1ஆபிராமுடைய மனைவியாகிய சாராய்க்குப் பிள்ளையில்லாதிருந்தது. எகிப்து தேசத்தாளாகிய ஆகார் என்னும் பேர்கொண்ட ஒரு அடிமைப்பெண் அவளுக்கு இருந்தாள்.
2சாராய் ஆபிராமை நோக்கி: நான் பிள்ளைபெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்; என் அடிமைப்பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்றாள். சாராயின் வார்த்தைக்கு ஆபிராம் செவிகொடுத்தான்.
3ஆபிராம் கானான்தேசத்தில் பத்து வருஷம் குடியிருந்தபின்பு, ஆபிராமின் மனைவியாகிய சாராய் எகிப்து தேசத்தாளான தன் அடிமைப்பெண்ணாகிய ஆகாரை அழைத்து, அவளைத் தன் புருஷனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள்.
4அவன் ஆகாரோடே சேர்ந்தபோது, அவள் கர்ப்பந்தரித்தாள்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் நாச்சியாரை அற்பமாக எண்ணினாள்.
5அப்பொழுது சாராய் ஆபிராமை நோக்கி: எனக்கு நேரிட்ட அநியாயம் உமதுமேல் சுமரும்; என் அடிமைப்பெண்ணை உம்முடைய மடியிலே கொடுத்தேன்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டு என்னை அற்பமாக எண்ணுகிறாள்; கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயந்தீர்பாராக என்றாள்.
6அதற்கு ஆபிராம் சாராயை நோக்கி: இதோ, உன் அடிமைப்பெண் உன் கைக்குள் இருக்கிறாள்; உன் பார்வைக்கு நலமானபடி அவளுக்குச் செய் என்றான். அப்பொழுது சாராய் அவளைக் கடினமாய் நடத்தினபடியால் அவள் அவளை விட்டு ஓடிப்போனாள்.
7கர்த்தருடைய தூதனானவர் அவளை வனாந்தரத்திலே சூருக்குப்போகிற வழியருகே இருக்கிற நீரூற்றண்டையில் கண்டு:
8சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டார்; அவள்: நான் என் நாச்சியாராகிய சாராயைவிட்டு ஓடிப்போகிறேன் என்றாள்.
9அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர்: நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப்போய், அவள் கையின்கீழ் அடங்கியிரு என்றார்.
10பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: உன் சந்ததியை மிகவும் பெருகப்பண்ணுவேன்; அது பெருகி, எண்ணிமுடியாததாயிருக்கும் என்றார்.
11பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக.
12அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார்.
13அப்பொழுது அவள்: என்னைக்காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக்காண்கிற தேவன் என்று பேரிட்டாள்.
14ஆகையால், அந்தத் துரவு பெயர் லகாய்ரோயீ என்னப்பட்டது; அது காதேசுக்கும் பாரேத்துக்கும் நடுவே இருக்கிறது.
15ஆகார் ஆபிராமுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்; ஆபிராம் ஆகார் பெற்ற தன் குமாரனுக்கு இஸ்மவேல் என்று பேரிட்டான்.
16ஆகார் ஆபிராமுக்கு இஸ்மவேலைப் பெற்றபோது, ஆபிராம் எண்பத்தாறு வயதாயிருந்தான்.
1அப்பொழுது, எருசலேமிலிருந்து வந்த வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவினிடத்தில் வந்து:
2உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் போஜனம்பண்ணுகிறார்களே! என்றார்கள்.
3அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்?
4உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கற்பித்திருக்கிறாரே.
5நீங்களோ, எவனாகிலும் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தன் தாயையாவது கனம்பண்ணாமற்போனாலும், அவனுடைய கடமை தீர்ந்ததென்று போதித்து,
6உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள்.
7மாயக்காரரே, உங்களைக்குறித்து:
8இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது;
9மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்.
10பின்பு அவர் ஜனங்களை வரவழைத்து, அவர்களை நோக்கி: நீங்கள் கேட்டு உணருங்கள்.
11வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.
12அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: பரிசேயர் இந்த வசனத்தைக் கேட்டு இடறலடைந்தார்கள் என்று அறிவீரா என்றார்கள்.
13அவர் பிரதியுத்தரமாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும்.
14அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.
