‹ முகப்புமுழுத் திட்டம்

பிப்ரவரி 1 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்பிப்ரவரி 1அடுத்த நாள் ›
குடும்பம்

ஆதியாகமம் 33

முழு அதிகாரம் ›

1யாக்கோபு தன் கண்களை ஏறெடுத்து, இதோ, ஏசாவும் அவனோடேகூட நானூறு மனிதரும் வருகிறதைக் கண்டு, பிள்ளைகளை லேயாளிடத்திலும் ராகேலிடத்திலும் இரண்டு பணிவிடைக்காரிகளிடத்திலும் வெவ்வேறாகப் பிரித்துவைத்து,

2பணிவிடைக்காரிகளையும் அவர்கள் பிள்ளைகளையும் முதலிலும், லேயாளையும் அவள் பிள்ளைகளையும் இடையிலும், ராகேலையும் யோசேப்பையும் கடையிலும் நிறுத்தி:

3தான் அவர்களுக்கு முன்னாக நடந்து போய், ஏழுவிசை தரைமட்டும் குனிந்து வணங்கி, தன் சகோதரன் கிட்டச் சேர்ந்தான்.

4அப்பொழுது ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்; இருவரும் அழுதார்கள்.

5அவன் தன் கண்களை ஏறெடுத்து, ஸ்திரீகளையும் பிள்ளைகளையும் கண்டு: உன்னோடிருக்கிற இவர்கள் யார்? என்றான். அதற்கு அவன்: தேவன் உமது அடியானுக்கு அருளின பிள்ளைகள் என்றான்.

6அப்பொழுது பணிவிடைக்காரிகளும் அவர்கள் பிள்ளைகளும் சேர்ந்துவந்து வணங்கினார்கள்.

7லேயாளும் அவள் பிள்ளைகளும் சேர்ந்துவந்து வணங்கினார்கள்; பின்பு யோசேப்பும் ராகேலும் சேர்ந்துவந்து வணங்கினார்கள்.

8அப்பொழுது அவன்: எனக்கு எதிர்கொண்டுவந்த அந்த மந்தையெல்லாம் என்னத்துக்கு என்றான். அதற்கு அவன்: என் ஆண்டவனுடைய கண்களில் எனக்குத் தயவு கிடைக்கிறதற்கு என்றான்.

9அதற்கு ஏசா: என் சகோதரனே, எனக்குப் போதுமானது உண்டு; உன்னுடையது உனக்கு இருக்கட்டும் என்றான்.

10அதற்கு யாக்கோபு: அப்படி அல்ல, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால், என் வெகுமதியை என் கையிலிருந்து ஏற்றுக்கொள்ளும்; நீர் என்மேல் பிரியமானீர், நான் உம்முடைய முகத்தைக் கண்டது தேவனுடைய முகத்தைக் கண்டதுபோல இருக்கிறது.

11தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்; வேண்டியதெல்லாம் எனக்கு உண்டு; ஆகையால் உமக்குக் கொண்டுவரப்பட்ட என் காணிக்கையை ஏற்றுக்கொள்ளும் என்று சொல்லி, அவனை வருந்திக் கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவன் அதை ஏற்றுக்கொண்டான்.

12பின்பு அவன்: நாம் புறப்பட்டுப்போவோம் வா, நான் உனக்கு முன் நடப்பேன் என்றான்.

13அதற்கு அவன்: பிள்ளைகள் இளம்பிள்ளைகள் என்றும், கறவையான ஆடுமாடுகள் என்னிடத்தில் இருக்கிறது என்றும் என் ஆண்டவனுக்குத் தெரியும்; அவைகள் ஒரு நாளாவது துரிதமாய் ஓட்டினால், மந்தையெல்லாம் மாண்டுபோம்.

