1ஆபிரகாமின் நாட்களில் உண்டான பஞ்சத்தை அல்லாமல், பின்னும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டாயிற்று; அப்பொழுது ஈசாக்கு பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கினிடத்தில் கேராருக்குப் போனான்.
2கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நீ எகிப்துக்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு.
3இந்தத் தேசத்திலே வாசம்பண்ணு; நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்; நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன்.
4ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டபடியினால்,
5நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, உன் சந்ததிக்கு இந்தத் தேசங்கள் யாவையும் தருவேன்; உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.
6ஈசாக்கு கேராரிலே குடியிருந்தான்.
7அவ்விடத்து மனிதர்கள் அவன் மனைவியைக்குறித்து விசாரித்தபோது: இவள் என் சகோதரி என்றான். ரெபெக்காள் பார்வைக்கு அழகுள்ளவளானபடியால், அவ்விடத்து மனிதர்கள் அவள்நிமித்தம் தன்னைக் கொல்லுவார்கள் என்று எண்ணி, அவளைத் தன் மனைவி என்று சொல்லப் பயந்தான்.
8அவன் அங்கே நெடுநாள் தங்கியிருக்கையில், பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கு ஜன்னல் வழியாய்ப் பார்க்கும்போது, ஈசாக்கு தன் மனைவியாகிய ரெபெக்காளோடே விளையாடிக்கொண்டிருக்கிறதைக் கண்டான்.
9அபிமெலேக்கு ஈசாக்கை அழைத்து: அவள் உன் மனைவியாயிருக்கிறாளே! பின்னை ஏன் அவளை உன் சகோதரி என்று சொன்னாய் என்றான். அதற்கு ஈசாக்கு: அவள் நிமித்தம் நான் சாகாதபடிக்கு, இப்படிச் சொன்னேன் என்றான்.
10அதற்கு அபிமெலேக்கு: எங்களிடத்தில் ஏன் இப்படிச் செய்தாய்? ஜனங்களுக்குள் யாராகிலும் உன் மனைவியோடே சயனிக்கவும், எங்கள்மேல் பழி சுமரவும் நீ இடமுண்டாக்கினாயே என்றான்.
11பின்பு, அபிமெலேக்கு: இந்தப் புருஷனையாகிலும் இவன் மனைவியையாகிலும் தொடுகிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படுவான் என்று எல்லா ஜனங்களும் அறியச் சொன்னான்.
12ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதைவிதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்;
13அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான்.
14அவனுக்கு ஆட்டு மந்தையும், மாட்டு மந்தையும், அநேக பணிவிடைக்காரரும் இருந்தபடியினாலே பெலிஸ்தர் அவன் பேரில் பொறாமைகொண்டு,
15அவன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் அவனுடைய வேலைக்காரர் வெட்டின துரவுகளையெல்லாம் தூர்த்து மண்ணினால் நிரப்பிப்போட்டார்கள்.
16அபிமெலேக்கு ஈசாக்கை நோக்கி: நீ எங்களை விட்டுப் போய்விடு; எங்களைப் பார்க்கிலும் மிகவும் பலத்தவனானாய் என்றான்.
17அப்பொழுது ஈசாக்கு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கேராரின் பள்ளத்தாக்கிலே கூடாரம் போட்டு, அங்கே குடியிருந்து,
18தன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் வெட்டினவைகளும், ஆபிரகாம் மரித்தபின் பெலிஸ்தர் தூர்த்துப்போட்டவைகளுமான துரவுகளை மறுபடியும் தோண்டி, தன் தகப்பன் அவைகளுக்கு இட்டிருந்த பேர்களின்படியே அவைகளுக்குப் பேரிட்டான்.
19ஈசாக்குடைய வேலைக்காரர் பள்ளத்தாக்கிலே வெட்டி, அங்கே சுரக்கும் நீரூற்றைக் கண்டார்கள்.
20கேராரூர் மேய்ப்பர் இந்தத் தண்ணீர் தங்களுடையது என்று சொல்லி, ஈசாக்குடைய மேய்ப்பருடனே வாக்குவாதம்பண்ணினார்கள்; அவர்கள் தன்னோடே வாக்குவாதம் பண்ணினபடியால், அந்தத் துரவுக்கு ஏசேக்கு என்று பேரிட்டான்.