15அப்பொழுது, பேதுரு அவரை நோக்கி: இந்த உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டும் என்றான்.
16அதற்கு இயேசு: நீங்களும் இன்னும் உணர்வில்லாதவர்களாயிருக்கிறீர்களா?
17வாய்க்குள்ளே போகிறதெல்லாம் வயிற்றில் சென்று ஆசனவழியாய்க் கழிந்துபோகும் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லையா?
18வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.
19எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்.
20இவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்; கைகழுவாமல் சாப்பிடுகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது என்றார்.
21பின்பு, இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் திசைகளுக்குப் போனார்.
22அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.
23அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.
24அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்லவென்றார்.
25அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப் பணிந்துகொண்டாள்.
26அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.
27அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.
28இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரியது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்.
29இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கலிலேயாக் கடலருகே வந்து, ஒரு மலையின்மேல் ஏறி, அங்கே உட்கார்ந்தார்.
30அப்பொழுது, சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலிய அநேகரை, திரளான ஜனங்கள் கூட்டிக்கொண்டு இயேசுவினிடத்தில் வந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் சொஸ்தப்படுத்தினார்.
31ஊமையர் பேசுகிறதையும், ஊனர் சொஸ்தமடைகிறதையும், சப்பாணிகள் நடக்கிறதையும், குருடர் பார்க்கிறதையும் ஜனங்கள் கண்டு, ஆச்சரியப்பட்டு, இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
32பின்பு, இயேசு தம்முடைய சீஷர்களை அழைத்து: ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் என்னிடத்தில் மூன்றுநாள் தங்கியிருந்து சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிட எனக்கு மனதில்லை, வழியில் சோர்ந்துபோவார்களே என்றார்.
33அதற்கு அவருடைய சீஷர்கள்: இவ்வளவு திரளான ஜனங்களுக்குத் திருப்தியுண்டாகும்படி வேண்டிய அப்பங்கள் இந்த வனாந்தரத்திலே நமக்கு எப்படி அகப்படும் என்றார்கள்.
34அதற்கு இயேசு: உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்களும் சில சிறு மீன்களும் உண்டு என்றார்கள்.
35அப்பொழுது அவர் ஜனங்களைத் தரையில் பந்தியிருக்கக் கட்டளையிட்டு,
36அந்த ஏழு அப்பங்களையும் அந்த மீன்களையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, பிட்டுத் தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குப் பரிமாறினார்கள்.
37எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளை ஏழு கூடைநிறைய எடுத்தார்கள்.
38ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர, சாப்பிட்ட புருஷர் நாலாயிரம்பேராயிருந்தார்கள்.
39அவர் ஜனங்களை அனுப்பிவிட்டு படவில் ஏறி, மக்தலாவின் எல்லைகளில் வந்தார்.
1ஜனங்களுக்குள் அநேகரும் அவர்களுடைய ஸ்திரீகளும் யூதராகிய தங்கள் சகோதரர்மேல் முறையிடுகிற பெரிய கூக்குரலுண்டாயிற்று.
2அதென்னவென்றால், அவர்களில் சிலர்: நாங்கள் எங்கள் குமாரரோடும் எங்கள் குமாரத்திகளோடும் அநேகரானபடியினால், சாப்பிட்டுப் பிழைக்கும்படிக்கு நாங்கள் தானியத்தைக் கடனாக வாங்கினோம் என்றார்கள்.
3வேறு சிலர்: எங்கள் நிலங்களையும் எங்கள் திராட்சத்தோட்டங்களையும் எங்கள் வீடுகளையும் நாங்கள் அடைமானமாக வைத்து, இந்தப் பஞ்சத்திலே தானியம் வாங்கினோம் என்றார்கள்.
4இன்னும் சிலர்: ராஜாவுக்குத் தீர்வைசெலுத்த, நாங்கள் எங்கள் நிலங்கள்மேலும் எங்கள் திராட்சத்தோட்டங்கள்மேலும், பணத்தைக் கடனாக வாங்கினோம் என்றும்;
5எங்கள் உடலும் எங்கள் சகோதரர் உடலும் சரி; எங்கள் பிள்ளைகளும் அவர்கள் பிள்ளைகளும் சரி; ஆனாலும், இதோ, நாங்கள் எங்கள் குமாரரையும் எங்கள் குமாரத்திகளையும் அடிமைத்தனத்திற்கு உட்படுத்தவேண்டியதாயிருக்கிறது; அப்படியே எங்கள் குமாரத்திகளில் சிலர் அடிமைப்பட்டுமிருக்கிறார்கள்; அவர்களை மீட்க எங்களுக்கு நிர்வாகமில்லை; எங்கள் நிலங்களும் எங்கள் திராட்சத்தோட்டங்களும் வேறே மனிதர் கைவசமாயிற்று என்றார்கள்.
