1ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீயையும் விவாகம்பண்ணியிருந்தான்.
2அவள் அவனுக்குச் சிம்ரானையும், யக்க்ஷானையும், மேதானையும், மீதியானையும், இஸ்பாக்கையும், சூவாகையும் பெற்றாள்.
3யக்க்ஷான் சேபாவையும், தேதானையும் பெற்றான்; தேதானுடைய குமாரர் அசூரீம், லெத்தூசீம், லெயூமீம் என்பவர்கள்.
4மீதியானுடைய குமாரர் ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் கேத்தூராளின் பிள்ளைகள்.
5ஆபிரகாம் தனக்கு உண்டான யாவையும் ஈசாக்குக்குக் கொடுத்தான்.
6ஆபிரகாமுக்கு இருந்த மறுமனையாட்டிகளின் பிள்ளைகளுக்கோ ஆபிரகாம் நன்கொடைகளைக் கொடுத்து, தான் உயிரோடிருக்கும்போதே அவர்களைத் தன் குமாரனாகிய ஈசாக்கைவிட்டுக் கிழக்கே போகக் கீழ்தேசத்துக்கு அனுப்பிவிட்டான்.
7ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசு நாட்கள் நூற்று எழுபத்தைந்து வருஷம்.
8பிற்பாடு ஆபிரகாம் நல்ல நரைவயதிலும், முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன்போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.
9அவன் குமாரராகிய ஈசாக்கும் இஸ்மவேலும் மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் குமாரனாகிய எப்பெரோனின் நிலத்திலுள்ள மக்பேலா என்னப்பட்ட குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்.
10அந்த நிலத்தை ஏத்தின் புத்திரர் கையிலே ஆபிரகாம் வாங்கியிருந்தான்; அங்கே ஆபிரகாமும் அவன் மனைவியாகிய சாராளும் அடக்கம்பண்ணப்பட்டார்கள்.
11ஆபிரகாம் மரித்தபின் தேவன் அவன் குமாரனாகிய ஈசாக்கை ஆசீர்வதித்தார். லகாய்ரோயீ என்னும் துரவுக்குச் சமீபமாய் ஈசாக்கு குடியிருந்தான்.
12சாராளுடைய அடிமைப்பெண்ணாகிய எகிப்து தேசத்தாளான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரனாகிய இஸ்மவேலின் வம்சவரலாறு:
13பற்பல சந்ததிகளாய்ப் பிரிந்த இஸ்மவேலின் புத்திரருடைய நாமங்களாவன; இஸ்மவேலுடைய மூத்த மகன் நெபாயோத், பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம்,
14மிஷ்மா, தூமா, மாசா,
15ஆதார், தேமா, யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவைகளே.
16தங்கள் கிராமங்களிலும் அரண்களிலும் குடியிருந்த தங்கள் ஜனத்தாருக்குப் பன்னிரண்டு பிரபுக்களாகிய இஸ்மவேலின் குமாரர்கள் இவர்களே, இவர்களுடைய நாமங்களும் இவைகளே.
17இஸ்மவேலின் வயது நூற்று முப்பத்தேழு. பின்பு அவன் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.
18அவர்கள் ஆவிலா துவக்கி எகிப்துக்கு எதிராக அசீரியாவுக்கு போகிற வழியிலிருக்கும் சூர்மட்டும் வாசம்பண்ணினார்கள். இது அவன் சகோதரர் எல்லாருக்கும் முன்பாக அவன் குடியேறின பூமி.
19ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்குடைய வம்சவரலாறு; ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்.
20ஈசாக்கு ரெபெக்காளை விவாகம்பண்ணுகிறபோது நாற்பது வயதாயிருந்தான்; இவள் பதான்அராம் என்னும் சீரியா தேசத்தானாகிய பெத்துவேலுக்குக் குமாரத்தியும், சீரியா தேசத்தானாகிய லாபானுக்குச் சகோதரியுமானவள்.
21மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்; கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார்; அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள்.
22அவள் கர்ப்பத்திலே பிள்ளைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்தன; அப்பொழுது அவள்: இப்படியானால் எனக்கு எப்படியோ என்று சொல்லி, கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி போனாள்.
