‹ முகப்புமுழுத் திட்டம்

ஜனவரி 30 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்ஜனவரி 30அடுத்த நாள் ›
குடும்பம்

ஆதியாகமம் 31

முழு அதிகாரம் ›

1பின்பு, லாபானுடைய குமாரர்: எங்கள் தகப்பனுக்கு உண்டானவைகள் யாவையும் யாக்கோபு எடுத்துக்கொண்டான் என்றும், எங்கள் தகப்பனுடைய பொருளினாலே இந்தச் செல்வத்தையெல்லாம் அடைந்தான் என்றும் சொன்ன வார்த்தைகளை யாக்கோபு கேட்டான்.

2லாபானின் முகத்தை யாக்கோபு பார்த்தபோது, அது நேற்று முந்தைநாள் இருந்ததுபோல் இராமல் வேறுபட்டிருக்கக் கண்டான்.

3கர்த்தர் யாக்கோபை நோக்கி: உன் பிதாக்களுடைய தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் நீ திரும்பிப்போ; நான் உன்னோடேகூட இருப்பேன் என்றார்.

4அப்பொழுது யாக்கோபு, ராகேலையும் லேயாளையும் வெளியிலே தன் மந்தையிடத்தில் அழைப்பித்து,

5அவர்களை நோக்கி உங்கள் தகப்பனுடைய முகம் நேற்று முந்தைநாள் இருந்ததுபோல இருக்கவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது; ஆனாலும் என் தகப்பனுடைய தேவன் என்னோடேகூட இருக்கிறார்.

6என்னால் இயன்றமட்டும் நான் உங்கள் தகப்பனுக்கு ஊழியஞ்செய்தேன் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.

7உங்கள் தகப்பனோ, என்னை வஞ்சித்து, என் சம்பளத்தைப் பத்துமுறை மாற்றினான்; ஆனாலும் அவன் எனக்குத் தீங்குசெய்ய தேவன் அவனுக்கு இடங்கொடுக்கவில்லை.

8புள்ளியுள்ளவைகள் உன் சம்பளமாயிருக்கும் என்று அவன் சொன்னபோது, ஆடுகளெல்லாம் புள்ளியுள்ள குட்டிகளைப் போட்டது; கலப்புநிறமானவைகள் உன் சம்பளமாயிருக்கும் என்று அவன் சொன்னபோது, ஆடுகளெல்லாம் கலப்பு நிறக் குட்டிகளைப் போட்டது.

9இவ்விதமாய் தேவன் உங்கள் தகப்பனுடைய ஆடுகளை எடுத்து, எனக்குத் தந்தார்.

10ஆடுகள் பொலியும் காலத்திலே நான் கண்ட சொப்பனத்தில் என் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, ஆடுகளோடே பொலியும் கடாக்கள் கலப்புநிறமும் புள்ளியும் வரியும் உள்ளவைகளாயிருக்கக் கண்டேன்.

11அன்றியும் தேவதூதன் ஒருவர் சொப்பனத்தில்: யாக்கோபே என்றார்; இதோ, இருக்கிறேன் என்றேன்.

12அப்பொழுது அவர்: உன் கண்களை ஏறெடுத்துப்பார்; ஆடுகளோடே பொலியும் கடாக்களெல்லாம் கலப்புநிறமும் புள்ளியும் வரியுமுள்ளவைகளாய் இருக்கிறது; லாபான் உனக்குச் செய்கிற யாவையும் கண்டேன்.

13நீ தூணுக்கு அபிஷேகஞ்செய்து, எனக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணின பெத்தேலிலே உனக்குத் தரிசனமான தேவன் நானே; இப்பொழுது நீ எழுந்து, இந்தத் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, உன் இனத்தாரிருக்கிற தேசத்திற்குத் திரும்பிப்போ என்று சொன்னார் என்றான்.

14அதற்கு ராகேலும் லேயாளும்: எங்கள் தகப்பன் வீட்டிலே இனி எங்களுக்குப் பங்கும் சுதந்தரமும் உண்டோ?

15அவரால் நாங்கள் அந்நியராய் எண்ணப்படவில்லையா? அவர் எங்களை விற்று, எங்கள் பணத்தையும் வாயிலே போட்டுக்கொண்டார்.

