‹ முகப்புமுழுத் திட்டம்

ஜனவரி 7 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்ஜனவரி 7அடுத்த நாள் ›
குடும்பம்

ஆதியாகமம் 7

முழு அதிகாரம் ›

1கர்த்தர் நோவாவை நோக்கி: நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள்; இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்.

2பூமியின்மீதெங்கும் வித்தை உயிரோடே காக்கும்பொருட்டு, நீ சுத்தமான சகல மிருகங்களிலும், ஆணும் பெண்ணுமாக எவ்வேழு ஜோடும், சுத்தமில்லாத மிருகங்களில் ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு ஜோடும்,

3ஆகாயத்துப் பறவைகளிலும், சேவலும் பேடுமாக எவ்வேழு ஜோடும் உன்னிடத்தில் சேர்த்துக்கொள்.

4இன்னும் ஏழுநாள் சென்றபின்பு, நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்ணி, நான் உண்டாக்கின ஜீவஜந்துக்கள் அனைத்தையும் பூமியின்மேல் இராதபடிக்கு நிக்கிரகம்பண்ணுவேன் என்றார்.

5நோவா தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியெல்லாம் செய்தான்.

6ஜலப்பிரளயம் பூமியின்மேல் உண்டானபோது, நோவா அறுநூறு வயதாயிருந்தான்.

7ஜலப்பிரளயத்துக்குத் தப்பும்படி நோவாவும் அவனுடனேகூட அவன் குமாரரும், அவன் மனைவியும், அவன் குமாரரின் மனைவிகளும் பேழைக்குள் பிரவேசித்தார்கள்.

8தேவன் நோவாவுக்குக் கட்டளையிட்டபடியே, சுத்தமான மிருகங்களிலும், சுத்தமல்லாத மிருகங்களிலும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிலும்,

9ஆணும் பெண்ணும் ஜோடுஜோடாக நோவாவிடத்தில் பேழைக்குட்பட்டன.

10ஏழுநாள் சென்றபின்பு பூமியின்மேல் ஜலப்பிரளயம் உண்டாயிற்று.

11நோவாவுக்கு அறுநூறாம் வயதாகும் வருஷம் இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய அந்நாளிலே, மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறவுண்டன.

12நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் பெருமழை பெய்தது.

13அன்றைத்தினமே நோவாவும், நோவாவின் குமாரராகிய சேமும் காமும் யாப்பேத்தும், அவர்களுடனேகூட நோவாவின் மனைவியும், அவன் குமாரரின் மூன்று மனைவிகளும், பேழைக்குள் பிரவேசித்தார்கள்.

14அவர்களோடு ஜாதிஜாதியான சகலவிதக் காட்டு மிருகங்களும், ஜாதிஜாதியான சகலவித நாட்டு மிருகங்களும், பூமியின்மேல் ஊருகிற ஜாதிஜாதியான சகலவித ஊரும் பிராணிகளும், ஜாதிஜாதியான சகலவிதப் பறவைகளும், பலவிதமான சிறகுகளுள்ள சகலவிதப் பட்சிகளும் பிரவேசித்தன.

15இப்படியே ஜீவசுவாசமுள்ள மாம்ச ஜந்துக்களெல்லாம் ஜோடுஜோடாக நோவாவிடத்தில் பேழைக்குள் பிரவேசித்தன.

16தேவன் அவனுக்குக் கட்டளையிட்டபடியே, ஆணும் பெண்ணுமாக சகலவித மாம்சஜந்துக்களும் உள்ளே பிரவேசித்தன; அப்பொழுது கர்த்தர் அவனை உள்ளே விட்டுக் கதவை அடைத்தார்.

17ஜலப்பிரளயம் நாற்பது நாள் பூமியின்மேல் உண்டானபோது, ஜலம் பெருகி, பேழையைக் கிளம்பப்பண்ணிற்று; அது பூமிக்குமேல் மிதந்தது.

18ஜலம் பெருவெள்ளமாகி, பூமியின்மேல் மிகவும் பெருகிற்று; பேழையானது ஜலத்தின்மேல் மிதந்துகொண்டிருந்தது.

