‹ முகப்புமுழுத் திட்டம்

ஜூலை 26 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்ஜூலை 26அடுத்த நாள் ›
குடும்பம்

நியாயாதிபதிகள் 9

முழு அதிகாரம் ›

1யெருபாகாலின் குமாரன் அபிமெலேக்கு சீகேமிலிருக்கிற தன் தாயின் சகோதரரிடத்திற்குப் போய், அவர்களையும் தன் தாயின் தகப்பனுடைய வம்சமான அனைவரையும் நோக்கி:

2யெருபாகாலின் குமாரர் எழுபதுபேராகிய எல்லாரும் உங்களை ஆளுவது உங்களுக்கு நல்லதோ, ஒருவன் மாத்திரம் உங்களை ஆளுவது உங்களுக்கு நல்லதோ என்று நீங்கள் சீகேமிலிருக்கிற சகல பெரிய மனுஷரின் காதுகளும் கேட்கப்பேசுங்கள்; நான் உங்கள் எலும்பும் உங்கள் மாம்சமுமானவன் என்று நினைத்துக் கொள்ளுங்கள் என்றான்.

3அப்படியே அவன் தாயின் சகோதரர் சீகேமிலிருக்கிற சகல பெரிய மனுஷரின் காதுகளும் கேட்க இந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்காகப் பேசினார்கள்; அப்பொழுது: அவன் நம்முடைய சகோதரன் என்று அவர்கள் சொன்னதினால், அவர்கள் இருதயம் அபிமெலேக்கைப் பின்பற்றச் சாய்ந்தது.

4அவர்கள் பாகால் பேரீத்தின் கோவிலிலிருந்து எழுபது வெள்ளிக்காசை எடுத்து அவனுக்குக் கொடுத்தார்கள்; அவைகளால் அபிமெலேக்கு வீணரும் போக்கிரிகளுமான மனுஷரைச் சேவகத்தில் வைத்தான்; அவர்கள் அவனைப் பின்பற்றினார்கள்.

5அவன் ஒப்ராவிலிருக்கிற தன் தகப்பன் வீட்டிற்குப் போய், யெருபாகாலின் குமாரராகிய தன் சகோதரர் எழுபதுபேரையும் ஒரே கல்லின்மேல் கொலைசெய்தான்; ஆனாலும் யெருபாகாலின் இளைய குமாரனாகிய யோதாம் ஒளித்திருந்தபடியினால் அவன் தப்பினான்.

6பின்பு சீகேமிலிருக்கிற சகல பெரிய மனுஷரும், மில்லோவின் குடும்பத்தாரனைவரும் கூடிக்கொண்டு போய், சீகேமிலிருக்கிற உயர்ந்த கர்வாலிமரத்தண்டையிலே அபிமெலேக்கை ராஜாவாக்கினார்கள்.

7இது யோதாமுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் போய், கெரிசீம் மலையின் உச்சியில் ஏறி நின்று, உரத்த சத்தமிட்டுக்கூப்பிட்டு, அவர்களை நோக்கி: சீகேமின் பெரிய மனுஷரே, தேவன் உங்களுக்குச் செவிகொடுக்கும்படி நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள்.

8விருட்சங்கள் தங்களுக்கு ஒரு ராஜாவை அபிஷேகம்பண்ணும்படி போய், ஒலிவமரத்தைப் பார்த்து: நீ எங்களுக்கு ராஜாவாயிரு என்றது.

9அதற்கு ஒலிவமரம்: தேவர்களும் மனுஷரும் புகழுகிற என்னிலுள்ள என்கொழுமையை நான் விட்டு, மரங்களை அரசாளப்போவேனோ என்றது.

10அப்பொழுது மரங்கள் அத்திமரத்தைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாயிரு என்றது.

11அதற்கு அத்திமரம்: நான் என் மதுரத்தையும் என் நற்கனியையும் விட்டு, மரங்களை அரசாளப்போவேனோ என்றது.

12அப்பொழுது மரங்கள் திராட்சச்செடியைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாயிரு என்றது.

13அதற்குத் திராட்சச்செடி: தேவர்களையும் மனுஷரையும் மகிழப்பண்ணும் என் ரசத்தை நான் விட்டு மரங்களை அரசாளப்போவேனோ என்றது.

14அப்பொழுது மரங்களெல்லாம் முட்செடியைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாயிரு என்றது.

15அதற்கு முட்செடியானது மரங்களைப் பார்த்து: நீங்கள் என்னை உங்களுக்கு ராஜாவாக அபிஷேகம் பண்ணுகிறது மெய்யானால், என் நிழலிலே வந்தடையுங்கள்; இல்லாவிட்டால் முட்செடியிலிருந்து அக்கினி புறப்பட்டு லீபனோனின் கேதுரு மரங்களைப் பட்சிக்கக்கடவது என்றது.

16என் தகப்பன் உங்களுக்காக யுத்தம்பண்ணி, தன் ஜீவனை எண்ணாமற்போய், உங்களை மீதியானியரின் கையினின்று இரட்சித்தார்.

17நீங்களோ இன்று என் தகப்பனுடைய குடும்பத்துக்கு விரோதமாய் எழும்பி, அவருடைய குமாரரான எழுபதுபேரையும் ஒரே கல்லின்மேல் கொலைசெய்து, அவருடைய வேலைக்காரியின் மகனாகிய அபிமெலேக்கு உங்கள் சகோதரனானபடியினால், அவனைச் சீகேம் பட்டணத்தாருக்கு ராஜாவாக்கினீர்கள்.

