1அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: இன்னும் ஒரு வாதையைப் பார்வோன்மேலும் எகிப்தின்மேலும் வரப்பண்ணுவேன்; அதற்குப்பின் அவன் உங்களை இவ்விடத்திலிருந்து போகவிடுவான்; சமூலமாய் உங்களைப் போகவிடுவதும் அல்லாமல், உங்களை இவ்விடத்திலிருந்து துரத்தியும் விடுவான்.
2இப்பொழுது ஒவ்வொருவனும் அவனவன் அயலானிடத்திலும், ஒவ்வொருத்தியும் அவளவள் அயலாளிடத்திலும் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் கேட்கும்படி ஜனங்களுக்குச் சொல் என்றார்.
3அப்படியே கர்த்தர் ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவுகிடைக்கும்படி செய்தார். மோசே என்பவன் எகிப்து தேசத்தில் பார்வோனுடைய ஊழியக்காரரின் பார்வைக்கும் ஜனங்களின் பார்வைக்கும் மிகவும் பெரியவனாயிருந்தான்.
4அப்பொழுது மோசே: கர்த்தர் நடுராத்திரியிலே நான் எகிப்தின் மத்தியில் புறப்பட்டுப்போவேன்.
5அப்பொழுது சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளைமுதல் எந்திரம் அரைக்கும் அடிமைப்பெண்ணுடைய தலைப்பிள்ளைவரைக்கும், எகிப்து தேசத்திலிருக்கிற முதற்பேறனைத்தும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தும் சாகும் என்று உரைக்கிறார் என்று சொன்னதுமன்றி,
6அதினால் எகிப்து தேசம் எங்கும் முன்னும் பின்னும் ஒருக்காலும் உண்டாகாத பெரிய கூக்குரல் உண்டாகும்.
7ஆனாலும் கர்த்தர் எகிப்தியருக்கும் இஸ்ரவேலருக்கும் பண்ணுகிற வித்தியாசத்தை நீங்கள் அறியும்படிக்கு, இஸ்ரவேல் புத்திரர் அனைவருக்குள்ளும் மனிதர்முதல் மிருகஜீவன்கள் வரைக்கும் ஒரு நாயாகிலும் தன் நாவை அசைப்பதில்லை.
8அப்பொழுது உம்முடைய ஊழியக்காரராகிய இவர்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து, பணிந்து. நீயும் உன்னைப் பின்பற்றுகிறவர்கள் யாவரும் புறப்பட்டுப்போங்கள் என்று சொல்லுவார்கள்; அதின்பின் புறப்படுவேன் என்று சொல்லி, உக்கிரமான கோபத்தோடே பார்வோனை விட்டுப் புறப்பட்டான்.
9கர்த்தர் மோசேயை நோக்கி: எகிப்து தேசத்தில் என் அற்புதங்கள் அநேகமாகும்படிக்கு, பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டான் என்று சொல்லியிருந்தார்.
10மோசேயும் ஆரோனும் இந்த அற்புதங்களையெல்லாம் பார்வோனுக்கு முன்பாகச் செய்தார்கள். கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினதினால், அவன் இஸ்ரவேல் புத்திரரைத் தன் தேசத்திலிருந்து போகவிடவில்லை.
1கர்த்தர் எகிப்து தேசத்தில் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
2இந்த மாதம் உங்களுக்குப் பிரதான மாதம்; இது உங்களுக்கு வருஷத்தின் முதலாம் மாதமாயிருப்பதாக.
3நீங்கள் இஸ்ரவேல் சபையார் யாவரையும் நோக்கி: இந்த மாதம் பத்தாம் தேதியில் வீட்டுத்தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்து கொள்ளக்கடவர்கள்.
4ஒரு வீட்டில் இருக்கிறவர்கள் ஒரு ஆட்டுக்குட்டியைப் புசிக்கிறதற்குப் போதுமான பேர்களாயிராமற்போனால், அவனும் அவன் சமீபத்திலிருக்கிற அவனுடைய அயல்வீட்டுக்காரனும், தங்களிடத்திலுள்ள ஆத்துமாக்களின் இலக்கத்திற்குத்தக்கதாக ஒரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளவேண்டும்; அவனவன் புசிப்புக்குத்தக்கதாக இலக்கம் பார்த்து, ஆட்டுக்குட்டியைத் தெரிந்து கொள்ளவேண்டும்.
5அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதும் ஆணும் ஒருவயதுள்ளதுமாய் இருக்கவேண்டும்; செம்மறியாடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது அதைத் தெரிந்து கொள்ளலாம்.
6அதை இந்த மாதம் பதினாலாம் தேதிவரைக்கும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தாரும் சாயங்காலத்தில் அதை அடித்து,
7அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைப் புசிக்கும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து,
8அன்று ராத்திரியிலே அதின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைப் புசிக்கக்கடவர்கள்.
9பச்சையாயும் தண்ணீரில் அவிக்கப்பட்டதாயும் அல்ல; அதின் தலையையும் அதின் தொடைகளையும் அதற்குள்ள யாவையும் ஏகமாய் நெருப்பினால் சுட்டதாய் அதைப் புசிப்பீர்களாக.
10அதிலே ஒன்றையும் விடியற்காலம் மட்டும் மீதியாக வைக்காமல், விடியற்காலம் மட்டும் அதிலே மீதியாய் இருக்கிறதை அக்கினியால் சுட்டெரிப்பீர்களாக.
11அதைப் புசிக்கவேண்டிய விதமாவது, நீங்கள் உங்கள் அரைகளில் கச்சை கட்டிக்கொண்டும், உங்கள் கால்களில் பாதரட்சை தொடுத்துக்கொண்டும், உங்கள் கையில் தடி பிடித்துக்கொண்டும் அதைத் தீவிரமாய்ப் புசிக்கக்கடவீர்கள்; அது கர்த்தருடைய பஸ்கா.
12அந்த ராத்திரியிலே நான் எகிப்து தேசம் எங்கும் கடந்துபோய், எகிப்துதேசத்திலுள்ள மனிதர்முதல் மிருகஜீவன்கள்மட்டும், முதற்பேறாயிருக்கிறவைகளையெல்லாம் அதம்பண்ணி, எகிப்து தேவர்களின்மேல் நீதியைச் செலுத்துவேன்; நானே கர்த்தர்.
13நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்து தேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும்.
14அந்த நாள் உங்களுக்கு நினைவுகூருதலான நாளாய் இருக்கக்கடவது; அதைக் கர்த்தருக்குப் பண்டிகையாக ஆசரிப்பீர்களாக; அதை உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக ஆசரிக்கக்கடவீர்கள்.
15புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாளளவும் புசிக்கக்கடவீர்கள்; முதலாம் நாளில்தானே புளித்தமாவை உங்கள் வீடுகளிலிருந்து நீக்கவேண்டும்; முதலாம் நாள் தொடங்கி ஏழாம் நாள்வரைக்கும் புளித்த அப்பம். புசிக்கிறவன் எவனோ அந்த ஆத்துமா இஸ்ரவேலரிலிருந்து அறுப்புண்டுபோவான்.
16முதலாம் நாளில் பரிசுத்த சபைகூடுதலும், ஏழாம் நாளிலும் பரிசுத்த சபைகூடுதலும் இருக்கவேண்டும்; அவைகளில் ஒரு வேலையும் செய்யப்படலாகாது; அவரவர் சாப்பிடுகிறதற்குத் தேவையானதுமாத்திரம் உங்களால் செய்யப்படலாம்.
17புளிப்பில்லா அப்பப்பண்டிகையை ஆசரிப்பீர்களாக; இந்த நாளில்தான் நான் உங்கள் சேனைகளை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினேன்; ஆகையால், உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக இந்த நாளை ஆசரிக்கக்கடவீர்கள்.
18முதலாம் மாதம் பதினாலாம் தேதி சாயங்காலந்தொடங்கி மாதத்தின் இருபத்தோராம் தேதி சாயங்காலம்வரைக்கும் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள்.
