‹ முகப்புமுழுத் திட்டம்

ஜூலை 11 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்ஜூலை 11அடுத்த நாள் ›
குடும்பம்
யோசுவா 14

1கானான் தேசத்திலே இஸ்ரவேல் புத்திரர் சுதந்தரித்துக்கொண்ட தேசங்களை ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரப் பிதாக்களின் தலைவரும், கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடி சீட்டுப்போட்டு,

2ஒன்பதரைக் கோத்திரங்களுக்கும் சுதந்தரமாகப் பங்கிட்டார்கள்.

3மற்ற இரண்டரைக் கோத்திரங்களுக்கும் மோசே யோர்தானுக்கு அப்புறத்திலே சுதந்தரம் கொடுத்திருந்தான்; லேவியருக்கு மாத்திரம் அவர்கள் நடுவே சுதந்தரம் கொடுக்கவில்லை.

4மனாசே எப்பிராயீம் என்னும் யோசேப்பின் புத்திரர் இரண்டு கோத்திரங்களானார்கள்; ஆதலால் அவர்கள் லேவியருக்கு தேசத்திலே பங்குகொடாமல், குடியிருக்கும்படி பட்டணங்களையும், அவர்களுடைய ஆடுமாடுகள் முதலான சொத்துக்காக வெளிநிலங்களையுமாத்திரம் அவர்களுக்குக் கொடுத்தார்கள்.

5கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி இஸ்ரவேல் புத்திரர் செய்து, தேசத்தைப் பங்கிட்டார்கள்.

6அப்பொழுது யூதாவின் புத்திரர் கில்காலிலே யோசுவாவினிடத்தில் வந்தார்கள்; கேனாசியனான எப்புன்னேயின் குமாரனாகிய காலேப் அவனை நோக்கி: காதேஸ்பர்னெயாவிலே கர்த்தர் என்னைக்குறித்தும் உம்மைக்குறித்தும் தேவனுடைய மனுஷனாகிய மோசேயோடே சொன்ன வார்த்தையை நீர் அறிவீர்.

7தேசத்தை வேவுபார்க்கக் கர்த்தரின் தாசனாகிய மோசே என்னைக் காதேஸ்பர்னெயாவிலிருந்து அனுப்புகிறபோது, எனக்கு நாற்பது வயதாயிருந்தது; என் இருதயத்திலுள்ளபடியே அவருக்கு மறுசெய்தி கொண்டு வந்தேன்.

8ஆனாலும் என்னோடேகூட வந்த என் சகோதரர் ஜனத்தின் இருதயத்தைக் கரையப்பண்ணினார்கள்; நானோ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினேன்.

9அந்நாளிலே மோசே: நீ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியினால், உன் கால் மிதித்த தேசம் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் என்றைக்கும் சுதந்தரமாயிருக்கக்கடவது என்று சொல்லி ஆணையிட்டார்.

10இப்போதும், இதோ, கர்த்தர் சொன்னபடியே என்னை உயிரோடே காத்தார்; இஸ்ரவேலர் வனாந்தரத்தில் சஞ்சரிக்கையில், கர்த்தர் அந்த வார்த்தையை மோசேயோடே சொல்லி இப்போது நாற்பத்தைந்து வருஷமாயிற்று; இதோ, இன்று நான் எண்பத்தைந்து வயதுள்ளவன்.

11மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள் வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது.

12ஆகையால் கர்த்தர் அந்நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்குத்தாரும்; அங்கே ஏனாக்கியரும், அரணிப்பான பெரிய பட்டணங்களும் உண்டென்று நீர் அந்நாளிலே கேள்விப்பட்டீரே; கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன் என்றான்.

13அப்பொழுது யோசுவா: எப்புன்னேயின் குமாரனாகிய காலேபை ஆசீர்வதித்து, எபிரோனை அவனுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தான்.

14ஆதலால் கேனாசியனான எப்புன்னேயின் குமாரனாகிய காலேப் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய் பின்பற்றினபடியினால், இந்நாள்மட்டும் இருக்கிறபடி, எபிரோன் அவனுக்குச் சுதந்தரமாயிற்று.