18இப்போதும் நீங்கள் அவனை ராஜாவாக்கின செய்கை உண்மையும் உத்தமமுமான செய்கையாயிருக்குமானால்,

19நீங்கள் யெருபாகாலையும் அவர் குடும்பத்தாரையும் நன்மையாக நடத்தி, அவர் கைகளின் செய்கைக்குத்தக்கதை அவருக்குச் செய்து, இப்படி இந்நாளில் அவரையும் அவர் குடும்பத்தாரையும் நடத்தினது உண்மையும் உத்தமுமாயிருக்குமானால், அபிமெலேக்கின்மேல் நீங்களும் சந்தோஷமாயிருங்கள்; உங்கள்மேல் அவனும் சந்தோஷமாயிருக்கட்டும்.

20இல்லாவிட்டால் அபிமெலேக்கிலிருந்து அக்கினி புறப்பட்டு, சீகேம் பட்டணத்தாரையும், மில்லோவின் குடும்பத்தாரையும் பட்சிக்கவும், சீகேம் பட்டணத்தாரிலும் மில்லோவின் குடும்பத்தாரிலுமிருந்து அக்கினி புறப்பட்டு, அபிமெலேக்கைப் பட்சிக்கவும்கடவது என்று யோதாம் சொல்லி,

21தன் சகோதரனாகிய அபிமெலேக்குக்குப் பயந்து, தப்பியோடி, பேயேருக்குப் போய், அங்கே குடியிருந்தான்.

22அபிமெலேக்கு இஸ்ரவேலை மூன்று வருஷம் அரசாண்டபின்பு,

23அபிமெலேக்குக்கும் சீகேமின் பெரிய மனுஷருக்கும் நடுவே பொல்லாப்பு உண்டாக்கும் ஆவியை தேவன் வரப்பண்ணினார்.

24யெருபாகாலின் எழுபது குமாரருக்குச் செய்யப்பட்ட கொடுமை வந்து பலித்து, அவர்களுடைய இரத்தப்பழி அவர்களைக் கொன்ற அவர்களுடைய சகோதரனாகிய அபிமெலேக்கின்மேலும், தன் சகோதரரைக் கொல்ல அவன் கைகளைத் திடப்படுத்தின சீகேம் மனுஷர் மேலும் சுமரும்படியாகச் சீகேமின் பெரிய மனுஷர் அபிமெலேக்குக்கு இரண்டகம்பண்ணினார்கள்.

25சீகேமின் மனுஷர் மலைகளின் உச்சியில் அவனுக்குப் பதிவிருக்கிறவர்களை வைத்தார்கள்; அவர்கள் தங்கள் அருகே வழிநடந்துபோகிற யாவரையும் கொள்ளையிட்டார்கள்; அது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டது.

26ஏபேதின் குமாரனாகிய காகால் தன் சகோதரரோடே சீகேமுக்குள் போனான்; சீகேமின் பெரிய மனுஷர் அவனை நம்பி,

27வெளியே புறப்பட்டு, தங்கள் திராட்சத்தோட்டங்களின் பழங்களை அறுத்து, ஆலையாட்டி, ஆடிப்பாடி, தங்கள் தேவனின் வீட்டிற்குள் போய், புசித்துக்குடித்து, அபிமெலேக்கை சபித்தார்கள்.

28அப்பொழுது ஏபேதின் குமாரனாகிய காகால்: அபிமெலேக்கு யார்? சீகேம் யார்? நாம் அவனைச் சேவிக்கவேண்டியதென்ன? அவன் யெருபாகாலின் மகன் அல்லவா? சேபூல் அவனுடைய காரியக்காரன் அல்லவா? சீகேமின் தகப்பனாகிய ஏமோரின் மனுஷரையே சேவியுங்கள்; அவனை நாங்கள் சேவிப்பானேன்?

29இந்த ஜனங்கள்மாத்திரம் என் கைக்குள் இருக்கட்டும்; நான் அபிமெலேக்கைத் துரத்திவிடுவேன் என்றான். உன் சேனையைப் பெருகப்பண்ணிப் புறப்பட்டுவா என்று, அவன் அபிமெலேக்குக்குச் சொல்லியனுப்பினான்.

30பட்டணத்தின் அதிகாரியாகிய சேபூல் ஏபேதின் குமாரனாகிய காகாலின் வார்த்தைகளைக் கேட்டபோது, கோபமூண்டு,

31இரகசியமாய் அபிமெலேக்கினிடத்துக்கு ஆட்களை அனுப்பி: இதோ, ஏபேதின் குமாரனாகிய காகாலும் அவனுடைய சகோதரரும் சீகேமுக்கு வந்திருக்கிறார்கள்; பட்டணத்தை உமக்கு விரோதமாக எழுப்புகிறார்கள்.

32ஆகையால் நீர் உம்மோடிருக்கும் ஜனங்களோடேகூட இரவில் எழுந்து வந்து வெளியிலே பதிவிருந்து,

33காலமே சூரியன் உதிக்கையில் எழும்பி, பட்டணத்தின்மேல் விழுந்து, அவனும் அவனோடிருக்கிற ஜனங்களும் உமக்கு எதிரே புறப்படும்போது, உம்முடைய கைக்கு நேரிடுகிறபடி அவனுக்குச் செய்யும் என்று சொல்லியனுப்பினான்.

34அப்படியே அபிமெலேக்கும், அவனோடிருந்த சகல ஜனங்களும், இரவில் எழுந்துபோய், சீகேமுக்கு விரோதமாக நாலு படையாகப் பதிவிருந்தார்கள்.

35ஏபேதின் குமாரன் காகால் புறப்பட்டு, பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்றான்; அப்பொழுது பதிவிருந்த அபிமெலேக்கு தன்னோடிருக்கிற ஜனங்களோடேகூட எழும்பி வந்தான்.

36காகால் அந்த ஜனங்களைக் கண்டு: இதோ, மலைகளின் உச்சிகளிலிருந்து ஜனங்கள் இறங்கி வருகிறார்கள் என்று சேபூலோடே சொன்னான். அதற்குச் சேபூல்: நீ மலைகளின் நிழலைக் கண்டு, மனுஷர் என்று நினைக்கிறாய் என்றான்.

