‹ முகப்புமுழுத் திட்டம்

ஜனவரி 20 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்ஜனவரி 20அடுத்த நாள் ›
குடும்பம்

ஆதியாகமம் 21

முழு அதிகாரம் ›

1கர்த்தர் தாம் சொல்லியிருந்தபடி சாராள்பேரில் கடாட்சமானார்; கர்த்தர் தாம் உரைத்தபடியே சாராளுக்குச் செய்தருளினார்.

2ஆபிரகாம் முதிர்வயதாயிருக்கையில், சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறித்திருந்த காலத்திலே அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.

3அப்பொழுது ஆபிரகாம் தனக்குச் சாராள் பெற்ற குமாரனுக்கு ஈசாக்கு என்று பேரிட்டான்.

4தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளிலே, ஆபிரகாம் தனக்குத் தேவன் கட்டளையிட்டிருந்தபடி அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான்.

5தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாம் நூறுவயதாயிருந்தான்.

6அப்பொழுது சாராள்: தேவன் என்னை நகைக்கப்பண்ணினார்; இதைக்கேட்கிற யாவரும் என்னோடகூட நகைப்பார்கள்.

7சாராள் பிள்ளைகளுக்குப் பால்கொடுப்பாள் என்று ஆபிரகாமுக்கு எவன் சொல்லுவான்? அவருடைய முதிர்வயதிலே அவருக்கு ஒரு குமாரனைப் பெற்றேனே என்றாள்.

8பிள்ளை வளர்ந்து, பால் மறந்தது; ஈசாக்கு பால் மறந்தநாளிலே ஆபிரகாம் பெரிய விருந்து பண்ணினான்.

9பின்பு எகிப்து தேசத்தாளாகிய ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரன் பரியாசம்பண்ணுகிறதைச் சாராள் கண்டு,

10ஆபிரகாமை நோக்கி: இந்த அடிமைப்பெண்ணையும் அவள் மகனையும் புறம்பே தள்ளும்; இந்த அடிமைப்பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்திரவாளியாயிருப்பதில்லை என்றாள்.

11தன் மகனைக்குறித்துச் சொல்லப்பட்ட இந்தக் காரியம் ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாயிருந்தது.

12அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி: அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்; ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்.

13அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால், அவனையும் ஒரு ஜாதியாக்குவேன் என்றார்.

14ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, அப்பத்தையும் ஒரு துருத்தி தண்ணீரையும் எடுத்து, ஆகாருடைய தோளின்மேல் வைத்துப் பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து, அவளை அனுப்பிவிட்டான்; அவள் புறப்பட்டுப்போய், பெயர்செபாவின் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள்.

15துருத்தியிலிருந்த தண்ணீர் செலவழிந்தபின்பு, அவள் பிள்ளையை ஒரு செடியின் கீழே விட்டு,

16பிள்ளை சாகிறதை நான் பார்க்கமாட்டேன் என்று, எதிராக அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள்.

17தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார்; தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு: ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே, பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார்.

18நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக் கொண்டுபோ, அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார்.

19தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள்.

20தேவன் பிள்ளையுடனே இருந்தார்; அவன் வளர்ந்து வனாந்தரத்திலே குடியிருந்து வில்வித்தையிலே வல்லவனானான்.

21அவன் பாரான் வனாந்தரத்திலே குடியிருக்கையில், அவனுடைய தாய் எகிப்து தேசத்தாளாகிய ஒரு பெண்ணை அவனுக்கு விவாகம்பண்ணுவித்தாள்.

22அக்காலத்தில் அபிமெலேக்கும் அவன் சேனாதிபதியாகிய பிகோலும் ஆபிரகாமை நோக்கி: நீ செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னுடனே இருக்கிறார்.

