‹ முகப்புமுழுத் திட்டம்

பிப்ரவரி 22 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்பிப்ரவரி 22அடுத்த நாள் ›
குடும்பம்

யாத்திராகமம் 5

முழு அதிகாரம் ›

1பின்பு, மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய்: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் வனாந்திரத்திலே எனக்குப் பண்டிகை கொண்டாடும்படி என் ஜனங்களைப் போகவிடவேண்டும் என்று சொல்லுகிறார் என்றார்கள்.

2அதற்குப் பார்வோன்: நான் இஸ்ரவேலைப் போகவிடக் கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்? நான் கர்த்தரை அறியேன்; நான் இஸ்ரவேலைப் போகவிடுவதில்லை என்றான்.

3அப்பொழுது அவர்கள்: எபிரெயருடைய தேவன் எங்களைச் சந்தித்தார்; நாங்கள் வனாந்தரத்தில் மூன்றுநாள் பிரயாணம் போய், எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படி போகவிடவேண்டும்; போகாதிருந்தால், அவர் கொள்ளைநோயும் பட்டயமும் எங்கள் மேல் வரப்பண்ணுவார் என்றார்கள்.

4எகிப்தின் ராஜா அவர்களை நோக்கி: மோசேயும் ஆரோனுமாகிய நீங்கள் ஜனங்களைத் தங்கள் வேலைகளை விட்டுக் கலையப்பண்ணுகிறது என்ன? உங்கள் சுமைகளைச் சுமக்கப்போங்கள் என்றான்.

5பின்னும் பார்வோன்: இதோ, தேசத்தில் ஜனங்கள் மிகுதியாயிருக்கிறார்கள்; அவர்கள் சுமை சுமக்கிறதை விட்டு ஓய்ந்திருக்கும்படி செய்கிறீர்களே என்றான்.

6அன்றியும், அந்நாளிலே பார்வோன் ஜனங்களின் ஆளோட்டிகளையும் அவர்கள் தலைவரையும் நோக்கி:

7செங்கல் வேலைக்கு நீங்கள் முன்போல இனி ஜனங்களுக்கு வைக்கோல் கொடுக்கவேண்டாம்; அவர்கள் தாங்களே போய்த் தங்களுக்கு வைக்கோல் சேர்க்கட்டும்.

8அவர்கள் முன் செய்துகொடுத்த கணக்கின்படியே செங்கல் செய்யும்படி சொல்லுங்கள்; அதிலே நீங்கள் ஒன்றும் குறைக்கவேண்டாம், அவர்கள் சோம்பலாயிருக்கிறார்கள்; அதினால் நாங்கள் போய் எங்கள் தேவனுக்குப் பலியிடுவோம் என்று கூக்குரலிடுகிறார்கள்.

9அந்த மனிதர்மேல் முன்னிலும் அதிக வேலையைச் சுமத்துங்கள், அதில் அவர்கள் கஷ்டப்படட்டும்; வீண்வார்த்தைகளுக்கு அவர்கள் செவிகொடுக்கவிடாதிருங்கள் என்று கட்டளையிட்டான்.

10அப்பொழுது ஜனங்களின் ஆளோட்டிகளும் அவர்கள் தலைவர்களும் புறப்பட்டுப்போய் ஜனங்களை நோக்கி: உங்களுக்கு வைக்கோல் கொடுப்பதில்லை;

11நீங்களே போய் உங்களுக்கு அகப்படுகிற இடங்களில் வைக்கோல் சம்பாதியுங்கள்; ஆனாலும் உங்கள் வேலையில் ஒன்றும் குறைக்கப்படுவதில்லை என்று பார்வோன் சொல்லுகிறார் என்றார்கள்.

12அப்பொழுது வைக்கோலுக்குப் பதிலாகத் தாளடிகளைச் சேர்க்கும்படி ஜனங்கள் எகிப்துதேசம் எங்கும் சிதறிப்போனார்கள்.

13ஆளோட்டிகள் அவர்களை நோக்கி: வைக்கோலிருந்த நாளில் செய்தபடியே உங்கள் வேலைகளை ஒவ்வொரு நாளிலும் செய்து முடியுங்கள் என்று சொல்லி, அவர்களைத் துரிதப்படுத்தினார்கள்.

