‹ முகப்புமுழுத் திட்டம்

ஜூலை 29 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்ஜூலை 29அடுத்த நாள் ›
குடும்பம்

நியாயாதிபதிகள் 12

முழு அதிகாரம் ›

1எப்பிராயீம் மனுஷர் ஏகமாய்க் கூடி வடக்கே புறப்பட்டுப்போய், யெப்தாவை நோக்கி: நீ எங்களை உன்னோடேகூட வரும்படி அழைப்பியாமல் அம்மோன் புத்திரர்மேல் யுத்தம்பண்ணப்போனதென்ன? உன் வீட்டையும் உன்னையும்கூட அக்கினியால் சுட்டுப்போடுவோம் என்றார்கள்.

2அதற்கு யெப்தா: எனக்கும் என் ஜனத்திற்கும் அம்மோன் புத்திரரோடே பெரிய வழக்கு இருக்கும்போது, நான் உங்களைக் கூப்பிட்டேன்; நீங்கள் என்னை அவர்கள் கைக்கு நீங்கலாக்கி இரட்சிக்கவில்லை.

3நீங்கள் என்னை இரட்சிக்கவில்லை என்று நான் கண்டபோது, நான் என் ஜீவனை என் கையிலே பிடித்துக்கொண்டு, அம்மோன் புத்திரருக்கு விரோதமாய்ப் போனேன்; கர்த்தர் அவர்களை என் கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்படியிருக்க, நீங்கள் என்மேல் யுத்தம்பண்ண, இன்று என்னிடத்திற்கு வரவேண்டியது என்ன என்று சொன்னான்.

4பின்பு யெப்தா கீலேயாத் மனுஷரையெல்லாம் கூட்டி, எப்பிராயீமரோடு யுத்தம்பண்ணினான்; எப்பிராயீமுக்கும் மனாசேக்கும் நடுவே குடியிருக்கிற கீலேயாத்தியரான நீங்கள் எப்பிராயீமைவிட்டு ஓடிப்போனவர்கள் என்று எப்பிராயீமர் சொன்னபடியினால், கீலேயாத் மனுஷர் அவர்களை முறிய அடித்தார்கள்.

5கீலேயாத்தியர் எப்பிராயீமுக்கு முந்தி யோர்தானின் துறைகளைப் பிடித்தார்கள்; அப்பொழுது எப்பிராயீமரிலே தப்பினவர்களில் யாராவது வந்து: நான் அக்கரைக்குப் போகட்டும் என்று சொல்லும்போது, கீலேயாத் மனுஷர்: நீ எப்பிராயீமனா என்று அவனைக் கேட்பார்கள்; அவன் அல்ல என்றால்,

6நீ ஷிபோலேத் என்று சொல் என்பார்கள்; அப்பொழுது அவன் அப்படி உச்சரிக்கக்கூடாமல், சிபோலேத் என்பான்; அப்பொழுது அவனைப் பிடித்து, யோர்தான் துறையிலே வெட்டிப்போடுவார்கள்; அக்காலத்திலே எப்பிராயீமில் நாற்பத்தீராயிரம்பேர் விழுந்தார்கள்.

7யெப்தா இஸ்ரவேலை ஆறு வருஷம் நியாயம் விசாரித்தான்; பின்பு கீலேயாத்தியனான யெப்தா மரித்து, கீலேயாத்திலுள்ள ஒரு பட்டணத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்.

8அவனுக்குப்பின்பு பெத்லெகேம் ஊரானாகிய இப்சான் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.

9அவனுக்கு முப்பது குமாரரும் முப்பது குமாரத்திகளும் இருந்தார்கள்; முப்பது குமாரத்திகளையும் புறத்திலே விவாகம்பண்ணிக்கொடுத்து, தன் குமாரருக்கு முப்பது பெண்களைப் புறத்திலே கொண்டான்; அவன் இஸ்ரவேலை ஏழு வருஷம் நியாயம் விசாரித்தான்.

