1அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் பார்வோனுக்குச் செய்வதை இப்பொழுது காண்பாய்; பலத்த கையைக் கண்டு அவர்களைப் போகவிட்டு, பலத்த கையைக் கண்டு அவர்களைத் தன் தேசத்திலிருந்து துரத்திவிடுவான் என்றார்.
2மேலும், தேவன் மோசேயை நோக்கி: நான் யேகோவா,
3சர்வல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை.
4அவர்கள் பரதேசிகளாய்த் தங்கின தேசமாகிய கானான்தேசத்தை அவர்களுக்குக் கொடுப்பேன் என்று நான் அவர்களோடே என் உடன்படிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறேன்.
5எகிப்தியர் அடிமைகொள்ளுகிற இஸ்ரவேல் புத்திரரின் பெருமூச்சையும் நான் கேட்டு, என் உடன்படிக்கையை நினைத்தேன்.
6ஆதலால், இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நானே கர்த்தர்; உங்கள்மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி நான் உங்களை விடுவித்து, உங்களை அவர்கள் அடிமைத்தனத்திற்கு, நீங்கலாக்கி, ஓங்கிய கையினாலும், மகா தண்டனைகளினாலும் உங்களை மீட்டு,
7உங்களை எனக்கு ஜனங்களாகச் சேர்த்துக்கொண்டு, உங்களுக்கு தேவனாயிருப்பேன்; உங்கள்மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி உங்களை விடுவிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தர் நான் என்று அறிவீர்கள்.
8ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்ட தேசத்தில் உங்களைக் கொண்டுபோய், அதை உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுப்பேன்; நான் கர்த்தர் என்று அவர்களுக்குச் சொல் என்றார்.
9இந்தப்பிரகாரமாக மோசே இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னான்; அவர்களோ மனமடிவினாலும் கொடுமையான வேலையினாலும் மோசேக்குச் செவிகொடாமற்போனார்கள்.
10பின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி:
11நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடத்தில் போய், அவன் தன் தேசத்திலிருந்து இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடும்படி அவனோடே பேசு என்றார்.
12மோசே கர்த்தருடைய சந்நிதானத்தில் நின்று, இஸ்ரவேல் புத்திரரே எனக்குச் செவிகொடுக்கவில்லை; பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப்பான்? நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன் என்றான்.
13கர்த்தர் மோசேயோடும் ஆரோனோடும் பேசி, இஸ்ரவேல் புத்திரரை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டு போகும்படிக்கு, அவர்களை இஸ்ரவேல் புத்திரரிடத்துக்கும் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடத்துக்கும் கட்டளை கொடுத்து அனுப்பினார்.
14அவர்களுடைய பிதாக்கள் வீட்டாரின் தலைவர் யாரென்றால், இஸ்ரவேலுக்கு முதல் பிறந்தவனாகிய ரூபனுடைய குமாரர் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ; இவர்கள் ரூபனுடைய வம்சங்களின் தலைவர்.
15சிமியோனின் குமாரர் எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சோகார், கானானிய ஸ்திரீயின் குமாரனாகிய சவுல்; சிமியோனுடைய வம்சங்களின் தலைவர் இவர்களே.
16உற்பத்திக்கிரமப்படி பிறந்த லேவியின் குமாரருடைய நாமங்களாவன, கெர்சோன், கோகாத், மெராரி என்பவைகள். லேவி நூற்றுமுப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தான்.
17அவரவர் வம்சங்களின்படி பிறந்த கெர்சோனின் குமாரர் லிப்னீ, சிமேயீ என்பவர்கள்.
18கோகாத்தின் குமாரர் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்; கோகாத் நூற்றுமுப்பத்துமூன்று வருஷம் உயிரோடிருந்தான்.
19மெராரியின் குமாரர் மகேலி, மூசி என்பவர்கள்; அவரவர் சந்ததியின்படி லேவியினுடைய வம்சங்களின் தலைவர் இவர்களே.