23அதற்குக் கர்த்தர்: இரண்டு ஜாதிகள் உன் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது; இரண்டுவித ஜனங்கள் உன் வயிற்றிலிருந்து பிரியும், அவர்களில் ஒரு ஜனத்தார் மற்ற ஜனத்தாரைப்பார்க்கிலும் பலத்திருப்பார்கள், மூத்தவன் இளையவனைச் சேவிப்பான் என்றார்.
24பிரசவகாலம் பூரணமானபோது, அவள் கர்ப்பத்தில் இரட்டைப் பிள்ளைகள் இருந்தது.
25மூத்தவன் சிவந்த நிறமுள்ளவனாயும் சர்வாங்கமும் ரோம அங்கி போர்த்தவன் போலவும் வெளிப்பட்டான்; அவனுக்கு ஏசா என்று பேரிட்டார்கள்.
26பின்பு, அவன் சகோதரன் தன் கையினாலே ஏசாவின் குதிங்காலைப் பிடித்துக்கொண்டு வெளிப்பட்டான்; அவனுக்கு யாக்கோபு என்று பேரிட்டார்கள்; இவர்களை அவள் பெற்றபோது ஈசாக்கு அறுபது வயதாயிருந்தான்.
27இந்தப் பிள்ளைகள் பெரியவர்களானபோது, ஏசா வேட்டையில் வல்லவனும் வனசஞ்சாரியுமாய் இருந்தான்; யாக்கோபு குணசாலியும் கூடாரவாசியுமாய் இருந்தான்.
28ஏசா வேட்டையாடிக் கொண்டுவருகிறது ஈசாக்கினுடைய வாய்க்கு ருசிகரமாயிருந்ததினாலே ஏசாவின்மேல் பட்சமாயிருந்தான்; ரெபெக்காளோ யாக்கோபின்மேல் பட்சமாயிருந்தாள்.
29ஒருநாள் ஏசா வெளியிலிருந்து களைத்து வந்தபோது, யாக்கோபு கூழ் சமைத்துக்கொண்டிருந்தான்.
30அப்பொழுது ஏசா யாக்கோபை நோக்கி: அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன் என்றான்; இதனாலே அவனுக்கு ஏதோம் என்கிற பேர் உண்டாயிற்று.
31அப்பொழுது யாக்கோபு: உன் சேஷ்ட புத்திரபாகத்தை இன்று எனக்கு விற்றுப்போடு என்றான்.
32அதற்கு ஏசா: இதோ, நான் சாகப்போகிறேனே, இந்தச் சேஷ்ட புத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு என்றான்.
33அப்பொழுது யாக்கோபு: இன்று எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்; அவன் யாக்கோபுக்கு ஆணையிட்டு, தன் சேஷ்ட புத்திரபாகத்தை அவனுக்கு விற்றுப்போட்டான்.
34அப்பொழுது யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் பயற்றங்கூழையும் கொடுத்தான்; அவன் புசித்துக் குடித்து எழுந்திருந்து போய்விட்டான். இப்படி ஏசா தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம் பண்ணினான்.
1இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீஷர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள்.
2இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
3பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள்.
4இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்;
5ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
6யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது.
7ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.
8இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.
9அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்: என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்.
10அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள்.
11அநேகக் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
12அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும்.
13முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
14ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.
15மேலும், பாழாக்குகிற அருவருப்பைக்குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே, வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது,
16யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்.
17வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே எதையாகிலும் எடுப்பதற்கு இறங்காதிருக்கக்கடவன்.
18வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரங்களை எடுப்பதற்குத் திரும்பாதிருக்கக்கடவன்.
19அந்நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ.
20நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்.
21ஏனெனில், உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்.
22அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும்.
23அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள்.
24ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
25இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.
26ஆகையால்: அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், புறப்படாதிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள்.
27மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்.
28பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும்.
29அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்.
30அப்பொழுது மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்.
31வலுவாய்த் தொனிக்கும் எக்காளசத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள்.
32அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்.
33அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்.
34இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
35வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.
36அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.
37நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்.
38எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும்,
39ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.
40அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான்.
41இரண்டு ஸ்திரீகள் எந்திரம் அரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்.
42உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்.
43திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள்.
44நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.
45ஏற்றவேளையிலே தன் வேலைக்காரருக்குப் போஜனங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் யாவன்?
46எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரனே பாக்கியவான்.
