‹ முகப்புமுழுத் திட்டம்

பிப்ரவரி 2 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்பிப்ரவரி 2அடுத்த நாள் ›
குடும்பம்

ஆதியாகமம் 34

முழு அதிகாரம் ›

1லேயாள் யாக்கோபுக்குப் பெற்ற குமாரத்தியாகிய தீனாள் தேசத்துப் பெண்களைப் பார்க்கப் புறப்பட்டாள்.

2அவளை ஏவியனான ஏமோரின் குமாரனும் அத்தேசத்தின் பிரபுவுமாகிய சீகேம் என்பவன் கண்டு, அவளைக் கொண்டுபோய், அவளோடே சயனித்து, அவளைத் தீட்டுப்படுத்தினான்.

3அவனுடைய மனம் யாக்கோபின் குமாரத்தி.யாகிய தீனாள்மேல் பற்றுதலாயிருந்தது; அவன் அந்தப் பெண்ணை நேசித்து, அந்தப் பெண்ணின் மனதுக்கு இன்பமாய்ப் பேசினான்.

4சீகேம் தன் தகப்பனாகிய ஏமோரை நோக்கி: இந்தப் பெண்ணை எனக்குக் கொள்ளவேண்டும் என்று சொன்னான்.

5தன் குமாரத்தியாகிய தீனாளை அவன் தீட்டுப்படுத்தினதை யாக்கோபு கேள்விப்பட்டபோது, அவன் குமாரர் அவனுடைய மந்தையினிடத்தில் வெளியிலே இருந்தார்கள்; அவர்கள் வருமளவும் யாக்கோபு பேசாமலிருந்தான்.

6அத்தருணத்தில் சீகேமின் தகப்பனாகிய ஏமோர் புறப்பட்டு, யாக்கோபோடே பேசும்படி அவனிடத்தில் வந்தான்.

7யாக்கோபின் குமாரர் இந்தச் செய்தியைக் கேட்டவுடனே, வெளியிலிருந்து வந்தார்கள். அவன் யாக்கோபின் குமாரத்தியோடே சயனித்து, செய்யத்தகாத மதிகெட்ட காரியத்தை இஸ்ரவேலில் செய்ததினாலே, அந்த மனிதர் மனங்கொதித்து மிகவும் கோபங்கொண்டார்கள்.

8ஏமோர் அவர்களோடே பேசி: என் குமாரனாகிய சீகேமின் மனது உங்கள் குமாரத்தியின்மேல் பற்றுதலாயிருக்கிறது; அவளை அவனுக்கு மனைவியாகக் கொடுங்கள்.

9நீங்கள் எங்களோடே சம்பந்தங்கலந்து, உங்கள் குமாரத்திகளை எங்களுக்குக் கொடுத்து, எங்கள் குமாரத்திகளை உங்களுக்குக் கொண்டு,

10எங்களோடே வாசம்பண்ணுங்கள்; தேசம் உங்கள் முன்பாக இருக்கிறது; இதிலே குடியிருந்து, வியாபாரம்பண்ணி, பொருள் சம்பாதித்து, அதைக் கையாண்டுகொண்டிருங்கள் என்றான்.

11சீகேமும் அவள் தகப்பனையும் அவள் சகோதரனையும் நோக்கி: உங்கள் கண்களில் எனக்குத் தயவு கிடைக்கவேண்டும்; நீங்கள் என்னிடத்தில் எதைக் கேட்டாலும் தருகிறேன்;

12பரிசமும் வெகுமதியும் நீங்கள் எவ்வளவு கேட்டாலும், உங்கள் சொற்படி தருகிறேன்; அந்தப் பெண்ணைமாத்திரம் எனக்கு மனைவியாகக் கொடுக்கவேண்டும் என்றான்.

13அப்பொழுது யாக்கோபின் குமாரர் தங்கள் சகோதரியாகிய தீனாளைச் சீகேம் என்பவன் தீட்டுப்படுத்தினபடியால், அவனுக்கும் அவன் தகப்பனாகிய ஏமோருக்கும் வஞ்சகமான மறுமொழியாக:

14விருத்தசேதனமில்லாத புருஷனுக்கு நாங்கள் எங்கள் சகோதரியைக் கொடுக்கலாகாது; அது எங்களுக்கு நிந்தையாயிருக்கும்.

