‹ முகப்புமுழுத் திட்டம்

ஜூலை 12 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்ஜூலை 12அடுத்த நாள் ›
குடும்பம்
யோசுவா 16

1யோசேப்பின் புத்திரருக்கு விழுந்த சீட்டினால் அகப்பட்ட பங்குவீதமாவது: எரிகோவின் அருகே இருக்கிற யோர்தானிலிருந்து, யோர்தானுக்குக் கிழக்கான தண்ணீருக்குப் போய், எரிகோ துவக்கிப் பெத்தேலின் மலைகள் மட்டுமுள்ள வனாந்தர வழியாகவும் சென்று,

2பெத்தேலிலிருந்து லூசுக்குப் போய், அர்கீயினுடைய எல்லையாகிய அதரோத்தைக் கடந்து,

3மேற்கே யப்லெத்தியரின் எல்லைக்கும் தாழ்வான பெத்தொரோன் காசேர் என்னும் எல்லைகள் மட்டும் இறங்கி, சமுத்திரம்வரைக்கும் போய் முடியும்.

4இதை யோசேப்பின் புத்திரராகிய மனாசேயும் எப்பிராயீமும் சுதந்தரித்தார்கள்.

5எப்பிராயீம் புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான சுதந்தரத்தினுடைய கிழக்கு எல்லை, அதரோத் அதார் துவக்கி, மேலான பெத்தொரோன்மட்டும் போகிறது.

6மேற்கு எல்லை மிக்மேத்தாத்திற்கு வடக்காகச் சென்று, கிழக்கே தானாத்சீலோவுக்குத் திரும்பி, அதை யநோகாவுக்குக் கிழக்காகக் கடந்து,

7யநோகாவிலிருந்து அதரோத்திற்கும் நகராத்திற்கும் இறங்கி, எரிகோவின் அருகே வந்து, யோர்தானுக்குச் செல்லும்.

8தப்புவாவிலிருந்து மேற்கு எல்லை, கானாநதிக்குப் போய், சமுத்திரத்திலே முடியும்; இது எப்பிராயீம் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி உண்டான சுதந்தரம்.

9பின்னும் எப்பிராயீம் புத்திரருக்குப் பிரத்தியேகமாய்க் கொடுக்கப்பட்ட பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமெல்லாம் மனாசே புத்திரருடைய சுதந்தரத்தின் நடுவே இருக்கிறது.

10அவர்கள் காசேரிலே குடியிருந்த கானானியரைத் துரத்திவிடவில்லை; ஆகையால் கானானியர், இந்நாள்மட்டும் இருக்கிறபடி, எப்பிராயீமருக்குள்ளே குடியிருந்து, பகுதிகட்டுகிறவர்களாய்ச் சேவிக்கிறார்கள்.

யோசுவா 17

1மனாசே கோத்திரத்திற்கும் பங்கு கிடைத்தது; அவன் யோசேப்புக்கு முதற்பேறானவன்; மனாசேயின் மூத்தகுமாரனும் கிலெயாத்தின் தகப்பனுமான மாகீர் யுத்தமனுஷனானபடியினால், கீலேயாத்தும், பாசானும் அவனுக்குக் கிடைத்தது.

2அபியேசரின் புத்திரரும், ஏலேக்கின் புத்திரரும், அஸ்ரியேலின் புத்திரரும், செகேமின் புத்திரரும், எப்பேரின் புத்திரரும், செமீதாவின் புத்திரருமான மனாசேயினுடைய மற்றக் குமாரரின் புத்திரராகிய அபியேசரின் வம்சங்களுக்குத் தக்க சுதந்தரம் கொடுக்கப்பட்டது. தங்கள் வம்சங்களுக்குள்ளே அவர்களே யோசேப்புடைய குமாரனாகிய மனாசேயின் ஆண்பிள்ளைகளாயிருந்தார்கள்.

3மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குப் பிறந்த கிலெயாத்தின் குமாரனாகிய எப்பேரின் மகன் செலொப்பியாத்துக்கு குமாரத்திகள் தவிர குமாரர் இல்லை; அவன் குமாரத்திகளின் நாமங்கள், மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவைகள்.

