‹ முகப்புமுழுத் திட்டம்

ஜூலை 24 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்ஜூலை 24அடுத்த நாள் ›
குடும்பம்

நியாயாதிபதிகள் 7

முழு அதிகாரம் ›

1அப்பொழுது கிதியோனாகிய யெருபாகாலும் அவனோடிருந்த ஜனங்கள் யாவரும் காலமே எழுந்து புறப்பட்டு, ஆரோத் என்னும் நீருற்றின் கிட்டப் பாளயமிறங்கினார்கள்; மீதியானியரின் பாளயம் அவனுக்கு வடக்கே மோரே மேட்டிற்குப் பின்னான பள்ளத்தாக்கிலே இருந்தது.

2அப்பொழுது கர்த்தர் கிதியோனை நோக்கி: நான் மீதியானியரை உன்னோடிருக்கிற ஜனத்தின் கையில் ஒப்புக்கொடுக்கிறதற்கு அவர்கள் மிகுதியாயிருக்கிறார்கள்; என் கை என்னை இரட்சித்தது என்று இஸ்ரவேல் எனக்கு விரோதமாக வீம்பு பேசுகிறதற்கு இடமாகும்.

3ஆகையால் பயமும் திகிலும் உள்ளவன் எவனோ அவன் திரும்பி, கீலேயாத் மலைகளிலிருந்து விரைவாய் ஓடிப்போகக்கடவன் என்று, நீ ஜனங்களின் செவிகள் கேட்கப் பிரசித்தப்படுத்து என்றார்; அப்பொழுது ஜனத்தில் இருபத்தீராயிரம்பேர் திரும்பிப் போய்விட்டார்கள்; பதினாயிரம்பேர் மீதியாயிருந்தார்கள்.

4கர்த்தர் கிதியோனை நோக்கி: ஜனங்கள் இன்னும் அதிகம், அவர்களைத் தண்ணீரண்டைக்கு இறங்கிப்போகப்பண்ணு; அங்கே அவர்களைப் பரீட்சித்துக்காட்டுவேன்; உன்னோடேகூட வரலாம் என்று நான் யாரைக் குறிக்கிறேனோ, அவன் உன்னோடேகூட வரக்கடவன்; உன்னோடேகூட வரலாகாது என்று நான் யாரைக் குறிக்கிறேனோ, அவன் உன்னோடேகூட வராதிருக்கக்கடவன் என்றார்.

5அப்படியே அவன் ஜனங்களைத் தண்ணீரண்டைக்கு இறங்கிப்போகப்பண்ணினான்; அப்பொழுது கர்த்தர் கிதியோனை நோக்கி: தண்ணீரை ஒரு நாய் நக்கும்பிரகாரமாக அதைத் தன் நாவினாலே நக்குகிறவன் எவனோ அவனைத் தனியேயும், குடிக்கிறதற்கு முழங்கால் ஊன்றிக்குனிகிறவன் எவனோ, அவனைத் தனியேயும் நிறுத்து என்றார்.

6தங்கள் கையால் அள்ளி, தங்கள் வாய்க்கெடுத்து, நக்கிக்கொண்டவர்களின் இலக்கம் முந்நூறுபேர்; மற்ற ஜனங்களெல்லாம் தண்ணீர் குடிக்கிறதற்கு முழங்கால் ஊன்றிக் குனிந்தார்கள்.

7அப்பொழுது கர்த்தர் கிதியோனை நோக்கி: நக்கிக்குடித்த அந்த முந்நூறுபேராலே நான் உங்களை இரட்சித்து, மீதியானியரை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன், மற்ற ஜனங்களெல்லாரும் தங்கள் தங்கள் இடத்திற்குப் போகக்கடவர்கள் என்றார்.

8அப்பொழுது ஜனங்கள் தங்கள் கையில் தின்பண்டங்களையும் எக்காளங்களையும் எடுத்துக்கொண்டார்கள்; மற்ற இஸ்ரவேலரெல்லாரையும் தங்கள்தங்கள் கூடாரங்களுக்கு அனுப்பிவிட்டு, அந்த முந்நூறுபேரை மாத்திரம் வைத்துக்கொண்டான்; மீதியானியரின் சேனை அவனுக்குத் தாழ்விடமான பள்ளத்தாக்கில் இருந்தது.

9அன்று இராத்திரி கர்த்தர் அவனை நோக்கி: நீ எழுந்து, அந்தச் சேனையினிடத்திற்குப் போ; அதை உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்.

