‹ முகப்புமுழுத் திட்டம்

ஜனவரி 17 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்ஜனவரி 17அடுத்த நாள் ›
குடும்பம்

ஆதியாகமம் 18

முழு அதிகாரம் ›

1பின்பு கர்த்தர் மம்ரேயின் சமபூமியிலே அவனுக்குத் தரிசனமானார். அவன் பகலின் உஷ்ணவேளையில் கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்து,

2தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, மூன்று புருஷர் அவனுக்கு எதிரே நின்றார்கள்; அவர்களைக் கண்டவுடனே, அவன் கூடாரவாசலிலிருந்து அவர்களுக்கு எதிர்கொண்டு ஓடித் தரைமட்டும் குனிந்து:

3ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்துபோகவேண்டாம்.

4கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும், உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில் சாய்ந்துகொண்டிருங்கள்.

5நீங்கள் உங்கள் இருதயங்களைத் திடப்படுத்தக் கொஞ்சம் அப்பம் கொண்டுவருகிறேன்; அப்புறம் நீங்கள் உங்கள் வழியே போகலாம்; இதற்காகவே அடியேன் இடம்வரைக்கும் வந்தீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: நீ சொன்னபடி செய் என்றார்கள்.

6அப்பொழுது ஆபிரகாம் தீவிரமாய்க் கூடாரத்தில் சாராளிடத்திற்குப் போய்: நீ சீக்கிரமாய் மூன்றுபடி மெல்லிய மாவு எடுத்துப் பிசைந்து, அப்பம் சுடு என்றான்.

7ஆபிரகாம் மாட்டுமந்தைக்கு ஓடி, ஒரு நல்ல இளங்கன்றைப் பிடித்து, வேலைக்காரன் கையிலே கொடுத்தான்; அவன் அதைச் சீக்கிரத்தில் சமைத்தான்.

8ஆபிரகாம் வெண்ணெயையும் பாலையும் சமைப்பித்த கன்றையும் எடுத்து வந்து, அவர்கள் முன்பாக வைத்து, அவர்கள் அருகே மரத்தடியில் நின்றுகொண்டிருந்தான்; அவர்கள் புசித்தார்கள்.

9அவர்கள் அவனை நோக்கி: உன் மனைவி சாராள் எங்கே என்றார்கள்? அதோ கூடாரத்தில் இருக்கிறாள் என்றான்.

10அப்பொழுது அவர்: ஒரு உற்பவகாலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார். சாராள் அவருக்குப் பின்புறமாய்க் கூடாரவாசலில் இதைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

11ஆபிரகாமும் சாராளும் வயது சென்று முதிர்ந்தவர்களாயிருந்தார்கள்; ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு சாராளுக்கு நின்றுபோயிற்று.

12ஆகையால், சாராள் தன் உள்ளத்திலே நகைத்து: நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமான பின்பு, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ என்றாள்.

13அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: சாராள் நகைத்து, நான் கிழவியாயிருக்கப் பிள்ளைபெறுவது மெய்யோ என்று சொல்வானேன்?

14கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? உற்பவகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார்.

15சாராள் பயந்து, நான் நகைக்கவில்லை என்று மறுத்தாள். அதற்கு அவர்: இல்லை, நீ நகைத்தாய் என்றார்.

16பின்பு அந்தப் புருஷர் எழுந்து அவ்விடம் விட்டு, சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமும் அவர்களோடே கூடப்போய் வழிவிட்டனுப்பினான்.

17அப்பொழுது கர்த்தர்: ஆபிரகாம் பெரிய பலத்த ஜாதியாவதினாலும், அவனுக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படுவதினாலும்,

18நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ?

19கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார்.

20பின்பு கர்த்தர் சோதோம் கொமோராவின் கூக்குரல் பெரிதாயிருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும் கொடிதாயிருப்பதினாலும்,

21நான் இறங்கிப்போய், என்னிடத்தில் வந்து எட்டின அதின் கூக்குரலின்படியே அவர்கள் செய்திருக்கிறார்களோ இல்லையோ என்று பார்த்து அறிவேன் என்றார்.

