1யோசுவா மரித்தபின் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி: கானானியரை எதிர்த்து யுத்தம்பண்ணும்படி, எங்களில் யார் முதல்முதல் எழுந்து புறப்படவேண்டும் என்று கேட்டார்கள்.
2அதற்குக் கர்த்தர்: யூதா எழுந்து புறப்படக்கடவன்; இதோ, அந்த தேசத்தை அவன் கையிலே ஒப்புக்கொடுத்தேன் என்றார்.
3அப்பொழுது யூதா தன் சகோதரனாகிய சிமியோனை நோக்கி: நாம் கானானியரோடே யுத்தம்பண்ண நீ என் சுதந்தரப் பங்குவீதத்தில் என்னோடேகூட எழுந்துவா; உன் சுதந்தரப் பங்கு வீதத்தில் நானும் உன்னோடுகூட வருவேன் என்றான்; அப்படியே சிமியோன் அவனோடேகூடப் போனான்.
4யூதா எழுந்துபோனபோது, கர்த்தர் கானானியரையும், பெரிசியரையும் அவர்கள் கையிலே ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் பேசேக்கிலே பதினாயிரம்பேரை வெட்டினார்கள்.
5பேசேக்கிலே அதோனிபேசேக்கைக் கண்டு, அவனோடு யுத்தம்பண்ணி, கானானியரையும், பெரிசியரையும் வெட்டினார்கள்.
6அதோனிபேசேக் ஓடிப்போகையில், அவனைப் பின்தொடர்ந்து பிடித்து, அவன் கை கால்களின் பெருவிரல்களைத் தறித்துப்போட்டார்கள்.
7அப்பொழுது அதோனிபேசேக்: எழுபது ராஜாக்கள், கை கால்களின் பெருவிரல்கள் தறிக்கப்பட்டவர்களாய், என் மேஜையின்கீழ் விழுந்ததைப் பொறுக்கித் தின்றார்கள்; நான் எப்படிச் செய்தேனோ, அப்படியே தேவன் எனக்கும் செய்து சரிக்கட்டினார் என்றான். அவனை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்; அங்கே அவன் செத்துப்போனான்.
8யூதாவின் புத்திரர் எருசலேமின்மேல் யுத்தம்பண்ணி, அதைப் பிடித்து, அதிலுள்ளவர்களைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, பட்டணத்தை அக்கினிக்கு இரையாக்கிவிட்டார்கள்.
9பின்பு யூதாவின் புத்திரர் மலைத்தேசத்திலேயும், தெற்கேயும், பள்ளத்தாக்குகளிலேயும் குடியிருக்கிற கானானியரோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டுப்போனார்கள்.
10அப்படியே யூதா கோத்திரத்தார் எபிரோனிலே குடியிருக்கிற கானானியருக்கு விரோதமாய்ப் போய், சேசாய், அகீமான், தல்மாய் என்பவர்களை வெட்டிப்போட்டார்கள். முற்காலத்தில் அந்த எபிரோனுக்கு கீரியாத்அர்பா என்று பேர்.
11அங்கேயிருந்து தெபீரின் குடிகளுக்கு விரோதமாகப் போனார்கள்; முற்காலத்தில் தெபீருக்கு கீரியாத்செப்பேர் என்று பேர்.
12அப்பொழுது காலேப்: கீரியாத்செப்பேரை சங்காரம்பண்ணிப் பிடிக்கிறவனுக்கு என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம்பண்ணிக் கொடுப்பேன் என்றான்.
13அப்பொழுது காலேபுடைய தம்பியாகிய கேனாசின் குமாரன் ஒத்னியேல் அதைப் பிடித்தான்; ஆகையால் தன் குமாரத்தியாகிய அக்சாளை அவனுக்கு விவாகம்பண்ணிக் கொடுத்தான்.
14அவள் புறப்படுகையில், என் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று அவனிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கழுதையின்மேலிருந்து இறங்கினாள். காலேப் அவளை நோக்கி: உனக்கு என்னவேண்டும் என்றான்.
15அப்பொழுது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; வறட்சியான நிலத்தை எனக்குத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலங்களையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது காலேப்: மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் அவளுக்கு நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.