10போகப் பயப்பட்டாயானால், முதல் நீயும் உன் வேலைக்காரனாகிய பூராவும் சேனையினிடத்திற்குப் போய்,

11அங்கே என்ன பேசுகிறார்கள் என்று கேள்; பின்பு சேனையினிடத்திற்குப் போக, உன் கைகள் திடப்படும் என்றார்; அப்படியே அவனும் அவன் வேலைக்காரனாகிய பூராவும் சேனையின் முன்னணியிலே ஜாமம் காக்கிறவர்களின் இடமட்டும் போனார்கள்.

12மீதியானியரும், அமலேக்கியரும், சகல கிழக்கத்திய புத்திரரும், வெட்டுக்கிளிகளைப்போலத் திரளாய்ப் பள்ளத்தாக்கிலே படுத்துக்கிடந்தார்கள்; அவர்களுடைய ஒட்டகங்களுக்கும் கணக்கில்லை, கடற்கரை மணலைப்போலத் திரளாயிருந்தது.

13கிதியோன் வந்தபோது, ஒருவன் மற்றொருவனுக்கு ஒரு சொப்பனத்தைச் சொன்னான். அதாவது இதோ ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; சுட்டிருந்த ஒரு வாற்கோதுமை அப்பம் மீதியானியரின் பாளயத்திற்கு உருண்டுவந்தது, அது கூடாரமட்டும் வந்தபோது, அதை விழத்தள்ளிக் கவிழ்த்துப்போட்டது, கூடாரம் விழுந்துகிடந்தது என்றான்.

14அப்பொழுது மற்றவன்; இது யோவாசின் குமாரனாகிய கிதியோன் என்னும் இஸ்ரவேலனுடைய பட்டயமே அல்லாமல் வேறல்ல; தேவன் மீதியானியரையும், இந்தச் சேனை அனைத்தையும், அவன் கையிலே ஒப்புக்கொடுத்தார் என்றான்.

15கிதியோன் அந்தச் சொப்பனத்தையும் அதின் வியார்த்தியையும் கேட்டபோது, அவன் பணிந்துகொண்டு, இஸ்ரவேலின் பாளயத்திற்குத் திரும்பிவந்து: எழுந்திருங்கள், கர்த்தர் மீதியானியரின் பாளயத்தை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி,

16அந்த முந்நூறுபேரை மூன்று படையாக வகுத்து, அவர்கள் ஒவ்வொருவன் கையிலும் ஒரு எக்காளத்தையும், வெறும் பானையையும், அந்தப் பானைக்குள் வைக்கும் தீவட்டியையும் கொடுத்து,

17அவர்களை நோக்கி: நான் செய்வதைப் பார்த்து, அப்படியே நீங்களும் செய்யுங்கள். இதோ, நான் பாளயத்தின் முன்னணியில் வந்திருக்கும்போது, நான் எப்படிச் செய்கிறேனோ அப்படியே நீங்களும் செய்யவேண்டும்.

18நானும் என்னோடே இருக்கும் சகலமானபேரும் எக்காளம் ஊதும்போது, நீங்களும் பாளயத்தைச் சுற்றி எங்கும் எக்காளங்களை ஊதி, கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்பீர்களாக என்று சொன்னான்.

19நடுஜாமத்தின் துவக்கத்தில், ஜாமக்காரரை மாற்றிவைத்தபின்பு, கிதியோனும் அவனோடிருந்த நூறுபேரும் அந்த ஜாமத்தின் துவக்கத்திலே பாளயத்தின் முன்னணியில் வந்து, எக்காளங்களை ஊதி, தங்கள் கையிலிருந்த பானைகளை உடைத்தார்கள்.

20மூன்று படைகளின் மனுஷரும் எக்காளங்களை ஊதி, பானைகளை உடைத்து, தீவட்டிகளைத் தங்கள் இடதுகைகளிலும், ஊதும் எக்காளங்களைத் தங்கள் வலது கைகளிலும் பிடித்துக்கொண்டு, கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்று சத்தமிட்டு,

21பாளயத்தைச் சுற்றிலும் அவரவர் தங்கள் நிலையிலே நின்றார்கள்; அப்பொழுது பாளயத்தில் இருந்தவர்கள் எல்லாரும் சிதறிக் கூக்குரலிட்டு, ஓடிப்போனார்கள்.

22முந்நூறுபேரும் எக்காளங்களை ஊதுகையில், கர்த்தர் பாளயமெங்கும் ஒருவர் பட்டயத்தை ஒருவருக்கு விரோதமாய் ஓங்கப்பண்ணினார்; சேனையானது சேரோத்திலுள்ள பெத்சித்தாமட்டும், தாபாத்திற்குச் சமீபமான ஆபேல்மேகொலாவின் எல்லைமட்டும் ஓடிப்போயிற்று.