19ஏழுநாளளவும் உங்கள் வீடுகளில் புளித்த மா காணப்படலாகாது; எவனாகிலும் புளிப்பிடப்பட்டதைப் புசித்தால், அவன் பரதேசியானாலும் சுதேசியானாலும், அந்த ஆத்துமா இஸ்ரவேல் சபையில் இராமல் அறுப்புண்டுபோவான்.
20புளிப்பிடப்பட்ட யாதொன்றையும் நீங்கள் புசிக்கவேண்டாம்; உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள் என்று சொல் என்றார்.
21அப்பொழுது மோசே இஸ்ரவேல் மூப்பர் யாவரையும் அழைப்பித்து: நீங்கள் உங்கள் குடும்பங்களுக்குத் தக்கதாக உங்களுக்கு ஆட்டுக்குட்டியைத் தெரிந்தெடுத்துக்கொண்டு, பஸ்காவை அடித்து,
1ஒரு ஓய்வுநாளிலே பரிசேயரில் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டிலே அவர் போஜனம் பண்ணும்படிக்குப் போயிருந்தார்.
2அப்பொழுது நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனுஷன் அவருக்கு முன்பாக இருந்தான். என்ன செய்வாரோவென்று ஜனங்கள் அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள்.
3இயேசு நியாயசாஸ்திரிகளையும் பரிசேயரையும் பார்த்து: ஓய்வு நாளிலே சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்.
4அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். அப்பொழுது அவர் அவனை அழைத்து, சொஸ்தமாக்கி, அனுப்பிவிட்டு,
5அவர்களை நோக்கி: உங்களில் ஒருவனுடைய கழுதையாவது எருதாவது ஓய்வுநாளில் துரவிலே விழுந்தால், அவன் அதை உடனே தூக்கிவிடானோ என்றார்.
6அதற்கு உத்தரவுசொல்ல அவர்களால் கூடாமற்போயிற்று.
7விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தெரிந்துகொண்டதை அவர் பார்த்து, அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்:
8ஒருவனால் கலியாணத்துக்கு நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, பந்தியில் முதன்மையான இடத்தில் உட்காராதே; உன்னிலும் கனமுள்ளவன் ஒருவேளை அவனால் அழைக்கப்பட்டிருப்பான்.
9அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து: இவருக்கு இடங்கொடு என்பான்; அப்பொழுது நீ வெட்கத்தோடே தாழ்ந்த இடத்திற்குப் போகவேண்டியதாயிருக்கும்.
10நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, போய், தாழ்ந்த இடத்தில் உட்காரு; அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து: சிநேகிதனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனேகூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்குக் கனமுண்டாகும்.
11தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
12அன்றியும் அவர் தம்மை விருந்துக்கு அழைத்தவனை நோக்கி: நீ பகல்விருந்தாவது இராவிருந்தாவதுபண்ணும்போது, உன் சிநேகிதரையாகிலும் உன் சகோதரரையாகிலும், உன் பந்து ஜனங்களையாகிலும், ஐசுவரியமுள்ள அயலகத்தாரையாகிலும் அழைக்கவேண்டாம்; அழைத்தால் அவர்களும் உன்னை அழைப்பார்கள், அப்பொழுது உனக்குப் பதிலுக்குப் பதில் செய்ததாகும்.
13நீ விருந்துபண்ணும்போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக.
14அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பதில் செய்யமாட்டார்கள்; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்குப் பதில் செய்யப்படும் என்றார்.
15அவரோடேகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவன் இவைகளைக் கேட்டபொழுது, அவரை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தில் போஜனம்பண்ணுகிறவன் பாக்கியவான் என்றான்.
16அதற்கு அவர்: ஒரு மனுஷன் பெரியவிருந்தை ஆயத்தம்பண்ணி, அநேகரை அழைப்பித்தான்.
17விருந்து வேளையில் தன் ஊழியக்காரனை நோக்கி: நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில் போய், எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது வாருங்கள், என்று சொல்லென்று அவனை அனுப்பினான்.