22அப்பொழுது அந்தப் புருஷர் அவ்விடம் விட்டுச் சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமோ பின்னும் கர்த்தருக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தான்.

23அப்பொழுது ஆபிரகாம் சமீபமாய்ச் சேர்ந்து: துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ?

24பட்டணத்துக்குள்ளே ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் இருப்பார்கள், அதற்குள் இருக்கும் அந்த ஐம்பது நீதிமான்கள் நிமித்தம் இரட்சியாமல் அந்த ஸ்தலத்தை அழிப்பீரோ?

25துன்மார்க்கனோடே நீதிமானையும் சங்கரிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாய் நடப்பிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ என்றான்.

26அதற்குக் கர்த்தர்: நான் சோதோமில் ஐம்பது நீதிமான்களைக் கண்டால், அவர்கள் நிமித்தம் அந்த ஸ்தலமுழுதையும் இரட்சிப்பேன் என்றார்.

27அப்பொழுது ஆபிரகாம் பிரதியுத்தரமாக: இதோ, தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன் ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்.

28ஒருவேளை ஐம்பது நீதிமான்களுக்கு ஐந்துபேர் குறைந்திருப்பார்கள்; அந்த ஐந்துபேர்நிமித்தம் பட்டணமுழுதையும் அழிப்பீரோ என்றான். அதற்கு அவர்: நான் நாற்பத்தைந்து நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார்.

29அவன் பின்னும் அவரோடே பேசி: நாற்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நாற்பது நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.

30அப்பொழுது அவன்: நான் இன்னும் பேசுகிறேன், ஆண்டவருக்குக் கோபம் வராமலிருப்பதாக; முப்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நான் முப்பது நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார்.

31அப்பொழுது அவன்: இதோ, ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்; இருபது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: இருபது நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.

32அப்பொழுது அவன்: ஆண்டவருக்குக் கோபம் வராதிருப்பதாக; நான் இன்னும் இந்த ஒருவிசைமாத்திரம் பேசுகிறேன்; பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: பத்து நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.

33கர்த்தர் ஆபிரகாமோடே பேசிமுடிந்தபின்பு போய்விட்டார்; ஆபிரகாமும் தன்னுடைய இடத்துக்குத் திரும்பினான்.

1ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல் போய்,

2அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று.

3அப்பொழுது மோசேயும் எலியாவும் அவரோடே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள்.

4அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்குச் சித்தமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப்போடுவோம் என்றான்.

5அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.

6சீஷர்கள் அதைக் கேட்டு, முகங்குப்புற விழுந்து, மிகவும் பயந்தார்கள்.

7அப்பொழுது, இயேசு வந்து, அவர்களைத் தொட்டு: எழுந்திருங்கள், பயப்படாதேயுங்கள் என்றார்.

8அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுத்துப்பார்க்கையில் இயேசுவைத்தவிர வேறொருவரையும் காணவில்லை.

9அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும்வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார்.

10அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படியென்று கேட்டார்கள்.

11இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எலியா முந்திவந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான்.

12ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார்.

13அவர் யோவான்ஸ்நானனைக்குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள்.

14அவர்கள் ஜனங்களிடத்தில் வந்தபோது, ஒரு மனுஷன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு:

15ஆண்டவரே, என் மகனுக்கு இரங்கும், அவன் சந்திரரோகியாய்க் கொடிய வேதனைப்படுகிறான்; அடிக்கடி தீயிலும், அடிக்கடி ஜலத்திலும் விழுகிறான்.

16அவனை உம்முடைய சீஷர்களிடத்தில் கொண்டுவந்தேன்; அவனைச் சொஸ்தமாக்க அவர்களால் கூடாமற்போயிற்று என்றான்.

17இயேசு பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.

18இயேசு பிசாசை அதட்டினார்; உடனே அது அவனை விட்டுப் புறப்பட்டது; அந்நேரமே அந்த இளைஞன் சொஸ்தமானான்.