15முன்னே எபிரோனுக்குக் கீரியாத் அர்பா என்று பேரிருந்தது; அர்பா என்பவன் ஏனாக்கியருக்குள்ளே பெரிய மனுஷனாயிருந்தான்; யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாயிருந்தது.

யோசுவா 15

1யூதா புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்குவீதமாவது: ஏதோமின் எல்லைக்கு அருகான சீன்வனாந்தரமே தென்புறத்தின் கடையெல்லை.

2தென்புறமான அவர்களுடைய எல்லை உப்புக்கடலின் கடைசியில் தெற்கு முகமாயிருக்கிற முனைதுவக்கி,

3தென்புறத்திலிருக்கிற அக்ராபீமின் மேடுகளுக்கும், அங்கேயிருந்து சீனுக்கும் போய், தெற்கேயிருக்கிற காதேஸ்பர்னெயாவுக்கு ஏறி, எஸ்ரோனைக் கடந்து, ஆதாருக்கு ஏறி, கர்க்காவைச் சுற்றிப் போய்,

4அஸ்மோனுக்கும், அங்கேயிருந்து எகிப்தின் ஆற்றுக்கும் சென்று, கடல் மட்டும் போய் முடியும்; இதுவே உங்களுக்குத் தென்புறமான எல்லையாயிருக்கும் என்றான்.

5கீழ்ப்புறமான எல்லை, யோர்தான் முகத்துவாரமட்டும் இருக்கிற உப்புக்கடல். வடபுறமான எல்லை, யோர்தான் முகத்துவாரமிருக்கிற கடலின் முனைதுவக்கி,

6பெத்எக்லாவுக்கு ஏறி, வடக்கேயிருக்கிற பெத்அரபாவைக் கடந்து, ரூபனின் குமாரனாகிய போகனின் கல்லுக்கு ஏறிப்போய்,

7அப்புறம் ஆகோர் பள்ளத்தாக்கைவிட்டுத் தெபீருக்கு ஏறி, வடக்கே ஆற்றின் தென்புறமான அதும்மீமின் மேட்டுக்கு முன்பாக இருக்கிற கில்காலுக்கு நேராகவும், அங்கேயிருந்து என்சேமேசின் தண்ணீரிடத்துக்கும் போய், ரொகேல் என்னும் கிணற்றுக்குச் சென்று,

8அப்புறம் எபூசியர் குடியிருக்கிற எருசலேமுக்குத் தென்புறமாய் இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கைக் கடந்து, வடக்கேயிருக்கிற இராட்சதருடைய பள்ளத்தாக்கின் கடைசியில் மேற்காக இன்னோம் பள்ளத்தாக்கின் முன்னிருக்கிற மலையின் சிகரமட்டும் ஏறிப்போய்,

9அந்த மலையின் சிகரத்திலிருந்து நெப்தோவாவின் நீரூற்றுக்குப் போய், எப்பெரோன் மலையின் பட்டணங்களுக்குச் சென்று, கீரியாத்யெயாரீமாகிய பாலாவுக்குப் போய்,

10பாலாவிலிருந்து மேற்கே சேயீர் மலைக்குத் திரும்பி, வடக்கே இருக்கிற கெசலோனாகிய யெயாரீம் மலைக்குப் பக்கமாகப் போய், பெத்ஷிமேசுக்கு இறங்கி, திம்னாவுக்குப் போய்,

11அப்புறம் வடக்கேயிருக்கிற எக்ரோனுக்குப் பக்கமாய்ச் சென்று, சிக்ரோனுக்கு ஓடி, பாலாமலையைக் கடந்து, யாப்னியேலுக்குச் சென்று, கடலிலே முடியும்.

12மேற்புறமான எல்லை, பெரிய சமுத்திரமே; இது யூதா புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி சுற்றிலுமிருக்கும் எல்லை.

13எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்கு, யோசுவா, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடி, ஏனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனை, யூதா புத்திரரின் நடுவே, பங்காகக் கொடுத்தான்.