18அவர்களெல்லாரும் போக்குச்சொல்லத் தொடங்கினார்கள். ஒருவன்: ஒரு வயலைக்கொண்டேன், நான் அகத்தியமாய்ப்போய், அதைப் பார்க்கவேண்டும், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
19வேறொருவன்: ஐந்தேர்மாடு கொண்டேன், அதைச் சோதித்துப் பார்க்கப்போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
20வேறொருவன்: பெண்ணை விவாகம்பண்ணினேன், அதினால் நான் வரக்கூடாது என்றான்.
21அந்த ஊழியக்காரன் வந்து, இவைகளைத் தன் எஜமானுக்கு அறிவித்தான். அப்பொழுது வீட்டெஜமான் கோபமடைந்து, தன் ஊழியக்காரனை நோக்கி: நீ பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாய்ப் போய், ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் இங்கே கூட்டிக்கொண்டுவா என்றான்.
22ஊழியக்காரன் அப்படியே செய்து: ஆண்டவரே, நீர் கட்டளையிட்டபடி செய்தாயிற்று, இன்னும் இடம் இருக்கிறது என்றான்.
23அப்பொழுது எஜமான் ஊழியக்காரனை நோக்கி: நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய், என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா;
24அழைக்கப்பட்டிருந்த அந்த மனுஷரில் ஒருவனாகிலும் என் விருந்தை ருசிபார்ப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றான் என்று சொன்னார்.
25பின்பு அநேக ஜனங்கள் அவரோடேகூடப் பிரயாணமாய்ப் போகையில், அவர்களிடமாய் அவர் திரும்பிப்பார்த்து:
26யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
27தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
28உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்து,
29அஸ்திபாரம் போட்டபின்பு முடிக்கத் திராணியில்லாமற்போனால், பார்க்கிறவர்களெல்லாரும்:
30இந்த மனுஷன் கட்டத்தொடங்கி, முடிக்கத் திராணியில்லாமற்போனான் என்று சொல்லித் தன்னைப் பரியாசம்பண்ணாதபடிக்கு, அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப்பாராமலிருப்பானோ?
31அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடே யுத்தஞ்செய்யப்போகிறபோது, தன்மேல் இருபதினாயிரம் சேவகரோடே வருகிற அவனைத் தான் பதினாயிரம் சேவகரைக்கொண்டு எதிர்க்கக்கூடுமோ கூடாதோ என்று முன்பு உட்கார்ந்து ஆலோசனைபண்ணாமலிருப்பானோ?
32கூடாதென்று கண்டால், மற்றவன் இன்னும் தூரத்திலிருக்கும்போதே, ஸ்தானாதிபதிகளை அனுப்பி, சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக்கொள்வானே.
33அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
34உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்?
35அது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது, அதை வெளியே கொட்டிப்போடுவார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.
1பின்னும் யோபு தன் பிரசங்க வாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது:
2சென்றுபோன மாதங்களிலும், தேவன் என்னைக் காப்பாற்றிவந்த நாட்களிலும் எனக்கு உண்டாயிருந்த சீர் இப்பொழுது இருந்தால் நலமாயிருக்கும்.
3அப்பொழுது அவர் தீபம் என்தலையின்மேல் பிரகாசித்தது; அவர் அருளின வெளிச்சத்தினால் இருளைக் கடந்துபோனேன்.
4தேவனுடைய இரகசியச்செயல் என் கூடாரத்தின்மேல் இருந்தது.
5அப்பொழுது சர்வவல்லவர் என்னோடிருந்தார்; என் பிள்ளைகள் என்னைச் சூழ்ந்திருந்தார்கள்.
6என் பாதங்களை நான் நெய்யினால் கழுவினேன்; கன்மலைகளிலிருந்து எனக்காக எண்ணெய் நதிபோல ஓடிவந்தது; அந்தச் செல்வநாட்களின் சீர் இப்போதிருந்தால் நலமாயிருக்கும்.
