1இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் அவர்களை நாற்பது வருஷமளவும் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுத்தார்.
2அப்பொழுது தாண் வம்சத்தானாகிய சோரா ஊரானான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பேர் மனோவா; அவன் மனைவி பிள்ளைபெறாத மலடியாயிருந்தாள்.
3கர்த்தருடைய தூதனானவர் அந்த ஸ்திரீக்குத் தரிசனமாகி, அவளை நோக்கி: இதோ, பிள்ளைபெறாத மலடியான நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்.
4ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாதபடிக்கும், தீட்டானது ஒன்றும் புசியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.
5நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படலாகாது; அந்தப் பிள்ளை பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்; அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிக்கத் தொடங்குவான் என்றார்.
6அப்பொழுது அந்த ஸ்திரீ தன் புருஷனிடத்தில் வந்து: தேவனுடைய மனுஷன் ஒருவர் என்னிடத்தில் வந்தார்; அவருடைய சாயல் தேவனுடைய தூதரின் சாயலைப்போல மகா பயங்கரமாயிருந்தது; எங்கேயிருந்து வந்தீர் என்று நான் அவரிடத்தில் கேட்கவில்லை; அவர் தம்முடைய நாமத்தை எனக்குச் சொல்லவுமில்லை.
7அவர் என்னை நோக்கி: இதோ, நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாமலும், தீட்டானது ஒன்றும் புசியாமலும் இரு; அந்தப் பிள்ளை பிறந்தது முதல் தன் மரணநாள்மட்டும் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான் என்று சொன்னார் என்றாள்.
8அப்பொழுது மனோவா கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: ஆ, என் ஆண்டவரே, நீர் அனுப்பின தேவனுடைய மனுஷன் மறுபடியும் ஒரு விசை எங்களிடத்தில் வந்து, பிறக்கப்போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்யவேண்டியதை எங்களுக்குக் கற்பிப்பாராக என்று வேண்டிக்கொண்டான்.
9தேவன் மனோவாவின் சத்தத்துக்குச் செவிகொடுத்தார்; அந்த ஸ்திரீ வயல்வெளியில் இருக்கும்போது தேவனுடைய தூதனானவர் திரும்பவும் அவளிடத்தில் வந்தார்; அப்பொழுது அவள் புருஷனாகிய மனோவா அவளோடே இருக்கவில்லை.
10ஆகையால் அந்த ஸ்திரீ சீக்கிரமாய் ஓடி, இதோ, அன்று என்னிடத்தில் வந்தவர் எனக்குத் தரிசனமானார் என்று தன் புருஷனுக்கு அறிவித்தாள்.
11அப்பொழுது மனோவா எழுந்திருந்து, தன் மனைவியின் பின்னாலே போய், அவரிடத்துக்கு வந்து: இந்த ஸ்திரீயோடே பேசினவர் நீர்தானா என்று அவரிடத்தில் கேட்டான்; அவர் நான்தான் என்றார்.
12அப்பொழுது மனோவா: நீர் சொன்ன காரியம் நிறைவேறும்போது, அந்தப் பிள்ளையை எப்படி வளர்க்கவேண்டும், அதை எப்படி நடத்தவேண்டும் என்று கேட்டான்.
13கர்த்தருடைய தூதனானவர் மனோவாவை நோக்கி: நான் ஸ்திரீயோடே சொன்ன யாவற்றிற்கும், அவள் எச்சரிக்கையாயிருந்து,
14திராட்சச்செடியிலே உண்டாகிறதொன்றும் சாப்பிடாமலும், திராட்சரசமும் மதுபானமும் குடியாமலும், தீட்டானதொன்றும் புசியாமலும், நான் அவளுக்குக் கட்டளையிட்டதையெல்லாம் கைக்கொள்ளக்கடவள் என்றார்.
15அப்பொழுது மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கி: நாங்கள் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை உமக்காகச் சமைத்துக்கொண்டுவருமட்டும் தரித்திரும் என்றான்.
