‹ முகப்புமுழுத் திட்டம்

ஜூலை 27 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்ஜூலை 27அடுத்த நாள் ›
குடும்பம்

நியாயாதிபதிகள் 10:1-11:11

முழு அதிகாரம் ›
நியாயாதிபதிகள் 10

1அபிமெலேக்குக்குப்பின்பு, தோதோவின் மகனாகிய பூவாவின் குமாரன் தோலா என்னும் இசக்கார் கோத்திரத்தான் இஸ்ரவேலை இரட்சிக்க எழும்பினான்; அவன் எப்பிராயீம் மலைத்தேசத்து ஊராகிய சாமீரிலே குடியிருந்தான்.

2அவன் இஸ்ரவேலை இருபத்துமூன்று வருஷம் நியாயம் விசாரித்து, பின்பு மரித்து, சாமீரிலே அடக்கம்பண்ணப்பட்டான்.

3அவனுக்குப்பின்பு, கீலேயாத்தியனான யாவீர் எழும்பி, இஸ்ரவேலை இருபத்திரண்டு வருஷம் நியாயம் விசாரித்தான்.

4முப்பது கழுதைக்குட்டிகளின்மேல் ஏறும் முப்பது குமாரர் அவனுக்கு இருந்தார்கள்; அவர்களுக்கு முப்பது ஊர்களும் இருந்தது; கீலேயாத் தேசத்திலிருக்கிற அவைகளுக்கு இந்நாள்வரைக்கும் யாவீரின் கிராமங்களென்கிற பேர் இருக்கிறது.

5யாவீர் மரித்து, காமோனிலே அடக்கம்பண்ணப்பட்டான்.

6இஸ்ரவேல் புத்திரர், மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்புச் செய்து, கர்த்தரைச் சேவியாமல் அவரை விட்டுப்போய், பாகால்களையும், அஸ்தரோத்தையும், சீரியாவின் தேவர்களையும், சீதோனின் தேவர்களையும், மோவாபின் தேவர்களையும், அம்மோன் புத்திரரின் தேவர்களையும், பெலிஸ்தரின் தேவர்களையும் சேவித்தார்கள்.

7அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின்மேல் கோபமூண்டு, அவர்களைப் பெலிஸ்தர் கையிலும், அம்மோன் புத்திரர் கையிலும் விற்றுப்போட்டார்.

8அவர்கள் அந்த வருஷம் முதற்கொண்டு பதினெட்டு வருஷமாய் யோர்தானுக்கு அப்பாலே கீலேயாத்திலுள்ள எமோரியரின் தேசத்தில் இருக்கிற இஸ்ரவேல் புத்திரரையெல்லாம் நெருக்கி ஒடுக்கினார்கள்.

9அம்மோன் புத்திரர் யூதாவின்மேலும், பென்யமீன்மேலும், எப்பிராயீம் குடும்பத்தார்மேலும் யுத்தம்பண்ண யோர்தானைக் கடந்துவந்தார்கள்; இஸ்ரவேலர் மிகவும் நெருக்கப்பட்டார்கள்.

10அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டு: உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; நாங்கள் எங்கள் தேவனைவிட்டு, பாகால்களைச் சேவித்தோம் என்றார்கள்.

11கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: எகிப்தியரும், எமோரியரும், அம்மோன் புத்திரரும், பெலிஸ்தியரும்,

12சீதோனியரும், அமலேக்கியரும், மாகோனியரும், உங்களை ஒடுக்கும் சமயங்களில், நீங்கள் என்னை நோக்கி முறையிட்டபோது, நான் உங்களை அவர்கள் கைக்கு நீங்கலாக்கி இரட்சிக்கவில்லையா?

13அப்படியிருந்தும் நீங்கள் என்னைவிட்டு, அந்நிய தேவர்களைச் சேவித்தீர்கள்; ஆகையால் இனி உங்களை இரட்சியேன்.

14நீங்கள் போய், உங்களுக்காகத் தெரிந்துகொண்ட தேவர்களை நோக்கி முறையிடுங்கள்; அவைகள் உங்கள் ஆபத்தின் காலத்தில் உங்களை இரட்சிக்கட்டும் என்றார்.

15இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி: பாவஞ்செய்தோம், தேவரீர் உம்முடைய பார்வைக்கு நலமானதை எங்களுக்குச் செய்யும்; இன்றைக்குமாத்திரம் எங்களை இரட்சித்தருளும் என்று சொல்லி,

16அந்நிய தேவர்களைத் தங்கள் நடுவிலிருந்து விலக்கிவிட்டு, கர்த்தருக்கு ஆராதனை செய்தார்கள்; அப்பொழுது அவர் இஸ்ரவேலின் வருத்தத்தைப் பார்த்து மனதுருகினார்.

17அம்மோன் புத்திரர் கூட்டங்கூடி, கீலேயாத்திலே பாளயமிறங்கினார்கள்; இஸ்ரவேல் புத்திரரும் கூடிக்கொண்டு, மிஸ்பாவிலே பாளயமிறங்கினார்கள்.

18அப்பொழுது கீலேயாத்தின் ஜனங்களும் பிரபுக்களும் ஒருவரையொருவர் நோக்கி: அம்மோன் புத்திரர்மேல் முந்தி யுத்தம்பண்ணப்போகிற மனுஷன் யார்? அவனே கீலேயாத்தின் குடிகளுக்கெல்லாம் தலைவனாயிருப்பான் என்றார்கள்.

நியாயாதிபதிகள் 11

1கீலேயாத்தியனான யெப்தா பலத்த பராக்கிரமசாலியாயிருந்தான்; அவன் பரஸ்திரீயின் குமாரன்; கிலெயாத் அவனைப் பெற்றான்.

2கிலெயாத்தின் மனைவியும் அவனுக்குக் குமாரர்களைப் பெற்றாள்; அவன் மனைவி பெற்ற குமாரர் பெரியவர்களானபின்பு, அவர்கள் யெப்தாவை நோக்கி: உனக்கு எங்கள் தகப்பன் வீட்டிலே சுதந்தரம் இல்லை; நீ அந்நிய ஸ்திரீயின் மகன் என்று சொல்லி அவனைத் துரத்தினார்கள்.

3அப்பொழுது யெப்தா: தன் சகோதரரை விட்டு ஓடிப்போய், தோப் தேசத்திலே குடியிருந்தான்; வீணரான மனுஷர் யெப்தாவோடே கூடிக்கொண்டு, அவனோடேகூட யுத்தத்திற்குப் போவார்கள்.

4சிலநாளைக்குப்பின்பு, அம்மோன் புத்திரர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்பண்ணினார்கள்.

5அவர்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம்பண்ணும்போது கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவைத் தோப் தேசத்திலிருந்து அழைத்துவரப்போய்,

6யெப்தாவை நோக்கி: நீ வந்து, நாங்கள் அம்மோன் புத்திரரோடு யுத்தம்பண்ண எங்கள் சேனாபதியாயிருக்க வேண்டும் என்றார்கள்.

7அதற்கு யெப்தா கீலேயாத்தின் மூப்பரைப் பார்த்து: நீங்கள் அல்லவா என்னைப் பகைத்து, என் தகப்பன் வீட்டிலிருந்து என்னைத் துரத்தினவர்கள்? இப்பொழுது உங்களுக்கு ஆபத்து நேரிட்டிருக்கிற சமயத்தில் நீங்கள் என்னிடத்தில் ஏன் வருகிறீர்கள் என்றான்.

8அதற்குக் கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவை நோக்கி: நீ எங்களுடனேகூட வந்து, அம்மோன் புத்திரரோடு யுத்தம்பண்ணி, கீலேயாத்தின் குடிகளாகிய எங்கள் அனைவர்மேலும் தலைவனாயிருக்க வேண்டும்; இதற்காக இப்பொழுது உன்னிடத்தில் வந்தோம் என்றார்கள்.

9அதற்கு யெப்தா: அம்மோன் புத்திரரோடே யுத்தம்பண்ண, நீங்கள் என்னைத் திரும்ப அழைத்துப்போனபின்பு, கர்த்தர் அவர்களை என் முன்னிலையாய் ஒப்புக்கொடுத்தால், என்னை உங்களுக்குத் தலைவனாய் வைப்பீர்களா என்று கீலேயாத்தின் மூப்பரைக் கேட்டான்.

10கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவைப் பார்த்து: நாங்கள் உன் வார்த்தையின்படியே செய்யாவிட்டால், கர்த்தர் நமக்கு நடுநின்று கேட்பாராக என்றார்கள்.

11அப்பொழுது யெப்தா கீலேயாத்தின் மூப்பரோடே கூடப்போனான்; ஜனங்கள் அவனைத் தங்கள்மேல் தலைவனும் சேனாபதியுமாக வைத்தார்கள். யெப்தா தன் காரியங்களையெல்லாம் மிஸ்பாவிலே கர்த்தருடைய சந்நிதியிலே சொன்னான்.