15நீங்களும், உங்களுக்குள்ளிருக்கும் ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம்பண்ணப்பட்டு எங்களைப்போலாவீர்களானால், நாங்கள் சம்மதித்து,

16உங்களுக்கு எங்கள் குமாரத்திகளைக் கொடுத்து, உங்கள் குமாரத்திகளை எங்களுக்குக் கொண்டு, உங்களோடே குடியிருந்து, ஏகஜனமாயிருப்போம்.

17விருத்தசேதனம்பண்ணிக்கொள்வதற்கு எங்கள் சொல் கேளாமற்போவீர்களானால், நாங்கள் எங்கள் குமாரத்தியை அழைத்துக்கொண்டு போய்விடுவோம் என்று சொன்னார்கள்.

18அவர்களுடைய வார்த்தைகள் ஏமோருக்கும் ஏமோரின் குமாரனாகிய சீகேமுக்கும் நலமாய்த் தோன்றினது.

19அந்த வாலிபன் யாக்கோபுடைய குமாரத்தியின்மேல் பிரியம் வைத்திருந்தபடியால், அந்தக் காரியத்தைச் செய்ய அவன் தாமதம்பண்ணவில்லை. அவன் தன் தகப்பன் வீட்டார் அனைவருக்குள்ளும் மேன்மையுள்ளவனாயிருந்தான்.

20ஏமோரும் அவன் குமாரன் சீகேமும் தங்கள் பட்டணத்து வாசலில் வந்து, தங்கள் பட்டணத்து மனிதரோடே பேசி:

21இந்த மனிதர் நம்மோடே சமாதானமாயிருக்கிறார்கள்; ஆகையால், அவர்கள் இந்தத் தேசத்தில் வாசம்பண்ணி, இதிலே வியாபாரம்பண்ணட்டும்; அவர்களும் வாசம்பண்ணுகிறதற்கு தேசம் விஸ்தாரமாயிருக்கிறது; அவர்களுடைய குமாரத்திகளை நமக்கு மனைவிகளாகக் கொண்டு, நம்முடைய குமாரத்திகளை அவர்களுக்குக் கொடுப்போம்.

22அந்த மனிதர் விருத்தசேதனம்பண்ணப்பட்டவர்களாயிருக்கிறது போல, நம்மிலுள்ள ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம்பண்ணப்பட்டால், அவர்கள் ஏகஜனமாக நம்மோடே வாசம்பண்ணச் சம்மதிப்பார்கள்.

23அவர்களுடைய ஆடுமாடுகள் ஆஸ்திகள் மிருகஜீவன்கள் எல்லாம் நம்மைச் சேருமல்லவா? அவர்களுக்குச் சம்மதிப்போமானால், அவர்கள் நம்முடனே வாசம்பண்ணுவார்கள் என்று சொன்னார்கள்.

24அப்பொழுது ஏமோரின் பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் அனைவரும் அவன் சொல்லையும், அவன் குமாரனாகிய சீகேமின் சொல்லையும் கேட்டு, அவனுடைய பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம்பண்ணப்பட்டார்கள்.

25மூன்றாம் நாளில் அவர்களுக்கு நோவெடுத்துக்கொண்டபோது, யாக்கோபின் குமாரரும் தீனாளின் சகோதரருமான சிமியோன் லேவி என்னும் இவ்விரண்டு பேரும் தன்தன் பட்டயத்தை எடுத்துக்கொண்டு, துணிகரமாய்ப் பட்டணத்தின் மேல் பாய்ந்து, ஆண்மக்கள் யாவரையும் கொன்றுபோட்டார்கள்.

26ஏமோரையும், அவன் குமாரன் சீகேமையும் பட்டயக்கருக்காலே கொன்று, சீகேமின் வீட்டிலிருந்த தீனாளை அழைத்துக்கொண்டு போய்விட்டார்கள்.

27மேலும், யாக்கோபின் குமாரர் வெட்டுண்டவர்களிடத்தில் வந்து, தங்கள் சகோதரியை அவர்கள் தீட்டுப்படுத்தினதற்காகப் பட்டணத்தைக் கொள்ளையிட்டு,

28அவர்களுடைய ஆடுமாடுகளையும், கழுதைகளையும், பட்டணத்திலும் வயல்வெளியிலும் இருந்தவைகள் யாவையும்,

29அவர்களுடைய எல்லாத் தட்டுமுட்டுகளையும் எடுத்துக்கொண்டு, அவர்களுடைய எல்லாக் குழந்தைகளையும் ஸ்திரீகளையும் சிறைபிடித்து, வீட்டிலிருந்த எல்லாவற்றையும் கொள்ளையிட்டார்கள்.