10பின்பு இப்சான் மரித்து, பெத்லெகேமிலே அடக்கம்பண்ணப்பட்டான்.

11அவனுக்குப் பின்பு செபுலோனியனாகிய ஏலோன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்; அவன் பத்து வருஷம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.

12பின்பு செபுலோனியனாகிய ஏலோன் மரித்து, செபுலோன் தேசமான ஆயலோன் ஊரில் அடக்கம் பண்ணப்பட்டான்.

13அவனுக்குப்பின்பு இல்லேலின் குமாரனாகிய பிரத்தோனியனான அப்தோன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.

14அவனுக்கு நாற்பது குமாரரும் முப்பது பேரப்பிள்ளைகளும் இருந்தார்கள்; அவர்கள் எழுபது கழுதைகளின்மேல் ஏறுவார்கள்; அவன் இஸ்ரவேலை எட்டு வருஷம் நியாயம் விசாரித்தான்.

15பின்பு பிரத்தோனியனான இல்லேலின் குமாரனாகிய அப்தோன் மரித்து, எப்பிராயீம் தேசத்தில் அமலேக்கியர் மலையிலிருக்கிற பிரத்தோனிலே அடக்கம்பண்ணப்பட்டான்.

அப்போஸ்தலர் 16

முழு அதிகாரம் ›

1அதன்பின்பு அவன் தெர்பைக்கும் லீஸ்திராவுக்கும் போனான். அங்கே தீமோத்தேயு என்னப்பட்ட ஒரு சீஷன் இருந்தான்; அவன் தாய் விசுவாசமுள்ள யூதஸ்திரீ, அவன் தகப்பன் கிரேக்கன்.

2அவன் லீஸ்திராவிலும் இக்கோனியாவிலுமுள்ள சகோதரராலே நற்சாட்சி பெற்றவனாயிருந்தான்.

3அவனைப் பவுல் தன்னுடனே கூட்டிக்கொண்டு போகவேண்டுமென்று விரும்பி, அவனுடைய தகப்பன் கிரேக்கன் என்று அவ்விடங்களிலிருக்கும் யூதர்களெல்லாரும் அறிந்திருந்தபடியால், அவர்கள்நிமித்தம் அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான்.

4அவர்கள் பட்டணங்கள்தோறும் போகையில், எருசலேமிலிருக்கும் அப்போஸ்தலராலும் மூப்பராலும் விதிக்கப்பட்ட சட்டங்களைக் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு ஒப்புவித்தார்கள்.

5அதினாலே சபைகள் விசுவாசத்தில் ஸ்திரப்பட்டு, நாளுக்குநாள் பெருகின.

6அவர்கள் பிரிகியா கலாத்தியா நாடுகளைக் கடந்துபோனபோது, ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்த ஆவியினாலே தடைபண்ணப்பட்டு,

7மீசியா தேசமட்டும் வந்து, பித்தினியா நாட்டுக்குப் போகப் பிரயத்தனம்பண்ணினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார்.

8அப்பொழுது அவர்கள் மீசியா பக்கமாய்ப் போய், துரோவாவுக்கு வந்தார்கள்.

9அங்கே இராத்திரியிலே பவுலுக்கு ஒரு தரிசனம் உண்டாயிற்று; அதென்னவெனில், மக்கெதோனியா தேசத்தான் ஒருவன் வந்துநின்று: நீர் மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவிசெய்யவேண்டுமென்று தன்னை வேண்டிக்கொண்டதாக இருந்தது.

10அந்தத் தரிசனத்தை அவன் கண்டபோது, அவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி கர்த்தர் எங்களை அழைத்தாரென்று நாங்கள் நிச்சயித்துக்கொண்டு, உடனே மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டுப்போகப் பிரயத்தனம்பண்ணி,

11துரோவாவில் கப்பல் ஏறி, சாமோத்திராக்கே தீவுக்கும், மறுநாளிலே நெயாப்போலி பட்டணத்துக்கும் நேராய் ஓடி,

12அங்கேயிருந்து மக்கெதோனியா தேசத்து நாடுகளில் ஒன்றிற்குத் தலைமையானதும் ரோமர் குடியேறினதுமான பிலிப்பி பட்டணத்துக்கு வந்து, அந்தப் பட்டணத்திலே சிலநாள் தங்கியிருந்தோம்.

13ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகே வழக்கமாய் ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த ஸ்திரீகளுக்கு உபதேசித்தோம்.

14அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள்; பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்.

15அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றபின்பு, அவள் எங்களை நோக்கி: நீங்கள் என்னைக் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று எண்ணினால், என் வீட்டிலே வந்து தங்கியிருங்கள் என்று எங்களை வருந்திக் கேட்டுக்கொண்டாள்.

16நாங்கள் ஜெபம்பண்ணுகிற இடத்துக்குப் போகையில் குறிசொல்ல ஏவுகிற ஆவியைக்கொண்டிருந்து, குறிசொல்லுகிறதினால் தன் எஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கின ஒரு பெண் எங்களுக்கு எதிர்ப்பட்டாள்.

17அவள் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து: இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள் என்று சத்தமிட்டாள்.

18இப்படி அநேகநாள் செய்து கொண்டுவந்தாள். பவுல் சினங்கொண்டு, திரும்பிப்பார்த்து: நீ இவளை விட்டுப் புறப்படும்படி இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அந்த ஆவியுடனே சொன்னான்; அந்நேரமே அது புறப்பட்டுப்போயிற்று.

19அவளுடைய எஜமான்கள் தங்கள் ஆதாயத்து நம்பிக்கை அற்றுப்போயிற்றென்று கண்டு, பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தைவெளியிலுள்ள அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டுபோனார்கள்.

20அவர்களை அதிகாரிகளிடத்தில் ஒப்புவித்து: யூதர்களாகிய இந்த மனுஷர் நம்முடைய பட்டணத்தில் கலகம்பண்ணி,

21ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவும் அநுசரிக்கவும்தகாத முறைமைகளைப் போதிக்கிறார்கள் என்றார்கள்.

22அப்பொழுது ஜனங்கள் கூட்டங்கூடி, அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள். அதிகாரிகள் அவர்கள் வஸ்திரங்களைக் கிழித்துப்போடவும், அவர்களை அடிக்கவும் சொல்லி;

23அவர்களை அநேக அடி அடித்தபின்பு, சிறைச்சாலையிலே வைத்து அவர்களைப் பத்திரமாய்க் காக்கும்படி சிறைச்சாலைக்காரனுக்குக் கட்டளையிட்டார்கள்.

24அவன் இப்படிப்பட்ட கட்டளையைப் பெற்று, அவர்களை உட்காவலறையிலே அடைத்து, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் மாட்டிவைத்தான்.

25நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

26சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று.

27சிறைச்சாலைக்காரன் நித்திரைதெளிந்து, சிறைச்சாலையின் கதவுகள் திறந்திருக்கிறதைக்கண்டு, கட்டுண்டவர்கள் ஓடிப்போனார்களென்று எண்ணி, பட்டயத்தை உருவித் தன்னைக் கொலைசெய்து கொள்ளப்போனான்.

28பவுல் மிகுந்த சத்தமிட்டு: நீ உனக்குக் கெடுதி ஒன்றுஞ்செய்துகொள்ளாதே; நாங்கள் எல்லாரும் இங்கேதான் இருக்கிறோம் என்றான்.

29அப்பொழுது அவன் தீபங்களைக் கொண்டுவரச்சொல்லி, உள்ளே ஓடி, நடுநடுங்கி, பவுலுக்கும் சீலாவுக்கும் முன்பாக விழுந்து,

30அவர்களை வெளியே அழைத்துவந்து: ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான்.

31அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி,

32அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த யாவருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள்.