16மோசேயின் மாமனாகிய கேனியனின் புத்திரரும் யூதாவின் புத்திரரோடேகூடப் பேரீச்சம்மரங்களின் பட்டணத்திலிருந்து ஆராத்திற்குத் தெற்கேயிருக்கிற யூதாவின் வனாந்தரத்திற்கு வந்து, ஜனங்களோடே குடியேறினார்கள்.
17யூதா தன் சகோதரனாகிய சிமியோனோடுங்கூடப் போனான்; அவர்கள் சேப்பாத்தில் குடியிருக்கிற கானானியரை முறிய அடித்து, அதைச் சங்காரம்பண்ணி, அந்தப் பட்டணத்திற்கு ஒர்மா என்று பேரிட்டார்கள்.
18யூதா காசாவையும் அதின் எல்லையையும், அஸ்கலோனையும் அதின் எல்லையையும், எக்ரோனையும் அதின் எல்லையையும் பிடித்தான்.
19கர்த்தர் யூதாவோடேகூட இருந்ததினால், மலைத்தேசத்தாரைத் துரத்திவிட்டார்கள்; பள்ளத்தாக்கின் குடிகளுக்கு இருப்பு ரதங்கள் இருந்தபடியினால், அவர்களைத் துரத்தக்கூடாமற்போயிற்று.
20மோசே சொன்னபடியே, எபிரோனைக் காலேபுக்குக் கொடுத்தார்கள்; அவன் அதிலிருந்த ஏனாக்கின் மூன்று குமாரரையும் துரத்திவிட்டான்.
21பென்யமீன் புத்திரர் எருசலேமிலே குடியிருந்த எபூசியரையும் துரத்திவிடவில்லை; ஆகையால் எபூசியர் இந்நாள் மட்டும் பென்யமீன் புத்திரரோடேகூட எருசலேமில் குடியிருக்கிறார்கள்.
22யோசேப்பின் குடும்பத்தாரும் பெத்தேலுக்கு விரோதமாய்ப் போனார்கள்; கர்த்தர் அவர்களோடேகூட இருந்தார்.
23யோசேப்பின் புத்திரர் பெத்தேலை வேவுபார்க்க ஆட்களை அனுப்பினார்கள்; முன்னே அந்தப் பட்டணத்திற்கு லூஸ் என்று பேர்.
24அந்த வேவுகாரர் பட்டணத்திலிருந்து புறப்பட்டுவருகிற ஒரு மனுஷனைக் கண்டு: பட்டணத்திற்குள் பிரவேசிக்கும் வழியை எங்களுக்குக் காண்பி, உனக்குத் தயைசெய்வோம் என்றார்கள்.
25அப்படியே பட்டணத்திற்குள் பிரவேசிக்கும் வழியை அவர்களுக்குக் காண்பித்தான்; அப்பொழுது அவர்கள் வந்து, பட்டணத்திலுள்ளவர்களைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, அந்த மனுஷனையும் அவன் குடும்பத்தையும் விட்டுவிட்டார்கள்.
26அப்பொழுது அந்த மனுஷன் ஏத்தியரின் தேசத்திற்குப் போய், ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு லூஸ் என்று பேரிட்டான்; அதுதான் இந்நாள்மட்டும் அதின் பேர்.
27மனாசே கோத்திரத்தார் பெத்செயான் பட்டணத்தாரையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், தானாக் பட்டணத்தாரையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், தோரின் குடிகளையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், இப்லெயாம் பட்டணத்தாரையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், மெகிதோவின் குடிகளையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும் துரத்திவிடவில்லை; கானானியர் அந்த தேசத்திலேதானே குடியிருக்கவேண்டும் என்று இருந்தார்கள்.
28இஸ்ரவேலர் பலத்தபோது, கானானியரை முற்றிலும் துரத்திவிடாமல் பகுதி கட்டப்பண்ணினார்கள்.
29எப்பிராயீம் கோத்திரத்தார் கேசேரிலே குடியிருந்த கானானியரையும் துரத்திவிடவில்லை; ஆகையால் கானானியர் அவர்கள் நடுவே குடியிருந்தார்கள்.
30செபுலோன் கோத்திரத்தார் கித்ரோனின் குடிகளையும், நாகலோலின் குடிகளையும் துரத்திவிடவில்லை, ஆகையால் கானானியர் அவர்கள் நடுவே குடியிருந்து, பகுதிகட்டுகிறவர்களானார்கள்.
