‹ முகப்புமுழுத் திட்டம்

ஜூலை 25 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்ஜூலை 25அடுத்த நாள் ›
குடும்பம்

நியாயாதிபதிகள் 8

முழு அதிகாரம் ›

1அப்பொழுது எப்பிராயீம் மனுஷர் அவனை நோக்கி: நீ மீதியானியர்மேல் யுத்தம் பண்ணப்போகிறபோது, எங்களை அழைப்பிக்கவில்லையே, இப்படி நீ எங்களுக்குச் செய்தது என்ன என்று, அவனோடே பலத்த வாக்குவாதம்பண்ணினார்.

2அதற்கு அவன்: நீங்கள் செய்ததற்கு நான் செய்தது எம்மாத்திரம்? அபியேஸ்ரியரின் திராட்சப்பழத்தின் முழு அறுப்பைப்பார்க்கிலும், எப்பிராயீமரின் மீதியான அறுப்பு அதிகம் அல்லவா?

3தேவன் உங்கள் கையிலே மீதியானியரின் அதிபதிகளாகிய ஓரேபையும் சேபையும் ஒப்புக்கொடுத்தாரே; நீங்கள் செய்ததிலும் நான் செய்யக்கூடியது எம்மாத்திரம் என்றான்; இந்த வார்த்தையை அவன் சொன்னபோது, அவன் மேலிருந்த அவர்களுடைய கோபம் ஆறிற்று.

4கிதியோன் யோர்தானுக்கு வந்தபோது, அவனும் அவனோடிருந்த முந்நூறுபேரும் அதைக் கடந்துபோய், விடாய்த்திருந்தும் (சத்துருவை) பின்தொடர்ந்தார்கள்.

5அவன் சுக்கோத்தின் மனுஷரை நோக்கி: என்னோடிருக்கிற ஜனத்திற்குச் சில அப்பங்களைக் கொடுங்கள்; அவர்கள் விடாய்த்திருக்கிறார்கள், நான் மீதியானியரின் ராஜாக்களாகிய சேபாவையும் சல்முனாவையும் பின்தொடருகிறேன் என்றான்.

6அதற்குச் சுக்கோத்தின் பிரபுக்கள்: உன் சேனைக்கு நாங்கள் அப்பம் கொடுக்கிறதற்குச் சேபா சல்முனா என்பவர்களின் கை உன் கைவசமாயிற்றோ என்றார்கள்.

7அப்பொழுது கிதியோன் அவர்களை நோக்கி: கர்த்தர் சேபாவையும் சல்முனாவையும் என் கையில் ஒப்புக்கொடுக்கும்போது, உங்கள் மாம்சத்தை வனாந்தரத்தின் முள்ளுகளாலும் நெரிஞ்சில்களாலும் கிழித்துவிடுவேன் என்று சொல்லி,

8அவ்விடம் விட்டு, பெனூவேலுக்குப் போய், அவ்வூராரிடத்தில் அந்தப்படியே கேட்டான்; சுக்கோத்தின் மனுஷர் பிரதியுத்தரமாகச் சொன்னபடியே பெனூவேலின் மனுஷரும் அவனுக்குச் சொன்னார்கள்.

9அப்பொழுது அவன், பெனூவேலின் மனுஷரைப் பார்த்து: நான் சமாதானத்தோடே திரும்பிவரும்போது, இந்தக் கோபுரத்தை இடித்துப்போடுவேன் என்றான்.

10சேபாவும் சல்முனாவும் அவர்களோடேகூட அவர்களுடைய சேனைகளும் ஏறக்குறைய பதினையாயிரம்பேர் கர்கோரில் இருந்தார்கள்; பட்டயம் உருவத்தக்க லட்சத்து இருபதினாயிரம்பேர் விழுந்தபடியால், கிழக்கத்தியாரின் சகல சேனையிலும் இவர்கள் மாத்திரம் மீந்திருந்தார்கள்.

11கிதியோன் கூடாரங்களிலே குடியிருக்கிறவர்கள் வழியாய் நோபாகுக்கும், யொகிபெயாவுக்கும் கிழக்கே போய், அந்தச் சேனை பயமில்லை என்றிருந்தபோது, அதை முறிய அடித்தான்.

