1ஆபிரகாம் அவ்விடம் விட்டு, தென்தேசத்திற்குப் பிரயாணம்பண்ணி, காதேசுக்கும் சூருக்கும் நடுவாகக் குடியேறி, கேராரிலே தங்கினான்.
2அங்கே ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைத் தன் சகோதரி என்று சொன்னதினாலே, கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஆள் அனுப்பிச் சாராளை அழைப்பித்தான்.
3தேவன் இரவிலே அபிமெலேக்குக்குச் சொப்பனத்திலே தோன்றி: நீ அழைப்பித்த ஸ்திரீயின்நிமித்தம் நீ செத்தாய்; அவள் ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாளே என்றார்.
4அபிமெலேக்கு அவளைச் சேராதிருந்தான். ஆகையால் அவன்: ஆண்டவரே, நீதியுள்ள ஜனங்களை அழிப்பீரோ?
5இவள் தன் சகோதரி என்று அவன் என்னோடே சொல்லவில்லையா? அவன் தன் சகோதரன் என்று இவளும் சொன்னாளே; உத்தம இருதயத்தோடும் சுத்தமான கைகளோடும் இதைச் செய்தேன் என்று சொன்னான்.
6அப்பொழுது தேவன்: உத்தம இருதயத்தோடே நீ இதைச் செய்தாய் என்று நான் அறிந்திருக்கிறேன்; நீ எனக்கு விரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு உன்னைத் தடுத்தேன்; ஆகையால், நீ அவளைத் தொட நான் உனக்கு இடங்கொடுக்கவில்லை.
7அந்த மனுஷனுடைய மனைவியை அவனிடத்திற்கு அனுப்பிவிடு; அவன் ஒரு தீர்க்கதரிசி; நீ பிழைக்கும்படிக்கு அவன் உனக்காக வேண்டுதல் செய்வான்; நீ அவளை அனுப்பிவிடாதிருந்தால், நீயும் உன்னைச் சேர்ந்த யாவரும் சாகவே சாவீர்கள் என்று அறிவாயாக என்று சொப்பனத்திலே அவனுக்குச் சொன்னார்.
8அபிமெலேக்கு அதிகாலையில் எழுந்து, தன் ஊழியக்காரரையெல்லாம் அழைப்பித்து, இந்தச் சங்கதிகளையெல்லாம் அவர்கள் கேட்கும்படி சொன்னான்; அந்த மனுஷர் மிகவும் பயந்தார்கள்.
9அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை அழைப்பித்து: நீ எங்களுக்கு என்ன காரியஞ்செய்தாய், நீ என்மேலும், என் ராஜ்யத்தின்மேலும் கொடிய பாவம் சுமரப்பண்ணுகிறதற்கு உனக்கு நான் என்ன குற்றம் செய்தேன்? செய்யத்தகாத காரியங்களை என்னிடத்தில் செய்தாயே என்றான்.
10பின்னும் அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: என்னத்தைக் கண்டு நீ இந்தக் காரியத்தைச் செய்தாய் என்றான்.
11அதற்கு ஆபிரகாம்: இவ்விடத்தில் தெய்வபயம் இல்லையென்றும், என் மனைவியினிமித்தம் என்னைக் கொன்றுபோடுவார்கள் என்றும் நான் நினைத்தேன்.
12அவள் என் சகோதரி என்பதும் மெய்தான்; அவள் என் தகப்பனுக்குக் குமாரத்தி, என் தாய்க்குக் குமாரத்தியல்ல; அவள் எனக்கு மனைவியானாள்.
13என் தகப்பன் வீட்டைவிட்டு தேவன் என்னைத் தேசாந்தரியாய்த்திரியும்படி செய்தபோது, நான் அவளை நோக்கி: நாம் போகும் இடமெங்கும், நீ என்னைச் சகோதரன் என்று சொல்வது நீ எனக்குச் செய்யவேண்டிய தயை என்று அவளிடத்தில் சொல்லியிருந்தேன் என்றான்.
14அப்பொழுது அபிமெலேக்கு ஆடுமாடுகளையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும் ஆபிரகாமுக்குக் கொடுத்து, அவன் மனைவியாகிய சாராளையும் அவனிடத்தில் திரும்ப ஒப்புவித்தான்.
