‹ முகப்புமுழுத் திட்டம்

ஜனவரி 8 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்ஜனவரி 8அடுத்த நாள் ›
குடும்பம்

ஆதியாகமம் 8

முழு அதிகாரம் ›

1தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினார்; தேவன் பூமியின்மேல் காற்றை வீசப்பண்ணினார், அப்பொழுது ஜலம் அமர்ந்தது.

2ஆழத்தின் ஊற்றுக்கண்களும், வானத்தின் மதகுகளும் அடைபட்டன; வானத்து மழையும் நின்றுபோயிற்று.

3ஜலம் பூமியிலிருந்து நாளுக்குநாள் வற்றிக்கொண்டே வந்தது; நூற்றைம்பது நாளுக்குப்பின்பு ஜலம் வடிந்தது.

4ஏழாம் மாதம் பதினேழாம் தேதியிலே பேழை அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கிற்று.

5பத்தாம் மாதம் மட்டும் ஜலம் வடிந்துகொண்டே வந்தது; பத்தாம் மாதம் முதல் தேதியிலே மலைச்சிகரங்கள் காணப்பட்டன.

6நாற்பது நாள் சென்றபின், நோவா தான் பேழையில் செய்திருந்த ஜன்னலைத் திறந்து,

7ஒரு காகத்தை வெளியே விட்டான்; அது புறப்பட்டுப் பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும் வருகிறதுமாய் இருந்தது.

8பின்பு பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்றோ என்று அறியும்படி, ஒரு புறாவைத் தன்னிடத்திலிருந்து வெளியே விட்டான்.

9பூமியின்மீதெங்கும் ஜலம் இருந்தபடியால், அந்தப் புறா தன் உள்ளங்கால் வைத்து இளைப்பாற இடம் காணாமல், திரும்பிப் பேழையிலே அவனிடத்தில் வந்தது; அவன் தன் கையை நீட்டி அதைப்பிடித்துத் தன்னிடமாகப் பேழைக்குள் சேர்த்துக்கொண்டான்.

10பின்னும் ஏழு நாள் பொறுத்து, மறுபடியும் புறாவைப் பேழையிலிருந்து வெளியே விட்டான்.

11அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்தில் வந்து சேர்ந்தது; இதோ, அது கொத்திக்கொண்டுவந்த ஒரு ஒலிவமரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதினாலே நோவா பூமியின்மேல் ஜலம் குறைந்துபோயிற்று என்று அறிந்தான்.

12பின்னும் ஏழு நாள் பொறுத்து, அவன் புறாவை வெளியே விட்டான்; அது அவனிடத்திற்குத் திரும்பி வரவில்லை.

13அவனுக்கு அறுநூற்றொரு வயதாகும் வருஷத்தில், முதல் மாதம் முதல் தேதியிலே பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போயிற்று; நோவா பேழையின் மேல்தட்டை எடுத்துப்பார்த்தான்; பூமியின்மேல் ஜலம் இல்லாதிருந்தது.

14இரண்டாம் மாதம் இருபத்தேழாம் தேதியிலே பூமி காய்ந்திருந்தது.

15அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி:

16நீயும், உன்னோடேகூட உன் மனைவியும், உன் குமாரரும், உன் குமாரரின் மனைவிகளும் பேழையை விட்டுப் புறப்படுங்கள்.

17உன்னிடத்தில் இருக்கிற சகலவித மாம்சஜந்துக்களாகிய பறவைகளையும், மிருகங்களையும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளையும் உன்னோடே வெளியே வரவிடு; அவைகள் பூமியிலே திரளாய் வர்த்தித்து, பூமியின்மேல் பலுகிப் பெருகக்கடவது என்றார்.

18அப்பொழுது நோவாவும், அவன் குமாரரும், அவன் மனைவியும், அவன் குமாரரின் மனைவிகளும் புறப்பட்டு வந்தார்கள்.

19பூமியின்மேல் நடமாடுகிற சகல மிருகங்களும், ஊருகிற சகல பிராணிகளும், சகல பறவைகளும் ஜாதிஜாதியாய்ப் பேழையிலிருந்து புறப்பட்டு வந்தன.

20அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான்.

21சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார். அப்பொழுது கர்த்தர்: இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை; மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கி பொல்லாததாயிருக்கிறது; நான் இப்பொழுது செய்ததுபோல, இனி சகல ஜீவன்களையும் சங்கரிப்பதில்லை.

22பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்.

1அவர் மலையிலிருந்து இறங்கினபோது, திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள்.

2அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான்.

3இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்.

4இயேசு அவனை நோக்கி: இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு; ஆயினும், அவர்களுக்குச் சாட்சியாக நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து என்றார்.

5இயேசு கப்பர்நகூமில் பிரவேசித்தபோது, நூற்றுக்கு அதிபதி ஒருவன் அவரிடத்தில் வந்து:

6ஆண்டவரே! என் வேலைக்காரன் வீட்டிலே திமிர்வாதமாய்க் கிடந்து கொடிய வேதனைப்படுகிறான் என்று அவரை வேண்டிக்கொண்டான்.

7அதற்கு இயேசு: நான் வந்து அவனைச் சொஸ்தமாக்குவேன் என்றார்.

8நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக: ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும்; அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.

9நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான் என்றான்.

10இயேசு இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்குப் பின்செல்லுகிறவர்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

11அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து, பரலோகராஜ்யத்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள்.

12ராஜ்யத்தின் புத்திரரோ, புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

13பின்பு இயேசு நூற்றுக்கு அதிபதியை நோக்கி: நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நாழிகையிலே அவன் வேலைக்காரன் சொஸ்தமானான்.

14இயேசு பேதுருவின் வீட்டிலே வந்து, அவன் மாமி ஜூரமாய்க் கிடக்கிறதைக் கண்டார்.

15அவர் அவள் கையைத் தொட்டவுடனே ஜூரம் அவளைவிட்டு நீங்கிற்று; அவள் எழுந்திருந்து, அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.

16அஸ்தமனமானபோது, பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர் அந்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தி, பிணியாளிகளெல்லாரையும் சொஸ்தமாக்கினார்.

17அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

18பின்பு, திரளான ஜனங்கள் தம்மைச் சூழ்ந்திருக்கிறதை இயேசு கண்டு, அக்கரைக்குப் போகக் கட்டளையிட்டார்.

19அப்பொழுது, வேதபாரகன் ஒருவன் வந்து: போதகரே! நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.

20அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.

21அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.

22அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார்.

23அவர் படவில் ஏறினபோது அவருடைய சீஷர்கள் அவருக்குப் பின்சென்று ஏறினார்கள்.

24அப்பொழுது படவு அலைகளினால் மூடப்படத்தக்கதாய்க் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று. அவரோ நித்திரையாயிருந்தார்.

25அப்பொழுது, அவருடைய சீஷர்கள் வந்து, அவரை எழுப்பி: ஆண்டவரே! எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம் என்றார்கள்.

26அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார், உடனே, மிகுந்த அமைதல் உண்டாயிற்று.

27அந்த மனுஷர்கள் ஆச்சரியப்பட்டு: இவர் எப்படிப்பட்டவரோ, காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்றார்கள்.

28அவர் அக்கரையிலே கெர்கெசேனர் நாட்டில் வந்தபோது, பிசாசு பிடித்திருந்த இரண்டுபேர் பிரேதக்கல்லறைகளிலிருந்து புறப்பட்டு, அவருக்கு எதிராக வந்தார்கள்; அவர்கள் மிகவும் கொடியராயிருந்தபடியால், அந்த வழியாக ஒருவனும் நடக்கக்கூடாதிருந்தது.

29அவர்கள் அவரை நோக்கி: இயேசுவே, தேவனுடைய குமாரனே, எங்களுக்கும் உமக்கும் என்ன? காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ என்று கூப்பிட்டார்கள்.

30அவர்களுக்குக் கொஞ்சதூரத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன.

31அப்பொழுது, பிசாசுகள்: நீர் எங்களைத் துரத்துவீரானால், நாங்கள் அந்தப் பன்றிக்கூட்டத்தில் போகும்படி உத்தரவுகொடும் என்று அவரை வேண்டிக்கொண்டன.