அப்போஸ்தலர் 14

முழு அதிகாரம் ›

1இக்கோனியா பட்டணத்திலே அவர்கள் இருவரும் யூதருடைய ஜெப ஆலயத்தில் பிரவேசித்து, யூதரிலும் கிரேக்கரிலும் திரளான ஜனங்கள் விசுவாசிக்கத்தக்கதாகப் பிரசங்கித்தார்கள்.

2விசுவாசியாத யூதர்கள் சகோதரருக்கு விரோதமாகப் புறஜாதியாருடைய மனதை எழுப்பிவிட்டு, பகையுண்டாக்கினார்கள்.

3அவர்கள் அங்கே அநேகநாள் சஞ்சரித்துக் கர்த்தரை முன்னிட்டுத் தைரியமுள்ளவர்களாய்ப் போதகம் பண்ணினார்கள்; அவர் தமது கிருபையுள்ள வசனத்திற்குச் சாட்சியாக அடையாளங்களும் அற்புதங்களும் அவர்கள் கைகளால் செய்யப்படும்படி அநுக்கிரகம்பண்ணினார்.

4பட்டணத்து ஜனங்கள் பிரிந்து, சிலர் யூதரையும் சிலர் அப்போஸ்தலரையும் சேர்ந்துகொண்டார்கள்.

5இவர்களை அவமானப்படுத்தவும் கல்லெறியவும் வேண்டுமென்று, புறஜாதியாரும் யூதரும் அவர்கள் அதிகாரிகளும் அமளிபண்ணுகையில்,

6இவர்கள் அதை அறிந்து, லிக்கவோனியா நாட்டிலுள்ள பட்டணங்களாகிய லீஸ்திராவுக்கும் தெர்பைக்கும் அவைகளின் சுற்றுப்புறங்களுக்கும் ஓடிப்போய்;

7அங்கே சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணினார்கள்.

8லீஸ்திராவிலே ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் சப்பாணியாயிருந்து, ஒருபோதும் நடவாமல், கால்கள் வழங்காதவனாய் உட்கார்ந்து,

9பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப்பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு:

10நீ எழுந்து காலூன்றி நிமிர்ந்து நில் என்று உரத்த சத்தத்தோடே சொன்னான். உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான்.

11பவுல் செய்ததை ஜனங்கள் கண்டு, தேவர்கள் மனுஷரூபமெடுத்து நம்மிடத்தில் இறங்கிவந்திருக்கிறார்கள் என்று லிக்கவோனியா பாஷையிலே சத்தமிட்டுச் சொல்லி,

12பர்னபாவை யூப்பித்தர் என்றும், பவுல் பிரசங்கத்தை நடத்தினவனானபடியினால் அவனை மெர்க்கூரி என்றும் சொன்னார்கள்.

13அல்லாமலும் பட்டணத்துக்கு முன்னே இருந்த யூப்பித்தருடைய கோவில் பூஜாசாரி எருதுகளையும் பூமாலைகளையும் வாசலண்டையிலே கொண்டுவந்து, ஜனங்களோடேகூட அவர்களுக்குப் பலியிட மனதாயிருந்தான்.

14அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் அதைக் கேட்டபொழுது, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்துக்குள்ளே ஓடி, உரத்த சத்தமாய்:

15மனுஷரே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனுஷர்தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்பவேண்டுமென்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம்.

16சென்ற காலங்களில் அவர் சகல ஜனங்களையும் தங்கள்தங்கள் வழிகளிலே நடக்கவிட்டிருந்தும்,

17அவர் நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாய் அவர் தம்மைக்குறித்துச் சாட்சி விளங்கப்பண்ணாதிருந்ததில்லை என்றார்கள்.

18இப்படி அவர்கள் சொல்லியும் தங்களுக்கு ஜனங்கள் பலியிடாதபடிக்கு அவர்களை அமர்த்துகிறது அரிதாயிருந்தது.

19பின்பு அந்தியோகியாவிலும் இக்கோனியாவிலுமிருந்து சில யூதர்கள் வந்து, ஜனங்களுக்குப் போதனைசெய்து, பவுலைக் கல்லெறிந்து, அவன் மரித்துப்போனானென்று எண்ணி, அவனைப் பட்டணத்துக்கு வெளியிலே இழுத்துக்கொண்டுபோனார்கள்.