21வேறொரு துரவை வெட்டினார்கள்; அதைக்குறித்தும் வாக்குவாதம்பண்ணினார்கள்; ஆகையால் அதற்கு சித்னா என்று பேரிட்டான்.
22பின்பு அவ்விடம்விட்டுப் பெயர்ந்துபோய், வேறொரு துரவை வெட்டினான்; அதைக்குறித்து அவர்கள் வாக்குவாதம்பண்ணவில்லை; அப்பொழுது அவன்: நாம் தேசத்தில் பலுகும்படிக்கு, இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் என்று சொல்லி, அதற்கு ரெகொபோத் என்று பேரிட்டான்.
23அங்கேயிருந்து பெயெர்செபாவுக்குப் போனான்.
24அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன், பயப்படாதே, நான் உன்னோடேகூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன் என்றார்.
25அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, அங்கே தன் கூடாரத்தைப் போட்டான். அவ்விடத்தில் ஈசாக்கின் வேலைக்காரர் ஒரு துரவை வெட்டினார்கள்.
26அபிமெலேக்கும் அவன் சிநேகிதனாகிய அகுசாத்தும் அவன் சேனாபதியாகிய பிகோலும், கேராரிலிருந்து அவனிடத்துக்கு வந்தார்கள்.
27அப்பொழுது ஈசாக்கு அவர்களை நோக்கி: ஏன் என்னிடத்தில் வந்தீர்கள்? நீங்கள் என்னைப் பகைத்து, என்னை உங்களிடத்தில் இராதபடிக்குத் துரத்திவிட்டீர்களே என்றான்.
28அதற்கு அவர்கள்: நிச்சயமாய் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம்; ஆகையால் எங்களுக்கும் உமக்கும் ஒரு ஆணை ஏற்பாடு உண்டாகவேண்டும் என்று நாங்கள் நிர்ணயம் பண்ணினோம்.
29நாங்கள் உம்மைத் தொடாமல், நன்மையையே உமக்குச் செய்து, உம்மைச் சமாதானத்தோடே அனுப்பிவிட்டதுபோல, நீரும் எங்களுக்குத் தீங்குசெய்யாதபடிக்கு உம்மோடே உடன்படிக்கை பண்ணிக்கொள்ள வந்தோம்; நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவராமே என்றார்கள்.
30அவன் அவர்களுக்கு விருந்துபண்ணினான், அவர்கள் புசித்துக் குடித்தார்கள்.
31அதிகாலையில் எழுந்து ஒருவருக்கொருவர் ஆணையிட்டுக்கொண்டார்கள். பின்பு ஈசாக்கு அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் அவனிடத்திலிருந்து சமாதானத்தோடே போய்விட்டார்கள்.
32அந்நாளில்தானே ஈசாக்கின் வேலைக்காரர் வந்து, தாங்கள் துரவு வெட்டின செய்தியை அவனுக்கு அறிவித்து, தண்ணீர் கண்டோம் என்றார்கள்.
33அதற்கு சேபா என்று பேரிட்டான்; ஆகையால் அந்த ஊரின் பேர் இந்நாள் வரைக்கும் பெயெர்செபா என்னப்படுகிறது.
34ஏசா நாற்பது வயதானபோது, ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும் விவாகம்பண்ணினான்.
35அவர்கள் ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மனநோவாயிருந்தார்கள்.
1அப்பொழுது பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப்புறப்பட்ட பத்துக்கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும்.
2அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள்.
3புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டுபோகவில்லை.
4புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள்.
5மணவாளன் வரத் தாமதித்தபோது, அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள்.
6நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று.
7அப்பொழுது, அந்தக் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள்.
8புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி: உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே என்றார்கள்.
9புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற்குப் போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள்.
10அப்படியே அவர்கள் வாங்கப்போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூடக் கலியாணவீட்டுக்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது.
11பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள்.
12அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
13மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.
14அன்றியும், பரலோகராஜ்யம் புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன், தன் ஊழியக்காரரை அழைத்து, தன் ஆஸ்திகளை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கிறது.
15அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்துமாகக் கொடுத்து, உடனே பிரயாணப்பட்டுப்போனான்.