19ஜலம் பூமியின்மேல் மிகவும் அதிகமாய்ப் பெருகினதினால், வானத்தின்கீழ் எங்குமுள்ள உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன.

20மூடப்பட்ட மலைகளுக்கு மேலாய்ப் பதினைந்துமுழ உயரத்திற்கு ஜலம் பெருகிற்று.

21அப்பொழுது மாம்சஜந்துக்களாகிய பறவைகளும், நாட்டு மிருகங்களும், காட்டு மிருகங்களும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் யாவும், எல்லா நரஜீவன்களும், பூமியின்மேல் சஞ்சரிக்கிறவைகள் யாவும் மாண்டன.

22வெட்டாந்தரையில் உண்டான எல்லாவற்றிலும் நாசியிலே ஜீவசுவாசமுள்ளவைகள் எல்லாம் மாண்டுபோயின.

23மனுஷர் முதல், மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும், பூமியின்மேல் இருந்த உயிருள்ள வஸ்துக்கள் யாவும் அழிந்து, அவைகள் பூமியில் இராதபடிக்கு நிக்கிரகமாயின; நோவாவும் அவனோடே பேழையிலிருந்த உயிர்களும் மாத்திரம் காக்கப்பட்டன.

24ஜலம் பூமியின்மேல் நூற்றைம்பது நாள் மிகவும் பிரவாகித்துக்கொண்டிருந்தது.

1நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.

2ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.

3நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?

4இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?

5மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.

6பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துக்களைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்.

7கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்;

8ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.

9உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா?

10மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா?

11ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?

12ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிராணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.

13இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப்போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.

14ஜீவனுக்குப்போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.

15கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.

16அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?

17அப்படியே நல்லமரமெல்லாம் நல்லகனிகளைக் கொடுக்கும்; கெட்டமரமோ கெட்டகனிகளைக் கொடுக்கும்.

18நல்லமரம் கெட்டகனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்டமரம் நல்லகனிகளைக் கொடுக்கமாட்டாது.

19நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும்.

20ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.

21பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படிசெய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

22அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.

23அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

24ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.

25பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.

26நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்.

27பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.

28இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபோது, அவர் வேதபாரகரைப்போல் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியால்,

29ஜனங்கள் அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.

தனிவாசிப்பு

1இந்த வர்த்தமானங்களுக்குப்பின்பு, செராயாவின் குமாரனாகிய எஸ்றா, பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா அரசாளுகிற காலத்திலே பாபிலோனிலிருந்து வந்தான்; இந்தச் செராயா அசரியாவின் குமாரன், இவன் இல்க்கியாவின் குமாரன்,

2இவன் சல்லூமின் குமாரன், இவன் சாதோக்கின் குமாரன், இவன் அகிதூபின் குமாரன்,

3இவன் அமரியாவின் குமாரன், இவன் அசரியாவின் குமாரன், இவன் மெராயோதின் குமாரன்,

4இவன் சேராகியாவின் குமாரன், இவன் ஊசியின் குமாரன், இவன் புக்கியின் குமாரன்,

5இவன் அபிசுவாவின் குமாரன், இவன் பினெகாசின் குமாரன், இவன் எலெயாசாரின் குமாரன், இவன் பிரதான ஆசாரியனான ஆரோனின் குமாரன்.

6இந்த எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான்; அவனுடைய தேவனாகிய கர்த்தருடைய கரம் அவன்மேல் இருந்ததினால், அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான்.

7அவனோடேகூட இஸ்ரவேல் புத்திரரிலும், ஆசாரியரிலும், லேவியரிலும், பாடகரிலும், வாசல் காவலாளரிலும், நிதனீமியரிலும், சிலர் அர்தசஷ்டா ராஜாவின் ஏழாம் வருஷத்திலே எருசலேமுக்குப் போனார்கள்.

8ஐந்தாம் மாதத்தில் அவன் எருசலேமுக்கு வந்தான்; அது அந்த ராஜாவின் ஏழாம் வருஷமானது.

9முதலாம் மாதம் முதல் தேதியிலே அவன் பாபிலோனிலிருந்து பிரயாணமாகப் புறப்பட்டு, ஐந்தாம் மாதம் முதல்தேதியிலே தன் தேவனுடைய தயவுள்ள கரம் தன்மேலிருந்ததினால் எருசலேமுக்கு வந்தான்.

10கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்.

11கர்த்தருடைய கற்பனைகளின் வார்த்தைகளிலும், அவர் இஸ்ரவேலுக்குக் கொடுத்த கட்டளைகளிலும், படித்துத் தேறின வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனுக்கு, ராஜாவாகிய அர்தசஷ்டா கொடுத்த சன்னதின் நகலாவது:

12ராஜாதிராஜாவாகிய அர்தசஷ்டா பரலோகத்தின் தேவனுடைய நியாயப்பிரமாணத்தைப் போதிக்கிற உத்தம வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனுக்குப் பூரண சமாதானமுண்டாக வாழ்த்தி எழுதுகிறது என்னவென்றால்:

13நம்முடைய ராஜ்யத்தில் இருக்கிற இஸ்ரவேல் ஜனத்திலும், அதின் ஆசாரியரிலும், லேவியரிலும், உன்னோடேகூட எருசலேமுக்குப் போக மனப்பூர்வமாயிருக்கிற யாவரும் போகலாம் என்று நம்மாலே உத்தரவாகிறது.

14நீ உன் கையிலிருக்கிற உன் தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படி, யூதாவையும் எருசலேமையும் விசாரித்து நடத்தவும்,

15ராஜாவும் அவருடைய மந்திரிமாரும் எருசலேமில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனுக்கு மனப்பூர்வமாய்க் கொடுத்த வெள்ளியையும் பொன்னையும்,

16பாபிலோன் சீமையெங்கும் உனக்குக் கிடைக்கும் எல்லா வெள்ளியையும் பொன்னையும், உன்னுடைய ஜனமும் ஆசாரியரும் எருசலேமிலுள்ள தங்கள் தேவனுடைய ஆலயத்துக்கென்று மனஉற்சாகமாய்க் கொடுக்கும் காணிக்கைகளையும் நீ கொண்டுபோகவும், நீ ராஜாவினாலும் அவருடைய ஏழு மந்திரிமாராலும் அனுப்பப்படுகிறாய்.

17ஆகையால் அந்தத் திரவியத்தினால் நீ தாமதமின்றி காளைகளையும், ஆட்டுக்கடாக்களையும், ஆட்டுக்குட்டிகளையும், அவைகளுக்கடுத்த போஜனபலிகளையும், பானபலிகளையும் வாங்கி, அவைகளை எருசலேமிலுள்ள உங்கள் தேவனுடைய ஆலயத்துப் பலிபீடத்தின்மேல் செலுத்துவாயாக.

18மீதியான வெள்ளியையும் பொன்னையும் கொண்டு செய்யவேண்டியதின்னதென்று உனக்கும் உன் சகோதரருக்கும் நலமாய்த் தோன்றுகிறபடி அதை உங்கள் தேவனுடைய சித்தத்தின்படியே செய்யுங்கள்.

19உன் தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்காக உனக்குக் கொடுக்கப்பட்ட பணிமுட்டுகளையும் நீ எருசலேமின் தேவனுடைய சந்நிதியில் ஒப்புவிக்கக்கடவாய்.

20பின்னும் உன் தேவனுடைய ஆலயத்துக்கு அவசியமாய்க் கொடுக்கவேண்டியிருப்பதை, நீ ராஜாவின் கஜானாவிலிருந்து வாங்கிக் கொடுப்பாயாக.

21நதிக்கு அப்புறத்திலிருக்கிற எல்லா கஜான்சிகளுக்கும் அர்தசஷ்டா என்னும் ராஜாவாகிய நாம் இடுகிற கட்டளை என்னவென்றால், பரலோகத்தின் தேவனுடைய நியாயப்பிரமாணத்தைப் போதிக்கும் வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியன் நூறு தாலந்து வெள்ளி, நூறுகலக்கோதுமை, நூறுகலத் திராட்சரசம், நூறுகலம் எண்ணெய்மட்டும் உங்களைக் கேட்பவை எல்லாவற்றையும்,

22வேண்டிய உப்பையும், தாமதமில்லாமல் கொடுக்கவும்,

23பரலோகத்தின் தேவனுடைய கற்பனையின்படியே, எது தேவையாயிருக்குமோ அதுவெல்லாம் பரலோகத்தின் தேவனுடைய ஆலயத்திற்கு ஜாக்கிரதையாய்ச் செலுத்தப்படவும் வேண்டும்; ராஜாவும் அவர் குமாரரும் ஆளும் ராஜ்யத்தின்மேல் கடுங்கோபம் வருவானேன்.