47தன் ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பானென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
48அந்த ஊழியக்காரனோ பொல்லாதவனாயிருந்து: என் ஆண்டவன் வர நாள் செல்லும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு,
49தன் உடன்வேலைக்காரரை அடிக்கத்தொடங்கி, வெறியரோடே புசிக்கவும் குடிக்கவும் தலைப்பட்டால்,
50அந்த ஊழியக்காரன் நினையாத நாளிலும், அறியாத நாழிகையிலும், அவனுடைய எஜமான் வந்து,
51அவனைக் கடினமாய்த் தண்டித்து, மாயக்காரரோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.
1இந்து தேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது:
2ராஜாவாகிய அகாஸ்வேரு சூசான் அரமனையிலிருக்கிற தன் ராஜ்யத்தின் சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தான்.
3அவன் தன் ராஜ்யபாரத்தின் மூன்றாம் வருஷத்திலே தன்னுடைய பிரபுக்களுக்கும் ஊழியக்காரருக்கும் விருந்துபண்ணினான்; அப்பொழுது பெர்சியா மேதியா தேசங்களிலுள்ள மகத்தானவர்களும், நாடுகளின் அதிபதிகளும், பிரபுக்களும், அவன் சமுகத்தில் வந்திருந்தார்கள்.
4அவன் தன் ராஜ்யத்தின் மகிமையான ஐசுவரியத்தையும், தன் மகத்துவத்தின் சிறந்த பிரதாபத்தையும் அநேக நாளாகிய நூற்றெண்பது நாளளவும் விளங்கச்செய்துகொண்டிருந்தான்.
5அந்த நாட்கள் முடிந்தபோது, ராஜா சூசான் அரமனையில் வந்திருந்த பெரியோர்முதல் சிறியோர்மட்டுமுள்ள சமஸ்த ஜனங்களுக்கும் ராஜ அரமனையைச்சேர்ந்த சிங்காரத்தோட்டத்திலுள்ள மண்டபத்தில் ஏழுநாள் விருந்து செய்வித்தான்.
6அங்கே வெண்கலத் தூண்களின்மேலுள்ள வெள்ளி வளையங்களில் மெல்லிய நூலும் சிவப்பு நூலுமான கயிறுகளால் வெள்ளையும் பச்சையும் இளநீலமுமாகிய தொங்குதிரைகள் விதானித்திருந்தது; சிவப்பும் நீலமும் வெள்ளையும் கறுப்புமான கற்கள் பதித்திருந்த தளவரிசையின்மேல் பொற்சரிகையும் வெள்ளிச்சரிகையுமான மெத்தைகள் வைக்கப்பட்டிருந்தது.
7பொன்னால் செய்யப்பட்ட நானாவித பாத்திரங்களிலே பானம் கொடுக்கப்பட்டது; முதல்தரமான திராட்சரசம் ராஜஸ்திதிக்கு ஏற்கப் பரிபூரணமாய்ப் பரிமாறப்பட்டது.
8அவரவருடைய மனதின்படியே செய்யலாம் என்று ராஜா தன் அரமனையின் பெரிய மனுஷருக்கெல்லாம் கட்டளையிட்டிருந்தபடியினால், முறைப்படி பானம்பண்ணினார்கள்; ஒருவனும் பலவந்தம்பண்ணவில்லை.
9ராஜஸ்திரீயாகிய வஸ்தியும் ராஜாவாகிய அகாஸ்வேருவின் அரமனையிலே ஸ்திரீகளுக்கு ஒரு விருந்து செய்தாள்.
10ஏழாம் நாளிலே ராஜா திராட்சரசத்தினால் களிப்பாயிருக்கும்போது, மகாரூபவதியாயிருந்த ராஜஸ்திரீயாகிய வஸ்தியின் செளந்தரியத்தை ஜனங்களுக்கும் பிரபுக்களுக்கும் காண்பிக்கும்படி, ராஜகிரீடம் தரிக்கப்பட்டவளாக, அவளை ராஜாவுக்கு முன்பாக அழைத்துவரவேண்டுமென்று,
11ராஜாவாகிய அகாஸ்வேருவின் சமுகத்தில் சேவிக்கிற மெகுமான், பிஸ்தா, அற்போனா, பிக்தா, அபக்தா, சேதார், கர்காஸ் என்னும் ஏழு பிரதானிகளுக்கும் கட்டளையிட்டான்.