12சேபாவும் சல்முனாவும் ஓடிப்போனார்கள்; அவனோ அவர்களைத் தொடர்ந்து, சேபா சல்முனா என்னும் மீதியானியரின் இரண்டு ராஜாக்களையும் பிடித்து, சேனை முழுவதையும் கலங்கடித்தான்.

13யோவாசின் குமாரனாகிய கிதியோன் யுத்தம்பண்ணி, சூரியன் உதிக்கும் முன்னே திரும்பிவந்தபோது,

14சுக்கோத்தின் மனுஷரில் ஒரு வாலிபனைப் பிடித்து, அவனிடத்தில் விசாரித்தான்; அவன் சுக்கோத்தின் பிரபுக்களும் அதின் மூப்பருமாகிய எழுபத்தேழு மனுஷரின் பேரை அவனுக்கு எழுதிக்கொடுத்தான்.

15அவன் சுக்கோத்து ஊராரிடத்தில் வந்து: இதோ, விடாய்த்திருக்கிற உன் மனுஷருக்கு நாங்கள் அப்பம் கொடுக்கிறதற்குச் சேபா சல்முனா என்பவர்களின் கை உன் கைவசமாயிற்றோ என்று நீங்கள் என்னை நிந்தித்துச் சொன்ன சேபாவும் சல்முனாவும் இங்கே இருக்கிறார்கள் என்று சொல்லி,

16பட்டணத்தின் மூப்பரைப் பிடித்து, வனாந்தரத்தின் முள்ளுகளையும் நெரிஞ்சில்களையும் கொண்டுவந்து, அவைகளால் சுக்கோத்தின் மனுஷருக்குப் புத்திவரப்பண்ணி,

17பெனூவேலின் கோபுரத்தை இடித்து, அவ்வூர் மனுஷரையும் கொன்றுபோட்டான்.

18பின்பு அவன் சேபாவையும் சல்முனாவையும் நோக்கி: நீங்கள் தாபோரிலே கொன்றுபோட்ட அந்த மனுஷர் எப்படிப்பட்டவர்கள் என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: நீர் எப்படிப்பட்டவரோ அவர்களும் அப்படிப்பட்டவர்களே; ஒவ்வொருவனும் பார்வைக்கு ராஜகுமாரனைப்போலிருந்தான் என்றார்கள்.

19அப்பொழுது அவன்: அவர்கள் என் சகோதரரும் என் தாயின் பிள்ளைகளுமாயிருந்தார்கள்; அவர்களை உயிரோடே வைத்திருந்தீர்களானால். உங்களைக் கொல்லாதிருப்பேன் என்று கர்த்தரின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று சொல்லி,

20தன் மூத்தகுமாரனாகிய யெத்தேரை நோக்கி: நீ எழுந்து, இவர்களை வெட்டிப்போடு என்றான்; அந்த வாலிபன் இளைஞனானபடியால் பயந்து தன் பட்டயத்தை உருவாதிருந்தான்.

21அப்பொழுது சேபாவும் சல்முனாவும்: நீரே எழுந்து எங்கள்மேல் விழும்; மனுஷன் எப்படியோ அப்படியே அவன் பெலனும் இருக்கும் என்றார்கள்; கிதியோன் எழுந்து, சேபாவையும் சல்முனாவையும் கொன்றுபோட்டு, அவர்கள் ஒட்டகங்களின் கழுத்துகளில் இருந்த சாந்துக்காறைகளை எடுத்துக்கொண்டான்.

22அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் கிதியோனை நோக்கி: நீர் எங்களை மீதியானியர் கைக்கு நீங்கலாக்கிவிட்டபடியினால் நீரும் உம்முடைய குமாரனும், உம்முடைய குமாரனின் குமாரனும், எங்களை ஆளக்கடவீர்கள் என்றார்கள்.

23அதற்குக் கிதியோன்: நான் உங்களை ஆளமாட்டேன்; என் குமாரனும் உங்களை ஆளமாட்டான்; கர்த்தரே உங்களை ஆளுவாராக என்றான்.

24பின்பு கிதியோன் அவர்களை நோக்கி: உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன்; நீங்கள் அவரவர் கொள்ளையிட்ட கடுக்கன்களை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான். அவர்கள் இஸ்மவேலராயிருந்தபடியினால் அவர்களிடத்தில் பொன்கடுக்கன்கள் இருந்தது.