14பார்வோனுடைய ஆளோட்டிகள் இஸ்ரவேல் புத்திரர்மேல் வைத்த அவர்களுடைய தலைவர்களை நோக்கி: செங்கல் வேலையில் நீங்கள் முன்செய்ததுபோல நேற்றும் இன்றும் ஏன் செய்யவில்லை என்று கேட்டு, அவர்களை அடித்தார்கள்.

15அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரின் தலைவர் பார்வோனிடத்தில் போய்ச் சத்தமிட்டு: உமது அடியாருக்கு நீர் இப்படிச் செய்கிறது என்ன?

16உமது அடியாருக்கு வைக்கோல் கொடாதிருந்தும், செங்கல் அறுத்துத் தீரவேண்டும் என்று எங்களுக்குச் சொல்லுகிறார்கள்; உம்முடைய ஜனங்களிடத்தில் குற்றம் இருக்க, உமது அடியாராகிய நாங்கள் அடிக்கப்படுகிறோம் என்றார்கள்.

17அதற்கு அவன்: நீங்கள் சோம்பலாயிருக்கிறீர்கள், சோம்பலாயிருக்கிறீர்கள்; அதினால்தான் போகவேண்டும், கர்த்தருக்குப் பலியிடவேண்டும் என்கிறீர்கள்.

18போய், வேலை செய்யுங்கள், உங்களுக்கு வைக்கோல் கொடுக்கப்படுவதில்லை; ஆனாலும் கணக்கின்படியே நீங்கள் செங்கலை ஒப்புவிக்கவேண்டும் என்றான்.

19நீங்கள் ஒவ்வொரு நாளிலும் அறுத்துத் தீரவேண்டிய செங்கலிலே ஒன்றும் குறைக்கப்படாது என்று சொல்லப்பட்டதினாலே, இஸ்ரவேல் புத்திரரின் தலைவர் தங்களுக்கு இக்கட்டு வந்தது என்று கண்டார்கள்.

20அவர்கள் பார்வோனுடைய சமுகத்தை விட்டுப் புறப்படுகையில், வழியில் நின்ற மோசேக்கும் ஆரோனுக்கும் எதிர்ப்பட்டு,

21அவர்களை நோக்கி: நீங்கள் பார்வோனின் கண்களுக்கு முன்பாகவும் அவருடைய ஊழியக்காரரின் கண்களுக்கு முன்பாகவும் எங்கள் வாசனையைக்கெடுத்து, எங்களைக் கொல்லும்படி அவர்கள் கையிலே பட்டயத்தைக் கொடுத்ததினிமித்தம், கர்த்தர் உங்களைப் பார்த்து நியாயந்தீர்க்கக்கடவர் என்றார்கள்.

22அப்பொழுது மோசே கர்த்தரிடத்தில் திரும்பிப்போய்: ஆண்டவரே, இந்த ஜனங்களுக்குத் தீங்குவரப்பண்ணினதென்ன? ஏன் என்னை அனுப்பினீர்?

23நான் உமது நாமத்தைக்கொண்டு பேசும்படி பார்வோனிடத்தில் பிரவேசித்தது முதல் அவன் இந்த ஜனங்களை உபத்திரவப்படுத்துகிறான்; நீர் உம்முடைய ஜனங்களை விடுதலையாக்கவில்லையே என்றான்.

1பின்பு, அவர் பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் பிரயாணம்பண்ணி, தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைக் கூறிப் பிரசங்கித்துவந்தார். பன்னிருவரும் அவருடனேகூட இருந்தார்கள்.

2அவர் பொல்லாத ஆவிகளையும் வியாதிகளையும் நீக்கிக் குணமாக்கின சில ஸ்திரீகளும், ஏழு பிசாசுகள் நீங்கின மகதலேனாள் என்னப்பட்ட மரியாளும்,

3ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்துகொண்டுவந்த மற்ற அநேகம் ஸ்திரீகளும் அவருடனே இருந்தார்கள்.

4சகல பட்டணங்களிலுமிருந்து திரளான ஜனங்கள் அவரிடத்தில் வந்து கூடினபோது, அவர் உவமையாகச் சொன்னது:

5விதைக்கிறவன் ஒருவன் விதையை விதைக்கப் புறப்பட்டான்; அவன் விதைக்கையில் சில விதை வழியருகே விழுந்து மிதியுண்டது, ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.