30அப்பொழுது யாக்கோபு சிமியோனையும் லேவியையும் பார்த்து: இந்தத் தேசத்தில் குடியிருக்கிற கானானியரிடத்திலும் பெரிசியரிடத்திலும் என் வாசனையை நீங்கள் கெடுத்ததினாலே என்னைக் கலங்கப்பண்ணினீர்கள்; நான் கொஞ்ச ஜனமுள்ளவன்; அவர்கள் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, நானும் என் குடும்பமும் அழியும்படி என்னை வெட்டிப்போடுவார்களே என்றான்.

31அதற்கு அவர்கள்: எங்கள் சகோதரியை அவர்கள் ஒரு வேசியைப்போல நடத்தலாமோ என்றார்கள்.

1பின்பு அவர்கள் கடலுக்கு அக்கரையிலுள்ள கதரேனருடைய நாட்டில் வந்தார்கள்.

2அவர் படவிலிருந்து இறங்கினவுடனே, அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் பிரேதக்கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிராக வந்தான்.

3அவனுடைய குடியிருப்பு கல்லறைகளிலே இருந்தது; அவனைச் சங்கிலிகளினாலும் கட்ட ஒருவனாலும் கூடாதிருந்தது.

4அவன் அநேகந்தரம் விலங்குகளினாலும் சங்கிலிகளினாலும் கட்டப்பட்டிருந்தும், சங்கிலிகளை முறித்து, விலங்குகளைத் தகர்த்துப்போடுவான்; அவனையடக்க ஒருவனாலும் கூடாதிருந்தது.

5அவன் எப்பொழுதும் இரவும் பகலும், மலைகளிலும் கல்லறைகளிலும் இருந்து, கூக்குரலிட்டு, கல்லுகளினாலே தன்னைக் காயப்படுத்திக்கொண்டிருந்தான்.

6அவன் இயேசுவைத் தூரத்திலே கண்டபோது, ஓடிவந்து, அவரைப்பணிந்துகொண்டு:

7இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு தேவன்பேரில் உமக்கு ஆணையென்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான்.

8ஏனெனில் அவர் அவனை நோக்கி: அசுத்த ஆவியே, இந்த மனுஷனை விட்டுப் புறப்பட்டுப் போ என்று சொல்லியிருந்தார்.

9அப்பொழுது அவர் அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார். அதற்கு அவன்: நாங்கள் அநேகராயிருக்கிறபடியால் என் பேர் லேகியோன் என்று சொல்லி,

10தங்களை அந்தத் திசையிலிருந்து துரத்திவிடாதபடிக்கு அவரை மிகவும் வேண்டிக்கொண்டான்.

11அப்பொழுது, அவ்விடத்தில் மலையருகே அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தது.

12அந்தப் பிசாசுகளெல்லாம் அவரை நோக்கி: பன்றிகளுக்குள்ளே போகும்படி, அவைகளுக்குள்ளே எங்களை அனுப்பும் என்று அவரை வேண்டிக்கொண்டன.

13இயேசு அவைகளுக்கு உத்தரவு கொடுத்தவுடனே, அசுத்த ஆவிகள் புறப்பட்டுப் பன்றிகளுக்குள் போயின; உடனே ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகளுள்ள அந்தக் கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து ஓடி, கடலிலே பாய்ந்து, கடலில் அமிழ்ந்து மாண்டன.

14பன்றிகளை மேய்த்தவர்கள் ஓடி, இதைப் பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள். அப்பொழுது சம்பவித்ததைப் பார்க்கும்படி ஜனங்கள் புறப்பட்டு;

15இயேசுவினிடத்தில் வந்து, லேகியோனாகிய பிசாசுகள் பிடித்திருந்தவன் வஸ்திரந்தரித்து, உட்கார்ந்து, புத்தி தெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள்.

16பிசாசுகள் பிடித்திருந்தவனுக்கும் பன்றிகளுக்கும் சம்பவித்ததைக் கண்டவர்களும் அவர்களுக்கு விவரமாய்ச் சொன்னார்கள்.

17அப்பொழுது தங்கள் எல்லைகளை விட்டுப்போகும்படி அவரை வேண்டிக்கொள்ளத் தொடங்கினார்கள்.