20சீஷர்கள் அவனைச் சூழ்ந்துநிற்கையில், அவன் எழுந்து, பட்டணத்திற்குள் பிரவேசித்தான். மறுநாளில் பர்னபாவுடனேகூடத் தெர்பைக்குப் புறப்பட்டுப்போனான்.

21அந்தப் பட்டணத்தில் அவர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, அநேகரைச் சீஷராக்கினபின்பு, லீஸ்திராவுக்கும் இக்கோனியாவுக்கும் அந்தியோகியாவுக்கும் திரும்பிவந்து,

22சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.

23அல்லாமலும் அந்தந்தச் சபைகளில் அவர்களுக்கு மூப்பர்களை ஏற்படுத்திவைத்து, உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள் விசுவாசித்துப் பற்றிக்கொண்ட கர்த்தருக்கு அவர்களை ஒப்புவித்தார்கள்.

24பின்பு பிசீதியா நாட்டைக் கடந்து, பம்பிலியா நாட்டிற்கு வந்து,

25பெர்கே ஊரில் வசனத்தைப் பிரசங்கித்து, அத்தலியா பட்டணத்திற்குப் போனார்கள்.

26அங்கே கப்பல் ஏறி, தாங்கள் நிறைவேற்றின கிரியைக்காக தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டுப் புறப்பட்டு அந்தியோகியாவுக்கு வந்தார்கள்.

27அவர்கள் அங்கே சேர்ந்தபொழுது சபையைக் கூடிவரச்செய்து, தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையும், அவர் புறஜாதிகளுக்கு விசுவாசத்தின் கதவைத் திறந்ததையும் அறிவித்து,

28அங்கே சீஷருடனேகூட அநேகநாள் சஞ்சரித்திருந்தார்கள்.

தனிவாசிப்பு

1என் மேய்ச்சலின் ஆடுகளைக் கெடுத்துச் சிதறடிக்கிற மேய்ப்பர்களுக்கு ஐயோ! என்று கர்த்தர் சொல்லுகிறார்.

2இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தை மேய்க்கிற மேய்ப்பர்களுக்கு விரோதமாகச் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் என் ஆடுகளைப் பராமரியாமல், அவைகளைச் சிதறடித்து அவைகளைச் துரத்திவிட்டீர்கள்; இதோ, நான் உங்கள்பேரில் உங்கள் செய்கைகளின் பொல்லாப்புக்கேற்ற தண்டனையை உங்கள்மேல் வருவிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

3நான் என் ஆடுகளில் மீதியாயிருப்பவைகளைத் துரத்தியிருந்த எல்லா தேசங்களிலுமிருந்து சேர்த்து, அவைகளைத் திரும்ப அவைகளின் தொழுவங்களுக்குக் கொண்டுவருவேன்; அப்பொழுது அவைகள் பலுகிப்பெருகும்.

4அவைகளை மேய்க்கத்தக்கவர்களையும் அவைகள்மேல் ஏற்படுத்துவேன்; இனி அவைகள் பயப்படுவதுமில்லை, கலங்குவதுமில்லை, காணாமற்போவதுமில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.

5இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ராஜரிகம்பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்.

6அவர் நாட்களில் யூதா இரட்சிக்கப்படும், இஸ்ரவேல் சுகமாய் வாசம்பண்ணும்; அவருக்கு இடும் நாமம் நமது நீதியாயிருக்கிற கர்த்தர் என்பதே.

7ஆதலால், இதோ, நாட்கள் வரும், அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்பண்ணாமல்,

8இஸ்ரவேல் வீட்டின் சந்ததியாரைத் தங்கள் சுயதேசத்தில் குடியிருக்கும்படிக்கு வடதேசத்திலும், நான் அவர்களைத் துரத்தியிருந்த எல்லா தேசங்களிலுமிருந்து அழைத்து வழிநடத்திக்கொண்டுவந்த கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்பண்ணுவார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.

9தீர்க்கதரிசிகளினிமித்தம் என் இருதயம் என் உள்ளத்திலே நொறுங்கியிருக்கிறது; என் எலும்புகளெல்லாம் அதிருகிறது; கர்த்தர்நிமித்தமும், அவருடைய பரிசுத்த வார்த்தைகளினிமித்தமும் நான் வெறித்திருக்கிற மனுஷனைப்போலவும் மதுபானம் மேற்கொண்டவனைப்போலவும் இருக்கிறேன்.