16ஐந்து தாலந்தை வாங்கினவன் போய், அவைகளைக்கொண்டு வியாபாரம்பண்ணி, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தான்.
17அப்படியே இரண்டு தாலந்தை வாங்கினவனும், வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தான்.
18ஒரு தாலந்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்துவைத்தான்.
19வெகுகாலமானபின்பு அந்த ஊழியக்காரருடைய எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் கணக்குக் கேட்டான்.
20அப்பொழுது, ஐந்து தாலந்தை வாங்கினவன், வேறு ஐந்து தாலந்தைக் கொண்டுவந்து: ஆண்டவனே, ஐந்து தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான்.
21அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.
22இரண்டு தாலந்தை வாங்கினவனும் வந்து: ஆண்டவனே, இரண்டு தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான்.
23அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.
24ஒரு தாலந்தை வாங்கினவன் வந்து: ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனுஷன் என்று அறிவேன்.
25ஆகையால், நான் பயந்து போய், உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான்.
26அவனுடைய எஜமான் பிரதியுத்தரமாக: பொல்லாதவனும் சோம்பலுமான ஊழியக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும் தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே.
27அப்படியானால், நீ என் பணத்தைக் காசுக்காரர் வசத்தில் போட்டுவைக்க வேண்டியதாயிருந்தது; அப்பொழுது, நான் வந்து என்னுடையதை வட்டியோடே வாங்கிக்கொள்ளுவேனே, என்று சொல்லி,
28அவனிடத்திலிருக்கிற தாலந்தை எடுத்து, பத்துத் தாலந்துள்ளவனுக்குக் கொடுங்கள்.
29உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
30பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான்.
31அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்.
32அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து,
33செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார்.
34அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.
35பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்;
36வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார்.
37அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்குப் போஜனங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக்கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்?
38எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக் கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்?
39எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள்.
40அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
41அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.
42பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை;
43அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லையென்பார்.
44அப்பொழுது, அவர்களும் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், காவலிடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவி செய்யாதிருந்தோம் என்பார்கள்.
45அப்பொழுது, அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
46அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.
1இவைகளுக்குப்பின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவின் உக்கிரம் தணிந்தபோது, அவன் வஸ்தியையும் அவள் செய்ததையும் அவளைக்குறித்துத் தீர்மானிக்கப்பட்டதையும் நினைத்தான்.
2அப்பொழுது ராஜாவைச் சேவிக்கிற அவனுடைய ஊழியக்காரர் அவனை நோக்கி: ரூபவதிகளாயிருக்கிற கன்னிப்பெண்களை ராஜாவுக்காகத் தேடவேண்டும்.
3அதற்காக ராஜா தம்முடைய ராஜ்யத்தின் நாடுகளிலெல்லாம் விசாரிப்புக்காரரை வைக்கவேண்டும்; இவர்கள் ரூபவதிகளாயிருக்கிற சகல கன்னிப்பெண்களையும் கூட்டி, சூசான் அரமனையிலிருக்கிற கன்னிமாடத்துக்கு அழைத்துவந்து, ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானியாகிய யேகாயின் வசத்திலே ஒப்புவிக்கவேண்டும்; அவர்களுடைய சுத்திகரிப்புக்கு வேண்டியவைகள் அவர்களுக்குக் கொடுக்கப்படவேண்டும்.
4அப்பொழுது ராஜாவின் கண்களுக்குப் பிரியமான கன்னி வஸ்திக்குப் பதிலாகப் பட்டத்து ஸ்திரீயாகவேண்டும் என்றார்கள்; இந்த வார்த்தை ராஜாவுக்கு நலமாய்த் தோன்றினபடியால் அப்படியே செய்தான்.
5அப்பொழுது சூசான் அரமனையிலே பென்யமீனியனாகிய கீசின் குமாரன் சீமேயினுடைய மகனாகிய யாவீரின் குமாரன் மொர்தெகாய் என்னும் பேருள்ள ஒரு யூதன் இருந்தான்.
6அவன் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாவின் ராஜாவாகிய எகொனியாவைப் பிடித்துக்கொண்டுபோகிறபோது, அவனோடேகூட எருசலேமிலிருந்து பிடித்துக்கொண்டு போகப்பட்டவர்களில் ஒருவனாயிருந்தான்.
