1ராகேல் தான் யாக்கோபுக்குப் பிள்ளைகளைப் பெறாததைக்கண்டு, தன் சகோதரியின்மேல் பொறாமைகொண்டு, யாக்கோபை நோக்கி: எனக்குப் பிள்ளைகொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன் என்றாள்.
2அப்பொழுது யாக்கோபு ராகேலின் மேல் கோபங்கொண்டு: தேவனல்லோ உன் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார், நான் தேவனா? என்றான்.
3அப்பொழுது அவள்: இதோ, என் வேலைக்காரியாகிய பில்காள் இருக்கிறாளே; அவள் என் மடிக்குப் பிள்ளைகளைப் பெறவும், அவளாலாகிலும் என் வீடு கட்டப்படவும் அவளிடத்தில் சேரும் என்று சொல்லி,
4அவனுக்குத் தன் வேலைக்காரியாகிய பில்காளை மனைவியாகக் கொடுத்தாள்; அப்படியே யாக்கோபு அவளைச் சேர்ந்தான்.
5பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.
6அப்பொழுது ராகேல்: தேவன் என் வழக்கைத் தீர்த்து, என் சத்தத்தையும் கேட்டு, எனக்கு ஒரு குமாரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்குத் தாண் என்று பேரிட்டாள்.
7மறுபடியும் ராகேலின் வேலைக்காரியாகிய பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு இரண்டாம் குமாரனைப் பெற்றாள்.
8அப்பொழுது ராகேல்: நான் மகா போராட்டமாய் என் சகோதரியோடே போராடி மேற்கொண்டேன் என்று சொல்லி, அவனுக்கு நப்தலி என்று பேரிட்டாள்.
9லேயாள் தான் பிள்ளைபெறுகிறது நின்றுபோனதைக் கண்டு, தன் வேலைக்காரியாகிய சில்பாளை அழைத்து, அவளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள்.
10லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.
11அப்பொழுது லேயாள்: ஏராளமாகிறதென்று சொல்லி, அவனுக்குக் காத் என்று பேரிட்டாள்.
12பின்பு லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு இரண்டாம் குமாரனைப் பெற்றாள்.
13அப்பொழுது லேயாள்: நான் பாக்கியவதி, ஸ்திரீகள் என்னைப் பாக்கியவதி என்பார்கள் என்று சொல்லி, அவனுக்கு ஆசேர் என்று பேரிட்டாள்.
14கோதுமை அறுப்பு நாட்களிலே ரூபன் வயல்வெளியிலே போய், தூதாயீம் கனிகளைக் கண்டெடுத்து, அவைகளைக் கொண்டுவந்து தன் தாயாகிய லேயாளிடத்தில் கொடுத்தான். அப்பொழுது ராகேல் லேயாளை நோக்கி: உன் குமாரனுடைய தூதாயீம் கனியில் எனக்குக் கொஞ்சம் தா என்றாள்.
15அதற்கு அவள்: நீ என் புருஷனை எடுத்துக்கொண்டது அற்பகாரியமா? என் குமாரனுடைய தூதாயீம் கனிகளையும் எடுத்துக்கொள்ளவேண்டுமோ என்றாள்; அதற்கு ராகேல்: உன் குமாரனுடைய தூதாயீம் கனிகளுக்கு ஈடாக இன்று இரவு அவர் உன்னோடே சயனிக்கட்டும் என்றாள்.
16சாயங்காலத்தில் யாக்கோபு வெளியிலிருந்து வருகையில் லேயாள் புறப்பட்டு அவனுக்கு எதிர்கொண்டுபோய்: என் குமாரனுடைய தூதாயீம் கனிகளால் உம்மைக் கொண்டேன்; ஆகையால், நீர் என்னிடத்தில் வரவேண்டும் என்றாள்; அவன் அன்று இரவு அவளோடே சயனித்தான்.
17தேவன் லேயாளுக்குச் செவிகொடுத்தார். அவள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஐந்தாம் குமாரனைப் பெற்றாள்.
18அப்பொழுது லேயாள்: நான் என் வேலைக்காரியை என் புருஷனுக்குக் கொடுத்த பலனைத் தேவன் எனக்குத் தந்தார் என்று சொல்லி, அவனுக்கு இசக்கார் என்று பேரிட்டாள்.
19அப்புறம் லேயாள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஆறாம் குமாரனைப் பெற்றாள்.
