவன் கொண்டுவந்து கொடுக்கிறார்.

7இப்போதும் நீ மிருகங்களைக் கேட்டுப்பார், அவைகள் உனக்குப் போதிக்கும் ஆகாயத்துப் பறவைகளைக் கேள், அவைகள் உனக்கு அறிவிக்கும்.

8அல்லது பூமியை விசாரித்துக் கேள், அது உனக்கு உபதேசிக்கும்; சமுத்திரத்தின் மச்சங்களைக் கேள், அவைகள் உனக்கு விவரிக்கும்.

9கர்த்தருடைய கரம் இதைச் செய்ததென்று இவைகளெல்லாவற்றினாலும் அறியாதவன் யார்?

10சகல பிராணிகளின் ஜீவனும், மாம்சமான சகல மனுஷரின் ஆவியும் அவர் கையிலிருக்கிறது.

11வாயானது போஜனத்தை ருசிபார்க்கிறதுபோல, செவியானது வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கிறதல்லவா?

12முதியோரிடத்தில் ஞானமும் வயது சென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே.

13அவரிடத்தில் ஞானமும் வல்லமையும் எத்தனை அதிகமாய் இருக்கும்? அவருக்குத்தான் ஆலோசனையும் புத்தியும் உண்டு.

14இதோ, அவர் இடித்தால் கட்டமுடியாது; அவர் மனுஷனை அடைத்தால் விடுவிக்கமுடியாது.

15இதோ, அவர் தண்ணீர்களை அடக்கினால் எல்லாம் உலர்ந்துபோம்; அவர் அவைகளை வரவிட்டால், பூமியைக் கீழதுமேலதாக்கும்.

16அவரிடத்தில் பெலனும் ஞானமுமுண்டு; மோசம் போகிறவனும் மோசம் போக்குகிறவனும், அவர் கையின் கீழிருக்கிறார்கள்.

17அவர் ஆலோசனைக்காரரைச் சிறைபிடித்து, நியாயாதிபதிகளை மதிமயக்குகிறார்.

18அவர் ராஜாக்களுடைய கட்டுகளை அவிழ்த்து, அவர்கள் இடுப்புகளைக் கச்சைகட்டுகிறார்.

19அவர் மந்திரிகளைச் சிறைபிடித்துக்கொண்டுபோய், பெலவான்களைக் கவிழ்த்துப்போடுகிறார்.

20அவர் நம்பிக்கையுள்ளவர்களுடைய வாக்கை விலக்கி, முதிர்வயதுள்ளவர்களின் ஆலோசனையை வாங்கிப்போடுகிறார்.

21அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சி வரப்பண்ணுகிறார்; பலவான்களின் கச்சையைத் தளர்ந்துபோகப்பண்ணுகிறார்.

22அவர் அந்தகாரத்திலிருக்கிற ஆழங்களை வெளியரங்கமாக்கி, மரண இருளை வெளிச்சத்தில் கொண்டுவருகிறார்.

23அவர் ஜாதிகளைப் பெருகவும் அழியவும்பண்ணுகிறார்; அவர் ஜாதிகளைப் பரவவும் குறுகவும் பண்ணுகிறார்.

24அவர் பூமியிலுள்ள ஜனத்தினுடைய அதிபதிகளின் நெஞ்சை அகற்றிப்போட்டு, அவர்களை வழியில்லாத அந்தரத்திலே அலையப்பண்ணுகிறார்.

25அவர்கள் வெளிச்சமற்ற இருளிலே தடவித்திரிகிறார்கள்; வெறித்தவர்களைப்போல அவர்களைத் தடுமாறித் திரியப்பண்ணுகிறார்.

1கெங்கிரேயா ஊர் சபைக்கு ஊழியக்காரியாகிய நம்முடைய சகோதரி பெபேயாளை நீங்கள் கர்த்தருக்குள் பரிசுத்தவான்களுக்கேற்றபடி ஏற்றுக்கொண்டு,

2எந்தக் காரியத்தில் உங்கள் உதவி அவளுக்குத் தேவையாயிருக்கிறதோ அதிலே நீங்கள் அவளுக்கு உதவிசெய்யவேண்டுமென்று அவளை உங்களிடத்தில் ஒப்புவிக்கிறேன்; அவள் அநேகருக்கும் எனக்குங்கூட ஆதரவாயிருந்தவள்.

3கிறிஸ்து இயேசுவுக்குள் என் உடன் வேலையாட்களாகிய பிரிஸ்கில்லாளையும் ஆக்கில்லாவையும் வாழ்த்துங்கள்.