15பின்னும் அபிமெலேக்கு: இதோ, என் தேசம் உனக்கு முன்பாக இருக்கிறது; உன் பார்வைக்குச் சம்மதியான இடத்திலே குடியிரு என்று சொன்னான்.
16பின்பு சாராளை நோக்கி: உன் சகோதரனுக்கு ஆயிரம் வெள்ளிக்காசு கொடுத்தேன்; இதோ, உன்னோடிருக்கிற எல்லார் முன்பாகவும், மற்ற யாவர் முன்பாகவும், இது உன் முகத்து முக்காட்டுக்காவதாக என்றான்; இப்படி அவள் கடிந்துகொள்ளப்பட்டாள்.
17ஆபிரகாமுடைய மனைவியாகிய சாராளின் நிமித்தம் கர்த்தர் அபிமெலேக்குடைய வீட்டாரின் கர்ப்பங்களையெல்லாம் அடைத்திருந்தபடியால்,
18ஆபிரகாம் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டான்; அப்பொழுது தேவன் அபிமெலேக்கையும், அவன் மனைவியையும், அவன் வேலைக்காரிகளையும் குணமாக்கி, பிள்ளைபெறும்படி அநுக்கிரகம் பண்ணினார்.
1இயேசு இந்த வசனங்களைச் சொல்லிமுடித்தபின்பு, அவர் கலிலேயாவை விட்டு யோர்தானுக்கு அக்கரையான யூதேயாவின் எல்லைகளில் வந்தார்.
2திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள்; அவ்விடத்தில் அவர்களைச் சொஸ்தமாக்கினார்.
3அப்பொழுது, பரிசேயர் அவரைச் சோதிக்கவேண்டுமென்று அவரிடத்தில் வந்து: புருஷனானவன் தன் மனைவியை எந்த முகாந்தரத்தினாலாகிலும் தள்ளிவிடுவது நியாயமா என்று கேட்டார்கள்.
4அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும்,
5இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா?
6இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.
7அதற்கு அவர்கள்: அப்படியானால், தள்ளுதற்சீட்டைக் கொடுத்து, அவளைத் தள்ளிவிடலாமென்று மோசே ஏன் கட்டளையிட்டார் என்றார்கள்.
8அதற்கு அவர்: உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று உங்கள் இருதயகடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்; ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை.
9ஆதலால், எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ் செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்; தள்ளிவிடப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
10அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: மனைவியைப்பற்றி புருஷனுடைய காரியம் இப்படியிருந்தால், விவாகம்பண்ணுகிறது நல்லதல்ல என்றார்கள்.
11அதற்கு அவர்: வரம்பெற்றவர்களே தவிர மற்றவர்கள் இந்த வசனத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
12தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு; மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு; பரலோகராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு; இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக்கடவன் என்றார்.
13அப்பொழுது, சிறு பிள்ளைகளின்மேல் அவர் கைகளை வைத்து ஜெபம்பண்ணும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீஷர்கள் அதட்டினார்கள்.
14இயேசுவோ: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொல்லி,
15அவர்கள்மேல் கைகளை வைத்து, பின்பு அவ்விடம்விட்டுப் புறப்பட்டுப்போனார்.
16அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்.
17அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.
18அவன் அவரை நோக்கி: எவைகளை என்று கேட்டான். அதற்கு இயேசு: கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரஞ்செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக;
19உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக; உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பவைகளையே என்றார்.
20அந்த வாலிபன் அவரை நோக்கி: இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன்; இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன என்றான்.
21அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.
22அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான்.
23அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவான் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
24மேலும் ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
25அவருடைய சீஷர்கள் அதைக்கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டு: அப்படியானால், யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள்.
26இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.
27அப்பொழுது, பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே; எங்களுக்கு என்ன கிடைக்கும் என்றான்.
28அதற்கு இயேசு: மறுஜென்மகாலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, என்னைப் பின்பற்றின நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் வீற்றிருப்பீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
29என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்;
30ஆகிலும், முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் அநேகர் முந்தினோராயும் இருப்பார்கள் என்றார்.