32அதற்கு அவர்: போங்கள் என்றார். அவைகள் புறப்பட்டு, பன்றிக்கூட்டத்தில் போயின; அப்பொழுது, பன்றிக்கூட்டமெல்லாம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து ஜலத்தில் மாண்டுபோயின.

33அவைகளை மேய்த்தவர்கள் ஓடி, பட்டணத்தில் சென்று, இந்தச் சங்கதிகள் எல்லாவற்றையும், பிசாசு பிடித்திருந்தவர்களுக்குச் சம்பவித்தவைகளையும் அறிவித்தார்கள்.

34அப்பொழுது, அந்தப் பட்டணத்தார் யாவரும் இயேசுவுக்கு எதிர்கொண்டுவந்து, அவரைக் கண்டு, தங்கள் எல்லைகளைவிட்டுப் போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள்.

தனிவாசிப்பு

1அர்தசஷ்டா ராஜா அரசாளும் காலத்தில் பாபிலோனிலிருந்து என்னோடேகூட வந்த தங்கள் பிதாக்கள் வம்சங்களின் தலைவரும் அவர்கள் வம்ச அட்டவணைகளுமாவன:

2பினெகாசின் புத்திரரில் கெர்சோம், இத்தாமாரின் புத்திரரில் தானியேல், தாவீதின் புத்திரரில் அத்தூஸ்,

3பாரோஷின் புத்திரரில் ஒருவனான செக்கனியாவின் புத்திரரில் சகரியாவும், அவனோடேகூட வம்ச அட்டவணையில் எழுதியிருக்கிற நூற்றைம்பது ஆண்மக்களும்,

4பாகாத்மோவாபின் புத்திரரில் செரகியாவின் குமாரனாகிய எலியோனாயும், அவனோடேகூட இருநூறு ஆண்மக்களும்,

5செக்கனியாவின் புத்திரரில் யகசியேலின் குமாரனும், அவனோடேகூட முந்நூறு ஆண்மக்களும்,

6ஆதினின் புத்திரரில் யோனத்தானின் குமாரனாகிய ஏபேதும், அவனோடேகூட ஐம்பது ஆண்மக்களும்,

7ஏலாமின் புத்திரரில் அதலியாவின் குமாரனாகிய எஷாயாவும், அவனோடேகூட எழுபது ஆண்மக்களும்,

8செப்பதியாவின் புத்திரரில் மிகவேலின் குமாரனாகிய செப்பதியாவும், அவனோடேகூட எண்பது ஆண்மக்களும்,

9யோவாபின் புத்திரரில் யெகியேலின் குமாரனாகிய ஒபதியாவும், அவனோடேகூட இருநூற்றுப் பதினெட்டு ஆண்மக்களும்,

10செலோமித்தின் புத்திரரில் யொசிபியாவின் குமாரனும், அவனோடேகூட நூற்றறுபது ஆண்மக்களும்,

11பெயாயின் புத்திரரில் பெயாயின் குமாரனாகிய சகரியாவும், அவனோடேகூட இருபத்தெட்டு ஆண்மக்களும்,

12அஸ்காதின் புத்திரரில் காத்தானின் குமாரனாகிய யோகனானும், அவனோடேகூட நூற்றுப்பத்து ஆண்மக்களும்,

13அதோனிகாமின் கடைசிப் புத்திரரான எலிபேலேத், ஏயெல், செமாயா என்னும் நாமங்களுள்ளவர்களும், அவர்களோடேகூட அறுபது ஆண்மக்களும்,

14பிக்வாயின் புத்திரரில் ஊத்தாயும், சபூதும், அவர்களோடேகூட எழுபது ஆண்மக்களுமே.

15இவர்களை நான் அகாவாவுக்கு ஓடுகிற நதியண்டையிலே கூட்டிக்கொண்டுபோனேன்; அங்கே மூன்று நாள் தங்கியிருந்தோம்; நான் ஜனங்களையும் ஆசாரியரையும் பார்வையிடும்போது, லேவியின் புத்திரரில் ஒருவரையும் அங்கே காணவில்லை.

