1கர்த்தருடைய தூதனானவர் கில்காலிலிருந்து போகீமுக்கு வந்து: நான் உங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி, உங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் நான் உங்களைக் கொண்டுவந்து விட்டு, உங்களோடே பண்ணின என் உடன்படிக்கையை நான் ஒருக்காலும் முறித்துப்போடுவதில்லை என்றும்,
2நீங்கள் இந்த தேசத்தின் குடிகளோடே உடன்படிக்கைபண்ணாமல், அவர்கள் பலிபீடங்களை இடித்துவிடக்கடவீர்கள் என்றும் சொன்னேன்; ஆனாலும் என் சொல்லைக் கேளாதேபோனீர்கள்; ஏன் இப்படிச் செய்தீர்கள்?
3ஆகையால் நான் அவர்களை உங்கள் முகத்திற்கு முன்பாகத் துரத்துவதில்லை என்றேன்; அவர்கள் உங்களை நெருக்குவார்கள்; அவர்களுடைய தேவர்கள் உங்களுக்குக் கண்ணியாவார்கள் என்றார்.
4கர்த்தருடைய தூதனானவர் இந்த வார்த்தைகளை இஸ்ரவேல் புத்திரர் எல்லாரோடும் சொல்லுகையில், ஜனங்கள் உரத்த சத்தமிட்டு அழுதார்கள்.
5அவ்விடத்திற்குப் போகீம் என்று பேரிட்டு, அங்கே கர்த்தருக்குப் பலியிட்டார்கள்.
6யோசுவா இஸ்ரவேல் புத்திரராகிய ஜனங்களை அனுப்பிவிட்டபோது, அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ள அவரவர் தங்கள்தங்கள் சுதந்தர வீதத்திற்குப் போனார்கள்.
7யோசுவாவின் சகல நாட்களிலும் கர்த்தர் இஸ்ரவேலுக்காகச் செய்த அவருடைய பெரிய கிரியைகளையெல்லாம் கண்டவர்களும், யோசுவாவுக்குப் பின்பு உயிரோடிருந்தவர்களுமாகிய மூப்பரின் சகல நாட்களிலும் ஜனங்கள் கர்த்தரைச் சேவித்தார்கள்.
8நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் கர்த்தரின் ஊழியக்காரன் நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரணமடைந்தான்.
9அவனை எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள காயாஸ் மலைக்கு வடக்கேயிருக்கிற அவனுடைய சுதந்தரத்தின் எல்லையாகிய திம்னாத்ஏரேசிலே அடக்கம்பண்ணினார்கள்.
10அக்காலத்தில் இருந்த அந்தச் சந்ததியார் எல்லாரும் தங்கள் பிதாக்களுடன் சேர்க்கப்பட்டபின்பு, கர்த்தரையும், அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த கிரியையையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப்பின் எழும்பிற்று.
11அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, பாகால்களைச் சேவித்து,
12தங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின அவர்களுடைய தேவனாகிய கர்த்தரை விட்டு, தங்களைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்களுடைய தேவர்களாகிய அந்நிய தேவர்களைப் பின்பற்றிப்போய், அவர்களைப் பணிந்துகொண்டு, கர்த்தருக்குக் கோபமூட்டினார்கள்.
13அவர்கள் கர்த்தரை விட்டு, பாகாலையும் அஸ்தரோத்தையும் சேவித்தார்கள்.
14அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின் மேல் கோபமூண்டவராகி, அவர்கள் அப்புறம் தங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக்கூடாதபடி கொள்ளையிடுகிற கொள்ளைக்காரர் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்து, அவர்களைச் சுற்றிலும் இருக்கிற அவர்கள் பகைஞரின் கையிலே விற்றுப்போட்டார்.