19அப்பொழுது, சீஷர்கள் இயேசுவினிடத்தில் தனித்துவந்து: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று கேட்டார்கள்.

20அதற்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம்போகும்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

21இந்த ஜாதிப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.

22அவர்கள் கலிலேயாவிலே சஞ்சரிக்கும்போது, இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார்.

23அவர்கள் அவரைக் கொலைசெய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றார். அவர்கள் மிகுந்த துக்கமடைந்தார்கள்.

24அவர்கள் கப்பர்நகூமில்வந்தபோது, வரிப்பணம் வாங்குகிறவர்கள் பேதுருவினிடத்தில்வந்து: உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று கேட்டார்கள்; செலுத்துகிறார் என்றான்.

25அவன் வீட்டிற்குள் வந்தபோது, அவன் பேசுகிறதற்கு முன்னமே இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் தீர்வையையும் வரியையும் தங்கள் பிள்ளைகளிடத்திலோ, அந்நியரிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள் என்று கேட்டார்.

26அதற்குப் பேதுரு: அந்நியரிடத்தில் வாங்குகிறார்கள் என்றான். இயேசு அவனை நோக்கி: அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்தவேண்டுவதில்லையே.

27ஆகிலும், நாம் அவர்களுக்கு இடறலாயிராதபடிக்கு, நீ கடலுக்குப் போய், தூண்டில்போட்டு, முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதின் வாயைத் திறந்துபார்; ஒரு வெள்ளிப்பணத்தைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடத்தில் கொடு என்றார்.

தனிவாசிப்பு

1அலங்கம் கட்டிமுடிந்து, கதவுகள் போடப்பட்டு, வாசல் காவலாளரையும், பாடகரையும், லேவியரையும் ஏற்படுத்தினபின்பு,

2நான் என் சகோதரனாகிய ஆனானியையும், அநேகரைப்பார்க்கிலும் உண்மையுள்ளவனும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்த அரமனைத்தலைவனாகிய அனனியாவையும், எருசலேமின் காவல் விசாரணைக்கு ஏற்படுத்தினேன்.

3அவர்களை நோக்கி: வெயில் ஏறுமட்டும் எருசலேமின் வாசல்கள் திறக்கப்படவேண்டாம்; நீங்கள் நிற்கும்போதே கதவுகளைச் சாத்தித் தாழ்ப்பாள் போட்டு, எருசலேமின் குடிகளில் காவலாளர் அவரவர் தங்கள் காவலிலே, அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிராக நிறுத்தப்படவேண்டும் என்றேன்.

4பட்டணம் விஸ்தாரமும் பெரிதுமாயிருந்தது; அதற்குள்ளே ஜனங்கள் கொஞ்சமாயிருந்தார்கள், வீடுகளும் கட்டப்படவில்லை.

5அப்பொழுது வம்ச அட்டவணைகளைப் பார்க்கிறதற்கு, நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் ஜனங்களையும் கூடிவரச்செய்ய, என் தேவன் என் மனதிலே ஒரு எண்ணத்தை உண்டாக்கினார்; முந்தி வந்தவர்களின் வம்ச அட்டவணைப் புஸ்தகம் அப்பொழுது எனக்கு அகப்பட்டது; அதிலே எழுதியிருக்க நான் கண்டது என்னவென்றால்:

6பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போனவர்களும், சிறையிருப்பிலிருந்து செருபாபேலோடும், யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாயி, நெகூம், பானா என்பவர்களோடுங்கூட வந்து,

7எருசலேமுக்கும் யூதாவுக்கும் திரும்பித் தங்கள் தங்கள் பட்டணங்களிலே குடியிறங்கினவர்களுமான இந்தத் தேசத்தின் புத்திரராகிய இஸ்ரவேல் ஜனங்களான மனிதரின் தொகையாவது:

8பாரோஷின் புத்திரர் இரண்டாயிரத்து நூற்று எழுபத்திரண்டுபேர்.

9செபத்தியாவின் புத்திரர் முந்நூற்று எழுபத்திரண்டுபேர்.

10ஆராகின் புத்திரர் அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர்.

