1ஆபிரகாம் வயதுசென்று முதிர்ந்தவனானான். கர்த்தர் ஆபிரகாமைச் சகல காரியங்களிலும் ஆசீர்வதித்து வந்தார்.
2அப்பொழுது ஆபிரகாம் தன் வீட்டிலுள்ளவர்களில் வயதில் மூத்தவனும், தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் அதிகாரியுமாகிய தன் ஊழியக்காரனை நோக்கி:
3நான் குடியிருக்கிற கானானியருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்ளாமல்;
4நீ என் தேசத்துக்கும் என் இனத்தாரிடத்துக்கும் போய், என் குமாரனாகிய ஈசாக்குக்குப் பெண்கொள்வேன் என்று, வானத்துக்குத் தேவனும் பூமிக்குத் தேவனுமாகிய கர்த்தர் பேரில் எனக்கு ஆணையிட்டுக்கொடுக்கும்படிக்கு, நீ உன் கையை என் தொடையின்கீழ் வை என்றான்.
5அதற்கு அந்த ஊழியக்காரன்: அவ்விடத்துப் பெண் என் பின்னே இந்தத் தேசத்துக்கு வர மனதில்லாதிருந்தால், நீர் விட்டுவந்த தேசத்திற்குத்தானே உம்முடைய குமாரனை மறுபடியும் அழைத்துப்போகவேண்டுமோ என்று கேட்டான்.
6அதற்கு ஆபிரகாம்: நீ என் குமாரனை மறுபடியும் அங்கே அழைத்துக்கொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.
7என்னை என் தகப்பனுடைய வீட்டிலும் என் இனத்தார் இருக்கிற தேசத்திலுமிருந்து அழைத்துவந்தவரும், உன் சந்ததிக்கு இந்த தேசத்தைத் தருவேன் என்று எனக்குச் சொல்லி ஆணையிட்டவருமான வானத்துக்குத் தேவனாகிய கர்த்தர், நீ அங்கேயிருந்து என் குமாரனுக்கு ஒரு பெண்ணைக் கொண்டுவரும்படிக்கு, தம்முடைய தூதனை உனக்கு முன்பாக அனுப்புவார்.
8பெண் உன் பின்னே வர மனதில்லாதிருந்தாளேயாகில், அப்பொழுது நீ இந்த என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய்; அங்கே மாத்திரம் என் குமாரனை மறுபடியும் அழைத்துக்கொண்டு போகவேண்டாம் என்றான்.
9அப்பொழுது அந்த ஊழியக்காரன் தன் கையைத் தன் எஜமானாகிய ஆபிரகாமுடைய தொடையின்கீழ் வைத்து, இந்தக் காரியத்தைக்குறித்து அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான்.
10பின்பு அந்த ஊழியக்காரன் தன் எஜமானுடைய ஒட்டகங்களில் பத்து ஒட்டகங்களைத் தன்னுடனே கொண்டுபோனான்; தன் எஜமானுடைய சகலவித உச்சிதமான பொருள்களும் அவன் கையில் இருந்தன; அவன் எழுந்து புறப்பட்டுப்போய், மெசொப்பொத்தாமியாவிலே நாகோருடைய ஊரில் சேர்ந்து,
11ஊருக்குப் புறம்பே ஒரு தண்ணீர்த் துரவண்டையிலே, தண்ணீர் மொள்ள ஸ்திரீகள் புறப்படுகிற சாயங்கால வேளையிலே, ஒட்டகங்களை மடக்கி, தனக்குள்ளே சொல்லிக்கொண்டது என்னவென்றால்:
12என் எஜமானாகிய ஆபிரகாமுக்கு தேவனாயிருக்கிற கர்த்தாவே, இன்றைக்கு நீர் எனக்குக் காரியம் சித்திக்கப்பண்ணி, என் எஜமானாகிய ஆபிரகாமுக்குத் தயவு செய்தருளும்.
13இதோ, நான் இந்தத் தண்ணீர்த்துரவண்டையிலே நிற்கிறேன், இந்த ஊராருடைய பெண்கள் தண்ணீர் மொள்ளப்புறப்பட்டு வருவார்களே.
14நான் குடிக்க உன் குடத்தைச் சாய்க்கவேண்டும் என்று நான் சொல்லும்போது: குடி என்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கும்படி வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண் எவளோ, அவளே நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு நியமித்தவளாயிருக்கவும், என் எஜமானுக்கு அநுக்கிரகம் செய்தீர் என்று நான் அதினாலே அறியவும் செய்தருளும் என்றான்.
15அவன் இப்படிச் சொல்லி முடிக்கும் முன்னே, இதோ, ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோரின் மனைவி மில்க்காளுடைய குமாரனாகிய பெத்துவேலுக்குப் பிறந்த ரெபெக்காள் குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு புறப்பட்டுவந்தாள்.
16அந்தப் பெண் மகா ரூபவதியும், புருஷனை அறியாத கன்னிகையுமாய் இருந்தாள்; அவள் துரவில் இறங்கி, தன் குடத்தை நிரப்பிக்கொண்டு ஏறிவந்தாள்.
17அப்பொழுது அந்த ஊழியக்காரன், அவளுக்கு எதிர்கொண்டோடி: உன் குடத்திலிருக்கிற தண்ணீரில் கொஞ்சம் குடிக்கத் தரவேண்டும் என்றான்.
18அதற்கு அவள்: குடியும் என் ஆண்டவனே என்று சீக்கிரமாய்க் குடத்தைத் தன் கையில் இறக்கிக்கொண்டு, அவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள்.