20அம்ராம் தன் அத்தையாகிய யோகெபேத்தை விவாகம்பண்ணினான்; அவள் அவனுக்கு ஆரோனையும் மோசேயையும் பெற்றாள்; அம்ராம் நூற்றுமுப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தான்.
21இத்சேயாரின் குமாரர் கோராகு, நெப்பேக், சித்ரி என்பவர்கள்.
22ஊசியேலின் குமாரர் மீசவேல், எல்சாபான், சித்ரி என்பவர்கள்.
23ஆரோன் அம்மினதாபின் குமாரத்தியும் நகசோனின் சகோதரியுமாகிய எலிசபாளை விவாகம் பண்ணினான்; இவள் அவனுக்கு நாதாபையும், அபியூவையும், எலேயாசாரையும், இத்தாமாரையும் பெற்றாள்.
24கோராகின் குமாரர் ஆசீர், எல்க்கானா, அபியாசாப் என்பவர்கள்; கோராகியரின் வம்சத்தலைவர் இவர்களே.
25ஆரோனின் குமாரனாகிய எலெயாசார் பூத்தியேலுடைய குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம் பண்ணினான், அவள் அவனுக்குப் பினெகாசைப் பெற்றாள்; அவரவர் வம்சங்களின்படி லேவியருடைய பிதாக்களாகிய தலைவர் இவர்களே.
26இஸ்ரவேல் புத்திரரை அணியணியாய் எகிப்துதேசத்திலிருந்து நடத்திக்கொண்டு போவதற்குக் கர்த்தரால் கட்டளைபெற்ற ஆரோனும் மோசேயும் இவர்களே.
27இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து நடத்திக்கொண்டுபோவதற்கு, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடே பேசின மோசேயும் ஆரோனும் இவர்களே.
28கர்த்தர் எகிப்துதேசத்திலே மோசேயோடே பேசின நாளில்;
29கர்த்தர் மோசேயை நோக்கி: நானே கர்த்தர்; நான் உன்னோடே சொல்லுகிறவைகளையெல்லாம் நீ எகிப்து ராஜாவாகிய பார்வோனுக்குச் சொல் என்று சொன்னபோது,
30மோசே கர்த்தருடைய சந்நிதானத்தில்: நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன்; பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப்பான் என்றான்.
1அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும், அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து,
2தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், பிணியாளிகளைச் சொஸ்தமாக்கவும் அவர்களை அனுப்பினார்.
3அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: வழிக்குத் தடியையாவது பையையாவது அப்பத்தையாவது காசையாவது எடுத்துக்கொண்டு போகவேண்டாம்; இரண்டு அங்கிகளைக் கொண்டுபோகவும்வேண்டாம்.
4எந்த வீட்டிலே பிரவேசிக்கிறீர்களோ, அங்கே தங்கி, அங்கிருந்து புறப்படுங்கள்.
5உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் எவர்களோ அவர்களுடைய ஊரைவிட்டு நீங்கள் புறப்படும்போது, அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களில் படிந்ததூசியை உதறிப்போடுங்கள் என்றார்.
6அவர்கள் புறப்பட்டுப்போய், கிராமங்கள்தோறும் திரிந்து, எங்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, பிணியாளிகளைக் குணமாக்கினார்கள்.
7அப்பொழுது காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது அவரால் செய்யப்பட்ட யாவையும் கேள்விப்பட்டதுமன்றி; சிலர் யோவான் மரித்தோரிலிருந்து எழுந்தான் என்றும்,
8சிலர் எலியா தோன்றினான் என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவன் உயிர்த்தெழுந்தான் என்றும் சொல்லிக்கொண்டபடியால், கலக்கமடைந்து:
9யோவானை நான் சிரச்சேதம்பண்ணினேன், இவன் இப்படிப்பட்டவைகளைச் செய்கிறான் என்று கேள்விப்படுகிறேனே! இவன் யார்? என்று ஏரோது சொல்லி, அவரைப் பார்க்கவிரும்பினான்.
