‹ முகப்புமுழுத் திட்டம்

ஜனவரி 16 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்ஜனவரி 16அடுத்த நாள் ›
குடும்பம்

ஆதியாகமம் 17

முழு அதிகாரம் ›

1ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு.

2நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார்.

3அப்பொழுது ஆபிராம் முகங்குப்புற விழுந்து வணங்கினான். தேவன் அவனோடே பேசி:

4நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய்.

5இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும்.

6உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்.

7உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.

8நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்தரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்றார்.

9பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: இப்பொழுது நீயும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததியும், என் உடன்படிக்கையைக் கைக்கொள்ளுங்கள்.

10எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ள வேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்;

11உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம்பண்ணக்கடவீர்கள்; அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.

12உங்களில் தலைமுறை தலைமுறையாகப் பிறக்கும் ஆண்பிள்ளைகளெல்லாம் எட்டாம் நாளிலே விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்; வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன் வித்தல்லாத அந்நியனிடத்தில் பணத்திற்குக் கொள்ளப்பட்ட எந்தப் பிள்ளையும், அப்படியே விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்.

13உன் வீட்டிலே பிறந்த பிள்ளையும், உன் பணத்திற்குக் கொள்ளப்பட்டவனும், விருத்தசேதனம்பண்ணப்படவேண்டியது அவசியம்; இப்படி என் உடன்படிக்கை உங்கள் மாம்சத்திலே நித்திய உடன்படிக்கையாக இருக்கக்கடவது.

14நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையிருந்தால், அந்த ஆத்துமா என் உடன்படிக்கையை மீறினபடியால், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார்.

15பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: உன் மனைவி சாராயை இனி சாராய் என்று அழையாதிருப்பாயாக; சாராள் என்பது அவளுக்குப் பேராயிருக்கும்.

16நான் அவளை ஆசீர்வதித்து, அவளாலே உனக்கு ஒரு குமாரனையும் தருவேன்; அவள் ஜாதிகளுக்குத் தாயாகவும், அவளாலே ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாகவும், அவளை ஆசீர்வதிப்பேன் என்றார்.

17அப்பொழுது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து நகைத்து: நூறுவயதானவனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதான சாராள் பிள்ளை பெறுவாளோ? என்று தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டு,

18இஸ்மவேல் உமக்கு முன்பாகப் பிழைப்பானாக! என்று ஆபிரகாம் தேவனிடத்தில் விண்ணப்பம்பண்ணினான்.

19அப்பொழுது தேவன்: உன் மனைவியாகிய சாராள் நிச்சயமாய் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு ஈசாக்கு என்று பேரிடுவாயாக; என் உடன்படிக்கையை அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் அவன் சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.

20இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன்; நான் அவனை ஆசீர்வதித்து, அவனை மிகவும் அதிகமாகப் பலுகவும் பெருகவும் பண்ணுவேன்; அவன் பன்னிரண்டு பிரபுக்களைப் பெறுவான்; அவனைப் பெரிய ஜாதியாக்குவேன்.

21வருகிற வருஷத்தில் குறித்தக்காலத்திலே சாராள் உனக்குப் பெறப்போகிற ஈசாக்கோடே நான் என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன் என்றார்.

22தேவன் ஆபிரகாமோடே பேசிமுடிந்தபின்பு, அவர் அவனைவிட்டு எழுந்தருளினார்.

23அப்பொழுது ஆபிரகாம் தன் குமாரனாகிய இஸ்மவேலையும், தன் வீட்டிலே பிறந்த யாவரையும், தான் பணத்திற்குக் கொண்ட அனைவருமாகிய தன் வீட்டிலுள்ள ஆண்பிள்ளைகள் எல்லாரையும் சேர்த்து, தேவன் தனக்குச் சொன்னபடி, அவர்கள் நுனித்தோலின் மாம்சத்தை அந்நாளிலேதானே விருத்தசேதனம் பண்ணினான்.

24ஆபிரகாமுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படும்போது, அவன் தொண்ணூற்றொன்பது வயதாயிருந்தான்.

25அவனுடைய குமாரன் இஸ்மவேலுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படும்போது, அவன் பதின்மூன்று வயதாயிருந்தான்.

26ஒரே நாளில் ஆபிரகாமும் அவன் குமாரன் இஸ்மவேலும் விருத்தசேதனம்பண்ணப்பட்டார்கள்.

27வீட்டிலே பிறந்தவர்களும் அந்நியரிடத்திலே பணத்திற்குக் கொள்ளப்பட்டவர்களுமாகிய அவன் வீட்டு மனுஷர்கள் எல்லாரும் அவனோடேகூட விருத்தசேதனம்பண்ணப்பட்டார்கள்.