19கொடுத்தபின், உம்முடைய ஒட்டகங்களும் குடித்துத் தீருமட்டும் அவைகளுக்கும் மொண்டு வார்ப்பேன் என்றுசொல்லி;
20சீக்கிரமாய்த் தன் குடத்துத் தண்ணீரைத் தொட்டியிலே ஊற்றிவிட்டு, இன்னும் மொண்டுவரத் துரவண்டையில் ஓடி, அவனுடைய ஒட்டகங்களுக்கெல்லாம் மொண்டு வார்த்தாள்.
21அந்த மனிதன் அவளைக்குறித்து ஆச்சரியப்பட்டு, கர்த்தர் தன் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணினாரோ இல்லையோ என்று அறியும்பொருட்டு மவுனமாயிருந்தான்.
22ஒட்டகங்கள் குடித்துத் தீர்ந்தபின், அந்த மனிதன் அரைச்சேக்கல் எடையுள்ள பொற்காதணியையும், அவள் கைகளுக்குப் பத்துச் சேக்கல் எடைப் பொன்னுள்ள இரண்டு கடகங்களையும் எடுத்துக்கொடுத்து,
23நீ யாருடைய மகள், எனக்குச் சொல்லவேண்டும்; நாங்கள் உன் தகப்பன் வீட்டில் இராத்தங்க இடம் உண்டா என்றான்.
24அதற்கு அவள்: நான் நாகோருக்கு மில்க்காள் பெற்ற குமாரனாகிய பெத்துவேலின் மகள் என்று சொன்னதுமன்றி,
25எங்களிடத்தில் வைக்கோலும் தீவனமும் வேண்டியமட்டும் இருக்கிறது; இராத்தங்க இடமும் உண்டு என்றாள்.
26அப்பொழுது அந்த மனிதன் தலைகுனிந்து, கர்த்தரைப்பணிந்துகொண்டு,
27என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் தம்முடைய கிருபையையும், தம்முடைய உண்மையையும் என் எஜமானை விட்டு நீக்கவில்லை; நான் பிரயாணம் பண்ணிவருகையில், கர்த்தர் என் எஜமானுடைய சகோதரர் வீட்டுக்கு என்னை அழைத்துக்கொண்டு வந்தார் என்றான்.
28அந்தப் பெண் ஓடி, இந்தக் காரியங்களைத் தன் தாயின் வீட்டிலுள்ளவர்களுக்கு அறிவித்தாள்.
29ரெபெக்காளுக்கு ஒரு சகோதரன் இருந்தான்; அவனுக்கு லாபான் என்று பேர்; அந்த லாபான் வெளியே துரவண்டையிலே இருந்த அந்த மனிதனிடத்துக்கு ஓடினான்.
30அவன் தன் சகோதரி தரித்திருந்த அந்தக் காதணியையும், அவள் கைகளில் போட்டிருந்த கடகங்களையும் பார்த்து, இன்ன இன்னபடி அந்த மனிதன் என்னோடே பேசினானென்று தன் சகோதரி ரெபெக்காள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டமாத்திரத்தில், அந்த மனிதனிடத்தில் வந்தான்; அவன் துரவு அருகே ஒட்டகங்கள் அண்டையில் நின்றுகொண்டிருந்தான்.
31அப்பொழுது அவன்: கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே, உள்ளே வாரும்; நீர் வெளியே நிற்பானேன்? உமக்கு வீடும், ஒட்டகங்களுக்கு இடமும் ஆயத்தம்பண்ணியிருக்கிறேன் என்றான்.
32அப்பொழுது அந்த மனிதன் வீட்டுக்குப் போனான். லாபான் ஒட்டகங்களின் கட்டவிழ்த்து, ஒட்டகங்களுக்கு வைக்கோலும் தீவனமும் போட்டு, அவனும், அவனோடே வந்தவர்களும் தங்கள் கால்களைக் கழுவிக்கொள்ளத் தண்ணீர் கொடுத்தான்.
33பின்பு, அவனுக்கு முன்பாக போஜனம் வைக்கப்பட்டது. அப்பொழுது அவன்: நான் வந்த காரியத்தைச் சொல்லுமுன்னே புசிக்கமாட்டேன் என்றான். அதற்கு அவன், சொல்லும் என்றான்.
34அப்பொழுது அவன்: நான் ஆபிரகாமுடைய ஊழியக்காரன்.
35கர்த்தர் என் எஜமானை மிகவும் ஆசீர்வதித்திருக்கிறார், அவர் சீமானாயிருக்கிறார்; கர்த்தர் அவருக்கு ஆடுமாடுகளையும், வெள்ளியையும், பொன்னையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொடுத்திருக்கிறார்.
36என் எஜமானுடைய மனைவியாகிய சாராள் முதிர்வயதானபோது, என் எஜமானுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்; அவர் தமக்கு உண்டான யாவையும் அவனுக்குக் கொடுத்திருக்கிறார்.
37என் எஜமான் என்னை நோக்கி: நான் குடியிருக்கிற கானான் தேசத்தாருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்ளாமல்,
38நீ என் தகப்பன் வீட்டுக்கும், என் இனத்தாரிடத்துக்கும் போய், என் குமாரனுக்குப் பெண்கொள்ளவேண்டும் என்று ஆணையிட்டுக்கொடுக்கும்படி சொன்னார்.
39அப்பொழுது நான் என் எஜமானை நோக்கி: ஒருவேளை அந்தப் பெண் என்பின்னே வராதேபோனாலோ என்று கேட்டதற்கு,
40அவர்: நான் வழிபடும் கர்த்தர் உன்னோடே தம்முடைய தூதனை அனுப்பி, உன் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணுவார்; என் இனத்தாரிடத்திலும், என் தகப்பன் வீட்டிலும் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்வாய்.