11யெசுவா யோவாப் என்பவர்களின் சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பதினெட்டுப்பேர்.

12ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்துநாலுபேர்.

13சத்தூவின் புத்திரர் எண்ணூற்று நாற்பத்தைந்துபேர்.

14சக்காயின் புத்திரர் எழுநூற்று அறுபதுபேர்.

15பின்னூவின் புத்திரர் அறுநூற்று நாற்பத்தெட்டுப்பேர்.

16பெபாயின் புத்திரர் அறுநூற்று இருபத்தெட்டுப்பேர்.

17அஸ்காதின் புத்திரர் இரண்டாயிரத்து முந்நூற்று இருபத்திரண்டுபேர்.

18அதோனிகாமின் புத்திரர் அறுநூற்று அறுபத்தேழுபேர்.

19பிக்வாயின் புத்திரர் இரண்டாயிரத்து அறுபத்தேழுபேர்.

20ஆதீனின் புத்திரர் அறுநூற்று ஐம்பத்தைந்துபேர்.

21எசேக்கியாவின் சந்ததியான ஆதேரின் புத்திரர் தொண்ணூற்று எட்டுப்பேர்.

22ஆசூமின் புத்திரர் முந்நூற்று இருபத்தெட்டுப்பேர்.

23பேசாயின் புத்திரர் முந்நூற்று இருபத்துநாலுபேர்.

24ஆரீப்பின் புத்திரர் நூற்றுப்பன்னிரண்டுபேர்.

25கிபியோனின் புத்திரர் தொண்ணூற்று ஐந்துபேர்.

26பெத்லகேம் ஊராரும், நெத்தோபா ஊராரும் நூற்று எண்பத்தெட்டுப்பேர்.

27ஆனதோத்தூர் மனிதர் நூற்று இருபத்தெட்டுப்பேர்.

28பெத்அஸ்மாவேத் ஊரார் நாற்பத்திரண்டுபேர்.

29கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் ஊர்களின் மனிதர் எழுநூற்று நாற்பத்துமூன்றுபேர்.

30ராமா, காபா ஊர்களின் மனிதர் அறுநூற்று இருபத்தொருபேர்.

31மிக்மாஸ் ஊரார் நூற்று இருபத்திரண்டுபேர்.

32பெத்தேல், ஆயி ஊர்களின் மனிதர் நூற்று இருபத்துமூன்றுபேர்.

33வேறொரு நேபோ ஊரார் ஐம்பத்திரண்டுபேர்.

34மற்றொரு ஏலாம் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்துநாலுபேர்.

35ஆரீம் புத்திரர் முந்நூற்று இருபதுபேர்.

36எரிகோ புத்திரர் முந்நூற்று நாற்பத்தைந்துபேர்.

37லோத், ஆதீத், ஓனோ ஊர்களின் புத்திரர் எழுநூற்று இருபத்தொருபேர்.

38செனாகா புத்திரர் மூவாயிரத்துத் தொளாயிரத்து முப்பதுபேர்.

39ஆசாரியரானவர்கள்: யெசுவா குடும்பத்தானாகிய யெதாயாவின் புத்திரர் தொளாயிரத்து எழுபத்துமூன்றுபேர்.

40இம்மேரின் புத்திரர் ஆயிரத்து ஐம்பத்திரண்டுபேர்.

41பஸ்கூரின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழுபேர்.

42ஆரீமின் புத்திரர் ஆயிரத்துப் பதினேழுபேர்.

43லேவியரானவர்கள்: ஒதியாவின் புத்திரருக்குள்ளே கத்மியேலின் குமாரனாகிய யெசுவாவின் புத்திரர் எழுபத்துநாலுபேர்.

44பாடகரானவர்கள்: ஆசாபின் புத்திரர் நூற்று நாற்பத்தெட்டுப்பேர்.

45வாசல் காவலாளரானவர்கள்: சல்லூமின் புத்திரர், அதேரின் புத்திரர், தல்மோனின் புத்திரர், அக்கூபின் புத்திரர், அதிதாவின் புத்திரர், சோபாயின் புத்திரர், ஆக நூற்று முப்பத்தெட்டுப்பேர்.