1பரிசேயரும், சதுசேயரும் அவரைச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து: வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள்.

2அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: அஸ்தமனமாகிறபோது, செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் வெளிவாங்கும் என்று சொல்லுகிறீர்கள்.

3உதயமாகிறபோது, செவ்வானமும் மந்தாரமுமாயிருக்கிறது, அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்காரரே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா?

4இந்தப் பொல்லாத விபசாரசந்ததியார் அடையாளம் தேடுகிறார்கள்; யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, அவர்களை விட்டுப் புறப்பட்டுப்போனார்.

5அவருடைய சீஷர்கள் அக்கரை சேர்ந்தபோது, அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்.

6இயேசு அவர்களை நோக்கி: பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார்.

7நாம் அப்பங்களைக் கொண்டுவராதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள்.

8இயேசு அதை அறிந்து: அற்பவிசுவாசிகளே, அப்பங்களைக் கொண்டுவராததைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே யோசனைபண்ணுகிறதென்ன?

9இன்னும் நீங்கள் உணரவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்பதையும்;

10ஏழு அப்பங்களை நாலாயிரம்பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்பதையும் நீங்கள் நினைவுகூராமலிருக்கிறீர்களா?

11பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவுக்கு எச்சரிக்கையாயிருக்கவேண்டும் என்று நான் சொன்னது அப்பத்தைக்குறித்துச் சொல்லவில்லை என்று நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்.

12அப்பொழுது, அவர் அப்பத்தின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருக்கவேண்டுமென்று சொல்லாமல், பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் உபதேசத்தைக்குறித்தே அப்படிச் சொன்னார் என்று அறிந்துகொண்டார்கள்.

13பின்பு, இயேசு பிலிப்பு செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.

14அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறு சிலர் எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.

15அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்.

16சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.

17இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.

18மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.

19பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.

20அப்பொழுது, தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்குத் தம்முடைய சீஷர்களுக்குக் கட்டளையிட்டார்.

21அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும், வேதபாரகராலும் பலபாடுகள்பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார்.

22அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத்தொடங்கினான்.

23அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.

24அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.

25தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான்.

26மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?

27மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.

28இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

தனிவாசிப்பு

1நான் அலங்கத்தைக் கட்டிமுடித்ததையும், இனி அதிலே திறப்பு ஒன்றுமில்லை என்பதையும், சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியனான கேஷேமும் எங்களுக்குண்டாயிருந்த மற்றப் பகைஞரும் கேள்விப்பட்டபோது,

2நான் வாசல்களுக்கு இன்னும் கதவு போடாதிருக்கையில், சன்பல்லாத்தும், கேஷேமும் ஆள் அனுப்பி: நாம் ஓனோ பள்ளத்தாக்கில் இருக்கிற கிராமங்கள் ஒன்றில் ஒருவரையொருவர் கண்டு பேசுவோம் வாரும் என்று கூப்பிட்டார்கள்; அவர்களோவென்றால் எனக்குப்பொல்லாப்புச் செய்ய நினைத்தார்கள்.

3அப்பொழுது நான் அவர்களிடத்திற்கு ஆட்களை அனுப்பி: நான் பெரிய வேலையைச் செய்கிறேன், நான் வரக்கூடாது; நான் அந்த வேலையைவிட்டு உங்களிடத்திற்கு வருகிறதினால் அது மினக்கெட்டுப்போவானேன் என்று சொல்லச்சொன்னேன்.

4அவர்கள் இந்தப்பிரகாரமாக நாலுதரம் எனக்குச் சொல்லியனுப்பினார்கள்; நானும் இந்தப்பிரகாரமாகவே அவர்களுக்கு மறுமொழி அனுப்பினேன்.

5ஐந்தாந்தரமும் சன்பல்லாத்து அந்தப் பிரகாரமாகவே தன் வேலைக்காரனையும், அவன் கையிலே முத்திரைபோடாத ஒரு கடிதத்தையும் எனக்கு அனுப்பினான்.