20அப்பொழுது லேயாள்: தேவன் எனக்கு நல்ல ஈவைத் தந்தார்; என் புருஷனுக்கு நான் ஆறு குமாரரைப் பெற்றபடியால், இப்பொழுது அவர் என்னுடனே வாசம்பண்ணுவார் என்று சொல்லி, அவனுக்குச் செபுலோன் என்று பேரிட்டாள்.
21பின்பு அவள் ஒரு குமாரத்தியையும் பெற்று, அவளுக்குத் தீனாள் என்று பேரிட்டாள்.
22தேவன் ராகேலை நினைத்தருளினார்; அவளுக்குத் தேவன் செவிகொடுத்து, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்.
23அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: தேவன் என் நிந்தையை நீக்கிவிட்டார் என்றும்,
24இன்னும் ஒரு குமாரனைக் கர்த்தர் எனக்குத் தருவார் என்றும் சொல்லி, அவனுக்கு யோசேப்பு என்று பேரிட்டாள்.
25ராகேல் யோசேப்பைப் பெற்றபின், யாக்கோபு லாபானை நோக்கி: நான் என் ஸ்தானத்திற்கும் என் தேசத்திற்கும் போக என்னை அனுப்பிவிடும்.
26நான் உமக்கு ஊழியஞ்செய்து சம்பாதித்த என் மனைவிகளையும் என் பிள்ளைகளையும் எனக்குத் தாரும்; நான் போவேன், நான் உம்மிடத்தில் சேவித்த சேவகத்தை நீர் அறிந்திருக்கிறீர் என்றான்.
27அப்பொழுது லாபான்: உன் கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால் நீ இரு; உன் நிமித்தம் கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார் என்று குறிப்பினால் அறிந்தேன்.
28உன் சம்பளம் இன்னதென்று எனக்குச் சொல், நான் அதைத் தருவேன் என்றான்.
29அதற்கு அவன்: நான் உம்மைச் சேவித்த விதமும், உம்முடைய மந்தை என்னிடத்தில் இருந்த விதமும் அறிந்திருக்கிறீர்.
30நான் வருமுன்னே உமக்கு இருந்தது கொஞ்சம்; நான் வந்தபின் கர்த்தர் உம்மை ஆசீர்வதித்ததினால் அது மிகவும் பெருகியிருக்கிறது; இனி நான் என் குடும்பத்துக்குச் சம்பாத்தியம்பண்ணுவது எப்பொழுது என்றான்.
31அதற்கு அவன்: நான் உனக்கு என்ன தரவேண்டும் என்றான்; யாக்கோபு: நீர் எனக்கு ஒன்றும் தரவேண்டியதில்லை; நான் சொல்லுகிறபடி நீர் எனக்குச் செய்தால், உம்முடைய மந்தையைத் திரும்ப மேய்த்துக் காப்பேன்.
32நான் இன்றைக்குப்போய், உம்முடைய மந்தைகளையெல்லாம் பார்வையிட்டு, அவைகளில் புள்ளியும் வரியும் கறுப்புமுள்ள செம்மறியாடுகளையும், வரியும் புள்ளியுமுள்ள வெள்ளாடுகளையும் பிரித்துவிடுகிறேன்; அப்படிப்பட்டவை இனி எனக்குச் சம்பளமாயிருக்கட்டும்.
33அப்படியே இனிமேல் என் சம்பளமாகிய இவற்றை நீர் பார்வையிடும்போது, என் நீதி விளங்கும்; புள்ளியும் வரியுமில்லாத வெள்ளாடுகளும், கறுப்பான செம்மறியாடுகளும் என் வசத்தில் இருந்தால், அவையெல்லாம் என்னால் திருடிக்கொள்ளப்பட்டவைகளாய் எண்ணப்படட்டும் என்றான்.
34அதற்கு லாபான்: நீ சொன்னபடியே ஆகட்டும் என்று சொல்லி,
35அந்நாளிலே கலப்பு நிறமும் வரியுமுள்ள வெள்ளாட்டுக் கடாக்களையும், புள்ளியும் வரியுமுள்ள வெள்ளாடுகள் யாவையும், சற்று வெண்மையும் கருமையுமுள்ள செம்மறியாடுகள் யாவையும் பிரித்து, தன் குமாரரிடத்தில் ஒப்புவித்து,
36தனக்கும் யாக்கோபுக்கும் இடையிலே மூன்றுநாள் பிரயாணதூரத்தில் இருக்கும்படி வைத்தான். லாபானுடைய மற்ற ஆடுகளை யாக்கோபு மேய்த்தான்.