16ஆகையால் தேவன் எங்கள் தகப்பனிடத்திலிருந்து எடுத்த ஐசுவரியம் எல்லாம் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் உரியது; இப்படியிருக்க, தேவன் உமக்குச் சொன்னபடியெல்லாம் செய்யும் என்றார்கள்.

17அப்பொழுது யாக்கோபு எழுந்து, தன் பிள்ளைகளையும் தன் மனைவிகளையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றி,

18தான் பதான் அராமிலே சம்பாதித்த மிருகஜீவன்களாகிய மந்தைகள் அனைத்தையும் தன் பொருள்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, கானான் தேசத்தில் இருக்கிற தன் தகப்பனாகிய ஈசாக்கினிடத்துக்குப் போகப் புறப்பட்டான்.

19லாபான், தன் ஆடுகளை மயிர்கத்தரிக்கப் போயிருந்தான்; அந்தச் சமயத்திலே ராகேல் தன் தகப்பனுடைய சுரூபங்களைத் திருடிக்கொண்டாள்.

20யாக்கோபு தான் ஓடிப்போகிறதைச் சீரியனாகிய லாபானுக்கு அறிவியாமல், திருட்டளவாய்ப் போய்விட்டான்.

21இப்படியே அவன் தனக்கு உண்டானவைகளையெல்லாம் எடுத்துக்கொண்டு, ஆற்றைக் கடந்து, கீலேயாத் மலையை நோக்கி ஓடிப்போனான்.

22யாக்கோபு ஓடிப்போனது மூன்றாம் நாளிலே லாபானுக்கு அறிவிக்கப்பட்டது.

23அப்பொழுது அவன், தன் சகோதரரைக் கூட்டிக்கொண்டு, ஏழுநாள் பிரயாணபரியந்தம் அவனைத் தொடர்ந்து போய், கீலேயாத் மலையிலே அவனைக் கண்டுபிடித்தான்.

24அன்று ராத்திரி தேவன் சீரியா தேசத்தானாகிய லாபானுக்குச் சொப்பனத்தில் தோன்றி: நீ யாக்கோபோடே நன்மையே அன்றித் தீமை ஒன்றும் பேசாதபடிக்கு எச்சரிக்கையாயிரு என்றார்.

25லாபான் யாக்கோபினிடத்தில் வந்தான்; யாக்கோபு மலையிலே தன் கூடாரத்தைப் போட்டிருந்தான்; லாபானும் தன் சகோதரரோடேகூடக் கீலேயாத் மலையிலே கூடாரம் போட்டான்.

26அப்பொழுது லாபான் யாக்கோபை நோக்கி: நீ திருட்டளவாய்ப் புறப்பட்டு, என் குமாரத்திகளை யுத்தத்தில் பிடித்த சிறைகளைப்போலக் கொண்டுவந்தது என்ன செய்கை?

27நீ ஓடிப்போவதை மறைத்து, எனக்கு அறிவியாமல், திருட்டளவாய் என்னிடத்திலிருந்து வந்துவிட்டது என்ன? நான் உன்னைச் சந்தோஷமாய், சங்கீதம் மேளதாளம் கின்னரமுழக்கத்துடனே அனுப்புவேனே.

28என் பிள்ளைகளையும் என் குமாரத்திகளையும் நான் முத்தஞ்செய்ய விடாமல் போனதென்ன? இந்தச் செய்கையை நீ மதியில்லாமல் செய்தாய்.

29உங்களுக்குப் பொல்லாப்புச்செய்ய எனக்கு வல்லமை உண்டு; ஆகிலும், உங்கள் தகப்பனுடைய தேவன்: நீ யாக்கோபோடே நன்மையே அன்றித் தீமை ஒன்றும் பேசாதபடிக்கு எச்சரிக்கையாயிரு என்று நேற்று இராத்திரி என்னோடே சொன்னார்.

30இப்பொழுதும் உன் தகப்பனுடைய வீட்டின்மேலுள்ள வாஞ்சையினால் நீ புறப்பட்டுப்போகிறதானால் போகலாம், என் தெய்வங்களை ஏன் திருடிக்கொண்டு போகிறாய் என்று கேட்டான்.