6அதிலே: நீரும் யூதரும் கலகம்பண்ண நினைக்கிறீர்கள் என்றும், அதற்காக நீர் அலங்கத்தைக் கட்டுகிறீர் என்றும், இவ்விதமாக நீர் அவர்களுக்கு ராஜாவாகப் போகிறீர் என்றும்,

7யூதாவிலே ஒரு ராஜா இருக்கிறார் என்று உம்மைக்குறித்து எருசலேமிலே கூறுகிற தீர்க்கதரிசிகளையும் சம்பாதித்தீரென்றும் புறஜாதிகளுக்குள்ளே பிரஸ்தாபமாயிருக்கிறது, கஷ்மூவும் அப்படிச் சொல்லுகிறான்; இப்போதும் இந்தச் செய்தி ராஜாவுக்கு எட்டுமே; ஆகையால் நாம் ஒருவரோடொருவர் ஆலோசனை பண்ணுகிறதற்காக நீர் வரவேண்டும் என்று எழுதியிருந்தது.

8அதற்கு நான்: நீர் சொல்லுகிற அந்தக் காரியங்களில் ஒன்றும் நடக்கவில்லை; அவைகள் உம்முடைய மனோராஜ்யமே ஒழிய வேறல்ல என்று சொல்லியனுப்பினேன்.

9அந்த வேலை நடந்தேறாதபடிக்கு, எங்கள் கை சலித்துப்போகும் என்று சொல்லி, அவர்கள் எல்லாரும் எங்களைப் பயமுறுத்தப்பார்த்தார்கள். ஆதலால் தேவனே, நீர் என் கைகளைத் திடப்படுத்தியருளும்.

10மெகதாபெயேலின் குமாரனாகிய தெலாயாவின் மகன் செமாயா தன் வீட்டிலே அடைக்கப்பட்டிருக்கும்போது, நான் அவனிடத்தில் போனேன்; அப்பொழுது அவன்: நாம் இருவருமாய் தேவனுடைய வீடாகிய ஆலயத்துக்குள்ளே போய், தேவாலயத்தின் கதவுகளைப் பூட்டுவோம் வாரும்; உம்மைக் கொன்றுபோட வருவார்கள், இரவிலே உம்மைக் கொன்றுபோட வருவார்கள் என்றான்.

11அதற்கு நான்: என்னைப்போன்ற மனிதன் ஓடிப்போவானோ? என்னைப் போன்றவன் உயிர் பிழைக்கும்படி தேவாலயத்திலே போய்ப் பதுங்குவானோ? நான் போவதில்லை என்றேன்.

12தேவன் அவனை அனுப்பவில்லையென்றும், தொபியாவும் சன்பல்லாத்தும் அவனுக்குக் கூலிகொடுத்ததினால், அவன் எனக்கு விரோதமாய் அந்தத் தீர்க்கதரிசனத்தைச் சொன்னான் என்றும் அறிந்துகொண்டேன்.

13நான் ப.யந்து அப்படிச் செய்து பாவங் கட்டிக்கொள்ளுகிறதற்கும், என்னை நிந்திக்கத்தக்க அபகீர்த்திக்கு முகாந்தரம் உண்டாக்குகிறதற்கும் அவனுக்குக் கைக்கூலி கொடுத்திருந்தார்கள்.

14என் தேவனே, தொபியாவும் சன்பல்லாத்தும் செய்த இந்தச் செய்கைகளுக்குத்தக்கதாக நீர் அவர்களையும், நொவதியாள் என்னும் தீர்க்கதரிசியானவளையும், எனக்குப் பயமுண்டாக்கப்பார்த்த மற்றத் தீர்க்கதரிசிகளையும் நினைத்துக்கொள்ளும்.

15அப்படியே அலங்கமானது ஐம்பத்திரண்டு நாளைக்குள்ளே கட்டப்பட்டு, எலூல் மாதம் இருபத்தைந்தாந்தேதியிலே முடிந்தது.

16எங்கள் பகைஞர் எல்லாரும் அதைக் கேட்டபோதும், எங்கள் சுற்றுப்புறத்தாராகிய புறஜாதியான அனைவரும் கண்டபோதும், மிகவும் முனையற்றுப்போய், இந்தக் கிரியை எங்கள் தேவனால் கைகூடி வந்ததென்று அறிந்தார்கள்.

17அந்த நாட்களில் யூதாவிலுள்ள பெரிய மனிதரிடத்திலிருந்து தொபியாவுக்குப் போகிறதும், தொபியாவினிடத்திலிருந்து அவர்களுக்கு வருகிறதுமான கடிதங்கள் அநேகமாயிருந்தது.

18அவன் ஆராகின் குமாரனாகிய செகனியாவுக்கு மருமகனாயிருந்ததும் அல்லாமல், அவன் குமாரனாகிய யோகனான் பெரகியாவின் குமாரனாகிய மெசுல்லாமின் குமாரத்தியை விவாகம் பண்ணியிருந்தபடியாலும், யூதாவில் அநேகர் அவனுக்கு ஆணையிட்டுக் கொடுத்திருந்தார்கள்.

