22ஈசோப்புக் கொழுந்துகளின் கொத்தை எடுத்து கிண்ணியில் இருக்கும் இரத்தத்தில் தோய்த்து, அதில் இருக்கும் அந்த இரத்தத்தை வாசல் நிலைக்கால்களின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் தெளியுங்கள்; விடியற்காலம் வரைக்கும் உங்களில் ஒருவரும் வீட்டு வாசலைவிட்டுப் புறப்படவேண்டாம்.
23கர்த்தர் எகிப்தியரை அதம்பண்ணுகிறதற்குக் கடந்துவருவார்; நிலையின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் அந்த இரத்தத்தைக் காணும்போது, கர்த்தர் சங்காரக்காரனை உங்கள் வீடுகளில் உங்களை அதம்பண்ணுகிறதற்கு வரவொட்டாமல், வாசற்படியை விலகிக் கடந்துபோவார்.
24இந்தக் காரியத்தை உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நித்திய நியமமாகக் கைக்கொள்ளக்கடவீர்கள்.
25கர்த்தர் உங்களுக்குத் தாம் சொன்னபடி கொடுக்கப்போகிற தேசத்திலே நீங்கள் போய்ச் சேரும்போது, இந்த ஆராதனையைக் கைக்கொள்ளக்கடவீர்கள்.
26அப்பொழுது உங்கள் பிள்ளைகள்: இந்த ஆராதனையின் கருத்து என்ன என்று உங்களைக் கேட்டால்,
27இது கர்த்தருடைய பஸ்காவாகிய பலி; அவர் எகிப்தியரை அதம்பண்ணி, நம்முடைய வீடுகளைத் தப்பப்பண்ணினபோது, எகிப்திலிருந்த இஸ்ரவேல் புத்திரருடைய வீடுகளைக் கடந்துபோனார் என்று நீங்கள் சொல்லவேண்டும் என்றான். அப்பொழுது ஜனங்கள் தலை வணங்கிப் பணிந்துகொண்டார்கள்.
28இஸ்ரவேல் புத்திரர் போய் அப்படியே செய்தார்கள்; கர்த்தர் மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.
29நடுராத்திரியிலே சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளைமுதல் காவல் கிடங்கிலிருக்கும் சிறைப்பட்டவனின் தலைப்பிள்ளைவரைக்கும், எகிப்து தேசத்தில் இருந்த முதற்பேறனைத்தையும், மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும் கர்த்தர் அழித்தார்.
30அப்பொழுது பார்வோனும் அவனுடைய சகல ஊழியக்காரரும் எகிப்தியர் யாவரும் இராத்திரியிலே எழுந்திருந்தார்கள்; மகா கூக்குரல் எகிப்திலே உண்டாயிற்று; சாவில்லாத ஒரு வீடும் இருந்ததில்லை.
31இராத்திரியிலே அவன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: நீங்களும் இஸ்ரவேல் புத்திரரும் எழுந்து, என் ஜனங்களைவிட்டுப் புறப்பட்டுப் போய், நீங்கள் சொன்னபடியே கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்.
32நீங்கள் சொன்னபடியே உங்கள் ஆடுமாடுகளையும் ஓட்டிக்கொண்டுபோங்கள்; என்னையும் ஆசீர்வதியுங்கள் என்றான்.
33எகிப்தியர்: நாங்கள் எல்லாரும் சாகிறோமே என்று சொல்லி, தீவிரமாய் அந்த ஜனங்களைத் தேசத்திலிருந்து அனுப்பிவிட அவர்களை மிகவும் துரிதப்படுத்தினார்கள்.
34பிசைந்தமா புளிக்குமுன் ஜனங்கள் அதைப் பாத்திரத்துடனே தங்கள் வஸ்திரங்களில் கட்டி, தங்கள் தோள்மேல் எடுத்துக்கொண்டு போனார்கள்.
35மோசே சொல்லியிருந்தபடி இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தியரிடத்தில் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் வஸ்திரங்களையும் கேட்டார்கள்.
36கர்த்தர் ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவு கிடைக்கும்படி செய்ததினால், கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இவ்விதமாய் அவர்கள் எகிப்தியரைக் கொள்ளையிட்டார்கள்.