4அவர்கள் ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் நூனின் குமாரனாகிய யோசுவாவுக்கும் பிரபுக்களுக்கும் முன்பாகச் சேர்ந்துவந்து: எங்கள் சகோதரர் நடுவே எங்களுக்குச் சுதந்தரம் கொடுக்கும்படி கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டார் என்றார்கள்; ஆகையால் அவர்கள் தகப்பனுடைய சகோதரரின் நடுவே, கர்த்தருடைய வாக்கின்படி, அவர்களுக்குச் சுதந்தரம் கொடுத்தான்.

5யோர்தானுக்கு அப்புறத்திலே இருக்கிற கீலேயாத், பாசான் என்னும் தேசங்களையல்லாமல், மனாசேக்குச் சீட்டிலே விழுந்தது பத்துப் பங்குகளாம்.

6மனாசேயின் குமாரத்திகள் அவன் குமாரருக்குள்ளே சுதந்தரம் பெற்றார்கள்; மனாசேயின் மற்றப் புத்திரருக்கு கீலேயாத் தேசம் கிடைத்தது.

7மனாசேயின் எல்லை, ஆசேர் தொடங்கிச் சீகேமின் முன்னிருக்கிற மிக்மேத்தாவுக்கும், அங்கேயிருந்து வலதுபுறமாய் என்தப்புவாவின் குடிகளிடத்திற்கும் போகிறது.

8தப்புவாவின் நிலம் மனாசேக்குக் கிடைத்தது; மனாசேயின் எல்லையோடிருக்கிற தப்புவாவோ, எப்பிராயீம் புத்திரரின் வசமாயிற்று.

9அப்புறம் அந்த எல்லை கானா என்னும் ஆற்றுக்குப் போய், ஆற்றுக்குத் தெற்காக இறங்குகிறது; மனாசேயினுடைய பட்டணங்களின் நடுவே இருக்கிற அவ்விடத்துப் பட்டணங்கள் எப்பிராயீமுடையவைகள்; மனாசேயின் எல்லை ஆற்றுக்கு வடக்கேயிருந்து சமுத்திரத்திற்குப் போய் முடியும்.

10தென்நாடு எப்பிராயீமுடையது; வடநாடு மனாசேயினுடையது; சமுத்திரம் அதின் எல்லை; அது வடக்கே ஆசேரையும், கிழக்கே இசக்காரையும் தொடுகிறது.

11இசக்காரிலும் ஆசேரிலுமிருக்கிற மூன்று நாடுகளாகிய பெத்செயானும் அதின் ஊர்களும், இப்லெயாமும் அதின் ஊர்களும், தோரின் குடிகளும் அதின் ஊர்களும், எந்தோரின் குடிகளும் அதின் ஊர்களும், தானாகின் குடிகளும் அதின் ஊர்களும், மெகிதோவின் குடிகளும் அதின் ஊர்களும் மனாசேயினுடையவைகள்.

12மனாசேயின் புத்திரர் அந்தப் பட்டணங்களின் குடிகளைத் துரத்திவிடக்கூடாமற்போயிற்று; கானானியர் அந்தச் சீமையிலேதானே குடியிருக்கவேண்டுமென்று இருந்தார்கள்.

13இஸ்ரவேல் புத்திரர் பலத்தபோதும், கானானியரை முற்றிலும் துரத்திவிடாமல், அவர்களைப் பகுதிகட்டுகிறவர்களாக்கிக்கொண்டார்கள்.

14யோசேப்பின் புத்திரர் யோசுவாவை நோக்கி: கர்த்தர் எங்களை இதுவரைக்கும் ஆசீர்வதித்து வந்ததினால், நாங்கள் ஜனம் பெருத்தவர்களாயிருக்கிறோம்; நீர் எங்களுக்குச் சுதந்தரமாக ஒரே வீதத்தையும் ஒரே பங்கையும் கொடுத்தது என்ன என்று கேட்டார்கள்.