18அப்படியே அவர் படவில் ஏறுகிறபொழுது, பிசாசு பிடித்திருந்தவன், அவரோடேகூட இருக்கும்படி தனக்கு உத்தரவுகொடுக்க அவரை வேண்டிக்கொண்டான்.

19இயேசு அவனுக்கு உத்தரவுகொடாமல்: நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற்குப்போய், கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவியென்று சொன்னார்.

20அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் தெக்கப்போலி என்னும் நாட்டில் பிரசித்தம்பண்ணத்தொடங்கினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.

21இயேசு படவில் ஏறி மறுபடியும் இக்கரைக்கு வந்து, கடலோரத்திலிருந்தபோது, திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தார்கள்.

22அப்பொழுது, ஜெபஆலயத்தலைவரில் ஒருவனாகிய யவீரு என்பவன் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்திலே விழுந்து:

23என் குமாரத்தி மரணஅவஸ்தைப்படுகிறாள், அவள் ஆரோக்கியம் அடையும்படிக்கு நீர் வந்து, அவள்மேல் உமது கைகளை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்று அவரை மிகவும் வேண்டிக்கொண்டான்.

24அவர் அவனோடேகூடப் போனார். திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்று, அவரை நெருக்கினார்கள்.

25அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ,

26அநேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு உண்டானவைகளையெல்லாம் செலவழித்தும், சற்றாகிலும் குணமடையாமல் அதிக வருத்தப்படுகிறபொழுது,

27இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டு: நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று சொல்லி;

28ஜனக்கூட்டத்துக்குள்ளே அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள்.

29உடனே அவளுடைய உதிரத்தின் ஊறல் நின்றுபோயிற்று; அந்த வேதனை நீங்கி ஆரோக்கியமடைந்ததை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள்.

30உடனே இயேசு தம்மிலிருந்து வல்லமை புறப்பட்டதைத் தமக்குள் அறிந்து, ஜனக்கூட்டத்துக்குள்ளே திரும்பி: என் வஸ்திரங்களைத் தொட்டது யார் என்று கேட்டார்.

31அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: திரளான ஜனங்கள் உம்மை நெருக்கிக்கொண்டிருக்கிறதை நீர் கண்டும், என்னைத் தொட்டது யார் என்று கேட்கிறீரே என்றார்கள்.

32இதைச் செய்தவளைக் காணும்படிக்கு அவர் சுற்றிலும் பார்த்தார்.

33தன்னிடத்திலே சம்பவித்ததை அறிந்த அந்த ஸ்திரீயானவள் பயந்து, நடுங்கி, அவர் முன்பாக வந்து விழுந்து, உண்மையையெல்லாம் அவருக்குச் சொன்னாள்.

34அவர் அவளைப் பார்த்து: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்.

35அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து சிலர் வந்து: உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், இனி ஏன் போதகரை வருத்தப்படுத்துகிறீர் என்றார்கள்.

36அவர்கள் சொன்ன வார்த்தையை இயேசு கேட்டவுடனே, ஜெபஆலயத்தலைவனை நோக்கி: பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு என்று சொல்லி;

37பேதுருவையும், யாக்கோபையும், யாக்கோபின் சகோதரன் யோவானையும் தவிர, வேறொருவரும் தம்மோடே வருகிறதற்கு இடங்கொடாமல்;

38ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலே வந்து, சந்தடியையும் மிகவும் அழுது புலம்புகிறவர்களையும் கண்டு,

39உள்ளே பிரவேசித்து: நீங்கள் சந்தடிபண்ணி அழுகிறதென்ன? பிள்ளை மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார்.

40அதற்காக அவரைப்பார்த்து நகைத்தார்கள். எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, பிள்ளையின் தகப்பனையும் தாயையும் தம்மோடே வந்தவர்களையும் அழைத்துக்கொண்டு, பிள்ளையிருந்த இடத்தில் பிரவேசித்து,

41பிள்ளையின் கையைப் பிடித்து: தலீத்தாகூமி என்றார்; அதற்கு, சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தமாம்.

42உடனே சிறுபெண் எழுந்து நடந்தாள்; அவள் பன்னிரண்டு வயதுள்ளவளாயிருந்தாள். அவர்கள் மிகுந்த ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள்.

43அதை ஒருவருக்கும் அறிவியாதபடி அவர்களுக்கு உறுதியாகக் கட்டளையிட்டு, அவளுக்கு ஆகாரம் கொடுக்கும்படி சொன்னார்.