25இஸ்ரவேலர்: சந்தோஷமாய்க் கொடுப்போம் என்று சொல்லி, ஒரு வஸ்திரத்தை விரித்து, அவரவர் கொள்ளையிட்ட கடுக்கன்களை அதிலே போட்டார்கள்.

26பிறைச்சிந்தாக்குகளும், ஆரங்களும், மீதியானியரின் ராஜாக்கள் போர்த்துக்கொண்டிருந்த இரத்தாம்பரங்களும், அவர்களுடைய ஒட்டகங்களின் கழுத்துகளிலிருந்த சரப்பணிகளும் அல்லாமல், அவன் கேட்டு வாங்கின பொன்கடுக்கன்களின் நிறை ஆயிரத்து எழுநூறு பொன் சேக்கலின் நிறையாயிருந்தது.

27அதினால் கிதியோன் ஒரு ஏபோத்தை உண்டாக்கி, அதைத் தன் ஊரான ஒப்ராவிலே வைத்தான்; இஸ்ரவேலரெல்லாரும் அதைப் பின்பற்றிச் சோரம்போனார்கள்; அது கிதியோனுக்கும் அவன் வீட்டாருக்கும் கண்ணியாயிற்று.

28இந்தப்பிரகாரம் மீதியானியர் திரும்ப தலையெடுக்கக்கூடாதபடிக்கு, இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டார்கள்; தேசமானது கிதியோனின் நாட்களில் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது.

29யோவாசின் குமாரனாகிய யெருபாகால் போய், தன் வீட்டிலே வாசமாயிருந்தான்.

30கிதியோனுக்கு அநேகம் ஸ்திரீகள் இருந்தார்கள்; அவனுடைய கர்ப்பப்பிறப்பான குமாரர் எழுபதுபேர்.

31சீகேமிலிருந்த அவனுடைய மறுமனையாட்டியும் அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்; அவனுக்கு அபிமெலேக்கு என்று பேரிட்டான்.

32பின்பு யோவாசின் குமாரனாகிய கிதியோன் நல்ல விருத்தாப்பியத்திலே மரித்து, ஒப்ராவிலே தன் தகப்பனாகிய யோவாஸ் என்னும் அபியேஸ்ரியனுடைய கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டான்.

33கிதியோன் மரித்தபின் இஸ்ரவேல் புத்திரர் திரும்பவும் பாகால்களைப் பின்பற்றிச் சோரம்போய், பாகால்பேரீத்தைத் தங்களுக்கு தேவனாக வைத்துக்கொண்டார்கள்.

34இஸ்ரவேல் புத்திரர் தங்களைச் சுற்றிலுமிருந்த தங்கள் எல்லாச் சத்துருக்களின் கையினின்றும் தங்களை இரட்சித்த தங்கள் தேவனாகிய கர்த்தரை நினையாமலும்,

35கிதியோன் என்னும் யெருபாகால் இஸ்ரவேலுக்குச் செய்த சகல நன்மைக்குத்தக்க தயவை அவன் வீட்டாருக்குப் பாராட்டாமலும் போனார்கள்.

அப்போஸ்தலர் 12

முழு அதிகாரம் ›

1அக்காலத்திலே ஏரோது ராஜா சபையிலே சிலரைத் துன்பப்படுத்தத் தொடங்கி;

2யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலைசெய்தான்.

3அது யூதருக்குப் பிரியமாயிருக்கிறதென்று அவன் கண்டு, பேதுருவையும் பிடிக்கத்தொடர்ந்தான். அப்பொழுது புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களாயிருந்தது.

4அவனைப் பிடித்துச் சிறைச்சாலையிலே வைத்து, பஸ்காபண்டிகைக்குப் பின்பு ஜனங்களுக்கு முன்பாக அவனை வெளியே கொண்டுவரலாமென்று எண்ணி, அவனைக் காக்கும்படி வகுப்புக்கு நான்கு போர்ச்சேவகராக ஏற்படுத்திய நான்கு வகுப்புகளின் வசமாக ஒப்புவித்தான்.

5அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காக்கப்பட்டிருக்கையில் சபையார் அவனுக்காகத் தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள்.