10அப்போஸ்தலர் திரும்பிவந்து, தாங்கள் செய்த யாவையும் அவருக்கு விவரித்துச் சொன்னார்கள். அப்பொழுது அவர் அவர்களைக் கூட்டிக்கொண்டு, தனித்திருக்கும்படி பெத்சாயிதா என்னும் பட்டணத்தைச் சேர்ந்த வனாந்தரமான ஒரு இடத்துக்குப் போனார்.
11ஜனங்கள் அதை அறிந்து, அவர் பின்னே போனார்கள்; அவர்களை அவர் ஏற்றுக்கொண்டு, தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்து அவர்களுடனே பேசி, சொஸ்தமடையவேண்டுமென்றிருந்தவர்களைச் சொஸ்தப்படுத்தினார்.
12சாயங்காலமாகிறபோது, பன்னிருவரும் சேர்ந்துவந்து, அவரை நோக்கி: நாம் இருக்கிற இடம் வனாந்தரமாயிருக்கிறது, சுற்றியிருக்கிற ஊர்களிலும் கிராமங்களிலும் ஜனங்கள் போய்த் தங்கி, போஜனபதார்த்தங்களைச் சம்பாதித்துக் கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.
13அவர் அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: எங்களிடத்தில் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமாத்திரமுண்டு, இந்த ஜனங்களெல்லாருக்கும் போஜனங்கொடுக்கவேண்டியதானால், நாங்கள் போய் வாங்கிக்கொண்டு வரவேண்டுமே என்றார்கள்.
14ஏறக்குறைய ஐயாயிரம் புருஷர் இருந்தார்கள். அவர்களைப் பந்திக்கு ஐம்பது ஐம்பதுபேராக உட்காரும்படி சொல்லுங்கள் என்று தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார்.
15அவர்கள் அந்தப்படியே எல்லாரையும் உட்காரும்படி செய்தார்கள்.
16அப்பொழுது அவர் அந்த ஐந்து அப்பங்களையும் அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, அவைகளை ஆசீர்வதித்து, பிட்டு, ஜனங்கள்முன் வைக்கும்படி சீஷர்களிடத்தில் கொடுத்தார்.
17எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். மீதியான துணிக்கைகள் பன்னிரண்டு கூடை நிறைய எடுக்கப்பட்டது.
18பின்பு அவர் தமது சீஷரோடேகூடத் தனித்து ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், அவர்களை நோக்கி: ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
19அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் உயிர்த்தெழுந்தார் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
20அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு பிரதியுத்தரமாக: நீர் தேவனுடைய கிறிஸ்து என்றான்.
21அப்பொழுது அவர்கள் அதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு உறுதியாய்க் கட்டளையிட்டார்.
22மேலும் மனுஷகுமாரன் பலபாடுகள்படவும், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்படவும், கொல்லப்படவும், மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்திருக்கவும் வேண்டும் என்று சொன்னார்.
23பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.
24தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.
25மனுஷன் உலகமுழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்னைத்தான் கெடுத்து நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?
26என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரனும் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார்.
27இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யத்தைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
28இந்த வார்த்தைகளை அவர் சொல்லி ஏறக்குறைய எட்டுநாளானபின்பு, அவர் பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு, ஜெபம்பண்ணுகிறதற்கு ஒரு மலையின்மேல் ஏறினார்.
29அவர் ஜெபம்பண்ணுகையில் அவருடைய முகரூபம் மாறிற்று, அவருடைய வஸ்திரம் வெண்மையாகிப் பிரகாசித்தது.
30அன்றியும் மோசே எலியா என்னும் இரண்டுபேரும் மகிமையோடே காணப்பட்டு, அவருடனே சம்பாஷணைபண்ணி,
31அவர் எருசலேமிலே நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக்குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
32பேதுருவும் அவனோடிருந்தவர்களும் நித்திரைமயக்கமாயிருந்தார்கள். ஆகிலும் அவர்கள் விழித்து அவருடைய மகிமையையும் அவரோடே நின்ற அவ்விரண்டுபேரையும் கண்டார்கள்.
33அவ்விருவரும் அவரைவிட்டுப் பிரிந்துபோகையில், பேதுரு இயேசுவை நோக்கி: ஐயரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது, உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்று, தான் சொல்லுகிறது இன்னதென்று அறியாமல் சொன்னான்.