31ஆசேர் கோத்திரத்தார் அக்கோவின் குடிகளையும், சீதோனின் குடிகளையும், அக்லாப், அக்சீப், எல்பா, ஆப்பீக், ரேகோப் பட்டணங்களின் குடிகளையும் துரத்திவிடவில்லை.
32ஆசேரியர் தேசத்தின் குடிகளாகிய கானானியரின் நடுவே குடியிருந்தார்கள்; அவர்களை அவர்கள் துரத்திவிடவில்லை.
33நப்தலி கோத்திரத்தார் பெத்ஷிமேசின் குடிகளையும் பெத்தானாத்தின் குடிகளையும் துரத்திவிடாமல், தேசத்தின் குடிகளாகிய கானானியரின் நடுவே குடியிருந்தார்கள்; பெத்ஷிமேஸ், பெத்தானாத் பட்டணங்களின் குடிகள் அவர்களுக்குப் பகுதிகட்டுகிறவர்களானார்கள்.
34எமோரியர் தாண் புத்திரரைப் பள்ளத்தாக்கில் இறங்கவொட்டாமல், மலைத்தேசத்திற்குப் போகும்படி நெருக்கினார்கள்.
35எமோரியர் ஏரேஸ் மலைகளிலும் ஆயலோனிலும் சால்பீமிலும் குடியிருக்கவேண்டும் என்று இருந்தார்கள்; ஆனாலும் யோசேப்பின் குடும்பத்தாரின் கைபலத்தபடியினால், அவர்களுக்குப் பகுதிகட்டுகிறவர்களானார்கள்.
36எமோரியரின் எல்லை அக்கராபீமுக்குப் போகிற மேடுதொடங்கி அதற்கு அப்புறமும் போயிற்று.
1அனனியா என்னும் பேருள்ள ஒருவனும், அவனுடைய மனைவியாகிய சப்பீராளும் தங்கள் காணியாட்சியை விற்றார்கள்.
2தன் மனைவி அறிய அவன் கிரயத்திலே ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, ஒரு பங்கைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான்.
3பேதுரு அவனை நோக்கி: அனனியாவே, நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்த ஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன?
4அதை விற்குமுன்னே அது உன்னுடையதாயிருக்கவில்லையோ? அதை விற்றபின்பும் அதின் கிரயம் உன் வசத்திலிருக்கவில்லையோ? நீ உன் இருதயத்திலே இப்படிப்பட்ட எண்ணங்கொண்டதென்ன? நீ மனுஷரிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய்சொன்னாய் என்றான்.
5அனனியா இந்த வார்த்தைகளைக்கேட்கவே, விழுந்து ஜீவனை விட்டான். இவைகளைக் கேள்விப்பட்ட யாவருக்கும் மிகுந்த பயமுண்டாயிற்று.
6வாலிபர் எழுந்து, அவனைச் சேலையில் சுற்றி, வெளியே எடுத்துக்கொண்டுபோய், அடக்கம் பண்ணினார்கள்.
7ஏறக்குறைய மூன்று மணி நேரத்துக்குப்பின்பு, அவனுடைய மனைவி நடந்ததை அறியாமல், உள்ளே வந்தாள்.
8பேதுரு அவளை நோக்கி: நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள், எனக்குச் சொல் என்றான். அவள்: ஆம், இவ்வளவுக்குத்தான் என்றாள்.
9பேதுரு அவளை நோக்கி: கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒருமனப்பட்டதென்ன? இதோ, உன் புருஷனை அடக்கம்பண்ணினவர்களுடைய கால்கள் வாசற்படியிலே வந்திருக்கிறது, உன்னையும் வெளியே கொண்டுபோவார்கள் என்றான்.
10உடனே அவள் அவனுடைய பாதத்தில் விழுந்து ஜீவனை விட்டாள். வாலிபர் உள்ளே வந்து, அவள் மரித்துப்போனதைக் கண்டு அவளை வெளியே எடுத்துக்கொண்டுபோய், அவளுடைய புருஷனண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்.
11சபையாரெல்லாருக்கும், இவைகளைக் கேள்விப்பட்ட மற்ற யாவருக்கும், மிகுந்த பயமுண்டாயிற்று.