1அந்த மாதம் இருபத்துநாலாந்தேதியிலே இஸ்ரவேல் புத்திரர் உபவாசம்பண்ணி, இரட்டுடுத்தி, தங்கள்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டவர்களாய்க் கூடிவந்தார்கள்.
2இஸ்ரவேல் சந்ததியார் மறுஜாதியாரையெல்லாம் விட்டுப்பிரிந்து வந்து நின்று, தங்கள் பாவங்களையும், தங்கள் பிதாக்களின் அக்கிரமங்களையும் அறிக்கையிட்டார்கள்.
3அவர்கள் எழுந்திருந்து, தங்கள் நிலையில் நின்றார்கள்; அப்பொழுது ஒரு ஜாமமட்டும் அவர்களுடைய தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணப் புஸ்தகம் வாசிக்கப்பட்டது; பின்பு ஒரு ஜாமமட்டும் அவர்கள் பாவஅறிக்கைபண்ணி, தங்கள் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள்.
4யெசுவா, பானி, கத்மியேல், செப்பனியா, புன்னி, செரெபியா, பானி, கெனானி என்பவர்கள் லேவியருடைய படிகளின்மேல் நின்று, தங்கள் தேவனாகிய கர்த்தரை நோக்கி மகா சத்தமாய் ஓலமிட்டார்கள்.
5பின்பு லேவியரான யெசுவா, கத்மியேல், பானி, ஆசாப்நெயா, செரெபியா, ஒதியா, செபனியா, பெத்தகியா என்பவர்கள் ஜனங்களைப் பார்த்து: நீங்கள் எழுந்திருந்து, அநாதியாய் என்றென்றைக்குமிருக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள் என்று சொல்லி, கர்த்தரை நோக்கி: எந்த ஸ்துதி ஸ்தோத்திரத்துக்கும் மேலான உம்முடைய மகிமையுள்ள நாமத்துக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.
6நீர் ஒருவரே கர்த்தர்; நீர் வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகளுடைய சர்வ சேனைகளையும், பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், சமுத்திரங்களையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர்; அவைகளையெல்லாம் நீர் காப்பாற்றுகிறீர்; வானசேனைகள் உம்மை பணிந்துகொள்ளுகிறது.
7ஆபிராமைத் தெரிந்துகொண்டு, அவனை ஊர் என்னும் கல்தேயரின் பட்டணத்திலிருந்து புறப்படப்பண்ணி, அவனுக்கு ஆபிரகாம் என்னும் பேரிட்ட தேவனாகிய கர்த்தர் நீர்.
8அவன் இருதயத்தை உமக்கு முன்பாக உண்மையுள்ளதாகக்கண்டு, கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், எபூசியர், கிர்காசியருடைய தேசத்தை அவன் சந்ததிக்குக் கொடுக்கும்படி, அவனோடு உடன்படிக்கைபண்ணி. உம்முடைய வார்த்தைகளை நிறைவேற்றினீர்; நீர் நீதியுள்ளவர்.
9எகிப்திலே எங்கள் பிதாக்கள் அநுபவித்த சிறுமையை நீர் கண்டு, சிவந்த சமுத்திரத்தில் அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டீர்.
10பார்வோனிடத்திலும், அவனுடைய எல்லா ஊழியக்காரரிடத்திலும், அவன் தேசத்தின் சகல ஜனத்தினிடத்திலும், அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்தீர்; அவர்கள் உமது ஜனங்களை அகந்தையாய் நடத்தினார்கள் என்பதை அறிந்திருந்தீர்; இப்படியே இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி உமக்குக் கீர்த்தியை உண்டாக்கினீர்.
11நீர் அவர்களுக்கு முன்பாகச் சமுத்திரத்தைப் பிரித்ததினால், கடலின் நடுவாகக் கால்நனையாமல் நடந்தார்கள்; வலுவான தண்ணீர்களிலே கல்லைப்போடுகிறதுபோல, அவர்களைத் தொடர்ந்தவர்களை ஆழங்களிலே போட்டுவிட்டீர்.
12நீர் பகலிலே மேகஸ்தம்பத்தினாலும். அவர்கள் நடக்கவேண்டிய வழியை அவர்களுக்கு வெளிச்சமாக்க இரவிலே அக்கினிஸ்தம்பத்தினாலும், அவர்களை வழிநடத்தினீர்.