34இப்படி அவன் பேசுகையில், ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது; அவர்கள் அந்த மேகத்துக்குள் பிரவேசிக்கையில் சீஷர்கள் பயந்தார்கள்.
35அப்பொழுது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று மேகத்திலிருந்து ஒரு சத்தமுண்டாயிற்று.
36அந்தச் சத்தம் உண்டாகையில் இயேசு ஒருவரே காணப்பட்டார். தாங்கள் கண்டவைகளில் ஒன்றையும் அவர்கள் அந்நாட்களில் ஒருவருக்கும் சொல்லாமல் அடக்கிவைத்திருந்தார்கள்.
37மறுநாளில் அவர்கள் மலையிலிருந்திறங்கினபோது, திரளான ஜனங்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்தார்கள்.
38அவர்களில் ஒருவன் சத்தமிட்டு: போதகரே, என் மகனைக் கடாட்சித்தருளவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன், அவன் எனக்கு ஒரே பிள்ளையாயிருக்கிறான்.
39ஒரு ஆவி அவனைப் பிடிக்கிறது. அப்பொழுது அலறுகிறான், அது அவனை நுரைதள்ள அலைக்கழித்து, அவனைக் கசக்கினபின்பும், அவனை விட்டு நீங்குவது அரிதாயிருக்கிறது.
40அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரை வேண்டிக்கொண்டேன், அவர்களால் கூடாமற்போயிற்று என்றான்.
41இயேசு பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து, உங்களிடத்தில் பொறுமையாயிருப்பேன்? உன் மகனை இங்கே கொண்டுவா என்றார்.
42அவன் சமீபித்துவருகையில், பிசாசு அவனைக் கீழே தள்ளி, அலைக்கழித்தது. இயேசு அந்த அசுத்த ஆவியை அதட்டி, இளைஞனைக் குணமாக்கி, அவன் தகப்பனிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தார்.
43அப்பொழுது எல்லாரும் தேவனுடைய மகத்துவத்தைக்குறித்துப் பிரமித்தார்கள். இயேசு செய்த யாவையுங்குறித்து அனைவரும் ஆச்சரியப்படுகையில் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி:
44நீங்கள் இந்த வார்த்தைகளைக் கவனமாய்க் கேளுங்கள்; மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படப்போகிறார் என்றார்.
45அவர்கள் அந்த வார்த்தையின் கருத்தை அறிந்துகொள்ளவில்லை; அது அவர்களுக்குத் தோன்றாமல் மறைபொருளாயிருந்தது; அந்த வார்த்தையைக்குறித்து அவரிடத்தில் விசாரிக்கவும் பயந்தார்கள்.
46பின்பு தங்களில் எவன் பெரியவனாயிருப்பானென்கிற வாக்குவாதம் அவர்களுக்குள் உண்டாயிற்று.
47இயேசு அவர்கள் இருதயத்தின் யோசனையை அறிந்து, ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதைத் தமதருகே நிறுத்தி,
48அவர்களை நோக்கி: இந்தச் சிறுபிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்; உங்களெல்லாருக்குள்ளும் எவன் சிறியவனாயிருக்கிறானோ அவனே பெரியவனாயிருப்பான் என்றார்.
49அப்பொழுது யோவான் அவரை நோக்கி: ஐயரே, ஒருவன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதை நாங்கள் கண்டு, அவன் எங்களுடனேகூட உம்மைப் பின்பற்றாதவனானபடியால், அவனைத் தடுத்தோம் என்றான்.
50அதற்கு இயேசு: தடுக்கவேண்டாம்; நமக்கு விரோதியாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான் என்றார்.
51பின்பு, அவர் எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் சமீபித்தபோது, அவர் எருசலேமுக்குப் போகத் தமது முகத்தைத் திருப்பி,
52தமக்கு முன்னாகத் தூதர்களை அனுப்பினார். அவர்கள் போய், அவருக்கு இடத்தை ஆயத்தம்பண்ணும்படி சமாரியருடைய ஒரு கிராமத்திலே பிரவேசித்தார்கள்.