16ஆகையால் நான் எலியேசர், அரியேல், செமாயா, எல்நாத்தான், யாரிப், எல்நாத்தான், நாத்தான், சகரியா, மிசுல்லாம் என்னும் தலைவரையும், யோயாரிப், எல்நாத்தான் என்னும் புத்திமான்களையும் அழைப்பித்து,

17கசிப்பியா என்னும் ஸ்தலத்திலிருக்கிற தலைவனாகிய இத்தோவிடத்திற்குச் செய்தி கொண்டுபோக அவர்களுக்குக் கற்பித்து, நமது தேவனுடைய ஆலயத்துப் பணிவிடைக்காரரை எங்களிடத்திற்கு அழைத்துவரும்படி, அவர்கள் கசிப்பியா என்னும் ஸ்தலத்திலிருக்கிற தங்கள் சகோதரனாகிய இத்தோவுக்கும், நிதனீமியருக்கும் சொல்லவேண்டிய வார்த்தைகளைச் சொல்லிக்கொடுத்தேன்.

18அவர்கள் எங்கள் மேலிருந்த எங்கள் தேவனுடைய தயையுள்ள கரத்தின்படியே, இஸ்ரவேலுக்குப் பிறந்த லேவியின் குமாரனாகிய மகேலியின் புத்திரரில் புத்தியுள்ள மனுஷனாகிய செரெபியாவும் அவன் குமாரரும் சகோதரருமான பதினெட்டுப்பேரையும்,

19மெராரியரின் புத்திரரில் அஷபியாவும் அவனோடே எஷாயாவும் அவன் சகோதரரும் அவர்கள் குமாரருமான இருபதுபேரையும்,

20தாவீதும் பிரபுக்களும் லேவியருக்குப் பணிவிடைக்காரராக வைத்த நிதனீமியரில் இருநூற்று இருபது பேரையும், எங்களிடத்தில் அழைத்துக் கொண்டு வந்தார்கள்; அவர்கள் எல்லாருடைய பேர்களும் குறிக்கப்பட்டன.

21அப்பொழுது நாங்கள் எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களைத் தாழ்த்துகிறதற்கும், எங்களுக்காகவும் எங்கள் பிள்ளைகளுக்காகவும் எங்கள் சகல பொருள்களுக்காகவும் செவ்வையான வழியைத் தேடுகிறதற்கும், நான் அங்கே அந்த அகாவா நதியண்டையிலே உபவாசத்தைக் கூறினேன்.

22வழியிலே சத்துருவை விலக்கி, எங்களுக்குத் துணைசெய்யும்படிக்கு, நான் ராஜாவினிடத்தில் சேவகரையும் குதிரைவீரரையும் கேட்க வெட்கப்பட்டிருந்தேன்; எங்கள் தேவனுடைய கரம் தம்மைத் தேடுகிறவர்கள் எல்லார் மேலும் அவர்களுக்கு நன்மையாக இருக்கிறதென்றும், அவருடைய வல்லமையும் அவருடைய கோபமும் அவரை விட்டு விலகுகிறவர்கள் எல்லார்மேலும் இருக்கிறதென்றும், நாங்கள் ராஜாவுக்குச் சொல்லியிருந்தோம்.

23அப்படியே நாங்கள் உபவாசம்பண்ணி, எங்கள் தேவனிடத்திலே அதைத் தேடினோம்; எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்.

24பின்பு நான் ஆசாரியரின் தலைவரிலே பன்னிரண்டுபேராகிய செரெபியாவையும், அஷ்பியாவையும், அவர்கள் சகோதரரிலே பத்துப்பேரையும் பிரித்தெடுத்து,

25ராஜாவும், அவருடைய ஆலோசனைக்காரரும், அவருடைய பிரபுக்களும், அங்கேயிருந்த சகல இஸ்ரவேலரும், எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கென்று எடுத்துக்கொடுத்த காணிக்கையாகிய வெள்ளியையும், பொன்னையும், பணிமுட்டுகளையும் அவர்களிடத்தில் நிறுத்துக் கொடுத்தேன்.