46நிதனீமியரானவர்கள்: சீகாவின் புத்திரர், அசுபாவின் புத்திரர், தபாகோத்தின் புத்திரர்,

47கேரோசின் புத்திரர், சீயாவின் புத்திரர், பாதோனின் புத்திரர்,

48லெபானாவின் புத்திரர், அகாபாவின் புத்திரர், சல்மாயின் புத்திரர்,

49ஆனானின் புத்திரர், கித்தேலின் புத்திரர், காகாரின் புத்திரர்,

50ராயாகின் புத்திரர், ரேத்சீனின் புத்திரர், நெகோதாவின் புத்திரர்,

51காசாமின் புத்திரர், ஊசாவின் புத்திரர், பாசெயாகின் புத்திரர்,

52பேசாயின் புத்திரர், மெயுநீமின் புத்திரர், நெபிஷசீமின் புத்திரர்,

53பக்பூக்கின் புத்திரர், அகுபாவின் புத்திரர், அர்கூரின் புத்திரர்,

54பஸ்லீதின் புத்திரர், மெகிதாவின் புத்திரர், அர்ஷாவின் புத்திரர்,

55பர்கோசின் புத்திரர், சிசெராவின் புத்திரர், தாமாவின் புத்திரர்,

56நெத்சியாகின் புத்திரர், அதிபாவின் புத்திரர்,

57சாலொமோனுடைய வேலைக்காரரின் புத்திரரானவர்கள்: சோதாயின் புத்திரர், சொபெரேத்தின் புத்திரர், பெரிதாவின் புத்திரர்,

58யாலாவின் புத்திரர், தர்கோனின் புத்திரர், கித்தேலின் புத்திரர்,

59செபத்தியாவின் புத்திரர், அத்தீலின் புத்திரர், பொகெரேத் செபாயிமிலுள்ள புத்திரர், ஆமோனின் புத்திரர்.

60நிதனீமியரும், சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரும் ஏகத்துக்கு முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்.

61தெல்மெலாகிலும், தெல்அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலும் இருந்துவந்தும், தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வோத்தரத்தையும் சொல்லமாட்டாமல் இருந்தவர்கள்:

62தெலாயாவின் புத்திரர், தொபியாவின் புத்திரர், நெகோதாவின் புத்திரர், ஆக அறுநூற்று நாற்பத்திரண்டுபேர்.

63ஆசாரியர்களில் அபாயாவின் புத்திரர், கோசின் புத்திரர், கிலேயாத்தியனான பர்சிலாயின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணி, அவர்கள் வம்ச நாமம் தரிக்கப்பட்ட பர்சிலாயின் புத்திரர்.

64இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்துக்கு விலக்கமானவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.

65ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்புமட்டும், அவர்கள் மகா பரிசுத்தமானதிலே புசிக்கத்தகாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.

66சபையார் எல்லாரும் ஏகத்துக்கு நாற்பத்தீராயிரத்து முந்நூற்று அறுபதுபேராயிருந்தார்கள்.

67அவர்களைத்தவிர ஏழாயிரத்து முந்நூற்று முப்பத்தேழுபேரான அவர்களுடைய வேலைக்காரரும் வேலைக்காரிகளும், இருநூற்று நாற்பத்தைந்து பாடகரும், பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.

68அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு, அவர்கள் கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து.

69ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து, கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்று இருபது.

70வம்சத்தலைவரில் சிலர் வேலைக்கென்று கொடுத்ததாவது: திர்ஷாதா ஆயிரம் தங்கக்காசையும், ஐம்பது கலங்களையும், ஐந்நூற்று முப்பது ஆசாரிய வஸ்திரங்களையும் பொக்கிஷத்துக்குக் கொடுத்தான்.

71வம்சத்தலைவரில் சிலர் வேலையின் பொக்கிஷத்துக்கு இருபதினாயிரம் தங்கக்காசையும், இரண்டாயிரத்து இருநூறு ராத்தல் வெள்ளியையும் கொடுத்தார்கள்.