12அப்போஸ்தலருடைய கைகளினாலே அநேக அடையாளங்களும் அற்புதங்களும் ஜனங்களுக்குள்ளே செய்யப்பட்டது. எல்லாரும் ஒருமனப்பட்டுச் சாலொமோனுடைய மண்டபத்தில் இருந்தார்கள்.
13மற்றவர்களில் ஒருவரும் அவர்களுடனே சேரத் துணியவில்லை. ஆகிலும் ஜனங்கள் அவர்களை மேன்மைப்படுத்தினார்கள்.
14திரளான புருஷர்களும், ஸ்திரீகளும் விசுவாசமுள்ளவர்களாகிக் கர்த்தரிடமாக அதிகமதிகமாய்ச் சேர்க்கப்பட்டார்கள்.
15பிணியாளிகளைப் படுக்கைகளின்மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி, பேதுரு நடந்துபோகையில் அவனுடைய நிழலாகிலும் அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு, அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள்.
16சுற்றுப்பட்டணங்களிலுமிருந்து திரளான ஜனங்கள் பிணியாளிகளையும் அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களையும் எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அவர்களெல்லாரும் குணமாக்கப்பட்டார்கள்.
17அப்பொழுது பிரதான ஆசாரியனும் அவனுடனேகூட இருந்த சதுசேய சமயத்தாரனைவரும் எழும்பி, பொறாமையினால் நிறைந்து,
18அப்போஸ்தலர்களைப் பிடித்து, பொதுவான சிறைச்சாலையிலே வைத்தார்கள்.
19கர்த்தருடைய தூதன் இராத்திரியிலே சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து, அவர்களை வெளியே கொண்டுவந்து:
20நீங்கள் போய், தேவாலயத்திலே நின்று, இந்த ஜீவவார்த்தைகள் எல்லாவற்றையும் ஜனங்களுக்குச் சொல்லுங்கள் என்றான்.
21அவர்கள் அதைக்கேட்டு, அதிகாலமே தேவாலயத்தில் பிரவேசித்துப் போதகம்பண்ணினார்கள். பிரதான ஆசாரியனும் அவனுடனேகூட இருந்தவர்களும் வந்து, ஆலோசனைச் சங்கத்தாரையும் இஸ்ரவேல் புத்திரரின் மூப்பரெல்லாரையும் வரவழைத்து, அப்போஸ்தலர்களைக் கொண்டுவரும்படி சிறைச்சாலைக்குச் சேவகரை அனுப்பினார்கள்.
22சேவகர் போய், சிறைச்சாலையிலே அவர்களைக் காணாமல், திரும்பிவந்து:
23சிறைச்சாலை மிகுந்த பத்திரமாய்ப் பூட்டப்பட்டிருக்கவும், காவற்காரர் வெளியே கதவுகளுக்குமுன் நிற்கவும் கண்டோம்; திறந்தபொழுதோ உள்ளே ஒருவரையும் காணோம் என்று அறிவித்தார்கள்.
24இந்தச் செய்தியை ஆசாரியனும் தேவாலயத்தைக் காக்கிற சேனைத்தலைவனும் பிரதான ஆசாரியர்களும் கேட்டபொழுது, இதென்னமாய் முடியுமோ என்று, அவர்களைக்குறித்துக் கலக்கமடைந்தார்கள்.
25அப்பொழுது ஒருவன் வந்து: இதோ, நீங்கள் காவலில் வைத்த மனுஷர் தேவாலயத்திலே நின்று ஜனங்களுக்குப் போதகம்பண்ணுகிறார்கள் என்று அவர்களுக்கு அறிவித்தான்.
26உடனே சேனைத்தலைவன் சேவகரோடேகூடப்போய், ஜனங்கள் கல்லெறிவார்களென்று பயந்ததினால், பலவந்தம்பண்ணாமல் அவர்களை அழைத்துக்கொண்டுவந்தான்.