14என் ஆண்டவனாகிய நீர் உமது அடியானுக்கு முன்னே போம்; நான் சேயீருக்கு என் ஆண்டவனிடத்தில் வருமளவும், எனக்குமுன் நடக்கிற மந்தைகளின் கால்நடைக்கும் பிள்ளைகளின் கால்நடைக்கும் தக்கதாக, மெதுவாய் அவைகளை நடத்திக்கொண்டு வருகிறேன் என்றான்.

15அப்பொழுது ஏசா: என்னிடத்திலிருக்கிற ஜனங்களில் சிலரை நான் உன்னிடத்தில் நிறுத்திவிட்டுப் போகட்டுமா என்றான். அதற்கு அவன்: அது என்னத்திற்கு, என் ஆண்டவனுடைய கண்களில் எனக்குத் தயவுகிடைத்தால் மாத்திரம் போதும் என்றான்.

16அன்றைத்தினம் ஏசா திரும்பித் தான் வந்த வழியே சேயீருக்குப்போனான்.

17யாக்கோபு சுக்கோத்திற்குப் பிரயாணம்பண்ணி, தனக்கு ஒரு வீடு கட்டி, தன் மிருகஜீவன்களுக்குக் கொட்டாரங்களைப் போட்டான்; அதினாலே அந்த ஸ்தலத்துக்குச் சுக்கோத் என்று பேரிட்டான்.

18யாக்கோபு பதான்அராமிலிருந்து வந்தபின் கானான்தேசத்திலிருக்கிற சாலேம் என்னும் சீகேமுடைய பட்டணத்திற்கு அருகே சென்று பட்டணத்திற்கு எதிரே கூடாரம்போட்டான்.

19தான் கூடாரம்போட்ட வெளியின் நிலத்தைச் சீகேமின் தகப்பனாகிய ஏமோரின் புத்திரர் கையிலே நூறு வெள்ளிக்காசுக்குக் கொண்டு,

20அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு ஏல்எல்லோகே இஸ்ரவேல் என்று பேரிட்டான்.

1அவர் மறுபடியும் கடலோரத்திலே போதகம்பண்ணத் தொடங்கினார். திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் கடலிலே நின்ற ஒரு படவில் ஏறி உட்கார்ந்தார்; ஜனங்களெல்லாரும் கடற்கரையில் நின்றார்கள்.

2அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குப் போதித்தார்; போதிக்கிறபொழுது அவர்களுக்குச் சொன்னது:

3கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான்.

4அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.

5சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை நிலத்தில் விழுந்தது; அதற்கு ஆழமான மண்ணில்லாததினாலே சீக்கிரத்தில் முளைத்தது;

6வெயில் ஏறினபோதோ, தீய்ந்துபோய், வேரில்லாமையால் உலர்ந்துபோயிற்று.

7சிலவிதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து, அது பலன் கொடாதபடி, அதை நெருக்கிப்போட்டது.

8சிலவிதை நல்ல நிலத்தில் விழுந்து, ஓங்கிவளருகிற பயிராகி, ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன் தந்தது.

9கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று அவர்களுக்குச் சொன்னார்.

10அவர் தனித்திருக்கிறபோது, பன்னிருவரோடுங்கூட அவரைச் சூழந்திருந்தவர்கள் இந்த உவமையைக் குறித்து அவரிடத்தில் கேட்டார்கள்.

11அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.

12அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார்.

13பின்பு அவர் அவர்களை நோக்கி: இந்த உவமையை நீங்கள் அறியவில்லையா? அறியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படி அறிவீர்கள்?

14விதைக்கிறவன் வசனத்தை விதைக்கிறான்.

15வசனத்தைக் கேட்டவுடனே சாத்தான் வந்து, அவர்கள் இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப்போடுகிறான்; இவர்களே வசனம் விதைக்கப்படுகிற வழியருகானவர்கள்.

16அப்படியே, வசனத்தைக் கேட்டவுடனே அதைச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டும்,

17தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியால், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருக்கிறார்கள், வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைகிறார்கள்; இவர்களே கற்பாறை நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்.