37காகாலோ திரும்பவும்: இதோ, ஜனங்கள் தேசத்தின் மேட்டிலிருந்து இறங்கிவந்து, ஒரு படை மெயொனெனீமின் கர்வாலிமரத்தின் வழியாய் வருகிறது என்றான்.

38அதற்குச் சேபூல்: அபிமெலேக்கை நாம் சேவிக்கிறதற்கு அவன் யார் என்று நீ சொன்ன உன் வாய் இப்பொழுது எங்கே? நீ நிந்தித்த ஜனங்கள் அவர்கள் அல்லவா? இப்பொழுது நீ புறப்பட்டு, அவர்களோடே யுத்தம்பண்ணு என்றான்.

39அப்பொழுது காகால் சீகேமின் மனுஷருக்கு முன்பாகப் புறப்பட்டுப்போய், அபிமெலேக்கோடே யுத்தம்பண்ணினான்.

40அபிமெலேக்கு அவனைத் துரத்த, அவன் அவனுக்கு முன்பாக ஓடினான்; பட்டணவாசல் மட்டும் அநேகர் வெட்டுண்டு விழுந்தார்கள்.

41அபிமெலேக்கு அருமாவில் இருந்து விட்டான்; சேபூல் காகாலையும் அவன் சகோதரரையும் சீகேமிலே குடியிராதபடிக்குத் துரத்திவிட்டான்.

42மறுநாளிலே ஜனங்கள் வெளியிலே வயலுக்குப் போனார்கள்; அது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டபோது,

43அவன் ஜனங்களைக் கூட்டிக்கொண்டு, அவர்களை மூன்று படையாக வகுத்து, வெளியிலே பதிவிருந்து, அந்த ஜனங்கள் பட்டணத்திலிருந்து புறப்பட்டு வருகிறதைக் கண்டு, அவர்கள்மேல் எழும்பி, அவர்களை வெட்டினான்.

44அபிமெலேக்கும் அவனோடிருந்த படையும் பாய்ந்துவந்து, பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்றார்கள்; மற்ற இரண்டு படைகளோ வெளியிலிருக்கிற யாவர்மேலும் விழுந்து, அவர்களை வெட்டினார்கள்.

45அபிமெலேக்கு அந்நாள் முழுதும் பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி, பட்டணத்தைப் பிடித்து, அதிலிருந்த ஜனங்களைக் கொன்று, பட்டணத்தை இடித்துவிட்டு, அதில் உப்பு விதைத்தான்.

46அதைச் சீகேம் துருக்கத்து மனுஷர் எல்லாரும் கேள்விப்பட்டபோது, அவர்கள் பேரீத் தேவனுடைய கோவில் அரணுக்குள் பிரவேசித்தார்கள்.

47சீகேம் துருக்கத்து மனுஷர் எல்லாரும் அங்கே கூடியிருக்கிறது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டபோது,

48அபிமெலேக்கு தன்னோடிருந்த எல்லா ஜனங்களோடுங்கூடச் சல்மோன் மலையில் ஏறி, தன் கையிலே கோடரியைப் பிடித்து, ஒரு மரத்தின் கொம்பை வெட்டி, அதை எடுத்து, தன் தோளின்மேல் போட்டுக்கொண்டு, தன்னோடிருந்த ஜனங்களை நோக்கி: நான் என்ன செய்கிறேன் என்று பார்க்கிறீர்களே, நீங்களும் தீவிரமாய் என்னைப்போலச் செய்யுங்கள் என்றான்.

49அப்படியே சகல ஜனங்களும் அவரவர் ஒவ்வொரு கொம்பை வெட்டி, அபிமெலேக்குக்குப் பின்சென்று, அவைகளை அந்த அரணுக்கு அருகே போட்டு, அக்கினி கொளுத்தி அந்த அரணைச் சுட்டுப்போட்டார்கள்; அதினால் புருஷரும் ஸ்திரீகளும் ஏறக்குறைய ஆயிரம்பேராகிய சீகேம் துருக்கத்து மனுஷர் எல்லாரும் செத்தார்கள்.

50பின்பு அபிமெலேக்கு தேபேசுக்குப் போய், அதற்கு விரோதமாய்ப் பாளயமிறங்கி, அதைப் பிடித்தான்.

51அந்தப் பட்டணத்தின் நடுவே பலத்த துருக்கம் இருந்தது; அங்கே சகல புருஷரும் ஸ்திரீகளும் பட்டணத்து மனுஷர் அனைவரும் ஓடிப் புகுந்து, கதவைப் பூட்டிக்கொண்டு, துருக்கத்தின்மேல் ஏறினார்கள்.

52அபிமெலேக்கு அந்தத் துருக்கம் மட்டும் வந்து, அதின்மேல் யுத்தம்பண்ணி, துருக்கத்தின் கதவைச் சுட்டெரித்துப் போடும்படிக்கு, அதின் கிட்டச் சேர்ந்தான்.

53அப்பொழுது ஒரு ஸ்திரீ ஒரு ஏந்திரக்கல்லின் துண்டை அபிமெலேக்குடைய தலையின்மேல் போட்டாள்; அது அவன் மண்டையை உடைத்தது.

54உடனே அவன் தன் ஆயுததாரியாகிய வேலைக்காரனைக் கூப்பிட்டு: ஒரு ஸ்திரீ என்னைக் கொன்றாள் என்று என்னைக் குறித்துச் சொல்லாதபடிக்கு, நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் கொன்று போடு என்று அவனோடே சொன்னான்; அப்படியே அவன் வேலைக்காரன் அவனை உருவக் குத்தினான், அவன் செத்துப்போனான்.

55அபிமெலேக்குச் செத்துப்போனதை இஸ்ரவேல் மனுஷர் கண்டபோது, அவர்கள் தங்கள்தங்கள் இடங்களுக்குப் போய் விட்டார்கள்.