16கர்த்தருடைய தூதனானவர் மனோவாவை நோக்கி: நீ என்னை இருக்கச் சொன்னாலும் நான் உன் உணவைப் புசியேன்; நீ சர்வாங்க தகனபலி இடவேண்டுமானால், அதை நீ கர்த்தருக்குச் செலுத்துவாயாக என்றார். அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறியாதிருந்தான்.
17அப்பொழுது மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கி: நீர் சொன்ன காரியம் நிறைவேறும்போது, நாங்கள் உம்மைக் கனம்பண்ணும்படி, உம்முடைய நாமம் என்ன என்று கேட்டான்.
18அதற்குக் கர்த்தருடைய தூதனானவர்: என் நாமம் என்ன என்று நீ கேட்க வேண்டியது என்ன? அது அதிசயம் என்றார்.
19மனோவா போய், வெள்ளாட்டுக்குட்டியையும், போஜனபலியையும் கொண்டுவந்து, அதைக் கன்மலையின்மேல் கர்த்தருக்குச் செலுத்தினான்; அப்பொழுது மனோவாவும் அவன் மனைவியும் பார்த்துக்கொண்டிருக்கையில், அதிசயம் விளங்கினது.
20அக்கினிஜூவாலை பலிபீடத்திலிருந்து வானத்திற்கு நேராக எழும்புகையில், கர்த்தருடைய தூதனானவர் பலிபீடத்தின் ஜூவாலையிலே ஏறிப்போனார்; அதை மனோவாவும் அவன் மனைவியும் கண்டு, தரையிலே முகங்குப்புற விழுந்தார்கள்.
21பின்பு கர்த்தருடைய தூதனானவர் மனோவாவுக்கும் அவன் மனைவிக்கும் காணப்படவில்லை; அப்பொழுது அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறிந்து,
22தன் மனைவியைப் பார்த்து: நாம் தேவனைக் கண்டோம், சாகவே சாவோம் என்றான்.
23அதற்கு அவன் மனைவி: கர்த்தர் நம்மைக் கொன்றுபோடச் சித்தமாயிருந்தால், அவர் நம்முடைய கையிலே சர்வாங்கதகனபலியையும் போஜனபலியையும் ஒப்புக்கொள்ளமாட்டார், இவைகளையெல்லாம் நமக்குக் காண்பிக்கவுமாட்டார், இவைகளை நமக்கு அறிவிக்கவுமாட்டார் என்றாள்.
24பின்பு அந்த ஸ்திரீ ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள்; அந்தப் பிள்ளை வளர்ந்தது; கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார்.
25அவன் சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவிலுள்ள தாணின் பாளயத்தில் இருக்கையில் கர்த்தருடைய ஆவியானவர் அவனை ஏவத்துவக்கினார்.
1அவர்கள் அம்பிபோலி பட்டணத்தையும் அப்பொலோனியா பட்டணத்தையும் கடந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்கு வந்தார்கள்; அங்கே யூதருக்கு ஒரு ஜெப ஆலயம் இருந்தது.
2பவுல் தன் வழக்கத்தின்படியே அவர்களிடத்தில் போய், மூன்று ஓய்வு நாட்களில் வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து அவர்களுடனே சம்பாஷித்து,
3கிறிஸ்து பாடுபடவும் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவும் வேண்டியதென்றும், நான் உங்களுக்கு அறிவிக்கிற இந்த இயேசுவே கிறிஸ்து என்றும் காண்பித்து, திருஷ்டாந்தப்படுத்தினான்.
4அவர்களில் சிலரும், பக்தியுள்ள கிரேக்கரில் திரளான ஜனங்களும்,, கனம்பொருந்திய ஸ்திரீகளில் அநேகரும் விசுவாசித்து, பவுலையும் சீலாவையும் சேர்ந்துகொண்டார்கள்.
5விசுவாசியாத யூதர்கள் வைராக்கியங்கொண்டு வீணராகிய சில பொல்லாதவர்களைச் சேர்த்துக்கொண்டு, கூட்டங்கூடி, பட்டணத்தில் அமளியுண்டாக்கி, யாசோனுடைய வீட்டை வளைந்துகொண்டு, அவர்களைப் பட்டணத்தாருக்கு முன்பாக இழுத்துக்கொண்டுவர வகைதேடினார்கள்.
