1ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனுஷனைச் சிருஷ்டித்த நாளிலே அவனைத் தேவசாயலாக உண்டாக்கினார்.
2அவர்களை ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்து, அவர்களை ஆசீர்வதித்து, அவர்களைச் சிருஷ்டித்த நாளிலே அவர்களுக்கு மனுஷர் என்று பேரிட்டார்.
3ஆதாம் நூற்று முப்பது வயதானபோது, தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று பேரிட்டான்.
4ஆதாம் சேத்தைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
5ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம்; அவன் மரித்தான்.
6சேத் நூற்றைந்து வயதானபோது, ஏனோசைப் பெற்றான்.
7சேத் ஏனோசைப் பெற்றபின், எண்ணூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
8சேத்துடைய நாளெல்லாம் தொளாயிரத்துப் பன்னிரண்டு வருஷம்; அவன் மரித்தான்.
9ஏனோஸ் தொண்ணூறு வயதானபோது, கேனானைப் பெற்றான்.
10ஏனோஸ் கேனானைப் பெற்றபின், எண்ணூற்றுப் பதினைந்து வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
11ஏனோசுடைய நாளெல்லாம் தொளாயிரத்து ஐந்து வருஷம், அவன் மரித்தான்.
12கேனான் எழுபது வயதானபோது, மகலாலெயேலைப் பெற்றான்.
13கேனான் மகலாலெயேலைப் பெற்றபின், எண்ணூற்று நாற்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
14கேனானுடைய நாளெல்லாம் தொளாயிரத்துப் பத்து வருஷம்; அவன் மரித்தான்.
15மகலாலெயேல் அறுபத்தைந்து வயதானபோது, யாரேதைப் பெற்றான்.
16மகலாலெயேல் யாரேதைப் பெற்றபின், எண்ணூற்று முப்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும், குமாரத்திகளையும் பெற்றான்.
17மகலாலெயேலுடைய நாளெல்லாம் எண்ணூற்றுத் தொண்ணூற்று ஐந்து வருஷம்; அவன் மரித்தான்.
18யாரேத் நூற்று அறுபத்திரண்டு வயதானபோது, ஏனோக்கைப் பெற்றான்.
19யாரேத் ஏனோக்கைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
20யாரேதுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்திரண்டு வருஷம்; அவன் மரித்தான்.
21ஏனோக்கு அறுபத்தைந்து வயதானபோது, மெத்தூசலாவைப் பெற்றான்.
22ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், முந்நூறு வருஷம் தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்து, குமாரரையும், குமாரத்திகளையும் பெற்றான்.
23ஏனோக்குடைய நாளெல்லாம் முந்நூற்று அறுபத்தைந்து வருஷம்.
24ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.
25மெத்தூசலா நூற்றெண்பத்தேழு வயதானபோது, லாமேக்கைப் பெற்றான்.
26மெத்தூசலா லாமேக்கைப் பெற்றபின், எழுநூற்று எண்பத்திரண்டு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
27மெத்தூசலாவுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம்; அவன் மரித்தான்.
28லாமேக்கு நூற்றெண்பத்திரண்டு வயதானபோது, ஒரு குமாரனைப் பெற்று,
29கர்த்தர் சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மைத் தேற்றுவான் என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பேரிட்டான்.
30லாமேக்கு நோவாவைப் பெற்றபின், ஐந்நூற்றுத் தொண்ணூற்று ஐந்து வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும், குமாரத்திகளையும் பெற்றான்.
31லாமேக்குடைய நாளெல்லாம் எழுநூற்று எழுபத்தேழு வருஷம்; அவன் மரித்தான்.
32நோவா ஐந்நூறு வயதானபோது, சேம், காம், யாப்பேத் என்பவர்களைப் பெற்றான்.
1அவர் திரளான ஜனங்களைக் கண்டு மலையின்மேல் ஏறினார்; அவர் உட்கார்ந்தபொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்தார்கள்.
2அப்பொழுது அவர் தமது வாயைத் திறந்து அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்:
3ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.
4துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.
5சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கிவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.
6நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்.
7இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம்பெறுவார்கள்.
8இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
9சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.
10நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.
11என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்;
12சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.
13நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது.
14நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.
15விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.
16இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
17நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.
18வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
19ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்.
20வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
21கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும், பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
22நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான்.
23ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில்,
24அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.
25எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடாமலும், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடாமலும், நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும் இருக்கும்படியாக, நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம்பொருந்து.
26பொருந்தாவிட்டால், நீ ஒரு காசும் குறைவின்றிக் கொடுத்துத் தீர்க்குமட்டும் அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
27விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
28நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடுபார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.
29உன் வலதுகண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.
30உன் வலதுகை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும். உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.
31தன் மனைவியைத் தள்ளிவிடுகிற எவனும், தள்ளுதற்சீட்டை அவளுக்குக் கொடுக்கக்கடவன் என்று உரைக்கப்பட்டது.
32நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; வேசித்தன முகாந்தரத்தினாலொழிய தன் மனைவியைத் தள்ளிவிடுகிறவன், அவளை விபசாரஞ்செய்யப்பண்ணுகிறவனாயிருப்பான்; அப்படித் தள்ளிவிடப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்.
33அன்றியும், பொய்யாணையிடாமல், உன் ஆணைகளைக் கர்த்தர் முன்னிலையாய்ச் செலுத்துவாயாக என்று பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
34நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; பரிச்சேதம் சத்தியம்பண்ணவேண்டாம்; வானத்தின்பேரில் சத்தியம்பண்ணவேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம்.
35பூமியின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது அவருடைய பாதபடி; எருசலேமின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம்.
36உன் சிரசின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அதின் ஒரு மயிரையாவது வெண்மையாக்கவும் கறுப்பாக்கவும் உன்னால் கூடாதே.
37உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.
38கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று, உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
39நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு.
40உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டும் என்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு.
41ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம்பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ.
42உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன்வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.
43உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
44நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.
45இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.
46உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா?
47உங்கள் சகோதரரைமாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா?
48ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.
1அப்பொழுது ஆகாய் தீர்க்கதரிசியும், இத்தோவின் குமாரனாகிய சகரியா என்னும் தீர்க்கதரிசியும், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யூதருக்கு இஸ்ரவேல் தேவனின் நாமத்திலே தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
2அப்பொழுது செயல்தியேலின் குமாரனாகிய செருபாபேலும் யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும் எழும்பி, எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கட்டத்தொடங்கினார்கள்; அவர்களுக்குத் திடன் சொல்ல தேவனுடைய தீர்க்கதரிசிகளும் இருந்தார்கள்.
3அக்காலத்திலே நதிக்கு இப்புறத்தில் இருக்கிற நாடுகளுக்கு அதிபதியாகிய தத்னாய் என்பவனும், சேத்தார் பொஸ்னாயும், அவர்கள் வகையராவும் அவர்களிடத்துக்கு வந்து, இந்த ஆலயத்தைக் கட்டவும், இந்த மதிலை எடுப்பிக்கவும் உங்களுக்குக் கட்டளையிட்டவன் யார் என்று அவர்களைக் கேட்டார்கள்.
4அப்பொழுது அதற்கு ஏற்ற உத்தரவையும், இந்த மாளிகையைக் கட்டுகிற மனிதரின் நாமங்களையும் அவர்களுக்குச் சொன்னோம்.
5ஆனாலும் இந்தச் செய்தி தரியுவினிடத்திற்குப் போய் எட்டுகிறவரைக்கும் இவர்கள் யூதருடைய மூப்பரின் வேலையைத் தடுக்காதபடிக்கு, அவர்களுடைய தேவனின் கண் அவர்கள்மேல் வைக்கப்பட்டிருந்தது; அப்பொழுது இதைக்குறித்து அவர்கள் சொன்ன மறுமொழியைக் கடிதத்தில் எழுதியனுப்பினார்கள்.
6நதிக்கு இப்புறத்திலிருக்கிற தத்னாய் என்னும் தேசாதிபதியும், சேத்தார் பொஸ்னாயும், நதிக்கு இப்புறத்திலிருக்கிற அப்பற்சாகியரான அவன் வகையராவும், ராஜாவாகிய தரியுவுக்கு எழுதியனுப்பின கடிதத்தின் நகலாவது:
7ராஜாவாகிய தரியுவுக்குச் சகல சமாதானமும் உண்டாவதாக.
8நாங்கள் யூதர் சீமையிலுள்ள மகா தேவனுடைய ஆலயத்துக்குப் போனோம்; அது பெருங்கற்களால் கட்டப்படுகிறது; மதில்களின்மேல் உத்திரங்கள் பாய்ச்சப்பட்டு, அந்த வேலை துரிசாய் நடந்து, அவர்களுக்குக் கைகூடிவருகிறதென்பது ராஜாவுக்குத் தெரியலாவதாக.
