‹ முகப்புமுழுத் திட்டம்

ஜனவரி 4 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்ஜனவரி 4அடுத்த நாள் ›
குடும்பம்

ஆதியாகமம் 4

முழு அதிகாரம் ›

1ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள்.

2பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள்; ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான்.

3சிலநாள் சென்றபின்பு, காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான்.

4ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளின் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார்.

5காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவன் முகநாடி வேறுபட்டது.

6அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது?

7நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார்.

8காயீன் தன் சகோதரனாகிய ஆபேலோடே பேசினான்; அவர்கள் வயல்வெளியில் இருக்கும் சமயத்தில், காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி, அவனைக் கொலைசெய்தான்.

9கர்த்தர் காயீனை நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார்; அதற்கு அவன்: நான் அறியேன்; என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றான்.

10அதற்கு அவர்: என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது.

11இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலே வாங்கிக் கொள்ள தன் வாயைத் திறந்த இந்தப் பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய்.

12நீ நிலத்தைப் பயிரிடும்போது, அது தன் பலனை இனி உனக்குக் கொடாது; நீ பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பாய் என்றார்.

13அப்பொழுது காயீன் கர்த்தரை நோக்கி: எனக்கு இட்ட தண்டனை என்னால் சகிக்கமுடியாது.

14இன்று என்னை இந்தத் தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர்; நான் உமது சமுகத்துக்கு விலகி மறைந்து, பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பேன்; என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே என்றான்.

15அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: காயீனைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும் என்று சொல்லி; காயீனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக் கொன்றுபோடாதபடிக்குக் கர்த்தர் அவன்மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார்.

16அப்படியே காயீன் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, ஏதேனுக்குக் கிழக்கான நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான்.

17காயீன் தன் மனைவியை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றாள்; அப்பொழுது அவன் ஒரு பட்டணத்தைக் கட்டி, அந்தப் பட்டணத்துக்குத் தன் குமாரனாகிய ஏனோக்குடைய பேரை இட்டான்.

18ஏனோக்குக்கு ஈராத் பிறந்தான்; ஈராத் மெகுயவேலைப் பெற்றான்; மெகுயவேல் மெத்தூசவேலைப் பெற்றான்; மெத்தூசவேல் லாமேக்கைப் பெற்றான்.

19லாமேக்கு இரண்டு ஸ்திரீகளை விவாகம்பண்ணினான்; ஒருத்திக்கு ஆதாள் என்று பேர், மற்றொருத்திக்குச் சில்லாள் என்று பேர்.

20ஆதாள் யாபாலைப் பெற்றாள்; அவன் கூடாரங்களில் வாசம்பண்ணுகிறவர்களுக்கும், மந்தை மேய்க்கிறவர்களுக்கும் தகப்பனானான்.

21அவன் சகோதரனுடைய பேர் யூபால்; அவன் கின்னரக்காரர், நாகசுரக்காரர் யாவருக்கும் தகப்பனானான்.

22சில்லாளும் தூபால் காயீனைப் பெற்றாள்; அவன் பித்தளை, இரும்பு முதலியவற்றின் தொழிலாளர் யாவருக்கும் ஆசாரியனானான்; தூபால் காயீனுடைய சகோதரி நாமாள்.

23லாமேக்கு தன் மனைவிகளைப் பார்த்து: ஆதாளே, சில்லாளே, நான் சொல்வதைக் கேளுங்கள்; லாமேக்கின் மனைவிகளே, என் சத்தத்துக்குச் செவி கொடுங்கள்; எனக்குக் காயமுண்டாக ஒரு மனுஷனைக் கொன்றேன்; எனக்குத் தழும்புண்டாக ஒரு வாலிபனைக் கொலைசெய்தேன்;

24காயீனுக்காக ஏழு பழி சுமருமானால், லாமேக்குக்காக எழுபத்தேழு பழி சுமரும் என்றான்.

25பின்னும் ஆதாம் தன் மனைவியை அறிந்தான்; அவள் ஒரு குமாரனைப் பெற்று: காயீன் கொலை செய்த ஆபேலுக்குப் பதிலாக, தேவன் எனக்கு வேறொரு புத்திரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்குச் சேத் என்று பேரிட்டாள்.

26சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான்; அவனுக்கு ஏனோஸ் என்று பேரிட்டான்; அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள்.

1அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.

2அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று.

3அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்.

4அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.

5அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிக்கையின்மேல் அவரை நிறுத்தி:

6நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான்.

7அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்.

8மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:

9நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்;

10அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

11அப்பொழுது பிசாசானவன் அவரைவிட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடைசெய்தார்கள்.

12யோவான் காவலில் வைக்கப்பட்டான் என்று இயேசு கேள்விப்பட்டு, கலிலேயாவுக்குப் போய்,

13நாசரேத்தை விட்டு, செபுலோன் நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகான கப்பர்நகூமிலே வந்து வாசம்பண்ணினார்.

14கடற்கரையருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலுமுள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடும் ஆகிய புறஜாதியாருடைய கலிலேயாவிலே,

15இருளில் இருக்கும் ஜனங்கள் பெரியவெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று,

16ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

17அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.

18இயேசு கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த இரண்டு சகோதரராகிய பேதுரு என்னப்பட்ட சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலைபோட்டுகொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு:

19என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.

20உடனே அவர்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.

21அவர் அவ்விடம் விட்டுப் போகையில், வேறே இரண்டு சகோதரராகிய செபெதேயுவின் மகன் யாக்கோபும், அவன் சகோதரன் யோவானும் தங்கள் தகப்பன் செபெதேயுவுடனே படவிலிருந்து, தங்கள் வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக்கண்டு, அவர்களையும் அழைத்தார்.

22உடனே அவர்கள் படவையும் தங்கள் தகப்பனையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.

23பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்.

24அவருடைய கீர்த்தி சீரியா எங்கும் பிரசித்தமாயிற்று. அப்பொழுது பலவித வியாதிகளையும் வேதனைகளையும் அடைந்திருந்த சகல பிணியாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும் சந்திரரோகிகளையும், திமிர்வாதக்காரரையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர்களைச் சொஸ்தமாக்கினார்.

25கலிலேயாவிலும், தெக்கப்போலியிலும், எருசலேமிலும், யூதேயாவிலும், யோர்தானுக்கு அப்புறத்திலும் இருந்து திரளான ஜனங்கள் வந்து, அவருக்குப் பின்சென்றார்கள்.

தனிவாசிப்பு

1சிறையிருப்பிலிருந்து வந்த ஜனங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டுகிறார்கள் என்று யூதாவுக்கும் பென்யமீனுக்கும் இருந்த சத்துருக்கள் கேள்விப்பட்டபோது,

2அவர்கள் செருபாபேலிடத்துக்கும் தலைவரான பிதாக்களிடத்துக்கும் வந்து: உங்களோடேகூட நாங்களும் கட்டுவோம்; உங்களைப்போல நாங்களும் உங்கள் தேவனை நாடுவோம்; இவ்விடத்துக்கு எங்களை வரப்பண்ணின அசீரியாவின் ராஜாவாகிய எசரத்தோன் நாட்கள் முதற்கொண்டு அவருக்கு நாங்களும் பலியிட்டுவருகிறோம் என்று அவர்களோடே சொன்னார்கள்.

3அதற்குச் செருபாபேலும், யெசுவாவும், இஸ்ரவேலில் மற்றுமுள்ள தலைவரான பிதாக்களும் அவர்களை நோக்கி: எங்கள் தேவனுக்கு ஆலயத்தைக்கட்டுகிறதற்கு உங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை; பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் ராஜா எங்களுக்குக் கட்டளையிட்டபடி. நாங்களே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு அதைக் கட்டுவோம் என்றார்கள்.

4அதினால் அந்த தேசத்து ஜனங்கள் யூதா ஜனத்தின் கைகளைத் தளரப்பண்ணி, கட்டாதபடிக்கு அவர்களைச் சங்கடப்படுத்தி,

5பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் காலமுழுதும், தரியு என்னும் பெர்சியா ராஜா அரசாண்ட காலமட்டும், அவர்கள் யோசனையை அவத்தமாக்கும்படி அவர்களுக்கு விரோதமாய் ஆலோசனைக்காரருக்கு கைக்கூலி கட்டினார்கள்.

6அகாஸ்வேரு அரசாளுகிறபோது, அவனுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே, யூதாவிலும் எருசலேமிலும் குடியிருக்கிறவர்களுக்கு விரோதமாகப் பிரியாது எழுதினார்கள்.