15கர்த்தர் சொல்லியபடியும், கர்த்தர் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தபடியும், அவர்கள் புறப்பட்டுப்போகிற இடமெல்லாம் கர்த்தருடைய கை தீமைக்கென்றே அவர்களுக்கு விரோதமாயிருந்தது; மிகவும் நெருக்கப்பட்டார்கள்.
16கர்த்தர் நியாயாதிபதிகளை எழும்பப்பண்ணினார்; அவர்கள் கொள்ளையிடுகிறவர்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார்கள்.
17அவர்கள் தங்கள் நியாயாதிபதிகளின் சொல்லைக் கேளாமல், அந்நிய தேவர்களைப் பின்பற்றிச் சோரம்போய், அவைகளைப் பணிந்துகொண்டார்கள்; தங்கள் பிதாக்கள் கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகி, அவர்கள் செய்தபடி செய்யாமற்போனார்கள்.
18கர்த்தர் அவர்களுக்கு நியாயாதிபதிகளை எழும்பப்பண்ணுகிறபோது, கர்த்தர் நியாயாதிபதியோடேகூட இருந்து அந்த நியாயாதிபதியின் நாட்களிலெல்லாம் அவர்கள் சத்துருக்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சித்துவருவார்; அவர்கள் தங்களை இறுகப்பிடித்து ஒடுக்குகிறவர்களினிமித்தம் தவிக்கிறதினாலே, கர்த்தர் மனஸ்தாபப்படுவார்.
19நியாயாதிபதி மரணமடைந்த உடனே, அவர்கள் திரும்பி, அந்நிய தேவர்களைப் பின்பற்றவும் சேவிக்கவும் பணிந்துகொள்ளவும், தங்கள் பிதாக்களைப்பார்க்கிலும் கேடாய் நடந்து, தங்கள் கிர்த்தியங்களையும் தங்கள் முரட்டாட்டமான வழியையும் விடாதிருப்பார்கள்.
20ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலின்மேல் கோபமூண்டவராகி: இந்த ஜனங்கள் தங்கள் பிதாக்களுக்கு நான் கற்பித்த என் உடன்படிக்கையை மீறி என் சொல்லைக் கேளாதேபோனபடியால்,
21யோசுவா மரித்துப் பின்வைத்துப்போன ஜாதிகளில் ஒருவரையும், நான் இனி அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிடாதிருப்பேன்.
22அவர்கள் பிதாக்கள் கர்த்தரின் வழியைக் கவனித்ததுபோல, அவர்கள் அதிலே நடக்கும்படிக்கு, அதைக் கவனிப்பார்களோ இல்லையோ என்று, அவர்களைக்கொண்டு இஸ்ரவேலைச் சோதிப்பதற்காக அப்படிச் செய்வேன் என்றார்.
23அதற்காகக் கர்த்தர் அந்த ஜாதிகளை யோசுவாவின் கையில் ஒப்புக்கொடாமலும், அவைகளைச் சீக்கிரமாய்த் துரத்திவிடாமலும் விட்டுவைத்தார்.
1அந்நாட்களிலே, சீஷர்கள் பெருகினபோது, கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாடக விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள்.
2அப்பொழுது பன்னிருவரும் சீஷர் கூட்டத்தை வரவழைத்து: நாங்கள் தேவவசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணை செய்வது தகுதியல்ல.
3ஆதலால் சகோதரரே, பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம்.
4நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள்.
5இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூதமார்க்கத்தமைந்தவனான அந்தியோகியா பட்டணத்தானாகிய நிக்கொலாவையும் தெரிந்துகொண்டு,
6அவர்களை அப்போஸ்தலருக்குமுன்பாக நிறுத்தினார்கள். இவர்கள் ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள்.
7தேவவசனம் விருத்தியடைந்தது; சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று; ஆசாரியர்களில் அநேகரும் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள்.
8ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.