6சில விதை கற்பாறையின்மேல் விழுந்தது; அது முளைத்தபின் அதற்கு ஈரமில்லாததினால் உலர்ந்துபோயிற்று.

7சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் கூடவளர்ந்து, அதை நெருக்கிப்போட்டது.

8சில விதை நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார். இவைகளைச் சொல்லி, கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று சத்தமிட்டுக் கூறினார்.

9அப்பொழுது அவருடைய சீஷர்கள், இந்த உவமையின் கருத்து என்னவென்று அவரிடத்தில் கேட்டார்கள்.

10அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; மற்றவர்களுக்கோ, அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கத்தக்கதாக, அவைகள் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.

11அந்த உவமையின் கருத்தாவது: விதை தேவனுடைய வசனம்.

12வழியருகே விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடிக்குப் பிசாசானவன் வந்து, அவ்வசனத்தை அவர்கள் இருதயத்திலிருந்து எடுத்துப்போடுகிறான்.

13கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள் கேட்கும்போது, சந்தோஷத்துடனே வசனத்தை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்; ஆயினும் தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியினாலே, கொஞ்சக்காலமாத்திரம் விசுவாசித்து, சோதனைகாலத்தில் பின்வாங்கிப்போகிறார்கள்.

14முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; கேட்டவுடனே போய், பிரபஞ்சத்திற்குரிய கவலைகளினாலும் ஐசுவரியத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன்கொடாதிருக்கிறார்கள்.

15நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக்கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்.

16ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, அதை ஒரு பாத்திரத்தினாலே மூடவுமாட்டான், கட்டிலின்கீழே வைக்கவுமாட்டான்; உள்ளே பிரவேசிக்கிறவர்கள் அதின் வெளிச்சத்தைக் காணும்படிக்கு அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான்.

17வெளியரங்கமாகாத இரகசியமுமில்லை, அறியப்பட்டு வெளிக்குவராத மறைபொருளுமில்லை.

18ஆதலால் நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்துக் கவனியுங்கள்; உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனெவனோ அவன் தனக்குண்டென்று நினைக்கிறதும் அவனிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.

19அப்பொழுது அவருடைய தாயாரும் சகோதரரும் அவரிடத்தில் வந்தார்கள்; ஜனக்கூட்டத்தினாலே அவரண்டையில் அவர்கள் சேரக்கூடாதிருந்தது.

20அப்பொழுது: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மைப் பார்க்கவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்று அவருக்கு அறிவித்தார்கள்.

21அதற்கு அவர்: தேவனுடைய வசனத்தைக் கேட்டு, அதின்படி செய்கிறவர்களே எனக்குத் தாயும் எனக்குச் சகோதரருமாயிருக்கிறார்கள் என்றார்.

22பின்பு ஒருநாள் அவர் தமது சீஷரோடுங்கூடப் படவில் ஏறி: கடலின் அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்; அப்படியே புறப்பட்டுப்போனார்கள்.

23படவு ஓடுகையில் அவர் நித்திரையாயிருந்தார். அப்பொழுது கடலிலே சுழல் காற்றுண்டானதால், அவர்கள் மோசமடையத்தக்கதாய்ப் படவு ஜலத்தினால் நிறைந்தது.

24அவர்கள் அவரிடத்தில் வந்து, ஐயரே, ஐயரே, மடிந்து போகிறோம் என்று அவரை எழுப்பினார்கள்; அவர் எழுந்து, காற்றையும் ஜலத்தின் கொந்தளிப்பையும் அதட்டினார்; உடனே அவைகள் நின்றுபோய்,, அமைதலுண்டாயிற்று.

25அவர் அவர்களை நோக்கி: உங்கள் விசுவாசம் எங்கே என்றார். அவர்கள் பயந்து ஆச்சரியப்பட்டு: இவர் யாரோ, காற்றுக்கும் ஜலத்துக்கும் கட்டளையிடுகிறார், அவைகளும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

26பின்பு கலிலேயாவுக்கு எதிரான கதரேனருடைய நாட்டில் சேர்ந்தார்கள்.

27அவர் கரையிலிறங்கினபோது, நெடுநாளாய்ப் பிசாசுகள் பிடித்தவனும், வஸ்திரந்தரியாதவனும், வீட்டில் தங்காமல் பிரேதக் கல்லறைகளிலே தங்கினவனுமாயிருந்த அந்தப் பட்டணத்து மனுஷன் ஒருவன் அவருக்கு எதிராகவந்தான்.