33மேலும் இராத்திரியில் அந்நேரத்திலேதானே அவன் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான். அவனும் அவனுடையவர்கள் அனைவரும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள்.

34பின்பு அவன் அவர்களைத் தன் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு போஜனங்கொடுத்து, தன் வீட்டார் அனைவரோடுங்கூட தேவனிடத்தில் விசுவாசமுள்ளவனாகி மனமகிழ்ச்சியாயிருந்தான்.

35பொழுது விடிந்தபின்பு: அந்த மனுஷரை விட்டுவிடுங்கள் என்று சொல்ல அதிகாரிகள் சேவகர்களை அனுப்பினார்கள்.

36சிறைச்சாலைக்காரன் பவுலுக்கு இந்த வார்த்தைகளை அறிவித்து: உங்களை விடுதலையாக்கும்படிக்கு அதிகாரிகள் கட்டளை அனுப்பினார்கள்; ஆகையால் நீங்கள் இப்பொழுது புறப்பட்டுச் சமாதானத்துடனே போங்கள் என்றான்.

37அதற்குப் பவுல்: ரோமராகிய எங்களை அவர்கள் நியாயம்விசாரியாமல், வெளியரங்கமாய் அடித்து, சிறைச்சாலையிலே போட்டார்கள்; இப்பொழுது இரகசியமாய் எங்களை விடுதலையாக்குகிறார்களோ? அப்படியல்ல, அவர்களே வந்து, எங்களை வெளியே அழைத்து அனுப்பிவிடட்டும் என்றான்.

38சேவகர் இந்த வார்த்தைகளை அதிகாரிகளுக்கு அறிவித்தார்கள். ரோமராயிருக்கிறார்களென்று அவர்கள் கேட்டபொழுது பயந்துவந்து,

39அவர்களுடனே தயவாய்ப் பேசி, அவர்களை வெளியே அழைத்துக்கொண்டுபோய், பட்டணத்தை விட்டுப் புறப்பட்டுப்போகும்படி கேட்டுக்கொண்டார்கள்.

40அந்தப்படி அவர்கள் சிறைச்சாலையிலிருந்து புறப்பட்டு லீதியாளிடத்திற்குப்போய், சகோதரரைக் கண்டு, அவர்களுக்கு ஆறுதல் சொல்லிப் போய்விட்டார்கள்.

தனிவாசிப்பு

1யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவுடைய ராஜாவின் நாலாம் வருஷத்துக்குச் சரியான, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அரசாண்ட முதலாம் வருஷத்திலே யூதாவின் ஜனம் அனைத்தையும் குறித்து எரேமியாவுக்கு உண்டான வார்த்தை;

2அதைத் தீர்க்கதரிசியாகிய எரேமியா யூதாவின் ஜனம் அனைத்துக்கும்; எருசலேமின் குடிகள் எல்லாருக்கும் அறிவிக்கிறதற்காக அவர்களை நோக்கி:

3ஆமோனின் குமாரனாகிய யோசியாவின் பதின்மூன்றாம் வருஷம் துவக்கி இந்நாள்மட்டும் சென்ற இந்த இருபத்துமூன்று வருஷமாகக் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாயிற்று; அதை நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லிக்கொண்டுவந்தும் நீங்கள் கேளாமற்போனீர்கள்.

4கர்த்தர் உங்களிடத்திற்குத் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய சகல ஊழியக்காரரையும் ஏற்கனவே அனுப்பிக்கொண்டேயிருந்தும், நீங்கள் கேளாமலும், கேட்கும்படிக்கு உங்கள் செவிகளைச் சாயாமலும் போனீர்கள்.