31யாக்கோபு லாபானுக்குப் பிரதியுத்தரமாக: உம்முடைய குமாரத்திகளைப் பலாத்காரமாய்ப் பிடித்து வைத்துக்கொள்வீர் என்று நான் அஞ்சினதினாலே இப்படி வந்துவிட்டேன்.

32ஆனாலும் யாரிடத்தில் உம்முடைய தெய்வங்களைக் கண்டுபிடிக்கிறீரோ, அவனை உயிரோடே விடவேண்டாம்; உம்முடைய பொருள்கள் ஏதாவது என் வசத்தில் உண்டானால் நீர் அதை நம்முடைய சகோதரருக்கு முன்பாகப் பரிசோதித்தறிந்து, அதை எடுத்துக்கொள்ளும் என்றான். ராகேல் அவைகளைத் திருடிக்கொண்டு வந்ததை யாக்கோபு அறியாதிருந்தான்.

33அப்பொழுது லாபான் யாக்கோபின் கூடாரத்திலும், லேயாளின் கூடாரத்திலும், இரண்டு வேலைக்காரிகளின் கூடாரத்திலும் பிரவேசித்துப் பார்த்தும் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை; பின்பு, லேயாளின் கூடாரத்தைவிட்டு ராகேலின் கூடாரத்துக்குப் போனான்.

34ராகேல் அந்தச் சுரூபங்களை எடுத்து, ஒட்டகச் சேணத்தின்கீழ் வைத்து, அதின்மேல் உட்கார்ந்திருந்தாள். லாபான் கூடாரம் எங்கும் தடவிப்பார்த்தும், அவைகளைக் கண்டுபிடிக்கவில்லை.

35அவள் தன் தகப்பனை நோக்கி: என் ஆண்டவனாகிய உமக்கு முன்பாக நான் எழுந்திராததைக்குறித்துக் கோபங்கொள்ளவேண்டாம்; ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு எனக்கு உண்டாயிருக்கிறது என்றாள்; அப்படியே அவன் அந்தச் சுரூபங்களைத் தேடியும் கண்டுபிடிக்கவில்லை.

36அப்பொழுது யாக்கோபுக்குக் கோபம் எழும்பி, லாபானோடே வாக்குவாதம்பண்ணி: நீர் என்னை இவ்வளவு உக்கிரமாய்த் தொடர்ந்துவரும்படிக்கு நான் செய்த தப்பிதம் என்ன? நான் செய்த துரோகம் என்ன?

37என் தட்டுமுட்டுகளையெல்லாம் தடவிப்பார்த்தீரே; உம்முடைய வீட்டுத் தட்டுமுட்டுகளில் என்னத்தைக் கண்டுபிடித்தீர்? அதை என்னுடைய சகோதரருக்கும் உம்முடைய சகோதரருக்கும் முன்பாக இங்கே வையும்; அவர்கள் எனக்கும் உமக்கும் நடுத்தீர்க்கட்டும்.

38இந்த இருபது வருஷகாலமாய் நான் உம்மிடத்தில் இருந்தேன்; உம்முடைய செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் சினையழியவில்லை; உம்முடைய மந்தையின் கடாக்களை நான் தின்னவில்லை.

39பீறுண்டதை நான் உம்மிடத்துக்குக் கொண்டுவராமல், அதற்காக நான் உத்தரவாதம்பண்ணினேன்; பகலில் களவுபோனதையும், இரவில் களவுபோனதையும் என் கையில் கேட்டு வாங்கினீர்.

40பகலிலே வெயிலும் இரவிலே குளிரும் என்னைப் பட்சித்தது; நித்திரை என் கண்களுக்குத் தூரமாயிருந்தது; இவ்விதமாய்ப் பாடுபட்டேன்.

41இந்த இருபது வருஷகாலம் உம்முடைய வீட்டிலே இருந்தேன்; பதினாலு வருஷம் உம்முடைய இரண்டு குமாரத்திகளுக்காகவும், ஆறு வருஷம் உம்முடைய மந்தைக்காகவும் உம்மிடத்தில் சேவித்தேன்; பத்துமுறை என் சம்பளத்தை மாற்றினீர்.