28அவன் இயேசுவைக் கண்டபோது கூக்குரலிட்டு, அவருக்கு முன்பாக விழுந்து: இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்று மகா சத்தத்தோடே சொன்னான்.

29அந்த அசுத்த ஆவி அவனை விட்டுப்போகும்படி இயேசு கட்டளையிட்டபடியினாலே அப்படிச் சொன்னான். அந்த அசுத்த ஆவி வெகுகாலமாய் அவனைப் பிடித்திருந்தது; அவன் சங்கிலிகளினாலும் விலங்குகளினாலும் கட்டுண்டு காவல்பண்ணப்பட்டிருந்தும் கட்டுகளை முறித்துப்போட்டுப் பிசாசினால் வனாந்தரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான்.

30இயேசு அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார்; அதற்கு அவன்: லேகியோன் என்றான்; அநேகம் பிசாசுகள் அவனுக்குள் புகுந்திருந்தபடியால் அந்தப் பேரைச் சொன்னான்.

31தங்களைப் பாதாளத்திலே போகக்கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன.

32அவ்விடத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாய் மலையிலே மேய்ந்துகொண்டிருந்தது. அந்தப் பன்றிகளுக்குள் போகும்படி தங்களுக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டன; அவைகளுக்கு உத்தரவு கொடுத்தார்.

33அப்படியே பிசாசுகள் அந்த மனுஷனைவிட்டு நீங்கி பன்றிகளுக்குள் புகுந்தன; அப்பொழுது அந்தப் பன்றிக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, அமிழ்ந்து, மாண்டன.

34அவைகளை மேய்த்தவர்கள் சம்பவித்ததைக் கண்டு, ஓடிப்போய், பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள்.

35அப்பொழுது சம்பவித்ததைப் பார்க்கும்படி ஜனங்கள் புறப்பட்டு, இயேசுவினிடத்தில் வந்து, பிசாசுகள் விட்டுப்போன மனுஷன் வஸ்திரந்தரித்து இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து புத்திதெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள்.

36பிசாசுகள் பிடித்திருந்தவன் சொஸ்தமாக்கப்பட்டதைக் கண்டவர்களும் அதை அவர்களுக்கு அறிவித்தார்கள்.

37அப்பொழுது கதரேனருடைய சுற்றுப்புறத்திலுள்ள திரளான ஜனங்கள் எல்லாரும் மிகவும் பயமடைந்தபடியினாலே, தங்களை விட்டுப்போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள். அந்தப்படி அவர் படவில் ஏறி, திரும்பிப்போனார்.

38பிசாசுகள் நீங்கின மனுஷன் அவரோடேகூட இருக்கும்படி உத்தரவு கேட்டான்.

39இயேசு அவனை நோக்கி: நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போய், தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் அறிவி என்று சொல்லி, அவனை அனுப்பிவிட்டார். அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் பட்டணத்தில் எங்கும் பிரசித்தப்படுத்தினான்.

40இயேசு திரும்பி வந்தபோது ஜனங்களெல்லாரும் அவருக்காகக் காத்திருந்தபடியால் அவரைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டார்கள்.

41அப்பொழுது ஜெப ஆலயத்தலைவனாகிய யவீரு என்னும் பேருள்ள ஒருவன் வந்து, இயேசுவின் பாதத்தில் விழுந்து, பன்னிரண்டு வயதுள்ள தன்னுடைய ஒரே குமாரத்தி மரண அவஸ்தையாயிருந்தபடியால்,

42தன் வீட்டிற்கு வரும்படி அவரை வேண்டிக்கொண்டான். அவர் போகையில் திரளான ஜனங்கள் அவரை நெருக்கினார்கள்.

43அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரீ,

44அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்; உடனே அவளுடைய பெரும்பாடு நின்றுபோயிற்று.

45அப்பொழுது இயேசு: என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். எங்களுக்குத் தெரியாதென்று எல்லாரும் சொன்னபோது, பேதுருவும் அவனுடனேகூட இருந்தவர்களும்: ஐயரே, திரளான ஜனங்கள் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக்கொண்டிருக்கிறார்களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படிக் கேட்கிறீர் என்றார்கள்.