13நீர் சீனாய்மலையிலிறங்கி, வானத்திலிருந்து அவர்களோடே பேசி, அவர்களுக்குச் செம்மையான நீதிநியாயங்களையும், நல்ல கட்டளைகளும் கற்பனைகளுமாகிய உண்மையான பிரமாணங்களையும் கொடுத்தீர்.
14உமது பரிசுத்த ஓய்வுநாளை அவர்களுக்குத் தெரியப்படுத்தி, உமது தாசனாகிய மோசேயைக்கொண்டு, அவர்களுக்குக் கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயப்பிரமாணங்களையும் கற்பித்தீர்.
15அவர்கள் பசிக்கு வானத்திலிருந்து அப்பம் கொடுத்து, அவர்கள் தாகத்துக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, நீர் அவர்களுக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளப்பிரவேசியுங்கள் என்று அவர்களுக்குச் சொன்னீர்.
16எங்கள் பிதாக்களாகிய அவர்களோ அகங்காரமாய் நடந்து, தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, உம்முடைய கற்பனைகளுக்குச் செவிகொடாதேபோனார்கள்.
17அவர்கள் செவிகொடுக்க மனதில்லாமலும், அவர்களிடத்திலே நீர் செய்த உம்முடைய அற்புதங்களை நினையாமலும் போய், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, தங்கள் அடிமைத்தனத்துக்குத் திரும்பும்படிக்கு அவர்கள் கலகம்பண்ணி, ஒரு தலைவனை ஏற்படுத்தினார்கள்; ஆகிலும் வெகுவாய் மன்னிக்கிறவரும், இரக்கமும் மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மகா கிருபையுமுள்ளவருமான தேவனாகிய நீர் அவர்களைக் கைவிடவில்லை.
18அவர்கள் வார்ப்பிக்கப்பட்ட ஒரு கன்றுக்குட்டியைத் தங்களுக்கு உண்டாக்கி: இது உன்னை எகிப்திலிருந்து கொண்டுவந்த உன் தெய்வம் என்று சொல்லி, கோபமூட்டத்தக்க பெரிய அக்கிரமங்களைச் செய்திருந்தாலும்,
19நீர் உம்முடைய மிகுந்த மனவுருக்கத்தின்படியே, அவர்களை வனாந்தரத்திலே கைவிடவில்லை; அவர்களை வழிநடத்தப் பகலிலே மேகஸ்தம்பமும் அவர்களுக்கு வெளிச்சத்தையும் அவர்கள் நடக்கவேண்டிய வழியையும் காட்ட இரவிலே அக்கினிஸ்தம்பமும், அவர்களை விட்டு விலகவில்லை.
20அவர்களுக்கு அறிவை உணர்த்த உம்முடைய நல் ஆவியைக் கட்டளையிட்டீர்; அவர்கள் வாய்க்கு உம்முடைய மன்னாவை அருளி, அவர்கள் தாகத்துக்குத் தண்ணீரைக் கொடுத்தீர்.
21இப்படி நாற்பது வருஷமாக வனாந்தரத்தில் அவர்களுக்கு ஒன்றும் குறைவுபடாதபடிக்கு, அவர்களைப் பராமரித்து வந்தீர்; அவர்கள் வஸ்திரங்கள் பழமையாய்ப் போகவுமில்லை, அவர்கள் கால்கள் வீங்கவுமில்லை.
22அவர்களுக்கு ராஜ்யங்களையும் ஜனங்களையும் ஒப்புக்கொடுத்து, அவைகளை எல்லை எல்லையாக அவர்களுக்குப் பங்கிட்டீர்; எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் தேசத்தையும், பாசானின் ராஜாவாகிய ஓகின் தேசத்தையும் கட்டிக்கொண்டார்கள்.
23அவர்கள் பிள்ளைகளை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, சுதந்தரித்துக்கொள்ளும்படி நீர் அவர்கள் பிதாக்களுக்குச் சொன்ன தேசத்திலே அவர்களை அழைத்துவந்தீர்.