42என் பிதாவின் தேவனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் பயபக்திக்குரியவரும் என்னோடிராமற்போனால், நீர் இப்பொழுது என்னை வெறுமையாய் அனுப்பிவிட்டிருப்பீர்; தேவன் என் சிறுமையையும் என் கைப்பிரயாசத்தையும் பார்த்து, நேற்று இராத்திரி உம்மைக் கடிந்துகொண்டார் என்று சொன்னான்.

43அப்பொழுது லாபான் யாக்கோபுக்குப் பிரதியுத்தரமாக: இந்தக் குமாரத்திகள் என் குமாரத்திகள், இந்தப் பிள்ளைகள் என் பிள்ளைகள், இந்த மந்தை என் மந்தை; நீ காண்கிற யாவும் என்னுடையவைகள்; என் குமாரத்திகளாகிய இவர்களையும், இவர்கள் பெற்ற பிள்ளைகளையும் இன்று நான் என்ன செய்யக்கூடும்?

44இப்பொழுதும் எனக்கும் உனக்கும் சாட்சியாயிருக்கும்பொருட்டு, நீயும் நானும் உடன்படிக்கைபண்ணிக்கொள்ளக்கடவோம் என்றான்.

45அப்பொழுது யாக்கோபு ஒரு கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தினான்.

46பின்னும் யாக்கோபு தன் சகோதரரைப் பார்த்து, கற்களைக் குவியலாகச் சேருங்கள் என்றான்; அவர்கள் கற்களை எடுத்துக்கொண்டுவந்து, ஒரு குவியலாக்கி, அந்தக் குவியலின்மேல் போஜனம் பண்ணினார்கள்.

47லாபான் அதற்கு ஜெகர்சகதூதா என்று பேரிட்டான்; யாக்கோபு அதற்குக் கலயெத் என்று பேரிட்டான்.

48இந்தக் குவியல் இன்று எனக்கும் உனக்கும் சாட்சி என்று லாபான் சொன்னபடியினாலே, அதின் பேர் கலயெத் என்னப்பட்டது.

49அல்லாமலும் அவன்: நாம் ஒருவரை ஒருவர் விட்டு மறைந்தபின், நீ என் குமாரத்திகளைத் துயரப்படுத்தி, அவர்களையல்லாமல் வேறே ஸ்திரீகளை விவாகம்பண்ணினாயானால், கர்த்தர் எனக்கும் உனக்கும் நடுநின்று கண்காணிக்கக்கடவர்;

50நம்முடனே ஒருவரும் இல்லை; பார், தேவனே எனக்கும் உனக்கும் சாட்சி என்று சொன்னபடியால், அது மிஸ்பா என்னும் பேர்பெற்றது.

51பின்னும் லாபான் யாக்கோபை நோக்கி: இதோ, இந்தக் குவியலையும் எனக்கும் உனக்கும் நடுவாக நான் நிறுத்தின தூணையும் பார்.

52தீங்குசெய்ய நான் இந்தக் குவியலைக் கடந்து உன்னிடத்துக்கு வராதபடிக்கும், நீ இந்தக் குவியலையும் இந்தத் தூணையும் கடந்து என்னிடத்துக்கு வராதபடிக்கும் இந்தக் குவியலும் சாட்சி, இந்தத் தூணும் சாட்சி.

53ஆபிரகாமின் தேவனும் நாகோரின் தேவனும் அவர்கள் பிதாக்களின் தேவனுமாயிருக்கிறவர் நமக்குள்ளே நடுநின்று நியாயந்தீர்ப்பாராக என்றான். அப்பொழுது யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கின் பயபக்திக்குரியவர்மேல் ஆணையிட்டான்.

54பின்பு, யாக்கோபு மலையின்மேல் பலியிட்டு, போஜனம்பண்ணும்படி தன் சகோதரரை அழைத்தான்; அப்படியே அவர்கள் போஜனம்பண்ணி மலையிலே இராத்தங்கினார்கள்.

55லாபான் அதிகாலமே எழுந்திருந்து, தன் குமாரரையும் தன் குமாரத்திகளையும் முத்தஞ்செய்து, அவர்களை ஆசீர்வதித்தான். பின்பு லாபான் புறப்பட்டு, தன் இடத்துக்குத் திரும்பிப்போனான்.