56இப்படியே அபிமெலேக்கு தன்னுடைய எழுபது சகோதரரைக் கொலை செய்ததினால், தன் தகப்பனுக்குச் செய்த பொல்லாப்பை தேவன் அவன்மேல் திரும்பும்படி செய்தார்.

57சீகேம் மனுஷர் செய்த எல்லாப் பொல்லாப்பையும் தேவன் அவர்கள் தலையின்மேல் திரும்பும்படி செய்தார்; யெருபாகாலின் குமாரன் யோதாமின் சாபம் அவர்களுக்குப் பலித்தது.

அப்போஸ்தலர் 13

முழு அதிகாரம் ›

1அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபையிலே பர்னபாவும், நீகர் என்னப்பட்ட சிமியோனும், சிரேனே ஊரானாகிய லூகியும், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோதுடனேகூட வளர்க்கப்பட்ட மனாயீனும், சவுலும், தீர்க்கதரிசிகளாயும் போதகர்களாயும் இருந்தார்கள்.

2அவர்கள் கர்த்தருக்கு ஆராதனைசெய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்த ஆவியானவர் திருவுளம்பற்றினார்.

3அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை அனுப்பினார்கள்.

4அப்படியே அவர்கள் பரிசுத்த ஆவியினால் அனுப்பப்பட்டுச் செலூக்கியா பட்டணத்துக்கு வந்து, கப்பல் ஏறி, அங்கிருந்து சீப்புரு தீவுக்குப் போனார்கள்.

5சாலமி பட்டணத்தில் வந்தபோது அவர்கள் யூதருடைய ஜெப ஆலயங்களில் தேவவசனத்தைப் பிரசங்கித்தார்கள். யோவானும் அவர்களுக்கு உதவிக்காரனாயிருந்தான்.

6அவர்கள் பாப்போ பட்டணம் வரைக்கும் தீவைக் கடந்துவந்தபோது, பர்யேசு என்னும் பேர்கொண்ட மாயவித்தைக்காரனும் கள்ளத்தீர்க்கதரிசியுமான ஒரு யூதனைக் கண்டார்கள்.

7அவன் விவேகமுள்ள மனுஷனாகிய செர்கியுபவுல் என்னும் அதிபதியுடனேகூட இருந்தான். அந்த அதிபதி பர்னபாவையும் சவுலையும் அழைப்பித்து, அவர்களிடத்தில் தேவவசனத்தைக் கேட்க ஆசையாயிருந்தான்.

8மாயவித்தைக்காரன் என்று அர்த்தங்கொள்ளும் பேரையுடைய அந்த எலிமா என்பவன் அதிபதியை விசுவாசத்தினின்று திருப்பும்படி வகைதேடி, அவர்களோடு எதிர்த்துநின்றான்.

9அப்பொழுது பவுல் என்று சொல்லப்பட்ட சவுல் பரிசுத்த ஆவியினால் நிறைந்தவனாய் அவனை உற்றுப்பார்த்து:

10எல்லாக் கபடமும் எல்லாப் பொல்லாங்கும் நிறைந்தவனே, பிசாசின் மகனே, நீதிக்கெல்லாம் பகைஞனே, கர்த்தருடைய செம்மையான வழிகளைப் புரட்டுவதில் ஓயமாட்டாயோ?

11இதோ, இப்பொழுதே, கர்த்தருடைய கை உன்மேல் வந்திருக்கிறது, சிலகாலம் சூரியனைக் காணாமல் நீ குருடனாயிருப்பாய் என்றான். உடனே மந்தாரமும் இருளும் அவன்மேல் விழுந்தது; அவன் தடுமாறி, கைலாகு கொடுக்கிறவர்களைத் தேடினான்.

12அப்பொழுது அதிபதி சம்பவித்ததைக் கண்டு, கர்த்தருடைய உபதேசத்தைக்குறித்து அதிசயப்பட்டு, விசுவாசித்தான்.

13பின்பு பவுலும் அவனைச் சேர்ந்தவர்களும் பாப்போ பட்டணத்தைவிட்டுக் கப்பல் ஏறிப் பம்பிலியாவிலிருக்கும் பெர்கே பட்டணத்துக்கு வந்தார்கள். யோவான் அவர்களை விட்டுப் பிரிந்து, எருசலேமுக்குத் திரும்பிப்போனான்.

14அவர்கள் பெர்கே பட்டணத்தை விட்டுப் புறப்பட்டு, பிசீதியா நாட்டிலுள்ள அந்தியோகியாவுக்கு வந்து, ஓய்வு நாளிலே ஜெப ஆலயத்தில் பிரவேசித்து, உட்கார்ந்தார்கள்.

15நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனஆகமமும் வாசித்துமுடிந்தபின்பு: சகோதரரே, நீங்கள் ஜனங்களுக்குப் புத்தி சொல்ல விரும்பினால் சொல்லுங்கள் என்று சொல்லும்படி ஜெப ஆலயத்தலைவர்கள் அவர்களிடத்தில் ஆள் அனுப்பினார்கள்.

16அப்பொழுது பவுல் எழுந்திருந்து, கையமர்த்தி: இஸ்ரவேலரே, தேவனுக்குப் பயந்து நடக்கிற சகல ஜனங்களே, கேளுங்கள்.

17இஸ்ரவேலராகிய இந்த ஜனத்தினுடைய தேவன் நம்முடைய பிதாக்களைத் தெரிந்துகொண்டு எகிப்து தேசத்தில் அவர்கள் பரதேசிகளாய்ச் சஞ்சரித்தபோது ஜனங்களை உயர்த்தி, தமது புயபலத்தினாலே அதிலிருந்து அவர்களைப் புறப்படப்பண்ணி,

18நாற்பது வருஷகாலமாய் வனாந்தரத்தில் அவர்களை ஆதரித்து,

19கானான் தேசத்தில் ஏழு ஜாதிகளை அழித்து, அவர்களுடைய தேசத்தை இவர்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிட்டுக் கொடுத்து,

20பின்பு ஏறக்குறைய நானூற்றைம்பது வருஷகாலமாய் சாமுவேல் தீர்க்கதரிசிவரைக்கும் அவர்களுக்கு நியாயாதிபதிகளை ஏற்படுத்திவந்தார்.