23ஆகையால், நீ எனக்காவது, என் குமாரனுக்காவது, என் பேரனுக்காவது வஞ்சனை செய்யாமல், நான் உனக்குச் செய்த தயவின்படியே, நீ எனக்கும், நீ தங்கியிருக்கிற இந்தத் தேசத்திற்கும், தயவு செய்வேன் என்று இங்கே தேவன் பேரில் எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்.

24அதற்கு ஆபிரகாம்: நான் ஆணையிட்டுக்கொடுக்கிறேன் என்றான்.

25ஆனாலும், அபிமெலேக்குடைய வேலைக்காரர் கைவசப்படுத்திக்கொண்ட துரவின் நிமித்தம் ஆபிரகாம் அபிமெலேக்கைக் கடிந்துகொண்டான்.

26அதற்கு அபிமெலேக்கு: இந்தக் காரியத்தைச் செய்தவன் இன்னான் என்று எனக்குத் தெரியாது, நீயும் எனக்கு அறிவிக்கவில்லை; இன்று நான் அதைக்கேட்டதேயன்றி, இதற்குமுன் அதை நான் கேள்விப்பட்டதே இல்லை என்றான்.

27அப்பொழுது ஆபிரகாம் ஆடுமாடுகளைக் கொண்டுவந்து அபிமெலேக்குக்குக் கொடுத்தான்; அவர்கள் இருவரும் உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள்.

28ஆபிரகாம் ஏழு பெண்ணாட்டுக்குட்டிகளைத் தனியே நிறுத்தினான்.

29அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: நீ தனியே நிறுத்தின இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகள் என்னத்திற்கு என்று கேட்டான்.

30அதற்கு அவன்: நான் இந்தத் துரவு தோண்டினதைக்குறித்து, நீர் சாட்சியாக இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகளை என் கையில் வாங்கிக்கொள்ளவேண்டும் என்றான்.

31அவர்கள் இருவரும் அவ்விடத்தில் ஆணையிட்டுக்கொண்டபடியால், அந்த இடம் பெயெர்செபா என்னப்பட்டது.

32அவர்கள் பெயெர்செபாவிலே உடன்படிக்கை பண்ணிக்கொண்டபின் அபிமெலேக்கும், அவன் சேனாதிபதியாகிய பிகோலும் எழுந்து பெலிஸ்தருடைய தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள்.

33ஆபிரகாம் பெயெர்செபாவிலே ஒரு தோப்பை உண்டாக்கி, சதாகாலமுமுள்ள தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை அவ்விடத்தில் தொழுதுகொண்டான்.

34ஆபிரகாம் பெலிஸ்தருடைய தேசத்தில் அநேகநாள் தங்கியிருந்தான்.

1பரலோகராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது; அவன் தன் திராட்சத்தோட்டத்துக்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்பட்டான்.

2வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு பணம் கூலிபேசி, அவர்களைத் தன் திராட்சத்தோட்டத்துக்கு அனுப்பினான்.

3மூன்றாம் மணிவேளையிலும் அவன் புறப்பட்டுப்போய், கடைத்தெருவிலே சும்மா நிற்கிற வேறு சிலரைக் கண்டு:

4நீங்களும் திராட்சத்தோட்டத்துக்குப் போங்கள், நியாயமானபடி உங்களுக்குக் கூலி கொடுப்பேன் என்றான்; அவர்களும் போனார்கள்.

5மறுபடியும், ஆறாம் ஒன்பதாம் மணிவேளையிலும் அவன் போய் அப்படியே செய்தான்.

6பதினோராம் மணிவேளையிலும் அவன்போய், சும்மா நிற்கிற வேறு சிலரைக்கண்டு: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான்.

7அதற்கு அவர்கள்: ஒருவரும் எங்களுக்கு வேலையிடவில்லை என்றார்கள். அவன் அவர்களை நோக்கி: நீங்களும் திராட்சத்தோட்டத்துக்குப் போங்கள், நியாயமானபடி கூலி பெற்றுக்கொள்வீர்கள் என்றான்.