41நீ என் இனத்தாரிடத்துக்குப்போனால், என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பெண்கொடாமற்போனாலும், நீ என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய் என்றார்.
42அப்படியே நான் இன்று துரவண்டையிலே வந்து: என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாகிய கர்த்தரே, என் பிரயாணத்தை நீர் இப்பொழுது வாய்க்கப்பண்ணுவீரானால்,
43இதோ, நான் தண்ணீர்த் துரவண்டையிலே நிற்கிறேன், தண்ணீர் மொள்ள வரப்போகிற கன்னிகையை நான் நோக்கி: உன் குடத்திலிருக்கிற தண்ணீரில் கொஞ்சம் எனக்குக் குடிக்கத்தரவேண்டும் என்று கேட்கும்போது:
44நீ குடி என்றும், உன் ஒட்டகங்களுக்கும் மொண்டு வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண்ணே கர்த்தர் என் எஜமானுடைய குமாரனுக்கு நியமித்த ஸ்திரீயாகவேண்டும் என்றேன்.
45நான் இதை என் இருதயத்தில் சொல்லி முடிக்குமுன்னே, இதோ, ரெபெக்காள் தன் குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு புறப்பட்டுவந்து, துரவில் இறங்கிப்போய்த் தண்ணீர் மொண்டாள். அப்பொழுது நான்: எனக்குக் குடிக்கத்தரவேண்டும் என்றேன்.
46அவள் சீக்கிரமாய்த் தன் தோள்மேலிருந்த குடத்தை இறக்கி, குடியும், உம்முடைய ஒட்டகங்களுக்கும் வார்ப்பேன் என்றாள். நான் குடித்தேன்; ஒட்டகங்களுக்கும் வார்த்தாள்.
47அப்பொழுது: நீ யாருடைய மகள் என்று அவளைக் கேட்டேன்; அதற்கு அவள்: நான் மில்க்காள் நாகோருக்குப் பெற்ற குமாரனாகிய பெத்துவேலின் மகள் என்றாள்; அப்பொழுது அவளுக்குக் காதணியையும், அவள் கைகளிலே கடகங்களையும் போட்டு;
48தலைகுனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, நான் என் எஜமானுடைய சகோதரன் குமாரத்தியை அவர் குமாரனுக்குக் கொள்ள என்னை நேர்வழியாய் நடத்திவந்த என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தரை ஸ்தோத்திரித்தேன்.
49இப்பொழுதும் நீங்களும் என் எஜமானுக்குத் தயையும் உண்மையும் உடையவர்களாய் நடக்க மனதுள்ளவர்களானால், எனக்குச் சொல்லுங்கள்; இல்லையென்றால் அதையும் எனக்குச் சொல்லுங்கள், அப்பொழுது நான் வலதுபுறத்தையாகிலும் இடதுபுறத்தையாகிலும் நோக்கிப்போவேன் என்றான்.
50அப்பொழுது லாபானும் பெத்துவேலும் பிரதியுத்தரமாக: இந்தக் காரியம் கர்த்தரால் வந்தது, உமக்கு நாங்கள் நலம் பொலம் ஒன்றும் சொல்லக்கூடாது.
51இதோ, ரெபெக்காள் உமக்கு முன்பாக இருக்கிறாள்; கர்த்தர் சொன்னபடியே அவள் உமது எஜமானுடைய குமாரனுக்கு மனைவியாகும்படிக்கு, அவளை அழைத்துக்கொண்டுபோம் என்றார்கள்.
52ஆபிரகாமின் ஊழியக்காரன் அவர்கள் வார்த்தைகளைக் கேட்டபோது, தரை மட்டும் குனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டான்.
53பின்பு அந்த ஊழியக்காரன் வெள்ளியுடைமைகளையும், பொன்னுடைமைகளையும், வஸ்திரங்களையும் எடுத்து, ரெபெக்காளுக்குக் கொடுத்ததுமன்றி, அவளுடைய சகோதரனுக்கும் தாய்க்கும் சில உச்சிதங்களையும் கொடுத்தான்.
54பின்பு அவனும் அவனோடிருந்த மனிதரும் புசித்துக் குடித்து, இராத்தங்கினார்கள்; காலையிலே எழுந்திருந்து, அவன்: என் எஜமானிடத்துக்கு என்னை அனுப்பிவிடுங்கள் என்றான்.
55அப்பொழுது அவள் சகோதரனும் அவள் தாயும், பத்து நாளாகிலும் பெண் எங்களோடிருக்கட்டும், பிற்பாடு போகலாம் என்றார்கள்.
56அதற்கு அவன்: கர்த்தர் என் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணியிருக்க, நீங்கள் எனக்குத் தடைசெய்யாதிருங்கள்; நான் என் எஜமானிடத்துக்குப்போக என்னை அனுப்பிவிடவேண்டும் என்றான்.
57அப்பொழுது அவர்கள்: பெண்ணை அழைத்து, அவள் வாய்ப்பிறப்பைக் கேட்போம் என்று சொல்லி,
58ரெபெக்காளை அழைத்து: நீ இந்த மனிதனோடேகூடப் போகிறாயா என்று கேட்டார்கள். அவள்: போகிறேன் என்றாள்.
59அப்படியே அவர்கள் தங்கள் சகோதரியாகிய ரெபெக்காளையும், அவள் தாதியையும், ஆபிரகாமின் ஊழியக்காரனையும், அவன் மனிதரையும் அனுப்புவித்து,
60ரெபெக்காளை வாழ்த்தி: எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக; உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்வார்களாக என்று ஆசீர்வதித்தார்கள்.