23அப்பொழுது நப்தலி மனுஷரும், ஆசேர் மனுஷரும், மனாசேயின் சகல மனுஷருமாகிய இஸ்ரவேலர் கூடிவந்து, மீதியானியரைப் பின்தொடர்ந்து போனார்கள்.

24கிதியோன் எப்பிராயீம் மலைகளெங்கும் ஆட்களை அனுப்பி: மீதியானியருக்கு விரோதமாயிறங்கி, பெத்தாபரா இருக்கும் யோர்தான் மட்டும் வந்து, அவர்களுக்கு முந்தித் துறைகளைக் கட்டிக்கொள்ளுங்கள் என்று சொல்லச் சொன்னான்; அப்படியே எப்பிராயீமின் மனுஷர் எல்லாரும் கூடி, பெத்தாபரா இருக்கும் யோர்தான் மட்டும் வந்து, துறைகளைக் கட்டிக்கொண்டு,

25மீதியானியரின் இரண்டு அதிபதிகளாகிய ஓரேபையும் சேபையும் பிடித்து, ஓரேபை ஓரேப் என்னப்பட்ட கன்மலையிலும், சேபை சேப் என்னப்பட்ட ஆலையிலும் கொன்றுபோட்டு, மீதியானியரைத் துரத்தி, ஓரேப் சேப் என்பவர்களின் தலைகளை யோர்தானுக்கு இக்கரையிலிருந்த கிதியோனிடத்துக்குக் கொண்டுவந்தார்கள்.

அப்போஸ்தலர் 11

முழு அதிகாரம் ›

1புறஜாதியாரும் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டார்களென்று யூதேயாவிலிருக்கிற அப்போஸ்தலரும் சகோதரரும் கேள்விப்பட்டார்கள்.

2பேதுரு எருசலேமுக்குத் திரும்பி வந்தபோது, விருத்தசேதனமுள்ளவர்கள் அவனை நோக்கி:

3விருத்தசேதனமில்லாத மனுஷரிடத்தில் நீர் போய், அவர்களோடே போஜனம்பண்ணினீர் என்று, அவனோடே வாக்குவாதம்பண்ணினார்கள்.

4அதற்குப் பேதுரு காரியத்தை முதலிலிருந்து வரிசையாய் அவர்களுக்கு விவரிக்கத் தொடங்கி:

5நான் யோப்பா பட்டணத்தில் ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தபோது ஞானதிருஷ்டியடைந்து, ஒரு தரிசனத்தைக் கண்டேன்; அதென்னவென்றால், நாலு முனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டியைப்போல ஒரு கூடு வானத்திலிருந்து என்னிடத்தில் இறங்கிவந்தது.

6அதிலே நான் உற்றுப்பார்த்துக் கவனிக்கிறபோது, பூமியிலுள்ள நாலுகால் ஜீவன்களையும், காட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், ஆகாயத்துப் பறவைகளையும் கண்டேன்.

7அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்துப் புசி என்று என்னுடனே சொல்லுகிற சத்தத்தையும் கேட்டேன்.

8அதற்கு நான்: ஆண்டவரே, அப்படியல்ல, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றும் ஒருக்காலும் என் வாய்க்குள்ளே போனதில்லை என்றேன்.

9இரண்டாந்தரமும் வானத்திலிருந்து சத்தம் உண்டாகி: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதேயென்று மறுமொழி சொல்லிற்று.

10இப்படி மூன்றுதரம் சம்பவித்தபின்பு, எல்லாம் வானத்திற்குத் திரும்ப எடுத்துக்கொள்ளப்பட்டது.

11உடனே செசரியாவிலிருந்து என்னிடத்திற்கு அனுப்பப்பட்ட மூன்று மனுஷர் நான் இருந்த வீட்டுக்குமுன்னே வந்துநின்றார்கள்.

12நான் ஒன்றுக்கும் சந்தேகப்படாமல் அவர்களோடேகூடப் போகும்படி ஆவியானவர் எனக்குக் கட்டளையிட்டார். சகோதரராகிய இந்த ஆறுபேரும் என்னோடேகூட வந்தார்கள்; அந்த மனுஷனுடைய வீட்டுக்குள் பிரவேசித்தோம்.