1சிலநாட்களுக்குப்பின்பு அவர் மறுபடியும் கப்பர்நகூமுக்குப் போனார்; அவர் வீட்டிலிருக்கிறாரென்று ஜனங்கள் கேள்விப்பட்டு;

2உடனே வாசலுக்கு முன்னும் நிற்க இடம்போதாதபடிக்கு அநேகர் கூடிவந்தார்கள்; அவர்களுக்கு வசனத்தைப் போதித்தார்.

3அப்பொழுது நாலுபேர் ஒரு திமிர்வாதக்காரனைச் சுமந்துகொண்டு அவரிடத்தில் வந்தார்கள்;

4ஜனக்கூட்டத்தினிமித்தம் அவருக்குச் சமீபமாய்ச் சேரக்கூடாமல், அவர் இருந்த வீட்டின் மேற்கூரையைப் பிரித்துத் திறப்பாக்கி, திமிர்வாதக்காரன் கிடக்கிற படுக்கையை இறக்கினார்கள்.

5இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.

6அங்கே உட்கார்ந்திருந்த வேதபாரகரில் சிலர்:

7இவன் இப்படித் தேவதூஷணம் சொல்லுகிறதென்ன? தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்று தங்கள் இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள்.

8அவர்கள் தங்களுக்குள்ளே இப்படிச் சிந்திக்கிறார்களென்று இயேசு உடனே தம்முடைய ஆவியில் அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் இருதயங்களில் இப்படிச் சிந்திக்கிறதென்ன?

9உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டதென்று சொல்வதோ, எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று சொல்வதோ, எது எளிது?

10பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி:

11நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

12உடனே, அவன் எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாருக்கும் முன்பாகப் போனான். அப்பொழுது எல்லாரும் ஆச்சரியப்பட்டு: நாம் ஒருக்காலும் இப்படிக் கண்டதில்லையென்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

13அவர் மறுபடியும் புறப்பட்டுக் கடலருகே போனார்; அப்பொழுது ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள்; அவர்களுக்குப் போதகம்பண்ணினார்.

14அவர் நடந்துபோகையில், அல்பேயுவின் குமாரனாகிய லேவி ஆயத்துறையில் உட்கார்ந்திருக்கிறதைக் கண்டு: எனக்குப் பின்சென்றுவா என்றார்; அவன் எழுந்து அவருக்குப் பின்சென்றான்.

15அப்பொழுது, அவனுடைய வீட்டிலே அவர் போஜனபந்தியிருக்கையில், அநேக ஆயக்காரரும் பாவிகளும் அவரோடுகூட வந்திருந்தபடியால், அவர்களும் இயேசுவோடும் அவர் சீஷரோடுங்கூடப் பந்தியிருந்தார்கள்.

16அவர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம்பண்ணுகிறதை வேதபாரகரும் பரிசேயரும் கண்டு, அவருடைய சீஷரை நோக்கி: அவர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம் பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்.

17இயேசு அதைக் கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.

18யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசம்பண்ணிவந்தார்கள். அவர்கள் அவரிடத்தில் வந்து: யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசிக்கிறார்களே, உம்முடைய சீஷர் உபவாசியாமலிருக்கிறதென்னவென்று கேட்டார்கள்.

19அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் உபவாசிப்பார்களா? மணவாளன் தங்களுடனே இருக்கும்வரைக்கும் உபவாசிக்கமாட்டார்களே.

20மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள்.

21ஒருவனும் கோடித்துண்டைப் பழையவஸ்திரத்தோடு இணைக்கமாட்டான், இணைத்தால், அதினோடே இணைத்த புதியதுண்டு பழையதை அதிகமாய்க் கிழிக்கும், பீறலும் அதிகமாகும்.

22ஒருவனும் புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கமாட்டான்; வார்த்துவைத்தால், புதுரசம் துருத்திகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போகும், துருத்திகளும் கெட்டுப்போகும்; புதுரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைக்கவேண்டும் என்றார்.