61அப்பொழுது ரெபெக்காளும் அவள் வேலைக்காரிகளும் எழுந்து ஒட்டகங்கள் மேல் ஏறி, அந்த மனிதனோடேகூடப் போனார்கள். ஊழியக்காரன் ரெபெக்காளை அழைத்துக்கொண்டுபோனான்.
62ஈசாக்கு தென்தேசத்தில் குடியிருந்தான். அப்பொழுது அவன்: லகாய்ரோயீ என்னப்பட்ட துரவின் வழியாய்ப் புறப்பட்டு வந்தான்.
63ஈசாக்கு சாயங்காலவேளையிலே தியானம்பண்ண வெளியிலே போயிருந்து, தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்தபோது, ஒட்டகங்கள் வரக்கண்டான்.
64ரெபெக்காளும் தன் கண்களை ஏறெடுத்து ஈசாக்கைக் கண்டபோது,
65ஊழியக்காரனை நோக்கி: அங்கே வெளியிலே நமக்கு எதிராக நடந்துவருகிற அந்த மனிதன் யார் என்று கேட்டாள். அவர்தான் என் எஜமான் என்று ஊழியக்காரன் சொன்னான். அப்பொழுது அவள் ஒட்டகத்தை விட்டிறங்கி முக்காடிட்டுக்கொண்டாள்.
66ஊழியக்காரன் தான் செய்த சகல காரியங்களையும் ஈசாக்குக்கு விவரித்துச் சொன்னான்.
67அப்பொழுது ஈசாக்கு ரெபெக்காளைத் தன் தாய் சாராளுடைய கூடாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அவளைத் தனக்கு மனைவியாக்கிக்கொண்டு, அவளை நேசித்தான். ஈசாக்கு தன் தாய்க்காகக் கொண்டிருந்த துக்கம் நீங்கி ஆறுதல் அடைந்தான்.
1பின்பு இயேசு ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் நோக்கி:
2வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்;
3ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்.
4சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக் கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள்.
5தங்கள் கிரியைகளையெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்கள் காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களைப் பெரிதாக்கி,
6விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும்,
7சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள்.
8நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்.
9பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.
10நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்.
11உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்.
12தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.
13மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப்போகிறவர்களைப் பிரவேசிக்கவிடுகிறதுமில்லை.
14மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்பண்ணி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப்போடுகிறீர்கள்; இதினிமித்தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள்.
15மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.
16குருடரான வழிகாட்டிகளே! உங்களுக்கு ஐயோ, எவனாகிலும் தேவாலயத்தின்பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் தேவாலயத்தின் பொன்னின்பேரில் சத்தியம்பண்ணினால் அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள்.
17மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? பொன்னோ, பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயமோ?
18மேலும், எவனாகிலும் பலிபீடத்தின் பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் அதின்மேல் இருக்கிற காணிக்கையின்பேரில் சத்தியம்பண்ணினால், அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள்.
19மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? காணிக்கையோ, காணிக்கையைப் பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ?
20ஆகையால், பலிபீடத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் அதின்பேரிலும் அதின்மேலுள்ள எல்லாவற்றின்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான்.
21தேவாலயத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் அதின்பேரிலும் அதில் வாசமாயிருக்கிறவர்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான்.
22வானத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் தேவனுடைய சிங்காசனத்தின்பேரிலும் அதில் வீற்றிருக்கிறவர்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான்.
23மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே.
24குருடரான வழிகாட்டிகளே, கொசுகில்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாயிருக்கிறீர்கள்.
25மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது.
26குருடனான பரிசேயனே! போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு.
27மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும்.
28அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.
29மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி, நீதிமான்களின் சமாதிகளைச் சிங்காரித்து:
30எங்கள் பிதாக்களின் நாட்களில் இருந்தோமானால், அவர்களோடே நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள்.
31ஆகையால், தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்தவர்களுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நீங்களே சாட்சிகளாயிருக்கிறீர்கள்.
32நீங்களும் உங்கள் பிதாக்களின் அக்கிரம அளவை நிரப்புங்கள்.
33சர்ப்பங்களே, விரியன்பாம்புக்குட்டிகளே! நரகாக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவீர்கள்?
34ஆகையால், இதோ, தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் வேதபாரகரையும் உங்களிடத்தில் அனுப்புகிறேன்; அவர்களில் சிலரைக் கொன்று சிலுவைகளில் அறைவீர்கள், சிலரை உங்கள் ஆலயங்களில் வாரினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பப்படுத்துவீர்கள்;
35நீதிமானாகிய ஆபேலின் இரத்தம்முதல் தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள்மேல் வரும்படியாக இப்படிச் செய்வீர்கள்.
36இவைகளெல்லாம் இந்தச் சந்ததியின்மேல் வருமென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
37எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.
38இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்.
39கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும், இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
1அன்றையதினம் ஜனங்கள் கேட்க, மோசேயின் புஸ்தகத்தை வாசித்தார்கள்; அதிலே அம்மோனியரும் மோவாபியரும், இஸ்ரவேல் புத்திரருக்கு அப்பமும் தண்ணீரும் கொடுக்க எதிர்கொண்டுவராமல், அவர்களைச் சபிக்க அவர்களுக்கு விரோதமாய்ப் பிலேயாமைக் கூலிபொருந்திக்கொண்டபடியினால்,
2அவர்கள் என்றைக்கும், அந்தச் சாபத்தை ஆசீர்வாதமாகத் திருப்பின எங்கள் தேவனுடைய சபைக்குட்படலாகாது என்று எழுதியிருக்கிறதாகக் காணப்பட்டது.