18வசனத்தைக் கேட்டும், உலகக்கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற இச்சைகளும் உட்பிரவேசித்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலனற்றுப்போகிறார்கள்.

19இவர்களே முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள்.

20வசனத்தைக் கேட்டு, ஏற்றுக்கொண்டு, ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன்கொடுக்கிறார்கள்; இவர்களே நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் என்றார்.

21பின்னும் அவர் அவர்களை நோக்கி: விளக்கைத் தண்டின்மேல் வைக்கிறதற்கேயன்றி, மரக்காலின் கீழாகிலும், கட்டிலின் கீழாகிலும், வைக்கிறதற்குக் கொண்டுவருவார்களா?

22வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை, வெளிக்குவராத மறைபொருளுமில்லை.

23கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாயிருந்தால் கேட்கக்கடவன் என்றார்.

24பின்னும் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் கேட்கிறதைக் கவனியுங்கள். எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்; கேட்கிற உங்களுக்கு அதிகம் கொடுக்கப்படும்.

25உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனெவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.

26பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யமானது, ஒரு மனுஷன் நிலத்தில் விதையை விதைத்து;

27இரவில் தூங்கி, பகலில் விழித்திருக்க, அவனுக்குத் தெரியாதவிதமாய், விதை முளைத்துப் பயிராகிறதற்கு ஒப்பாயிருக்கிறது.

28எப்படியென்றால், நிலமானது முன்பு முளையையும், பின்பு கதிரையும், கதிரிலே நிறைந்த தானியத்தையும் பலனாகத் தானாய்க் கொடுக்கும்.

29பயிர் விளைந்து அறுப்புக்காலம் வந்தவுடனே, அறுக்கிறதற்கு ஆட்களை அனுப்புகிறான் என்றார்.

30பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம்? அல்லது எந்த உவமையினாலே அதைத் திருஷ்டாந்தப்படுத்துவோம்?

31அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது; அது பூமியில் விதைக்கப்படும்போது பூமியிலுள்ள சகல விதைகளிலும் சிறியதாயிருக்கிறது;

32விதைக்கப்பட்ட பின்போ, அது வளர்ந்து, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதினுடைய நிழலின்கீழ் வந்தடையத்தக்க பெரிய கிளைகளை விடும் என்றார்.

33அவர்கள் கேட்டறியும் திராணிக்குத்தக்கதாக, அவர் இப்படிப்பட்ட அநேக உவமைகளினாலே அவர்களுக்கு வசனத்தைச் சொன்னார்.

34உவமைகளினாலேயன்றி அவர்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை; அவர் தம்முடைய சீஷரோடே தனித்திருக்கும்போது, அவர்களுக்கு எல்லாவற்றையும் விவரித்துச்சொன்னார்.

35அன்று சாயங்காலத்தில், அவர் அவர்களை நோக்கி: அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்.

36அவர்கள் ஜனங்களை அனுப்பிவிட்டு, அவர் படவிலிருந்தபடியே அவரைக்கொண்டுபோனார்கள். வேறே படவுகளும் அவரோடேகூட இருந்தது.

37அப்பொழுது பலத்த சுழல்காற்று உண்டாகி, படவு நிரம்பத்தக்கதாக, அலைகள் அதின்மேல் மோதிற்று.

38கப்பலின் பின்னணியத்தில் அவர் தலையணையைவைத்து நித்திரையாயிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக்கவலையில்லையா என்றார்கள்.

39அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல்உண்டாயிற்று.

40அவர் அவர்களை நோக்கி: ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று என்றார்.

41அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

தனிவாசிப்பு
எஸ்தர் 9

1ராஜாவின் வார்த்தையின்படியும் அவனுடைய கட்டளையின்படியும் செய்யப்படுகிறதற்கு, ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந்தேதியிலே, யூதரின் பகைஞர் அவர்களை மேற்கொள்ளலாம் என்று நம்பினார்களே; அந்நாளிலேதானே, யூதரானவர்கள் தங்கள் பகைஞரை மேற்கொள்ளும்படிக்குக் காரியம் மாறுதலாய் முடிந்தது.