37இஸ்ரவேல் புத்திரர் ராமசேசை விட்டுக் கால்நடையாகப் பிரயாணம்பண்ணி, சுக்கோத்துக்குப் போனார்கள்; அவர்கள், பிள்ளைகள் தவிர ஆறுலட்சம் புருஷராயிருந்தார்கள்.
38அவர்களோடே கூடப் பல ஜாதியான ஜனங்கள் அநேகர் போனதுமன்றி, மிகுதியான ஆடுமாடுகள் முதலான மிருகஜீவன்களும் போயிற்று.
39எகிப்திலிருந்து அவர்கள் கொண்டு வந்த பிசைந்தமாவைப் புளிப்பில்லா அப்பங்களாகச் சுட்டார்கள்; அவர்கள் எகிப்தில் தரிக்கக்கூடாமல் துரத்திவிடப்பட்டதினால், அது புளியாதிருந்தது; அவர்கள் தங்களுக்கு வழிக்கென்று ஒன்றும் ஆயத்தம்பண்ணவில்லை.
40இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே குடியிருந்த காலம் நானூற்றுமுப்பது வருஷம்.
41நானூற்றுமுப்பது வருஷம் முடிந்த அன்றைத்தினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது.
42கர்த்தர் அவர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினதினால், இது அவருக்கென்று முக்கியமாய் ஆசரிக்கத்தக்க இராத்திரியாயிற்று; இஸ்ரவேல் சந்ததியார் எல்லாரும் தங்கள் தலைமுறைதோறும் கர்த்தருக்கு முக்கியமாய் ஆசரிக்கவேண்டிய இராத்திரி இதுவே.
43மேலும், கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: பஸ்காவின் நியமமாவது, அந்நிய புத்திரன் ஒருவனும் அதைப் புசிக்கவேண்டாம்.
44பணத்தினால் கொள்ளப்பட்ட அடிமையானவன் எவனும், நீ அவனுக்கு விருத்தசேதனம் பண்ணினபின், அவன் அதைப் புசிக்கலாம்.
45அந்நியனும் கூலியாளும் அதிலே புசிக்கவேண்டாம்.
46அதை ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் புசிக்கவேண்டும்; அந்த மாம்சத்தில் கொஞ்சமாகிலும் வீட்டிலிருந்து வெளியே கொண்டுபோகக்கூடாது; அதில் ஒரு எலும்பையும் முறிக்கக்கூடாது.
47இஸ்ரவேல் சபையார் எல்லாரும் அதை ஆசரிக்கக்கடவர்கள்.
48அந்நியன் ஒருவன் உன்னிடத்திலே தங்கி, கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கவேண்டுமென்று இருந்தால், அவனைச் சேர்ந்த ஆண்பிள்ளைகள் யாவரும் விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்; பின்பு அவன் சேர்ந்து அதை ஆசரிக்கவேண்டும்; அவன் சுதேசியைப்போல் இருப்பான்; விருத்தசேதனம் இல்லாத ஒருவரும் அதில் புசிக்கவேண்டாம்.
49சுதேசிக்கும் உங்களிடத்தில் தங்கும் பரதேசிக்கும் ஒரே பிரமாணம் இருக்கக்கடவது என்றார்.
50இப்படியே இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் செய்தார்கள்; கர்த்தர் மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.
51அன்றைத்தினமே கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை அணியணியாய் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினார்.
1சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள்.
2அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்.
3அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது:
4உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலேவிட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ?
5கண்டுபிடித்தபின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின்மேல் போட்டுக்கொண்டு,
6வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா?
7அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
8அன்றியும், ஒரு ஸ்திரீ பத்து வெள்ளிக்காசை உடையவளாயிருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் ஜாக்கிரதையாய்த் தேடாமலிருப்பாளோ?
9கண்டுபிடித்தபின்பு, தன் சிநேகிதிகளையும் அயல் வீட்டுக்காரிகளையும் கூட வரவழைத்து: காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட சந்தோஷப்படுங்கள் என்பாள் அல்லவா?
10அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
11பின்னும் அவர் சொன்னது: ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்.
12அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான்.
13சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான்.
14எல்லாவற்றையும் அவன் செவழித்தபின்பு, அந்த தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கி,
15அந்த தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான்.
16அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.
17அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.
18நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்.
19இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி;
20எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.
21குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான்.
22அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்.
23கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம்.
24என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள்.
25அவனுடைய மூத்தகுமாரன் வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு;
26ஊழியக்காரரில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான்.
27அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்த கன்றை அடிப்பித்தார் என்றான்.
28அப்பொழுது அவன் கோபமடைந்து, உள்ளே போக மனதில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து, அவனை வருந்தியழைத்தான்.
29அவன் தகப்பனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, இத்தனை வருஷகாலமாய் நான் உமக்கு ஊழியஞ்செய்து, ஒருக்காலும் உம்முடைய கற்பனையை மீறாதிருந்தும், என் சிநேகிதரோடே நான் சந்தோஷமாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை.
30வேசிகளிடத்தில் உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்.
31அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது.
32உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்கவேண்டுமே என்று சொன்னான் என்றார்.
1இப்போதோ என்னிலும் இளவயதானவர்கள் என்னைப் பரியாசம்பண்ணுகிறார்கள்; இவர்களுடைய பிதாக்களை நான் என் மந்தையைக் காக்கும் நாய்களோடே வைக்கவுங்கூட வெட்கப்பட்டிருப்பேன்.
2விருத்தாப்பியத்தினாலே பெலனற்றுப்போன அவர்கள் கைகளினால் எனக்கு என்ன உதவியிருந்தது.
3குறைச்சலினாலும் பசியினாலும் அவர்கள் வாடி, வெகுநாளாய்ப் பாழும் வெறுமையுமான அந்தரவெளிக்கு ஓடிப்போய்,
4செடிகளுக்குள் இருக்கிற தழைகளைப் பிடுங்குவார்கள்; காட்டுப்பூண்டுகளின் கிழங்குகள் அவர்களுக்கு ஆகாரமாயிருந்தது.
5அவர்கள் மனுஷரின் நடுவிலிருந்து துரத்தப்பட்டார்கள்; கள்ளனைத் துரத்துகிறதுபோல்: கள்ளன் கள்ளன் என்று அவர்களைத் துரத்திவிட்டார்கள்.
6அவர்கள் பள்ளத்தாக்குகளின் வெடிப்புகளிலும், பூமியின் கெபிகளிலும், கன்மலைகளிலும் போய் குடியிருந்தார்கள்.
7செடிகளுக்குள்ளிருந்து கதறி, காஞ்சொறிகளின்கீழ் ஒதுங்கினார்கள்.
8அவர்கள் மூடரின் மக்களும், நீசரின் பிள்ளைகளும், தேசத்திலிருந்து துரத்துண்டவர்களுமாய் இருந்தார்கள்.
9ஆனாலும் இப்போது நான் அவர்களுக்குப் பாட்டும் பழமொழியும் ஆனேன்.
10என்னை அருவருத்து, எனக்குத்தூரமாகி, என் முகத்துக்கு முன்பாகத் துப்பக் கூசாதிருக்கிறார்கள்.
11நான் கட்டின கட்டை அவர் அவிழ்த்து, என்னைச் சிறுமைப்படுத்தினபடியினால், அவர்களும் கடிவாளத்தை என் முகத்துக்கு முன்பாக உதறிவிட்டார்கள்.
12வலதுபாரிசத்தில் வாலிபர் எழும்பி, என் கால்களைத் தவறிவிழப்பண்ணி, தங்கள் கேடான வழிகளை எனக்கு நேராக ஆயத்தப்படுத்துகிறார்கள்.
13என் பாதையைக் கெடுத்து, என் ஆபத்தை வர்த்திக்கப்பண்ணுகிறார்கள்; அதற்கு அவர்களுக்கு ஒத்தாசைபண்ணுகிறவர்கள் தேவையில்லை.
14பெரிதான திறப்புண்டாக்கி, தாங்கள் கெடுத்த வழியில் புரண்டு வருகிறார்கள்.