15அதற்கு யோசுவா: நீங்கள் ஜனம் பெருத்தவர்களாயும், எப்பிராயீம் மலைகள் உங்களுக்கு நெருக்கமாயுமிருந்தால், பெரிசியர் ரெப்பாயீமியர் குடியிருக்கிற காட்டுத் தேசத்துக்குப் போய் உங்களுக்கு இடம் உண்டாக்கிக்கொள்ளுங்கள் என்றான்.

16அதற்கு யோசேப்பின் புத்திரர்: மலைகள் எங்களுக்குப் போதாது; பள்ளத்தாக்கு நாட்டிலிருக்கிற பெத்செயானிலும், அதின் ஊர்களிலும், யெஸ்ரயேல் பள்ளத்தாக்கிலும் குடியிருக்கிற எல்லாக் கானானியரிடத்திலும் இருப்புரதங்கள் உண்டு என்றார்கள்.

17யோசுவா யோசேப்பு வம்சத்தாராகிய எப்பிராயீமியரையும் மனாசேயரையும் நோக்கி: நீங்கள் ஜனம்பெருத்தவர்கள், உங்களுக்கு மகா பராக்கிரமமும் உண்டு, ஒரு பங்குமாத்திரம் அல்ல, மலைத்தேசமும் உங்களுடையதாகும்.

18அது காடானபடியினாலே, அதை வெட்டித் திருத்துங்கள், அப்பொழுது அதின் கடையாந்தரமட்டும் உங்களுடையதாயிருக்கும்; கானானியருக்கு இருப்பு ரதங்கள் இருந்தாலும், அவர்கள் பலத்தவர்களாயிருந்தாலும், நீங்கள் அவர்களைத் துரத்திவிடுவீர்கள் என்றான்.

சங்கீதம் 148

முழு அதிகாரம் ›

1அல்லேலூயா, வானங்களில் உள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள்; உன்னதங்களில் அவரைத் துதியுங்கள்.

2அவருடைய தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்; அவருடைய சேனைகளே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்.

3சூரிய சந்திரரே, அவரைத் துதியுங்கள்; பிரகாசமுள்ள சகல நட்சத்திரங்களே, அவரைத் துதியுங்கள்.

4வானாதி வானங்களே, அவரைத் துதியுங்கள்; ஆகாயமண்டலத்தின் மேலுள்ள தண்ணீர்களே, அவரைத் துதியுங்கள்.

5அவைகள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவது; அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது.

6அவர் அவைகளை என்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நிலைக்கும்படி செய்தார்; மாறாத பிரமாணத்தை அவைகளுக்கு நியமித்தார்.

7பூமியிலுள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள்; மகாமச்சங்களே, சகல ஆழங்களே,

8அக்கினியே, கல்மழையே, உறைந்த மழையே, மூடுபனியே, அவர் சொற்படி செய்யும் பெருங்காற்றே,

9மலைகளே, சகல மேடுகளே, கனிமரங்களே, சகல கேதுருக்களே,

10காட்டுமிருகங்களே, சகல நாட்டு மிருகங்களே, ஊரும் பிராணிகளே, இறகுள்ள பறவைகளே,

11பூமியின் ராஜாக்களே, சகல ஜனங்களே, பிரபுக்களே, பூமியிலுள்ள சகல நியாயாதிபதிகளே,

12வாலிபரே, கன்னிகைகளே, முதிர் வயதுள்ளவர்களே, பிள்ளைகளே, கர்த்தரைத் துதியுங்கள்.

13அவர்கள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவர்கள்; அவருடைய நாமம் மாத்திரம் உயர்ந்தது; அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது.

14அவர் தம்முடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும், தம்மைச் சேர்ந்த ஜனமாகிய இஸ்ரவேல் புத்திரருக்கும் கொண்டாட்டமாக, தம்முடைய ஜனத்திற்கு ஒரு கொம்பை உயர்த்தினார். அல்லேலூயா.