72மற்ற ஜனங்கள் இருபதினாயிரம் தங்கக்காசையும், இரண்டாயிரம் ராத்தல் வெள்ளியையும், அறுபத்தேழு ஆசாரிய வஸ்திரங்களையும் கொடுத்தார்கள்.

73ஆசாரியரும், லேவியரும், வாசல் காவலாளரும், பாடகரும், ஜனங்களில் சிலரும், நிதனீமியரும், இஸ்ரவேலர் அனைவரும் தங்கள் தங்கள் பட்டணங்களில் குடியேறினார்கள்; ஏழாம் மாதமானபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் பட்டணங்களில் இருந்தார்கள்.

அப்போஸ்தலர் 17

முழு அதிகாரம் ›

1அவர்கள் அம்பிபோலி பட்டணத்தையும் அப்பொலோனியா பட்டணத்தையும் கடந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்கு வந்தார்கள்; அங்கே யூதருக்கு ஒரு ஜெப ஆலயம் இருந்தது.

2பவுல் தன் வழக்கத்தின்படியே அவர்களிடத்தில் போய், மூன்று ஓய்வு நாட்களில் வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து அவர்களுடனே சம்பாஷித்து,

3கிறிஸ்து பாடுபடவும் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவும் வேண்டியதென்றும், நான் உங்களுக்கு அறிவிக்கிற இந்த இயேசுவே கிறிஸ்து என்றும் காண்பித்து, திருஷ்டாந்தப்படுத்தினான்.

4அவர்களில் சிலரும், பக்தியுள்ள கிரேக்கரில் திரளான ஜனங்களும்,, கனம்பொருந்திய ஸ்திரீகளில் அநேகரும் விசுவாசித்து, பவுலையும் சீலாவையும் சேர்ந்துகொண்டார்கள்.

5விசுவாசியாத யூதர்கள் வைராக்கியங்கொண்டு வீணராகிய சில பொல்லாதவர்களைச் சேர்த்துக்கொண்டு, கூட்டங்கூடி, பட்டணத்தில் அமளியுண்டாக்கி, யாசோனுடைய வீட்டை வளைந்துகொண்டு, அவர்களைப் பட்டணத்தாருக்கு முன்பாக இழுத்துக்கொண்டுவர வகைதேடினார்கள்.

6அவர்களைக் காணாமல், யாசோனையும் சில சகோதரரையும் பட்டணத்து அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டு வந்து: உலகத்தைக் கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள்.

7இவர்களை யாசோன் ஏற்றுக்கொண்டான். இவர்களெல்லாரும் இயேசு என்னும் வேறொருவனை ராஜா என்று சொல்லி, இராயனுடைய கட்டளைகளுக்கு விரோதமாகச் செய்கிறார்களென்று கூக்குரலிட்டு,

8இவைகளைக் கேட்டுக்கொண்டிருந்த ஜனங்களையும் பட்டணத்து அதிகாரிகளையும் கலங்கப்பண்ணினார்கள்.

9பின்பு அவர்கள் யாசோனிடத்திலும் மற்றவர்களிடத்திலும் ஜாமீன் வாங்கிக்கொண்டு, அவர்களை விட்டுவிட்டார்கள்.

10உடனே சகோதரர் இராத்திரிகாலத்திலே பவுலையும் சீலாவையும் பெரோயா பட்டணத்துக்கு அனுப்பிவிட்டார்கள்; அவர்கள் அங்கே சேர்ந்து, யூதருடைய ஜெப ஆலயத்திற்குப் போனார்கள்.

11அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்.

12அதனால் அவர்களில் அநேகம்பேரும் கனம்பொருந்திய கிரேக்கரில் அநேக ஸ்திரீகளும் புருஷர்களும் விசுவாசித்தார்கள்.

13பெரோயாவிலும் தேவவசனம் பவுலினால் அறிவிக்கப்படுகிறதென்று தெசலோனிக்கேயரான யூதர்கள் அறிந்தபோது, அங்கேயும் வந்து, ஜனங்களைக் கிளப்பிவிட்டார்கள்.