7அவன் தன் சிறிய தகப்பன் குமாரத்தியாகிய எஸ்தர் என்னும் அத்சாளை வளர்த்தான்; அவளுக்குத் தாய்தகப்பனில்லை; அந்தப் பெண் ரூபவதியும் செளந்தரியமுடையவளுமாயிருந்தாள்; அவள் தகப்பனும் அவள் தாயும் மரணமடைந்தபோது, மொர்தெகாய் அவளைத் தன் குமாரத்தியாக எடுத்துக்கொண்டான்.
8ராஜாவின் கட்டளையும் தீர்மானமும் பிரசித்தமாகி, அநேகம் பெண்கள் கூட்டப்பட்டு, சூசான் அரமனையிலுள்ள யேகாயின் வசத்தில் ஒப்புவிக்கப்படுகிறபோது, எஸ்தரும் ராஜாவின் அரமனைக்கு அழைத்துக்கொண்டுபோகப்பட்டு, ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற யேகாயின் வசத்தில் ஒப்புவிக்கப்பட்டாள்.
9அந்தப் பெண் அவன் பார்வைக்கு நன்றாயிருந்ததினால், அவளுக்கு அவன் கண்களிலே தயை கிடைத்தது; ஆகையால் அவளுடைய சுத்திகரிப்புக்கு வேண்டியவைகளையும், அவளுக்குத் தேவையான மற்றவைகளையும் அவளுக்குக் கொடுக்கவும், ராஜ அரமனையிலிருக்கிற ஏழு தாதிமார்களை அவளுக்கு நியமிக்கவும் ஜாக்கிரதைப்பட்டு கன்னிமாடத்தில் சிறந்த ஒரு இடத்திலே அவளையும் அவள் தாதிமார்களையும் வைத்தான்.
10எஸ்தரோவென்றால் தன் குலத்தையும், தன் பூர்வோத்தரத்தையும் அறிவிக்காதிருந்தாள்; மொர்தெகாய் அதைத் தெரிவிக்கவேண்டாமென்று அவளுக்குக் கற்பித்திருந்தான்.
11எஸ்தருடைய சுகசெய்தியையும் அவளுக்கு நடக்குங்காரியத்தையும் அறிய மொர்தெகாய் நாடோறும் கன்னிமாடத்து முற்றத்துக்கு முன்பாக உலாவுவான்.
12ஒவ்வொரு பெண்ணும் ஆறுமாதம் வெள்ளைப்போளத் தைலத்தினாலும், ஆறுமாதம் சுகந்தவர்க்கங்களினாலும், ஸ்திரீகளுக்குரிய மற்றச் சுத்திகரிப்புகளினாலும் ஜோடிக்கப்படுகிற நாட்கள் நிறைவேறி, இவ்விதமாய் ஸ்திரீகளின் முறைமைப்படி பன்னிரண்டு மாதமாகச் செய்யப்பட்டுத் தீர்ந்தபின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவினிடத்தில் பிரவேசிக்க, அவளவளுடைய முறை வருகிறபோது,
13இப்படி ஜோடிக்கப்பட்ட பெண் ராஜாவினிடத்தில் பிரவேசிப்பாள்; கன்னிமாடத்திலிருந்து தன்னோடேகூட ராஜ அரமனைக்குப்போக, அவள் தனக்கு வேண்டுமென்று கேட்பவையெல்லாம் அவளுக்குக் கொடுக்கப்படும்.
14சாயங்காலத்திலே அவள் உள்ளே பிரவேசித்து, காலமே, அபிமான ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானியாகிய சாஸ்காசுடைய விசாரிப்புக்குள்ளிருக்கிற ஸ்திரீகளின் இரண்டாம் மாடத்துக்குத் திரும்பிவருவாள்; ராஜா தன்னை விரும்பிப் பேர்சொல்லி அழைப்பித்தாலொழிய அவள் ஒருபோதும் ராஜாவினிடத்தில் பிரவேசிக்கக்கூடாது.