24அப்படியே பிள்ளைகள் உட்பிரவேசித்து, தேசத்தைச் சுதந்தரித்துக் கொண்டார்கள்; நீர் அவர்களுக்கு முன்பாக தேசத்தின் குடிகளாகிய கானானியரைத் தாழ்த்தி, அவர்களையும் அவர்கள் ராஜாக்களையும், தேசத்தின் ஜனங்களையும், தங்கள் இஷ்டப்படி செய்ய, அவர்கள் கையிலே ஒப்புக்கொடுத்தீர்.
25அவர்கள் அரணான பட்டணங்களையும், செழுமையான பூமியையும் கட்டிக்கொண்டு, சகலவித உடைமைகள் நிறைந்த வீடுகளையும், வெட்டப்பட்ட துரவுகளையும், ஏராளமான திராட்சத்தோட்டங்களையும், ஒலிவத்தோப்புகளையும், கனிகொடுக்கும் விருட்சங்களையும் சுதந்தரித்துக்கொண்டு, புசித்துத் திருப்தியாகிக் கொழுத்து, உம்முடைய பெரிய தயையினால் செல்வமாய் வாழ்ந்தார்கள்.
26ஆனாலும் அவர்கள் கீழ்ப்படியாதவர்களாகி, உமக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, உம்முடைய நியாயப்பிரமாணத்தைத் தங்களுக்குப் புறம்பே எறிந்துவிட்டு, தங்களை உம்மிடத்தில் திருப்பும்படி அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்ட உம்முடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றுபோட்டு, கோபமூட்டுகிற பெரிய அக்கிரமங்களைச் செய்தார்கள்.
27ஆகையால் அவர்களை நெருக்குகிற அவர்கள் சத்துருக்களின் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்தீர்; அவர்கள் நெருக்கம் அநுபவிக்கிற காலத்தில் அவர்கள் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறபோதோ, நீர் பரலோகத்திலிருந்து கேட்டு, உம்முடைய மிகுந்த இரக்கத்தினால் அவர்களை அவர்கள் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கிவிடுகிற இரட்சகர்களை அவர்களுக்குக் கொடுத்தீர்.
28அவர்களுக்கு இளைப்பாறுதல் உண்டானபோதோ, உமக்கு முன்பாக மறுபடியும் பொல்லாப்புச் செய்யத் தொடங்கினார்கள்; ஆகையால் அவர்கள் சத்துருக்கள் அவர்களை ஆளும்படிக்கு, அவர்கள் கையிலே ஒப்புவித்தீர்; அவர்கள் மனந்திரும்பி, உம்மை நோக்கிக் கூப்பிட்டபோதோ, நீர் பரலோகத்திலிருந்து கேட்டு, அவர்களை உம்முடைய இரக்கங்களின்படியே அநேகந்தரம் விடுதலையாக்கிவிட்டீர்.
29அவர்களை உம்முடைய நியாயப்பிரமாணத்துக்குத் திருப்ப அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்து கொண்டீர்; ஆனாலும் அவர்கள் அகங்காரங்கொண்டு, உம்முடைய கற்பனைகளுக்குச் செவிகொடாமல், கீழ்ப்படிந்து நடக்கிற மனுஷன் செய்து பிழைக்கிற உம்முடைய நீதி நியாயங்களுக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, தங்கள் தோளை முரண்டுத்தனமாய் விலக்கி, செவிகொடாமல், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்திக்கொண்டார்கள்.
30நீர் அநேக வருஷமாக அவர்கள்மேல் பொறுமையாயிருந்து, உம்முடைய ஆவியினால் பேசின உம்முடைய தீர்க்கதரிசிகளைக்கொண்டு அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டாலும், அவர்கள் செவிகொடாதபடியினாலே அவர்களை அந்நிய தேசஜனங்களின் கையில் ஒப்புக்கொடுத்தீர்.
31ஆகிலும் உம்முடைய மிகுந்த இரக்கங்களின்படியே, அவர்களை நிர்மூலமாக்காமலும் அவர்களைக் கைவிடாமலும் இருந்தீர்; நீர் கிருபையும் இரக்கமுமுள்ள தேவன்.