13அவனோ தன் வீட்டிலே ஒரு தேவதூதன் நிற்கிறதைக் கண்டதாகவும், யோப்பா பட்டணத்திலிருக்கிற பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோனை அழைக்கும்படிக்கு மனுஷரை அவ்விடத்திற்கு அனுப்பு;

14நீயும் உன் வீட்டாரனைவரும் இரட்சிக்கப்படுவதற்கேதுவான வார்த்தைகளை அவன் உனக்குச் சொல்லுவான் என்று அந்தத் தூதன் தனக்குச் சொன்னதாகவும் எங்களுக்கு அறிவித்தான்.

15நான் பேசத்தொடங்கினபோது, பரிசுத்த ஆவியானவர் ஆதியிலே நம்மேல் இறங்கினதுபோலவே, அவர்கள்மேலும் இறங்கினார்.

16யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தான், நீங்களோ பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள் என்று கர்த்தர் சொன்ன வார்த்தையை அப்பொழுது நினைவுகூர்ந்தேன்.

17ஆதலால் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்திருக்கிற நமக்கு தேவன் வரத்தை அநுக்கிரகம்பண்ணினதுபோல அவர்களுக்கும் அந்த வரத்தையே அநுக்கிரகம்பண்ணியிருக்கும்போது தேவனைத் தடுக்கிறதற்கு நான் எம்மாத்திரம் என்றான்.

18இவைகளை அவர்கள் கேட்டபொழுது அமர்ந்திருந்து: அப்படியானால் ஜீவனுக்கேதுவான மனந்திரும்புதலை தேவன் புறஜாதியாருக்கும் அருளிச்செய்தார் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

19ஸ்தேவான் நிமித்தமாய் எழும்பின உபத்திரவத்தினாலே சிதறப்பட்டவர்கள் சுவிசேஷ வசனத்தை யூதர்களுக்கேயன்றி மற்ற ஒருவருக்கும் அறிவியாமல், பெனிக்கேநாடு, சீப்புருதீவு, அந்தியோகியா பட்டணம்வரைக்கும் சுற்றித்திரிந்தார்கள்.

20அவர்களில் சீப்புருதீவாரும் சிரேனே பட்டணத்தாருமாகிய சிலர் அந்தியோகியா பட்டணத்துக்கு வந்து, கிரேக்கருடனே பேசிக் கர்த்தராகிய இயேசுவைக்குறித்துப் பிரசங்கித்தார்கள்.

21கர்த்தருடைய கரம் அவர்களோடே இருந்தது; அநேக ஜனங்கள் விசுவாசிகளாகி, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள்.

22எருசலேமிலுள்ள சபையார் இந்தக் காரியங்களைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அந்தியோகியாவரைக்கும் போகும்படிக்குப் பர்னபாவை அனுப்பினார்கள்.

23அவன் போய்ச் சேர்ந்து, தேவனுடைய கிருபையைக் கண்டபோது, சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் மனநிர்ணயமாய் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்திசொன்னான்.

24அவன் நல்லவனும், பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான்; அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய்ச் சேர்க்கப்பட்டார்கள்.

25பின்பு பர்னபா சவுலைத் தேடும்படி, தர்சுவுக்குப் புறப்பட்டுப்போய், அவனைக்கண்டு, அந்தியோகியாவுக்கு அழைத்துக்கொண்டுவந்தான்.

26அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம் பண்ணினார்கள். முதல்முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று.

27அந்நாட்களிலே எருசலேமிலிருந்து சில தீர்க்கதரிசிகள் அந்தியோகியாவுக்கு வந்தார்கள்.

28அவர்களில் ஒருவனாகிய அகபு என்பவன் எழுந்து, உலகமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவராலே அறிவித்தான்; அது அப்படியே கிலவுதியு ராயனுடைய நாட்களிலே உண்டாயிற்று.

29அப்பொழுது சீஷரில் அவரவர் தங்கள் தங்கள் திராணிக்குத்தக்கதாக யூதேயாவில் குடியிருக்கிற சகோதரருக்கு உதவியாகப் பணஞ்சேகரித்து அனுப்பவேண்டுமென்று தீர்மானம்பண்ணினார்கள்.

30அப்படியே அவர்கள் சேகரித்து, பர்னபா சவுல் என்பவர்களுடைய கையிலே கொடுத்து, மூப்பரிடத்திற்கு அனுப்பினார்கள்.

தனிவாசிப்பு

1எரேமியா இந்த வார்த்தைகளைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறதை ஆசாரியனான இம்மேருடைய குமாரனும், கர்த்தருடைய ஆலயத்துப் பிரதான விசாரணைக் கர்த்தனுமாகிய பஸ்கூர் கேட்டபோது,

2எரேமியா தீர்க்கதரிசியைப் பஸ்கூர் அடித்து, அவனைக் கர்த்தருடைய ஆலயத்திலே பென்யமீன் கோத்திரத்தாரைச்சேர்ந்த மேல்வாசலில் இருக்கும் காவலறையிலே போட்டான்.