தனிவாசிப்பு

1அக்காலத்திலே யூதாவினுடைய ராஜாக்களின் எலும்புகளையும், அவர்களுடைய பிரபுக்களின் எலும்புகளையும், ஆசாரியர்களின் எலும்புகளையும், தீர்க்கதரிசிகளின் எலும்புகளையும் எருசலேமுடைய குடிகளின் எலும்புகளையும், அவர்களுடைய பிரேதக்குழிகளிலிருந்து எடுத்து,

2அவர்கள் நேசித்ததும், சேவித்ததும், பின்பற்றினதும், நாடினதும், பணிந்துகொண்டதுமாயிருந்த சூரியனுக்கும், சந்திரனுக்கும், வானத்தின் சர்வசேனைக்கும் முன்பாக அவைகளைப் பரப்பிவைப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் வாரி அடக்கம்பண்ணப்படாமல் பூமியின்மேல் எருவாகும்.

3இந்தத் துஷ்ட வம்சத்தில் மீதியாயிருந்து, என்னால் எல்லா இடங்களிலும் துரத்திவிடப்பட்டு மீந்திருக்கிற யாவருக்கும், ஜீவனைப்பார்க்கிலும் மரணமே விருப்பமாயிருக்குமென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

4நீ அவர்களை நோக்கி: விழுந்தவர்கள் எழுந்திருக்கிறதில்லையோ? வழிதப்பிப் போனவர்கள் திரும்புகிறதில்லையோ?

5ஆனாலும் எருசலேமியராகிய இந்த ஜனம் என்றைக்கும் வழிதப்பிப்போகிறதென்ன? கபடத்தை உறுதியாய்ப் பிடித்திருக்கிறார்கள்; திரும்பமாட்டோம் என்கிறார்கள்.

6நான் கவனித்துக் கேட்டேன், அவர்கள் யதார்த்தம் பேசவில்லை; என்ன செய்தேனென்று சொல்லி, தன் பொல்லாப்பினிமித்தம் மனஸ்தாபப்படுகிறவன் ஒருவனுமில்லை; யுத்தத்துக்குள் பாய்கிற குதிரையைப்போல அவரவர் வேகமாய் ஓடிப்போனார்கள்.

7ஆகாயத்திலுள்ள நாரை முதலாய்த் தன் வேளையை அறியும்; காட்டுப்புறாவும், கொக்கும், தகைவிலான் குருவியும் தாங்கள் வரத்தக்க காலத்தை அறியும்; என் ஜனங்களோ கர்த்தரின் நியாயத்தை அறியார்கள் என்று கர்த்தர் உரைக்கிறாரென்று சொல்.

8நாங்கள் ஞானிகளென்றும், கர்த்தருடைய வேதம் எங்களிடத்திலிருக்கிறதென்றும் நீங்கள் சொல்லுகிறதெப்படி? மெய்யாகவே, இதோ, வேதபாரகரின் கள்ள எழுத்தாணி அதை அபத்தமாக்குகிறது.

9ஞானிகள் வெட்கி, கலங்கிப் பிடிபடுவார்கள்; இதோ, கர்த்தருடைய சொல்லை வெறுத்துப்போட்டார்கள், அவர்களுக்கு ஞானமேது?

10ஆகையால் அவர்களுடைய ஸ்திரீகளை அந்நியருக்கும், அவர்களுடைய வயல்களை அவைகளைக் கட்டிக்கொள்பவர்களுக்கும் கொடுப்பேன்; அவர்களிலே சிறியோர் தொடங்கிப் பெரியோர்மட்டும் ஒவ்வொருவரும் பொருளாசைக்காரராயிருக்கிறார்கள்; தீர்க்கதரிசிகள் தொடங்கி ஆசாரியர்கள் மட்டும் ஒவ்வொருவரும் பொய்யராயிருந்து,

11சமாதானமில்லாதிருந்தும், சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் ஜனமாகிய குமாரத்தியின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள்.

12தாங்கள் அருவருப்பானதைச் செய்ததினிமித்தம் வெட்கப்படுகிறார்களா? பரிச்சேதம் வெட்கப்படார்கள், நாணவும் அறியார்கள்; ஆகையால் விழுகிறவர்களுக்குள்ளே விழுவார்கள்; நான் அவர்களை விசாரிக்குங்காலத்திலே இடறுண்டுபோவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

13அவர்களை முற்றிலும் அழித்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; திராட்சச்செடியிலே குலைகள் இராது, அத்திமரத்திலே பழங்கள் இராது, இலையும் உதிரும், நான் அவர்களுக்குக் கொடுத்தது அவர்களைவிட்டுத் தாண்டிப்போகும் என்று சொல்.