53அவர் எருசலேமுக்குப்போக நோக்கமாயிருந்தபடியினால் அவ்வூரார் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
54அவருடைய சீஷராகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது: ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள்.
55அவர் திரும்பிப்பார்த்து: நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள் என்று அதட்டி,
56மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார். அதன்பின்பு அவர்கள் வேறொரு கிராமத்துக்குப் போனார்கள்.
57அவர்கள் வழியிலே போகையில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.
58அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.
59வேறொருவனை அவர் நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.
60அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்; நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கி என்றார்.
61பின்பு வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுவேன், ஆனாலும் முன்பு நான் போய் வீட்டிலிருக்கிறவர்களிடத்தில் அனுப்புவித்துக்கொண்டுவரும்படி எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.
62அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார்.
1யோபு பிரதியுத்தரமாக:
2இன்றையதினமும் என் அங்கலாய்ப்பு முரண்டுத்தனமாக எண்ணப்படுகிறது; என் தவிப்பைப்பார்க்கிலும் என் வாதை கடினமானது.
3நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும்; அப்பொழுது நான் அவர் ஆசனத்துக்கு முன்பாக வந்து சேர்ந்து,
4என் நியாயத்தை அவருக்கு முன்பாக வரிசையாய் வைத்து, காரியத்தை ரூபிக்கும் வார்த்தைகளால் என் வாயை நிரப்புவேன்.
5அவருடைய மறுமொழிகளை நான் அறிந்து, அவர் எனக்குச் சொல்வதை உணர்ந்துகொள்ளுவேன்.
6அவர் தம்முடைய மகா வல்லமையின்படியே என்னோடே வழக்காடுவாரோ? அவர் அப்படிச் செய்யாமல் என்மேல் தயை வைப்பார்.
7அங்கே சன்மார்க்கன் அவரோடே வழக்காடலாம்; அப்பொழுது என்னை நியாயந்தீர்க்கிறவரின் கைக்கு என்றைக்கும் நீங்கலாய்த் தப்புவித்துக்கொள்வேன்.
8இதோ, நான் முன்னாகப்போனாலும் அவர் இல்லை; பின்னாகப்போனாலும் அவரைக் காணேன்.
9இடதுபுறத்தில் அவர் கிரியை செய்தும் அவரைக் காணேன்; வலது புறத்திலும் நான் அவரைக் காணாதபடிக்கு ஒளித்திருக்கிறார்.
10ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்.
11என் கால்கள் அவர் அடிகளைப் பற்றிப்பிடித்தது; அவருடைய நெறியைவிட்டு நான் சாயாமல் அதைக் கைக்கொண்டேன்.
12அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை; அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன்.
13அவரோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்; அவரைத் திருப்பத்தக்கவர் யார்? அவருடைய சித்தத்தின்படியெல்லாம் செய்வார்.
14எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்; இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு.
15ஆகையால் அவருக்கு முன்பாகக் கலங்குகிறேன்; நான் சிந்திக்கிறபோது, அவருக்குப் பயப்படுகிறேன்.
16தேவன் என் இருதயத்தை இளக்கரிக்கப்பண்ணினார்; சர்வவல்லவர் என்னைக் கலங்கப்பண்ணினார்.
17அந்தகாரம் வராததற்கு முன்னே நான் சங்கரிக்கப்படாமலும், இருளை அவர் எனக்கு மறைக்காமலும் போனதினால் இப்படியிருக்கிறேன்.
1இப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் எவைகளை அறியவேண்டுமென்றிருக்கிறேனென்றால்; நம்முடைய பிதாக்களெல்லாரும் மேகத்துக்குக் கீழாயிருந்தார்கள், எல்லாரும், சமுத்திரத்தின் வழியாய் நடந்துவந்தார்கள்.
2எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள்.
3எல்லாரும் ஒரே ஞானபோஜனத்தைப் புசித்தார்கள்.
4எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே.
5அப்படியிருந்தும், அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை; ஆதலால் வனாந்தரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள்.