37பின்பு யாக்கோபு பச்சையாயிருக்கிற புன்னை, வாதுமை, அர்மோன் என்னும் மரங்களின் கொப்புகளை வெட்டி, இடையிடையே வெண்மை தோன்றும்படி, பட்டையை உரித்து,
38தான் உரித்த கொப்புகளை ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும் கால்வாய்களிலும் தொட்டிகளிலும் ஆடுகளுக்கு எதிராகப் போட்டுவைப்பான்; ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும்போது பொலிவதுண்டு.
39ஆடுகள் அந்தக் கொப்புகளுக்கு முன்பாகப் பொலிந்தபடியால், அவைகள் கலப்பு நிறமுள்ளதும் புள்ளியுள்ளதும் வரியுள்ளதுமான குட்டிகளைப் போட்டது.
40அந்த ஆட்டுக்குட்டிகளை யாக்கோபு பிரித்துக்கொண்டு, ஆடுகளை லாபானுடைய மந்தையிலிருக்கும் கலப்பு நிறமானவைகளுக்கும் கறுப்பானவைகளெல்லாவற்றிற்கும் எதிராக நிறுத்தி, தன் ஆடுகளை லாபானுடைய மந்தையோடே சேர்க்காமல், தனிப்புறமாக வைத்துக்கொள்வான்.
41பலத்த ஆடுகள் பொலியும்போது, அந்தக் கொப்புகளுக்கு எதிரே பொலியும்படி யாக்கோபு அவைகளை அந்த ஆடுகளின் கண்களுக்கு முன்பாகக் கால்வாய்களிலே போட்டுவைப்பான்.
42பலவீனமான ஆடுகள் பொலியும்போது, அவைகளைப் போடாமலிருப்பான்; இதனால் பலவீனமானவைகள் லாபானையும், பலமுள்ளவைகள் யாக்கோபையும் சேர்ந்தன.
43இவ்விதமாய் அந்தப் புருஷன் மிகவும் விருத்தியடைந்து, திரளான ஆடுகளும், வேலைக்காரிகளும், வேலைக்காரரும், ஒட்டகங்களும், கழுதைகளும் உடையவனானான்.
1தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம்.
2இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்னே போய், உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும்;
3கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்றும், தீர்க்கதரிசன ஆகமங்களில் எழுதியிருக்கிற பிரகாரமாய்;
4யோவான் வனாந்தரத்தில் ஞானஸ்நானங்கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கம்பண்ணிக்கொண்டிருந்தான்.
5அப்பொழுது யூதேயா தேசத்தார் அனைவரும் எருசலேம் நகரத்தார் யாவரும், அவனிடத்திற்குப்போய், தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
6யோவான் ஒட்டகமயிர் உடையைத்தரித்து, தன் அரையில் வார்க்கச்சையைக் கட்டிக்கொண்டவனாயும், வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் புசிக்கிறவனாயும் இருந்தான்.
7அவன்: என்னிலும் வல்லவர் ஒருவர் எனக்குப்பின் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரைக் குனிந்து அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல.
8நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன்; அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்று பிரசங்கித்தான்.
9அந்த நாட்களில், இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்தூரிலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்.
10அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார்.
11அன்றியும், நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.
12உடனே ஆவியானவர் அவரை வனாந்தரத்திற்குப் போகும்படி ஏவினார்.
13அவர் வனாந்தரத்திலே நாற்பதுநாள் இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்டு, அங்கே காட்டுமிருகங்களின் நடுவிலே சஞ்சரித்துக்கொண்டிருந்தார். தேவதூதர்கள் அவருக்கு ஊழியஞ்செய்தார்கள்.
14யோவான் காவலில் வைக்கப்பட்ட பின்பு, இயேசு கலிலேயாவிலே வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து:
15காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார்.
16அவர் கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும் கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது அவர்களைக் கண்டார்.
17இயேசு அவர்களை நோக்கி: என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.
18உடனே அவர்கள் தங்கள் வலைகளைவிட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.