7நான் பட்டணவீதியால் வாசலுக்குள் புறப்பட்டுப்போய், வீதியில் என் ஆசனத்தைப் போடும்போது,
8வாலிபர் என்னைக் கண்டு ஒளித்துக்கொள்வார்கள்; முதியோர் எழுந்திருந்து நிற்பார்கள்.
9பிரபுக்கள் பேசுகிறதை நிறுத்தி, கையினால் தங்கள் வாயைப் பொத்திக்கொள்வார்கள்.
10பெரியோரின் சத்தம் அடங்கி, அவர்கள் நாக்கு அவர்கள் மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளும்.
11என்னைக் கேட்ட காது என்னைப் பாக்கியவான் என்றது; என்னைக் கண்ட கண் எனக்குச் சாட்சியிட்டது.
12முறையிடுகிற ஏழையையும், திக்கற்ற பிள்ளையையும், உதவியற்றவனையும் இரட்சித்தேன்.
13கெட்டுப்போக இருந்தவனுடைய ஆசீர்வாதம் என்மேல் வந்தது; விதவையின் இருதயத்தைக் கெம்பீரிக்கப்பண்ணினேன்.
14நீதியைத் தரித்துக்கொண்டேன்; அது என் உடுப்பாயிருந்தது; என் நியாயம் எனக்குச் சால்வையும் பாகையுமாய் இருந்தது.
15நான் குருடனுக்குக் கண்ணும், சப்பாணிக்குக் காலுமாயிருந்தேன்.
16நான் எளியவர்களுக்குத் தகப்பனாயிருந்து, நான் அறியாத வழக்கை ஆராய்ந்துபார்த்தேன்.
17நான் அநியாயக்காரருடைய கடைவாய்ப் பற்களை உடைத்து, அவர்கள் பறித்ததை அவர்கள் பற்களிலிருந்து பிடுங்கினேன்.
18என் கூட்டிலே நான் ஜீவித்துப் போவேன்; என் நாட்களை மணலத்தனையாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றேன்.
19என் வேர் தண்ணீர்களின் ஓரமாய்ப் படர்ந்தது; என் கிளையின்மேல் பனி இராமுழுவதும் தங்கியிருந்தது.
20என் மகிமை என்னில் செழித்தோங்கி, என் கையிலுள்ள என் வில் புதுப்பெலன் கொண்டது.
21எனக்குச் செவிகொடுத்துக் காத்திருந்தார்கள்; என் ஆலோசனையைக் கேட்டு மவுனமாயிருந்தார்கள்.
22என் பேச்சுக்குப் பேசாமலிருந்தார்கள்; என் வசனம் அவர்கள்மேல் துளிதுளியாய் விழுந்தது.
23மழைக்குக் காத்திருக்கிறதுபோல் எனக்குக் காத்திருந்து, பின் மாரிக்கு ஆசையுள்ளவர்கள்போல் தங்கள் வாயை ஆவென்று திறந்திருந்தார்கள்.
24நான் அவர்களைப் பார்த்து நகைக்கும்போது, அவர்கள் துணிகரங்கொள்ளவில்லை; என் முகக்களையை மாறச்செய்யவும் இல்லை.
25அவர்கள் வழியேபோக எனக்குச் சித்தமாகும்போது, நான் தலைவனாய் உட்கார்ந்து, இராணுவத்துக்குள் ராஜாவைப்போலும், துக்கித்தவர்களைத் தேற்றரவுபண்ணுகிறவனைப்போலும் இருந்தேன்.
1அன்றியும், சகோதரரே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்; நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள்.
2நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாய், நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்; மற்றப்படி உங்கள் விசுவாசம் விருதாவாயிருக்குமே.
3நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,
4அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து,
5கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்.
6அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள்.
7பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார்.
8எல்லாருக்கும் பின்பு, அகாலப்பிறவிபோன்ற எனக்கும் தரிசனமானார்.
9நான் அப்போஸ்தலரெல்லாரிலும் சிறியவனாயிருக்கிறேன்; தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தினதினாலே, நான் அப்போஸ்தலனென்று பேர்பெறுவதற்கும் பாத்திரன் அல்ல.
10ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன்; ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது.