14அங்கேயிருந்த சேசாய், அகீமான், தல்மாய் என்னும் ஏனாக்கின் மூன்று குமாரரையும் காலேப் துரத்திவிட்டு,

15அங்கேயிருந்து தெபீரின் குடிகளிடத்திற்குப் போனான்; முற்காலத்திலே தெபீரின் பேர் கீரியாத்செப்பேர்.

16கீரியாத்செப்பேரை சங்காரம்பண்ணிப் பிடிக்கிறவனுக்கு, என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம்பண்ணிக்கொடுப்பேன் என்று காலேப் சொன்னான்.

17அப்பொழுது காலேபின் சகோதரனாகிய கேனாசின் மகன் ஒத்னியேல் அதைப் பிடித்தான்; ஆகையால் தன் குமாரத்தி அக்சாளை அவனுக்கு விவாகம்பண்ணிக்கொடுத்தான்.

18அவள் புறப்படுகையில், என் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று அவனிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கழுதையின்மேலிருந்து இறங்கினாள். காலேப் பார்த்து: உனக்கு என்னவேண்டும் என்றான்.

19அப்பொழுது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; எனக்கு வறட்சியான நிலத்தைத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலத்தையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது அவளுக்கு மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.

20யூதா புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான சுதந்தரம் என்னவென்றால்:

21கடையாந்தரத் தென்புறமான ஏதோமின் எல்லைக்கு நேராய், யூதா புத்திரரின் கோத்திரத்திற்குக் கிடைத்த பட்டணங்களாவன: கப்செயேல், ஏதேர், யாகூர்,

22கீனா. திமோனா, ஆதாதா,

23கேதேஸ், ஆத்சோர், இத்னான்,

24சீப், தேலெம், பெயாலோத்,

25ஆத்சோர், அதாத்தா, கீரியோத், எஸ்ரோன் என்னும் ஆத்சோர்,

26ஆமாம், சேமா, மொலாதா,

27ஆத்சார்காதா, எஸ்மோன், பெத்பாலேத்,

28ஆத்சார்சுவால், பெயர்செபா, பிஸ்யோத்யா,

29பாலா, ஈயிம், ஆத்சேம்,

30எல்தோலாத், கெசீல், ஒர்மா,

31சிக்லாக், மத்மன்னா, சன்சன்னா,

32லெபாயோத், சில்லீம், ஆயின், ரிம்மோன் என்பவைகள்; எல்லாப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட இருபத்தொன்பது.

33பள்ளத்தாக்கு நாட்டில் எஸ்தாவோல், சோரியா, அஷ்னா,

34சனோகா, என்கன்னீம், தப்புவா, ஏனாம்,

35யர்மூத், அதுல்லாம், சோக்கோ, அசேக்கா,

36சாராயீம், அதித்தாயீம், கெதேரா, கேதெரொத்தாயீம்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட பதினான்கு.

37சேனான், அதாஷா, மிக்தால்காத்,

38திலியான், மிஸ்பே, யோக்தெயேல்,

39லாகீஸ், போஸ்காத், எக்லோன்,

40காபோன், லகமாம், கித்லீஷ்,

41கெதெரோத், பெத்டாகோன், நாகமா, மக்கேதா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பதினாறு.

42லிப்னா, ஏத்தேர், ஆஷான்,

43இப்தா, அஸ்னா, நெத்சீப்,

44கேகிலா, அக்சீப், மரேஷா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஒன்பது.

45எக்ரோனும் அதின் வெளிநிலங்களும் கிராமங்களும்,

46எக்ரோன் துவக்கிச் சமுத்திரம் மட்டும், அஸ்தோத்தின் புறத்திலிருக்கிற சகல ஊர்களும், அவைகளின் கிராமங்களும்,

47அஸ்தோத்தும், அதின் வெளிநிலங்களும் கிராமங்களும், காசாவும் எகிப்தின் நதிமட்டுமிருக்கிற அதின் வெளிநிலங்களும் கிராமங்களுமே; பெரிய சமுத்திரமே எல்லை.