2யூதர் அகாஸ்வேரு ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள பட்டணங்களிலே தங்களுக்குப் பொல்லாப்பு வரப்பண்ணப்பார்த்தவர்கள்மேல் கைபோடக் கூடிக்கொண்டார்கள்; ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்கக்கூடாதிருந்தது; அவர்களைப்பற்றி சகல ஜனங்களுக்கும் பயமுண்டாயிற்று.

3நாடுகளின் சகல அதிகாரிகளும், தேசாதிபதிகளும், துரைகளும், ராஜாவின் காரியங்களை நடப்பிக்கிறவர்களும், யூதருக்குத் துணைநின்றார்கள்; மொர்தெகாயினால் உண்டான பயங்கரம் அவர்களைப் பிடித்தது.

4மொர்தெகாய் ராஜாவின் அரமனையில் பெரியவனாயிருந்தான்; அவனுடைய கீர்த்தி எல்லா நாடுகளிலும் பிரசித்தமாயிற்று; இந்த மொர்தெகாய் என்பவன் மேன்மேலும் பெரியவனானான்.

5அப்படியே யூதர் தங்கள் சத்துருக்களையெல்லாம் பட்டயத்தால் வெட்டிக்கொன்று நிர்மூலமாக்கி, தங்கள் இஷ்டப்படி தங்கள் பகைஞருக்குச் செய்தார்கள்.

6யூதர் சூசான் அரமனையிலும் ஐந்நூறுபேரைக் கொன்று நிர்மூலமாக்கினார்கள்.

7அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் யூதருடைய சத்துருவின் குமாரரான பர்சான்தாத்தா, தல்போன், அஸ்பாதா,

8பொராதா, அதலியா, அரிதாத்தா,

9பர்மஷ்டா, அரிசாய், அரிதாய், வாய்சாதா ஆகிய பத்துப்பேரையும் கொன்றுபோட்டார்கள்.

10ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை.

11அன்றையதினம் சூசான் அரமனையில் கொன்றுபோடப்பட்டவர்களின் தொகை ராஜசமுகத்தில் கொண்டுவரப்பட்டது.

12அப்பொழுது ராஜா, ராஜாத்தியாகிய எஸ்தரை நோக்கி: யூதர் சூசான் அரமனையில் ஐந்நூறுபேரையும் ஆமானின் பத்துக் குமாரரையும் கொன்று நிர்மூலமாக்கினார்கள்; ராஜாவின் மற்ற நாடுகளிலும் என்ன செய்திருப்பார்களோ! இப்போதும் உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கட்டளையிடப்படும்; உன் மன்றாட்டு என்ன? அதின்படி செய்யப்படும் என்றான்.

13அப்பொழுது எஸ்தர்: ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், இன்றையதினத்துக் கட்டளையின்படியே சூசானிலிருக்கிற யூதர் நாளையதினமும் செய்யவும், ஆமானின் பத்துக் குமாரரின் உடலையும் தூக்குமரத்தில் தூக்கிப்போடவும் உத்தரவாக வேண்டும் என்றாள்.

14அப்படியே செய்யும்படிக்கு ராஜா உத்தரவு கொடுத்தான்; அதற்குச் சூசானிலே கட்டளை பிறந்தது; ஆமானின் பத்துக் குமாரருடைய உடலையும் தூக்கிப்போட்டார்கள்.

15சூசானிலிருக்கிற யூதர் ஆதார் மாதத்தின் பதினாலாந்தேதியிலும் கூடிச்சேர்ந்து, சூசானில் முந்நூறுபேரைக் கொன்றுபோட்டார்கள்; ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை.