6அவர்கள் கூக்குரலையும், இந்த வார்த்தைகளையும் நான் கேட்டபோது, மிகவும் கோபங்கொண்டு,
7என் மனதிலே ஆலோசனைபண்ணி, பிற்பாடு பிரபுக்களையும் அதிகாரிகளையும் கடிந்துகொண்டு: நீங்கள் அவரவர் தங்கள் சகோதரர்மேல் ஏன் வட்டி சுமத்துகிறீர்கள் என்று சொல்லி, அவர்களுக்கு விரோதமாக ஒரு பெரிய சபை கூடிவரச்செய்து,
8அவர்களை நோக்கி: புறஜாதியாருக்கு விற்கப்பட்ட யூதராகிய எங்கள் சகோதரரை நாங்கள் எங்கள் சக்திக்குத்தக்கதாய் மீட்டிருக்கையில், நீங்கள் திரும்ப உங்கள் சகோதரரை விற்கலாமா? இவர்கள் நமக்கு விலைப்பட்டுப்போகலாமா என்றேன்; அப்பொழுது அவர்கள் மறு உத்தரவு சொல்ல இடமில்லாமல் மவுனமாயிருந்தார்கள்.
9பின்னும் நான் அவர்களை நோக்கி: நீங்கள் செய்கிற காரியம் நல்லதல்ல; நம்முடைய பகைஞராகிய புறஜாதியார் நிந்திக்கிறதினிமித்தம் நீங்கள் நம்முடைய தேவனுக்குப் பயந்து நடக்கவேண்டாமா?
10நானும் என் சகோதரரும் என் வேலைக்காரரும் இவ்விதமாகவா அவர்களுக்குப் பணமும் தானியமும் கடன் கொடுத்திருக்கிறோம்? இந்த வட்டியை விட்டுவிடுவோமாக.
11நீங்கள் இன்றைக்கு அவர்கள் நிலங்களையும், அவர்கள் திராட்சத்தோட்டங்களையும், அவர்கள் ஒலிவத்தோப்புகளையும், அவர்கள் வீடுகளையும், நீங்கள் பணத்திலும் தானியத்திலும் திராட்சரசத்திலும் எண்ணெயிலும் நூற்றுக்கொன்று வீதமாக அவர்களிடத்தில் தண்டிவருகிற வட்டியையும், அவர்களுக்குத் திரும்பக் கொடுத்துவிடுங்கள் என்றேன்.
12அதற்கு அவர்கள்: நாங்கள் அதைத் திரும்பக் கொடுத்துவிட்டு, இனி அப்படி அவர்களிடத்தில் கேட்கமாட்டோம்; நீர் சொல்லுகிறபடியே செய்வோம் என்றார்கள்; அப்பொழுது நான் ஆசாரியர்களை அழைத்து, அவர்கள் இந்த வார்த்தையின்படி செய்ய அவர்களை ஆணையிடுவித்துக்கொண்டேன்.
13நான் என் வஸ்திரத்தை உதறிப்போட்டு, இப்படி இந்த வார்த்தையை நிறைவேற்றாத எந்த மனிதனையும் அவன் வீட்டிலும் அவன் சம்பாத்தியத்திலும் இருந்து தேவன் உதறிப்போடக்கடவர்; இந்தப் பிரகாரமாக அவன் உதறிப்போடப்பட்டு, வெறுமையாய்ப் போவானாக என்றேன்; அதற்குச் சபையார் எல்லாரும் ஆமென் என்று சொல்லி, கர்த்தரைத் துதித்தார்கள்; பின்பு ஜனங்கள் இந்த வார்த்தையின்படியே செய்தார்கள்.