3மறுநாளிலே பஸ்கூர் எரேமியாவைக் காவலறையிலிருந்து வெளியே போகவிட்டான்; அப்பொழுது எரேமியா அவனை நோக்கி: கர்த்தர் உன்னைப் பஸ்கூர் என்று அழைக்காமல், மாகோர் மீசாபீப் என்று அழைக்கிறார்.

4மேலும் கர்த்தர்: இதோ, நான் உன்னையும், உன் எல்லாச் சிநேகிதரையும் பயத்துக்கு ஒப்புக்கொடுக்கிறேன்; உன் கண்கள் காண இவர்கள் சத்துருக்களின் பட்டயத்தால் விழுவார்கள்; யூதா அனைத்தையும் நான் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பேன்; அவன் அவர்களைச் சிறைபிடித்து, சிலரைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய்ச் சிலரைப் பட்டயத்தால் வெட்டிப்போடுவான்.

5இந்த நகரத்தின் எல்லாப் பலத்தையும், அதின் எல்லாச் சம்பத்தையும், அதின் அருமையான எல்லாப் பொருள்களையும், யூதா ராஜாக்களின் எல்லாப் பொக்கிஷங்களையும், நான் அவர்கள் சத்துருக்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன்; அவர்கள் அவைகளைக் கொள்ளையிட்டு, பாபிலோனுக்குக் கொண்டுபோவார்கள்.

6பஸ்கூரே, நீயும் உன் வீட்டில் வாசமாயிருக்கிற யாவரும் சிறைப்பட்டுப்போவீர்கள்; நீயும் உன் கள்ளத்தீர்க்கதரிசனத்துக்குச் செவிகொடுத்த உன் சிநேகிதர் யாவரும் பாபிலோனுக்குப் போய், அங்கே மரித்து, அங்கே அடக்கம்பண்ணப்படுவீர்களென்று சொல்லுகிறார் என்றான்.

7கர்த்தாவே, என்னை இணங்கப்பண்ணினீர், நான் இணங்கினேன்; நீர் என்னிலும் பலத்தவராயிருந்து, என்னை மேற்கொண்டீர்; நாள்தோறும் நகைப்புக்கு இடமானேன்; எல்லாரும் என்னைப் பரிகாசம் பண்ணுகிறார்கள்.

8நான் பேசினது முதற்கொண்டு கதறுகிறேன்; கொடுமையென்றும் பாழ்க்கடிப்பென்றும் சத்தமிட்டுக் கூறுகிறேன்; நான் கூறின கர்த்தருடைய வார்த்தை நாள்தோறும் எனக்கு நிந்தையும், பரிகாசமுமாயிற்று.

9ஆதலால் நான் அவரைப் பிரஸ்தாபம்பண்ணாமலும் இனிக் கர்த்தருடைய நாமத்திலே பேசாமலும் இருப்பேன் என்றேன்; ஆனாலும் அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது; அதைச் சகித்து இளைத்துப்போனேன்; எனக்குப் பொறுக்கக்கூடாமற்போயிற்று.

10அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன், பயம் சூழ்ந்திருந்தது; அறிவியுங்கள், அப்பொழுது நாங்கள் அதை அறிவிப்போம் என்கிறார்கள்; என்னோடே சமாதானமாயிருந்த அனைவரும் நான் தவறிவிழும்படிக் காத்திருந்து: ஒருவேளை இணங்குவான், அப்பொழுது அவனை மேற்கொண்டு, அவனில் குரோதந்தீர்த்துக்கொள்வோம் என்கிறார்கள்.

11கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார், ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்; தங்கள் காரியம் வாய்க்காதபடியால் மிகவும் வெட்கப்படுவார்கள்; மறக்கப்படாத நித்திய இலச்சை அவர்களுக்கு உண்டாகும்.

12ஆனாலும் நீதிமானைச் சோதித்தறிந்து, உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் பார்க்கிற சேனைகளின் கர்த்தாவே, நீர் அவர்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிறதைக் காண்பேனாக; என் காரியத்தை உம்மிடத்தில் சாட்டிவிட்டேன்.

13கர்த்தரைப் பாடுங்கள், கர்த்தரைத் துதியுங்கள்; அவர் எளியவனுடைய ஆத்துமாவைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவிக்கிறார்.

14நான் பிறந்த நாள் சபிக்கப்படுவதாக; என் தாயார் என்னைப் பெற்ற நாள் ஆசீர்வதிக்கப்படாதிருப்பதாக.