32இப்பொழுதும் உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற வல்லமையும் பயங்கரமுமுள்ள மகா தேவனாகிய எங்கள் தேவனே, அசீரியா ராஜாக்களின் நாட்கள் முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் எங்களுக்கும், எங்கள் ராஜாக்களுக்கும், எங்கள் பிரபுக்களுக்கும், எங்கள் ஆசாரியர்களுக்கும், எங்கள் தீர்க்கதரிசிகளுக்கும், எங்கள் பிதாக்களுக்கும், உம்முடைய ஜனங்கள் அனைவருக்கும் நேரிட்ட சகல வருத்தமும் உமக்கு முன்பாக அற்பமாய்க் காணப்படாதிருப்பதாக.
33எங்களுக்கு நேரிடப்பண்ணின எல்லாவற்றிலும் நீர் நீதியுள்ளவர்; நீர் உண்மையாய் நடப்பித்தீர்; நாங்களோ ஆகாமியம்பண்ணினோம்.
34எங்கள் ராஜாக்களும், எங்கள் பிரபுக்களும், எங்கள் ஆசாரியர்களும், எங்கள் பிதாக்களும், உம்முடைய நியாயப்பிரமாணத்தின்படி செய்யாமலும், உம்முடைய கற்பனைகளையும், நீர் அவர்களைக் கடிந்துகொண்ட உம்முடைய சாட்சிகளையும் கவனியாமலும் போனார்கள்.
35அவர்கள் தங்கள் ராஜ்யத்திலும், நீர் அவர்களுக்குக் கொடுத்த உம்முடைய பெரிய தயையிலும், நீர் அவர்களுக்கு முன்பாகத் திறந்துவைத்த விசாலமும் செழிப்புமான தேசத்திலும் உமக்கு ஊழியஞ்செய்யாமலும், தங்கள் துர்க்கருமங்களை விட்டுத் திரும்பாமலும் போனார்கள்.
36இதோ, இன்றையதினம் நாங்கள் அடிமைகளாயிருக்கிறோம். இதோ, பலனையும் நன்மையையும் அனுபவிக்கும்படி நீர் எங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த இந்தத் தேசத்தில்தானே நாங்கள் அடிமைகளாயிருக்கிறோம்.
37அதின் வருமானம் எங்கள் பாவங்களினிமித்தம் நீர் எங்கள்மேல் வைத்த ராஜாக்களுக்குத் திரளாகப் போகிறது; அவர்கள் தங்களுக்கு இஷ்டமானபடியே எங்கள் சரீரங்களையும் எங்கள் மிருக ஜீவன்களையும் ஆளுகிறார்கள்; நாங்கள் மகா இக்கட்டில் அகப்பட்டிருக்கிறோம்.
38இவையெல்லாம் இப்படி இருக்கிறபடியால், நாங்கள் உறுதியான உடன்படிக்கைபண்ணி அதை எழுதி வைக்கிறோம்; எங்கள் பிரபுக்களும், எங்கள் லேவியரும், எங்கள் ஆசாரியரும் அதற்கு முத்திரை போடுவார்கள் என்றார்கள்.
1அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கையில், பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய், எபேசுவுக்கு வந்தான்; அங்கே சில சீஷரைக் கண்டு:
2நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள்.
3அப்பொழுது அவன்: அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள்.
4அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்க வேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான்.
5அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்.
6அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்த ஆவி அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனஞ்சொன்னார்கள்.
7அந்த மனுஷரெல்லாரும் ஏறக்குறையப் பன்னிரண்டு பேராயிருந்தார்கள்.
8பின்பு பவுல் ஜெப ஆலயத்தில் பிரவேசித்து, தைரியமாய்ப் பிரசங்கித்து, மூன்று மாதமளவும் தேவனுடைய ராஜ்யத்துக்கடுத்தவைகளைக்குறித்துச் சம்பாஷணைபண்ணி, புத்திசொல்லிக்கொண்டு வந்தான்.
9சிலர் கடினப்பட்டு அவிசுவாசிகளாகிக் கூட்டத்திற்கு முன்பாக இந்த மார்க்கத்தை நிந்தித்தபோது, அவன் அவர்களை விட்டு விலகி, சீஷரை அவர்களிலிருந்து பிரித்துக்கொண்டு, திறன்னு என்னும் ஒருவனுடைய வித்தியாசாலையிலே அநுதினமும் சம்பாஷித்துக் கொண்டுவந்தான்.