48மலைகளில், சாமீர், யாத்தீர், சோக்கோ,

49தன்னா, தெபீர் என்னப்பட்ட கீரியாத்சன்னா,

50ஆனாப், எஸ்தெமொ, ஆனீம்,

51கோசேன், ஓலோன், கிலொ; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பதினொன்று.

52அராப், தூமா, எஷியான்,

53யானூம், பெத்தப்புவா, ஆப்பெக்கா,

54உம்தா, எபிரோனாகிய கீரியாத் அர்பா, சீயோர்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஒன்பது.

55மாகோன், கர்மேல், சீப், யுத்தா,

56யெஸ்ரயேல், யொக்தெயாம், சனோகா,

57காயின், கிபியா, திம்னா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பத்து.

58அல்கூல், பெத்சூர், கெதோர்,

59மகாராத், பெதானோத், எல்தெகோன்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஆறு.

60கீரியாத்யெயாரீமாகிய கீரியாத்பாகால், ரபா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட இரண்டு.

61வனாந்தரத்தில், பெத்அரபா, மித்தீன், செக்காக்கா,

62நிப்சான், உப்புப்பட்டணம், என்கேதி; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஆறு.

63எருசலேமிலே குடியிருந்த எபூசியரை யூதா புத்திரர் துரத்திவிடக்கூடாமற்போயிற்று; ஆகையால் இந்நாள்மட்டும் எபூசியர் யூதா புத்திரரோடே எருசலேமிலே குடியிருக்கிறார்கள்.

சங்கீதம் 146-147

முழு அதிகாரம் ›
சங்கீதம் 146

1அல்லேலூயா, என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி.

2நான் உயிரோடிருக்குமட்டும் கர்த்தரைத் துதிப்பேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம் பண்ணுவேன்.

3பிரபுக்களையும், இரட்சிக்கத்திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள்.

4அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோகும்.

5யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்.

6அவர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவையும் உண்டாக்கினவர்; அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர்.

7அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்; கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார்.

8குருடரின் கண்களைக் கர்த்தர் திறக்கிறார்; மடங்கடிக்கப்பட்டவர்களைக் கர்த்தர் தூக்கிவிடுகிறார். நீதிமான்களைக் கர்த்தர் சிநேகிக்கிறார்.

9பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்; அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்; துன்மார்க்கரின் வழியையோ கவிழ்த்துப் போடுகிறார்.

10கர்த்தர் சதாகாலங்களிலும் அரசாளுகிறார்; சீயோனே, உன் தேவன் தலைமுறை தலைமுறையாகவும் ராஜரிகம்பண்ணுகிறார். அல்லேலூயா.

சங்கீதம் 147

1கர்த்தரைத் துதியுங்கள்; நம்முடைய தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது.

2கர்த்தர் எருசலேமைக் கட்டுகிறார்; துரத்துண்ட இஸ்ரவேலரைக் கூட்டிச் சேர்க்கிறார்.

3இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.

4அவர் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார்.

5நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாயிருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது.

6கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்; துன்மார்க்கரைத் தரைமட்டும் தாழ்த்துகிறார்.

7கர்த்தரைத் துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள்; நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் கீர்த்தனம் பண்ணுங்கள்.

8அவர் வானத்தை மேகங்களால் மூடி, பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி, மலைகளில் புல்லை முளைப்பிக்கிறார்.

9அவர் மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்.

10அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாயிரார்; வீரனுடைய கால்களில் பிரியப்படார்.

11தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.

12எருசலேமே, கர்த்தரை ஸ்தோத்திரி; சீயோனே, உன் தேவனைத் துதி.

13அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்.

14அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உசிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.

15அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார்; அவருடைய சொல் மகா தீவிரமாய்ச் செல்லுகிறது.

16பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார்.

17அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார்; அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்?

18அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகப்பண்ணுகிறார்; தமது காற்றை வீசும்படி செய்ய, தண்ணீர்கள் ஓடும்.

19யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும், இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார்.

20அவர் வேறே எந்த ஜாதிக்கும் இப்படிச் செய்ததில்லை; அவருடைய நியாயங்களை அறியாமற் போகிறார்கள். அல்லேலூயா.

தனிவாசிப்பு

1கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வசனம்:

2நீ கர்த்தருடைய ஆலயத்தின் வாசலிலே நின்று, அங்கே கூறிச் சொல்லவேண்டிய வசனம் என்னவென்றால், கர்த்தரைப் பணிந்துகொள்ள இந்த வாசல்களுக்குள்ளே பிரவேசிக்கிற யூத ஜனங்களாகிய நீங்களெல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

3இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: உங்கள் வழிகளையும் உங்கள் கிரியையகளையும் சீர்ப்படுத்துங்கள், அப்பொழுது உங்களை இந்த ஸ்தலத்திலே குடியிருக்கப்பண்ணுவேன்.

4கர்த்தரின் ஆலயம், கர்த்தரின் ஆலயம், கர்த்தரின் ஆலயம் இதுவே என்று சொல்லி, பொய்வார்த்தைகளை நம்பிக்கொள்ளாதிருங்கள்.

5நீங்கள் உங்கள் வழிகளையும் உங்கள் கிரியைகளையும் நன்றாய்ச் சீர்ப்படுத்தி, நீங்கள் மனுஷனுக்கும் மனுஷனுக்குமுள்ள வழக்கை நியாயமாய்த் தீர்த்து,

6பரதேசியையும் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்காமலும், குற்றமில்லாத இரத்தத்தை இந்த ஸ்தலத்திலே சிந்தாமலும்; உங்களுக்குக் கேடுண்டாக அந்நிய தேவர்களைப் பின்பற்றாமலும் இருப்பீர்களேயாகில்,

7அப்பொழுது நான் உங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசமாகிய இந்த ஸ்தலத்திலே உங்களைச் சதாகாலமும் குடியிருக்கப்பண்ணுவேன்.

8இதோ, ஒன்றுக்கும் உதவாத பொய்வார்த்தைகளை நீங்கள் நம்புகிறீர்கள்.

9நீங்கள் திருடி, கொலைசெய்து, விபசாரம்பண்ணி, பொய்யாணையிட்டு, பாகாலுக்குத் தூபங்காட்டி, நீங்கள் அறியாத அந்நிய தேவர்களைப் பின்பற்றி,

10பிற்பாடு வந்து, என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயத்திலே எனக்கு முன்பாக நின்று: இந்த அருவருப்புகளையெல்லாம் செய்வதற்காக விடுதலை பெற்றிருக்கிறோமென்று சொல்வீர்களோ?

11என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயம் உங்கள் பார்வைக்குக் கள்ளர் குகையாயிற்றோ? இதோ, நானும் இதைக் கண்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

12நான் முந்தி என் நாமம் விளங்கப்பண்ணின சீலோவிலுள்ள என் ஸ்தலத்துக்கு நீங்கள் போய், இஸ்ரவேல் ஜனத்தினுடைய பொல்லாப்பினிமித்தம் நான் அதற்குச் செய்ததைப் பாருங்கள்.

13நீங்கள் இந்தக் கிரியைகளையெல்லாம் செய்தீர்கள், நான் உங்களுக்கு எற்கனவே சொல்லி வந்திருந்தும், நீங்கள் கேளாமலும், நான் உங்களைக் கூப்பிட்டும், நீங்கள் உத்தரவுகொடாமலும் போனபடியினால்,

14என் நாமம் தரிக்கப்பட்டதும், நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறதுமான இந்த ஆலயத்துக்கும், உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் நான் கொடுத்த ஸ்தலத்துக்கும், நான் சீலோவுக்குச் செய்ததுபோலச் செய்வேன்.