9அப்பொழுது லிபர்த்தீனர் என்னப்பட்டவர்களின் ஆலயத்தைச் சேர்ந்தவர்களிலும், சிரேனே பட்டணத்தாரிலும், அலெக்சந்திரியா பட்டணத்தாரிலும், சிலிசியா நாட்டாரிலும், ஆசியா தேசத்தாரிலும் சிலர் எழும்பி, ஸ்தேவானுடனே தர்க்கம்பண்ணினார்கள்.
10அவன் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்துநிற்க அவர்களால் கூடாமற்போயிற்று.
11அப்பொழுது அவர்கள்: மோசேக்கும் தேவனுக்கும் விரோதமாக இவன் தூஷண வார்த்தைகளைப் பேசக்கேட்டோம் என்று சொல்லும்படியாக மனுஷரை ஏற்படுத்தி;
12ஜனங்களையும் மூப்பரையும் வேதபாரகரையும் எழுப்பிவிட்டு; அவன்மேல் பாய்ந்து, அவனைப் பிடித்து, ஆலோசனைச் சங்கத்தாருக்கு முன்பாக இழுத்துக்கொண்டுபோய்;
13பொய்ச்சாட்சிகளையும் நிறுத்தினார்கள். இவர்கள்: இந்த மனுஷன் இந்தப் பரிசுத்த ஸ்தலத்துக்கும் வேதப்பிரமாணத்துக்கும் விரோதமாகத் தூஷணவார்த்தைகளை ஓயாமற்பேசுகிறான்;
14எப்படியென்றால், நசரேயனாகிய அந்த இயேசு இந்த ஸ்தலத்தை அழித்துப்போட்டு, மோசே நமக்குக் கொடுத்த முறைமைகளை மாற்றுவானென்று இவன் சொல்லக்கேட்டோம் என்றார்கள்.
15ஆலோசனைச் சங்கத்தில் உட்கார்ந்திருந்த அனைவரும் அவன்மேல் கண்ணோக்கமாயிருந்து, அவன் முகம் தேவதூதன் முகம்போலிருக்கக் கண்டார்கள்.
1கர்த்தர் என்னை நோக்கி: மோசேயும் சாமுவேலும் என் முகத்துக்கு முன்பாக நின்றாலும், என் மனம் இந்த ஜனங்கள் பட்சமாய்ச் சாராது; இவர்கள் என் முகத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்படி இவர்களைத் துரத்திவிடு.
2எங்கே புறப்பட்டுப்போவோம் என்று இவர்கள் உன்னைக் கேட்டால், நீ அவர்களை நோக்கி: சாவுக்கு ஏதுவானவர்கள் சாவுக்கும், பட்டயத்துக்கு ஏதுவானவர்கள் பட்டயத்துக்கும், பஞ்சத்துக்கு ஏதுவானவர்கள் பஞ்சத்துக்கும், சிறையிருப்புக்கு ஏதுவானவர்கள் சிறையிருப்புக்கும் நேராய்ப் போகவேண்டும் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லு.
3கொன்றுபோடப் பட்டயமும், பிடித்து இழுக்க நாய்களும், பட்சித்து அழிக்க ஆகாயத்துப் பறவைகளும், பூமியின் மிருகங்களும் ஆகிய நான்கு விதமான வாதைகளை நான் அவர்கள்மேல் வரக் கட்டளையிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
4எசேக்கியாவின் குமாரனும், யூதாவின் ராஜாவுமாகிய மனாசே எருசலேமில் செய்தவைகளினிமித்தம் அவர்களைப் பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் அலையப்பண்ணுவேன்.
5எருசலேமே, யார் உன்மேல் இரங்குவார்கள்? யார் உன்மேல் பரிதபிப்பார்கள்? யார் உன்னிடத்திற்குத் திரும்பி, உன் சுகசெய்தியை விசாரிப்பார்கள்?