19அவர் அவ்விடம் விட்டுச் சற்று அப்புறம் போனபோது, செபெதேயுவின் குமாரன் யாக்கோபும் அவன் சகோதரன் யோவானும் படவிலே வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறதைக் கண்டு,
20உடனே அவர்களையும் அழைத்தார்; அப்பொழுது அவர்கள் தங்கள் தகப்பனாகிய செபெதேயுவைக் கூலியாட்களோடு படவிலே விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.
21பின்பு கப்பர்நகூமுக்குப் போனார்கள். உடனே அவர் ஓய்வுநாளிலே ஜெபஆலயத்திலே பிரவேசித்து, போதகம்பண்ணினார்.
22அவர் வேதபாரகரைப்போலப் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியினால் அவருடைய போதகத்தைக்குறித்து ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
23அவர்களுடைய ஜெபஆலயத்திலே அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் இருந்தான்.
24அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன், நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமிட்டான்.
25அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனைவிட்டுப் புறப்பட்டுப்போ என்று அதை அதட்டினார்.
26உடனே அந்த அசுத்த ஆவி அவனை அலைக்கழித்து, மிகுந்த சத்தமிட்டு, அவனைவிட்டுப் போய்விட்டது.
27எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன? இந்தப் புதிய உபதேசம் எப்படிப்பட்டது? இவர் அதிகாரத்தோடே அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று தங்களுக்குள்ளே ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
28அதுமுதல் அவருடைய கீர்த்தி கலிலேயா நாடெங்கும் பிரசித்தமாயிற்று.
29உடனே அவர்கள் ஜெபஆலயத்தை விட்டுப் புறப்பட்டு, யாக்கோபோடும் யோவானோடுங்கூட, சீமோன் அந்திரேயா என்பவர்களுடைய வீட்டில் பிரவேசித்தார்கள்.
30அங்கே சீமோனுடைய மாமி ஜூரமாய்க் கிடந்தாள்; உடனே அவர்கள் அவளைக்குறித்து அவருக்குச் சொன்னார்கள்.
31அவர் கிட்டப்போய், அவள் கையைப் பிடித்து, அவளைத் தூக்கிவிட்டார்; உடனே ஜூரம் அவளை விட்டு நீங்கிற்று; அப்பொழுது அவள் அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.
32சாயங்காலமாகிச் சூரியன் அஸ்தமித்தபோது, சகல பிணியாளிகளையும், பிசாசுபிடித்தவர்களையும், அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்.
33பட்டணத்தார் எல்லாரும் வீட்டுவாசலுக்கு முன்பாகக் கூடிவந்தார்கள்.
34பலவிதமான வியாதிகளினால் உபத்திரவப்பட்டிருந்த அநேகரை அவர் சொஸ்தமாக்கி, அநேகம் பிசாசுகளையும் துரத்திவிட்டார்; அந்தப் பிசாசுகள் தம்மை அறிந்திருந்தபடியால், அவைகள் பேசுகிறதற்கு அவர் இடங்கொடுக்கவில்லை.
35அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.
36சீமோனும் அவனோடே இருந்தவர்களும் அவரைப் பின்தொடர்ந்துபோய்,
37அவரைக் கண்டபோது: உம்மை எல்லாரும் தேடுகிறார்கள் என்று சொன்னார்கள்.
38அவர்களை அவர் நோக்கி: அடுத்த ஊர்களிலும் நான் பிரசங்கம்பண்ணவேண்டுமாதலால், அவ்விடங்களுக்குப் போவோம் வாருங்கள்; இதற்காகவே புறப்பட்டுவந்தேன் என்று சொல்லி;
39கலிலேயா நாடெங்கும் அவர்களுடைய ஜெபஆலயங்களில் அவர் பிரசங்கம்பண்ணிக்கொண்டும், பிசாசுகளைத் துரத்திக்கொண்டும் இருந்தார்.
40அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டான்.
41இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்.
42இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனைவிட்டு நீங்கிற்று, அவன் சுத்தமானான்.
43அப்பொழுது அவர் அவனை நோக்கி: நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு எச்சரிக்கையாயிரு;
44ஆயினும் நீ போய், ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், மோசே கட்டளையிட்டிருக்கிறவைகளை அவர்களுக்குச் சாட்சியாகச் செலுத்து என்று கண்டிப்பாய்ச் சொல்லி, உடனே அவனை அனுப்பிவிட்டார்.