26அவர்கள் கையிலே நான் அறுநூற்று ஐம்பது தாலந்து வெள்ளியையும், நூறு தாலந்து நிறையான வெள்ளிப் பணிமுட்டுகளையும், நூறுதாலந்து பொன்னையும்,

27ஆயிரம் தங்கக்காசு பெறுமான இருபது பொற்கிண்ணங்களையும், பொன்னைப்போல எண்ணப்பட்ட பளபளப்பான இரண்டு நல்ல வெண்கலப்பாத்திரங்களையும் நிறுத்துக்கொடுத்து,

28அவர்களை நோக்கி: நீங்கள் கர்த்தருக்குப் பரிசுத்தமானவர்கள்; இந்தப் பணிமுட்டுகளும், உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தருக்கு மனஉற்சாகமாய்ச் செலுத்தப்பட்ட இந்த வெள்ளியும், இந்தப் பொன்னும் பரிசுத்தமானவைகள்.

29நீங்கள் அதை எருசலேமிலிருக்கிற தேவனுடைய ஆலயத்தின் அறைகளில் ஆசாரியர் லேவியருடைய பிரபுக்களுக்கும், இஸ்ரவேலுடைய வம்சத்தலைவர்களுக்கும் முன்பாக நிறுத்து ஒப்புவிக்குமட்டும் விழிப்பாயிருந்து, அதைக் காத்துக்கொள்ளுங்கள் என்றேன்.

30அப்படியே அந்த ஆசாரியரும் லேவியரும், அந்த வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் எருசலேமிலிருக்கிற எங்கள் தேவனுடைய ஆலயத்துக்குக் கொண்டுபோகும்படிக்கு, நிறுத்து வாங்கிக்கொண்டார்கள்.

31நாங்கள் எருசலேமுக்குப்போக, முதலாம் மாதம் பன்னிரண்டாந்தேதியிலே, அகாவா நதியைவிட்டுப் பயணம் புறப்பட்டோம்; எங்கள் தேவனுடைய கரம் எங்கள்மேலிருந்து, வழியிலே சத்துருவின் கைக்கும், பதிவிருக்கிறவர்களின் கைக்கும் எங்களைத் தப்புவித்தது.

32நாங்கள் எருசலேமுக்கு வந்து, அங்கே மூன்றுநாள் இருந்தபின்பு,

33நாலாம் நாளிலே அந்த வெள்ளியும் பொன்னும் பணிமுட்டுகளும், எங்கள் தேவனுடைய ஆலயத்தில் ஆசாரியனாகிய உரியாவின் குமாரன் மெரேமோத்தின் கையிலும், பினெகாசின் குமாரன் எலெயாசாரின் கையிலும், எல்லாவற்றிற்கும் இருந்த நிறையின்படியேயும் நிறுத்து, ஒப்புவிக்கப்பட்டது; யெசுவாவின் குமாரன் யோசபாத்தும், பின்னூயின் குமாரன் நொவதியாவும் என்கிற லேவியரும் அவர்களோடேகூட இருந்தார்கள்.

34அந்த நிறையெல்லாம் அக்காலத்தில் எழுதப்பட்டது.

35சிறைப்பட்டு மீண்டவர்கள் இஸ்ரவேலின் தேவனுக்குச் சர்வாங்க தகனபலிகளாக இஸ்ரவேல் அனைத்தினிமித்தம் பன்னிரண்டு காளைகளையும், தொண்ணூற்றாறு ஆட்டுக்கடாக்களையும், எழுபத்தேழு ஆட்டுக்குட்டிகளையும், பாவநிவாரணத்துக்காகப் பன்னிரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் பலியிட்டு, அவையெல்லாம் கர்த்தருக்குச் சர்வாங்கதகனபலியாகச் செலுத்தினார்கள்.

36பின்பு ராஜாவின் சன்னதுகளை நதிக்கு இப்புறத்திலிருக்கிற ராஜாவின் தேசாதிபதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் ஒப்புவித்தார்கள்; அப்பொழுது அவர்கள் ஜனங்களுக்கும் தேவனுடைய ஆலயத்துக்கும் உதவியாயிருந்தார்கள்.