3ஆகையால் அவர்கள் அந்தக் கட்டளையைக் கேட்டபோது, பல ஜாதியான ஜனங்களையெல்லாம் இஸ்ரவேலைவிட்டுப் பிரித்துவிட்டார்கள்.
4இதற்குமுன்னே எங்கள் தேவனுடைய ஆலயத்தின் அறைகளை விசாரிக்க வைக்கப்பட்ட ஆசாரியனாகிய எலியாசிப் தொபியாவோடே சம்பந்தங்கலந்தவனாயிருந்து,
5முற்காலத்தில் காணிக்கைகளும், சாம்பிராணியும், பணிமுட்டுகளும், லேவியருக்கும் பாடகருக்கும் வாசல் காவலாளருக்கும் கட்டளைபண்ணப்பட்ட தானியம் திராட்சரசம் எண்ணெய் என்பவைகளிலே தசமபாகமும், ஆசாரியரைச் சேருகிற படைப்பான காணிக்கைகளும் வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஒரு பெரிய அறையை அவனுக்கு ஆயத்தம்பண்ணியிருந்தான்.
6இதெல்லாம் நடக்கும்போது நான் எருசலேமில் இல்லை; பாபிலோன் ராஜாவாகிய அர்தசஷ்டாவின் முப்பத்திரண்டாம் வருஷத்திலே நான் ராஜாவினிடத்திற்குபோய், சில நாளுக்குப்பின்பு திரும்ப ராஜாவினிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு,
7எருசலேமுக்கு வந்தேன்; அப்பொழுது எலியாசிப் தொபியாவுக்கு தேவனுடைய ஆலயத்துப் பிராகாரங்களில் ஒரு அறையை ஆயத்தம்பண்ணினதினால், செய்த பொல்லாப்பை அறிந்துகொண்டேன்.
8அதினால் நான் மிகவும் மனமடிவாகி. தொபியாவின் வீட்டுத் தட்டுமுட்டுகளையெல்லாம் அந்த அறையிலிருந்து வெளியே எறிந்துவிட்டேன்.
9பின்பு நான் அறைவீடுகளைச் சுத்திகரிக்கச்சொல்லி, தேவனுடைய ஆலயப்பணிமுட்டுகளையும் காணிக்கைகளையும் சாம்பிராணியையும் அங்கே திரும்பக் கொண்டுவந்து வைத்தேன்.
10பின்னையும் லேவியருக்கு அவர்கள் பங்குகள் கொடுக்கப்படவில்லையென்பதையும், பணிவிடை செய்கிற லேவியரும் பாடகரும் அவரவர் தங்கள் வெளிநிலங்களுக்கு ஓடிப்போனார்கள் என்பதையும் நான் அறிந்துகொண்டேன்.
11அப்பொழுது நான் தலைமையானவர்களோடே வழக்காடி, தேவனுடைய ஆலயம் கைவிடப்பட்டுப்போவானேன் என்று சொல்லி, அவர்களைச் சேர்த்து, அவரவர் நிலையில் அவர்களை வைத்தேன்.
12அப்பொழுது யூதர் எல்லாரும் தானியம் திராட்சரசம் எண்ணெய் என்பவைகளில் தசமபாகத்தைப் பொக்கிஷ அறைகளில் கொண்டுவந்தார்கள்.
13அப்பொழுது நான் ஆசாரியனாகிய செலேமியாவையும், வேதபாரகனாகிய சாதோக்கையும், லேவியரில் பெதாயாவையும், இவர்களுக்குக் கைத்துணையாக மத்தனியாவின் குமாரன் சக்கூரின் மகனாகிய ஆனானையும் பொக்கிஷ அறைகளின்மேல் விசாரிப்புக்காரராக வைத்தேன்; அவர்கள் உண்மையுள்ளவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்; ஆகையால் தங்கள் சகோதரருக்குப் பங்கிடுகிற வேலை அவர்களுக்கு ஒப்புவிக்கப்பட்டது.
14என் தேவனே, நான் என் தேவனுடைய ஆலயத்துக்காகவும் அதின் முறைமைகளுக்காகவும் செய்த நற்கிரியைகளைக் குலைத்துப்போடாமல், இந்தக் காரியத்திலே என்னை நினைத்தருளும்.
15அந்த நாட்களில் நான் யூதாவிலே ஓய்வுநாளில் சிலர் ஆலைகளை மிதிக்கிறதையும், சிலர் தானியப் பொதிகளைக் கழுதைகள்மேல் ஏற்றிக்கொண்டு வருகிறதையும், திராட்சரசம், திராட்சப்பழம், அத்திப்பழம் முதலானவைகளின் பற்பல சுமைகளை ஓய்வுநாளிலே எருசலேமுக்குக் கொண்டுவருகிறதையும் கண்டு, அவர்கள் தின்பண்டம் விற்கிற நாளைப்பற்றி அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டேன்.
16மீனையும், சகலவித சரக்குகளையும் கொண்டுவந்து, ஓய்வுநாளிலே யூதா புத்திரருக்கும் எருசலேமில் இருக்கிறவர்களுக்கும் விற்கிற சில தீரியரும் உள்ளே குடியிருந்தார்கள்.
17ஆகையால் நான் யூதாவின் பெரியவர்களைக் கடிந்துகொண்டு: நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிற இந்தப் பொல்லாத செய்கையென்ன?