15உமக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்ததென்றும் என் தகப்பனுக்கு நற்செய்தியாக அறிவித்து, அவனை மிகவும் சந்தோஷப்படுத்தின மனுஷன் சபிக்கப்படக்கடவன்.

16அந்த மனுஷன், கர்த்தர் மனம்மாறாமல் கவிழ்த்துப்போட்ட பட்டணங்களைப்போலிருந்து, காலமே அலறுதலையும் மத்தியான வேளையிலே கூக்குரலையும் கேட்கக்கடவன்.

17என் தாயார் எனக்குப் பிரேதக்குழியும், நான் என்றைக்கும் பிரசவியாத சூலுமாய் இருக்கத்தக்கதாகக் கர்ப்பத்திலே நான் கொலைசெய்யப்படாமற்போனதென்ன?

18நான் வருத்தத்தையும் சஞ்சலத்தையும் கண்டு, என் நாட்கள் வெட்கமாய்க் கழியும்படிக்கு நான் கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டதென்ன?

1அவர் அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தாம் வளர்ந்த ஊருக்கு வந்தார்; அவருடைய சீஷரும் அவரோடேகூட வந்தார்கள்.

2ஓய்வுநாளானபோது, ஜெபஆலயத்தில் உபதேசம்பண்ணத்தொடங்கினார். அநேகர் கேட்டு, ஆச்சரியப்பட்டு, இவைகள் இவனுக்கு எங்கேயிருந்து வந்தது? இவன் கைகளினால் இப்படிப்பட்ட பலத்த செய்கைகள் நடக்கும்படி இவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது?

3இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் என்பவர்களுக்கு சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறலடைந்தார்கள்.

4இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் இனத்திலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார்.

5அங்கே அவர் சில நோயாளிகள்மேல் கைகளை வைத்து, அவர்களைக் குணமாக்கினதேயன்றி, வேறொரு அற்புதமும் செய்யக்கூடாமல்,

6அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டு, கிராமங்களிலே சுற்றித்திரிந்து, உபதேசம் பண்ணினார்.

7அவர் பன்னிருவரையும் அழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்த அவர்களுக்கு அதிகாரங்கொடுத்து,

8வழிக்குப் பையையாகிலும், அப்பத்தையாகிலும், கச்சையில் காசையாகிலும், எடுத்துக்கொண்டுபோகாமல், ஒரு தடியைமாத்திரம் எடுத்துக்கொண்டுபோகவும்;

9பாதரட்சைகளைப் போட்டுக்கொண்டுபோகவும், இரண்டு அங்கிகளைத் தரியாதிருக்கவும் கட்டளையிட்டார்.

10பின்பு அவர்களை நோக்கி: நீங்கள் எங்கேயாகிலும் ஒரு வீட்டில் பிரவேசித்தால் அவ்விடத்தை விட்டுப் புறப்படுகிறவரைக்கும் அங்கேதானே தங்கியிருங்கள்.

11எவர்களாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வசனங்களைக்கேளாமலும் இருந்தால், நீங்கள் அவ்விடம் விட்டுப் புறப்படும்போது, அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களின் கீழே படிந்த தூசியை உதறிப்போடுங்கள். நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் கொமோரா பட்டணத்திற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்களை இரண்டு இரண்டுபேராக அனுப்பினார்.

12அவர்கள் புறப்பட்டுப்போய்: மனந்திரும்புங்கள் என்று பிரசங்கித்து;

13அநேகம் பிசாசுகளைத் துரத்தி, அநேகம் நோயாளிகளை எண்ணெய் பூசிச் சொஸ்தமாக்கினார்கள்.

14அவருடைய பேர் பிரசித்தமானபடியினால், ஏரோதுராஜா அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு: யோவான்ஸ்நானன் மரித்தோரிலிருந்து எழுந்தான், ஆகையால் அவனிடத்தில் இந்தப் பலத்தசெய்கைகள் விளங்குகிறது என்றான்.

15சிலர்: அவர் எலியா என்றார்கள். வேறு சிலர்: அவர், ஒரு தீர்க்கதரிசி, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவனைப்போலிருக்கிறாரென்று சொன்னார்கள்.

16ஏரோது அதைக் கேட்டபொழுது: அவன் நான் சிரச்சேதம்பண்ணின யோவான்தான்; அவன் மரித்தோரிலிருந்து எழுந்தான் என்றான்.

17ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளைத் தனக்கு மனைவியாக்கிக்கொண்டபோது,

18யோவான் ஏரோதை நோக்கி: நீர் உம்முடைய சகோதரன் மனைவியை வைத்துக்கொள்ளுவது நியாயமல்லவென்று சொன்னதினிமித்தம், ஏரோது சேவகரை அனுப்பி, யோவானைப் பிடித்துக் கட்டிக்காவலில் வைத்திருந்தான்.

19ஏரோதியாளும் அவனுக்குச் சதி நினைத்து, அவனைக் கொன்றுபோட மனதாயிருந்தாள்; ஆகிலும் அவளால் கூடாமற்போயிற்று.

20அதேனென்றால் யோவான் நீதியும் பரிசுத்தமுமுள்ளவனென்று ஏரோது அறிந்து, அவனுக்குப் பயந்து, அவனைப் பாதுகாத்து, அவன் யோசனையின்படி அநேக காரியங்களைச் செய்து, விருப்பத்தோடே அவன் சொல்லைக் கேட்டுவந்தான்.

21பின்பு சமயம் வாய்த்தது; எப்படியென்றால், ஏரோது தன் ஜென்மநாளிலே தன்னுடைய பிரபுக்களுக்கும், சேனாதிபதிகளுக்கும், கலிலேயா நாட்டின் பிரதான மனுஷருக்கும் ஒரு விருந்து பண்ணினபோது,

22ஏரோதியாளின் குமாரத்தி சபை நடுவே வந்து நடனம்பண்ணி, ஏரோதுவையும் அவனோடேகூடப் பந்தியிருந்தவர்களையும் சந்தோஷப்படுத்தினாள், அப்பொழுது, ராஜா சிறுபெண்ணை நோக்கி: உனக்கு வேண்டியதை என்னிடத்தில் கேள், அதை உனக்குத் தருவேன் என்று சொன்னதுமல்லாமல்;

23நீ என்னிடத்தில் எதைக் கேட்டாலும், அது என் ராஜ்யத்தில் பாதியானாலும், அதை உனக்குத் தருவேன் என்று அவளுக்கு ஆணையும் இட்டான்.

24அப்பொழுது, அவள் வெளியேபோய், நான் என்ன கேட்கவேண்டும் என்று தன் தாயினிடத்தில் கேட்டாள். அதற்கு அவள்: யோவான்ஸ்நானனுடைய தலையைக் கேள் என்றாள்.

25உடனே அவள் ராஜாவினிடத்தில் சீக்கிரமாய் வந்து: நீர் இப்பொழுதே ஒரு தாலத்தில் யோவான்ஸ்நானனுடைய தலையை எனக்குத் தரவேண்டும் என்று கேட்டாள்.

26அப்பொழுது ராஜா மிகுந்த துக்கமடைந்தான்; ஆகிலும், ஆணையினிமித்தமும், கூடப்பந்தியிருந்தவர்களினிமித்தமும், அவளுக்கு அதை மறுக்கமனதில்லாமல்;

27உடனே அவனுடைய தலையைக் கொண்டுவரும்படி சேவகனுக்குக் கட்டளையிட்டு அனுப்பினான்.

28அந்தப்படி அவன் போய், காவற்கூடத்திலே அவனைச் சிரச்சேதம்பண்ணி, அவன் தலையை ஒரு தாலத்திலே கொண்டுவந்து, அதை அந்தச் சிறு பெண்ணுக்குக் கொடுத்தான்; அந்தச் சிறுபெண் அதைத் தன் தாயினிடத்தில் கொடுத்தாள்.

29அவனுடைய சீஷர்கள் அதைக் கேள்விப்பட்டு வந்து, அவன் உடலை எடுத்து, ஒரு கல்லறையில் வைத்தார்கள்.

30அப்பொழுது அப்போஸ்தலர் இயேசுவினிடத்தில் கூடிவந்து, தாங்கள் செய்தவைகள் உபதேசித்தவைகள் யாவையும் அவருக்கு அறிவித்தார்கள்.

31அவர் அவர்களை நோக்கி: வனாந்தரமான ஓரிடத்தில் தனித்து சற்றே இளைப்பாறும்படி போவோம் வாருங்கள் என்றார்; ஏனெனில், வருகிறவர்களும் போகிறவர்களும் அநேகராயிருந்தபடியினால் போஜனம் பண்ணுகிறதற்கும் அவர்களுக்குச் சமயமில்லாதிருந்தது.

32அப்படியே அவர்கள் தனிமையாய் ஒரு படவில் ஏறி வனாந்தரமான ஓர் இடத்திற்குப் போனார்கள்.