அப்போஸ்தலர் 8

முழு அதிகாரம் ›

1அவனைக் கொலைசெய்கிறதற்குச் சவுலும் சம்மதித்திருந்தான். அக்காலத்திலே எருசலேமிலுள்ள சபைக்கு மிகுந்த துன்பம் உண்டாயிற்று. அப்போஸ்தலர்தவிர, மற்ற யாவரும் யூதேயா சமாரியா தேசங்களில் சிதறப்பட்டுப்போனார்கள்.

2தேவபக்தியுள்ள மனுஷர் ஸ்தேவானை எடுத்து அடக்கம்பண்ணி, அவனுக்காக மிகவும் துக்கங்கொண்டாடினார்கள்.

3சவுல் வீடுகள்தோறும் நுழைந்து, புருஷரையும் ஸ்திரீகளையும் இழுத்துக்கொண்டுபோய், காவலில் போடுவித்து, சபையைப் பாழாக்கிக்கொண்டிருந்தான்.

4சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷவசனத்தைப் பிரசங்கித்தார்கள்.

5அப்பொழுது பிலிப்பென்பவன் சமாரியாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குப் போய், அங்குள்ளவர்களுக்குக் கிறிஸ்துவைக்குறித்துப் பிரசங்கித்தான்.

6பிலிப்பு செய்த அதிசயங்களை ஜனங்கள் கேள்விப்பட்டு கண்டு, அவனால் சொல்லப்பட்டவைகளை ஒருமனப்பட்டுக் கவனித்தார்கள்.

7அநேகரிலிருந்த அசுத்தஆவிகள் மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டு அவர்களை விட்டுப் புறப்பட்டது. அநேகந்திமிர்வாதக்காரரும் சப்பாணிகளும் குணமாக்கப்பட்டார்கள்.

8அந்தப் பட்டணத்திலே மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று.

9சீமோன் என்று பேர்கொண்ட ஒரு மனுஷன் அந்தப் பட்டணத்திலே மாயவித்தைக்காரனாயிருந்து, தன்னை ஒரு பெரியவனென்று சொல்லி, சமாரியா நாட்டு ஜனங்களைப் பிரமிக்கப்பண்ணிக்கொண்டிருந்தான்.

10தேவனுடைய பெரிதான சக்தி இவன்தான் என்று எண்ணி, சிறியோர் பெரியோர் யாவரும் அவனுக்குச் செவிகொடுத்துவந்தார்கள்.

11அவன் அநேக காலமாய்த் தன்னுடைய மாயவித்தைகளினாலே அவர்களைப் பிரமிக்கப்பண்ணினதினால் அவனை மதித்துவந்தார்கள்.

12தேவனுடைய ராஜ்யத்துக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய நாமத்துக்கும் ஏற்றவைகளைக்குறித்து, பிலிப்பு பிரசங்கித்ததை அவர்கள் விசுவாசித்தபோது, புருஷரும் ஸ்திரீகளும் ஞானஸ்நானம்பெற்றார்கள்.

13அப்பொழுது சீமோனும் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று, பிலிப்பைப்பற்றிக்கொண்டு, அவனால் நடந்த அடையாளங்களையும் பெரிய அற்புதங்களையும் கண்டு பிரமித்தான்.

14சமாரியர் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டதை எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடத்திற்கு அனுப்பினார்கள்.

15இவர்கள் வந்தபொழுது அவர்களில் ஒருவனும் பரிசுத்தஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தைமாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு,

16அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி,

17அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றார்கள்.

18அப்போஸ்தலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்தஆவி தந்தருளப்படுகிறதைச் சீமோன் கண்டபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து:

19நான் எவன்மேல் என் கைகளை வைக்கிறேனோ, அவன் பரிசுத்த ஆவியைப் பெறத்தக்கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்றான்.

20பேதுரு அவனை நோக்கி: தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது.

21உன் இருதயம் தேவனுக்குமுன்பாகச் செம்மையாயிராதபடியால், இந்த விஷயத்திலே உனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை.

22ஆகையால் நீ உன் துர்க்குணத்தைவிட்டு மனந்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம்.

23நீ கசப்பான பிச்சிலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருக்கிறதாகக் காண்கிறேன் என்றான்.