10தேசம் விபசாரக்காரரால் நிறைந்திருக்கிறது, தேசம் சாபத்தினால் துக்கிக்கிறது, வனாந்தரத்தின் மேய்ச்சல்கள் வாடிப்போகிறது; அவர்கள் ஓட்டம் பொல்லாதது; அவர்கள் பெலன் அநியாயமாயிருக்கிறது.

11தீர்க்கதரிசியும் ஆசாரியனும் மாயக்காரராயிருக்கிறார்கள்; என் ஆலயத்திலும் அவர்களுடைய பொல்லாப்பைக் கண்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

12ஆதலால், அவர்கள் வழி அவர்களுக்கு இருட்டிலே சறுக்கலான வழியாயிருக்கும், துரத்துண்டு அதிலே விழுவார்கள்; அவர்கள் விசாரிக்கப்படும் வருஷத்திலே அவர்கள்மேல் பொல்லாப்பை வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

13சமாரியாவின் தீர்க்கதரிசிகளிலோ மதிகேட்டைக் கண்டேன்; பாகாலைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, இஸ்ரவேல் என்னும் என் ஜனத்தை மோசம்போக்கினார்கள்.

14எருசலேமின் தீர்க்கதரிசிகளிலும் திடுக்கிடத்தக்க காரியத்தைக் காண்கிறேன்; விபசாரம்பண்ணி, வஞ்சகமாய் நடந்து, ஒருவனும் தன் பொல்லாப்பைவிட்டுத் திரும்பாதபடிக்குப் பொல்லாதவர்களின் கைகளைத் திடப்படுத்துகிறார்கள்; அவர்கள் எல்லாரும் எனக்குச் சோதோமைப்போலும், அதின் குடிகள் கொமோராவைப்போலும் இருக்கிறார்கள்.

15ஆதலால் சேனைகளின் கர்த்தர் தீர்க்கதரிசிகளைக்குறித்து: இதோ, நான் அவர்களுக்குப் புசிக்க எட்டியையும், குடிக்கப் பிச்சுக்கலந்த தண்ணீரையும் கொடுப்பேன்; எருசலேமின் தீர்க்கதரிசிகளிலிருந்து மாயமானது தேசமெங்கும் பரம்பிற்றே என்று சொல்லுகிறார்.

16உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களை வீண்பெருமை கொள்ளும்படி செய்கிறார்கள்; கர்த்தருடைய வாக்கை அல்ல, தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்லுகிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

17அவர்கள் என்னை அசட்டைபண்ணுகிறவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானம் இருக்குமென்று கர்த்தர் சொன்னாரென்று சொல்லுகிறதுமல்லாமல்; தங்கள் இருதயத்தின் கடினத்திலே நடக்கிற யாவரையும் நோக்கி: உங்கள்மேல் பொல்லாப்பு வராதென்றும் சொல்லுகிறார்கள்.

18கர்த்தருடைய ஆலோசனையில் கூடநின்று, அவருடைய வார்த்தையைக் கேட்டறிந்தவன் யார்? அவருடைய வார்த்தையைக் கவனித்துக் கேட்டவன் யார்?

19இதோ, கர்த்தருடைய பெருங்காற்றாகிய கொடிய புசல் புறப்பட்டது; அது துன்மார்க்கருடைய தலையின்மேல் உக்கிரமாய் மோதும்.

20கர்த்தர் தம்முடைய இருதயத்தின் நினைவுகளை நடப்பித்து நிறைவேற்றுமளவும், அவருடைய கோபம் தணியாது; கடைசி நாட்களில் அதை நன்றாய் உணருவீர்கள்.

21அந்தத் தீர்க்கதரிசிகளை நான் அனுப்பாதிருந்தும் அவர்கள் ஓடினார்கள்; அவர்களோடே நான் பேசாதிருந்தும் அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.

22அவர்கள் என் ஆலோசனையிலே நிலைத்திருந்தார்களேயாகில், அப்பொழுது அவர்கள் என் வார்த்தைகளை ஜனங்களுக்குத் தெரிவித்து, அவர்களைத் தங்கள் பொல்லாத வழிகளையும் தங்கள் செய்கைகளின் பொல்லாப்பையும் விட்டுத் திருப்புவார்கள்.

23நான் சமீபத்திற்கு மாத்திரமா தேவன், தூரத்திற்கும் தேவன் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.