7அர்தசஷ்டாவின் நாட்களிலும், பிஸ்லாமும், மித்திரேதாத்தும், தாபெயேலும், மற்றுமுள்ள அவர்கள் வகையராவும், பெர்சியா ராஜாவான அர்தசஷ்டாவுக்கு ஒரு மனு எழுதினார்கள்; அந்த மனு சீரிய எழுத்திலும் சீரியபாஷையிலும் எழுதியிருந்தது.

8ஆலோசனைத் தலைவனாகிய ரெகூமும் கணக்கனாகிய சிம்சாவும் எருசலேமுக்கு விரோதமாக அர்தசஷ்டா என்னும் ராஜாவுக்கு எழுதின மனுவிலே கையொப்பம் போட்டவர்கள் யாரென்றால்:

9ஆலோசனைத் தலைவனாகிய ரெகூமும், கணக்கனாகிய சிம்சாயும், மற்றுமுள்ள அவர்கள் வகையராவாகிய தீனாவியர், அபற்சாத்தியர், தர்பேலியர், அப்பார்சியர், அற்கேவியர், பாபிலோனியர், சூஷங்கியர், தெகாவியர், ஏலாமியரானவர்களும்,

10பெரியவரும் பேர்பெற்றவருமான அஸ்னாப்பார் அவ்விடங்களிலிருந்து அழைத்துக்கொண்டுவந்து சமாரியாவின்பட்டணத்திலே குடியேறப்பண்ணின மற்ற ஜனங்களும், நதிக்கு இப்பாலே இருக்கிற மற்ற ஜனங்களுமே.

11அவர்கள் அர்தசஷ்டா என்னும் ராஜாவுக்கு அனுப்பின மனுவின் நகலாவது: நதிக்கு இப்புறத்தில் இருக்கிற உமது அடியார் முதலானவர்கள் அறிவிக்கிறது என்னவென்றால்,

12உம்மிடத்திலிருந்து எங்களிடத்திற்கு வந்த யூதர் எருசலேமிலே கூடி, கலகமும் பொல்லாப்புமான அந்தப் பட்டணத்திற்கு அஸ்திபாரங்களை இணைத்து, அதின் மதில்களை எழுப்பிக்கட்டுகிறார்கள் என்பது ராஜாவுக்கு அறியலாவதாக.

13இப்போதும் இந்தப் பட்டணம் கட்டப்பட்டு, அலங்கங்கள் எடுப்பிக்கப்பட்டுத் தீர்ந்தால், அவர்கள் பகுதியையும் தீர்வையையும் ஆயத்தையும் கொடுக்கமாட்டார்கள்; அதினால் ராஜாக்களின் வருமானத்திற்கு நஷ்டம் வரும் என்று ராஜாவுக்கு அறியலாவதாக.

14இப்போதும், நாங்கள் அரமனை உப்புத் தின்கிறபடியினால், ராஜாவுக்குக் குறைவுவரப் பார்த்திருக்கிறது எங்களுக்கு அடாதகாரியம்; ஆகையால் நாங்கள் இதை அனுப்பி, ராஜாவுக்குத் தெரியப்படுத்துகிறோம்.

15உம்முடைய பிதாக்களின் நடபடி புஸ்தகங்களில் சோதித்துப்பார்க்க உத்தரவாகவேண்டும்; அப்பொழுது இந்தப் பட்டணம் கலகமும், ராஜாக்களுக்கும் சீமைகளுக்கும் நஷ்டமும் உண்டாக்குகிற பட்டணம் என்றும், பூர்வகாலமுதல் கலாதி உள்ளதாயிருந்தபடியினால் இந்தப் பட்டணம் பாழ்க்கடிக்கப்பட்டது என்றும், அந்த நடபடி புஸ்தகங்களில் கண்டறியலாம்.

16ஆகையால் இந்தப் பட்டணம் கட்டப்பட்டு, இதின் அலங்கங்கள் எடுப்பிக்கப்பட்டுத் தீர்ந்தால், நதிக்கு இப்புறத்திலே உமக்கு ஒன்றும் இராதேபோகும் என்பதை ராஜாவுக்கு அறியப்படுத்துகிறோம் என்று எழுதி அனுப்பினார்கள்.