24பின்னும் ஆசாரியரும், லேவியரும், பாடகரும், வாசல் காவலாளரும், நிதனீமியரும், தேவனுடைய ஆலயத்தின் பணிவிடைக்காரருமான ஒருவன்மேலும் பகுதியாகிலும் தீர்வையாகிலும் ஆயமாகிலும் சுமத்தலாகாதென்று அவர்களைக்குறித்து உங்களுக்கு அறியப்படுத்துகிறோம்.

25பின்னும் நதிக்கு அப்புறத்திலிருந்து உன் தேவனுடைய நியாயப்பிரமாணங்களை அறிந்த சகல ஜனங்களையும் நியாயம் விசாரிக்கத்தக்க துரைகளையும், நியாயாதிபதிகளையும், எஸ்றாவாகிய நீ உன்னிலுள்ள உன் தேவனுடைய ஞானத்தின்படியே ஏற்படுத்துவாயாக; அந்தப் பிரமாணங்களை அறியாதவர்களுக்கு அவைகளை உபதேசிக்கவுங்கடவாய்.

26உன் தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படியேயும், ராஜாவினுடைய நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்யாதவனெவனும் உடனே மரணத்துக்காகிலும், தேசத்துக்குப் புறம்பாக்குதலுக்காகிலும், அபராதத்துக்காகிலும், காவலுக்காகிலும் தீர்க்கப்பட்டுத் தண்டிக்கப்படக்கடவன் என்று எழுதியிருந்தது.

27எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்தை அலங்கரிக்க, இப்படிப்பட்ட யோசனையை ராஜாவின் இருதயத்தில் அருளி, ராஜாவுக்கும் அவருடைய மந்திரிமார்களுக்கும் ராஜாவின் கைக்குள்ளான பலத்த எல்லா மகாப்பிரபுக்களுக்கும் முன்பாக எனக்குத் தயவு கிடைக்கப்பண்ணின எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

28அப்படியே என் தேவனாகிய கர்த்தருடைய கரம் என்மேல் இருந்ததினால் நான் திடன்கொண்டு, இஸ்ரவேலில் சில தலைவரை என்னோடேகூட வரும்படி சேர்த்துக்கொண்டேன்.

அப்போஸ்தலர் 7

முழு அதிகாரம் ›

1பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: காரியம் இப்படியாயிருக்கிறது என்று கேட்டான்.

2அதற்கு அவன்: சகோதரரே, பிதாக்களே, கேளுங்கள். நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே குடியிருக்கிறதற்கு முன்னமே மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி:

3நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்கு வா என்றார்.

4அப்பொழுது அவன் கல்தேயர் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, காரானூரிலே வாசம்பண்ணினான். அவனுடைய தகப்பன் மரித்தபின்பு, அவ்விடத்தை விட்டு நீங்கள் இப்பொழுது குடியிருக்கிற இத்தேசத்திற்கு அவனை அழைத்துக்கொண்டுவந்து குடியிருக்கும்படி செய்தார்.

5இதிலே ஒரு அடி நிலத்தையாகிலும் அவனுடைய கையாட்சிக்குக் கொடாமலிருக்கையில், அவனுக்குப் பிள்ளையில்லாதிருக்கும்போது: உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் இதைச் சுதந்தரமாகத் தருவேன் என்று அவனுக்கு வாக்குத்தத்தம்பண்ணினார்.

6அந்தப்படி தேவன் அவனை நோக்கி: உன் சந்ததியார் அந்நிய தேசத்தில் சஞ்சரிப்பார்கள்; அத்தேசத்தார் அவர்களை அடிமைகளாக்கி, நானூறு வருஷம் துன்பப்படுத்துவார்கள்.