6நீ என்னைவிட்டுப் பின்வாங்கிப்போனாய்; ஆகையால், என் கையை உனக்கு விரோதமாய் நீட்டி, உன்னை அழிப்பேன்; நான் பொறுத்துப்பொறுத்து இளைத்துப்போனேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
7தேசத்தின் வாசல்களில் அவர்களைத் தூற்றுக்கூடையால் தூற்றிப்போடுவேன்; என் ஜனங்கள் தங்கள் வழிகளைவிட்டுத் திரும்பாதபடியினால் நான் அவர்களைப் பிள்ளைகள் அற்றவர்களாக்கி அழிப்பேன்.
8கடற்கரை மணலைப்பார்க்கிலும் அதிக விதவைகள் அவர்களில் உண்டாயிருப்பார்கள்; பட்டப்பகலிலே பாழாக்குகிறவனைத் தாயின்மேலும் பிள்ளைகளின்மேலும் வரப்பண்ணுவேன்; அவர்கள்மேல் பட்டணத்தின் கலகத்தையும் பயங்கரங்களையும் விழப்பண்ணுவேன்.
9ஏழு பிள்ளைகளைப் பெற்றவள் களைத்துப்போகிறாள்; அவள் தன் பிராணனை விட்டுவிட்டாள்; இன்னும் பகலாயிருக்கையில் அவளுடைய சூரியன் அஸ்தமித்தது; வெட்கமும் இலச்சையும் அடைந்தாள்; அவர்களில் மீதியாகிறவர்களையோ அவர்களுடைய சத்துருக்களுக்கு முன்பாகப் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
10என் தாயே, தேசத்துக்கெல்லாம் வழக்குக்கும் வாதுக்கும் உள்ளானவனாயிருக்கும்படி என்னை நீ பெற்றாயே; ஐயோ! நான் அவர்களுக்கு வட்டிக்குக் கொடுத்ததுமில்லை, அவர்கள் எனக்கு வட்டிக்குக் கொடுத்ததுமில்லை; ஆனாலும், எல்லாரும் என்னைச் சபிக்கிறார்கள்.
11உன்னில் மீதியாயிருப்பவர்கள் நன்மையடைவார்கள்; தீங்கின் காலத்திலும் நெருக்கத்தின் காலத்திலும் உனக்காக நான் சத்துருவுக்கு எதிர்ப்பட்டு, உனக்குச் சகாயஞ்செய்வேன் என்று மெய்யாகவே சொல்லுகிறேன்.
12வடக்கேயிருந்து வரும் இரும்பையும் வெண்கலத்தையும் இரும்பு நொறுக்குமோ?
13உன்னுடைய எல்லாப் பாவங்களினிமித்தமும், உன்னுடைய எல்லா எல்லைகளிலும், நான் உன் ஆஸ்தியையும், உன் பொக்கிஷங்களையும் கிரயமில்லாமல் சூறையிடுவிப்பேன்.
14நீ அறியாத தேசத்தில் உன் சத்தருக்கள் வசமாக நான் உன்னைத் தாண்டிப்போகப்பண்ணுவேன்; உங்கள்மேல் எரியப்போகிற அக்கினி என்கோபத்தினாலே மூண்டது என்று கர்த்தர் சொன்னார்.
15கர்த்தாவே, நீர் அதை அறிவீர்; தேவரீர் என்னை நினைத்து, என்னை விசாரித்து, என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு என்னிமித்தம் நீதியைச் சரிக்கட்டும்; உம்முடைய நீடிய பொறுமையினிமித்தம் என்னை வாரிக்கொள்ளாதிரும்; நான் உம்முடைய நிமித்தம் நிந்தையைச் சகிக்கிறேன் என்று அறியும்.
16உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது.
17நான் பரியாசக்காரருடைய கூட்டத்தில் உட்கார்ந்து களிகூர்ந்ததில்லை; உமது கரத்தினிமித்தம் தனித்து உட்கார்ந்தேன்; சலிப்பினால் என்னை நிரப்பினீர்.