14நாம் சும்மாயிருப்பானேன்? கூடி வாருங்கள்; நாம் அரணான பட்டணங்களுக்குள் பிரவேசித்து, அங்கே சங்காரமாவோம்; நாம் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தபடியால், நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மைச் சங்காரம்பண்ணி, நமக்குப் பிச்சுக்கலந்த தண்ணீரைக் குடிக்கக்கொடுக்கிறார்.

15சமாதானத்துக்குக் காத்திருந்தோம், பிரயோஜனமில்லை; ஆரோக்கிய காலத்துக்குக் காத்திருந்தோம், இதோ, ஆபத்து.

16தாணிலிருந்து அவர்களுடைய குதிரைகளின் மூச்செறிதல் கேட்கப்படுகிறது; அவர்களுடைய பலத்த அஸ்வங்கள் கனைக்கிற சத்தத்தினால் தேசமெல்லாம் அதிருகிறது; அவர்கள் வந்து தேசத்தையும் அதில் உள்ளவைகளையும், பட்டணத்தையும் அதின் குடிகளையும் பட்சிப்பார்கள்.

17மெய்யாய், இதோ, தடைகட்டப்படாத சர்ப்பங்களையும், கட்டுவிரியன்களையும் உங்களுக்குள் அனுப்புகிறேன், அவைகள் உங்களைக் கடிக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

18நான் சஞ்சலத்தில் ஆறுதலடையப்பார்த்தும், என் இருதயம் பலட்சயமாயிருக்கிறது.

19இதோ, சீயோனில் கர்த்தர் இல்லையோ? அதில் ராஜா இல்லையோ? என்று, என் ஜனமாகிய குமாரத்தி தூரதேசத்திலிருந்து கூப்பிடும் சத்தம் கேட்கப்படுகிறது; ஆனால், அவர்கள் தங்கள் சுரூபங்களினாலும் அந்நியரின் மாயைகளினாலும் எனக்குக் கோபமுண்டாக்கினது என்ன என்கிறார்.

20அறுப்புக்காலம் சென்றது, கோடைக்காலமும் முடிந்தது, நாமோ இரட்சிக்கப்படவில்லை.

21என் ஜனமாகிய குமாரத்தியின் காயங்களினால் நானும் காயப்பட்டேன்; கரிகறுத்திருக்கிறேன்; திகைப்பு என்னைப் பிடித்தது.

22கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ? இரணவைத்தியனும் அங்கே இல்லையோ? பின்னை ஏன் என் ஜனமாகிய குமாரத்தி சொஸ்தமடையாமற்போனாள்?

1இயேசு மறுபடியும் அவர்களோடே உவமைகளாய்ப் பேசிச் சொன்னது என்னவென்றால்:

2பரலோகராஜ்யம் தன் குமாரனுக்குக் கலியாணஞ்செய்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது.

3அழைக்கப்பட்டவர்களைக் கலியாணத்திற்கு வரச்சொல்லும்படி அவன் தன் ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களோ வர மனதில்லாதிருந்தார்கள்.

4அப்பொழுது அவன் வேறு ஊழியக்காரரை அழைத்து: நீங்கள் போய், இதோ, என் விருந்தை ஆயத்தம்பண்ணினேன், என் எருதுகளும் கொழுத்த ஜெந்துக்களும் அடிக்கப்பட்டது, எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது; கலியாணத்திற்கு வாருங்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்குச் சொல்லுங்களென்று அனுப்பினான்.

5அழைக்கப்பட்டவர்களோ அதை அசட்டைபண்ணி, ஒருவன் தன் வயலுக்கும், ஒருவன் தன் வியாபாரத்துக்கும் போய்விட்டார்கள்.

6மற்றவர்கள் அவன் ஊழியக்காரரைப் பிடித்து, அவமானப்படுத்தி, கொலைசெய்தார்கள்.

7ராஜா அதைக் கேள்விப்பட்டு, கோபமடைந்து, தன் சேனைகளை அனுப்பி, அந்தக் கொலைபாதகரை அழித்து, அவர்கள் பட்டணத்தையும் சுட்டெரித்தான்.