24அதற்குச் சீமோன்: நீங்கள் சொன்ன காரியங்களில் ஒன்றும் எனக்கு நேரிடாதபடிக்கு, எனக்காகக் கர்த்தரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றான்.

25இவ்விதமாய் அவர்கள் கர்த்தருடைய வசனத்தைச் சாட்சியாய் அறிவித்துச் சொன்னபின்பு, சமாரியருடைய அநேக கிராமங்களில் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, எருசலேமுக்குத் திரும்பி வந்தார்கள்.

26பின்பு கர்த்தருடைய தூதன் பிலிப்பை நோக்கி: நீ எழுந்து, தெற்கு முகமாய் எருசலேமிலிருந்து காசா பட்டணத்துக்குப் போகிற வனாந்தரமார்க்கமாய்ப் போ என்றான்.

27அந்தப்படி அவன் எழுந்துபோனான். அப்பொழுது எத்தியோப்பியருடைய ராஜஸ்திரீயாகிய கந்தாகே என்பவளுக்கு மந்திரியும் அவளுடைய பொக்கிஷமெல்லாவற்றிற்கும் தலைவனுமாயிருந்த எத்தியோப்பியனாகிய ஒருவன் பணிந்துகொள்ளும்படி எருசலேமுக்கு வந்திருந்து;

28ஊருக்குத் திரும்பிப்போகும்போது, தன் இரதத்திலே உட்கார்ந்து, ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசித்துக் கொண்டிருந்தான்.

29ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார்.

30அப்பொழுது பிலிப்பு ஓடிப்போய்ச்சேர்ந்து, அவன் ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசிக்கிறதைக் கேட்டு: நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா என்றான்.

31அதற்கு அவன்: ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும் என்று சொல்லி; பிலிப்பு ஏறி, தன்னோடே உட்காரும்படி அவனை வேண்டிக்கொண்டான்.

32அவன் வாசித்த வேதவாக்கியம் என்னவென்றால்: அவர் ஒரு ஆட்டைப்போல அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்; மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டுக்குட்டியைப்போல அவர் தமது வாயைத் திறவாதிருந்தார்.

33அவர் தம்மைத் தாழ்த்தினபோது அவருடைய நியாயம் எடுத்துப்போடப்பட்டது; அவருடைய ஜீவன் பூமியிலிருந்து எடுபட்டுப்போயிற்று; அவருடைய வம்சத்தை யாராலே சொல்லிமுடியும் என்பதே.

34மந்திரி பிலிப்பை நோக்கி: தீர்க்கதரிசி யாரைக்குறித்து இதைச் சொல்லுகிறார்? தம்மைக்குறித்தோ, வேறொருவரைக்குறித்தோ? எனக்குச் சொல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.

35அப்பொழுது பிலிப்பு பேசத்தொடங்கி, இந்த வேதவாக்கியத்தை முன்னிட்டு இயேசுவைக்குறித்து அவனுக்குப் பிரசங்கித்தான்.

36இவ்விதமாய் அவர்கள் வழிநடந்துபோகையில், தண்ணீருள்ள ஓரிடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது மந்திரி: இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன என்றான்.

37அதற்குப் பிலிப்பு: நீர் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் தடையில்லையென்றான். அப்பொழுது அவன்: இயேசு கிறிஸ்துவைத் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறேன் என்று சொல்லி;

38இரதத்தை நிறுத்தச்சொன்னான். அப்பொழுது பிலிப்பும் மந்திரியும் ஆகிய இருவரும் தண்ணீரில் இறங்கினார்கள், பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானங்கொடுத்தான்.

39அவர்கள் தண்ணீரிலிருந்து கரையேறினபொழுது, கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்பைக் கொண்டுபோய்விட்டார். மந்திரி அப்புறம் அவனைக் காணாமல், சந்தோஷத்தோடே தன் வழியே போனான்.

40பிலிப்பு ஆசோத்திலே காணப்பட்டு, அவ்விடத்திலிருந்து பிரயாணம்பண்ணி, செசரியாவுக்கு வருகிறவரையில் சகல பட்டணங்களிலும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக்கொண்டுவந்தான்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com