6ஏரோது அவனை வெளியே கொண்டுவரும்படி குறித்திருந்த நாளுக்கு முந்தின நாள் இராத்திரியிலே, பேதுரு இரண்டு சங்கிலிகளினாலே கட்டப்பட்டு, இரண்டு சேவகர் நடுவே நித்திரை பண்ணிக்கொண்டிருந்தான்; காவற்காரரும் கதவுக்கு முன்னிருந்து சிறைச்சாலையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.

7அப்பொழுது கர்த்தருடைய தூதன் அங்கே வந்துநின்றான்; அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது. அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாய் எழுந்திரு என்று அவனை எழுப்பினான். உடனே சங்கிலிகள் அவன் கைகளிலிருந்து விழுந்தது.

8தூதன் அவனை நோக்கி: உன் அரையைக் கட்டி, உன் பாதரட்சைகளைத் தொடுத்துக்கொள் என்றான். அவன் அந்தப்படியே செய்தான். தூதன் பின்னும் அவனை நோக்கி: உன் வஸ்திரத்தைப் போர்த்துக்கொண்டு என் பின்னே வா என்றான்.

9அந்தப்படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின்சென்று, தூதனால் செய்யப்பட்டது மெய்யென்று அறியாமல், தான் ஒரு தரிசனங்காண்கிறதாக நினைத்தான்.

10அவர்கள் முதலாங்காவலையும் இரண்டாங்காவலையும் கடந்து, நகரத்திற்குப்போகிற இருப்புக்கதவண்டையிலே வந்தபோது அது தானாய் அவர்களுக்குத் திறவுண்டது; அதின் வழியாய் அவர்கள் புறப்பட்டு ஒரு வீதி நெடுக நடந்துபோனார்கள்; உடனே தூதன் அவனை விட்டுப்போய்விட்டான்.

11பேதுருவுக்குத் தெளிவு வந்தபோது: ஏரோதின் கைக்கும் யூதஜனங்களின் எண்ணங்களுக்கும் என்னை விடுதலையாக்கும்படிக்குக் கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பினாரென்று நான் இப்பொழுது மெய்யாய் அறிந்திருக்கிறேன் என்றான்.

12அவன் இப்படி நிச்சயித்துக்கொண்டு, மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானுடைய தாயாகிய மரியாள் வீட்டுக்கு வந்தான்; அங்கே அநேகர் கூடி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.

13பேதுரு வாசற்கதவைத் தட்டினபோது ரோதை என்னும் பேர்கொண்ட ஒரு பெண் ஒற்றுக்கேட்க வந்தாள்.

14அவள் பேதுருவின் சத்தத்தை அறிந்து சந்தோஷத்தினால் கதவைத் திறவாமல், உள்ளேயோடி, பேதுரு வாசலுக்குமுன்னே நிற்கிறார் என்று அறிவித்தாள்.

15அவர்கள்: நீ பிதற்றுகிறாய் என்றார்கள். அவளோ அவர்தானென்று உறுதியாய்ச் சாதித்தாள். அப்பொழுது அவர்கள்: அவருடைய தூதனாயிருக்கலாம் என்றார்கள்.

16பேதுரு பின்னும் தட்டிக்கொண்டிருந்தான். அவர்கள் திறந்தபோது அவனைக் கண்டு பிரமித்தார்கள்.

17அவர்கள் பேசாமலிருக்கும்படி அவன் கையமர்த்தி, கர்த்தர் தன்னைக் காவலிலிருந்து விடுதலையாக்கின விதத்தை அவர்களுக்கு விவரித்து, இந்தச் செய்தியை யாக்கோபுக்கும் சகோதரருக்கும் அறிவியுங்கள் என்று சொல்லி; புறப்பட்டு, வேறொரு இடத்திற்குப் போனான்.

18பொழுது விடிந்தபின்பு பேதுருவைக்குறித்துச் சேவகருக்குள்ளே உண்டான கலக்கம் கொஞ்சமல்ல.

19ஏரோது அவனைத் தேடிக் காணாமற்போனபோது, காவற்காரரை விசாரணைசெய்து, அவர்களைக் கொலைசெய்யும்படி கட்டளையிட்டு, பின்பு யூதேயாதேசத்தைவிட்டுச் செசரியா பட்டணத்துக்குப்போய், அங்கே வாசம்பண்ணினான்.