8அப்பொழுது, அவன் தன் ஊழியக்காரரை நோக்கி: கலியாண விருந்து ஆயத்தமாயிருக்கிறது, அழைக்கப்பட்டவர்களோ அதற்கு அபாத்திரராய்ப் போனார்கள்.

9ஆகையால், நீங்கள் வழிச்சந்திகளிலே போய், காணப்படுகிற யாவரையும் கலியாணத்திற்கு அழைத்துக்கொண்டுவாருங்கள் என்றான்.

10அந்த ஊழியக்காரர் புறப்பட்டு, வழிகளிலே போய், தாங்கள் கண்ட நல்லார் பொல்லார் யாவரையும் கூட்டிக்கொண்டுவந்தார்கள்; கலியாணசாலை விருந்தாளிகளால் நிறைந்தது.

11விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்தபோது, கலியாண வஸ்திரம் தரித்திராத ஒரு மனுஷனை அங்கே கண்டு:

12சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான்.

13அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான்.

14அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.

15அப்பொழுது, பரிசேயர் போய், பேச்சிலே அவரை அகப்படுத்தும்படி யோசனைபண்ணி,

16தங்கள் சீஷரையும் ஏரோதியரையும் அவரிடத்தில் அனுப்பினார்கள். அவர்கள் வந்து: போதகரே, நீர் சத்தியமுள்ளவரென்றும், தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறவரென்றும், நீர் முகதாட்சிணியம் இல்லாதவராகையால் எவனைக்குறித்தும் உமக்குக் கவலையில்லையென்றும் அறிந்திருக்கிறோம்.

17ஆதலால், உமக்கு எப்படித் தோன்றுகிறது? இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ? அதை எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள்.

18இயேசு அவர்கள் துர்க்குணத்தை அறிந்து: மாயக்காரரே, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்?

19வரிக்காசை எனக்குக் காண்பியுங்கள் என்றார்; அவர்கள் ஒரு பணத்தை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்.

20அப்பொழுது அவர்: இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார்.

21இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.

22அவர்கள் அதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு அவரை விட்டுப் போய்விட்டார்கள்.

23உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர் அன்றையதினம் அவரிடத்தில் வந்து:

24போதகரே, ஒருவன் சந்தானம் இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம்பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக்கவேண்டும் என்று மோசே சொன்னாரே.

25எங்களுக்குள்ளே சகோதரர் ஏழுபேர் இருந்தார்கள்; மூத்தவன் விவாகம்பண்ணி, மரித்து, சந்தானமில்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுவிட்டுப்போனான்.

26அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன்முதல் ஏழாம் சகோதரன்வரைக்கும் செய்தார்கள்.

27எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள்.

28ஆகையால், உயிர்த்தெழுதலில் அவ்வேழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? அவர்கள் எல்லாரும் அவளை விவாகம்பண்ணியிருந்தார்களே என்று கேட்டார்கள்.

29இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்.

30உயிர்தெழுதலில் கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்;

31மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்கு உரைக்கப்பட்டிருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா?

32தேவன் மரித்தோருக்கு தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்கு தேவனாயிருக்கிறார் என்றார்.

33ஜனங்கள் இதைக் கேட்டு, அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.

34அவர் சதுசேயரை வாயடைத்தார் என்று பரிசேயர் கேள்விப்பட்டு, அவரிடத்தில் கூடிவந்தார்கள்.

35அவர்களில் நியாயசாஸ்திரி ஒருவன் அவரைச் சோதிக்கும்படி:

36போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது என்று கேட்டான்.

37இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;

38இது முதலாம் பிரதான கற்பனை.

39இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.

40இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.

41பரிசேயர் கூடியிருக்கையில், இயேசு அவர்களை நோக்கி:

42கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்? என்று கேட்டார். அவர் தாவீதின் குமாரன் என்றார்கள்.

43அதற்கு அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியினாலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி?

44நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே.

45தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார்.

46அதற்கு மாறுத்தரமாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லக்கூடாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com