27அப்படி அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, ஆலோசனைச் சங்கத்துக்கு முன்பாக நிறுத்தினார்கள். அப்பொழுது பிரதான ஆசாரியன் அவர்களை நோக்கி:
28நீங்கள் அந்த நாமத்தைக்குறித்துப் போதகம்பண்ணக்கூடாதென்று நாங்கள் உங்களுக்கு உறுதியாய்க் கட்டளையிடவில்லையா? அப்படியிருந்தும், இதோ, எருசலேமை உங்கள் போதகத்தினாலே நிரப்பி, அந்த மனுஷனுடைய இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தவேண்டுமென்றிருக்கிறீர்கள் என்று சொன்னான்.
29அதற்குப் பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும்: மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.
30நீங்கள் மரத்திலே தூக்கிக் கொலைசெய்த இயேசுவை நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி,
31இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் அருளுகிறதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலதுகரத்தினாலே உயர்த்தினார்.
32இந்தச் சங்கதிகளைக்குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறோம்; தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்த ஆவியும் சாட்சி என்றார்கள்.
33அதை அவர்கள் கேட்டபொழுது, மூர்க்கமடைந்து, அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு யோசனை பண்ணினார்கள்.
34அப்பொழுது சகல ஜனங்களாலும் கனம்பெற்ற நியாயசாஸ்திரியாகிய கமாலியேல் என்னும் பேர்கொண்ட ஒரு பரிசேயன் ஆலோசனைச் சங்கத்தில் எழுந்திருந்து, அப்போஸ்தலரைச் சற்றுநேரம் வெளியே கொண்டுபோகச் சொல்லி,
35சங்கத்தாரை நோக்கி: இஸ்ரவேலரே, இந்த மனுஷருக்கு நீங்கள் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.
36ஏனென்றால் இந்நாட்களுக்கு முன்னே தெயுதாஸ் என்பவன் எழும்பி, தன்னை ஒரு பெரியவனாகப் பாராட்டினான்; ஏறக்குறைய நானூறுபேர் அவனைச் சேர்ந்தார்கள்; அவன் மடிந்துபோனான்; அவனை நம்பின அனைவரும் சிதறி, அவமாய்ப்போனார்கள்.
37அவனுக்குப்பின்பு, குடிமதிப்பின் நாட்களிலே, கலிலேயனாகிய யூதாஸ் என்பவன் எழும்பி, தன்னைப் பின்பற்றும்படி அநேக ஜனங்களை இழுத்தான்; அவனும் அழிந்துபோனான்; அவனை நம்பியிருந்த அனைவரும் சிதறடிக்கப்பட்டார்கள்.
38இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லுகிறதென்னவென்றால் இந்த மனுஷருக்கு ஒன்றுஞ்செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள். இந்த யோசனையும் இந்தக் கிரியையும் மனுஷரால் உண்டாயிருந்ததானால் ஒழிந்துபோம்;
39தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை ஒழித்துவிட உங்களால் கூடாது; தேவனோடே போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள் என்றான்.
40அப்பொழுது அவர்கள் அவனுடைய யோசனைக்கு உடன்பட்டு, அப்போஸ்தலரை வரவழைத்து, அடித்து, இயேசுவின் நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று கட்டளையிட்டு, அவர்களை விடுதலையாக்கினார்கள்.
41அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய்,
42தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள்.
1மழைத்தாழ்ச்சியைக் குறித்து எரேமியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்:
2யூதா துக்கிக்கிறது, அதின் வாசல்கள் பெலனற்றுக் கிடக்கிறது; தரைமட்டும் குனிந்து, கரிகறுத்துத் திரிகிறார்கள்; எருசலேமின் கூக்குரல் எழும்புகிறது.
3அவர்களில் பிரபலமானவர்கள் தங்கள் சிறுவர்களைத் தண்ணீருக்கு அனுப்புகிறார்கள்; இவர்கள் பள்ளங்களுக்குப்போய்த் தண்ணீரைக்காணாமல் வெறும் பாத்திரங்களோடே திரும்பிவருகிறார்கள்; வெட்கி நாணி, தங்கள் தலையை மூடிக்கொள்ளுகிறார்கள்.
4தேசத்தின்மேல் மழை இல்லாததினால் தரை வெடித்திருக்கிறது; பயிர் செய்கிறவர்கள் வெட்கி, தங்கள் தலையை மூடிக்கொள்ளுகிறார்கள்.
5வெளியின் பெண்மானும் குட்டிபோட்டு, புல்லில்லாததினால் அதை விட்டு ஓடிப்போகும்.