14நான் யூதா தேசத்திலே அதிபதியாயிருக்கும்படி ராஜாவாகிய அர்தசஷ்டா எனக்குக் கற்பித்த நாளாகிய அவருடைய இருபதாம் வருஷம் தொடங்கி அவருடைய முப்பத்திரண்டாம் வருஷம் வரைக்குமிருந்த பன்னிரண்டு வருஷகாலமாய், நானும் என் சகோதரரும் அதிபதிகள் வாங்குகிற படியை வாங்கிச் சாப்பிடவில்லை.
15எனக்கு முன்னிருந்த அதிபதிகள் ஜனங்களுக்குப் பாரமாயிருந்து, அவர்கள் கையிலே அப்பமும் திராட்சரசமும் வாங்கினதும் அல்லாமல், நாற்பது சேக்கல் வெள்ளியும் வாங்கிவந்தார்கள்; அவர்கள் வேலைக்காரர் முதலாய் ஜனங்கள்மேல் அதிகாரம் செலுத்தினார்கள்; நானோ தேவனுக்குப் பயந்ததினால் இப்படிச் செய்யவில்லை.
16ஒரு வயலையாவது நாங்கள் கொள்ளவில்லை; அந்த அலங்கத்தின் வேலையிலே முயன்று நின்றேன்; என் வேலைக்காரரனைவரும் கூட்டமாய் அந்த வேலைக்குக் கூடிவந்தார்கள்.
17யூதரும் மூப்பருமான நூற்றைம்பதுபேரும், எங்களைச் சுற்றிலுமிருக்கிற புறஜாதிகளிடத்திலிருந்து எங்களிடத்திற்கு வந்தவர்களும் என் பந்தியில் சாப்பிட்டார்கள்.
18நாளொன்றுக்கு ஒரு காளையும், முதல்தரமான ஆறு ஆடும் சமைக்கப்பட்டது; பட்சிகளும் சமைக்கப்பட்டது; பத்துநாளைக்கு ஒருதரம் நானாவிதத் திராட்சரசமும் செலவழிந்தது; இப்படியெல்லாம் இருந்தபோதும், இந்த ஜனங்கள் பட்டபாடு கடினமாயிருந்தபடியால், அதிபதிகள் வாங்குகிற படியை நான் வாங்கவில்லை.
19என் தேவனே, நான் இந்த ஜனத்துக்காகச் செய்த எல்லாவற்றின்படியும் எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்.
1சிலர் யூதேயாவிலிருந்து வந்து: நீங்கள் மோசேயினுடைய முறைமையின்படியே விருத்தசேதனமடையாவிட்டால், இரட்சிக்கப்படமாட்டீர்கள் என்று சகோதரருக்குப் போதகம் பண்ணினார்கள்.
2அதினாலே அவர்களுக்கும் பவுல் பர்னபா என்பவர்களுக்கும் மிகுந்த வாக்குவாதமும் தர்க்கமும் உண்டானபோது, அந்த விஷயத்தினிமித்தம் பவுலும் பர்னபாவும் அவர்களைச் சேர்ந்தவேறு சிலரும் எருசலேமிலிருக்கிற அப்போஸ்தலரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் போகவேண்டுமென்று தீர்மானித்தார்கள்.
3அந்தப்படி அவர்கள் சபையாரால் வழிவிட்டனுப்பப்பட்டு, பெனிக்கே சமாரியா நாடுகளின் வழியாய்ப் போய், புறஜாதியார் மனந்திரும்பின செய்தியை அறிவித்து, சகோதரர் எல்லாருக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கினார்கள்.
4அவர்கள் எருசலேமுக்கு வந்து, சபையாராலும் அப்போஸ்தலராலும் மூப்பராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையெல்லாம் அறிவித்தார்கள்.
5அப்பொழுது பரிசேய சமயத்தாரில் விசுவாசிகளான சிலர் எழுந்து, அவர்களை விருத்தசேதனம் பண்ணுகிறதும் மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளும்படி அவர்களுக்குக் கற்பிக்கிறதும் அவசியம் என்றார்கள்.
6அப்போஸ்தலரும், மூப்பரும் இந்தக் காரியத்தைக்குறித்து ஆலோசனைபண்ணும்படி கூடினார்கள்.