5அவர்களைக்கொண்டு அவர்: உங்களில் அவனவன் தன்தன் பொல்லாதவழியையும், உங்கள் கிரியைகளின் பொல்லாப்பையும் விட்டுத் திரும்பி, கர்த்தர் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் கொடுத்த தேசத்தில் சதாகாலமும் குடியிருந்து,

6அந்நிய தேவர்களைப் பின்பற்றாமலும், அவைகளுக்கு ஆராதனைசெய்யாமலும், அவைகளைப் பணியாமலுமிருந்து, நான் உங்களுக்குத் தீமைசெய்யாதபடிக்கு உங்கள் கைகளின் செய்கைகளால் எனக்குக் கோபமுண்டாக்காமலும் இருங்கள் என்று சொல்லியனுப்பினேன்.

7நீங்களோ, உங்களுக்குத் தீமையாக உங்கள் கைகளின் செய்கைகளாலே எனக்குக் கோபமூட்டும்படிக்கு, என் சொல்லைக் கேளாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

8நீங்கள் என் வார்த்தைகளைக் கேளாமற்போனபடியினால்,

9இதோ, நான் வடக்கேயிருக்கிற சகல வம்சங்களையும், என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவையும் அழைத்தனுப்பி, அவர்களை இந்த தேசத்துக்கு விரோதமாகவும், இதின் குடிகளுக்கு விரோதமாகவும், சுற்றிலுமிருக்கிற இந்த எல்லா ஜாதிகளுக்கும் விரோதமாகவும் வரப்பண்ணி, அவைகளைச் சங்காரத்துக்கு ஒப்புக்கொடுத்து, அவைகளைப் பாழாகவும் இகழ்ச்சிக்குறியாகிய ஈசல் போடுதலாகவும், நித்திய வனாந்தரங்களாகவும் செய்வேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

10மகிழ்ச்சியின் சத்தத்தையும், சந்தோஷத்தின் சத்தத்தையும், மணவாளனின் சத்தத்தையும், மணவாட்டியின் சத்தத்தையும், ஏந்திரத்தின் சத்தத்தையும் விளக்கின் வெளிச்சத்தையும் அவர்களிலிருந்து நீங்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

11இந்த தேசமெல்லாம் வனாந்தரமும் பாழுமாகும்; இந்த ஜாதிகளோ, எழுபது வருஷமாகப் பாபிலோன் ராஜாவைச் சேவிப்பார்கள்.

12எழுபது வருஷம் நிறைவேறின பின்பு, நான் பாபிலோன் ராஜாவினிடத்திலும், அந்த ஜாதியினிடத்திலும், கல்தேயருடைய தேசத்தினிடத்திலும், அவர்களுடைய அக்கிரமத்தை விசாரித்து, அதை நித்திய பாழிடமாக்கி,

13நான் அந்த தேசத்துக்கு விரோதமாய் உரைத்த என் வார்த்தைகளையெல்லாம், எரேமியா சகல ஜாதிகளுக்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனமாய்ச் சொன்னதும், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதுமான யாவையும் அதின்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

14அநேகம் ஜாதிகளும் பெரிய ராஜாக்களும் அவர்களை அடிமைகொள்வார்கள்; நான் அவர்களுக்கு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாகவும், அவர்கள் கைகளின் செய்கைகளுக்குத்தக்கதாகவும் பதில் அளிப்பேன் என்கிறார்.

15இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் என்னை நோக்கி: நான் உன்னை அனுப்புகிற ஜாதிகள் குடித்து, நான் தங்களுக்குள் அனுப்பும் பட்டயத்தால் அவர்கள் தள்ளாடி, புத்திகெட்டுப்போகும்படிக்கு,

16இந்த உக்கிரமாகிய மதுபானத்தின் பாத்திரத்தை நீ என் கையிலிருந்து வாங்கி, அவர்கள் எல்லாருக்கும் அதிலே குடிக்கக்கொடு என்றார்.

17அப்பொழுது நான் அந்தப் பாத்திரத்தைக் கர்த்தருடைய கையிலிருந்து வாங்கி, கர்த்தர் என்னை அனுப்பின எல்லா ஜாதிகளுக்கும் குடிக்கக் கொடுத்தேன்.