24யாவனாகிலும் தன்னை நான் காணாதபடிக்கு மறைவிடங்களில் ஒளித்துக்கொள்ளக்கூடுமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் வானத்தையும் பூமியையும் நிரப்புகிறவர் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.

25சொப்பனங்கண்டேன், சொப்பனங்கண்டேன் என்று, என் நாமத்தைச் சொல்லிப் பொய்த்தீர்க்கதரிசனம் உரைக்கிற தீர்க்கதரிசிகள் சொல்லுகிறதைக் கேட்டேன்.

26எதுவரைக்கும் இப்படியிருக்கும்? பொய்த்தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் இருதயத்தில் ஏதாகிலுமுண்டோ? இவர்கள் தங்கள் இருதயத்தின் வஞ்சகத்தையே தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறவர்கள்.

27என் ஜனத்தின் பிதாக்கள் பாகாலினிமித்தம் என் நாமத்தை மறந்ததுபோல, இவர்கள் தங்கள் அயலாருக்கு விவரிக்கிற தங்கள் சொப்பனங்களினாலே என் நாமத்தை அவர்கள் மறக்கும்படி செய்யப்பார்க்கிறார்கள்.

28சொப்பனங்கண்ட தீர்க்கதரிசி சொப்பனத்தை விவரிப்பானாக; என் வார்த்தையுள்ளவனோ, என் வார்த்தையை உண்மையாய்ச் சொல்வானாக; கோதுமைக்குமுன் பதர் எம்மாத்திரம்? என்று கர்த்தர் சொல்லுகிறார்.

29என் வார்த்தை அக்கினியைப்போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப்போலும் இருக்கிறதல்லவோ? என்று கர்த்தர் சொல்லுகிறார்.

30ஆகையால், இதோ, ஒவ்வொருவராய்த் தன்தன் அயலாரிடத்தில் என்வார்த்தையைத் திருட்டுத்தனமாய் எடுக்கிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார்.

31இதோ, தங்கள் நாவின் சொல்லையே வழங்கி: அவர் அதை உரைத்தார் என்று சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார்.

32இதோ, பொய்ச்சொப்பனங்களைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லி, அவைகளை விவரித்து, என் ஜனத்தைத் தங்கள் பொய்களினாலும், தங்கள் வீம்புகளினாலும், மோசம்போக்குகிறவர்களுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை அனுப்பினதுமில்லை, அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை; அவர்கள் இந்த ஜனத்துக்கு ஒரு பிரயோஜனமாய் இருப்பதுமில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.

33கர்த்தராலே சுமரும் பாரம் என்னவென்று இந்த ஜனமாகிலும் ஒரு தீர்க்கதரிசியாகிலும் ஒரு ஆசாரியனாகிலும் உன்னைக் கேட்டால், உங்களைத் தள்ளிவிடுவேன் என்பதே பாரம் என்று நீ அவர்களுடனே சொல்லவேண்டும்.

34கர்த்தரால் சுமரும் பாரம் என்று சொல்லுகிற தீர்க்கதரிசியாகிலும் ஆசாரியனாகிலும் ஜனமாகிலும் சரி, அப்படிச் சொல்லுகிற மனுஷனையும் அவன் வீட்டாரையும் தண்டிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

35கர்த்தர் என்ன மறுஉத்தரவு கொடுத்தார்? கர்த்தர் என்ன சொன்னார்? என்று நீங்கள் அவரவர் தங்கள் அயலானையும் அவரவர் தங்கள் சகோதரனையும் கேட்பீர்களாக.

36ஆனால் கர்த்தரால் சுமரும் பாரம் என்கிற சொல்லை இனி வழங்காதிருப்பீர்களாக, அவனவன் வார்த்தையே அவனவனுக்குப் பாரமாயிருக்கும்; அதேனென்றால், நமது தேவனாகிய சேனைகளின் கர்த்தர் என்கிற ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தைகளைப் புரட்டுகிறீர்கள்.

37கர்த்தர் உனக்கு என்ன மறுஉத்தரவு கொடுத்தார்? கர்த்தர் என்ன சொன்னார்? என்று நீ தீர்க்கதரிசியைக் கேட்பாயாக.

38நீங்களோவெனில், கர்த்தரால் சுமரும் பாரம் என்று சொல்லுகிறபடியினாலே: கர்த்தரின் பாரம் என்று சொல்லாதிருங்களென்று நான் உங்களுக்குச் சொல்லி அனுப்பியும், நீங்கள் இந்த வார்த்தையைக் கர்த்தரின் பாரம் என்று சொல்லுகிறீர்களே.