9அப்பொழுது நாங்கள் அவர்கள் மூப்பர்களை நோக்கி: இந்த ஆலயத்தைக் கட்டவும், இந்த மதிலை எடுப்பிக்கவும் உங்களுக்குக் கட்டளையிட்டது யார் என்று கேட்டோம்.
10இதுவுமல்லாமல், அவர்களுக்குள்ளே தலைவரான மனிதர் இன்னாரென்று உமக்கு எழுதி அறியப்படுத்தும்படி, அவர்கள் நாமங்கள் என்னவென்றும் கேட்டோம்.
11அவர்கள் எங்களுக்குப் பிரதியுத்தரமாக: நாங்கள் பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் தேவனாயிருக்கிறவருக்கு அடியாராயிருந்து, இஸ்ரவேலின் பெரிய ராஜா ஒருவன் அநேக வருஷங்களுக்குமுன்னே கட்டித்தீர்த்த இந்த ஆலயத்தை நாங்கள் மறுபடியும் கட்டுகிறோம்.
12எங்கள் பிதாக்கள் பரலோகத்தின் தேவனுக்குக் கோபமூட்டினபடியினால், அவர் இவர்களைப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னும் கல்தேயன் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் இந்த ஆலயத்தை நிர்மூலமாக்கி, ஜனத்தைப் பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.
13ஆனாலும் பாபிலோன் ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருஷத்திலே கோரேஸ் ராஜாவானவர் தேவனுடைய இந்த ஆலயத்தைக் கட்டும்படி கட்டளையிட்டார்.
14நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்த தேவாலயத்திலிருந்து எடுத்து, பாபிலோன் கோவிலில் கொண்டுபோய் வைத்திருந்த தேவனுடைய ஆலயத்தின் பொன் வெள்ளிப் பணிமுட்டுகளையும் ராஜாவாகிய கோரேஸ் பாபிலோன் கோவிலிலிருந்து எடுத்து. அவர் தேசாதிபதியாக நியமித்த செஸ்பாத்சாரென்னும் நாமமுள்ளவனிடத்தில் அவைகளை ஒப்புவித்து,
15அவனை நோக்கி: நீ இந்தப் பணிமுட்டுகளை எடுத்து, எருசலேமிலிருக்கும் தேவாலயத்துக்குக் கொண்டுபோ; தேவனுடைய ஆலயம் அதின் ஸ்தானத்திலே கட்டப்படவேண்டும் என்றார்.
16அப்பொழுது அந்தச் செஸ்பாத்சார் வந்து, எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தின் அஸ்திபாரத்தைப் போட்டான்; அந்நாள்முதல் இது வரைக்கும் அது கட்டப்பட்டு வருகிறது; அது இன்னும் முடியவில்லை என்றார்கள்.
17இப்பொழுதும் ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கட்ட, ராஜாவாகிய கோரேஸ் கட்டளையிட்டதுண்டோ என்று பாபிலோனில் இருக்கிற ராஜாவின் கஜானாவிலே ஆராய்ந்து பார்க்கவும், இந்த விஷயத்தில் ராஜாவினுடைய சித்தம் இன்னதென்று எங்களுக்கு எழுதியனுப்பவும் உத்தரவாகவேண்டும் என்று எழுதியனுப்பினார்கள்.
1அனனியா என்னும் பேருள்ள ஒருவனும், அவனுடைய மனைவியாகிய சப்பீராளும் தங்கள் காணியாட்சியை விற்றார்கள்.
2தன் மனைவி அறிய அவன் கிரயத்திலே ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, ஒரு பங்கைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான்.
3பேதுரு அவனை நோக்கி: அனனியாவே, நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்த ஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன?
4அதை விற்குமுன்னே அது உன்னுடையதாயிருக்கவில்லையோ? அதை விற்றபின்பும் அதின் கிரயம் உன் வசத்திலிருக்கவில்லையோ? நீ உன் இருதயத்திலே இப்படிப்பட்ட எண்ணங்கொண்டதென்ன? நீ மனுஷரிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய்சொன்னாய் என்றான்.