10இரண்டு வருஷகாலம் இப்படி நடந்ததினாலே ஆசியாவில் குடியிருந்த யூதரும் கிரேக்கருமாகிய எல்லாரும் கர்த்தராகிய இயேசுவின் வசனத்தைக் கேட்டார்கள்.
11பவுலின் கைகளினாலே தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளினார்.
12அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும், கச்சைகளையும் கொண்டுவந்து, வியாதிக்காரர்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; பொல்லாத ஆவிகளும் அவர்களைவிட்டுப் புறப்பட்டன.
13அப்பொழுது தேசாந்தரிகளாய்த் திரிகிற மந்திரவாதிகளாகிய யூதரில் சிலர் பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்லத் துணிந்து: பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்றார்கள்.
14பிரதான ஆசாரியனாகிய ஸ்கேவா என்னும் ஒரு யூதனுடைய குமாரர் ஏழுபேர் இப்படிச் செய்தார்கள்.
15பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி,
16பொல்லாத ஆவியையுடைய மனுஷன் அவர்கள்மேல் பாய்ந்து, பலாத்காரம்பண்ணி, அவர்களை மேற்கொள்ள, அவர்கள் நிருவாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டை விட்டு ஓடிப்போனார்கள்.
17இது எபேசுவிலே குடியிருந்த யூதர் கிரேக்கர் அனைவருக்கும் தெரியவந்தபோது, அவர்களெல்லாரும் பயமடைந்தார்கள்; கர்த்தராகிய இயேசுவின் நாமம் மகிமைப்பட்டது.
18விசுவாசித்தவர்களில் அநேகர் வந்து, தங்கள் செய்கைகளை வெளிப்படுத்தி அறிக்கையிட்டார்கள்.
19மாயவித்தைக்காரராயிருந்தவர்களில் அநேகர் தங்கள் புஸ்தகங்களைக் கொண்டுவந்து, எல்லாருக்கும் முன்பாகச் சுட்டெரித்தார்கள்; அவைகளின் கிரயத்தைத் தொகைபார்த்து, ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசாகக் கண்டார்கள்.
20இவ்வளவு பலமாய்க் கர்த்தருடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டது.
21இவைகள் முடிந்தபின்பு, பவுல் மக்கெதோனியா அகாயா என்னும் நாடுகளில் சுற்றிநடந்து, எருசலேமுக்குப் போகும்படி ஆவியில் நிருணயம்பண்ணிக்கொண்டு: நான் அங்கே போனபின்பு ரோமாபுரியையும் பார்க்கவேண்டியதென்று சொல்லி,
22தனக்கு உதவி செய்தவர்களில் இரண்டுபேராகிய தீமோத்தேயுவையும் எரஸ்துவையும் மக்கெதோனியாவுக்கு அனுப்பிவிட்டு; தான் பின்னும் சிலகாலம் ஆசியாவிலே தங்கினான்.
23அக்காலத்திலே இந்த மார்க்கத்தைக்குறித்துப் பெரிய கலகம் உண்டாயிற்று.
24எப்படியென்றால், தெமேத்திரியு என்னும் பேர்கொண்ட ஒரு தட்டான் தியானாளின் கோவிலைப்போல வெள்ளியினால் சிறிய கோவில்களைச் செய்து, தொழிலாளிகளுக்கு மிகுந்த ஆதாயம் வருவித்துக்கொண்டிருந்தான்.
25இவர்களையும் இப்படிப்பட்ட தொழில்செய்கிற மற்ற வேலையாட்களையும் அவன் கூடிவரச்செய்து: மனுஷர்களே, இந்தத் தொழிலினால் நமக்கு நல்ல பிழைப்பு உண்டாயிருக்கிறதென்று அறிவீர்கள்.
26இப்படியிருக்க, கைகளினால் செய்யப்பட்ட தேவர்கள் தேவர்களல்லவென்று இந்தப் பவுல் என்பவன் சொல்லி, எபேசுவிலேமாத்திரமல்ல, கொஞ்சங்குறைய ஆசியா எங்கும் அநேக ஜனங்களுக்குப் போதித்து, அவர்களை வசப்படுத்திக்கொண்டான் என்று நீங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறீர்கள்.