20அக்காலத்திலே ஏரோது தீரியர்பேரிலும் சீதோனியர்பேரிலும் மிகவும் கோபமாயிருந்தான். தங்கள் தேசம் ராஜாவின் தேசத்தினால் போஷிக்கப்பட்டபடியினால், அவர்கள் ஒருமனப்பட்டு, அவனிடத்தில் வந்து, ராஜாவின் வீட்டு விசாரணைக்காரனாகிய பிலாஸ்துவைத் தங்கள் வசமாக்கிச் சமாதனம் கேட்டுக்கொண்டார்கள்.

21குறித்தநாளிலே: ஏரோது ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டு, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, அவர்களுக்குப் பிரசங்கம்பண்ணினான்.

22அப்பொழுது ஜனங்கள் இது மனுஷசத்தமல்ல, இது தேவசத்தம் என்று ஆர்ப்பரித்தார்கள்.

23அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து இறந்தான்.

24தேவவசனம் வளர்ந்து பெருகிற்று.

25பர்னபாவும் சவுலும் தர்ம ஊழியத்தை நிறைவேற்றினபின்பு மாற்கு என்னும் மறுபேர்கொண்ட யோவானைக் கூட்டிக்கொண்டு எருசலேமைவிட்டுத் திரும்பிவந்தார்கள்.

தனிவாசிப்பு

1சிதேக்கியா ராஜா மல்கியாவின் குமாரனாகிய பஸ்கூரையும், ஆசாரியனான மாசெயாவின் குமாரனாகிய செப்பனியாவையும் எரேமியாவினிடத்தில் அனுப்பி:

2நீர் எங்களுக்காகக் கர்த்தரிடத்தில் விசாரியும்; பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எங்களுக்கு விரோதமாய் யுத்தஞ்செய்கிறான்; ஒருவேளை கர்த்தர் தம்முடைய எல்லா அற்புதச் செயலின்படியேயும் எங்களுக்கு அநுக்கிரகஞ்செய்து, அவனை எங்களைவிட்டுப் போகப்பண்ணுவார் என்று சொல்லியனுப்பினபோது,

3எரேமியா அவர்களைப் பார்த்து, நீங்கள் சிதேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது:

4இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, உங்களை அலங்கத்துக்கு வெளியே முற்றிக்கைபோட்ட பாபிலோன் ராஜாவோடும் கல்தேயரோடும், நீங்கள் யுத்தம்பண்ணும்படி உங்கள் கைகளில் பிடித்திருக்கிற யுத்த ஆயுதங்களை நான் திருப்பிவிட்டு, அவர்களை இந்த நகரத்தின் நடுவிலே சேர்த்து,

5நான் நீட்டின கையினாலும் பலத்தபுயத்தினாலும் கோபமும் உக்கிரமும் மகா கடுமையுமாக உங்களோடே யுத்தம்பண்ணி,

6இந்த நகரத்தின் குடிகளையும், மனுஷரையும், மிருகங்களையும் சங்கரிப்பேன்; மகா கொள்ளை நோயால் சாவார்கள்.

7அதற்குப்பின்பு நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவையும், அவன் ஊழியக்காரரையும், ஜனத்தையும், இந்த நகரத்திலே கொள்ளைநோய்க்கும் பட்டயத்துக்கும் பஞ்சத்துக்கும் தப்பி மீதியானவர்களையும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய கையிலும், அவர்கள் சத்துருக்களின் கையிலும், அவர்கள் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்; அவன் அவர்களைப் பட்டயக் கருக்கினால் வெட்டுவான்; அவன் அவர்களைப் தப்பவிடுவதுமில்லை, அவன் மன்னிப்பதுமில்லை, இரங்குவதுமில்லையென்று கர்த்தர் உரைக்கிறார் என்றான்.

8பின்னையும் அவர், இந்த ஜனங்களை நோக்கி: இதோ, நான் உங்கள் முன்னே ஜீவவழியையும் மரணவழியையும் வைக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

9இந்த நகரத்திலே தரிக்கிறவன் பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் சாவான்; உங்களை முற்றிக்கைபோடும் கல்தேயர் வசமாய்ப் புறப்பட்டுப்போய்விடுகிறவனோ பிழைப்பான்; அவன் பிராணன் அவனுக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளைப்போல் இருக்கும்.