18உங்கள் பிதாக்கள் இப்படிச் செய்ததினாலல்லவா, நமது தேவன் நம்மேலும் இந்த நகரத்தின்மேலும் இந்தத் தீங்கையெல்லாம் வரப்பண்ணினார்; நீங்களோவென்றால் ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறதினால், இஸ்ரவேலின் மேலிருக்கிற உக்கிரத்தை அதிகரிக்கப்பண்ணுகிறீர்கள் என்று அவர்களுக்குச் சொன்னேன்.
19ஆகையால் ஓய்வுநாளுக்கு முன்னே எருசலேமின் பட்டணவாசலில், மாலைமயங்கும்போது, கதவுகளைப் பூட்டவும், ஓய்வுநாள் முடியுமட்டும் அவைகளைத் திறவாதிருக்கவும் வேண்டுமென்று கட்டளையிட்டு, ஓய்வுநாளிலே ஒரு சுமையும் உள்ளே வராதபடிக்கு வாசலண்டையிலே என் வேலைக்காரரில் சிலரை நிறுத்தினேன்.
20அதினால் வர்த்தகரும், சகலவித சரக்குகளை விற்கிறவர்களும், இரண்டொருதரம் எருசலேமுக்குப் புறம்பே இராத்தங்கினார்கள்.
21அப்பொழுது நான் அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டு, நீங்கள் அலங்கத்தண்டையிலே இராத்தங்குகிறது என்ன? நீங்கள் மறுபடியும் இப்படி செய்தால், உங்கள்மேல் கைபோடுவேன் என்று அவர்களோடே சொன்னேன்; அதுமுதல் அவர்கள் ஓய்வுநாளில் வராதிருந்தார்கள்.
22ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்கும்படிக்கு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு வாசல்களைக் காக்க வாருங்கள் என்று லேவியருக்கும் சொன்னேன். என் தேவனே, இதைக்குறித்து நீர் என்னை நினைத்தருளி, உம்முடைய மிகுந்த கிருபையின்படி எனக்கு இரங்குவீராக.
23அஸ்தோத், அம்மோன், மோவாப் ஜாதிகளான ஸ்திரீகளைச் சேர்த்துக் கொண்ட சில யூதரையும் அந்த நாட்களில் கண்டேன்.
24அவர்கள் பிள்ளைகள் பேசினபேச்சில் பாதி அஸ்தோத் பாஷையாயிருந்தது; இவர்கள் அந்தந்த ஜாதிகளின் பாஷையைத்தவிர, யூதபாஷையைத் திட்டமாகப் பேச அறியாதிருந்தார்கள்.
25அவர்களையும் நான் கடிந்துகொண்டு அவர்கள்மேல் வரும் சாபத்தைக் கூறி, அவர்களில் சிலரை அடித்து, மயிரைப் பிய்த்து: நீங்கள் உங்கள் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள் குமாரத்திகளில் ஒருவரையும் உங்கள் குமாரருக்காகிலும் உங்களுக்காகிலும் கொள்ளாமலும் இருக்கவேண்டுமென்று அவர்களை தேவன்மேல் ஆணையிடப்பண்ணி, நான் அவர்களை நோக்கி:
26இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் இதினாலே பாவஞ்செய்தானல்லவா? அவனைப்போன்ற ராஜா அநேகம் ஜாதிகளுக்குள்ளே உண்டாயிருந்ததில்லை; அவன் தன் தேவனால் சிநேகிக்கப்பட்டவனாயிருந்தான்; தேவன் அவனை இஸ்ரவேலனைத்தின் மேலும் ராஜாவாக வைத்தார்; அப்படிப்பட்டவனையும் மறுஜாதியான ஸ்திரீகள் பாவஞ்செய்யப்பண்ணினார்களே.
27நீங்கள் மறுஜாதியான ஸ்திரீகளைச் சேர்த்துக்கொள்ளுகிறதினால், நம்முடைய தேவனுக்குத் துரோகிகளாகி, இந்தப் பெரிய பொல்லாப்பையெல்லாம் செய்யும்படி, உங்களுக்கு இடங்கொடுப்போமோ என்றேன்.
28யொயதாவின் புத்திரரிலே பிரதான ஆசாரியனாகிய எலியாசிபினுடைய குமாரன் ஒருவன் ஓரோனியனான சன்பல்லாத்துக்கு மருமகனானான்; ஆகையால் அவனை என்னைவிட்டுத் துரத்தினேன்.
29என் தேவனே, அவர்கள் ஆசாரிய ஊழியத்தையும், ஆசாரிய ஊழியத்துக்கும் லேவியருக்கும் இருக்கிற உடன்படிக்கையையும் தீட்டுப்படுத்தினார்கள் என்று அவர்களை நினைத்துக்கொள்ளும்.
30இப்படியே நான் மறுஜாதியாரையெல்லாம் நீக்கி, ஆசாரியரையும் லேவியரையும் சுத்திகரித்து, அவரவரை அவர்கள் வேலையின் முறைகளில் நிறுத்தி,
31குறிக்கப்பட்ட காலங்களிலே செலுத்தப்படவேண்டிய விறகு காணிக்கையையும், முதற்பலன்களையுங்குறித்துத் திட்டம்பண்ணினேன். என் தேவனே எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்.
1பவுல் ஆலோசனைச் சங்கத்தாரை உற்றுப்பார்த்து: சகோதரரே, இந்நாள்வரைக்கும் எல்லா விஷயங்களிலும் நான் நல்மனச்சாட்சியோடே தேவனுக்குமுன்பாக நடந்துவந்தேன் என்று சொன்னான்.