21அதுமுதல் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்; அப்படியே தேவன் பென்யமீன் கோத்திரத்தானாகிய கீசுடைய குமாரனான சவுலை நாற்பதுவருஷகாலமாய் அவர்களுக்குக் கொடுத்தார்.

22பின்பு அவர் அவனைத் தள்ளி, தாவீதை அவர்களுக்கு ராஜவாக ஏற்படுத்தி, ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக்குறித்துச் சாட்சியும் கொடுத்தார்.

23அவனுடைய சந்ததியிலே தேவன் தமது வாக்குத்தத்தத்தின்படியே இஸ்ரவேலுக்கு இரட்சகராக இயேசுவை எழும்பப்பண்ணினார்.

24இவர் வெளிப்படுவதற்குமுன்னே மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்து யோவான் இஸ்ரவேலர் யாவருக்கும் பிரசங்கித்தான்.

25யோவான் தன் பணிவிடை ஓட்டத்தை நிறைவேற்றுகிறபோது: நீங்கள் என்னை யார் என்று நினைக்கிறீர்கள், நான் அவர் அல்ல, இதோ, எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவருடைய பாதரட்சையை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல என்றான்.

26சகோதரரே, ஆபிரகாமின் சந்ததியில் பிறந்தவர்களே, தேவனுக்குப் பயந்து நடக்கிறவர்களே, இந்த இரட்சிப்பின் வசனம் உங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

27எருசலேமில் குடியிருக்கிறவர்களும் அவர்கள் அதிகாரிகளும் அவரை அறியாமலும், ஓய்வுநாள்தோறும் வாசிக்கப்படுகிற தீர்க்கதரிசிகளின் வாக்கியங்களை அறியாமலும், அவரை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்ததினால் அந்த வாக்கியங்களை நிறைவேற்றினார்கள்.

28மரணத்திற்கு ஏதுவானதொன்றும் அவரிடத்தில் காணாதிருந்தும், அவரைக் கொலைசெய்யும்படிக்குப் பிலாத்துவை வேண்டிக்கொண்டார்கள்.

29அவரைக்குறித்து எழுதியிருக்கிறவைகள் யாவையும் அவர்கள் நிறைவேற்றினபின்பு, அவரை மரத்திலிருந்து இறக்கி, கல்லறையிலே வைத்தார்கள்.

30தேவனோ அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார்.

31தம்முடனேகூடக் கலிலேயாவிலிருந்து எருசலேமுக்குப் போனவர்களுக்கு அவர் அநேகநாள் தரிசனமானார்; அவர்களே ஜனங்களுக்கு முன்பாக அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறார்கள்.

32நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று இரண்டாம் சங்கீதத்தில் எழுதியிருக்கிறபடியே,

33இயேசுவை எழுப்பினதினாலே தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தத்தை அவர்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு நிறைவேற்றினார் என்று நாங்களும் உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கிறோம்.

34இனி அவர் அழிவுக்குட்படாதபடிக்கு அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்பதைக்குறித்து: தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்குக் கட்டளையிடுவேன் என்று திருவுளம் பற்றினார்.

35அன்றியும், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர் என்று வேறொரு சங்கீதத்தில் சொல்லியிருக்கிறது.

36தாவீது தன் காலத்திலே தேவனுடைய சித்தத்தின்படி அவருக்கு ஊழியஞ்செய்தபின்பு நித்திரையடைந்து, தன் பிதாக்களிடத்திலே சேர்க்கப்பட்டு, அழிவைக் கண்டான்.

37தேவனால் எழுப்பப்பட்டவரோ அழிவைக் காணவில்லை.

38ஆதலால் சகோதரரே, இவர் மூலமாய் உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறதென்றும்,

39மோசேயின் நியாயப்பிரமாணத்தினாலே நீங்கள் எவைகளினின்று விடுதலையாகி நீதிமான்களாக்கப்படக்கூடாதிருந்ததோ, விசுவாசிக்கிறவன் எவனும் அவைகளினின்று இவராலே விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான் என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது.

40அன்றியும், தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்திலே:

41அசட்டைக்காரரே, பாருங்கள், பிரமித்து அழிந்துபோங்கள்! உங்கள் நாட்களில் ஒரு கிரியையை நான் நடப்பிப்பேன், ஒருவன் அதை உங்களுக்கு விவரித்துச் சொன்னாலும் நீங்கள் விசுவாசிக்கமாட்டீர்கள் என்று சொல்லியிருக்கிறபடி, உங்களுக்கு நேரிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்றான்.

42அவர்கள் யூதருடைய ஜெப ஆலயத்திலிருந்து புறப்படுகையில், அடுத்த ஓய்வுநாளிலே இந்த வசனங்களைத் தங்களுக்குச் சொல்லவேண்டும் என்று புறஜாதியார் வேண்டிக்கொண்டார்கள்.

43ஜெப ஆலயத்தில் கூடின சபை கலைந்துபோனபின்பு, யூதரிலும் யூதமார்க்கத்தமைந்த பக்தியுள்ளவர்களிலும் அநேகர் பவுலையும் பர்னபாவையும் பின்பற்றினார்கள். அவர்களுடனே இவர்கள் பேசி, தேவனுடைய கிருபையிலே நிலைகொண்டிருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொன்னார்கள்.

44அடுத்த ஓய்வுநாளிலே கொஞ்சங்குறையப் பட்டணத்தாரனைவரும் தேவவசனத்தைக் கேட்கும்படி கூடிவந்தார்கள்.