10என் முகத்தை இந்த நகரத்துக்கு விரோதமாய் நன்மைக்கு அல்ல, தீமைக்கே வைத்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அது பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படும்; அவன் அக்கினியால் அதைச் சுட்டெரிப்பானென்று சொல் என்றார்.

11யூதா ராஜாவின் குடும்பத்தாரையும் நோக்கி: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

12தாவீதின் குடும்பத்தாரே, உங்கள் செய்கைகளுடைய பொல்லாப்பினிமித்தம் என் உக்கிரம் அக்கினியைப்போல் புறப்பட்டு, அவிக்கிறவன் இல்லாமல் எரியாதபடிக்கு, நீங்கள் ஏற்கனவே நியாயங்கேட்டு, பறிகொடுத்தவனை ஒடுக்குகிறவனுடைய கைக்குத் தப்புவியுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

13இதோ, பள்ளத்தாக்கில் வாசம்பண்ணுகிறவளே, சமனான இடத்தில் கன்மலையாய் இருக்கிறவளே, எங்களுக்கு விரோதமாய் வருகிறவன் யார் என்றும், எங்கள் வாசஸ்தலங்களுக்குள் வருகிறவன் யார் என்றும் சொல்லுகிற உனக்கு நான் எதிராளியாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

14நான் உங்கள் கிரியைகளின் பலனுக்குத்தக்கதாய் உங்களை விசாரிப்பேன்; நான் அதின் காட்டிலே தீக்கொளுத்துவேன்; அது அதைச் சுற்றிலுமுள்ள யாவையும் பட்சிக்கும் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

1எருசலேமிலிருந்து வந்த பரிசேயரும், வேதபாரகரில் சிலரும் அவரிடத்தில் கூடிவந்தார்கள்.

2அப்பொழுது அவருடைய சீஷரில் சிலர் கழுவாத அசுத்த கைகளாலே போஜனம்பண்ணுகிறதை அவர்கள் கண்டு குற்றம்பிடித்தார்கள்.

3ஏனெனில் பரிசேயர் முதலிய யூதர் அனைவரும் முன்னோர்களின் பாரம்பரியத்தைக் கைக்கொண்டு, அடிக்கடி கைகழுவினாலொழியச் சாப்பிடமாட்டார்கள்;

4கடையிலிருந்து வரும்போதும் ஸ்நானம்பண்ணாமல் சாப்பிடமாட்டார்கள். அப்படியே செம்புகளையும், கிண்ணங்களையும், செப்புக்குடங்களையும், மணைகளையும் கழுவுகிறதுமல்லாமல், வேறு அநேக ஆசாரங்களையும் கைக்கொண்டுவருவார்கள்.

5அப்பொழுது, அந்தப் பரிசேயரும் வேதபாரகரும் அவரை நோக்கி: உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை மீறி, ஏன் கை கழுவாமல் சாப்பிடுகிறார்கள் என்று கேட்டார்கள்.

6அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்த ஜனங்கள் தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது என்றும்,

7மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்றும், எழுதியிருக்கிறபிரகாரம், மாயக்காரராகிய உங்களைக்குறித்து, ஏசாயா நன்றாய்த் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான்.

8நீங்கள் தேவனுடைய கட்டளையைத் தள்ளிவிட்டு, மனுஷருடைய பாரம்பரியத்தைக் கைக்கொண்டுவருகிறவர்களாய், கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள்; மற்றும் இப்படிப்பட்ட அநேக சடங்குகளையும் அனுசரித்துவருகிறீர்கள் என்றார்.

9பின்னும் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தைக் கைக்கொள்ளும்படிக்கு தேவனுடைய கட்டளைகளை வியர்த்தமாக்கினது நன்றாயிருக்கிறது.

10எப்படியெனில், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், மோசே சொல்லியிருக்கிறாரே.

11நீங்களோ, ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் கொர்பான் என்னும் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டால் அவனுடைய கடமை தீர்ந்தது என்று சொல்லி,

12அவனை இனி தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது யாதொரு உதவியும் செய்ய ஒட்டாமல்;

13நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவவசனத்தை அவமாக்குகிறீர்கள். இதுபோலவே நீங்கள் மற்றும் அநேக காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார்.