16ராஜாவின் நாடுகளிலுள்ள மற்ற யூதர்கள் தங்கள் பிராணனைத் தற்காக்கவும், தங்கள் பகைஞருக்கு விலகி இளைப்பாறுதல் அடையவும் ஒருமிக்கச் சேர்ந்து, தங்கள் விரோதிகளில் எழுபத்தையாயிரம்பேரைக் கொன்றுபோட்டார்கள்; ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை.

17ஆதார் மாதத்தின் பதின்மூன்றாந்தேதியிலே இப்படிச் செய்து, பதினாலாந்தேதியிலே இளைப்பாறி, அதை விருந்துண்டு சந்தோஷப்படுகிற பண்டிகை நாளாக்கினார்கள்.

18சூசானிலுள்ள யூதரோவென்றால், அந்த மாதத்தின் பதின்மூன்றாந்தேதியிலும் பதினாலாந்தேதியிலும் ஏகமாய்க்கூடி, பதினைந்தாந்தேதியில் இளைப்பாறி, அதை விருந்துண்டு சந்தோஷப்படுகிற பண்டிகை நாளாக்கினார்கள்.

19ஆதலால் அலங்கமில்லாத ஊர்களில் குடியிருக்கிற நாட்டுப்புறத்தாரான யூதர்கள் ஆதார் மாதத்தின் பதினாலாந்தேதியைச் சந்தோஷமும், விருந்துண்கிற பூரிப்புமான நாளும், ஒருவருக்கொருவர் வரிசைகளை அனுப்புகிற நாளுமாக்கினார்கள்.

20மொர்தெகாய் இந்த வர்த்தமானங்களை எழுதி, சமீபத்திலும் தூரத்திலும் இருக்கிற அகாஸ்வேரு ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள எல்லா யூதருக்கும் நிருபங்களை அனுப்பி,

21வருஷந்தோறும் ஆதார் மாதத்தின் பதினாலாம் பதினைந்தாந்தேதிகளை, யூதர் தங்கள் பகைஞருக்கு நீங்கலாகி இளைப்பாறுதல் அடைந்த நாட்களாகவும், அவர்கள் சஞ்சலம் சந்தோஷமாகவும், அவர்கள் துக்கம் மகிழ்ச்சியாகவும் மாறின மாதமாகவும் ஆசரித்து,

22அந்நாட்களில் விருந்துண்டு சந்தோஷங்கொண்டாடவும், ஒருவருக்கொருவர் வரிசைகளை அனுப்பவும், எளியவர்களுக்குத் தானதர்மஞ்செய்யவும் வேண்டுமென்று திட்டம்பண்ணினான்.

23அப்பொழுது யூதர் தாங்கள் செய்யத்தொடங்கினபடியும் மொர்தெகாய் தங்களுக்கு எழுதினபடியும் செய்யச் சம்மதித்தார்கள்.

24அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியன், யூதருக்கெல்லாம் சத்துருவாயிருந்து யூதரைச் சங்கரிக்க நினைத்து, அவர்களை அழிக்கவும் நிர்மூலமாக்கவும், பூர் என்னப்பட்ட சீட்டைப் போடுவித்தான்.

25ஆனாலும் எஸ்தர், ராஜசமுகத்தில் போய், யூதருக்கு விரோதமாய் அவன் நினைத்த அவனுடைய பொல்லாத யோசனை அவனுடைய தலையின்மேல் திரும்பும்படி கட்டளை பிறப்பித்ததினாலே, அவனையும் அவன் குமாரரையும் மரத்திலே தூக்கிப்போட்டார்கள்.