6காட்டுக்கழுதைகள் மேடுகளில் நின்று, வலுசர்ப்பங்களைப்போல் காற்றை உட்கொள்ளுகிறது; புல் இல்லாததினால் அவைகளுடைய கண்கள் பூத்துப்போகிறது என்றார்.
7கர்த்தாவே, எங்கள் அக்கிரமங்கள் எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிட்டாலும், உம்முடைய நாமத்தினிமித்தம் கிருபைசெய்யும்; எங்கள் சீர்கேடுகள் மிகுதியாயிருக்கிறது; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம்.
8இஸ்ரவேலின் நம்பிக்கையே, ஆபத்துக்காலத்தில் அதின் இரட்சகரே, நீர் தேசத்தில் பரதேசியைப் போலவும், இராத்தங்க இறங்குகிற வழிப்போக்கனைப்போலவும் இருப்பானேன்?
9நீர் விடாய்த்துப்போன புருஷனைப்போலவும், இரட்சிக்கமாட்டாத பராக்கிரமசாலியைப்போலவும் இருப்பானேன்? கர்த்தாவே, நீர் எங்கள் நடுவிலிருக்கிறவராமே; உம்முடைய நாமம் எங்களுக்குத் தரிக்கப்பட்டுமிருக்கிறதே; எங்களைவிட்டுப்போகாதிரும்.
10அவர்கள் தங்கள் கால்களை அடக்கிக்கொள்ளாமல், அலைய விரும்புகிறார்களென்று கர்த்தர் இந்த ஜனத்தைக்குறித்துச் சொல்லுகிறார்; ஆகையால், கர்த்தர் அவர்கள்மேல் பிரியமாயிராமல், இப்பொழுது அவர்கள் அக்கிரமத்தை நினைத்து, அவர்கள் பாவங்களை விசாரிப்பார்.
11கர்த்தர் என்னை நோக்கி: நீ இந்த ஜனத்துக்கு நன்மையுண்டாக விண்ணப்பம்பண்ணவேண்டாம்.
12அவர்கள் உபவாசித்தாலும், நான் அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்பதில்லை; அவர்கள் தகனபலிகளையும் காணிக்கைகளையும் செலுத்தினாலும், நான் அவர்கள்மேல் பிரியமாயிருப்பதில்லை; பட்டயத்தினாலும் பஞ்சத்தினாலும் கொள்ளை நோயினாலும் நான் அவர்களை நிர்மூலமாக்குவேன் என்றார்.
13அப்பொழுது நான்: ஆ கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நீங்கள் பட்டயத்தைக் காண்பதில்லை, உங்களுக்குப் பஞ்சமும் வருவதில்லை; உறுதியான சமாதானத்தையே இவ்விடத்தில் உங்களுக்குத் தருவோமென்றார் என்று தீர்க்கதரிசிகள் அவர்களுக்குச் சொல்லுகிறார்களே என்றேன்.
14அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: தீர்க்கதரிசிகள் என் நாமத்தைக்கொண்டு பொய்யாய்த் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறார்கள். நான் அவர்களை அனுப்பினதுமில்லை, அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை, அவர்களோடே பேசினதுமில்லை; அவர்கள் கள்ளத் தரிசனத்தையும், கள்ள சகுனத்தையும், இல்லாத விசேஷத்தையும், தங்கள் இருதயத்தின் கபடத்தையுமே, உங்களுக்குத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார்கள்.
15ஆதலால், நான் அனுப்பாதிருந்தும், என் நாமத்தைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, இந்தத் தேசத்திலே பட்டயமும் பஞ்சமும் வருவதில்லையென்கிற தீர்க்கதரிசிகளைக்குறித்து: இப்படிப்பட்ட தீர்க்கதரிசிகள் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் சாவார்கள்.
16அவர்களிடத்தில் தீர்க்கதரிசனம் கேட்கும் ஜனங்களும், எருசலேமின் வீதிகளிலே பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் அழிந்து, அவர்களும் அவர்கள் மனைவிகளும், அவர்கள் குமாரரும், அவர்கள் குமாரத்திகளும் அடக்கம்பண்ணுவாரில்லாமல் கிடப்பார்கள்; அவர்களுடைய பொல்லாப்பை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
17என் கண்களிலிருந்து இரவும்பகலும் ஓயாமல் கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்; என் ஜனமென்கிற குமாரத்தியாகிய கன்னிகை மகா வேதனையுள்ள அடியினாலும் கொடிய காயத்தினாலும் சேதப்பட்டிருக்கிறாள்.