18எருசலேமுக்கும் யூதாவின் பட்டணங்களுக்கும், அதின் ராஜாக்களுக்கும், அதின் பிரபுக்களுக்கும், அவர்களை இந்நாளிலிருக்கிறபடி வனாந்தரமும் பாழும் இகழ்ச்சிக்குறியாகிய ஈசல்போடுதலும் சாபமுமாக்கிப்போடும்படி குடிக்கக்கொடுத்தேன்.

19எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கும், அவன் ஊழியக்காரருக்கும், அவன் பிரபுக்களுக்கும், அவனுடைய எல்லா ஜனத்துக்கும்,

20கலந்து குடியிருக்கிற அனைவருக்கும், ஊத்ஸ் தேசத்தினுடைய எல்லா ராஜாக்களுக்கும், பெலிஸ்தருடைய தேசத்தில் இருக்கிற எல்லா ராஜாக்களுக்கும், அஸ்கலோனுக்கும், காசாவுக்கும், எக்ரோனுக்கும், அஸ்தோத்தில் மீதியானவர்களுக்கும்,

21ஏதோமுக்கும், மோவாபுக்கும், அம்மோன் புத்திரருக்கும்,

22தீருவினுடைய எல்லா ராஜாக்களுக்கும், சீதோனுடைய எல்லா ராஜாக்களுக்கும், சமுத்திரத்துக்கு அக்கரையான தீவுகளின் ராஜாக்களுக்கும்,

23தேதானுக்கும், தேமாவுக்கும், பூசுக்கும், கடையாந்தரங்களிலுள்ள அனைவருக்கும்,

24அரபிதேசத்து எல்லா ராஜாக்களுக்கும், வனாந்தரத்தில் கலந்து குடியிருக்கிறவர்களுடைய எல்லா ராஜாக்களுக்கும்,

25சிம்ரியினுடைய எல்லா ராஜாக்களுக்கும், ஏலாமினுடைய எல்லா ராஜாக்களுக்கும், மேதியாவினுடைய எல்லா ராஜாக்களுக்கும்,

26வடக்கேயிருக்கிற எல்லா ராஜாக்களுக்கும், சமீபமானவர்களும் தூரமானவர்களுமாகிய அவரவர்களுக்கும், பூமியின் மீதிலுள்ள சகல தேசத்து ராஜ்யங்களுக்கும் குடிக்கக்கொடுத்தேன்; சேசாக்கு என்கிற ராஜாவும் அவர்களுக்குப் பிற்பாடு குடிப்பான் என்றார்.

27நீங்கள் குடித்து, வெறித்து, வாந்திபண்ணி, நான் உங்களுக்குள் அனுப்பும் பட்டயத்தாலே எழுந்திராதபடிக்கு விழுங்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று நீ அவர்களுக்குச் சொல்லு.

28அவர்கள் குடிக்கிறதற்கு அந்தப் பாத்திரத்தை உன் கையில் வாங்கமாட்டோம் என்று சொல்வார்களானால், நீ அவர்களை நோக்கி: நீங்கள் குடித்துத் தீரவேண்டும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லு.

29இதோ, தீங்கைக் கட்டளையிட நான் என் நாமம் தரிக்கப்பட்ட நகரத்திலே துவக்கும்போது, நீங்கள் தண்டனைக்குத் தப்புவீர்களோ? நீங்கள் தப்புவதில்லை; நான் பூமியின் எல்லாக் குடிகளின்மேலும் பட்டயத்தை வரவழைக்கிறேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

30ஆதலால் நீ அவர்களுக்கு விரோதமாக இந்த வார்த்தைகளையெல்லாம் தீர்க்கதரிசனமாக உரைத்து, அவர்களை நோக்கி: கர்த்தர் உயரத்திலிருந்து கெர்ச்சித்து, தமது பரிசுத்த வாசஸ்தலத்திலிருந்து தம்முடைய சத்தத்தைக் காட்டி, தம்முடைய தாபரத்துக்கு விரோதமாய்க் கெர்ச்சிக்கவே கெர்ச்சித்து, ஆலையை மிதிக்கிறவர்கள் ஆர்ப்பரிப்பதுபோல் பூமியினுடைய எல்லாக் குடிகளுக்கும் விரோதமாக ஆர்ப்பரிப்பார் என்று சொல் என்றார்.