7மிகுந்த தர்க்கம் உண்டானபோது, பேதுரு எழுந்து, அவர்களை நோக்கி: சகோதரரே, நீங்கள் அறிந்திருக்கிறபடி புறஜாதியார் என்னுடைய வாயினாலே சுவிசேஷ வசனத்தைக் கேட்டு விசுவாசிக்கும்படி தேவன் அநேக நாட்களுக்கு முன்னே உங்களில் ஒருவனாகிய என்னைத் தெரிந்துகொண்டார்.
8இருதயங்களை அறிந்திருக்கிற தேவன் நமக்குப் பரிசுத்தஆவியைத் தந்தருளினதுபோல அவர்களுக்கும் தந்தருளி, அவர்களைக்குறித்துச் சாட்சிகொடுத்தார்;
9விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் சுத்தமாக்கி, நமக்கும் அவர்களுக்கும் யாதொரு வித்தியாசமுமிராதபடி செய்தார்.
10இப்படியிருக்க, நம்முடைய பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கக்கூடாதிருந்த நுகத்தடியைச் சீஷர் கழுத்தின்மேல் சுமத்துவதினால், நீங்கள் தேவனைச் சோதிப்பானேன்?
11கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையினாலே அவர்கள் இரட்சிக்கப்படுகிறது எப்படியோ, அப்படியே நாமும் இரட்சிக்கப்படுவோமென்று நம்பியிருக்கிறோமே என்றான்.
12அப்பொழுது கூடிவந்திருந்த யாவரும் அமைந்திருந்து, பர்னபாவும் பவுலும் தங்களைக்கொண்டு தேவன் புறஜாதிகளுக்குள்ளே செய்த அடையாளங்கள் அற்புதங்கள் யாவையும் விவரித்துச் சொல்லக் கேட்டார்கள்.
13அவர்கள் பேசி முடிந்தபின்பு, யாக்கோபு அவர்களை நோக்கி: சகோதரரே, எனக்குச் செவிகொடுங்கள்.
14தேவன் புறஜாதிகளினின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தைத் தெரிந்துகொள்ளும்படி முதல்முதல் அவர்களுக்குச் கடாட்சித்தருளினவிதத்தைச் சிமியோன் விவரித்துச் சொன்னாரே.
15அதற்குத் தீர்க்கதரிசிகளுடைய வாக்கியங்களும் ஒத்திருக்கிறது.
16எப்படியெனில், மற்ற மனுஷரும், என்னுடைய நாமந்தரிக்கப்படும் சகல ஜாதிகளும், கர்த்தரைத் தேடும்படிக்கு,
17நான் இதற்குப்பின்பு திரும்பிவந்து, விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை மறுபடியும் எடுப்பித்து, அதிலே பழுதாய்ப்போனவைகளை மறுபடியும் சீர்ப்படுத்தி, அதைச் செவ்வையாக நிறுத்துவேன் என்று இவைகளையெல்லாஞ்செய்கிற கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது.
18உலகத்தோற்றமுதல் தேவனுக்குத் தம்முடைய கிரியைகளெல்லாம் தெரிந்திருக்கிறது.
19ஆதலால் புறஜாதிகளில் தேவனிடத்தில் திரும்புகிறவர்களைக் கலங்கப்பண்ணலாகாதென்றும்,
20விக்கிரகங்களுக்குப் படைத்த அசுசியானவைகளுக்கும், வேசித்தனத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், இரத்தத்திற்கும், விலகியிருக்கும்படி அவர்களுக்கு நாம் எழுதவேண்டுமென்றும் நான் தீர்மானிக்கிறேன்.
21மோசேயின் ஆகமங்கள் ஓய்வுநாள்தோறும் ஜெப ஆலயங்களில் வாசிக்கப்பட்டு வருகிறபடியால், பூர்வகாலந்தொடங்கிச் சகல பட்டணங்களிலும் அந்த ஆகமங்களைப் பிரசங்கிக்கிறவர்களும் உண்டே என்றான்.
22அப்பொழுது தங்களில் சிலரைத் தெரிந்துகொண்டு பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோகியாவுக்கு அனுப்புகிறது அப்போஸ்தலருக்கும் மூப்பருக்கும் சபையாரெல்லாருக்கும் நலமாகக் கண்டது. அவர்கள் யாரென்றால், சகோதரரில் விசேஷித்தவர்களாகிய பர்சபா என்று மறுபேர்கொண்ட யூதாவும் சீலாவுமே.