11ஆகையால் நானாகிலும் அவர்களாகிலும் இப்படியே பிரசங்கித்துவருகிறோம், நீங்களும் இப்படியே விசுவாசித்திருக்கிறீர்கள்.
12கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, மரித்தோரின் உயிர்தெழுதலில்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்?
13மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லையே.
14கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா.
15மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினாரென்று நாங்கள் தேவனைக்குறித்துச் சாட்சிசொன்னதினாலே, தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும் காணப்படுவோமே.
16மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லை.
17கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்.
18கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தவர்களும் கெட்டிருப்பார்களே.
19இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.
20கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.
21மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று.
22ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
23அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
24அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்.
25எல்லாச் சத்துருக்களையும் தமது பாதத்திற்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகை செய்யவேண்டியது.
26பரிகரிக்கப்படுங்கடைசிச் சத்துரு மரணம்.
27சகலத்தையும் அவருடைய பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆகிலும் சகலமும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும்போது, சகலத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது.
28சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.
29மேலும் மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் என்ன செய்வார்கள்? மரித்தவர்களுக்காக ஏன் ஞானஸ்நானம் பெறுகிறார்கள்?
30நாங்களும் ஏன் எந்நேரமும் நாசமோசத்திற்கு ஏதுவாயிருக்கிறோம்?
31நான் அநுதினமும் சாகிறேன்; அதை நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினால் உங்களைக்குறித்து, நான் பாராட்டுகிற மேன்மையைக்கொண்டு சத்தியமாய்ச் சொல்லுகிறேன்.
32நான் எபேசுவிலே துஷ்டமிருகங்களுடனே போராடினேனென்று மனுஷர் வழக்கமாய்ச் சொல்லுகிறேன்; அப்படிப் போராடினதினாலே எனக்குப் பிரயோஜனமென்ன? மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்லலாமே?
33மோசம்போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்.
34நீங்கள் பாவஞ்செய்யாமல் நீதிக்கேற்க விழித்துக்கொண்டு, தெளிந்தவர்களாயிருங்கள்; சிலர் தேவனைப்பற்றி அறிவில்லாதிருக்கிறார்களே; உங்களுக்கு வெட்கமுண்டாக இதைச் சொல்லுகிறேன்.
35ஆகிலும், மரித்தோர் எப்படி எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடே வருவார்களென்று ஒருவன் சொல்வானாகில்,
36புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்க்கமாட்டாதே.
37நீ விதைக்கிறபோது, இனி உண்டாகும் மேனியை விதையாமல், கோதுமை, அல்லது மற்றொரு தானியத்தினுடைய வெறும் விதையையே விதைக்கிறாய்.
38அதற்கு தேவன் தமது சித்தத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார்; விதை வகைகள் ஒவ்வொன்றிற்கும் அதற்கேற்ற மேனியையே கொடுக்கிறார்.
39எல்லா மாம்சமும் ஒரேவிதமான மாம்சமல்ல; மனுஷருடைய மாம்சம் வேறே, மிருகங்களுடைய மாம்சம் வேறே, மச்சங்களுடைய மாம்சம் வேறே, பறவைகளுடைய மாம்சம் வேறே.
40வானத்துக்குரிய மேனிகளுமுண்டு, பூமிக்குரிய மேனிகளுமுண்டு; வானத்துக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே;
41சூரியனுடைய மகிமையும் வேறே, சந்திரனுடைய மகிமையும் வேறே, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறே, மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது.
42மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்;
43கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும்.
44ஜென்மசரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; ஜென்மசரீரமுமுண்டு, ஆவிக்குரிய சரீரமுமுண்டு.
45அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.
46ஆகிலும் ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல, ஜென்மசரீரமே முந்தினது; ஆவிக்குரிய சரீரம் பிந்தினது.
47முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர்.
48மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே.
49மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்ளுவோம்.
50சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை.
51இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.
52எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.
53அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும்.
54அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்.
55மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?
56மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம்.
57நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
58ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிறபிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com