26ஆகையினால் அந்த நாட்கள் பூர் என்னும் பேரினால் பூரீம் என்னப்பட்டது; அவன் அந்த நிருபத்தில் எழுதியிருந்த எல்லா வார்த்தைகளினிமித்தமும், தாங்களே இந்த விஷயத்தில் அநுபவித்தவைகளினிமித்தமும், தங்களுக்கு நேரிட்டவைகளினிமித்தமும்,

27யூதர் அதைத் திட்டப்படுத்தி, அந்த இரண்டு நாட்களைக்குறித்து எழுதியிருக்கிறபடியே, அவைகளை வருஷந்தோறும், அவைகளின் சரியான காலத்திலே ஆசரியாமலிருப்பதில்லை என்பதையும்,

28இந்த நாட்கள் எல்லாத் தலைமுறைகளிலும், வம்சங்களிலும், தேசங்களிலும், ஊர்களிலும் நினைவுகூரப்பட்டு ஆசரிக்கப்படவேண்டும் என்பதையும், இந்தப் பூரீம் என்னும் பண்டிகை நாட்கள் யூதருக்குள்ளே தவறிப்போகாமலும், அவைகளை நினைவுகூருதல் தங்கள் சந்ததியாருக்குள்ளே ஒழிந்துபோகாமலும் இருக்கவேண்டும் என்பதையும், தங்கள்மேலும், தங்கள் சந்ததியார்மேலும், தங்கள் மார்க்கத்தில் அமையப்போகிற மற்ற யாவர்மேலும் கடனாக நியமித்துக் கொண்டார்கள்.

29பூரிமைக்குறித்து எழுதியிருக்கிற இந்த இரண்டாம் நிருபத்தைத் திடப்படுத்தும்படிக்கு, அபியாயேலின் குமாரத்தியாகிய எஸ்தர் என்னும் ராஜாத்தியும், யூதனாகிய மொர்தெகாயும், பின்னும் மகா உறுதியாய் எழுதினார்கள்.

30யூதனாகிய மொர்தெகாயும், ராஜாத்தியாகிய எஸ்தரும் யூதருக்கு உறுதிப்பாடுபண்ணினதும், அவர்கள்தானே உபவாசத்தோடும் அலறுதலோடும் ஆசரிப்போம் என்று தங்கள்மேலும் தங்கள் சந்ததியார்மேலும் கடனாக நியமித்துக்கொண்டதுமான, பூரீம் என்னப்பட்ட இந்த நாட்கள் அவைகளின் சரியான காலங்களில் ஆசரிக்கப்படும் காரியத்தை உறுதியாக்க,

31அவன் அகாஸ்வேருவின் ராஜ்யத்திலுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளிலும் இருக்கிற எல்லா யூதருக்கும் சமாதானமும் உண்மையுமான வார்த்தைகளையுடைய நிருபங்களை அனுப்பினான்.

32இப்படியே எஸ்தரின் கட்டளையானது பூரீம் நாட்களைப்பற்றின இந்த வர்த்தமானங்களைத் திடப்படுத்தினது; அது ஒரு புஸ்தகத்தில் எழுதப்பட்டது.

எஸ்தர் 10

1ராஜாவாகிய அகாஸ்வேரு தேசத்தின்மேலும், சமுத்திரத்திலுள்ள தீவுகளின்மேலும், பகுதி ஏற்படுத்தினான்.

2வல்லமையும் பராக்கிரமமுமான அவனுடைய எல்லாச் செய்கைகளும், ராஜா பெரியவனாக்கின மொர்தெகாயினுடைய மேன்மையின் விர்த்தாந்தமும், மேதியா பெர்சியா ராஜாக்களின் நடபடி புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

3யூதனாகிய மொர்தெகாய் ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு இரண்டாவதானவனும், யூதருக்குள் பெரியவனும், தன் திரளான சகோதரருக்குப் பிரியமானவனுமாயிருந்ததும் அன்றி தன் ஜனங்களுடைய நன்மையை நாடி, தன் குலத்தாருக்கெல்லாம் சமாதானமுண்டாகப் பேசுகிறவனுமாயிருந்தான்.

1அப்படியானால், நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் மாம்சத்தின்படி என்னத்தைக் கண்டடைந்தான் என்று சொல்லுவோம்?