தனிவாசிப்பு

1ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்; அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.

2அவனுக்கு ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் பிறந்தார்கள்.

3அவனுக்கு ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர்மாடுகளும், ஐந்நூறு கழுதைகளுமாகிய மிருகஜீவன்கள் இருந்ததுமன்றி, திரளான பணிவிடைக்காரரும் இருந்தார்கள்; அதினால் அந்த மனுஷன் கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான்.

4அவன் குமாரர், அவனவன் தன்தன் நாளிலே தன்தன் வீட்டிலே விருந்துசெய்து, தங்கள் மூன்று சகோதரிகளையும் தங்களோடே போஜனம்பண்ணும்படி அழைப்பார்கள்.

5விருந்துசெய்கிற அவரவருடைய நாள்முறை முடிகிறபோது, யோபு: ஒருவேளை என் குமாரர் பாவஞ்செய்து, தேவனைத் தங்கள் இருதயத்திலே தூஷித்திருப்பார்கள் என்று சொல்லி, அவர்களை அழைத்தனுப்பி, பரிசுத்தப்படுத்தி, அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படியேயும் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துவான்; இந்தப்பிரகாரமாக யோபு அந்நாட்களிலெல்லாம் செய்துவருவான்.

6ஒருநாள் தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான்.

7கர்த்தர் சாத்தானைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார். சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான்.

8கர்த்தர் சாத்தானை நோக்கி: என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார்.

9அதற்குச் சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்?

10நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர்; அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று.

11ஆனாலும் உம்முடைய கையை நீட்டி அவனுக்கு உண்டானவையெல்லாம் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும் என்றான்.

12கர்த்தர் சாத்தானை நோக்கி: இதோ, அவனுக்கு உண்டானவையெல்லாம் உன் கையிலிருக்கிறது; அவன்மேல் மாத்திரம் உன் கையை நீட்டாதே என்றார்; அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டுப்போனான்.

13பின்பு ஒருநாள் யோபுடைய குமாரரும், அவன் குமாரத்திகளும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே புசித்து, திராட்சரசம் குடிக்கிறபோது,

14ஒரு ஆள் அவனிடத்தில் வந்து: எருதுகள் உழுகிறபோது, கழுதைகள் அவைகளின் பக்கத்திலே மேய்ந்து கொண்டிருக்கையில்,

15சபேயர் அவைகள்மேல் விழுந்து, அவைகளைச் சாய்த்துக்கொண்டுபோனார்கள்; வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.

16இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: வானத்திலிருந்து தேவனுடைய அக்கினி விழுந்து, ஆடுகளையும் வேலையாட்களையும் சுட்டெரித்துப்போட்டது; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.

17இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: கல்தேயர் மூன்று பவுஞ்சாய் வந்து, ஒட்டகங்கள்மேல் விழுந்து, அவைகளை ஓட்டிக்கொண்டுபோனார்கள், வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.

18இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: உம்முடைய குமாரரும் உம்முடைய குமாரத்திகளும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே புசித்துத் திராட்சரசம் குடிக்கிறபோது,

19வனாந்தரவழியாய்ப் பெருங்காற்று வந்து, அந்த வீட்டின் நாலு மூலையிலும் அடிக்க, அது பிள்ளைகளின்மேல் விழுந்ததினால் அவர்கள் இறந்து போனார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.

20அப்பொழுது யோபு எழுந்திருந்து, தன் சால்வையைக் கிழித்து, தன் தலையைச் சிரைத்து, தரையிலே விழுந்து பணிந்து:

21நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாய் அவ்விடத்துக்குத் திரும்புவேன்; கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்றான்.

22இவையெல்லாவற்றிலும் யோபு பாவஞ்செய்யவுமில்லை, தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை.

1இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.

2அவர்மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம்.

3அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து,

4உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம்.

5மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.

6அன்றியும், நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்.

7நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான்.

8நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.

9இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.

10நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.

11அதுவுமல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் நாம் தேவனைப்பற்றியும் மேன்மைபாராட்டுகிறோம்.

12இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.

13நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் பாவம் உலகத்திலிருந்தது; நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது.

14அப்படியிருந்தும், மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது; அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன்.

15ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது.

16மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது.

17அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே.

18ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று.

19அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.

20மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று.

21ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com