2அப்பொழுது பிரதானஆசாரியனாகிய அனனியா அவனுக்குச் சமீபமாய் நின்றவர்களை நோக்கி: இவன் வாயில் அடியுங்கள் என்று கட்டளையிட்டான்.
3அப்பொழுது பவுல் அவனைப்பார்த்து: வெள்ளையடிக்கப்பட்ட சுவரே, தேவன் உம்மை அடிப்பார்; நியாயப்பிரமாணத்தின்படி என்னை நியாயம் விசாரிக்கிறவராய் உட்கார்ந்திருக்கிற நீர் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய் என்னை அடிக்கச் சொல்லலாமா என்றான்.
4சமீபத்திலே நின்றவர்கள்: தேவனுடைய பிரதானஆசாரியரை வைகிறாயா என்றார்கள்.
5அதற்குப் பவுல்: சகோதரரே, இவர் பிரதானஆசாரியரென்று எனக்குத் தெரியாது; உன் ஜனத்தின் அதிபதியைத் தீது சொல்லாயாக என்று எழுதியிருக்கிறதே என்றான்.
6பின்பு அவர்களில், சதுசேயர் ஒரு பங்கும் பரிசேயர் ஒரு பங்குமாயிருக்கிறார்களென்று பவுல் அறிந்து: சகோதரரே, நான் பரிசேயனும் பரிசேயனுடைய மகனுமாயிருக்கிறேன். மரித்தோருடைய உயிர்த்தெழுதலைப்பற்றிய நம்பிக்கையைக் குறித்து நான் நியாயம் விசாரிக்கப்படுகிறேன் என்று ஆலோசனைச் சங்கத்திலே சத்தமிட்டுச் சொன்னான்.
7அவன் இப்படிச் சொன்னபோது, பரிசேயருக்கும் சதுசேயருக்கும் வாக்குவாதமுண்டாயிற்று; கூட்டம் இரண்டாகப் பிரிந்தது.
8என்னத்தினாலென்றால், சதுசேயர் உயிர்தெழுதல் இல்லையென்றும், தேவதூதனும் ஆவியும் இல்லையென்றும் சொல்லுகிறார்கள். பரிசேயரோ அவ்விரண்டும் உண்டென்று ஒப்புக்கொள்ளுகிறார்கள்.
9ஆகையால் மிகுந்த கூக்குரல் உண்டாயிற்று. பரிசேய சமயத்தாரான வேதபாரகரில் சிலர் எழுந்து: இந்த மனுஷனிடத்தில் ஒரு பொல்லாங்கையும் காணோம்; ஒரு ஆவி அல்லது ஒரு தேவதூதன் இவனுடனே பேசினதுண்டானால், நாம் தேவனுடனே போர்செய்வது தகாது என்று வாதாடினார்கள்.
10மிகுந்த கலகம் உண்டானபோது, பவுல் அவர்களால் பீறுண்டுபோவானென்று சேனாதிபதி பயந்து, போர்ச்சேவகர் போய், அவனை அவர்கள் நடுவிலிருந்து இழுத்துக் கோட்டைக்குக் கொண்டுபோகும்படி கட்டளையிட்டான்.
11அன்று இராத்திரியிலே கர்த்தர் பவுலின் அருகே நின்று: பவுலே, திடன்கொள்; நீ என்னைக்குறித்து எருசலேமிலே சாட்சிகொடுத்ததுபோல ரோமாவிலும் சாட்சிகொடுக்கவேண்டும் என்றார்.
12விடியற்காலமானபோது, யூதரில் சிலர் ஒருமித்து, தாங்கள் பவுலைக் கொலைசெய்யுமளவும் புசிப்பதுமில்லை குடிப்பதுமில்லையென்று சபதம்பண்ணிக்கொண்டார்கள்.
13இப்படிக் கட்டுப்பாடுபண்ணிக்கொண்டவர்கள் நாற்பதுபேருக்கு அதிகமாயிருந்தார்கள்.
14அவர்கள் பிரதானஆசாரியர்களிடத்திலும் மூப்பர்களிடத்திலும் போய்: நாங்கள் பவுலைக் கொலைசெய்யுமளவும் ஒன்றும் புசிப்பதில்லையென்று உறுதியான சபதம்பண்ணிக்கொண்டோம்.
15ஆனபடியினால் நீங்கள் ஆலோசனைச் சங்கத்தாரோடே கூடப்போய், அவனுடைய காரியத்தை அதிக திட்டமாய் விசாரிக்க மனதுள்ளவர்கள்போலச் சேனாதிபதிக்குக் காண்பித்து, அவர் நாளைக்கு அவனை உங்களிடத்தில் கூட்டிக்கொண்டுவரும்படி அவரிடத்தில் கேட்பீர்களாக. அவன் கிட்டவருகிறதற்குள்ளே நாங்கள் அவனைக் கொலைசெய்ய ஆயத்தமாயிருப்போம் என்றார்கள்.
16இந்தச் சர்ப்பனையைப் பவுலினுடைய சகோதரியின் குமாரன் கேள்விப்பட்டு, கோட்டைக்குள்ளே போய், பவுலுக்கு அறிவித்தான்.
17அப்பொழுது பவுல் நூற்றுக்கு அதிபதிகளில் ஒருவனை அழைத்து, இந்த வாலிபனைச் சேனாதிபதியினிடத்திற்குக் கூட்டிக்கொண்டுபோம்; அவரிடத்தில் இவன் அறிவிக்கவேண்டிய ஒரு காரியம் உண்டு என்றான்.