5அனனியா இந்த வார்த்தைகளைக்கேட்கவே, விழுந்து ஜீவனை விட்டான். இவைகளைக் கேள்விப்பட்ட யாவருக்கும் மிகுந்த பயமுண்டாயிற்று.
6வாலிபர் எழுந்து, அவனைச் சேலையில் சுற்றி, வெளியே எடுத்துக்கொண்டுபோய், அடக்கம் பண்ணினார்கள்.
7ஏறக்குறைய மூன்று மணி நேரத்துக்குப்பின்பு, அவனுடைய மனைவி நடந்ததை அறியாமல், உள்ளே வந்தாள்.
8பேதுரு அவளை நோக்கி: நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள், எனக்குச் சொல் என்றான். அவள்: ஆம், இவ்வளவுக்குத்தான் என்றாள்.
9பேதுரு அவளை நோக்கி: கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒருமனப்பட்டதென்ன? இதோ, உன் புருஷனை அடக்கம்பண்ணினவர்களுடைய கால்கள் வாசற்படியிலே வந்திருக்கிறது, உன்னையும் வெளியே கொண்டுபோவார்கள் என்றான்.
10உடனே அவள் அவனுடைய பாதத்தில் விழுந்து ஜீவனை விட்டாள். வாலிபர் உள்ளே வந்து, அவள் மரித்துப்போனதைக் கண்டு அவளை வெளியே எடுத்துக்கொண்டுபோய், அவளுடைய புருஷனண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்.
11சபையாரெல்லாருக்கும், இவைகளைக் கேள்விப்பட்ட மற்ற யாவருக்கும், மிகுந்த பயமுண்டாயிற்று.
12அப்போஸ்தலருடைய கைகளினாலே அநேக அடையாளங்களும் அற்புதங்களும் ஜனங்களுக்குள்ளே செய்யப்பட்டது. எல்லாரும் ஒருமனப்பட்டுச் சாலொமோனுடைய மண்டபத்தில் இருந்தார்கள்.
13மற்றவர்களில் ஒருவரும் அவர்களுடனே சேரத் துணியவில்லை. ஆகிலும் ஜனங்கள் அவர்களை மேன்மைப்படுத்தினார்கள்.
14திரளான புருஷர்களும், ஸ்திரீகளும் விசுவாசமுள்ளவர்களாகிக் கர்த்தரிடமாக அதிகமதிகமாய்ச் சேர்க்கப்பட்டார்கள்.
15பிணியாளிகளைப் படுக்கைகளின்மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி, பேதுரு நடந்துபோகையில் அவனுடைய நிழலாகிலும் அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு, அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள்.
16சுற்றுப்பட்டணங்களிலுமிருந்து திரளான ஜனங்கள் பிணியாளிகளையும் அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களையும் எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அவர்களெல்லாரும் குணமாக்கப்பட்டார்கள்.
17அப்பொழுது பிரதான ஆசாரியனும் அவனுடனேகூட இருந்த சதுசேய சமயத்தாரனைவரும் எழும்பி, பொறாமையினால் நிறைந்து,
18அப்போஸ்தலர்களைப் பிடித்து, பொதுவான சிறைச்சாலையிலே வைத்தார்கள்.
19கர்த்தருடைய தூதன் இராத்திரியிலே சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து, அவர்களை வெளியே கொண்டுவந்து:
20நீங்கள் போய், தேவாலயத்திலே நின்று, இந்த ஜீவவார்த்தைகள் எல்லாவற்றையும் ஜனங்களுக்குச் சொல்லுங்கள் என்றான்.
21அவர்கள் அதைக்கேட்டு, அதிகாலமே தேவாலயத்தில் பிரவேசித்துப் போதகம்பண்ணினார்கள். பிரதான ஆசாரியனும் அவனுடனேகூட இருந்தவர்களும் வந்து, ஆலோசனைச் சங்கத்தாரையும் இஸ்ரவேல் புத்திரரின் மூப்பரெல்லாரையும் வரவழைத்து, அப்போஸ்தலர்களைக் கொண்டுவரும்படி சிறைச்சாலைக்குச் சேவகரை அனுப்பினார்கள்.
22சேவகர் போய், சிறைச்சாலையிலே அவர்களைக் காணாமல், திரும்பிவந்து:
23சிறைச்சாலை மிகுந்த பத்திரமாய்ப் பூட்டப்பட்டிருக்கவும், காவற்காரர் வெளியே கதவுகளுக்குமுன் நிற்கவும் கண்டோம்; திறந்தபொழுதோ உள்ளே ஒருவரையும் காணோம் என்று அறிவித்தார்கள்.