45அவனோ புறப்பட்டுப்போய்; இந்தச் சங்கதி எங்கும் விளங்கும்படியாகப் பிரசித்தம் பண்ணத்தொடங்கினான். அதினால் அவர் வெளியரங்கமாய்ப் பட்டணத்தில் பிரவேசிக்கக்கூடாமல், வெளியே வனாந்தரமான இடங்களில் தங்கியிருந்தார்; எத்திசையிலுமிருந்து ஜனங்கள் அவரிடத்திற்கு வந்தார்கள்.
1அந்த இராத்திரியிலே ராஜாவுக்கு நித்திரை வராதபடியினால், காலவர்த்தமானங்கள் எழுதியிருக்கிற நடபடி புஸ்தகத்தைக் கொண்டுவரச்சொன்னான்; அது ராஜசமுகத்தில் வாசிக்கப்பட்டது.
2அப்பொழுது வாசற் காவலாளரில் ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானாவும் தேரேசும், ராஜாவாகிய அகாஸ்வேருவின்மேல் கைபோடப்பார்த்த செய்தியை மொர்தெகாய் அறிவித்தான் என்று எழுதியிருக்கிறது வாசிக்கப்பட்டது.
3அப்பொழுது ராஜா: இதற்காக மொர்தெகாய்க்கு கனமும் மேன்மையும் செய்யப்பட்டதா என்று கேட்டான். அதற்கு ராஜாவைச் சேவிக்கிற ஊழியக்காரர்: அவனுக்கு ஒன்றும் செய்யப்படவில்லை என்று சொன்னார்கள்.
4ஆமான் தான் செய்த தூக்குமரத்திலே மொர்தெகாயைத் தூக்கிப்போடவேண்டுமென்று, ராஜாவிடத்தில் பேசும்படி ராஜஅரமனையின் வெளிமுற்றத்திலே வந்திருந்தான். அப்பொழுது ராஜா: முற்றத்திலிருக்கிறது யார் என்று கேட்டான்.
5ராஜாவின் ஊழியக்காரர் அவனை நோக்கி: இதோ, ஆமான் முற்றத்திலே நிற்கிறான் என்றார்கள்; ராஜா: அவன் உள்ளே வரட்டும் என்றான்.
6ஆமான் உள்ளே வந்தபோது, ராஜா அவனை நோக்கி: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு என்ன செய்யப்படவேண்டும் என்று கேட்டான்; அதற்கு ஆமான், என்னையன்றி, யாரை ராஜா கனம்பண்ண விரும்புவார் என்று தன் மனதிலே நினைத்து,
7ராஜாவை நோக்கி: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால்,
8ராஜா உடுத்திக்கொள்ளுகிற ராஜவஸ்திரமும், ராஜா ஏறுகிற குதிரையும், அவர் சிரசிலே தரிக்கப்படும் ராஜமுடியும் கொண்டுவரப்படவேண்டும்.
9அந்த வஸ்திரமும் குதிரையும் ராஜாவுடைய பிரதான பிரபுக்களில் ஒருவனுடைய கையிலே கொடுக்கப்படவேண்டும்; ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனை அலங்கரித்தபின், அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும்படி செய்து, ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறப்படவேண்டும் என்றான்.
10அப்பொழுது ராஜா ஆமானை நோக்கி: சீக்கிரமாய் நீ சொன்னபடி வஸ்திரத்தையும் குதிரையையும் கொண்டுபோய், ராஜ அரமனையின் வாசலில் உட்கார்ந்திருக்கிற யூதனாகிய மொர்தெகாய்க்கு அந்தப்பிரகாரம் செய்; நீ சொன்ன எல்லாவற்றிலும் ஒன்றும் தவறாதபடி பார் என்றான்.
11அப்படியே ஆமான் வஸ்திரத்தையும் குதிரையையும் கொண்டுபோய், மொர்தெகாயை அலங்கரித்து, அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும்படி செய்து, ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறினான்.
12பின்பு மொர்தெகாய் ராஜாவின் அரமனைவாசலுக்குத் திரும்பி வந்தான்; ஆமானோவென்றால் சஞ்சலப்பட்டு முக்காடிட்டுக்கொண்டு தன் வீட்டுக்குத் தீவிரித்துப்போனான்.