15நான் உங்களுடைய எல்லாச் சகோதரருமாகிய எப்பிராயீம் சந்ததி அனைத்தையும் தள்ளிப்போட்டதுபோல, உங்களையும் என் முகத்தைவிட்டுத் தள்ளிப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

16நீ இந்த ஜனத்துக்காக விண்ணப்பம் செய்யவேண்டாம்; அவர்களுக்காக மன்றாடவும் கெஞ்சவும் வேண்டாம், என்னிடத்தில் அவர்களுக்காகப் பரிந்துபேசவும் வேண்டாம், நான் உனக்குச் செவிகொடுப்பதில்லை.

17யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் அவர்கள் செய்கிறதை நீ காணவில்லையா?

18எனக்கு மனமடிவுண்டாக அந்நிய தேவர்களுக்குப் பானபலிகளை வார்க்கிறார்கள்; அவர்கள் வானராக்கினிக்குப் பணியாரங்களைச் சுடும்படி பிள்ளைகள் விறகு பொறுக்குகிறார்கள், பிதாக்கள் நெருப்பு மூட்டுகிறார்கள், ஸ்திரீகள் மாப்பிசைகிறார்கள்.

19அவர்கள் எனக்கா மனமடிவுண்டாக்குகிறார்கள்? தங்கள் முகங்கள் வெட்கத்துக்குட்படும்படி அவர்கள் தங்களுக்கே அல்லவோ மனமடிவுண்டாக்குகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

20ஆதலால் இதோ, என் கோபமும் என் உக்கிரமும் இந்த ஸ்தலத்தின்மேலும், மனுஷர்மேலும், மிருகங்கள்மேலும், வெளியின் மரங்கள்மேலும், பூமியின் கனிகள்மேலும் ஊற்றப்படும்; அது அவியாமல் எரியும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

21இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறதென்னவென்றால்: உங்கள் தகனபலிகளை மற்றப் பலிகளோடுங்கூட்டி, இறைச்சியைச் சாப்பிடுங்கள்.

22நான் உங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்து வந்த நாளிலே, தகனபலியைக்குறித்தும், மற்ற பலிகளைக்குறித்தும் நான் அவர்களோடே பேசினதையும் கட்டளையிட்டதையும் பார்க்கிலும்,

23என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்; நான் உங்களுக்குக் கற்பிக்கும் எல்லாவழியிலும், நீங்கள் உங்களுக்கு நன்மையுண்டாகும்படிக்கு நடவுங்கள் என்கிற விசேஷத்தையே அவர்களுக்குச் சொல்லிக் கட்டளையிட்டேன்.

24அவர்களோ அதைக் கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும்போய், தங்கள் பொல்லாத இருதயத்தின் யோசனைகளின்படியும் கடினத்தின்படியும் நடந்து, முன்னிட்டல்ல பின்னிட்டே போனார்கள்.

25உங்கள் பிதாக்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாள்முதல் இந்நாள்மட்டும் நான் தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரையெல்லாம் தினந்தினம் உங்களண்டைக்கு ஏற்கனவே அனுப்பிக்கொண்டிருந்தேன்.

26ஆனாலும் அவர்கள் என் சொல்லைக்கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும் போய், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, தங்கள் பிதாக்களைப்பார்க்கிலும் அதிக பொல்லாப்பு செய்தார்கள்.

27நீ இந்த வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்குச் சொன்னாலும், அவர்கள் உனக்குச் செவிகொடுக்கமாட்டார்கள்; நீ அவர்களை நோக்கிக் கூப்பிட்டாலும், அவர்கள் உனக்கு மறுஉத்தரவு கொடுக்கமாட்டார்கள்.

28ஆகையால் தங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தைக் கேளாமலும், புத்தியை ஏற்றுக்கொள்ளாமலும் இருக்கிற ஜாதி இதுதான் என்றும், சத்தியம் அழிந்து, அது அவர்கள் வாயிலிருந்து அற்றுப்போனதென்றும் அவர்களுக்குச் சொல்.

29நீ உன் தலைமயிரைச் சிரைத்து, எறிந்துவிட்டு, உயர்தலங்களிலே புலம்பிக்கொண்டிரு; கர்த்தர் தமது சினத்துக்கு ஏதுவான சந்ததியை வெறுத்து நெகிழவிட்டார்.