31ஆரவாரம் பூமியின் கடையாந்தரமட்டும் போய் எட்டும்; ஜாதிகளோடே கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது; மாம்சமான யாவரோடும் அவர் நியாயத்துக்குள் பிரவேசிப்பார்; துன்மார்க்கரைப் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுப்பார் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

32இதோ, ஜாதிஜாதிக்குத் தீமை பரம்பும், பூமியின் எல்லைகளிலிருந்து மகா புசல் எழும்பும்.

33அக்காலத்திலே பூமியின் ஒருமுனை துவக்கி பூமியின் மறுமுனைமட்டும் கர்த்தரால் கொலையுண்டவர்கள் கிடப்பார்கள்; அவர்கள் புலம்பப்படாமலும் சேர்க்கப்படாமலும் அடக்கம் பண்ணப்படாமலும் பூமியின்மேல் எருவாவார்கள்.

34மேய்ப்பர்களே, அலறுங்கள்; மந்தையில் பிரஸ்தாபமானவர்களே, சாம்பலில் புரண்டு கதறுங்கள்; நீங்கள் வெட்டப்படவும் சிதறடிக்கப்படவும் உங்கள் நாட்கள் நிறைவேறின; உச்சிதமான பாத்திரம்போல் விழுந்து நொறுங்குவீர்கள்.

35மேய்ப்பர்கள் ஓடிப்போகிறதற்கும், மந்தையில் பிரஸ்தாபமானவர்கள் தப்பித்துக்கொள்ளுகிறதற்கும் இடமிராது.

36தங்கள் மேய்ச்சலைக் கர்த்தர் பாழாக்கினதினிமித்தம் மேய்ப்பர்கள் கூப்பிடுகிறதும், மந்தையில் பிரஸ்தாபமானவர்கள் அலறுகிறதுமான சத்தமுண்டாகும்.

37அவர்கள் சுகித்திருந்த தாபரங்கள் கர்த்தருடைய கோபத்தின் எரிச்சலாலே சங்காரமாயின.

38அவர் பதிவிருந்து புறப்படும் சிங்கத்தைப் போலிருப்பார்; ஒடுக்குகிறவனுடைய உக்கிரத்தினாலும், அவனுடைய உக்கிரகோபத்தினாலும் அவர்கள் தேசம் பாழாயிற்றென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

1அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்கு வந்தபோது, அவர் தம்முடைய சீஷரில் இரண்டுபேரை நோக்கி:

2உங்களுக்கு எதிரேயிருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; அதில் பிரவேசித்தவுடனே, மனுஷர் ஒருவரும் ஒருக்காலும் ஏறியிராத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருக்கக் காண்பீர்கள், அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள்.

3ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று ஒருவன் உங்களிடத்தில் கேட்டால்: இது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அதை இவ்விடத்திற்கு அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்.

4அவர்கள் போய், வெளியே இருவழிச்சந்தியில் ஒரு வாசலருகே கட்டியிருந்த அந்தக் குட்டியைக் கண்டு, அதை அவிழ்த்தார்கள்.

5அப்பொழுது அங்கே நின்றவர்களில் சிலர்: நீங்கள் குட்டியை அவிழ்க்கிறது என்னவென்றார்கள்.

6இயேசு கற்பித்தபடியே அவர்களுக்கு உத்தரவு சொன்னார்கள். அப்பொழுது, அவர்களைப் போகவிட்டார்கள்.

7அவர்கள் அந்தக் குட்டியை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, அதின்மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டார்கள்; அவர் அதின்மேல் ஏறிப்போனார்.