46அதற்கு இயேசு: என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்; ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு என்றார்.

47அப்பொழுது அந்த ஸ்திரீ தான் மறைந்திருக்கவில்லையென்று கண்டு, நடுங்கிவந்து, அவர் முன்பாக விழுந்து, தான் அவரைத் தொட்ட காரணத்தையும் உடனே தான் சொஸ்தமானதையும் எல்லா ஜனங்களுக்கும் முன்பாக அவருக்கு அறிவித்தாள்.

48அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்.

49அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து ஒருவன் வந்து, அவனை நோக்கி: உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், போதகரை வருத்தப்படுத்தவேண்டாம் என்றான்.

50இயேசு அதைக் கேட்டு: பயப்படாதே; விசுவாசமுள்ளவனாயிரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார்.

51அவர் வீட்டில் வந்தபோது, பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் பெண்ணின் தகப்பனையும் தாயையும் தவிர வேறொருவரையும் உள்ளே வரவொட்டாமல்,

52எல்லாரும் அழுது அவளைக்குறித்துத் துக்கங்கொண்டாடுகிறதைக் கண்டு: அழாதேயுங்கள், அவள் மரித்துப்போகவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார்.

53அவள் மரித்துப்போனாளென்று அவர்கள் அறிந்ததினால், அவரைப் பார்த்து நகைத்தார்கள்.

54எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, அவளுடைய கையைப் பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார்.

55அப்பொழுது அவள் உயிர் திரும்பவந்தது; உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரங்கொடுக்கக் கட்டளையிட்டார்.

56அவள் தாய்தகப்பன்மார் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லாமலிருக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

தனிவாசிப்பு

1அப்பொழுது தேமானியனான எலிப்பாஸ் பிரதியுத்தரமாக:

2ஒரு மனுஷன் விவேகியாயிருந்து, தனக்குத்தான் பிரயோஜனமாயிருக்கிறதினால் தேவனுக்குப் பிரயோஜனமாயிருப்பானோ?

3நீர் நீதிமானாயிருப்பதினால் சர்வவல்லவருக்கு நன்மையுண்டாகுமோ? நீர் உம்முடைய வழிகளை உத்தமமாக்குகிறது அவருக்கு ஆதாயமாயிருக்குமோ?

4அவர் உமக்குப் பயந்து உம்மோடே வழக்காடி, உம்மோடே நியாயத்துக்கு வருவாரோ?

5உம்முடைய பொல்லாப்பு பெரியதும், உம்முடைய அக்கிரமங்கள் முடிவில்லாதவைகளுமாய் இருக்கிறதல்லவோ?

6முகாந்தரமில்லாமல் உம்முடைய சகோதரர் கையில் அடகுவாங்கி, ஏழைகளின் வஸ்திரங்களைப் பறித்துக்கொண்டீர்.

7விடாய்த்தவனுக்குத் தாகத்துக்குத் தண்ணீர் கொடாமலும், பசித்தவனுக்கு போஜனம் கொடாமலும் போனீர்.

8பலவானுக்கே தேசத்தில் இடமுண்டாயிற்று; கனவான் அதில் குடியேறினான்.

9விதவைகளை வெறுமையாய் அனுப்பிவிட்டீர்; தாய்தகப்பன் இல்லாதவர்களின் புயங்கள் முறிக்கப்பட்டது.

10ஆகையால் கண்ணிகள் உம்மைச் சூழ்ந்திருக்கிறது; அசுப்பிலே உமக்கு வந்த பயங்கரம் உம்மைக் கலங்கப்பண்ணுகிறது.

11நீர் பார்க்கக்கூடாதபடிக்கு இருள் வந்தது, ஜலப்பிரவாகம் உம்மை மூடுகிறது.

12தேவன் பரலோகத்தின் உன்னதங்களிலிருக்கிறார் அல்லவோ? நட்சத்திரங்களின் உயரத்தைப் பாரும், அவைகள் எத்தனை உயரமாயிருக்கிறது.

13நீர்: தேவன் எப்படி அறிவார், அந்தகாரத்துக்கு அப்புறத்திலிருக்கிறவர் நியாயம் விசாரிக்கக்கூடுமோ?