24இந்தச் செய்தியை ஆசாரியனும் தேவாலயத்தைக் காக்கிற சேனைத்தலைவனும் பிரதான ஆசாரியர்களும் கேட்டபொழுது, இதென்னமாய் முடியுமோ என்று, அவர்களைக்குறித்துக் கலக்கமடைந்தார்கள்.
25அப்பொழுது ஒருவன் வந்து: இதோ, நீங்கள் காவலில் வைத்த மனுஷர் தேவாலயத்திலே நின்று ஜனங்களுக்குப் போதகம்பண்ணுகிறார்கள் என்று அவர்களுக்கு அறிவித்தான்.
26உடனே சேனைத்தலைவன் சேவகரோடேகூடப்போய், ஜனங்கள் கல்லெறிவார்களென்று பயந்ததினால், பலவந்தம்பண்ணாமல் அவர்களை அழைத்துக்கொண்டுவந்தான்.
27அப்படி அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, ஆலோசனைச் சங்கத்துக்கு முன்பாக நிறுத்தினார்கள். அப்பொழுது பிரதான ஆசாரியன் அவர்களை நோக்கி:
28நீங்கள் அந்த நாமத்தைக்குறித்துப் போதகம்பண்ணக்கூடாதென்று நாங்கள் உங்களுக்கு உறுதியாய்க் கட்டளையிடவில்லையா? அப்படியிருந்தும், இதோ, எருசலேமை உங்கள் போதகத்தினாலே நிரப்பி, அந்த மனுஷனுடைய இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தவேண்டுமென்றிருக்கிறீர்கள் என்று சொன்னான்.
29அதற்குப் பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும்: மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.
30நீங்கள் மரத்திலே தூக்கிக் கொலைசெய்த இயேசுவை நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி,
31இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் அருளுகிறதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலதுகரத்தினாலே உயர்த்தினார்.
32இந்தச் சங்கதிகளைக்குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறோம்; தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்த ஆவியும் சாட்சி என்றார்கள்.
33அதை அவர்கள் கேட்டபொழுது, மூர்க்கமடைந்து, அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு யோசனை பண்ணினார்கள்.
34அப்பொழுது சகல ஜனங்களாலும் கனம்பெற்ற நியாயசாஸ்திரியாகிய கமாலியேல் என்னும் பேர்கொண்ட ஒரு பரிசேயன் ஆலோசனைச் சங்கத்தில் எழுந்திருந்து, அப்போஸ்தலரைச் சற்றுநேரம் வெளியே கொண்டுபோகச் சொல்லி,
35சங்கத்தாரை நோக்கி: இஸ்ரவேலரே, இந்த மனுஷருக்கு நீங்கள் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.
36ஏனென்றால் இந்நாட்களுக்கு முன்னே தெயுதாஸ் என்பவன் எழும்பி, தன்னை ஒரு பெரியவனாகப் பாராட்டினான்; ஏறக்குறைய நானூறுபேர் அவனைச் சேர்ந்தார்கள்; அவன் மடிந்துபோனான்; அவனை நம்பின அனைவரும் சிதறி, அவமாய்ப்போனார்கள்.
37அவனுக்குப்பின்பு, குடிமதிப்பின் நாட்களிலே, கலிலேயனாகிய யூதாஸ் என்பவன் எழும்பி, தன்னைப் பின்பற்றும்படி அநேக ஜனங்களை இழுத்தான்; அவனும் அழிந்துபோனான்; அவனை நம்பியிருந்த அனைவரும் சிதறடிக்கப்பட்டார்கள்.
38இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லுகிறதென்னவென்றால் இந்த மனுஷருக்கு ஒன்றுஞ்செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள். இந்த யோசனையும் இந்தக் கிரியையும் மனுஷரால் உண்டாயிருந்ததானால் ஒழிந்துபோம்;
39தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை ஒழித்துவிட உங்களால் கூடாது; தேவனோடே போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள் என்றான்.
40அப்பொழுது அவர்கள் அவனுடைய யோசனைக்கு உடன்பட்டு, அப்போஸ்தலரை வரவழைத்து, அடித்து, இயேசுவின் நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று கட்டளையிட்டு, அவர்களை விடுதலையாக்கினார்கள்.
41அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய்,
42தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com