8சாயங்காலத்தில், திராட்சத்தோட்டத்துக்கு எஜமான் தன் காரியகாரனை நோக்கி: நீ வேலையாட்களை அழைத்து, பிந்திவந்தவர்கள் தொடங்கி முந்திவந்தவர்கள்வரைக்கும் அவர்களுக்குக் கூலிகொடு என்றான்.

9அப்பொழுது பதினோராம் மணிவேளையில் வேலையமர்த்தப்பட்டவர்கள் வந்து ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள்.

10முந்தி அமர்த்தப்பட்டவர்கள் வந்து, தங்களுக்கு அதிக கூலி கிடைக்கும் என்று எண்ணினார்கள், அவர்களும் ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள்.

11வாங்கிக்கொண்டு, வீட்டெஜமானை நோக்கி:

12பிந்திவந்தவர்களாகிய இவர்கள் ஒருமணி நேரமாத்திரம் வேலைசெய்தார்கள்; பகலின் கஷ்டத்தையும் வெயிலின் உஷ்ணத்தையும் சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள்.

13அவர்களில் ஒருவனுக்கு அவன் பிரதியுத்தரமாக: சிநேகிதனே, நான் உனக்கு அநியாயஞ்செய்யவில்லை; நீ என்னிடத்தில் ஒரு பணத்துக்குச் சம்மதிக்கவில்லையா?

14உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டு போ, உனக்குக் கொடுத்ததுபோலப் பிந்தி வந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய இஷ்டம்.

15என்னுடையதை என் இஷ்டப்படி செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா என்றான்.

16இவ்விதமாக, பிந்தினோர் முந்தினோராயும், முந்தினோர் பிந்தினோராயும் இருப்பார்கள்; அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.

17இயேசு எருசலேமுக்குப் போகும்போது, வழியிலே பன்னிரண்டு சீஷரையும் தனியே அழைத்து:

18இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து,

19அவரைப் பரியாசம்பண்ணவும், வாரினால் அடிக்கவும், சிலுவையில் அறையவும் புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார்.

20அப்பொழுது, செபெதேயுவின் குமாரருடைய தாய் தன் குமாரரோடுகூட அவரிடத்தில் வந்து, அவரைப் பணிந்துகொண்டு: உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றாள்.

21அவர் அவளை நோக்கி: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவள்: உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரராகிய இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள்செய்யவேண்டும் என்றாள்.

22இயேசு பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா என்றார். அதற்கு அவர்கள்: கூடும் என்றார்கள்.

23அவர் அவர்களை நோக்கி: என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள்; ஆனாலும், என் வலது பாரிசத்திலும் என் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.

24மற்றப் பத்துப்பேரும் அதைக்கேட்டு, அந்த இரண்டு சகோதரர்பேரிலும் எரிச்சலானார்கள்.

25அப்பொழுது, இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து: புறஜாதியாருடைய அதிகாரிகள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரஞ்செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.

26உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்.

27உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்.

28அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும்வந்தார் என்றார்.

29அவர்கள் எரிகோவிலிருந்து புறப்பட்டுப்போகையில், திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள்.

30அப்பொழுது வழியருகே உட்கார்ந்திருந்த இரண்டு குருடர், இயேசு அவ்வழியே வருகிறார் என்று கேள்விப்பட்டு: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.

31அவர்கள் பேசாதிருக்கும்படி ஜனங்கள் அவர்களை அதட்டினார்கள். அவர்களோ: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று அதிகமாய்க் கூப்பிட்டார்கள்.

32இயேசு நின்று, அவர்களைத் தம்மிடத்தில் அழைத்து: நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறீர்கள் என்றார்.

33அதற்கு அவர்கள்: ஆண்டவரே, எங்கள் கண்களைத் திறக்கவேண்டும் என்றார்கள்.