12ஆனாலும் பிரதானிகள் மூலமாய் ராஜா சொல்லியனுப்பின கட்டளைக்கு ராஜஸ்திரீயாகிய வஸ்தி வரமாட்டேன் என்றாள்; அப்பொழுது ராஜா கடுங்கோபமடைந்து, தனக்குள்ளே மூர்க்கவெறிகொண்டான்.
13அச்சமயத்தில் ராஜசமுகத்தைத் தரிசிக்கிறவர்களும், ராஜ்யத்தின் முதல் ஆசனங்களில் உட்காருகிறவர்களுமான கர்ஷேனா, சேதார், அத்மாதா, தர்ஷீஸ், மேரேஸ், மர்சேனா, மெமுகான் என்னும் பெர்சியர் மேதியருடைய ஏழு பிரபுக்களும் அவன் சமீபத்தில் இருந்தார்கள்.
14ராஜா நியாயப்பிரமாணத்தையும் ராஜநீதியையும் அறிந்தவர்களிடத்தில் பேசுவது தனக்கு வழக்கமானபடியால், காலாகால வர்த்தமானங்களை அறிந்த பண்டிதர்களை நோக்கி:
15ராஜாவாகிய அகாஸ்வேரு பிரதானிகள் மூலமாய்ச் சொல்லியனுப்பின கட்டளையின்படி ராஜஸ்திரீயாகிய வஸ்தி செய்யாமற்போனதினிமித்தம், தேசச்சட்டத்தின்படி அவளுக்குச் செய்யவேண்டியது என்ன என்று கேட்டான்.
16அப்பொழுது மெமுகான் ராஜாவுக்கும் பிரபுக்களுக்கும் முன்னே பிரதியுத்தரமாக: ராஜஸ்திரீயாகிய வஸ்தி ராஜாவுக்கு மாத்திரம் அல்ல, ராஜாவாகிய அகாஸ்வேருவினுடைய சகல நாடுகளிலுமுள்ள சகல பிரபுக்களுக்கும் சகல ஜனங்களுக்குங்கூட அநியாயஞ்செய்தாள்.
17ராஜாவாகிய அகாஸ்வேரு ராஜஸ்திரீயாகிய வஸ்தியைத் தமக்கு முன்பாக அழைத்துவரச் சொன்னபோது, அவள் வரமாட்டோம் என்கிற செய்தி எல்லா ஸ்திரீகளுக்கும் பிரசித்தமானால், அவர்களும் தங்கள் புருஷரைத் தங்கள் பார்வையில் அற்பமாய் எண்ணுவார்கள்.
18இன்றையதினமே பெர்சியாவிலும் மேதியாவிலுமுள்ள பிரபுக்களின் ஸ்திரீகள் ராஜஸ்திரீயின் செய்தியைக் கேட்கும்போது, ராஜாவின் பிரபுக்களுக்கெல்லாம் அப்படியே சொல்லுவார்கள்; மிகுந்த அசட்டையும் எரிச்சலும் விளையும்.
19ராஜாவுக்குச் சம்மதியாயிருந்தால், வஸ்தி இனி ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு முன்பாக வரக்கூடாது என்றும், அவளுடைய ராஜமேன்மையை அவளைப் பார்க்கிலும் உத்தமியாகிய மற்றொரு ஸ்திரீக்கு ராஜா கொடுப்பாராக என்றும், அவரால் ஒரு ராஜகட்டளை பிறந்து, அது மீறப்படாதபடிக்கு, பெர்சியாவுக்கும் மேதியாவுக்கும் உரிய தேசச் சட்டத்திலும் எழுதப்படவேண்டும்.
20இப்படி ராஜா தீர்த்த காரியம் தமது விஸ்தீரணமான ராஜ்யமெங்கும் கேட்கப்படும்போது, பெரியோர்முதல் சிறியோர்மட்டுமுள்ள எல்லா ஸ்திரீகளும் தங்கள் புருஷரைக் கனம்பண்ணுவார்கள் என்றான்.
21இந்த வார்த்தை ராஜாவுக்கும் பிரபுக்களுக்கும் நலமாய்த் தோன்றினதினால், ராஜா மெமுகானுடைய வார்த்தையின்படியே செய்து,
22எந்தப் புருஷனும் தன் வீட்டுக்குத் தானே அதிகாரியாயிருக்கவேண்டும் என்றும், இதை அந்தந்த ஜனங்களுடைய பாஷையிலே பிரசித்தம்பண்ணவேண்டும் என்றும், அந்தந்த நாட்டில் வழங்குகிற அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசுகிற பாஷையிலும், ராஜாவின் சகல நாடுகளுக்கும் கட்டளை எழுதி அனுப்பினான்.