14அவர் பாராதபடிக்கு மேகங்கள் அவருக்கு மறைவாயிருக்கிறது; பரமண்டலங்களின் சக்கரத்திலே அவர் உலாவுகிறார் என்று சொல்லுகிறீர்.

15அக்கிரம மாந்தர் பூர்வத்தில் நடந்த மார்க்கத்தைக் கவனித்துப் பார்த்தீரோ?

16காலம் வருமுன்னே அவர்கள் வாடிப்போனார்கள்; அவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் வெள்ளம் புரண்டது.

17தேவன் அவர்கள் வீடுகளை நன்மையால் நிரப்பியிருந்தாலும், அவர்கள் அவரை நோக்கி: எங்களைவிட்டு விலகும், சர்வவல்லவராலே எங்களுக்கு என்ன ஆகும் என்றார்கள்.

18ஆகையால் துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக.

19எங்கள் நிலைமை நிர்மூலமாகாமல், அவர்களுக்கு மீதியானதையோ அக்கினி பட்சித்ததென்பதை நீதிமான்கள் கண்டு சந்தோஷப்படுகிறார்கள்.

20குற்றமில்லாதவன் அவர்களைப் பார்த்து நகைக்கிறான்.

21நீர் அவரோடே பழகி சமாதானமாயிரும்; அதினால் உமக்கு நன்மைவரும்.

22அவர் வாயினின்று பிறந்த வேதப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு, அவர் வார்த்தைகளை உம்முடைய இருதயத்தில் வைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

23நீர் சர்வவல்லவரிடத்தில் மனந்திரும்பினால், திரும்பக் கட்டப்படுவீர்; அக்கிரமத்தை உமது கூடாரத்துக்குத் தூரமாக்குவீர்.

24அப்பொழுது தூளைப்போல் பொன்னையும், ஆற்றுக் கற்களைப்போல் ஓப்பீரின் தங்கத்தையும் சேர்த்துவைப்பீர்.

25அப்பொழுது சர்வவல்லவர் தாமே உமக்குப் பசும்பொன்னும், உமக்குச் சொக்கவெள்ளியுமாயிருப்பார்.

26அப்பொழுது சர்வவல்லவர்மேல் மனமகிழ்ச்சியாயிருந்து, தேவனுக்கு நேராக உம்முடைய முகத்தை ஏறெடுப்பீர்.

27நீர் அவரை நோக்கி விண்ணப்பம்பண்ண, அவர் உமக்குச் செவிகொடுப்பார்; அப்பொழுது நீர் உம்முடைய பொருத்தனைகளைச் செலுத்துவீர்.

28நீர் ஒரு காரியத்தை நிருணயம்பண்ணினால், அது உமக்கு நிலைவரப்படும்; உம்முடைய பாதைகளில் வெளிச்சம் பிரகாசிக்கும்.

29மனுஷர் ஒடுக்கப்படும்போது திடப்படக்கடவர்கள் என்று நீர் சொல்ல, தாழ்ந்தோர் இரட்சிக்கப்படுவார்கள்.

30குற்றமற்றிராதவனையுங்கூடத் தப்புவிப்பார்; உம்முடைய கைகளின் சுத்தத்தினிமித்தம் அவன் தப்பிப்போவான் என்றான்.

I கொரிந்தியர் 9

முழு அதிகாரம் ›

1நான் அப்போஸ்தலனல்லவா? நான் சுயாதீனனல்லவா? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நான் தரிசிக்கவில்லையா? கர்த்தருக்குள் நீங்கள் என் கிரியையாயிருக்கிறீர்களல்லவா?

2நான் மற்றவர்களுக்கு அப்போஸ்தலனாயிராவிட்டாலும், உங்களுக்கல்லவோ அப்போஸ்தலனாயிருக்கிறேன்; கர்த்தருக்குள் நீங்கள் என் அப்போஸ்தல ஊழியத்திற்கு முத்திரையாயிருக்கிறீர்களே.

3என்னை நியாயம் விசாரிக்கிறவர்களுக்கு நான் சொல்லுகிற மாறுத்தரமாவது:

4புசிக்கவும் குடிக்கவும் எங்களுக்கு அதிகாரமில்லையா?

5மற்ற அப்போஸ்தலரும், கர்த்தருடைய சகோதரரும், கேபாவும் செய்கிறதுபோல, மனைவியாகிய ஒரு சகோதரியைக் கூட்டிக்கொண்டு திரிய எங்களுக்கும் அதிகாரமில்லையா?