34இயேசு மனதுருகி, அவர்கள் கண்களைத் தொட்டார்; உடனே அவர்கள் பார்வையடைந்து, அவருக்குப் பின்சென்றார்கள்.

தனிவாசிப்பு

1முத்திரைபோட்டவர்கள் யாரென்றால்: அகலியாவின் குமாரனாகிய திர்ஷாதா என்னும் நெகேமியா, சிதேகியா,

2செராயா, அசரியா, எரேமியா,

3பஸ்கூர், அமரியா, மல்கிஜா,

4அத்தூஸ், செபனியா, மல்லூக்,

5ஆரீம், மெரெமோத், ஒபதியா,

6தானியேல், கிநேதோன், பாருக்,

7மெசுல்லாம், அபியா, மீயாமின்,

8மாசியா, பில்காய், செமாயா என்னும் ஆசாரியர்களும்,

9லேவியராகிய அசனியாவின் குமாரன் யெசுவா, எனாதாதின் குமாரரில் ஒருவனாகிய பின்னூயி, கத்மியேல் என்பவர்களும்,

10அவர்கள் சகோதரராகிய செபனியா, ஒதியா, கேலிதா, பெலாயா, ஆனான்,

11மீகா, ரேகோப், அசபியா,

12சக்கூர், செரெபியா, செபனியா,

13ஒதியா, பானி, பெனினு என்பவர்களும்,

14ஜனத்தின் தலைவராகிய பாரோஷ், பாகாத்மோவாப், ஏலாம், சத்தூ, பானி,

15புன்னி, அஸ்காத், பெபாயி,

16அதோனியா, பிக்வாய், ஆதின்,

17ஆதேர், இஸ்கியா, அசூர்,

18ஒதியா, ஆசூம், பெத்சாய்,

19ஆரீப், ஆனதோத், நெபாய்,

20மக்பியாஸ், மெசுல்லாம், ஏசீர்,

21மெஷெசாபெயேல், சாதோக், யதுவா,

22பெலத்தியா, ஆனான், ஆனாயா,

23ஓசெயா, அனனியா, அசூப்,

24அல்லோகேஸ், பிலகா, சோபேக்,

25ரேகூம், அஷபனா, மாசெயா,

26அகியா, கானான், ஆனான்,

27மல்லூக், ஆரிம், பானா என்பவர்களுமே.

28ஜனங்களில் மற்றவர்களாகிய ஆசாரியரும், லேவியரும், வாசல் காவலாளரும், பாடகரும், நிதனீமியரும், தேசங்களின் ஜனங்களைவிட்டுப் பிரிந்து விலகி தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குத் திரும்பின அனைவரும், அவர்கள் மனைவிகளும், அவர்கள் குமாரரும், அவர்கள் குமாரத்திகளுமாகிய அறிவும் புத்தியும் உள்ளவர்களெல்லாரும்,

29தங்களுக்குப் பெரியவர்களாகிய தங்கள் சகோதரரோடே கூடிக்கொண்டு: தேவனுடைய தாசனாகிய மோசேயைக்கொண்டு கொடுக்கப்பட்ட தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படி நடந்துகொள்வோம் என்றும், எங்கள் ஆண்டவராகிய கர்த்தரின் கற்பனைகளையும் சகல நீதிநியாயங்களையும், கட்டளைகளையும் எல்லாம் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வோம் என்றும்,

30நாங்கள் எங்கள் குமாரத்திகளை தேசத்தின் ஜனங்களுக்குக் கொடாமலும், எங்கள் குமாரருக்கு அவர்கள் குமாரத்திகளைக்கொள்ளாமலும் இருப்போம் என்றும்,

31தேசத்தின் ஜனங்கள் ஓய்வுநாளிலே சரக்குகளையும், எந்தவிதத்தானியதவசத்தையும் விற்கிறதற்குக் கொண்டுவந்தால், நாங்கள் அதை ஓய்வுநாளிலும் பரிசுத்தநாளிலும் அவர்கள் கையில் கொள்ளாதிருப்போம் என்றும், நாங்கள் ஏழாம் வருஷத்தை விடுதலை வருஷமாக்கிச் சகல கடன்களையும் விட்டுவிடுவோம் என்றும் ஆணையிட்டுப் பிரமாணம்பண்ணினார்கள்.