15மொர்தெகாய் தனக்குக் குமாரத்தியாய் ஏற்றுக்கொண்டவளும், அவன் சிறியதகப்பனாகிய அபியாயேலின் குமாரத்தியுமான எஸ்தர் ராஜாவினிடத்தில் பிரவேசிக்கிறதற்கு முறைவந்தபோது, அவள் ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானியாகிய யேகாய் நியமித்த காரியமேயல்லாமல் வேறொன்றும் கேட்கவில்லை; எஸ்தருக்குத் தன்னைக் காண்கிற எல்லார் கண்களிலும் தயை கிடைத்தது.
16அப்படியே எஸ்தர் ராஜாவாகிய அகாஸ்வேரு அரசாளுகிற ஏழாம் வருஷம் தேபேத் மாதமாகிய பத்தாம் மாதத்திலே ராஜாவினிடத்தில் அரமனைக்கு அழைத்துக்கொண்டு போகப்பட்டாள்.
17ராஜா சகல ஸ்திரீகளைப்பார்க்கிலும் எஸ்தர்மேல் அன்புவைத்தான்; சகல கன்னிகைகளைப்பார்க்கிலும் அவளுக்கு அவன் சமுகத்தில் அதிக தயையும் பட்சமும் கிடைத்தது; ஆகையால் அவன் ராஜகிரீடத்தை அவள் சிரசின்மேல் வைத்து, அவளை வஸ்தியின் ஸ்தானத்திலே பட்டத்து ஸ்திரீயாக்கினான்.
18அப்பொழுது ராஜா தன்னுடைய எல்லாப் பிரபுக்களுக்கும் ஊழியக்காரருக்கும், எஸ்தரினிமித்தம் ஒரு பெரிய விருந்துசெய்து, நாடுகளுக்குச் சலக்கரணை உண்டாக்கி, ராஜஸ்திதிக்குத்தக்க வெகுமானங்களைக் கொடுத்தான்.
19இரண்டாந்தரம் கன்னிகைகள் சேர்க்கப்படும்போது, மொர்தெகாய் ராஜாவின் அரமனை வாசலில் உட்கார்ந்திருந்தான்.
20எஸ்தர் மொர்தெகாய் தனக்குக் கற்பித்திருந்தபடி, தன் பூர்வோத்தரத்தையும் தன் குலத்தையும் தெரிவிக்காதிருந்தாள்; எஸ்தர் மொர்தெகாய் இடத்திலே வளரும்போது அவன் சொற்கேட்டு நடந்ததுபோல, இப்பொழுதும் அவன் சொற்கேட்டு நடந்துவந்தாள்.
21அந்நாட்களில் மொர்தெகாய் ராஜாவின் அரமனை வாசலில் உட்கார்ந்திருக்கிறபோது, வாசல்காக்கிற ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானும் தேரேசும் வர்மம் வைத்து, ராஜாவாகிய அகாஸ்வேருவின்மேல் கைபோட வகை தேடினார்கள்.
22இந்தக் காரியம் மொர்தெகாய்க்குத் தெரியவந்ததினால், அவன் அதை ராஜாத்தியாகிய எஸ்தருக்கு அறிவித்தான்; எஸ்தர் மொர்தெகாயின் பேரால் அதை ராஜாவுக்குச் சொன்னாள்.
23அந்தக் காரியம் விசாரிக்கப்படுகிறபோது, அது மெய்யென்று காணப்பட்டது; ஆகையால் அவர்கள் இருவரும் மரத்திலே தூக்கிப்போடப்பட்டார்கள்; இது ராஜ சமுகத்திலே நாளாகமப்புஸ்தகத்திலே எழுதப்பட்டிருக்கிறது.
1பெஸ்து என்பவன் நாட்டிற்கு அதிபதியாக வந்து, மூன்று நாளானபின்பு, செசரியாவிலிருந்து எருசலேமுக்குப் போனான்.
2அப்பொழுது பிரதான ஆசாரியனும் யூதரில் முதன்மையானவர்களும் அவனிடத்தில் வந்து, பவுலுக்கு விரோதமாகப் பிராதுபண்ணி,
3அவனை வழியிலே கொன்றுபோடும்படி சர்ப்பனையான யோசனையுள்ளவர்களாய், தங்கள்மேல் தயவுசெய்து, அவனை எருசலேமுக்கு அழைப்பிக்கவேண்டுமென்று வேண்டிக்கொண்டார்கள்.