23பின்பு, அவர் ஓய்வுநாளில் பயிர்வழியே போனார்; அவருடைய சீஷர்கள் கூட நடந்துபோகையில், கதிர்களைக் கொய்யத் தொடங்கினார்கள்.

24பரிசேயர் அவரை நோக்கி: இதோ, ஓய்வுநாளில் செய்யத்தகாததை இவர்கள் ஏன் செய்கிறார்கள் என்றார்கள்.

25அதற்கு அவர்: தாவீதுக்கு உண்டான ஆபத்தில், தானும் தன்னோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது,

26அவன் அபியத்தார் என்னும் பிரதான ஆசாரியன் காலத்தில் செய்ததை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா? அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர்தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தெய்வசமுகத்து அப்பங்களைத் தானும் புசித்துத் தன்னோடிருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்றார்.

27பின்பு அவர்களை நோக்கி: மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது;

28ஆகையால் மனுஷகுமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.

தனிவாசிப்பு

1ராஜாத்தியாகிய எஸ்தருடனே விருந்துண்ண, ராஜாவும் ஆமானும் வந்தபோது,

2இரண்டாம் நாள் விருந்தில் திராட்சரசம் பரிமாறப்படும்போது, ராஜா எஸ்தரை நோக்கி: எஸ்தர் ராஜாத்தியே, உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும்; நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும் கிடைக்கும் என்றான்.

3அப்பொழுது ராஜாத்தியாகிய எஸ்தர் பிரதியுத்தரமாக: ராஜாவே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்து, ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால் என் வேண்டுதலுக்கு என் ஜீவனும், என் மன்றாட்டுக்கு என் ஜனங்களும் எனக்குக் கட்டளையிடப்படுவதாக.

4எங்களை அழித்துக்கொன்று நிர்மூலமாக்கும்படி நானும் என் ஜனங்களும் விற்கப்பட்டோம்; அடிமைகளாகவும் வெள்ளாட்டிகளாகவும் விற்கப்பட்டுப் போனாலும் நான் மவுனமாயிருப்பேன்; இப்பொழுதோ ராஜாவுக்கு உண்டாகும் நஷ்டத்துக்கு அந்தச் சத்துரு உத்தரவாதம்பண்ண முடியாது என்றாள்.

5அப்பொழுது ராஜாவாகிய அகாஸ்வேரு மறுமொழியாக, ராஜாத்தியாகிய எஸ்தரை நோக்கி: இப்படிச் செய்யத் துணிகரங்கொண்டவன் யார்? அவன் எங்கே? என்றான்.

6அதற்கு எஸ்தர்: சத்துருவும் பகைஞனுமாகிய அந்த மனிதன் இந்தத் துஷ்ட ஆமான்தான் என்றாள்; அப்பொழுது ராஜாவுக்கும் ராஜாத்திக்கும் முன்பாக ஆமான் திகிலடைந்தான்.

7ராஜா உக்கிரத்தோடே திராட்சரசப்பந்தியை விட்டெழுந்து, அரமனைத் தோட்டத்திற்குப் போனான்; ராஜாவினால் தனக்குப் பொல்லாப்பு நிர்ணயிக்கப்பட்டதென்று ஆமான் கண்டு, ராஜாத்தியாகிய எஸ்தரிடத்தில் தன் பிராணனுக்காக விண்ணப்பம்பண்ண எழுந்து நின்றான்.

8ராஜா அரமனைத் தோட்டத்திலிருந்து திராட்சரசம் பரிமாறப்பட்ட இடத்துக்குத் திரும்பி வருகையில், எஸ்தர் உட்கார்ந்திருக்கிற மெத்தையின்மேல் ஆமான் விழுந்து கிடந்தான்; அப்பொழுது ராஜா: நான் அரமனையிலிருக்கும்போதே என் கண்முன்னே இவன் ராஜாத்தியைப் பலவந்தம் செய்யவேண்டுமென்றிருக்கிறானோ என்றான்; இந்த வார்த்தை ராஜாவின் வாயிலிருந்து பிறந்தவுடனே ஆமானின் முகத்தை மூடிப்போட்டார்கள்.