32மேலும்: நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்காக சமுகத்தப்பங்களுக்கும், நித்திய போஜனபலிக்கும், ஓய்வு நாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் செலுத்தும் நித்திய சர்வாங்க தகனபலிகளுக்கும், பண்டிகைகளுக்கும், பிரதிஷ்டையான பொருள்களுக்கும், இஸ்ரவேலுக்காகப் பாவநிவிர்த்தி உண்டாக்கும் பலிகளுக்கும்,

33எங்கள் தேவனுடைய ஆலயத்தின் சகல வேலைக்கும், வருஷந்தோறும் நாங்கள் சேக்கலில் மூன்றில் ஒரு பங்கைக் கொடுப்போம் என்கிற கடனை எங்கள்மேல் ஏற்றுக்கொண்டோம்.

34நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே எங்கள் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் எரிகிறதற்காக, குறிக்கப்பட்ட காலங்களில் வருஷாவருஷம் எங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படியே, எங்கள் தேவனுடைய ஆலயத்துக்குக் கொண்டுவரவேண்டிய விறகு காணிக்கைக்காகவும், ஆசாரியருக்கும். லேவியருக்கும், ஜனத்துக்கும் சீட்டுப்போட்டோம்.

35நாங்கள் வருஷந்தோறும் எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கு எங்கள் தேசத்தின் முதற்பலனையும், சகலவித விருட்சங்களின் எல்லா முதற்கனிகளையும் கொண்டுவரவும்,

36நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே, எங்கள் குமாரரில் முதற்பேறுகளையும், எங்கள் ஆடுமாடுகளாகிய மிருகஜீவன்களின் தலையீற்றுகளையும், எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கும் எங்கள் தேவனுடைய ஆலயத்திலே ஊழியஞ்செய்கிற ஆசாரியரிடத்துக்கும் கொண்டுவரவும்,

37நாங்கள் எங்கள் பிசைந்தமாவில் முதற்பாகத்தையும், எங்கள் படைப்புகளையும், சகல மரங்களின் முந்தின பலனாகிய திராட்சப்பழரசத்தையும், எண்ணெயையும், எங்கள் தேவனுடைய ஆலயத்தின் அறைகளில் வைக்கும்படி ஆசாரியரிடத்துக்கும், எங்கள் நிலப்பயிர்களில் தசமபாகம் லேவியரிடத்துக்கும் கொண்டுவரவும், லேவியராகிய இவர்கள் எங்கள் வெள்ளாண்மையின் பட்டணங்களிலெல்லாம் தசமபாகம் சேர்க்கவும்,

38லேவியர் தசமபாகம் சேர்க்கும்போது ஆரோனின் குமாரனாகிய ஒரு ஆசாரியன் லேவியரோடேகூட இருக்கவும், தசமபாகமாகிய அதிலே லேவியர் பத்தில் ஒரு பங்கை எங்கள் தேவனுடைய ஆலயத்திலுள்ள பொக்கிஷ அறைகளில் கொண்டுவரவும் திட்டம்பண்ணிக்கொண்டோம்.

39பரிசுத்தஸ்தலத்தின் பணிமுட்டுகளும், ஊழியஞ்செய்கிற ஆசாரியரும், வாசல் காவலாளரும், பாடகரும் இருக்கிற அந்த அறைகளிலே இஸ்ரவேல் புத்திரரும் லேவிபுத்திரரும் தானியம் திராட்சரசம் எண்ணெய் என்பவைகளின் படைப்புகளைக் கொண்டுவரவேண்டியது; இவ்விதமாய் நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தைப் பராமரியாமல் விடுவதில்லையென்று திட்டம்பண்ணிக்கொண்டோம்.