4அதற்குப் பெஸ்து பிரதியுத்தரமாக: பவுலைச் செசரியாவிலே காவல்பண்ணியிருக்கிறதே; நானும் சீக்கிரமாக அங்கேபோகிறேன்.
5ஆகையால் உங்களில் திறமுள்ளவர்கள் கூடவந்து, அந்த மனுஷனிடத்தில் குற்றம் ஏதாகிலும் உண்டானால், அந்தக் குற்றத்தை அவன்மேல் சாட்டட்டும் என்றான்.
6அவன் அவர்களிடத்திலே ஏறக்குறைய பத்துநாள் சஞ்சரித்து, பின்பு செசரியாவுக்குப் போய், மறுநாளிலே நியாயாசனத்தில் உட்கார்ந்து, பவுலைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டான்.
7அவன் வந்தபோது, எருசலேமிலிருந்துவந்த யூதர்கள் அவனைச் சூழ்ந்துநின்று, தங்களால் ரூபிக்கக்கூடாத அநேகங்கொடிய குற்றங்களை அவன்மேல் சாட்டினார்கள்.
8அதற்கு அவன் உத்தரவாக: நான் யூதருடைய வேதப்பிரமாணத்துக்காகிலும், தேவாலயத்துக்காகிலும், இராயருக்காகிலும் விரோதமாக ஒரு குற்றமும் செய்யவில்லையென்று சொன்னான்.
9அப்பொழுது பெஸ்து யூதருக்குத் தயவுசெய்ய மனதாய், பவுலை நோக்கி: நீ எருசலேமுக்குப் போய், அவ்விடத்திலே இந்தக் காரியங்களைக்குறித்து எனக்கு முன்பாக நியாயம் விசாரிக்கப்பட உனக்குச் சம்மதியா என்றான்.
10அதற்குப் பவுல்: நான் இராயருடைய நியாயாசனத்துக்கு முன்பாக நிற்கிறேன்; அதற்கு முன்பாக நான் நியாயம் விசாரிக்கப்படவேண்டியது; யூதருக்கு நான் அநியாயம் ஒன்றும் செய்யவில்லை, அதை நீரும் நன்றாய் அறிந்திருக்கிறீர்.
11நான் அநியாயஞ்செய்து, மரணத்துக்குப் பாத்திரமானது ஏதாகிலும் நடப்பித்ததுண்டானால், நான் சாகாதபடிக்கு மனுகேட்கமாட்டேன். இவர்கள் என்மேல் சாட்டுகிற குற்றங்கள் முற்றிலும் அபத்தமானால், அவர்களுக்குத் தயவுபண்ணும்பொருட்டு ஒருவரும் என்னை அவர்களுக்கு ஒப்புக்கொடுக்கலாகாது. இராயருக்கு அபயமிடுகிறேன் என்றான்.
12அப்பொழுது பெஸ்து தன் ஆலோசனைக்காரருடனே ஆலோசித்து: நீ இராயருக்கு அபயமிட்டாயே; இராயரிடத்திற்கே போகக்கடவாயென்று உத்தரவு சொன்னான்.
13சிலநாள் சென்றபின்பு, அகிரிப்பா ராஜாவும் பெர்னீக்கேயாளும் பெஸ்துவைக் கண்டுகொள்ளும்படி செசரியாவுக்கு வந்தார்கள்.
14அவர்கள் அங்கே அநேகநாள் சஞ்சரித்திருக்கையில், பெஸ்து பவுலின் சங்கதியை ராஜாவுக்கு விவரித்து: பேலிக்ஸ் காவலில் வைத்துப்போன ஒரு மனுஷன் இருக்கிறான்.
15நான் எருசலேமில் இருந்தபோது, பிரதான ஆசாரியர்களும் யூதருடைய மூப்பர்களும் அவனைக்குறித்து என்னிடத்தில் பிராதுபண்ணி, அவனுக்கு விரோதமாகத் தீர்ப்புசெய்யவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்.
16அவர்களுக்கு நான் பிரதியுத்தரமாக: குற்றஞ்சாட்டப்பட்ட மனுஷன் குற்றஞ்சாட்டினவர்களுக்கு முகமுகமாய் நின்று, சாட்டின குற்றத்துக்குத் தனக்காக எதிருத்தரவு சொல்ல அவனுக்கு இடங்கிடைக்கிறதற்குமுன்னே, குற்றஞ்சாட்டினவர்கள் பட்சமாய் அவனை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கிறது ரோமருக்கு வழக்கமல்ல என்றேன்.