39ஆதலால், இதோ, நான் உங்களை மறக்கவே மறந்து, உங்களையும், நான் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் கொடுத்த நகரத்தையும், எனக்கு முன்பாக இராதபடிக்குக் கைவிட்டு,

40மறக்கப்படாத நித்திய நிந்தையையும், நித்திய இலச்சையையும் உங்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

1அன்றியும், அவர் அவர்களை நோக்கி: இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யம் பலத்தோடே வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

2ஆறுநாளைக்குப்பின்பு, இயேசு பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் அழைத்து, உயர்ந்த மலையின்மேல் அவர்களைத் தனியே கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்.

3அவருடைய வஸ்திரம் உறைந்தமழையைப்போல் பூமியிலே எந்த வண்ணானும் வெளுக்கக்கூடாத வெண்மையாய்ப் பிரகாசித்தது.

4அப்பொழுது மோசேயும் எலியாவும் இயேசுவுடனே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள்.

5அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி: ரபீ, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான்.

6அவர்கள் மிகவும் பயந்திருந்தபடியால், தான் பேசுகிறது இன்னதென்று அறியாமல் இப்படிச் சொன்னான்.

7அப்பொழுது, ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.

8உடனே அவர்கள் சுற்றிலும் பார்த்தபோது, இயேசு ஒருவரைத்தவிர வேறொருவரையும் காணவில்லை.

9அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, அவர் அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும்வரைக்கும், நீங்கள் கண்டவைகளை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார்.

10மரித்தோரிலிருந்து எழுந்திருப்பது என்னவென்று அவர்கள் ஒருவரிடத்தில் ஒருவர் விசாரித்து, அந்த வார்த்தையைத் தங்களுக்குள்ளே அடக்கிக்கொண்டு:

11எலியா முந்தி வரவேண்டுமென்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படியென்று அவரிடத்தில் கேட்டார்கள்.

12அவர் பிரதியுத்தரமாக: எலியாமுந்திவந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான்; அல்லாமலும், மனுஷகுமாரன் பல பாடுகள்பட்டு, அவமதிக்கப்படுவாரென்று, அவரைக்குறித்து எழுதியிருக்கிறதே அது எப்படி என்றார்.

13ஆனாலும் எலியா வந்தாயிற்று, அவனைக்குறித்து எழுதியிருக்கிற பிரகாரம் தங்களுக்கு இஷ்டமானபடி அவனுக்குச் செய்தார்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

14பின்பு அவர் சீஷரிடத்தில் வந்தபோது, அவர்களைச் சுற்றித் திரளான ஜனங்கள் நிற்கிறதையும், அவர்களோடே வேதபாரகர் தர்க்கிக்கிறதையும் கண்டார்.

15ஜனங்களெல்லாரும் அவரைக் கண்டவுடனே மிகவும் ஆச்சரியப்பட்டு, ஓடிவந்து, அவருக்கு வந்தனஞ்செய்தார்கள்.

16அவர் வேதபாரகரை நோக்கி: நீங்கள் இவர்களோடே என்னத்தைக் குறித்துத் தர்க்கம்பண்ணுகிறீர்கள் என்று கேட்டார்.

17அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஊமையான ஒரு ஆவி பிடித்த என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன்.

18அது அவனை எங்கே பிடித்தாலும் அங்கே அவனை அலைக்கழிக்கிறது; அப்பொழுது அவன் நுரைதள்ளி, பல்லைக்கடித்து, சோர்ந்துபோகிறான். அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரிடத்தில் கேட்டேன்; அவர்களால் கூடாமற்போயிற்று என்றான்.

19அவர் பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.

20அவனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவரைக் கண்டவுடனே, அந்த ஆவி அவனை அலைக்கழித்தது; அவன் தரையிலே விழுந்து, நுரைதள்ளிப் புரண்டான்.

21அவர் அவனுடைய தகப்பனை நோக்கி: இது இவனுக்கு உண்டாகி எவ்வளவு காலமாயிற்று என்று கேட்டார். அதற்கு அவன்: சிறுவயது முதற்கொண்டே உண்டாயிருக்கிறது;

22இவனைக் கொல்லும்படிக்கு அது அநேகந்தரம் தீயிலும் தண்ணீரிலும் தள்ளிற்று. நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால், எங்கள்மேல் மனதிரங்கி, எங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்றான்.

23இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்.