அப்போஸ்தலர் 20

முழு அதிகாரம் ›

1கலகம் அமர்ந்தபின்பு, பவுல் சீஷரைத் தன்னிடத்திற்கு வரவழைத்து, வினவிக்கொண்டு, மக்கெதோனியாவுக்குப் போகப்புறப்பட்டான்.

2அவன் அந்தத் திசைகளிலே சுற்றி நடந்து, சீஷர்களுக்கு வெகுவாய்ப் புத்தி சொல்லி, கிரேக்கு தேசத்திலே சேர்ந்தான்.

3அங்கே மூன்றுமாதம் சஞ்சரித்த பின்பு, அவன் கப்பல் ஏறி, சீரியா தேசத்துக்குப்போக மனதாயிருந்தபோது, யூதர்கள் அவனுக்குத் தீமைசெய்யும்படி இரகசியமான யோசனை கொண்டிருந்தபடியால், மக்கெதோனியா தேசத்தின் வழியாய்த் திரும்பிப்போகத் தீர்மானம்பண்ணினான்.

4பெரோயா ஊரானாகிய சோபத்தரும், தெசலோனிக்கேயரில் அரிஸ்தர்க்கும், செக்குந்தும், தெர்பையானாகிய காயுவும், தீமோத்தேயும், ஆசியா நாட்டாராகிய தீகிக்கும் துரோப்பீமும், ஆசியா நாடுவரைக்கும் அவனுக்கு வழித்துணையாய் வந்தார்கள்.

5இவர்கள் முன்னாகப்போய், துரோவாபட்டணத்திலே எங்களுக்காகக் காத்திருந்தார்கள்.

6புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களுக்குப்பின்பு நாங்கள் கப்பல் ஏறிப் பிலிப்பி பட்டணத்தை விட்டு ஐந்து நாளைக்குள்ளே துரோவாபட்டணத்துக்கு அவர்களிடத்தில் வந்து, அங்கே ஏழுநாள் தங்கியிருந்தோம்.

7வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான்.

8அவர்கள் கூடியிருந்த மேல்வீட்டிலே அநேக விளக்குகள் வைத்திருந்தது.

9அப்பொழுது ஐத்திகு என்னும் பேர்கொண்ட ஒரு வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்திருந்து, பவுல் நெடுநேரம் பிரசங்கம்பண்ணிக்கொண்டிருக்கையில், மிகுந்த தூக்கமடைந்து, நித்திரை மயக்கத்தினால் சாய்ந்து, மூன்றாம் மெத்தையிலிருந்து கீழே விழுந்து, மரித்தவனாய் எடுக்கப்பட்டான்.

10உடனே பவுல் இறங்கிப்போய், அவன்மேல் விழுந்து, அவனை அணைத்துக்கொண்டு: கலங்காதிருங்கள், இவன் உயிர் இவனுக்குள் இருக்கிறது என்றான்.

11பின்பு ஏறிப்போய், அப்பம் பிட்டுப் புசித்து, விடியற்காலமளவும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்து, பின்பு புறப்பட்டான்.

12அந்த வாலிபனை அவர்கள் உயிருள்ளவனாகக் கூட்டிக்கொண்டுவந்து, மிகுந்த ஆறுதலடைந்தார்கள்.

13பவுல் ஆசோபட்டணம் வரைக்கும் கரைவழியாய்ப் போக மனதாயிருந்தபடியால், அவன் திட்டம் பண்ணியிருந்தபடியே, நாங்கள் கப்பல் ஏறி, அந்தப் பட்டணத்தில் அவனை ஏற்றிக்கொள்ளும்படி முன்னாக அங்கே போயிருந்தோம்.