6அவர்கள் இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது.
7ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து விளையாட எழுந்திருந்தார்கள் என்று எழுதியிருக்கிறபடி, அவர்களில் சிலர் விக்கிரகாராதனைக்காரர் ஆனதுபோல நீங்களும் ஆகாதிருங்கள்.
8அவர்களில் சிலர் வேசித்தனம்பண்ணி, ஒரேநாளில் இருபத்துமூவாயிரம்பேர் விழுந்துபோனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம்பண்ணாதிருப்போமாக.
9அவர்களில் சிலர் கிறிஸ்துவைப் பரீட்சைப்பார்த்து, பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நாமும் கிறிஸ்துவைப் பரீட்சைபாராதிருப்போமாக.
10அவர்களில் சிலர் முறுமுறுத்து, சங்காரக்காரனாலே அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நீங்களும் முறுமுறுக்காதிருங்கள்.
11இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது.
12இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.
13மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.
14ஆகையால் எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்.
15உங்களைப் புத்திமான்களென்று எண்ணிப் பேசுகிறேன்; நான் சொல்லுகிறதை நீங்களே நிதானித்துப்பாருங்கள்.
16நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கிமாயிருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா?
17அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம்.
18மாம்சத்தின்படியான இஸ்ரவேலரைப் பாருங்கள்; பலிகளைப் புசிக்கிறவர்கள் பலிபீடத்தோடே ஐக்கியமாயிருக்கிறார்களல்லவா?
19இப்படியிருக்க, விக்கிரகம் ஒரு பொருளென்றும், விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டது ஒரு பொருளென்றும் நான் சொல்லுகிறேனோ?
20அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்களென்று சொல்லுகிறேன்; நீங்கள் பேய்களோடே ஐக்கியமாயிருக்க எனக்கு மனதில்லை.
21நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம் பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய போஜனபந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாயிருக்கக்கூடாதே.
22நாம் கர்த்தருக்கு எரிச்சலை மூட்டலாமா? அவரிலும் நாம் பலவான்களா?
23எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது.
24ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன்.
25கடையிலே விற்கப்படுகிற எதையும் வாங்கிப் புசியுங்கள்; மனச்சாட்சியினிமித்தம் நீங்கள் ஒன்றையும் விசாரிக்கவேண்டியதில்லை.
26பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது.
27அன்றியும் அவிசுவாசிகளில் ஒருவன் உங்களை விருந்துக்கு அழைக்கும்போது, போக உங்களுக்கு மனதிருந்தால், மனச்சாட்சியினிமித்தம் ஒன்றையும் விசாரியாமல், உங்கள் முன் வைக்கப்படுகிற எதையும் புசியுங்கள்.
28ஆயினும் இது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று ஒருவன் உங்களுக்குச் சொன்னால், அப்படி அறிவித்தவனிமித்தமும் மனச்சாட்சியினிமித்தமும் புசியாதிருங்கள்; பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது.
29உன்னுடைய மனச்சாட்சியைக்குறித்து நான் இப்படிச் சொல்லாமல், மற்றொருவனுடைய மனச்சாட்சியைக்குறித்தே சொல்லுகிறேன். என் சுயாதீனம் மற்றொருவனுடைய மனச்சாட்சியினாலே குற்றமாய் எண்ணப்படவேண்டுவதென்ன?
30மேலும் நான் அதை ஸ்தோத்திரிப்புடனே அநுபவித்தால், ஸ்தோத்திரித்து அநுபவிக்கிற பொருளைக்குறித்து நான் தூஷிக்கப்படுவானேன்?
31ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.
32நான் என் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், அநேகருடைய பிரயோஜனத்தைத் தேடி, அவர்கள் இரட்சிக்கப்படும்படிக்கு, எவ்விதத்திலும் எல்லாருக்கும் பிரியமாய் நடக்கிறதுபோல;
33நீங்களும் யூதருக்கும், கிரேக்கருக்கும், தேவனுடைய சபைக்கும் இடறலற்றவர்களாயிருங்கள்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com