33அவர்கள் புறப்பட்டுப் போகிறதை ஜனங்கள் கண்டார்கள். அவரை அறிந்த அநேகர் சகல பட்டணங்களிலுமிருந்து கால்நடையாய் அவ்விடத்திற்கு ஓடி, அவர்களுக்கு முன்னே அங்கே சேர்ந்து, அவரிடத்தில் கூடிவந்தார்கள்.

34இயேசு கரையில் வந்து, அநேக ஜனங்களைக் கண்டு, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலிருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, அநேக காரியங்களை அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார்.

35வெகுநேரம் சென்றபின்பு, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: இது வனாந்தரமான இடம், வெகுநேரமுமாயிற்று;

36புசிக்கிறதற்கும் இவர்களிடத்திலே ஒன்றுமில்லை; ஆகையால் இவர்கள் சுற்றியிருக்கிற கிராமங்களுக்கும் ஊர்களுக்கும் போய், தங்களுக்காக அப்பங்களை வாங்கிக்கொள்ளும்படி இவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.

37அவர் அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் போய், இருநூறு பணத்துக்கு அப்பங்களை வாங்கி இவர்களுக்குப் புசிக்கும்படி கொடுக்கக்கூடுமோ என்றார்கள்.

38அதற்கு அவர்: உங்களிடத்தில் எத்தனை அப்பங்களுண்டு, போய்ப்பாருங்கள் என்றார். அவர்கள் பார்த்துவந்து: ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் உண்டு என்றார்கள்.

39அப்பொழுது எல்லாரையும் பசும்புல்லின்மேல் பந்திபந்தியாக உட்காரவைக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

40அப்படியே வரிசை வரிசையாய், நூறுநூறுபேராகவும் ஐம்பதைம்பதுபேராகவும் உட்கார்ந்தார்கள்.

41அவர் அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப்பிட்டு, அவர்களுக்குப் பரிமாறும்படி தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார். அப்படியே இரண்டு மீன்களையும் எல்லாருக்கும் பங்கிட்டார்.

42எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்.

43மேலும் அப்பங்களிலும் மீன்களிலும் மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடைநிறைய எடுத்தார்கள்.

44அப்பம் சாப்பிட்ட புருஷர் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள்.

45அவர் ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி அக்கரையில் பெத்சாயிதாவுக்கு எதிராக, தமக்கு முன்னே போகும்படி, அவர்களைத் துரிதப்படுத்தினார்.

46அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறினார்.

47சாயங்காலமானபோது படவு நடுக்கடலிலிருந்தது; அவரோ கரையிலே தனிமையாயிருந்தார்.

48அப்பொழுது காற்று அவர்களுக்கு எதிராயிருந்தபடியினால், அவர்கள் தண்டு வலிக்கிறதில் வருத்தப்படுகிறதை அவர்கண்டு, இராத்திரியில் நாலாம் ஜாமத்தில் கடலின்மேல் நடந்து அவர்களிடத்தில் வந்து, அவர்களைக் கடந்துபோகிறவர்போல் காணப்பட்டார்.

49அவர் கடலின்மேல் நடக்கிறதை அவர்கள் கண்டு, ஆவேசம் என்று எண்ணி, சத்தமிட்டு அலறினார்கள்.

50அவர்களெல்லாரும் அவரைக் கண்டு கலக்கமடைந்தார்கள். உடனே அவர் அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்று சொல்லி.

51அவர்கள் இருந்த படவில் ஏறினார். அப்பொழுது காற்று அமர்ந்தது; அதினால் அவர்கள் தங்களுக்குள்ளே மிகவும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள்.

52அவர்களுடைய இருதயம் கடினமுள்ளதாயிருந்தபடியினால் அப்பங்களைக்குறித்து அவர்கள் உணராமற்போனார்கள்.

53அவர்கள் கடலைக் கடந்து கெனேசரேத்தென்னும் நாட்டிற்கு வந்து, கரைபிடித்தார்கள்.

54அவர்கள் படவிலிருந்து இறங்கினவுடனே, ஜனங்கள் அவரை அறிந்து,

55அந்தச் சுற்றுபுறமெங்கும் ஓடித்திரிந்து, பிணியாளிகளைப் படுக்கைகளில் கிடத்தி, அவர் வந்திருக்கிறாரென்று கேள்விப்பட்ட இடங்களிலெல்லாம் சுமந்து கொண்டுவந்தார்கள்;

56அல்லாமலும் அவர் பிரவேசித்த கிராமங்கள் பட்டணங்கள் நாடுகள் எவைகளோ, அவைகளின் சந்தைவெளிகளிலே வியாதிக்காரரை வைத்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவரைத் தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com