19அவன் செய்யும் நன்மைகளையும் அவர்கள் எனக்கு முன்பாக விவரித்து, என் வார்த்தைகளை அவனுக்குக் கொண்டுபோவார்கள்; தொபியா எனக்குப் பயமுண்டாகக் கடிதங்களை அனுப்புவான்.

அப்போஸ்தலர் 16

முழு அதிகாரம் ›

1அதன்பின்பு அவன் தெர்பைக்கும் லீஸ்திராவுக்கும் போனான். அங்கே தீமோத்தேயு என்னப்பட்ட ஒரு சீஷன் இருந்தான்; அவன் தாய் விசுவாசமுள்ள யூதஸ்திரீ, அவன் தகப்பன் கிரேக்கன்.

2அவன் லீஸ்திராவிலும் இக்கோனியாவிலுமுள்ள சகோதரராலே நற்சாட்சி பெற்றவனாயிருந்தான்.

3அவனைப் பவுல் தன்னுடனே கூட்டிக்கொண்டு போகவேண்டுமென்று விரும்பி, அவனுடைய தகப்பன் கிரேக்கன் என்று அவ்விடங்களிலிருக்கும் யூதர்களெல்லாரும் அறிந்திருந்தபடியால், அவர்கள்நிமித்தம் அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான்.

4அவர்கள் பட்டணங்கள்தோறும் போகையில், எருசலேமிலிருக்கும் அப்போஸ்தலராலும் மூப்பராலும் விதிக்கப்பட்ட சட்டங்களைக் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு ஒப்புவித்தார்கள்.

5அதினாலே சபைகள் விசுவாசத்தில் ஸ்திரப்பட்டு, நாளுக்குநாள் பெருகின.

6அவர்கள் பிரிகியா கலாத்தியா நாடுகளைக் கடந்துபோனபோது, ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்த ஆவியினாலே தடைபண்ணப்பட்டு,

7மீசியா தேசமட்டும் வந்து, பித்தினியா நாட்டுக்குப் போகப் பிரயத்தனம்பண்ணினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார்.

8அப்பொழுது அவர்கள் மீசியா பக்கமாய்ப் போய், துரோவாவுக்கு வந்தார்கள்.

9அங்கே இராத்திரியிலே பவுலுக்கு ஒரு தரிசனம் உண்டாயிற்று; அதென்னவெனில், மக்கெதோனியா தேசத்தான் ஒருவன் வந்துநின்று: நீர் மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவிசெய்யவேண்டுமென்று தன்னை வேண்டிக்கொண்டதாக இருந்தது.

10அந்தத் தரிசனத்தை அவன் கண்டபோது, அவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி கர்த்தர் எங்களை அழைத்தாரென்று நாங்கள் நிச்சயித்துக்கொண்டு, உடனே மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டுப்போகப் பிரயத்தனம்பண்ணி,

11துரோவாவில் கப்பல் ஏறி, சாமோத்திராக்கே தீவுக்கும், மறுநாளிலே நெயாப்போலி பட்டணத்துக்கும் நேராய் ஓடி,

12அங்கேயிருந்து மக்கெதோனியா தேசத்து நாடுகளில் ஒன்றிற்குத் தலைமையானதும் ரோமர் குடியேறினதுமான பிலிப்பி பட்டணத்துக்கு வந்து, அந்தப் பட்டணத்திலே சிலநாள் தங்கியிருந்தோம்.

13ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகே வழக்கமாய் ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த ஸ்திரீகளுக்கு உபதேசித்தோம்.

14அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள்; பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்.

15அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றபின்பு, அவள் எங்களை நோக்கி: நீங்கள் என்னைக் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று எண்ணினால், என் வீட்டிலே வந்து தங்கியிருங்கள் என்று எங்களை வருந்திக் கேட்டுக்கொண்டாள்.

16நாங்கள் ஜெபம்பண்ணுகிற இடத்துக்குப் போகையில் குறிசொல்ல ஏவுகிற ஆவியைக்கொண்டிருந்து, குறிசொல்லுகிறதினால் தன் எஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கின ஒரு பெண் எங்களுக்கு எதிர்ப்பட்டாள்.

17அவள் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து: இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள் என்று சத்தமிட்டாள்.

18இப்படி அநேகநாள் செய்து கொண்டுவந்தாள். பவுல் சினங்கொண்டு, திரும்பிப்பார்த்து: நீ இவளை விட்டுப் புறப்படும்படி இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அந்த ஆவியுடனே சொன்னான்; அந்நேரமே அது புறப்பட்டுப்போயிற்று.