7அவர்களை அடிமைப்படுத்தும் ஜனத்தையோ நான் ஆக்கினைக்குட்படுத்துவேன். அதற்குப்பின்பு அவர்கள் புறப்பட்டுவந்து இவ்விடத்திலே எனக்கு ஆராதனை செய்வார்கள் என்றார்.

8மேலும் விருத்தசேதன உடன்படிக்கையையும் அவனுக்கு ஏற்படுத்தினார். அந்தப்படியே அவன் ஈசாக்கைப் பெற்றபோது, எட்டாம் நாளிலே அவனை விருத்தசேதனம்பண்ணினான். ஈசாக்கு யாக்கோபையும், யாக்கோபு பன்னிரண்டு கோத்திரப்பிதாக்களையும் பெற்றார்கள்.

9அந்தக் கோத்திரப்பிதாக்கள் பொறாமைகொண்டு யோசேப்பை எகிப்துக்குக் கொண்டுபோகும்படியாக விற்றுப்போட்டார்கள்.

10தேவனோ அவனுடனேகூட இருந்து, எல்லா உபத்திரவங்களினின்றும் அவனை விடுவித்து, எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் சமுகத்திலே அவனுக்குக் கிருபையையும் ஞானத்தையும் அருளினார்; அந்த ராஜா அவனை எகிப்துதேசத்திற்கும் தன் வீடனைத்திற்கும் அதிகாரியாக ஏற்படுத்தினான்.

11பின்பு எகிப்து கானான் என்னும் தேசங்களிலெங்கும் பஞ்சமும் மிகுந்த வருத்தமும் உண்டாகி, நம்முடைய பிதாக்களுக்கு ஆகாரம் கிடையாமற்போயிற்று.

12அப்பொழுது எகிப்திலே தானியம் உண்டென்று யாக்கோபு கேள்விப்பட்டு, நம்முடைய பிதாக்களை முதலாந்தரம் அனுப்பினான்.

13இரண்டாந்தரம் யோசேப்பு தன்னுடைய சகோதரருக்குத் தன்னைத் தெரியப்படுத்தினான். யோசேப்புடைய வம்சமும் பார்வோனுக்குத் தெரியவந்தது.

14பின்பு யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபும் தன்னுடைய இனத்தார் யாவருமாகிய, எழுபத்தைந்துபேரை அழைக்க அனுப்பினான்.

15அந்தப்படி யாக்கோபு எகிப்துக்குப் போனான். அவனும் நம்முடைய பிதாக்களும் மரித்து,

16அங்கேயிருந்து சீகேமுக்குக் கொண்டுவரப்பட்டு, ஆபிரகாம் சீகேமின் தகப்பனாகிய ஏமோருடைய சந்ததியாரிடத்தில் ரொக்கக்கிரயத்துக்கு வாங்கியிருந்த கல்லறையில் வைக்கப்பட்டார்கள்.

17ஆபிரகாமுக்கு தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்தம் நிறைவேறுங்காலம் சமீபித்தபோது,

18யோசேப்பை அறியாத வேறொரு ராஜா தோன்றின காலமளவும், ஜனங்கள் எகிப்திலே பலுகிப் பெருகினார்கள்.

19அவன் நம்முடைய ஜனங்களை வஞ்சனையாய் நடப்பித்து, நம்முடைய பிதாக்களின் குழந்தைகள் உயிரோடிராதபடிக்கு அவர்கள் அவைகளை வெளியே போட்டுவிடும்படி செய்து, அவர்களை உபத்திரவப்படுத்தினான்.

20அக்காலத்திலே மோசே பிறந்து, திவ்விய சவுந்தரியமுள்ளவனாயிருந்து, மூன்று மாதமளவும் தன் தகப்பன் வீட்டிலே வளர்க்கப்பட்டான்.

21அவன் வெளியே போட்டுவிடப்பட்டபோது, பார்வோனுடைய குமாரத்தி அவனை எடுத்துத் தனக்குப் பிள்ளையாக வளர்த்தாள்.

22மோசே எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான்.

23அவனுக்கு நாற்பது வயதானபோது, இஸ்ரவேல் புத்திரராகிய தன்னுடைய சகோதரரைக் கண்டு சந்திக்கும்படி அவனுடைய இருதயத்தில் எண்ணமுண்டாயிற்று.