6அவர்களைக் காணாமல், யாசோனையும் சில சகோதரரையும் பட்டணத்து அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டு வந்து: உலகத்தைக் கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள்.
7இவர்களை யாசோன் ஏற்றுக்கொண்டான். இவர்களெல்லாரும் இயேசு என்னும் வேறொருவனை ராஜா என்று சொல்லி, இராயனுடைய கட்டளைகளுக்கு விரோதமாகச் செய்கிறார்களென்று கூக்குரலிட்டு,
8இவைகளைக் கேட்டுக்கொண்டிருந்த ஜனங்களையும் பட்டணத்து அதிகாரிகளையும் கலங்கப்பண்ணினார்கள்.
9பின்பு அவர்கள் யாசோனிடத்திலும் மற்றவர்களிடத்திலும் ஜாமீன் வாங்கிக்கொண்டு, அவர்களை விட்டுவிட்டார்கள்.
10உடனே சகோதரர் இராத்திரிகாலத்திலே பவுலையும் சீலாவையும் பெரோயா பட்டணத்துக்கு அனுப்பிவிட்டார்கள்; அவர்கள் அங்கே சேர்ந்து, யூதருடைய ஜெப ஆலயத்திற்குப் போனார்கள்.
11அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்.
12அதனால் அவர்களில் அநேகம்பேரும் கனம்பொருந்திய கிரேக்கரில் அநேக ஸ்திரீகளும் புருஷர்களும் விசுவாசித்தார்கள்.
13பெரோயாவிலும் தேவவசனம் பவுலினால் அறிவிக்கப்படுகிறதென்று தெசலோனிக்கேயரான யூதர்கள் அறிந்தபோது, அங்கேயும் வந்து, ஜனங்களைக் கிளப்பிவிட்டார்கள்.
14உடனே சகோதரர் பவுலைச் சமுத்திரவழியாய்ப் போக அனுப்பிவிட்டார்கள். சீலாவும் தீமோத்தேயும் அங்கே தங்கியிருந்தார்கள்.
15பவுலை வழிநடத்தினவர்கள் அவனை அத்தேனே பட்டணம்வரைக்கும் அழைத்துக்கொண்டுபோய்; அங்கே சீலாவும் தீமோத்தேயும் அதிசீக்கிரமாகத் தன்னிடத்திற்கு வரும்படி அவர்களுக்குச் சொல்லக் கட்டளை பெற்றுக்கொண்டு புறப்பட்டுப்போனார்கள்.
16அத்தேனே பட்டணத்தில் பவுல் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கையில், அந்தப் பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைக் கண்டு, தன் ஆவியில் மிகுந்த வைராக்கியமடைந்து,
17ஜெப ஆலயத்தில் யூதரோடும், பக்தியுள்ளவர்களோடும், சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் தினந்தோறும் சம்பாஷணைபண்ணினான்.
18அப்பொழுது எப்பிக்கூரரும் ஸ்தோயிக்கருமான ஞானிகளில் சிலர் அவனுடனே வாக்குவாதம் பண்ணினார்கள். சிலர்: இந்த வாயாடி என்ன பேசப்போகிறான் என்றார்கள். சிலர்: இவன் அந்நிய தேவதைகளை அறிவிக்கிறவனாகக் காண்கிறது என்றார்கள். அவன் இயேசுவையும் உயிர்தெழுதலையும் அவர்களுக்குப் பிரசங்கித்தபடியினாலே அப்படிச் சொன்னார்கள்.
19அவர்கள் அவனை மார்ஸ் மேடைக்கு அழைத்துக்கொண்டுபோய்: நீ சொல்லுகிற புதிதான உபதேசம் இன்னதென்று நாங்கள் அறியலாமா?
20நூதனமான காரியங்களை எங்கள் காதுகள் கேட்கப்பண்ணுகிறாய்; அவைகளின் கருத்து இன்னதென்று அறியமனதாயிருக்கிறோம் என்றார்கள்.