45யூதர்கள் ஜனக்கூட்டங்களைக் கண்டபோது பொறாமையினால் நிறைந்து, பவுலினால் சொல்லப்பட்டவைகளுக்கு எதிரிடையாய்ப் பேசி, விரோதித்துத் தூஷித்தார்கள்.

46அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியங்கொண்டு அவர்களை நோக்கி: முதலாவது உங்களுக்கே தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது; நீங்களோ அதைத் தள்ளி, உங்களை நித்திய ஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக்கொள்ளுகிறபடியினால், இதோ, நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம்.

47நீர் பூமியின் கடைசிபரியந்தமும் இரட்சிப்பாயிருக்கும்படி உம்மை ஜாதிகளுக்கு ஒளியாகவைத்தேன் என்கிற வேதவாக்கியத்தின்படி கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறபடியினால் இப்படிச் செய்கிறோம் என்றார்கள்.

48புறஜாதியார் அதைக் கேட்டுச் சந்தோஷப்பட்டு, கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தினார்கள். நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள்.

49கர்த்தருடைய வசனம் அத்தேசமெங்கும் பிரசித்தமாயிற்று.

50யூதர்கள் பக்தியும் கனமுமுள்ள ஸ்திரீகளையும் பட்டணத்து முதலாளிகளையும் எடுத்துவிட்டு, பவுலையும் பர்னபாவையும் துன்பப்படுத்தும்படி செய்து, தங்கள் எல்லைகளுக்குப் புறம்பாக அவர்களைத் துரத்திவிட்டார்கள்.

51இவர்கள் தங்கள் கால்களில் படிந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிப்போட்டு, இக்கோனியா பட்டணத்துக்குப் போனார்கள்.

52சீஷர்கள் சந்தோஷத்தினாலும் பரிசுத்த ஆவியினாலும் நிரப்பப்பட்டார்கள்.

தனிவாசிப்பு

1கர்த்தர் சொன்னது: நீ யூதா ராஜாவின் அரமனைக்குப் போய், அங்கே சொல்லவேண்டிய வசனம் என்னவென்றால்:

2தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருக்கிற யூதாவின் ராஜாவே, நீரும் உம்முடைய ஊழியக்காரரும் இந்த வாசல்களுக்குள் பிரவேசிக்கிற உம்முடைய ஜனமும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

3நீங்கள் நியாயமும் நீதியும் செய்து, பறிகொடுத்தவனை ஒடுக்குகிறவனுடைய கைக்குத் தப்புவியுங்கள்; நீங்கள் பரதேசியையும் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்காமலும், கொடுமைசெய்யாமலும், இவ்விடத்தில் குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தாமலும் இருங்கள்.

4இந்த வார்த்தையின்படியே நீங்கள் மெய்யாய்ச் செய்வீர்களாகில், தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிற ராஜாக்கள் இரதங்கள்மேலும் குதிரைகள்மேலும் ஏறி, அவனும் அவன் ஊழியக்காரரும் அவன் ஜனமுமாக இந்த அரமனை வாசல்களின் வழியாய் உட்பிரவேசிப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

5நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளாமற்போனீர்களேயாகில் இந்த அரமனை பாழாய்ப்போகும் என்று என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

6யூதா ராஜாவின் அரமனையைக் குறித்துக் கர்த்தர்: நீ எனக்குக் கீலேயாத்தைப்போலவும் லீபனோனின் கொடுமுடியைப்போலவும் இருக்கிறாய்; ஆனாலும் மெய்யாகவே நான் உன்னை வனாந்தரத்தைப்போலவும், குடியில்லாத பட்டணங்களைப்போலவும் ஆக்கிவிடுவேன்.

7சங்காரக்காரரை அவரவர் ஆயுதங்களோடுங்கூட நான் உனக்கு விரோதமாக ஆயத்தப்படுத்துவேன்; உன் உச்சிதமான கேதுருக்களை அவர்கள் வெட்டி, அக்கினியிலே போடுவார்கள்.

8அநேகம் ஜாதிகள் இந்த நகரத்தைக் கடந்துவந்து, அவனவன் தன்தன் அயலானை நோக்கி: இந்தப் பெரிய நகரத்துக்குக் கர்த்தர் இப்படிச் செய்தது என்னவென்று கேட்பார்கள்.

9அதற்குப் பிரதியுத்தரமாக: அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரின் உடன்படிக்கையை விட்டுவிட்டு, அந்நிய தேவர்களைப் பணிந்துகொண்டு, அவைகளுக்கு ஆராதனை செய்தபடியினால் இப்படியாயிற்று என்பார்கள் என்று சொல்லுகிறார்.

10மரித்தவனுக்காக அழவேண்டாம், அவனுக்காகப் பரிதபிக்கவும் வேண்டாம், சிறைப்பட்டுப்போனவனுக்காகவே அழுங்கள்; அவன் இனித் திரும்பிவருவதுமில்லை, தன் ஜனன பூமியைக் காண்பதுமில்லை.

11தன் தகப்பனாகிய யோசியாவின் பட்டத்துக்கு வந்து, அரசாண்டு, இவ்விடத்திலிருந்து புறப்பட்டுப்போன யூதாவின் ராஜாவாயிருந்த யோசியாவின் குமாரனாகிய சல்லூமைக் குறித்து: அவன் இனி இங்கே திரும்பவராமல்,

12தான் கொண்டுபோகப்பட்ட ஸ்தலத்திலே மரிப்பான்; இந்த தேசத்தை அவன் இனிக் காண்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.