15பயங்கரங்கள் என்மேல் திரும்பி வருகிறது, அவைகள் காற்றைப்போல என் ஆத்துமாவைப் பின்தொடருகிறது; என் சுகவாழ்வு ஒரு மேகத்தைப்போல் கடந்துபோயிற்று.
16ஆகையால் இப்போது என் ஆத்துமா என்னில் முறிந்துபோயிற்று; உபத்திரவத்தின் நாட்கள் என்னைப்பிடித்துக்கொண்டது.
17இராக்காலத்திலே என் எலும்புகள் துளைக்கப்பட்டு, என் நரம்புகளுக்கு இளைப்பாறுதல் இல்லாதிருக்கிறது.
18நோயின் உக்கிரத்தினால் என் உடுப்பு வேறுபட்டுப்போயிற்று; அது என் அங்கியின் கழுத்துப்பட்டையைப்போல, என்னைச் சுற்றிக்கொண்டது.
19சேற்றிலே தள்ளப்பட்டேன்; தூளுக்கும் சாம்பலுக்கும் ஒப்பானேன்.
20உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் எனக்கு மறுஉத்தரவு கொடாதிருக்கிறீர்; கெஞ்சி நிற்கிறேன், என்மேல் பராமுகமாயிருக்கிறீர்.
21என்மேல் கொடூரமுள்ளவராக மாறினீர்; உம்முடைய கரத்தின் வல்லமையால் என்னை விரோதிக்கிறீர்.
22நீர் என்னைத் தூக்கி, என்னைக் காற்றிலே பறக்கவிட்டு, என்னைப் பயத்தினால் உருகிப்போகப்பண்ணுகிறீர்.
23சகல ஜீவாத்துமாக்களுக்கும் குறிக்கப்பட்ட தாவரமாகிய மரணத்துக்கு என்னை ஒப்புக்கொடுப்பீர் என்று அறிவேன்.
24ஆனாலும் நான் யாதொருவனை அவன் ஆபத்திலே தவிக்கப்பண்ணினதும்,
25துன்னாளைக் கண்டவனுக்காக நான் அழாதிருந்ததும், எளியவனுக்காக என் ஆத்துமா வியாகுலப்படாதிருந்ததும் உண்டானால், அவர் என் மனுவுக்கு இடங்கொடாமல், எனக்கு விரோதமாய்த் தமது கையை நீட்டுவாராக.
26நன்மைக்குக் காத்திருந்த எனக்குத் தீமை வந்தது; வெளிச்சத்தை வரப்பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இருள் வந்தது.
27என் குடல்கள் கொதித்து, அமராதிருக்கிறது; உபத்திரவநாட்கள் என்மேல் வந்தது.
28வெயில் படாதிருந்தும், நான் கறுகறுத்துத் திரிகிறேன்; நான் சபையிலிருந்து எழுந்திருக்கும்போது அலறுகிறேன்.
29நான் மலைப்பாம்புகளுக்குச் சகோதரனும், கோட்டான்களுக்குத் தோழனுமானேன்.
30என் தோல் என்மேல் கறுத்துப்போயிற்று; என் எலும்புகள் உஷ்ணத்தினால் காய்ந்துபோயிற்று.
31என் சுரமண்டலம் புலம்பலாகவும், என் கின்னரம் அழுகிறவர்களின் ஓலமாகவும் மாறின.
1பரிசுத்தவான்களுக்காகச் சேர்க்கப்படும் தர்மப்பணத்தைக்குறித்து நான் கலாத்தியா நாட்டுச் சபைகளுக்குப்பண்ணின திட்டத்தின்படியே நீங்களும் செய்யுங்கள்.
2நான் வந்திருக்கும்போது பணஞ்சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவுக்குத்தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்.
3நான் வரும்போது உங்கள் உபகாரத்தை எருசலேமுக்குக் கொண்டுபோகும்படிக்கு, நீங்கள் தகுதியுள்ளவர்களாகக் குறிக்கிறவர்கள் எவர்களோ, அவர்களிடத்தில் நிருபங்களைக் கொடுத்து, அவர்களை அனுப்புவேன்.