21அந்த அத்தேனே பட்டணத்தாரெல்லாரும், அங்கே தங்குகிற அந்நியரும், நவமான காரியங்களைச் சொல்லுகிறதிலும் கேட்கிறதிலுமேயொழிய வேறொன்றிலும் பொழுதுபோக்குகிறதில்லை.
22அப்பொழுது பவுல் மார்ஸ் மேடையின் நடுவிலே நின்று: அத்தேனரே, எந்த விஷயத்திலும் நீங்கள் மிகுந்த தேவதாபக்தியுள்ளவர்களென்று காண்கிறேன்.
23எப்படியென்றால், நான் சுற்றித்திரிந்து, உங்கள் ஆராதனைக்குரியவைகளைக் கவனித்துப் பார்த்தபொழுது, அறியப்படாத தேவனுக்கு என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைக் கண்டேன்; நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.
24உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை.
25எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை.
26மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்;
27கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே.
28ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள்.
29நாம் தேவனுடைய சந்ததியாராயிருக்க, மனுஷருடைய சித்திரவேலையினாலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்கு தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது.
30அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.
31மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்.
32மரித்தோரின் உயிர்த்தெழுதலைக் குறித்து அவர்கள் கேட்டபொழுது, சிலர் இகழ்ந்தார்கள். சிலர்: நீ சொல்லுகிறதை இன்னொருவேளை கேட்போம் என்றார்கள்.
33இப்படியிருக்க, பவுல் அவர்களைவிட்டுப் போய்விட்டான்.
34சிலர் அவனைப் பற்றிக்கொண்டு, விசுவாசிகளானார்கள். அவர்களில் மார்ஸ் மேடையின் நியாயாதிபதிகளில் ஒருவனாகிய தியொனீசியு என்பவனும், தாமரி என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயும், இவர்களுடனே வேறு சிலரும் இருந்தார்கள்.
1யோசியாவின் குமாரனும் யூதாவின் ராஜாவுமாகிய யோயாக்கீமுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே கர்த்தரால் உண்டான வார்த்தை:
2நீ கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரத்திலே நின்றுகொண்டு, கர்த்தருடைய ஆலயத்திலே பணியவருகிற யூதாவுடைய பட்டணங்களின் குடிகள் அனைவரோடும் சொல்லும்படி நான் உனக்குக் கற்பித்த எல்லா வார்த்தைகளையும் அவர்களுக்குச் சொல்லு; ஒரு வார்த்தையையும் குறைத்துப்போடாதே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
3அவர்கள் செய்கைகளுடைய பொல்லாப்பினிமித்தம் நான் அவர்களுக்குச் செய்ய நினைக்கிற தீங்குக்கு நான் மனஸ்தாபப்படத்தக்கதாக ஒருவேளை அவர்கள் கேட்டு, அவரவர் தம்தம் பொல்லாத வழியைவிட்டுத் திரும்புவார்கள்.
4நீ அவர்களை நோக்கி: நான் உங்களிடத்துக்கு ஏற்கனவே அனுப்பிக்கொண்டிருந்தும், நீங்கள் கேளாமற்போன என் ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை நீங்கள் கேட்கும்படிக்கும்,
5நான் உங்கள் முன்வைத்த என் நியாயப்பிரமாணத்தின்படி நீங்கள் நடக்கும்படிக்கும், நீங்கள் என் சொல்லைக் கேளாமற்போனால்,
6நான் இந்த ஆலயத்தைச் சீலோவாவைப் போலாக்கி, இந்த நகரத்தைப் பூமியிலுள்ள எல்லா ஜாதிகளுக்கு முன்பாகவும் சாபமாக்கிப்போடுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
7எரேமியா இந்த வார்த்தைகளையெல்லாம் கர்த்தருடைய ஆலயத்திலே சொல்லும்போது, ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும், சகல ஜனங்களும் கேட்டார்கள்.
8சகல ஜனங்களுக்கும் சொல்லக் கர்த்தர் தனக்குக் கற்பித்தவைகளையெல்லாம் எரேமியா சொல்லி முடித்தபோது, ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் சகல ஜனங்களும் அவனைப்பிடித்து: நீ சாகவே சாகவேண்டும்.