13தனக்கு விஸ்தாரமான வீட்டையும், காற்று வீசும் விசாலமான மேலறைகளையும் கட்டுவேனென்று சொல்லி, பலகணிகளைத் தனக்குத் திறந்து, கேதுரு பலகைகளை வைத்து, ஜாதிலிங்கவருணம் பூசி,

14அநீதியினாலே தன் வீட்டையும், அநியாயத்தினாலே தன் மேலறைகளையும் கட்டி, தன் அயலான் செய்யும் வேலைக்குக் கூலிகொடாமல், அவனைச் சும்மா வேலைகொள்ளுகிறவனுக்கு ஐயோ!

15நீ கேதுருமர மாளிகைகளில் உலாவுகிறபடியினாலே ராஜாவாயிருப்பாயோ? உன் தகப்பன் போஜனபானம்பண்ணி, நியாயமும் நீதியுஞ்செய்தபோது அவன் சுகமாய் வாழ்ந்திருக்கவில்லையோ?

16அவன் சிறுமையும் எளிமையுமானவனுடைய நியாயத்தை விசாரித்தான்; அப்பொழுது சுகமாய் வாழ்ந்தான், அப்படிச் செய்வதல்லவோ என்னை அறிகிற அறிவு என்று கர்த்தர் சொல்லுகிறார்.

17உன் கண்களும் உன் மனதுமோவென்றால் தற்பொழிவின்மேலும், குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்துவதின்மேலும், இடுக்கமும் நொறுக்குதலும் செய்வதின்மேலுமே அல்லாமல் வேறொன்றின்மேலும் வைக்கப்படவில்லை.

18ஆகையால் கர்த்தர் யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவின் ராஜாவைக் குறித்து: ஐயோ! என் சகோதரனே, ஐயோ! சகோதரியே, என்று அவனுக்காகப் புலம்புவதில்லை; ஐயோ! ஆண்டவனே, ஐயோ! அவருடைய மகத்துவமே, என்று அவனுக்காகப் புலம்புவதில்லை.

19ஒரு கழுதை புதைக்கப்படுகிற வண்ணமாய் அவன் எருசலேமின் வாசல்களுக்கு வெளியே இழுத்தெறிந்து புதைக்கப்படுவான் என்று சொல்லுகிறார்.

20லீபனோனின்மேலேறிப் புலம்பு, பாசானில் உரத்த சத்தமிடு, ஆபரீமிலிருந்து கூப்பிட்டுக்கொண்டிரு; உன் நேசர் அனைவரும் முறிந்தார்கள்.

21நீ சுகமாய் வாழ்ந்திருக்கையில் நான் உனக்குச் சொன்னேன், நீ கேளேன் என்றாய்; உன் சிறுவயதுமுதல் நீ என் சத்தத்தைக் கேளாமற்போகிறதே உன் வழக்கம்.

22உன் மேய்ப்பர்கள் எல்லாரையும் காற்று அடித்துக்கொண்டுபோகும்; உன் நேசர் சிறைப்பட்டுப்போவார்கள்; அப்போதல்லவோ உன் எல்லாப் பொல்லாப்பினிமித்தமும் நீ வெட்கப்பட்டு இலச்சையடைவாய்.

23லீபனோனில் வாசமாயிருந்து, கேதுருமரங்களில் கூடுகட்டிக்கொண்டிருக்கிறவளே, வேதனைகளும் பிள்ளைப்பெறுகிறவளுக்கொத்த வாதையும் உனக்கு வருகையில், நீ எவ்வளவு பரிதபிக்கப்படத்தக்கவளாயிருப்பாய்!

24யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமின் குமாரன் கோனியா, என் வலதுகையின் முத்திரை மோதிரமாயிருந்தாலும், அதிலிருந்து உன்னைக் கழற்றி எறிந்துபோடுவேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

25உன் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும், நீ பயப்படுகிறவர்களின் கையிலும் உன்னை ஒப்புக்கொடுப்பேன்; பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலும் கல்தேயரின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்.

26உன்னையும், உன்னைப் பெற்ற தாயையும், உங்கள் ஜனனபூமியல்லாத அந்நிய தேசத்திலே துரத்திவிடுவேன். அங்கே சாவீர்கள்.

27திரும்புவதற்குத் தங்கள் ஆத்துமா வாஞ்சிக்கும் தேசத்துக்கு அவர்கள் திரும்பிவருவதில்லை.

28கோனியா என்கிற இந்த மனுஷன் அவமதிக்கப்பட்ட உடைந்தசிலையோ? ஒருவரும் விரும்பாத பாத்திரமோ? அவனும் அவன் சந்ததியும் தள்ளுண்டதும், தாங்கள் அறியாத தேசத்திலே துரத்திவிடப்பட்டதும் ஏது?

29தேசமே! தேசமே! தேசமே! கர்த்தருடைய வார்த்தையைக் கேள்.

30இந்தப் புருஷன் சந்தானமற்றவன், தன் நாட்களில் வாழ்வடையாதவன் என்று இவனைக்குறித்து எழுதுங்கள்; அவன் வித்தில் ஒருவனாகிலும் வாழ்வடைந்து, தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருந்து, யூதாவில் அரசாளப்போகிறதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.

1அந்த நாட்களிலே திரளான ஜனங்கள் கூடிவந்திருக்கையில், அவர்கள் சாப்பிடுகிறதற்கு ஒன்றுமில்லாதபோது, இயேசு தம்முடைய சீஷரை அழைத்து:

2ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் இப்பொழுது என்னிடத்தில் தங்கியிருந்த மூன்றுநாளாய்ச் சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்.

3இவர்களில் சிலர் தூரத்திலிருந்து வந்தவர்களாகையால், நான் இவர்களைப் பட்டினியாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டால் வழியில் சோர்ந்துபோவார்களே என்றார்.

4அதற்கு அவருடைய சீஷர்கள்: இந்த வனாந்தரத்திலே ஒருவன் எங்கேயிருந்து அப்பங்களைக் கொண்டுவந்து இத்தனைபேர்களைத் திருப்தியாக்கக்கூடும் என்றார்கள்.