24உடனே பிள்ளையின் தகப்பன்: விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான்.

25அப்பொழுது ஜனங்கள் கூட்டமாய் ஓடிவருகிறதை இயேசு கண்டு, அந்த அசுத்த ஆவியை நோக்கி: ஊமையும் செவிடுமான ஆவியே, இவனை விட்டுப் புறப்பட்டுப்போ, இனி இவனுக்குள் போகாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அதை அதட்டினார்.

26அப்பொழுது அது சத்தமிட்டு, அவனை மிகவும் அலைக்கழித்துப் புறப்பட்டுப்போயிற்று. அவன் செத்துப்போனான் என்று அநேகர் சொல்லத்தக்கதாகச் செத்தவன்போல் கிடந்தான்.

27இயேசு அவன் கையைப்பிடித்து, அவனைத் தூக்கினார்; உடனே அவன் எழுந்திருந்தான்.

28வீட்டில் அவர் பிரவேசித்தபொழுது, அவருடைய சீஷர்கள்: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று அவரிடத்தில் தனித்துக் கேட்டார்கள்.

29அதற்கு அவர்: இவ்வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.

30பின்பு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கலிலேயாவைக் கடந்துபோனார்கள்; அதை ஒருவரும் அறியாதிருக்கவேண்டுமென்று விரும்பினார்.

31ஏனெனில் மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றும், அவர்கள் அவரைக் கொன்றுபோடுவார்கள் என்றும்; கொல்லப்பட்டு, மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றும் அவர் தம்முடைய சீஷர்களுக்குப் போதகம்பண்ணிச் சொல்லியிருந்தார்.

32அவர்களோ அந்த வார்த்தையை அறிந்துகொள்ளவில்லை, அதைக்குறித்து அவரிடத்தில் கேட்கவும் பயந்தார்கள்.

33அவர் கப்பர்நகூமுக்கு வந்து, வீட்டிலே இருக்கும்போது, அவர்களை நோக்கி: நீங்கள் வழியிலே எதைக்குறித்து உங்களுக்குள்ளே தர்க்கம்பண்ணினீர்கள் என்று கேட்டார்.

34அதற்கு அவர்கள் பேசாமல் இருந்தார்கள்; ஏனெனில் அவர்கள் தங்களுக்குள்ளே எவன் பெரியவன் என்று வழியில் தர்க்கம்பண்ணினார்கள்.

35அப்பொழுது அவர் உட்கார்ந்து, பன்னிருவரையும் அழைத்து: எவனாகிலும் முதல்வனாயிருக்க விரும்பினால் அவன் எல்லாருக்கும் கடையானவனும், எல்லாருக்கும் ஊழியக்காரனுமாயிருக்கக்கடவன் என்று சொல்லி;

36ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதை அவர்கள் நடுவிலே நிறுத்தி, அதை அணைத்துக்கொண்டு:

37இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அல்ல, என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்றார்.

38அப்பொழுது யோவான் அவரை நோக்கி: போதகரே, நம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதைக் கண்டோம்; அவன் நம்மைப் பின்பற்றாதவனானதால், அவனைத் தடுத்தோம் என்றான்.

39அதற்கு இயேசு: அவனைத் தடுக்கவேண்டாம்; என் நாமத்தினாலே அற்புதஞ்செய்கிறவன் எளிதாய் என்னைக்குறித்துத் தீங்கு சொல்லமாட்டான்.

40நமக்கு விரோதமாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான்.

41நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களாயிருக்கிறபடியினாலே, என் நாமத்தினிமித்தம் உங்களுக்கு ஒரு கலசம் தண்ணீர்க் குடிக்கக் கொடுக்கிறவன் தன் பலனை அடையாமற்போவதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

42என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாயிருக்கும்.

43உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு கையுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே போவதைப்பார்க்கிலும், ஊனனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.

44அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும்.

45உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால் அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு காலுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.

46அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும்.

47உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்ணுடையவனாய் நரக அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக் கண்ணனாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.

48அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும்.

49எந்தப் பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல, எந்த மனுஷனும் அக்கினியினால் உப்பிடப்படுவான்.

50உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால், அதற்கு எதினாலே சாரமுண்டாக்குவீர்கள்? உங்களுக்குள்ளே உப்புடையவர்களாயிருங்கள், ஒருவரோடொருவர் சமாதானமுள்ளவர்களாயும் இருங்கள் என்றார்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com