4அவர்கள் என் பிராணனுக்காகத் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள்; அவர்களைப்பற்றி நான் மாத்திரமல்ல, புறஜாதியாரில் உண்டான சபையாரெல்லாரும் நன்றியறிதலுள்ளவர்களாயிருக்கிறார்கள்.

5அவர்களுடைய வீட்டிலே கூடிவருகிற சபையையும் வாழ்த்துங்கள். அகாயாவிலே கிறிஸ்துவுக்கு முதற்பலனாகிய என் பிரியமான எப்பனெத்தை வாழ்த்துங்கள்.

6எங்களுக்காக மிகவும் பிரயாசப்பட்ட மரியாளை வாழ்த்துங்கள்.

7அப்போஸ்தலருக்குள் பெயர்பெற்றவர்களும் எனக்கு முந்திக் கிறிஸ்துவுக்குள்ளானவர்களும் என் இனத்தாரும் என்னுடனேகூடக் காவலில் கட்டுண்டவர்களுமாயிருக்கிற அன்றோனீக்கையும் யூனியாவையும் வாழ்த்துங்கள்.

8கர்த்தருக்குள் எனக்குப் பிரியமான அம்பிலியாவை வாழ்த்துங்கள்.

9கிறிஸ்துவுக்குள் நம்மோடே உடன்வேலையாளாகிய உர்பானையும், என் பிரியமான ஸ்தாக்கியையும் வாழ்த்துங்கள்.

10கிறிஸ்துவுக்குள் உத்தமனாகிய அப்பெல்லேயை வாழ்த்துங்கள். அரிஸ்தொபூலுவின் வீட்டாரை வாழ்த்துங்கள்.

11என் இனத்தானாகிய ஏரோதியோனை வாழ்த்துங்கள். நர்கீசுவின் வீட்டாரில் கர்த்தருக்குட்பட்டவர்களை வாழ்த்துங்கள்.

12கர்த்தருக்குள் பிரயாசப்படுகிற திரிபேனாளையும் திரிபோசாளையும் வாழ்த்துங்கள். கர்த்தருக்குள் மிகவும் பிரயாசப்பட்ட பிரியமான பெர்சியாளை வாழ்த்துங்கள்.

13கர்த்தருக்குள் தெரிந்துகொள்ளப்பட்ட ரூபையும், எனக்கும் தாயாகிய அவனுடைய தாயையும் வாழ்த்துங்கள்.

14அசிங்கிரீத்துவையும், பிலெகோனையும், எர்மாவையும், பத்திரொபாவையும், எர்மேயையும், அவர்களோடிருக்கிற சகோதரரையும் வாழ்த்துங்கள்.

15பிலொலோகையும், யூலியாளையும், நேரேயையும், அவனுடைய சகோதரியையும், ஒலிம்பாவையும், அவர்களோடிருக்கிற பரிசுத்தவான்களெல்லாரையும் வாழ்த்துங்கள்.

16ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள். கிறிஸ்துவின் சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள்.

17அன்றியும் சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன்.

18அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்து, நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும், கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள்.

19உங்கள் கீழ்ப்படிதல் யாவருக்கும் தெரியவந்திருக்கிறது. ஆகையால் உங்களைக்குறித்துச் சந்தோஷப்படுகிறேன்; ஆனாலும் நீங்கள் நன்மைக்கு ஞானிகளும் தீமைக்குப் பேதைகளுமாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறேன்.

20சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.

21என் உடன்வேலையாளாகிய தீமோத்தேயும், என் இனத்தாராகிய லூகியும், யாசோனும், சொசிபத்தரும் உங்களை வாழ்த்துகிறார்கள்.

22இந்த நிருபத்தை எழுதின தெர்தியுவாகிய நான் கர்த்தருக்குள் உங்களை வாழ்த்துகிறேன்.

23என்னையும் சபையனைத்தையும் உபசரித்துவருகிற காயு உங்களை வாழ்த்துகிறான். பட்டணத்து உக்கிராணக்காரனாகிய ஏரஸ்தும், சகோதரனாகிய குவர்த்தும் உங்களை வாழ்த்துகிறார்கள்.

24நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

25ஆதிகாலமுதல் அடக்கமாயிருந்து, இப்பொழுது தீர்க்கதரிசன ஆகமங்களினாலே அநாதி தேவனுடைய கட்டளையின்படி வெளியரங்கமாக்கப்பட்டதும், சகல ஜாதிகளும் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியும்படிக்கு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுமாயிருக்கிற இரகசியத்தை வெளிப்படுத்துகிறதான,

26இயேசுகிறிஸ்துவைப்பற்றிய பிரசங்கமாகிய என் சுவிசேஷத்தின்படியே உங்களை ஸ்திரப்படுத்த வல்லவரும்,

27தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாயிருக்கிற தேவனுக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com