5அதற்கு அவர்: உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்கள் உண்டு என்றார்கள்.

6அப்பொழுது அவர் ஜனங்களைத் தரையிலே பந்தியிருக்கக் கட்டளையிட்டு, இந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, பிட்டு, அவர்களுக்குப் பரிமாறும்படி சீஷர்களிடத்தில் கொடுத்தார்; அவர்கள் ஜனங்களுக்குப் பரிமாறினார்கள்.

7சில சிறுமீன்களும் அவர்களிடத்தில் இருந்தது; அவர் அவைகளையும் ஆசீர்வதித்து அவர்களுக்குப் பரிமாறும்படி சொன்னார்.

8அவர்கள் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளை ஏழுகூடை நிறைய எடுத்தார்கள்.

9சாப்பிட்டவர்கள் ஏறக்குறைய நாலாயிரம்பேராயிருந்தார்கள். பின்பு அவர் அவர்களை அனுப்பிவிட்டார்.

10உடனே அவர் தம்முடைய சீஷரோடேகூடப் படவில் ஏறி, தல்மனூத்தாவின் எல்லைகளில் வந்தார்.

11அப்பொழுது பரிசேயர் வந்து அவரோடே தர்க்கிக்கத்தொடங்கி, அவரைச் சோதிக்கும்படி, வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள்.

12அவர் தம்முடைய ஆவியில் பெருமூச்சுவிட்டு: இந்தச் சந்ததியார் அடையாளம் தேடுகிறதென்ன? இந்தச் சந்ததியாருக்கு ஒரு அடையாளமும் கொடுக்கப்படுவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,

13அவர்களை விட்டு மறுபடியும் படவில் ஏறி, அக்கரைக்குப் போனார்.

14சீஷர்கள் அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்; படவிலே அவர்களிடத்தில் ஒரு அப்பம் மாத்திரம் இருந்தது.

15அவர் அவர்களை நோக்கி: நீங்கள் பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்தும் ஏரோதின் புளித்தமாவைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள் என்று கற்பித்தார்.

16அதற்கு அவர்கள்: நம்மிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள்.

17இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: உங்களிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியினால் நீங்கள் யோசனைபண்ணுகிறதென்ன? இன்னும் சிந்தியாமலும் உணராமலும் இருக்கிறீர்களா? இன்னும் உங்கள் இருதயம் கடினமாயிருக்கிறதா?

18உங்களுக்குக் கண்களிருந்தும் காணாதிருக்கிறீர்களா? காதுகளிருந்தும் கேளாதிருக்கிறீர்களா? நினைவுகூராமலுமிருக்கிறீர்களா?

19நான் ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார், பன்னிரண்டு என்றார்கள்.

20நான் ஏழு அப்பங்களை நாலாயிரம்பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார். ஏழு என்றார்கள்.

21அப்படியானால், நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்.

22பின்பு அவர் பெத்சாயிதா ஊருக்கு வந்தார்; அப்பொழுது ஒரு குருடனை அவரிடத்தில் கொண்டுவந்து, அவனைத் தொடும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள்.

23அவர் குருடனுடைய கையைப் பிடித்து, அவனைக் கிராமத்துக்கு வெளியே அழைத்துக்கொண்டுபோய், அவன் கண்களில் உமிழ்ந்து, அவன்மேல் கைகளை வைத்து: எதையாகிலும் காண்கிறாயா என்று கேட்டார்.

24அவன் ஏறிட்டுப் பார்த்து: நடக்கிற மனுஷரை மரங்களைப்போலக் காண்கிறேன் என்றான்.

25பின்பு அவர் மறுபடியும் அவன் கண்களின்மேல் கைகளை வைத்து, அவனை ஏறிட்டுப் பார்க்கும்படி செய்தார்; அப்பொழுது அவன் சொஸ்தமடைந்து, யாவரையும் தெளிவாய்க் கண்டான்.

26பின்பு அவர் அவனை நோக்கி: நீ கிராமத்தில் பிரவேசியாமலும், கிராமத்தில் இதை ஒருவருக்கும் சொல்லாமலும் இரு என்று சொல்லி, அவனை வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.

27பின்பு, இயேசுவும் அவருடைய சீஷர்களும் புறப்பட்டு, பிலிப்பு செசரியா பட்டணத்தைச் சேர்ந்த கிராமங்களுக்குப் போனார்கள். வழியிலே அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.

28அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.

29அப்பொழுது, அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு பிரதியுத்தரமாக: நீர் கிறிஸ்து என்றான்.

30அப்பொழுது தம்மைக்குறித்து ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு அவர்களுக்கு உறுதியாய்க் கட்டளையிட்டார்.

31அல்லாமலும், மனுஷகுமாரன் பலபாடுகள்பட்டு, மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்பட்டு, கொல்லப்பட்டு, மூன்றுநாளைக்குப்பின்பு உயிர்த்தெழுந்திருக்கவேண்டியதென்று அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்.

32இந்த வார்த்தையை அவர் தாராளமாகச் சொன்னார். அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய், அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்.

33அவர் திரும்பித் தம்முடைய சீஷரைப் பார்த்து, பேதுருவை நோக்கி: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்று சொல்லி, அவனைக் கடிந்து கொண்டார்.

34பின்பு அவர் ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் தம்மிடத்தில் அழைத்து: ஒருவன் என் பின்னே வரவிரும்பினால், அவன் தன்னைத்தானே வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.

35தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான், என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.

36மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?

37மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?

38ஆதலால் விபசாரமும் பாவமுமுள்ள இந்தச் சந்ததியில் என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுவானோ, அவனைக் குறித்து மனுஷகுமாரனும் தமது பிதாவின் மகிமைபொருந்தினவராய்ப் பரிசுத்த தூதர்களோடுங்கூட வரும்போது வெட்கப்படுவார் என்றார்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com