19அவளுடைய எஜமான்கள் தங்கள் ஆதாயத்து நம்பிக்கை அற்றுப்போயிற்றென்று கண்டு, பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தைவெளியிலுள்ள அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டுபோனார்கள்.

20அவர்களை அதிகாரிகளிடத்தில் ஒப்புவித்து: யூதர்களாகிய இந்த மனுஷர் நம்முடைய பட்டணத்தில் கலகம்பண்ணி,

21ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவும் அநுசரிக்கவும்தகாத முறைமைகளைப் போதிக்கிறார்கள் என்றார்கள்.

22அப்பொழுது ஜனங்கள் கூட்டங்கூடி, அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள். அதிகாரிகள் அவர்கள் வஸ்திரங்களைக் கிழித்துப்போடவும், அவர்களை அடிக்கவும் சொல்லி;

23அவர்களை அநேக அடி அடித்தபின்பு, சிறைச்சாலையிலே வைத்து அவர்களைப் பத்திரமாய்க் காக்கும்படி சிறைச்சாலைக்காரனுக்குக் கட்டளையிட்டார்கள்.

24அவன் இப்படிப்பட்ட கட்டளையைப் பெற்று, அவர்களை உட்காவலறையிலே அடைத்து, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் மாட்டிவைத்தான்.

25நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

26சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று.

27சிறைச்சாலைக்காரன் நித்திரைதெளிந்து, சிறைச்சாலையின் கதவுகள் திறந்திருக்கிறதைக்கண்டு, கட்டுண்டவர்கள் ஓடிப்போனார்களென்று எண்ணி, பட்டயத்தை உருவித் தன்னைக் கொலைசெய்து கொள்ளப்போனான்.

28பவுல் மிகுந்த சத்தமிட்டு: நீ உனக்குக் கெடுதி ஒன்றுஞ்செய்துகொள்ளாதே; நாங்கள் எல்லாரும் இங்கேதான் இருக்கிறோம் என்றான்.

29அப்பொழுது அவன் தீபங்களைக் கொண்டுவரச்சொல்லி, உள்ளே ஓடி, நடுநடுங்கி, பவுலுக்கும் சீலாவுக்கும் முன்பாக விழுந்து,

30அவர்களை வெளியே அழைத்துவந்து: ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான்.

31அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி,

32அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த யாவருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள்.

33மேலும் இராத்திரியில் அந்நேரத்திலேதானே அவன் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான். அவனும் அவனுடையவர்கள் அனைவரும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள்.

34பின்பு அவன் அவர்களைத் தன் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு போஜனங்கொடுத்து, தன் வீட்டார் அனைவரோடுங்கூட தேவனிடத்தில் விசுவாசமுள்ளவனாகி மனமகிழ்ச்சியாயிருந்தான்.

35பொழுது விடிந்தபின்பு: அந்த மனுஷரை விட்டுவிடுங்கள் என்று சொல்ல அதிகாரிகள் சேவகர்களை அனுப்பினார்கள்.

36சிறைச்சாலைக்காரன் பவுலுக்கு இந்த வார்த்தைகளை அறிவித்து: உங்களை விடுதலையாக்கும்படிக்கு அதிகாரிகள் கட்டளை அனுப்பினார்கள்; ஆகையால் நீங்கள் இப்பொழுது புறப்பட்டுச் சமாதானத்துடனே போங்கள் என்றான்.

37அதற்குப் பவுல்: ரோமராகிய எங்களை அவர்கள் நியாயம்விசாரியாமல், வெளியரங்கமாய் அடித்து, சிறைச்சாலையிலே போட்டார்கள்; இப்பொழுது இரகசியமாய் எங்களை விடுதலையாக்குகிறார்களோ? அப்படியல்ல, அவர்களே வந்து, எங்களை வெளியே அழைத்து அனுப்பிவிடட்டும் என்றான்.

38சேவகர் இந்த வார்த்தைகளை அதிகாரிகளுக்கு அறிவித்தார்கள். ரோமராயிருக்கிறார்களென்று அவர்கள் கேட்டபொழுது பயந்துவந்து,

39அவர்களுடனே தயவாய்ப் பேசி, அவர்களை வெளியே அழைத்துக்கொண்டுபோய், பட்டணத்தை விட்டுப் புறப்பட்டுப்போகும்படி கேட்டுக்கொண்டார்கள்.

40அந்தப்படி அவர்கள் சிறைச்சாலையிலிருந்து புறப்பட்டு லீதியாளிடத்திற்குப்போய், சகோதரரைக் கண்டு, அவர்களுக்கு ஆறுதல் சொல்லிப் போய்விட்டார்கள்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com