9அப்பொழுது ராஜசமுகத்தில் இருக்கிற பிரதானிகளில் அற்போனா என்னும் ஒருவன்: இதோ, ராஜாவின் நன்மைக்காகப் பேசின மொர்தெகாய்க்கு ஆமான் செய்வித்த ஐம்பது முழ உயரமான தூக்குமரம் ஆமானின் வீட்டண்டை நாட்டப்பட்டிருக்கிறது என்றான்; அப்பொழுது ராஜா: அதிலே அவனைத் தூக்கிப்போடுங்கள் என்றான்.

10அப்படியே ஆமான் மொர்தேகாய்க்கு ஆயத்தம்பண்ணின தூக்குமரத்தில் ஆமானையே தூக்கிப்போட்டார்கள்; அப்பொழுது ராஜாவின் உக்கிரம் தணிந்தது.

1ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத்தீர்க்கிறாய்.

2இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

3இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களைக் குற்றவாளிகளென்று தீர்த்தும், அவைகளையே செய்கிறவனே, நீ தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்பிக்கொள்ளலாமென்று நினைக்கிறாயோ?

4அல்லது தேவதயவு நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடிய சாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ?

5உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினைநாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே.

6தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்.

7சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்.

8சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும்.

9முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும்.

10முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும்.

11தேவனிடத்தில் பட்சபாதமில்லை.

12எவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் கெட்டுப்போவார்கள்; எவர்கள் நியாயப்பிரமாணத்துக்குட்பட்டவர்களாய்ப் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே ஆக்கினைத்தீர்ப்படைவார்கள்.

13நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள்.

14அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள்.

15அவர்களுடைய மனச்சாட்சியும்கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.

16என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.

17நீ யூதனென்று பெயர்பெற்று நியாயப்பிரமாணத்தின்மேல் பற்றுதலாயிருந்து, தேவனைக்குறித்து மேன்மை பாராட்டி,

18நியாயப்பிரமாணத்தினால் உபதேசிக்கப்பட்டவனாய், அவருடைய சித்தத்தை அறிந்து, நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கிறாயே.

19நீ உன்னைக் குருடருக்கு வழிகாட்டியாகவும், அந்தகாரத்திலுள்ளவர்களுக்கு வெளிச்சமாகவும்,

20பேதைகளுக்குப் போதகனாகவும், குழந்தைகளுக்கு உபாத்தியாயனாகவும், நியாயப்பிரமாணத்தின் அறிவையும் சத்தியத்தையும் காட்டிய சட்டமுடையவனாகவும் எண்ணுகிறாயே.

21இப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா? களவு செய்யக்கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவுசெய்யலாமா?

22விபசாரம் செய்யக்கூடாதென்று சொல்லுகிற நீ விபசாரம் செய்யலாமா? விக்கிரகங்களை அருவருக்கிற நீ கோவில்களைக் கொள்ளையிடலாமா?

23நியாயப்பிரமாணத்தைக்குறித்து மேன்மைபாராட்டுகிற நீ நியாயப்பிரமாணத்தை மீறிநடந்து, தேவனைக் கனவீனம்பண்ணலாமா?

24எழுதியிருக்கிறபடி, தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே உங்கள் மூலமாய்த் தூஷிக்கப்படுகிறதே.

25நீ நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு நடந்தால் விருத்தசேதனம் பிரயோஜனமுள்ளதுதான்; நீ நியாயப்பிரமாணத்தை மீறி நடந்தால் உன் விருத்தசேதனம் விருத்தசேதனமில்லாமையாயிற்றே.

26மேலும் விருத்தசேதனமில்லாதவன் நியாயப்பிரமாணத்துக்கேற்ற நீதிகளைக் கைக்கொண்டால், அவனுடைய விருத்தசேதனமில்லாமை விருத்தசேதனம் என்றெண்ணப்படுமல்லவா?

27சுபாவத்தின்படி விருத்தசேதனமில்லாதவனாயிருந்தும் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறவனாயிருந்தால், அவன் வேத எழுத்தும் விருத்தசேதனமும் உள்ளவனாயிருந்தும், நியாயப்பிரமாணத்தை மீறுகிற உன்னைக் குற்றப்படுத்துவானல்லவா?

28ஆதலால் புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல.

29உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்; இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com