30யூதா புத்திரர் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் நாமம் தரித்திருக்கிற ஆலயத்தைத் தீட்டுப்படுத்தத் தங்கள் அருவருப்புகளை அதிலே வைத்தார்கள்.

31தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் அக்கினியிலே தகனிக்கிறதற்காக, அவர்கள் இன்னோம் குமாரனின் பள்ளத்தாக்கிலுள்ள தோப்பேத்தின் மேடைகளைக் கட்டினார்கள்; அதை நான் கட்டளையிடவுமில்லை, அது என் மனதில் தோன்றவுமில்லை.

32ஆதலால், இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார்; அப்பொழுது அது அப்புறம் தோப்பேத் என்றும், இன்னோம் குமாரனின் பள்ளத்தாக்கென்றும் சொல்லப்படாமல், சங்காரப்பள்ளத்தாக்கென்று சொல்லப்படும்; தோப்பேத்திலே இடங்கிடையாமற்போகுமட்டும் சவங்களை அடக்கம்பண்ணுவார்கள்.

33இந்த ஜனத்தின் பிணங்கள் ஆகாயத்தின் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்; அவைகளை வெருட்டுவாரும் இல்லாதிருப்பார்கள்.

34நான் யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் களிப்பின் சத்தத்தையும், மகிழ்ச்சியின் சத்தத்தையும், மணவாளனின் சத்தத்தையும், மணவாட்டியின் சத்தத்தையும் ஓயப்பண்ணுவேன்; தேசம் பாழாகும்.

1அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகேயுக்கு வந்தபோது, இயேசுவானவர் சீஷரில் இரண்டுபேரை நோக்கி:

2உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; போனவுடனே, அங்கே ஒரு கழுதையையும் அதனோடே ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அவைகளை அவிழ்த்து என்னிடத்தில் கொண்டுவாருங்கள்.

3ஒருவன் உங்களுக்கு ஏதாகிலும் சொன்னால்: இவைகள் ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அவைகளை அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்.

4இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராய், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள் என்று,

5தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.

6சீஷர்கள் போய், இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து,

7கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்து, அவைகள்மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டு, அவரை ஏற்றினார்கள்.

8திரளான ஜனங்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள்.

9முன்நடப்பாரும் பின்நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.

10அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள்.

11அதற்கு ஜனங்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.

12இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்திலே விற்கிறவர்களும் கொள்ளுகிறவர்களுமாகிய யாவரையும் வெளியே துரத்தி, காசுக்காரருடைய பலகைகளையும் புறா விற்கிறவர்களின் ஆசனங்களையும் கவிழ்த்து:

13என்னுடைய வீடு ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்றார்.

14அப்பொழுது, குருடரும் சப்பாணிகளும் தேவாலயத்திலே அவரிடத்திற்கு வந்தார்கள், அவர்களைச் சொஸ்தமாக்கினார்.

15அவர் செய்த அதிசயங்களையும், தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! என்று தேவாலயத்திலே ஆர்ப்பரிக்கிற பிள்ளைகளையும், பிராதன ஆசாரியரும் வேதபாரகரும் கண்டு, கோபமடைந்து,

16அவரை நோக்கி: இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ என்றார்கள். அதற்கு இயேசு: ஆம், கேட்கிறேன். குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா என்றார்.

17அவர்களை விட்டு நகரத்திலிருந்து புறப்பட்டு, பெத்தானியாவுக்குப் போய், அங்கே இராத்தங்கினார்.

18காலையிலே அவர் நகரத்துக்குத் திரும்பிவருகையில், அவருக்குப் பசியுண்டாயிற்று.

19அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைக் கண்டு, அதினிடத்திற் போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையுங்காணாமல்: இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போயிற்று.

20சீஷர்கள் அதைக் கண்டு: இந்த அத்திமரம் எத்தனை சீக்கிரமாய்ப் பட்டுப்போயிற்று! என்று சொல்லி ஆச்சரியப்பட்டார்கள்.

21இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாயிருந்தால், இந்த அத்திமரத்திற்குச் செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப்பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

22மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.

23அவர் தேவாலயத்தில் வந்து, உபதேசம்பண்ணுகையில், பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அவரிடத்தில் வந்து: நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? என்று கேட்டார்கள்.

24இயேசு பிரதியுத்தரமாக: நானும் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுவீர்களானால், நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லுவேன்.

25யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ? யாரால் உண்டாயிற்று? என்று கேட்டார். அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று நம்மைக் கேட்பார்;

26மனுஷரால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், ஜனங்களுக்குப் பயப்படுகிறோம், எல்லாரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறார்களே என்று, தங்களுக்குள்ளே ஆலோசனைபண்ணி,

27இயேசுவுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது, அவர்: நானும் இன்ன அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லேன் என்றார்.

28ஆயினும், உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்; மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சத்தோட்டத்தில் வேலைசெய் என்றான்.

29அதற்கு அவன்: மாட்டேன் என்றான்; ஆகிலும், பின்பு அவன் மனஸ்தாபப்பட்டுப்போனான்.

30இளையவனிடத்திலும் அவன் வந்து, அப்படியே சொன்னான்; அதற்கு அவன்: போகிறேன் ஐயா, என்று சொல்லியும், போகவில்லை.

31இவ்விருவரில் எவன் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்தவன் என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: மூத்தவன்தான் என்றார்கள். அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

32ஏனென்றால், யோவான் நீதிமார்க்கமாய் உங்களிடத்தில் வந்திருந்தும், நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை; ஆயக்காரரும் வேசிகளுமோ அவனை விசுவாசித்தார்கள்; அதை நீங்கள் கண்டும், அவனை விசுவாசிக்கும்படியாகப் பின்பாகிலும் மனஸ்தாபப்படவில்லை என்றார்.

33வேறொரு உவமையைக் கேளுங்கள்: வீட்டெஜமானாகிய ஒரு மனுஷன் இருந்தான், அவன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஒரு ஆலையை நாட்டி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு, புறதேசத்துக்குப் போயிருந்தான்.

34கனிகாலம் சமீபித்தபோது, அதின் கனிகளை வாங்கிக்கொண்டுவரும்படி தன் ஊழியக்காரரைத் தோட்டக்காரரிடத்தில் அனுப்பினான்.

35தோட்டக்காரர் அந்த ஊழியக்காரரைப்பிடித்து, ஒருவனை அடித்து, ஒருவனைக் கொலைசெய்து, ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.

36பின்னும் அவன் முந்தினவர்களிலும் அதிகமான வேறே ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களையும் அப்படியே செய்தார்கள்.

37கடைசியிலே அவன்: என் குமாரனுக்கு அஞ்சுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான்.

38தோட்டக்காரர் குமாரனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி; இவனைக் கொன்று, இவன் சுதந்தரத்தைக் கட்டிக்கொள்ளுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு;

39அவனைப் பிடித்துத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளிக் கொலைசெய்தார்கள்.

40அப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் வரும்போது, அந்தத் தோட்டக்காரரை என்ன செய்வான் என்று கேட்டார்.

41அதற்கு அவர்கள்: அந்தக் கொடியரைக் கொடுமையாய் அழித்து, ஏற்ற காலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கத்தக்க வேறே தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்தைக் குத்தகையாகக் கொடுப்பான் என்றார்கள்.

42இயேசு அவர்களை நோக்கி: வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று, அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருக்காலும் வாசிக்கவில்லையா?

43ஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்.

44இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

45பிரதான ஆசாரியரும் பரிசேயரும் அவருடைய உவமைகளைக் கேட்டு, தங்களைக்குறித்துச் சொல்லுகிறார் என்று அறிந்து,

46அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆகிலும் ஜனங்கள் அவரைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியினால் அவர்களுக்குப் பயந்திருந்தார்கள்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com