14அவன் ஆசோ பட்டணத்திலே எங்களைக் கண்டபோது, நாங்கள் அவனை ஏற்றிக்கொண்டு, மித்திலேனே பட்டணத்துக்கு வந்தோம்.

15அவ்விடம்விட்டு, மறுநாளிலே கீயுதீவுக்கு எதிராக வந்து,

16பவுல் கூடுமானால் பெந்தெகொஸ்தே பண்டிகைநாளிலே எருசலேமிலிருக்க வேண்டுமென்று தீவிரப்பட்டதினிமித்தம், தான் ஆசியாவிலே காலம்போக்காதபடிக்கு, எபேசு பட்டணத்தைக் கடந்து போகவேண்டுமென்று தீர்மானித்ததினால், மறுநாளிலே சாமுதீவு பிடித்து, துரோகில்லியோன் ஊர்த்துறையிலே தங்கி, மறுநாள் மிலேத்து பட்டணத்துக்கு வந்தோம்.

17மிலேத்துவிலிருந்து அவன் எபேசுவுக்கு ஆள் அனுப்பி, சபையின் மூப்பரை வரவழைத்தான்.

18அவர்கள் தன்னிடத்தில் வந்துசேர்ந்தபொழுது, அவன் அவர்களை நோக்கி: நான் ஆசியாநாட்டில் வந்த முதல்நாள் தொடங்கி எல்லாக் காலங்களிலும் உங்களுடனே இன்னவிதமாய் இருந்தேன் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.

19வெகு மனத்தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும், யூதருடைய தீமையான யோசனையால் எனக்கு நேரிட்ட சோதனைகளோடும், நான் கர்த்தரைச் சேவித்தேன்.

20பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்து வைக்காமல், வெளியரங்கமாக வீடுகள்தோறும் உங்களுக்குப் பிரசங்கித்து, உபதேசம்பண்ணி,

21தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக்குறித்தும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதைக்குறித்தும், நான் யூதருக்கும் கிரேக்கருக்கும் சாட்சியாக அறிவித்தேன்.

22இப்பொழுதும் நான் ஆவியிலே கட்டுண்டவனாய் எருசலேமுக்குப் போகிறேன்; அங்கே எனக்கு நேரிடுங்காரியங்களை நான் அறியேன்.

23கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்த ஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன்.

24ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்.

25இதோ, நான் உங்களுக்குள்ளே சஞ்சரித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கம்பண்ணினதைக் கேட்டவர்களாகிய நீங்களெல்லாரும் இனி என் முகத்தைப் பார்க்கமாட்டீர்களென்று அறிந்திருக்கிறேன்.

26தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்துவைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே,

27எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை இன்றையதினம் சாட்சிகளாக வைக்கிறேன்.

28ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.

29நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும்.

30உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.

31ஆனபடியால், நான் மூன்று வருஷகாலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் அவனவனுக்குப் புத்தி சொல்லிக்கொண்டுவந்ததை நினைத்து விழித்திருங்கள்.

32இப்பொழுதும் சகோதரரே, நீங்கள் பக்திவிருத்தியடையவும், பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்தரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன்.

33ஒருவனுடைய வெள்ளியையாகிலும் பொன்னையாகிலும் வஸ்திரத்தையாகிலும் நான் இச்சிக்கவில்லை.

34நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூடி இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக்கைகளே வேலைசெய்தது.

35இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லா விதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான்.

36இவைகளைச் சொன்னபின்பு, அவன் முழங்காற்படியிட்டு, அவர்களெல்லாரோடுங்கூட ஜெபம் பண்ணினான்.

37அவர்களெல்லாரும் மிகவும் அழுது, என் முகத்தை நீங்கள் இனிப் பார்க்கமாட்டீர்களென்று அவன் சொன்ன வார்த்தையைக்குறித்து அதிகமாய்த் துக்கப்பட்டு,

38பவுலின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்து, கப்பல்வரைக்கும் அவனுடனே கூடப்போனார்கள்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com