2ஆபிரகாம் கிரியைகளினாலே நீதிமானாக்கப்பட்டானாகில் மேன்மைபாராட்ட அவனுக்கு ஏதுவுண்டு; ஆகிலும் தேவனுக்குமுன்பாக மேன்மைபாராட்ட ஏதுவில்லை.

3வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது.

4கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபையென்றெண்ணப்படாமல், கடனென்றெண்ணப்படும்.

5ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.

6அந்தப்படி, கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற மனுஷனுடைய பாக்கியத்தைக் காண்பிக்கும்பொருட்டு:

7எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.

8எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான் என்று தாவீது சொல்லியிருக்கிறான்.

9இந்தப் பாக்கியம் விருத்தசேதனமுள்ளவனுக்குமாத்திரம் வருமோ, விருத்தசேதனமில்லாதவனுக்கும் வருமோ? ஆபிரகாமுக்கு விசுவாசம் நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறோமே.

10அது எப்பொழுது அவனுக்கு அப்படி எண்ணப்பட்டது? அவன் விருத்தசேதனமுள்ளவனாயிருந்த போதோ, விருத்தசேதனமில்லாதவனாயிருந்தபோதோ? விருத்தசேதனமுள்ளவனாயிருந்தபோதல்ல, விருத்தசேதனமில்லாதவனாயிருந்தபோதே.

11மேலும், விருத்தசேதனமில்லாத காலத்தில் அவன் விசுவாசத்தினாலே அடைந்த நீதிக்கு முத்திரையாக விருத்தசேதனமாகிய அடையாளத்தைப் பெற்றான். விருத்தசேதனமில்லாதவர்களாய் விசுவாசிக்கிற யாவருக்கும் நீதி எண்ணப்படும்பொருட்டாக அவர்களுக்கு அவன் தகப்பனாயிருக்கும்படிக்கும்,

12விருத்தசேதனத்தைப் பெற்றவர்களாய்மாத்திரமல்ல, நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் விருத்தசேதனமில்லாத காலத்தில் அடைந்த விசுவாசமாகிய அடிச்சுவடுகளில் நடக்கிறவர்களாயுமிருக்கிறவர்களுக்குத் தகப்பனாயிருக்கும்படிக்கும், அந்த அடையாளத்தைப் பெற்றான்.

13அன்றியும், உலகத்தைச் சுதந்தரிப்பான் என்கிற வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்காவது அவன் சந்ததிக்காவது நியாயப்பிரமாணத்தினால் கிடையாமல் விசுவாசத்தினால் வருகிற நீதியினால் கிடைத்தது.

14நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்கள் சுதந்தரவாளிகளானால் விசுவாசம் வீணாய்ப்போகும், வாக்குத்தத்தமும் அவமாகும்.

15மேலும் நியாயப்பிரமாணம் கோபாக்கினையை உண்டாக்குகிறது, நியாயப்பிரமாணமில்லாவிட்டால் மீறுதலுமில்லை.

16ஆதலால், சுதந்தரமானது கிருபையினால் உண்டாகிறதாயிருக்கும்படிக்கு அது விசுவாசத்தினாலே வருகிறது; நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்களாகிய சந்ததியாருக்குமாத்திரமல்ல, நம்மெல்லாருக்கும் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சார்ந்தவர்களான எல்லாச் சந்ததியாருக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாயிருக்கும்படிக்கு அப்படி வருகிறது.

17அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று எழுதியிருக்கிறபடி, அவன் தான் விசுவாசித்தவருமாய், மரித்தோரை உயிர்ப்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு முன்பாக நம்மெல்லாருக்கும் தகப்பனானான்.

18உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே, தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்.

19அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான்.

20தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல்,

21தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்.

22ஆகையால் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.

23அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டதென்பது, அவனுக்காகமாத்திரமல்ல, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது.

24நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும்.

25அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com