14பின்பு அவர் ஜனங்களெல்லாரையும் வரவழைத்து அவர்களை நோக்கி: நீங்கள் எல்லாரும் எனக்குச் செவிகொடுத்து உணருங்கள்.

15மனுஷனுக்குப் புறம்பே இருந்து அவனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாது; அவன் உள்ளத்திலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும்.

16கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாயிருந்தால் கேட்கக்கடவன் என்றார்.

17அவர் ஜனங்களைவிட்டு வீட்டுக்குள் பிரவேசித்தபோது, அவருடைய சீஷர்கள் அவர் சொன்ன உவமையைக்குறித்து அவரிடத்தில் விசாரித்தார்கள்.

18அதற்கு அவர்: நீங்களும் இவ்வளவு உணர்வில்லாதவர்களா? புறம்பேயிருந்து மனுஷனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டதென்று நீங்கள் அறிந்துகொள்ளவில்லையா?

19அது அவன் இருதயத்தில் போகாமல் வயிற்றிலே போகிறது; அதிலிருந்து எல்லாப் போஜனங்களின் அசுத்தங்களையும் கழிக்கிற ஆசனவழியாய் நீங்கிப்போகும்.

20மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.

21எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாதசிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்,

22களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும்.

23பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.

24பின்பு, அவர் எழுந்து அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளில் போய், ஒரு வீட்டுக்குள் பிரவேசித்து, ஒருவரும் அதை அறியாதிருக்க விரும்பியும், அவர் மறைவாயிருக்கக் கூடாமற்போயிற்று.

25அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு சிறு பெண்ணின் தாயாகிய ஒரு ஸ்திரீ அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு, வந்து அவர் பாதத்தில் விழுந்தாள்.

26அந்த ஸ்திரீ சீரோபேனிக்கியா தேசத்தாளாகிய கிரேக்க ஸ்திரீயாயிருந்தாள்; அவள் தன் மகளைப் பிடித்திருந்த பிசாசைத் துரத்திவிடவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டாள்.

27இயேசு அவளை நோக்கி: முந்திப்பிள்ளைகள் திருப்தியடையட்டும்; பிள்ளகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.

28அதற்கு அவள்: மெய்தான், ஆண்டவரே, ஆகிலும், மேஜையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.

29அப்பொழுது, அவர்: நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம் போகலாம், பிசாசு உன் மகளை விட்டு நீங்கிப்போயிற்று என்றார்.

30அவள் தன் வீட்டுக்கு வந்தபொழுது, பிசாசு போய்விட்டதையும், தன் மகள் கட்டிலில் படுத்திருக்கிறதையும் கண்டாள்.

31மறுபடியும், அவர் தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளை விட்டுப் புறப்பட்டு, தெக்கப்போலியின் எல்லைகளின் வழியாய்க் கலிலேயாக் கடலருகே வந்தார்.

32அங்கே கொன்னைவாயுடைய ஒரு செவிடனை அவரிடத்தில் கொண்டுவந்து, அவர் தமது கையை அவன்மேல் வைக்கும்படி வேண்டிக்கொண்டார்கள்.

33அப்பொழுது, அவர் அவனை ஜனக்கூட்டத்தை விட்டுத் தனியே அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய விரல்களை அவன் காதுகளில் வைத்து, உமிழ்ந்து, அவனுடைய நாவைத் தொட்டு;

34வானத்தை அண்ணாந்துபார்த்து, பெருமூச்சுவிட்டு: எப்பத்தா என்றார்; அதற்குத் திறக்கப்படுவாயாக என்று அர்த்தமாம்.

35உடனே அவனுடைய செவிகள் திறக்கப்பட்டு, அவனுடைய நாவின் கட்டும் அவிழ்ந்து, அவன் செவ்வையாய்ப் பேசினான்.

36அதை ஒருவருக்கும் சொல்லவேண்டாமென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்; ஆகிலும் எவ்வளவு அதிகமாய் அவர்களுக்குக் கட்டளையிட்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்கள் அதைப் பிரசித்தம்பண்ணி,

37எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்; செவிடர் கேட்கவும், ஊமையர் பேசவும்பண்ணுகிறார் என்று சொல்லி, மேன்மேலும் ஆச்சரியப்பட்டார்கள்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com