24அப்பொழுது அவர்களில் ஒருவன் அநியாயமாய் நடத்தப்படுகிறதை அவன் கண்டு, அவனுக்குத் துணைநின்று, எகிப்தியனை வெட்டி, துன்பப்பட்டவனுக்கு நியாயஞ்செய்தான்.

25தன்னுடைய கையினாலே தேவன் தங்களுக்கு இரட்சிப்பைத் தருவாரென்பதைத் தன்னுடைய சகோதரர் அறிந்து கொள்வார்களென்று அவன் நினைத்தான்; அவர்களோ அதை அறியவில்லை.

26மறுநாளிலே சண்டைபண்ணிக்கொண்டிருக்கிற இரண்டுபேருக்கு அவன் எதிர்ப்பட்டு: மனுஷரே, நீங்கள் சகோதரராயிருக்கிறீர்கள்; ஒருவருக்கொருவர் அநியாயஞ்செய்கிறதென்ன என்று, அவர்களைச் சமாதானப்படுத்தும்படி பேசினான்.

27பிறனுக்கு அநியாயஞ்செய்தவன் அவனைப் பிடித்துத் தள்ளி: எங்கள்மேல் அதிகாரியாகவும், நியாயாதிபதியாகவும் உன்னை ஏற்படுத்தினவன் யார்?

28நேற்று நீ அந்த எகிப்தியனைக் கொன்றதுபோல என்னையும் கொன்றுபோட மனதாயிருக்கிறாயோ என்றான்.

29இந்த வார்த்தையினிமித்தம் மோசே ஓடிப்போய், மீதியான் தேசத்திலே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்; அங்கே இருக்கும்போது அவனுக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள்.

30நாற்பது வருஷம் சென்றபின்பு, சீனாய்மலையின் வனாந்தரத்திலே கர்த்தருடைய தூதனானவர் முட்செடி எரிகிற அக்கினிஜூவாலையிலே அவனுக்குத் தரிசனமானார்.

31மோசே அந்தத் தரிசனத்தைக் கண்டு, அதிசயப்பட்டு, அதை உற்றுப்பார்க்கும்படி சமீபித்துவருகையில்:

32நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்று கர்த்தர் திருவுளம்பற்றின சத்தம் அவனுக்கு உண்டாயிற்று, அப்பொழுது மோசே நடுக்கமடைந்து, உற்றுப்பார்க்கத் துணியாமலிருந்தான்.

33பின்னும் கர்த்தர் அவனை நோக்கி: உன் பாதங்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாயிருக்கிறது.

34எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, அவர்களை விடுவிக்கும்படி இறங்கினேன்; ஆகையால், நீ வா, நான் உன்னை எகிப்திற்கு அனுப்புவேன் என்றார்.

35உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார் என்று சொல்லி அவர்கள் மறுதலித்திருந்த இந்த மோசேயைத்தானே தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார்.

36இவனே அவர்களை அங்கேயிருந்து அழைத்துக்கொண்டுவந்து, எகிப்து தேசத்திலேயும் சிவந்த சமுத்திரத்திலேயும், நாற்பது வருஷகாலமாய் வனாந்தரத்திலேயும், அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.

37இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்கள் சகோதரரிலிருந்து என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக எழும்பப்பண்ணுவார், அவருக்குச் செவிகொடுப்பீர்களாக என்று சொன்னவன் இந்த மோசேயே.

38சீனாய்மலையில் தன்னுடனே பேசின தூதனோடும் நம்முடைய பிதாக்களோடுங்கூட வனாந்தரத்திலே சபைக்குள்ளிருந்தவனும், நமக்குக் கொடுக்கும்படி ஜீவவாக்கியங்களைப் பெற்றவனும் இவனே.

39இவனுக்கு நம்முடைய பிதாக்கள் கீழ்ப்படிய மனதாயிராமல், இவனைத் தள்ளிவிட்டு, தங்கள் இருதயங்களில் எகிப்துக்குத் திரும்பி,

40ஆரோனை நோக்கி: எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும் என்று சொல்லி;

41அந்நாட்களில் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி, அந்த விக்கிரகத்திற்குப் பலியிட்டு, தங்கள் கையின் கிரியைகளில் களிகூர்ந்தார்கள்.