18என் நோவு நித்தியகாலமாகவும், என் காயம் ஆறாத கொடிய புண்ணாகவும் இருப்பானேன்? நீர் எனக்கு நம்பப்படாத ஊற்றைப்போலவும், வற்றிப்போகிற ஜலத்தைப்போலவும் இருப்பீரோ?
19இதினிமித்தம் நீ திரும்பினால் நான் உன்னைத் திரும்பச் சீர்ப்படுத்துவேன்; என் முகத்துக்கு முன்பாக நிலைத்துமிருப்பாய்; நீ தீழ்ப்பானதினின்று விலையேறப்பெற்றதைப் பிரித்தெடுத்தால், என் வாய் போலிருப்பாய்; நீ அவர்களிடத்தில் திரும்பாமல், அவர்கள் உன்னிடத்தில் திரும்புவார்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார்.
20உன்னை இந்த ஜனத்துக்கு எதிரே அரணான வெண்கல அலங்கமாக்குவேன்; அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும், நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
21நான் உன்னைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவித்து, உன்னைப் பலவந்தரின் கைக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன் என்கிறார்.
1தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம்.
2இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்னே போய், உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும்;
3கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்றும், தீர்க்கதரிசன ஆகமங்களில் எழுதியிருக்கிற பிரகாரமாய்;
4யோவான் வனாந்தரத்தில் ஞானஸ்நானங்கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கம்பண்ணிக்கொண்டிருந்தான்.
5அப்பொழுது யூதேயா தேசத்தார் அனைவரும் எருசலேம் நகரத்தார் யாவரும், அவனிடத்திற்குப்போய், தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
6யோவான் ஒட்டகமயிர் உடையைத்தரித்து, தன் அரையில் வார்க்கச்சையைக் கட்டிக்கொண்டவனாயும், வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் புசிக்கிறவனாயும் இருந்தான்.
7அவன்: என்னிலும் வல்லவர் ஒருவர் எனக்குப்பின் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரைக் குனிந்து அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல.
8நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன்; அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்று பிரசங்கித்தான்.
9அந்த நாட்களில், இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்தூரிலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்.
10அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார்.
11அன்றியும், நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.
12உடனே ஆவியானவர் அவரை வனாந்தரத்திற்குப் போகும்படி ஏவினார்.
13அவர் வனாந்தரத்திலே நாற்பதுநாள் இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்டு, அங்கே காட்டுமிருகங்களின் நடுவிலே சஞ்சரித்துக்கொண்டிருந்தார். தேவதூதர்கள் அவருக்கு ஊழியஞ்செய்தார்கள்.
14யோவான் காவலில் வைக்கப்பட்ட பின்பு, இயேசு கலிலேயாவிலே வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து:
15காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார்.
16அவர் கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும் கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது அவர்களைக் கண்டார்.
17இயேசு அவர்களை நோக்கி: என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.
18உடனே அவர்கள் தங்கள் வலைகளைவிட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.
19அவர் அவ்விடம் விட்டுச் சற்று அப்புறம் போனபோது, செபெதேயுவின் குமாரன் யாக்கோபும் அவன் சகோதரன் யோவானும் படவிலே வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறதைக் கண்டு,
20உடனே அவர்களையும் அழைத்தார்; அப்பொழுது அவர்கள் தங்கள் தகப்பனாகிய செபெதேயுவைக் கூலியாட்களோடு படவிலே விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.
21பின்பு கப்பர்நகூமுக்குப் போனார்கள். உடனே அவர் ஓய்வுநாளிலே ஜெபஆலயத்திலே பிரவேசித்து, போதகம்பண்ணினார்.
22அவர் வேதபாரகரைப்போலப் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியினால் அவருடைய போதகத்தைக்குறித்து ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
23அவர்களுடைய ஜெபஆலயத்திலே அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் இருந்தான்.
24அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன், நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமிட்டான்.
25அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனைவிட்டுப் புறப்பட்டுப்போ என்று அதை அதட்டினார்.