4நானும் போகத்தக்கதானால், அவர்கள் என்னுடனேகூட வரலாம்.
5நான் மக்கெதோனியா நாட்டின் வழியாய்ப்போகிறபடியால், மக்கெதோனியா நாட்டைக் கடந்தபின்பு உங்களிடத்திற்கு வருவேன்.
6நான் எங்கே போனாலும் நீங்கள் என்னை வழிவிட்டனுப்பும்படிக்கு, நான் உங்களிடத்தில் சிலகாலம் தங்கவேண்டியதாயிருக்கும்; ஒருவேளை மழைகாலம் முடியும்வரைக்கும் இருப்பேன்.
7இப்பொழுது வழிப்பிரயாணத்திலே உங்களைக் கண்டுகொள்ளமாட்டேன்; கர்த்தர் உத்தரவு கொடுத்தால் உங்களிடத்தில் வந்து சிலகாலம் தங்கியிருக்கலாமென்று நம்புகிறேன்.
8ஆகிலும் பெந்தெகோஸ்தே பண்டிகைவரைக்கும் எபேசு பட்டணத்தில் இருப்பேன்.
9ஏனெனில் இங்கே பெரிதும் அநுகூலமுமான கதவு எனக்குத் திறக்கப்பட்டிருக்கிறது; விரோதஞ்செய்கிறவர்களும் அநேகர் இருக்கிறார்கள்.
10தீமோத்தேயு உங்களிடத்திற்கு வந்தானேயாகில், அவன் உங்களிடத்தில் பயமில்லாமலிருக்கப் பாருங்கள்; என்னைப்போல அவனும் கர்த்தருடைய கிரியையை நடப்பிக்கிறானே.
11ஆனபடியினால் ஒருவனும் அவனை அற்பமாய் எண்ணாதிருப்பானாக; சகோதரரோடேகூட அவன் வருகிறதற்கு நான் காத்திருக்கிறபடியால், என்னிடத்தில் வரும்படிக்கு அவனைச் சமாதானத்தோடே வழிவிட்டனுப்புங்கள்.
12சகோதரனாகிய அப்பொல்லோவைக்குறித்தோவெனில், சகோதரரோடேகூட உங்களிடத்தில் வரும்படிக்கு அவனை மிகவும் வேண்டிக்கொண்டேன்; ஆகிலும் இப்பொழுது வர அவனுக்கு மனதில்லை; அவனுக்கு நற்சமயம் உண்டாயிருக்கும்போது வருவான்.
13விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள்.
14உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது.
15சகோதரரே, ஸ்தேவானுடைய வீட்டார் அகாயா நாட்டிலே முதற்பலனானவர்களென்றும், பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்யும்படிக்குத் தங்களை ஒப்புவித்திருக்கிறார்களென்றும் அறிந்திருக்கிறீர்களே.
16இப்படிப்பட்டவர்களுக்கும், உடன்வேலையாட்களாய்ப் பிரயாசப்படுகிற மற்ற யாவருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்திருக்கவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
17ஸ்தேவான், பொர்த்துனாத்து, அகாயுக்கு என்பவர்கள் வந்ததற்காகச் சந்தோஷமாயிருக்கிறேன், நீங்கள் எனக்குச் செய்யவேண்டியதாயிருந்ததை அவர்கள் செய்திருக்கிறார்கள்.
18அவர்கள் என் ஆவிக்கும் உங்கள் ஆவிக்கும் ஆறுதல் செய்தார்கள்; இப்படிப்பட்டவர்களை அங்கிகாரம்பண்ணுங்கள்.
19ஆசியா நாட்டிலுள்ள சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள். ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் தங்கள் வீட்டிலே கூடுகிற சபையோடுங்கூடக் கர்த்தருக்குள் உங்களை மிகவும் வாழ்த்துகிறார்கள்.
20சகோதரரெல்லாரும் உங்களை வாழ்த்துகிறார்கள். ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள்.
21பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன்.
22ஒருவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அன்புகூராமற்போனால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன், கர்த்தர் வருகிறார்.
23கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக.
24கிறிஸ்து இயேசுவுக்குள்ளான என்னுடைய அன்பு உங்களெல்லாரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com