6அல்லது, கைத்தொழில் செய்யாதிருக்கிறதற்கு எனக்கும் பர்னபாவுக்கும்மாத்திரந்தானா அதிகாரமில்லை?

7எவன் தன் சொந்தப்பணத்தைச் செலவழித்து, தண்டிலே சேவகம்பண்ணுவான்? எவன் திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதின் கனியில் புசியாதிருப்பான்? எவன் மந்தையை மேய்த்து, அதின் பாலைச் சாப்பிடாதிருப்பான்?

8இவைகளை மனுஷர் வழக்கத்தின்படி சொல்லுகிறேனோ? நியாயப்பிரமாணமும் இவைகளைச் சொல்லுகிறதில்லையா?

9போரடிக்கிற மாட்டை வாய்க்கட்டாயாக என்று மோசேயின் பிரமாணத்திலே எழுதியிருக்கிறதே. தேவன் மாடுகளுக்காகவே கவலையாயிருக்கிறாரோ?

10நமக்காகத்தான் இதைச் சொல்லுகிறாரோ? உழுகிறவன் நம்பிக்கையோடே உழவும், போரடிக்கிறவன் தான் நம்புகிறதில் பங்கடைவேன் என்கிற நம்பிக்கையோடே போரடிக்கவும் வேண்டியதே, ஆகையால், அது நமக்காகவே எழுதியிருக்கிறது.

11நாங்கள் உங்களுக்கு ஞானநன்மைகளை விதைத்திருக்க, உங்கள் சரீரநன்மைகளை அறுத்தால் அது பெரிய காரியமா?

12மற்றவர்கள் உங்களிடத்திலே இந்த அதிகாரத்தைச் செலுத்தினால், அவர்களிலும் நாங்கள் அதிகமாய்ச் செலுத்தலாமல்லவா? அப்படியிருந்தும், கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு யாதொரு தடையும் உண்டாகாதபடிக்கு, நாங்கள் இந்த அதிகாரத்தைச் செலுத்தாமல் எல்லாப்பாடும்படுகிறோம்.

13ஆசாரிய ஊழியஞ்செய்கிறவர்கள் தேவாலயத்திற்குரியவைகளில் புசிக்கிறார்களென்றும், பலிபீடத்தை அடுத்துப் பணிவிடை செய்கிறவர்களுக்குப் பலிபீடத்திலுள்ளவைகளில் பங்கு உண்டென்றும் அறியீர்களா?

14அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார்.

15அப்படியிருந்தும், நான் இவைகளில் ஒன்றையும் அநுபவிக்கவில்லை; இப்படி எனக்கு நடக்கவேண்டுமென்று இவைகளை நான் எழுதுகிறதுமில்லை. என் மேன்மைபாராட்டலை ஒருவன் அவத்தமாக்குகிறதைப்பார்க்கிலும் சாகிறது எனக்கு நலமாயிருக்கும்.

16சுவிசேஷத்தை நான் பிரசங்கித்து வந்தும், மேன்மைப்பாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.

17நான் உற்சாகமாய் அப்படிச் செய்தால் எனக்குப் பலன் உண்டு; உற்சாகமில்லாதவனாய்ச் செய்தாலும், உக்கிராண உத்தியோகம் எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறதே.

18ஆதலால் எனக்குப் பலன் என்ன? நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கையில் அதைப்பற்றி எனக்கு உண்டாயிருக்கிற அதிகாரத்தை முற்றிலும் செலுத்தாமல், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைச் செலவில்லாமல் ஸ்தாபிப்பதே எனக்குப் பலன்.

19நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும், நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன்.

20யூதரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப்போலவும், நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவனைப் போலவுமானேன்.

21நியாயப்பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லாதவனைப்போலவுமானேன். அப்படியிருந்தும், நான் தேவனுக்குமுன்பாக நியாயப்பிரமாணமில்லாதவனாயிராமல், கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள்ளானவனாயிருக்கிறேன்.

22பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன்; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.

23சுவிசேஷத்தில் நான் உடன்பங்காளியாகும்படிக்கு, அதினிமித்தமே இப்படிச் செய்கிறேன்.

24பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்.

25பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்.

26ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்.

27மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com