17அப்பொழுது ராஜா ஆலோசனைத் தலைவனாகிய ரெகூமுக்கும், கணக்கனாகிய சிம்சாயிக்கும், சமாரியாவில் குடியிருக்கிற மற்றுமுள்ள அவர்களுடைய வகையராவுக்கும், நதிக்கு அப்புறத்தில் இருக்கிற மற்றவர்களுக்கும் எழுதியனுப்பின பிரதியுத்தரமாவது: உங்களுக்குச் சமாதானம்,

18நீங்கள் அனுப்பின மனு நமது சமுகத்தில் தீர்க்கமாய் வாசிக்கப்பட்டது.

19நம்முடைய உத்தரவினால் சோதித்துப் பார்க்கும்போது, அந்தப் பட்டணம் பூர்வகாலமுதல் ராஜாக்களுக்கு விரோதமாய் எழும்பினது என்றும், அதிலே கலகமும் ராஜதுரோகமும் காணப்பட்டது என்றும்,

20எருசலேமில் வல்லமையுள்ள ராஜாக்கள் இருந்தார்கள் என்றும், அவர்கள் நதிக்கு அப்புறத்தில் இருக்கிற சகல தேசங்களையும் ஆண்டுவந்தார்கள் என்றும், பகுதியும் தீர்வையும் ஆயமும் அவர்களுக்குச் செலுத்தப்பட்டது என்றும் தெரியவருகிறது.

21இப்பொழுதும் நம்மிடத்திலிருந்து மறுஉத்தரவு பிறக்கும்வரையும் அந்த மனிதர் அந்தப் பட்டணத்தைக் கட்டாமல் நிறுத்திவிடும்படி கட்டளையிடுங்கள்.

22இதிலே நீங்கள் தவறாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; ராஜாக்களுக்கு நஷ்டமும் சேதமும் வரவேண்டியது என்ன என்று எழுதி அனுப்பினான்.

23ராஜாவாகிய அர்தசஷ்டாவுடைய உத்தரவின் நகல் ரெகூமுக்கும், கணக்கனாகிய சிம்சாயிக்கும், அவர்கள் வகையராவுக்கு முன்பாக வாசிக்கப்பட்டபோது, அவர்கள் தீவிரத்துடனே எருசலேமிலிருக்கிற யூதரிடத்திற்குப்போய், பலவந்தத்தோடும் கட்டாயத்தோடும் அவர்களை வேலைசெய்யாதபடிக்கு நிறுத்திப்போட்டார்கள்.

24அப்பொழுது எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தின் வேலை தடைபட்டு, பெர்சியாவின் ராஜாவாகிய தரியு ராஜ்யபாரம்பண்ணின இரண்டாம் வருஷமட்டும் நிறுத்தப்பட்டிருந்தது.

அப்போஸ்தலர் 4

முழு அதிகாரம் ›

1அவர்கள் ஜனங்களுடனே பேசிக்கொண்டிருக்கையில், ஆசாரியர்களும் தேவாலயத்துச் சேனைத்தலைவனும் சதுசேயரும் அவர்களிடத்தில் வந்து,

2அவர்கள் ஜனங்களுக்கு உபதேசிக்கிறதினாலும், இயேசுவை முன்னிட்டு, மரித்தோரிலிருந்து உயர்த்தெழுதலைப் பிரசங்கிக்கிறதினாலும், சினங்கொண்டு,

3அவர்களைப் பிடித்து, சாயங்காலமாயிருந்தபடியினால், மறுநாள்வரைக்கும் காவலில் வைத்தார்கள்.

4வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார்கள்; அவர்கள் தொகை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது.

5மறுநாளிலே ஜனங்களுடைய அதிகாரிகளும் மூப்பரும் வேதபாரகரும்,

6பிரதான ஆசாரியனாகிய அன்னாவும், காய்பாவும், யோவானும், அலெக்சந்தரும், பிரதான ஆசாரியருடைய குடும்பத்தார் யாவரும் எருசலேமிலே கூட்டங்கூடி,

7அவர்களை நடுவே நிறுத்தி: நீங்கள் எந்த வல்லமையினாலே, எந்த நாமத்தினாலே, இதைச் செய்தீர்கள் என்று கேட்டார்கள்.