23இவர்கள் கையில் அவர்கள் எழுதிக்கொடுத்தனுப்பின நிருபமாவது: அப்போஸ்தலரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோகியாவிலும் சீரியாவிலும் சிலிசியாவிலும் இருக்கும் புறஜாதியாராகிய சகோதரருக்கு வாழ்த்துதல் சொல்லி எழுதிய நிருபம் என்னவென்றால்:
24எங்களால் கட்டளைபெறாத சிலர் எங்களிடத்திலிருந்து புறப்பட்டு, நீங்கள் விருத்தசேதனமடையவேண்டுமென்றும், நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளவேண்டுமென்றும் சொல்லி, இப்படிப்பட்ட வார்த்தைகளால் உங்களைக் கலக்கி, உங்கள் ஆத்துமாக்களைப் புரட்டினார்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டபடியினாலே,
25நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்திற்காகத் தங்கள் பிராணனையும் ஒப்புக்கொடுக்கத் துணிந்தவர்களும் எங்களுக்குப் பிரியமானவர்களுமாயிருக்கிற பர்னபா பவுல் என்பவர்களோடுங்கூட,
26எங்களால் தெரிந்துகொள்ளப்பட்ட சில மனுஷரை உங்களிடத்திற்கு அனுப்புகிறது ஒருமனப்பட்டுக் கூடின எங்களுக்கு நலமாகக்கண்டது.
27அந்தப்படியே யூதாவையும் சீலாவையும் அனுப்பியிருக்கிறோம். அவர்களும் இவைகளை வாய்மொழியாக உங்களுக்கு அறிவிப்பார்கள்.
28எவையெனில், விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், நீங்கள் விலகியிருக்கவேண்டுமென்பதே.
29அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது; இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக் கொள்ளுவது நலமாயிருக்கும். சுகமாயிருப்பீர்களாக என்று எழுதினார்கள்.
30அவர்கள் அனுப்பிவிடப்பட்டு, அந்தியோகியாவுக்கு வந்து, சபையைக் கூடிவரச்செய்து, நிருபத்தை ஒப்புவித்தார்கள்.
31அதை அவர்கள் வாசித்து, அதனாலுண்டாகிய ஆறுதலுக்காகச் சந்தோஷப்பட்டார்கள்.
32யூதா சீலா என்பவர்களும் தீர்க்கதரிசிகளாயிருந்தபடியினாலே அநேக வார்த்தைகளினால் சகோதரருக்குப் புத்தி சொல்லி, அவர்களைத் திடப்படுத்தி,
33சிலகாலம் அங்கேயிருந்து, பின்பு சகோதரரால் சமாதானத்தோடே அப்போஸ்தலரிடத்திற்கு அனுப்பிவிடப்பட்டார்கள்.
34ஆகிலும் சீலாவுக்கு அங்கே தரித்திருக்கிறது நலமாய்க் கண்டது.
35பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவிலே சஞ்சரித்து, வேறே அநேகரோடுங்கூடக் கர்த்தருடைய வசனத்தை உபதேசித்துப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார்கள்.
36சிலநாளைக்குப்பின்பு பவுல் பர்னபாவை நோக்கி: நாம் கர்த்தருடைய வசனத்தை அறிவித்திருக்கிற சகல பட்டணங்களிலுமுள்ள சகோதரர்கள் எப்படியிருக்கிறார்களென்று போய்ப்பார்ப்போம் வாரும் என்றான்.
37அப்பொழுது பர்னபா என்பவன் மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானைக்கூட அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்றான்.
38பவுலோ: அவன் பம்பிலியா நாட்டிலே நம்மை விட்டுப் பிரிந்து நம்மோடேகூட ஊழியத்துக்கு வராததினாலே, அவனை அழைத்துக்கொண்டு போகக்கூடாது என்றான்.
39இதைப்பற்றி அவர்களுக்குள்ளே கடுங்கோபமூண்டபடியினால் அவர்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்தார்கள். பர்னபா மாற்குவைக் கூட்டிக்கொண்டு கப்பல் ஏறிச் சீப்புருதீவுக்குப் போனான்.
40பவுலோ சீலாவைத் தெரிந்துகொண்டு, சகோதரராலே தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டு, புறப்பட்டு,
41சீரியாவிலும் சிலிசியாவிலும் திரிந்து, சபைகளைத் திடப்படுத்தினான்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com