18அந்தப்படியே அவன் இவனைச் சேனாதிபதியினிடத்திற்குக் கூட்டிக்கொண்டுபோய்: காவலில் வைக்கப்பட்டிருக்கிற பவுல் என்னை அழைத்து, உமக்கொரு காரியத்தைச் சொல்லவேண்டுமென்றிருக்கிற இந்த வாலிபனை உம்மிடத்திற்குக் கொண்டுபோகும்படி என்னைக் கேட்டுக்கொண்டான் என்றான்.
19அப்பொழுது சேனாதிபதி அவனுடைய கையைப்பிடித்துத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: நீ என்னிடத்தில் அறிவிக்கவேண்டிய காரியம் என்னவென்று கேட்டான்.
20அதற்கு அவன்: யூதர்கள் பவுலின் காரியத்தை அதிக திட்டமாய் விசாரிக்க மனதுள்ளவர்கள்போல, நீர் நாளைக்கு அவனை ஆலோசனைச் சங்கத்தாரிடத்தில் கொண்டுவரும்படி உம்மை வேண்டிக்கொள்ள உடன்பட்டிருக்கிறார்கள்.
21நீர் அவர்களுக்குச் சம்மதிக்கவேண்டாம்; அவர்களில் நாற்பதுபேருக்கு அதிகமானவர்கள் அவனைக் கொலைசெய்யுமளவும் தாங்கள் புசிப்பதுமில்லை குடிப்பதுமில்லையென்று சபதம்பண்ணிக்கொண்டு, அவனுக்குப் பதிவிருந்து, உம்முடைய உத்தரவுக்காக இப்பொழுது காத்துக்கொண்டு ஆயத்தமாயிருக்கிறார்கள் என்றான்.
22அப்பொழுது சேனாதிபதி: நீ இவைகளை எனக்கு அறிவித்ததாக ஒருவருக்குஞ்சொல்லாதே என்று கட்டளையிட்டு, வாலிபனை அனுப்பிவிட்டான்.
23பின்பு அவன் நூற்றுக்கு அதிபதிகளில் இரண்டுபேரை அழைத்து, செசரியா பட்டணத்திற்குப் போகும்படி இருநூறு காலாட்களையும், எழுபது குதிரை வீரரையும், இருநூறு ஈட்டிக்காரரையும், இராத்திரியில் மூன்றாம்மணி வேளையிலே, ஆயத்தம்பண்ணுங்களென்றும்;
24பவுலை ஏற்றி, தேசாதிபதியாகிய பேலிக்ஸினிடத்திற்குப் பத்திரமாய்க் கொண்டுபோகும்படிக்குக் குதிரைகளை ஆயத்தப்படுத்துங்களென்றும் சொன்னதுமன்றி,
25ஒரு நிருபத்தையும் எழுதினான்; அதின் விவரமாவது:
26கனம்பொருந்திய தேசாதிபதியாகிய பேலிக்ஸ் என்பவருக்குக் கிலவுதியுலீசியா வாழ்த்துதல் சொல்லி அறிவிக்கிறது என்னவென்றால்:
27இந்த மனுஷனை யூதர் பிடித்துக் கொலைசெய்யப்போகிற சமயத்தில், நான் போர்ச்சேவகரோடே கூடப்போய், இவன் ரோமனென்று அறிந்து, இவனை விடுவித்தேன்.
28அவர்கள் இவன்மேல் சாட்டின குற்றத்தை நான் அறியவேண்டுமென்று இவனை அவர்கள் ஆலோசனைச் சங்கத்துக்குமுன் கொண்டுபோனேன்.
29இவன் அவர்களுடைய வேதத்திற்கடுத்த விஷயங்களைக்குறித்துக் குற்றஞ்சாட்டப்பட்டவனென்று விளங்கினதேயல்லாமல், மரணத்துக்காவது விலங்குக்காவது ஏற்ற குற்றம் யாதொன்றும் இவனிடத்தில் இல்லையென்று கண்டறிந்தேன்.
30யூதர்கள் இவனுக்கு விரோதமாய்ச் சர்ப்பனையான யோசனை செய்கிறார்களென்று எனக்குத் தெரியவந்தபோது, உடனே இவனை உம்மிடத்திற்கு அனுப்பினேன்; குற்றஞ்சாட்டுகிறவர்களும் இவனுக்கு விரோதமாய்ச் சொல்லுகிற காரியங்களை உமக்கு முன்பாகவந்து சொல்லும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டேன். சுகமாயிருப்பீராக, என்றெழுதினான்.
31போர்ச்சேவகர் தங்களுக்குக் கட்டளையிட்டபடியே, பவுலைக் கூட்டிக்கொண்டு, இராத்திரியிலே அந்திப்பத்திரி ஊருக்குப் போய்,
32மறுநாளில் குதிரைவீரரை அவனுடனேகூடப் போகும்படி அனுப்பிவிட்டு, தாங்கள் கோட்டைக்குத் திரும்பினார்கள்.
33அவர்கள் செசரியா பட்டணத்தில் சேர்ந்து, நிருபத்தைத் தேசாதிபதியினிடத்தில் கொடுத்து, பவுலையும் அவன் முன்பாக நிறுத்தினார்கள்.
34தேசாதிபதி அதை வாசித்து: எந்த நாட்டானென்று கேட்டு, சிலிசியா நாட்டானென்று அறிந்தபோது:
35உன்மேல் குற்றஞ்சாட்டுகிறவர்களும் வந்திருக்கும்போது உன் காரியத்தைத் திட்டமாய்க் கேட்பேனென்று சொல்லி, ஏரோதின் அரமனையிலே அவனைக் காவல்பண்ணும்படி கட்டளையிட்டான்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com