18நான் வெளியே போனால், இதோ, பட்டயத்தால் கொல்லப்பட்டவர்கள்; நகரத்தில் வந்தால் இதோ, பஞ்சத்தால் வருந்துகிறவர்கள்; தீர்க்கதரிசிகளும் ஆசாரியர்களும் ஒன்றும் அறியாமல் தேசத்தில் அலைகிறார்கள் என்னும் இந்த வார்த்தையை அவர்களுக்குச் சொல் என்றார்.
19யூதாவை முற்றிலும் வெறுத்தீரோ? சீயோன் உம்முடைய ஆத்துமாவுக்கு அரோசிகமாயிற்றோ? நாங்கள் ஆரோக்கியம் அடையக்கூடாதபடி எங்களை ஏன் அடித்தீர்? சமாதானத்துக்குக் காத்திருந்தோம், ஒரு நன்மையுமில்லை; ஆரோக்கிய காலத்துக்குக் காத்திருந்தோம், இதோ, ஆபத்து.
20கர்த்தாவே, எங்கள் தீமையையும் எங்கள் பிதாக்களின் அக்கிரமத்தையும் நாங்கள் அறிந்திருக்கிறோம்; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம்.
21உம்முடைய நாமத்தினிமித்தம் எங்களை அருவருக்காதிரும், உமது மகிமையின் சிங்காசனத்தைக் கனவீனப்படுத்தாதேயும்; எங்களோடே உமக்கு இருக்கிற உடன்படிக்கை அபத்தமாகாதபடி எங்களை நினைத்தருளும்.
22புறஜாதிகளுடைய வீணான தேவர்களுக்குள் மழை வருஷிக்கப்பண்ணத்தக்கவர்கள் உண்டோ? அல்லது, வானங்கள் தானாய் மழைகளைக் கொடுக்குமோ? எங்கள் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நீரல்லவோ அதைச் செய்கிறவர்; ஆகையால், உமக்குக் காத்திருக்கிறோம்; தேவரீர் இவைகளையெல்லாம் உண்டுபண்ணினீர்.
1ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்கவந்தார்கள்.
2அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கிவந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்.
3அவனுடைய ரூபம் மின்னல்போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்தமழையைப்போல வெண்மையாகவும் இருந்தது.
4காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள்போலானார்கள்.
5தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்.
6அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்;
7சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்குமுன்னே கலிலேயாவுக்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான்.
8அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையை விட்டுச் சீக்கிரமாய்ப் புறப்பட்டு, அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள்.
9அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப்போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்ப்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரை பணிந்துகொண்டார்கள்.
10அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் போய், என் சகோதரர் கலிலேயாவுக்குப்போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார்.
11அவர்கள் போகையில், காவல்சேவகரில் சிலர் நகரத்துக்குள்ளே வந்து. நடந்த யாவற்றையும் பிரதான ஆசாரியருக்கு அறிவித்தார்கள்.
12இவர்கள் மூப்பரோடே கூடிவந்து, ஆலோசனைப்பண்ணி, சேவகருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து:
13நாங்கள் நித்திரைபண்ணுகையில், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டுபோய்விட்டார்கள் என்று சொல்லுங்கள்.
14இது தேசாதிபதிக்குக் கேள்வியானால், நாங்கள் அவரைச் சம்மதப்படுத்தி, உங்களைத் தப்புவிப்போம் என்றார்கள்.
15அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு, தங்களுக்குப் போதிக்கப்பட்டபடியே செய்தார்கள். இந்தப் பேச்சு யூதருக்குள்ளே இந்நாள்வரைக்கும் பிரசித்தமாயிருக்கிறது.
16பதினொரு சீஷர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள்.
17அங்கே அவர்கள் அவரைக் கண்டு, பணிந்துகொண்டார்கள்; சிலரோ சந்தேகப்பட்டார்கள்.
18அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
19ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
20நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com