1ஐந்து நாளைக்குப்பின்பு பிரதானஆசாரியனாகிய அனனியா மூப்பர்களோடும் தெர்த்துல்லு என்னும் ஒரு நியாயசாதுரியனோடும் கூடப்போனான், அவர்கள் பவுலுக்கு விரோதமாய்த் தேசாதிபதியினிடத்தில் பிராதுபண்ணினார்கள்.
2அவன் அழைக்கப்பட்டபோது, தெர்த்துல்லு குற்றஞ்சாட்டத்தொடங்கி:
3கனம்பொருந்திய பேலிக்ஸே, உம்மாலே நாங்கள் மிகுந்த சமாதான சவுக்கியத்தை அநுபவிக்கிறதையும், உம்முடைய பராமரிப்பினாலே இந்தத் தேசத்தாருக்குச் சிறந்த நன்மைகள் நடக்கிறதையும் நாங்கள் எப்பொழுதும் எங்கும் மிகுந்த நன்றியறிதலுடனே அங்கிகாரம்பண்ணுகிறோம்.
4உம்மை நான் அநேக வார்த்தைகளினாலே அலட்டாதபடிக்கு, நாங்கள் சுருக்கமாய்ச் சொல்வதை நீர் பொறுமையாய்க் கேட்கவேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்.
5என்னவென்றால், இந்த மனுஷன் கொள்ளைநோயாகவும், பூச்சக்கரத்திலுள்ள சகல யூதர்களுக்குள்ளும் கலகம் எழுப்புகிறவனாகவும், நசரேயருடைய மதபேதத்துக்கு முதலாளியாகவும் இருக்கிறானென்று கண்டறிந்தோம்.
6இவன் தேவாலயத்தையும் தீட்டுப்படுத்தப்பார்த்தான். நாங்கள் இவனைப்பிடித்து எங்கள் வேதப்பிரமாணத்தின்படியே நியாயந்தீர்க்க மனதாயிருந்தோம்.
7அப்பொழுது சேனாதிபதியாகிய லீசியா வந்து, மிகுந்த பலாத்காரமாய் இவனை எங்கள் கைகளிலிருந்து பறித்துக்கொண்டுபோய்,
8இவன்மேல் குற்றஞ்சாட்டுகிறவர்கள் உம்மிடத்தில் வரும்படி கட்டளையிட்டார். இவனிடத்தில் நீர் விசாரித்தால் நாங்கள் இவன்மேல் சாட்டுகிற குற்றங்கள் யாவையும் அறிந்துகொள்ளலாம் என்றான்.
9யூதர்களும் அதற்கு இசைந்து, இவைகள் யதார்த்தந்தான் என்றார்கள்.
10பவுல் பேசும்படி தேசாதிபதி சைகைகாட்டினபோது, அவன் உத்தரவாக: நீர் அநேக வருஷகாலமாய் இந்த தேசத்தாருக்கு நியாயாதிபதியாயிருக்கிறீரென்றறிந்து, நான் என் காரியங்களைக்குறித்து அதிக தைரியத்துடன் உத்தரவு சொல்லுகிறேன்.
11நான் தொழுதுகொள்ளும்படியாக எருசலேமுக்குப் போனதுமுதல் இதுவரைக்கும் பன்னிரண்டு நாள்மாத்திரம் ஆயிற்றென்று நீர் அறிந்துகொள்ளலாம்.
12தேவாலயத்திலே நான் ஒருவரிடத்திலாவது தர்க்கம்பண்ணினதையும், நான் ஜெப ஆலயங்களிலாகிலும் நகரத்திலாகிலும் ஜனங்களுக்குள்ளே கலகமெழுப்பினதையும், இவர்கள் கண்டதில்லை.
13இப்பொழுது என்மேல் சாட்டுகிற குற்றங்களை இவர்கள் ரூபிக்கவுமாட்டார்கள்.