8அநேகர் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள்.

9முன்நடப்பாரும் பின்நடப்பாரும்: ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்;

10கர்த்தரின் நாமத்தினாலே வருகிற நம்முடைய பிதாவாகிய தாவீதின் ராஜ்யம் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.

11அப்பொழுது, இயேசு எருசலேமுக்கு வந்து, தேவாலயத்தில் பிரவேசித்து, எல்லாவற்றையும் சுற்றிப்பார்த்து, சாயங்காலமானபோது, பன்னிருவரோடுங்கூடப் பெத்தானியாவுக்குப் போனார்.

12மறுநாளிலே அவர்கள் பெத்தானியாவிலிருந்து புறப்பட்டுவருகையில், அவருக்குப் பசியுண்டாயிற்று.

13அப்பொழுது இலைகளுள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலே கண்டு, அதில் ஏதாகிலும் அகப்படுமோ என்று பார்க்கவந்தார். அத்திப்பழக் காலமாயிராதபடியால், அவர் அதினிடத்தில் வந்தபோது அதில் இலைகளையல்லாமல் வேறொன்றையும் காணவில்லை.

14அப்பொழுது இயேசு அதைப்பார்த்து: இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கக்கடவன் என்றார்; அதை அவருடைய சீஷர்கள் கேட்டார்கள்.

15அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்தில் விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் துரத்திவிட்டு, காசுக்காரருடைய பலகைகளையும், புறா விற்கிறவர்களுடைய ஆசனங்களையும் கவிழ்த்து,

16ஒருவனும் தேவாலயத்தின் வழியாக யாதொரு பண்டத்தையும் கொண்டுபோகவிடாமல்:

17என்னுடைய வீடு எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்று அவர்களுக்குச் சொல்லி உபதேசித்தார்.

18அதை வேதபாரகரும் பிரதான ஆசாரியரும் கேட்டு, அவரைக் கொலைசெய்ய வகைதேடினார்கள்; ஆகிலும் ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டபடியினாலே அவருக்குப் பயந்திருந்தார்கள்.

19சாயங்காலமானபோது அவர் நகரத்திலிருந்து புறப்பட்டுப்போனார்.

20மறுநாள் காலையிலே அவர்கள் அவ்வழியாய்ப் போகும்போது, அந்த அத்திமரம் வேரோடே பட்டுப்போயிருக்கிறதைக் கண்டார்கள்.

21பேதுரு நினைவுகூர்ந்து, அவரை நோக்கி: ரபீ, இதோ, நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போயிற்று என்றான்.

22இயேசு அவர்களை நோக்கி: தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள்.

23எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

24ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்ளுவீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்.

25நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள்.

26நீங்கள் மன்னியாதிருப்பீர்களானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவும் உங்கள் தப்பிதங்களை மன்னியாதிருப்பார் என்றார்.

27அவர்கள் மறுபடியும் எருசலேமுக்கு வந்தார்கள். அவர் தேவாலயத்திலே உலாவிக்கொண்டிருக்கையில், பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் அவரிடத்தில் வந்து:

28நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இவைகளைச் செய்கிறதற்கு அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார் என்று கேட்டார்கள்.

29இயேசு பிரதியுத்தரமாக: நானும் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், நீங்கள் எனக்கு உத்தரவு சொல்லுங்கள், அப்பொழுது நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லுவேன்.

30யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ, மனுஷரால் உண்டாயிற்றோ, எனக்கு உத்தரவு சொல்லுங்கள் என்றார்.

31அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லையென்று கேட்பார்.

32மனுஷரால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், ஜனங்களுக்குப் பயப்படவேண்டியதாயிருக்கும்; எல்லாரும் யோவானை மெய்யாகத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறார்களே என்று தங்களுக்குள்ளே ஆலோசனைபண்ணி;

33இயேசுவுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது இயேசு: நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்லேன் என்றார்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com