14உடனே சகோதரர் பவுலைச் சமுத்திரவழியாய்ப் போக அனுப்பிவிட்டார்கள். சீலாவும் தீமோத்தேயும் அங்கே தங்கியிருந்தார்கள்.

15பவுலை வழிநடத்தினவர்கள் அவனை அத்தேனே பட்டணம்வரைக்கும் அழைத்துக்கொண்டுபோய்; அங்கே சீலாவும் தீமோத்தேயும் அதிசீக்கிரமாகத் தன்னிடத்திற்கு வரும்படி அவர்களுக்குச் சொல்லக் கட்டளை பெற்றுக்கொண்டு புறப்பட்டுப்போனார்கள்.

16அத்தேனே பட்டணத்தில் பவுல் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கையில், அந்தப் பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைக் கண்டு, தன் ஆவியில் மிகுந்த வைராக்கியமடைந்து,

17ஜெப ஆலயத்தில் யூதரோடும், பக்தியுள்ளவர்களோடும், சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் தினந்தோறும் சம்பாஷணைபண்ணினான்.

18அப்பொழுது எப்பிக்கூரரும் ஸ்தோயிக்கருமான ஞானிகளில் சிலர் அவனுடனே வாக்குவாதம் பண்ணினார்கள். சிலர்: இந்த வாயாடி என்ன பேசப்போகிறான் என்றார்கள். சிலர்: இவன் அந்நிய தேவதைகளை அறிவிக்கிறவனாகக் காண்கிறது என்றார்கள். அவன் இயேசுவையும் உயிர்தெழுதலையும் அவர்களுக்குப் பிரசங்கித்தபடியினாலே அப்படிச் சொன்னார்கள்.

19அவர்கள் அவனை மார்ஸ் மேடைக்கு அழைத்துக்கொண்டுபோய்: நீ சொல்லுகிற புதிதான உபதேசம் இன்னதென்று நாங்கள் அறியலாமா?

20நூதனமான காரியங்களை எங்கள் காதுகள் கேட்கப்பண்ணுகிறாய்; அவைகளின் கருத்து இன்னதென்று அறியமனதாயிருக்கிறோம் என்றார்கள்.

21அந்த அத்தேனே பட்டணத்தாரெல்லாரும், அங்கே தங்குகிற அந்நியரும், நவமான காரியங்களைச் சொல்லுகிறதிலும் கேட்கிறதிலுமேயொழிய வேறொன்றிலும் பொழுதுபோக்குகிறதில்லை.

22அப்பொழுது பவுல் மார்ஸ் மேடையின் நடுவிலே நின்று: அத்தேனரே, எந்த விஷயத்திலும் நீங்கள் மிகுந்த தேவதாபக்தியுள்ளவர்களென்று காண்கிறேன்.

23எப்படியென்றால், நான் சுற்றித்திரிந்து, உங்கள் ஆராதனைக்குரியவைகளைக் கவனித்துப் பார்த்தபொழுது, அறியப்படாத தேவனுக்கு என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைக் கண்டேன்; நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.

24உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை.

25எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை.

26மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்;

27கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே.

28ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள்.

29நாம் தேவனுடைய சந்ததியாராயிருக்க, மனுஷருடைய சித்திரவேலையினாலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்கு தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது.

30அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.

31மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்.

32மரித்தோரின் உயிர்த்தெழுதலைக் குறித்து அவர்கள் கேட்டபொழுது, சிலர் இகழ்ந்தார்கள். சிலர்: நீ சொல்லுகிறதை இன்னொருவேளை கேட்போம் என்றார்கள்.

33இப்படியிருக்க, பவுல் அவர்களைவிட்டுப் போய்விட்டான்.

34சிலர் அவனைப் பற்றிக்கொண்டு, விசுவாசிகளானார்கள். அவர்களில் மார்ஸ் மேடையின் நியாயாதிபதிகளில் ஒருவனாகிய தியொனீசியு என்பவனும், தாமரி என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயும், இவர்களுடனே வேறு சிலரும் இருந்தார்கள்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com