42அப்பொழுது தேவன் அவர்களை விட்டு விலகி, வானசேனைக்கு ஆராதனை செய்ய அவர்களை ஒப்புக்கொடுத்தார். அதைக்குறித்து: இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்தரத்திலிருந்த நாற்பது வருஷம்வரையில் காணிக்கைகளையும் பலிகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ என்றும்,

43பணிந்துகொள்ளும்படி நீங்கள் உண்டாக்கின சொரூபங்களாகிய மோளோகினுடைய கூடாரத்தையும், உங்கள் தேவனாகிய ரெம்பான் என்னும் நட்சத்திர சொரூபத்தையும் சுமந்தீர்களே; ஆகையால் உங்களைப் பாபிலோனுக்கு அப்புறத்திலே குடிபோகப்பண்ணுவேன் என்றும், தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதே.

44மேலும் நீ பார்த்த மாதிரியின்படியே சாட்சியின் கூடாரத்தை உண்டுபண்ணுவாயாக என்று மோசேயுடனே பேசினவர் கட்டளையிட்டபிரகாரமாக, அந்தக் கூடாரம் வனாந்தரத்திலே நம்முடைய பிதாக்களோடு இருந்தது.

45மேலும், யோசுவாவுடனேகூட நம்முடைய பிதாக்கள் அதைப் பெற்றுக்கொண்டு, தேவன் அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட புறஜாதிகளுடைய தேசத்தை அவர்கள் கட்டிக்கொள்ளுகையில், அதை அந்த தேசத்தில் கொண்டு வந்து தாவீதின் நாள்வரைக்கும் வைத்திருந்தார்கள்.

46இவன் தேவனிடத்தில் தயவு பெற்றபடியினால், யாக்கோபின் தேவனுக்கு ஒரு வாசஸ்தலத்தைத் தான் கட்டவேண்டுமென்று விண்ணப்பம்பண்ணினான்.

47சாலொமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான்.

48ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார்.

49வானம் எனக்குச் சிங்காசனமும் பூமி எனக்குப் பாதபடியுமாயிருக்கிறது; எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்; நான் தங்கியிருக்கத்தக்க ஸ்தலம் எது;

50இவைகள் எல்லாவற்றையும் என்னுடைய கரம் உண்டாக்கவில்லையா என்று கர்த்தர் உரைக்கிறார் என்று தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே.

51வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைப்போல நீங்களும் பரிசுத்த ஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள்.

52தீர்க்கதரிசிகளில் யாரை உங்கள் பிதாக்கள் துன்பப்படுத்தாமலிருந்தார்கள்? நீதிபரருடைய வருகையை முன்னறிவித்தவர்களையும் அவர்கள் கொலைசெய்தார்கள். இப்பொழுது நீங்கள் அவருக்குத் துரோகிகளும் அவரைக் கொலைசெய்த பாதகருமாயிருக்கிறீர்கள்.

53தேவதூதரைக்கொண்டு நீங்கள் நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருந்தும், அதைக் கைக்கொள்ளாமற்போனீர்கள் என்றான்.

54இவைகளை அவர்கள் கேட்டபொழுது. மூர்க்கமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தார்கள்.

55அவன் பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவனாய், வானத்தை அண்ணாந்துபார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் கண்டு:

56அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான்.

57அப்பொழுது அவர்கள் உரத்த சத்தமாய்க் கூக்குரலிட்டுத் தங்கள் காதுகளை அடைத்துக்கொண்டு, ஒருமனப்பட்டு அவன்மேல் பாய்ந்து,

58அவனை நகரத்துக்குப் புறம்பே தள்ளி, அவனைக் கல்லெறிந்தார்கள். சாட்சிக்காரர் தங்கள் வஸ்திரங்களைக் கழற்றி, சவுல் என்னப்பட்ட ஒரு வாலிபனுடைய பாதத்தினருகே வைத்தார்கள்.

59அப்பொழுது: கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள்.

60அவனோ, முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப்பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com