17ஆகையால் அவர்கள் இங்கே கூடிவந்தபோது, நான் எவ்வளவும் தாமதம்பண்ணாமல், மறுநாள் நியாயாசனத்தில் உட்கார்ந்து, அந்த மனுஷனைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டேன்.
18அப்பொழுது குற்றஞ்சாட்டினவர்கள் வந்துநின்று, நான் நினைத்திருந்த குற்றங்களில் ஒன்றையும் அவன்மேல் சுமத்தாமல்,
19தங்களுடைய மார்க்கத்தைக்குறித்தும், மரித்துப்போன இயேசு என்னும் ஒருவன் உயிரோடிருக்கிறானென்று பவுல் சாதித்ததைக்குறித்தும் சில தர்க்கவிஷயங்களை அவன்பேரில் விரோதமாய்ச் சொன்னார்கள்.
20இப்படிப்பட்ட தர்க்க விஷயங்களைக்குறித்து எனக்குச் சந்தேகமிருந்தபடியினால்: நீ எருசலேமுக்குப்போய், அங்கே இவைகளைக் குறித்து நியாயம் விசாரிக்கப்பட உனக்குச் சம்மதியா என்று கேட்டேன்.
21அதற்குப் பவுல், தான் இராயருக்கு முன்பாக நியாயம் விசாரிக்கப்படும்படிக்கு நிறுத்திவைக்கப்படவேண்டுமென்று அபயமிட்டபோது, நான் அவனை இராயனிடத்திற்கு அனுப்புமளவும் காவல்பண்ணும்படி கட்டளையிட்டேன் என்றான்.
22அப்பொழுது அகிரிப்பா பெஸ்துவை நோக்கி: அந்த மனுஷன் சொல்லுகிறதை நானும் கேட்க மனதாயிருக்கிறேன் என்றான். அதற்கு அவன்: நாளைக்கு நீர் கேட்கலாம் என்றான்.
23மறுநாளிலே அகிரிப்பாவும் பெர்னீக்கேயாளும் மிகுந்த ஆடம்பரத்துடனே வந்து சேனாதிபதிகளோடும் பட்டணத்துப் பிரதான மனுஷரோடுங்கூட நியாயஸ்தலத்தில் பிரவேசித்தார்கள். உடனே பெஸ்துவினுடைய கட்டளையின்படி பவுல் கொண்டுவரப்பட்டான்.
24அப்பொழுது பெஸ்து: அகிரிப்பா ராஜாவே, எங்களோடேகூட இவ்விடத்தில் வந்திருக்கிறவர்களே, நீங்கள் காண்கிற இந்த மனுஷனைக்குறித்து யூதஜனங்களெல்லாரும் எருசலேமிலும் இவ்விடத்திலும் என்னை வருந்திக் கேட்டுக்கொண்டு, இவன் இனி உயிரோடிருக்கிறது தகாதென்று சொல்லிக் கூக்குரலிட்டார்கள்.
25இவன் மரணத்துக்குப் பாத்திரமானதொன்றையும் செய்யவில்லையென்று நான் அறிந்துகொண்டதினாலும், இவன்தானே இராயனுக்கு அபயமிட்டபடியினாலும், அவரிடத்தில் இவனை அனுப்பும்படி தீர்மானம்பண்ணினேன்.
26இவனைக்குறித்து ஆண்டவனுக்கு எழுதுகிறதற்கு நிச்சயப்பட்ட காரியமொன்றும் எனக்கு விளங்கவில்லை. காவல்பண்ணப்பட்ட ஒருவன் செய்த குற்றங்களை எடுத்துக்காட்டாமல் அனுப்புகிறது புத்தியீனமான காரியமென்று எனக்குத் தோன்றுகிறபடியினாலே,
27இவனை விசாரித்துக் கேட்டபின்பு எழுதத்தக்க விசேஷம் ஏதாகிலும் எனக்கு விளங்கும்படி, இவனை உங்களுக்கு முன்பாகவும், விசேஷமாய் அகிரிப்பா ராஜாவே, உமக்கு முன்பாகவும் கொண்டுவந்தேன் என்றான்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com