14உம்மிடத்தில் ஒன்றை ஒத்துக்கொள்ளுகிறேன்; அதென்னவென்றால், இவர்கள் மதபேதம் என்று சொல்லுகிற மார்க்கத்தின்படியே எங்கள் முன்னோர்களின் தேவனுக்கு ஆராதனைசெய்து நியாயப்பிரமாணத்திலேயும் தீர்க்கதரிசிகள் புஸ்தகங்களிலேயும் எழுதியிருக்கிற எல்லாவற்றையும் நான் விசுவாசித்து,
15நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்தெழுந்திருப்பது உண்டென்று இவர்கள் தேவனிடத்தில் நம்பிக்கைகொண்டிருக்கிறதுபோல, நானும் நம்பிக்கைகொண்டிருக்கிறேன்.
16இதனால் நான் தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாயிருக்கப் பிரயாசப்படுகிறேன்.
17அநேக வருஷங்களுக்குப்பின்பு நான் என் ஜனத்தாருக்குத் தர்மப்பணத்தை ஒப்புவிக்கவும், காணிக்கைகளைச் செலுத்தவும் வந்தேன்.
18அப்பொழுது கூட்டமில்லாமலும் அமளியில்லாமலும் தேவாலயத்திலே சுத்திகரித்துக்கொண்டவனாயிருக்கையில், ஆசியா நாட்டாரான சில யூதர்கள் என்னைக் கண்டார்கள்.
19அவர்களுக்கு என்பேரில் விரோதமான காரியம் ஏதாகிலும் உண்டாயிருந்தால், அவர்களே இங்கே வந்து, உமக்கு முன்பாகக் குற்றஞ்சாட்டவேண்டும்.
20நான் ஆலோசனைச் சங்கத்தாருக்கு முன்பாக நின்றபோது அவர்கள் யாதொரு அநியாயத்தை என்னிடத்தில் கண்டதுண்டானால் இவர்களே அதைச் சொல்லட்டும்.
21நான் அவர்களுக்குள்ளே நின்றபோது மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பதைக்குறித்து, இன்று உங்களாலே நியாயந்தீர்க்கப்படுகிறேனென்று நான் சொன்ன ஒரு சொல்லினிமித்தமேயன்றி வேறொன்றினிமித்தமும் குற்றங்காணப்படவில்லையென்றான்.
22இந்த மார்க்கத்தின் விஷயங்களை விவரமாய் அறிந்திருந்த பேலிக்ஸ் இவைகளைக் கேட்டபொழுது: சேனாதிபதியாகிய லீசியா வரும்போது உங்கள் காரியங்களைத் திட்டமாய் விசாரிப்பேன் என்று சொல்லி;
23பவுலைக் காவல்பண்ணவும், கண்டிப்பில்லாமல் நடத்தவும், அவனுக்கு ஊழியஞ்செய்கிறதற்கும் அவனைக் கண்டுகொள்ளுகிறதற்கும் வருகிற அவனுடைய மனுஷர்களில் ஒருவரையும் தடைசெய்யாதிருக்கவும் நூற்றுக்கு அதிபதியானவனுக்குக் கட்டளையிட்டு, அவர்களைக் காத்திருக்கும்படி செய்தான்.
24சில நாளைக்குப்பின்பு பேலிக்ஸ் யூதஸ்திரீயாகிய தன் மனைவி துருசில்லாளுடனேகூட வந்து, பவுலை அழைப்பித்து, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தைக் குறித்து அவன் சொல்லக்கேட்டான்.
25அவன், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும்குறித்துப் பேசுகையில், பேலிக்ஸ் பயமடைந்து: இப்பொழுது நீ போகலாம், எனக்குச் சமயமானபோது உன்னை அழைப்பிப்பேன் என்றான்.
26மேலும், அவன் பவுலை விடுதலைபண்ணும்படி தனக்கு அவன் பணங்கொடுப்பானென்று நம்பிக்கையுள்ளவனாயிருந்தான்; அதினிமித்தம் அவன் அநேகந்தரம் அவனை அழைத்து, அவனுடனே பேசினான்.
27இரண்டு வருஷம் சென்றபின்பு பேலிக்ஸ் என்பவனுக்குப் பதிலாய்ப் பொர்க்கியுபெஸ்து தேசாதிபதியாக வந்தான்; அப்பொழுது பேலிக்ஸ் யூதருக்கு தயவுசெய்ய மனதாய்ப் பவுலைக் காவலில் வைத்துவிட்டுப்போனான்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com