27இதனால் நம்முடைய தொழில் அற்றுப்போகும்படியான அபாயம் நேரிட்டிருக்கிறதுமல்லாமல், மகா தேவியாகிய தியானாளுடைய கோவில் எண்ணமற்றுப்போகிறதற்கும், ஆசியா முழுமையும் பூச்சக்கரமும் சேவிக்கிற அவளுடைய மகத்துவம் அழிந்துபோகிறதற்கும் ஏதுவாயிருக்கிறது என்றான்.
28அவர்கள் இதைக் கேட்டு, கோபத்தால் நிறைந்து: எபேசியருடைய தியானாளே பெரியவள் என்று சத்தமிட்டார்கள்.
29பட்டணம் முழுவதும் கலகத்தினால் நிறைந்தது. பவுலுக்கு வழித்துணையாய் வந்த மக்கெதோனியராகிய காயுவையும் அரிஸ்தர்க்குவையும் அவர்கள் இழுத்துக்கொண்டு, ஒருமனப்பட்டு அரங்கசாலைக்குப் பாய்ந்தோடினார்கள்.
30பவுல் கூட்டத்துக்குள்ளே போக மனதாயிருந்தபோது, சீஷர்கள் அவனைப் போகவிடவில்லை.
31ஆசியாநாட்டுத் தலைவரில் அவனுக்குச் சிநேகிதராயிருந்த சிலரும் அவனிடத்திற்கு ஆள் அனுப்பி, அரங்கசாலைக்குள் போகவேண்டாம் என்று எச்சரித்தார்கள்.
32கூட்டத்தில் அமளியுண்டாகி, சிலர் இப்படியும் சிலர் அப்படியுமாகப் பேசினார்கள்; தாங்கள் கூடிவந்த காரணம் இன்னதென்று அநேகருக்குத் தெரியாதிருந்தது.
33அப்பொழுது யூதர்கள் அலெக்சந்தர் என்பவனை முன்னிற்கத் தள்ளுகையில், கூட்டத்திலே சிலர் அவனை முன்னே இழுத்துவிட்டார்கள். அலெக்சந்தர் கையமர்த்தி, ஜனங்களுக்கு உத்தரவு சொல்ல மனதாயிருந்தான்.
34அவன் யூதனென்று அவர்கள் அறிந்தபோது, எபேசியருடைய தியானாளே பெரியவள் என்று இரண்டுமணி நேரமளவும் எல்லாரும் ஏகமாய்ச் சத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள்.
35பட்டணத்துச் சம்பிரதியானவன் ஜனங்களை அமர்த்தி: எபேசியரே, எபேசியருடைய பட்டணம் மகா தேவியாகிய தியானாளுக்கும் வானத்திலிருந்து விழுந்த சிலைக்கும் கோவிற்பரிசாரகியாயிருக்கிறதை அறியாதவன் உண்டோ?
36இது எதிர்பேசப்படாத காரியமாகையால், நீங்கள் ஒன்றும் பதறிச் செய்யாமல் அமர்ந்திருக்க வேண்டும்.
37இந்த மனுஷரை இங்கே கொண்டு வந்தீர்கள்; இவர்கள் கோவிற்கொள்ளைக்காரருமல்ல, உங்கள் தேவியைத் தூஷிக்கிறவர்களுமல்ல.
38தெமேத்திரியுவுக்கும் அவனைச் சேர்ந்த தொழிலாளிகளுக்கும் ஒருவன்மேல் ஒரு காரியம் உண்டாயிருந்தால், நியாயம் விசாரிக்கிற நாட்களுண்டு, தேசாதிபதிகளும் இருக்கிறார்கள்; ஒருவர் பேரிலொருவர் வழக்காடிக்கொள்ளட்டும்.
39நீங்கள் வேறே யாதொரு காரியத்தைக்குறித்து விசாரிக்கவேண்டியதானால், அது நியாயசங்கத்திலே தீர்க்கப்படும்.
40இன்றைக்கு உண்டான கலகத்தைக்குறித்து நாம் உத்தரவு சொல்லுகிறதற்கு ஏதுவில்லாதபடியால், இந்தக் கலகத்தைக்குறித்து நாங்கள் விசாரிக்கப்படும்போது, குற்றவாளிகளாகிறதற்கு ஏதுவாயிருப்போமே என்று சொல்லி,
41பின்பு கூட்டத்தை அனுப்பிவிட்டான்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com