8அப்பொழுது பேதுரு பரிசுத்த ஆவியினாலே நிறைந்து, அவர்களை நோக்கி: ஜனத்தின் அதிகாரிகளே, இஸ்ரவேலின் மூப்பர்களே,

9பிணியாளியாயிருந்த இந்த மனுஷனுக்குச் செய்யப்பட்ட உபகாரத்தைக் குறித்து எதினாலே இவன் ஆரோக்கியமானானென்று நீங்கள் இன்று எங்களிடத்தில் விசாரித்துக்கேட்டால்,

10உங்களால் சிலுவையில் அறையப்பட்டவரும், தேவனால் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவருமாயிருக்கிற நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேயே இவன் உங்களுக்கு முன்பாகச் சொஸ்தமாய் நிற்கிறானென்று உங்களெல்லாருக்கும், இஸ்ரவேல் ஜனங்களெல்லாருக்கும் தெரிந்திருக்கக்கடவது.

11வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர்.

12அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.

13பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள்.

14சொஸ்தமாக்கப்பட்ட மனுஷன் அவர்கள் அருகே நிற்கிறதைக் கண்டபடியால், எதிர்பேச அவர்களுக்கு இடமில்லாதிருந்தது.

15அப்பொழுது அவர்களை ஆலோசனைச் சங்கத்தைவிட்டு வெளியே போகும்படி கட்டளையிட்டு, தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டு:

16இந்த மனுஷரை நாம் என்ன செய்யலாம்? எருசலேமில் வாசம்பண்ணுகிற எல்லாருக்கும் தெரிந்திருக்கிறபடி வெளியரங்கமான அற்புதம் இவர்களால் செய்யப்பட்டதே, அதை நாம் இல்லையென்று சொல்லக்கூடாது.

17ஆகிலும் இது அதிகமாய் ஜனத்துக்குள்ளே பரம்பாதபடிக்கு, இதுமுதல் ஒருவரோடும் இந்த நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று, அவர்களை உறுதியாய்ப் பயமுறுத்தவேண்டுமென்று சொல்லிக்கொண்டு,

18அவர்களை அழைத்து: இயேசுவின் நாமத்தைக்குறித்து எவ்வளவும் பேசவும் போதிக்கவும் கூடாதென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

19பேதுருவும் யோவானும் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவனுக்குச் செவிகொடுக்கிறதைப்பார்க்கிலும் உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ என்று நீங்களே நிதானித்துப்பாருங்கள்.

20நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள்.

21நடந்த சங்கதிகளைக்குறித்து எல்லாரும் தேவனை மகிமைப்படுத்தினபடியால், ஜனங்களுக்குப் பயந்து அவர்களைத் தண்டிக்க வகையொன்றுங்காணாமல், அவர்களைப் பயமுறுத்தி விட்டுவிட்டார்கள்.

22அற்புதமாய்ச் சொஸ்தமாக்கப்பட்ட மனுஷன் நாற்பது வயதுக்கு மேற்பட்டவனாயிருந்தான்.

23அவர்கள் விடுதலையாக்கப்பட்ட பின்பு, தங்களைச் சேர்ந்தவர்களிடத்தில் வந்து, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் தங்களுக்குச் சொன்ன யாவையும் அறிவித்தார்கள்.

24அவர்கள் அதைக் கேட்டு, ஒருமனப்பட்டு தேவனை நோக்கிச் சத்தமிட்டு: கர்த்தாவே, நீர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனாயிருக்கிறீர்.

25புறஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதா காரியங்களைச் சிந்திப்பானேன் என்றும்,

26கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தீரே.

27அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன்குறித்தவைகள் யாவையும் செய்யும்படி,

28ஏரோதும் பொந்தியுபிலாத்தும், புறஜாதிகளோடும் இஸ்ரவேல் ஜனங்களோடுங்கூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய், மெய்யாகவே கூட்டங்கூடினார்கள்.

29இப்பொழுதும், கர்த்தாவே, அவர்கள் பயமுறுத்தல்களை தேவரீர் கவனித்து,

30உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, பிணியாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும் என்றார்கள்.

31அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்.

32விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது.

33கர்த்தராகிய இயேசுவின் உயிரத்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லார்மேலும் பூரணகிருபை உண்டாயிருந்தது.

34நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, விற்கப்பட்டவைகளின் கிரயத்தைக் கொண்டுவந்து,

35அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தார்கள். அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது; அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை.

36சீப்புருதீவானும் லேவியனும் அப்போஸ்தலராலே ஆறுதலின் மகன் என்று அர்த்தங்கொள்ளும் பர்னபா என்னும் மறுபேர்பெற்றவனுமாகிய யோசே என்பவன்,

37தனக்கு உண்டாயிருந்த நிலத்தை விற்று, அதின் கிரயத்தைக் கொண்டு வந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com