26உடனே அந்த அசுத்த ஆவி அவனை அலைக்கழித்து, மிகுந்த சத்தமிட்டு, அவனைவிட்டுப் போய்விட்டது.
27எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன? இந்தப் புதிய உபதேசம் எப்படிப்பட்டது? இவர் அதிகாரத்தோடே அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று தங்களுக்குள்ளே ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
28அதுமுதல் அவருடைய கீர்த்தி கலிலேயா நாடெங்கும் பிரசித்தமாயிற்று.
29உடனே அவர்கள் ஜெபஆலயத்தை விட்டுப் புறப்பட்டு, யாக்கோபோடும் யோவானோடுங்கூட, சீமோன் அந்திரேயா என்பவர்களுடைய வீட்டில் பிரவேசித்தார்கள்.
30அங்கே சீமோனுடைய மாமி ஜூரமாய்க் கிடந்தாள்; உடனே அவர்கள் அவளைக்குறித்து அவருக்குச் சொன்னார்கள்.
31அவர் கிட்டப்போய், அவள் கையைப் பிடித்து, அவளைத் தூக்கிவிட்டார்; உடனே ஜூரம் அவளை விட்டு நீங்கிற்று; அப்பொழுது அவள் அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.
32சாயங்காலமாகிச் சூரியன் அஸ்தமித்தபோது, சகல பிணியாளிகளையும், பிசாசுபிடித்தவர்களையும், அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்.
33பட்டணத்தார் எல்லாரும் வீட்டுவாசலுக்கு முன்பாகக் கூடிவந்தார்கள்.
34பலவிதமான வியாதிகளினால் உபத்திரவப்பட்டிருந்த அநேகரை அவர் சொஸ்தமாக்கி, அநேகம் பிசாசுகளையும் துரத்திவிட்டார்; அந்தப் பிசாசுகள் தம்மை அறிந்திருந்தபடியால், அவைகள் பேசுகிறதற்கு அவர் இடங்கொடுக்கவில்லை.
35அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.
36சீமோனும் அவனோடே இருந்தவர்களும் அவரைப் பின்தொடர்ந்துபோய்,
37அவரைக் கண்டபோது: உம்மை எல்லாரும் தேடுகிறார்கள் என்று சொன்னார்கள்.
38அவர்களை அவர் நோக்கி: அடுத்த ஊர்களிலும் நான் பிரசங்கம்பண்ணவேண்டுமாதலால், அவ்விடங்களுக்குப் போவோம் வாருங்கள்; இதற்காகவே புறப்பட்டுவந்தேன் என்று சொல்லி;
39கலிலேயா நாடெங்கும் அவர்களுடைய ஜெபஆலயங்களில் அவர் பிரசங்கம்பண்ணிக்கொண்டும், பிசாசுகளைத் துரத்திக்கொண்டும் இருந்தார்.
40அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டான்.
41இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்.
42இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனைவிட்டு நீங்கிற்று, அவன் சுத்தமானான்.
43அப்பொழுது அவர் அவனை நோக்கி: நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு எச்சரிக்கையாயிரு;
44ஆயினும் நீ போய், ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், மோசே கட்டளையிட்டிருக்கிறவைகளை அவர்களுக்குச் சாட்சியாகச் செலுத்து என்று கண்டிப்பாய்ச் சொல்லி, உடனே அவனை அனுப்பிவிட்டார்.
45அவனோ புறப்பட்டுப்போய்; இந்தச் சங்கதி எங்கும் விளங்கும்படியாகப் பிரசித்தம் பண்ணத்தொடங்கினான். அதினால் அவர் வெளியரங்கமாய்ப் பட்டணத்தில் பிரவேசிக்கக்கூடாமல், வெளியே வனாந்தரமான இடங்களில் தங்கியிருந்தார்; எத்திசையிலுமிருந்து ஜனங்கள் அவரிடத்திற்கு வந்தார்கள்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com