13ஆமான் தனக்கு நேரிட்ட எல்லாவற்றையும் தன் மனைவியாகிய சிரேஷூக்கும் தன் சிநேகிதர் எல்லாருக்கும் அறிவித்தபோது, அவனுடைய ஆலோசனைக்காரரும் அவன் மனைவியாகிய சிரேஷூம் அவனைப் பார்த்து: மொர்தெகாய்க்கு முன்பாக நீர் தாழ்ந்துபோகத் தொடங்கினீர்; அவன் யூதகுலமானால், நீர் அவனை மேற்கொள்ளாமல் அவனுக்கு முன்பாகத் தாழ்ந்துபோவது நிச்சயம் என்றார்கள்.
14அவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, ராஜாவின் பிரதானிகள் வந்து, எஸ்தர் செய்த விருந்துக்கு வர ஆமானைத் துரிதப்படுத்தினார்கள்.
1இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனும், தேவனுடைய சுவிசேஷத்திற்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய பவுல்,
2ரோமாபுரியிலுள்ள தேவப்பிரியரும் பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களுமாகிய அனைவருக்கும் எழுதுகிறதாவது;
3நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
4இயேசுகிறிஸ்துவைக்குறித்து தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப்பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர்,
5மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்.
6அவர் சகல ஜாதிகளையும், அவர்களுக்குள் இயேசுகிறிஸ்துவினால் அழைக்கப்பட்டவர்களாகிய உங்களையும்,
7தமது நாமத்தினிமித்தம் விசுவாசத்துக்குக் கீழ்ப்படியப்பண்ணும்பொருட்டு, எங்களுக்குக் கிருபையையும் அப்போஸ்தல ஊழியத்தையும் அருளிச்செய்திருக்கிறார்.
8உங்கள் விசுவாசம் உலகமெங்கும் பிரசித்தமாகிறபடியினாலே, முதலாவது நான் உங்களெல்லாருக்காகவும் இயேசுகிறிஸ்து மூலமாய் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
9நான் ஜெபம்பண்ணும்போதெல்லாம் இடைவிடாமல் உங்களை நினைத்துக்கொண்டிருக்கிறதைக்குறித்துத் தமது குமாரனுடைய சுவிசேஷத்தினாலே என் ஆவியோடு நான் சேவிக்கிற தேவன் எனக்குச் சாட்சியாயிருக்கிறார்.
10நீங்கள் ஸ்திரப்படுவதற்காக ஆவிக்குரிய சில வரங்களை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கும்,
11உங்களிலும் என்னிலுமுள்ள விசுவாசத்தினால் உங்களோடுகூட நானும் ஆறுதலடையும்படிக்கும், உங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறபடியினாலே,
12எவ்விதத்திலாவது நான் உங்களிடத்தில் வருகிறதற்கு தேவனுடைய சித்தத்தினாலே எனக்கு நல்ல பிரயாணம் சீக்கிரத்தில் கிடைக்கவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.
13சகோதரரே, புறஜாதிகளான மற்றவர்களுக்குள்ளே நான் பலனை அடைந்ததுபோல உங்களுக்குள்ளும் சில பலனை அடையும்படிக்கு, உங்களிடத்தில் வர பலமுறை யோசனையாயிருந்தேன், ஆயினும் இதுவரைக்கும் எனக்குத் தடையுண்டாயிற்று என்று நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை.
14கிரேக்கருக்கும், மற்ற அந்நியர்களுக்கும், ஞானிகளுக்கும், மூடருக்கும் நான் கடனாளியாயிருக்கிறேன்.
15ஆகையால் ரோமாபுரியிலிருக்கிற உங்களுக்கும் என்னால் இயன்றமட்டும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க விரும்புகிறேன்.
16கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக்குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது.
17விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது.
18சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
19தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.
20எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்தியவல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க்காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.
21அவர்கள் தேவனை அறிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.
22அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி,
23அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாகமாற்றினார்கள்.
24இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக. தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.
25தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத்தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென்.
26இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள்.
27அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து, தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்.
28தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.
29அவர்கள் சகலவித அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு; பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாய்,
30புறங்கூறுகிறவர்களுமாய், அவதூறுபண்ணுகிறவர்களுமாய், தேவபகைஞருமாய், துராகிருதம் பண்ணுகிறவர்களுமாய், அகந்தையுள்ளவர்களுமாய், வீம்புக்காரருமாய், பொல்லாதவைகளை யோசித்துப் பிணைக்கிறவர்களுமாய், பெற்றாருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாய்,
31உணர்வில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவ அன்பில்லாதவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள்.
32இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com