9இந்த ஆலயம் சீலோவைப்போலாகி, இந்த நகரம் குடியில்லாமல் பாழாப்போகும் என்று, நீ கர்த்தருடைய நாமத்திலே தீர்க்கதரிசனம் சொல்வானேன் என்று சொல்லி, ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய ஆலயத்திலே எரேமியாவுக்கு விரோதமாய்க் கூடினார்கள்.
10யூதாவின் பிரபுக்கள் இந்த வர்த்தமானங்களைக்கேட்டு, ராஜாவின் வீட்டிலிருந்து கர்த்தருடைய ஆலயத்துக்குப் போய், கர்த்தருடைய புதிய வாசலில் உட்கார்ந்தார்கள்.
11அப்பொழுது ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும், பிரபுக்களையும் சகல ஜனங்களையும் நோக்கி: இந்த மனுஷன் மரண ஆக்கினைக்குப் பாத்திரன்; உங்கள் செவிகளாலே நீங்கள் கேட்டபடி, இந்த நகரத்துக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொன்னானே என்றார்கள்.
12அப்பொழுது எரேமியா எல்லாப் பிரபுக்களையும், எல்லா ஜனங்களையும் நோக்கி: நீங்கள் கேட்ட எல்லா வார்த்தைகளையும் இந்த ஆலயத்துக்கும் இந்த நகரத்துக்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லக் கர்த்தர் என்னை அனுப்பினார்.
13இப்பொழுதும் நீங்கள் உங்கள் வழிகளையும், உங்கள் கிரியைகளையும் சீர்ப்படுத்தி, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தைக் கேளுங்கள்; அப்பொழுது கர்த்தர் உங்களுக்கு விரோதமாய்ச் சொன்ன தீங்குக்கு மனஸ்தாபப்படுவார்.
14நானோவெனில், இதோ, உங்கள் கையில் இருக்கிறேன்; உங்கள் பார்வைக்கு நன்மையும் நியாயமுமாயிருக்கிறதை எனக்குச் செய்யுங்கள்.
15ஆகிலும் நீங்கள் என்னைக் கொன்றுபோட்டால், நீங்கள் குற்றமில்லாத இரத்தப்பழியை உங்கள்மேலும் இந்த நகரத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் சுமத்திக்கொள்வீர்களென்று நிச்சயமாய் அறியுங்கள்; இந்த வார்த்தைகளையெல்லாம் உங்கள் செவிகளிலே சொல்லக் கர்த்தர் மெய்யாகவே என்னை உங்களிடத்திற்கு அனுப்பினார் என்று சொன்னான்.
16அப்பொழுது பிரபுக்களும் சகல ஜனங்களும் ஆசாரியர்களையும் தீர்க்கதரிசிகளையும் நோக்கி: இந்த மனுஷன் மரண ஆக்கினைக்குப் பாத்திரனல்ல; நம்முடைய தேவனாகிய கர்த்தரின் நாமத்திலே நம்முடனே பேசினான் என்றார்கள்.
17தேசத்திலே மூப்பானவர்களில் சிலர் எழும்பி, சபையாகிய ஜனங்களை நோக்கி:
18யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களில் மொரேசா ஊரானாகிய மீகா தீர்க்கதரிசனஞ்சொல்லி, யூதாவின் சகல ஜனங்களையும் பார்த்து: சீயோன் வயல்வெளியாக உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாய்ப்போகும்; இந்த ஆலயத்தின் பர்வதம் காட்டிலுள்ள மேடுகளாய்ப்போகும் என்று சேனைகளின் கர்த்தர் உரைத்தார் என்று சொன்னான்.
19அவனை யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவும் மற்ற யூதர்களும் சேர்ந்து கொன்றுபோட்டார்களா? அவன் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தரின் முகத்தை நோக்கிக் கெஞ்சினானல்லவா? அப்பொழுது கர்த்தர் அவர்களுக்கு விரோதமாகச் சொல்லியிருந்த தீங்குக்கு மனஸ்தாபப்பட்டார்; இப்போதும், நாம் நம்முடைய ஆத்துமாவுக்கு விரோதமாக மகாபொல்லாப்பை வரப்பண்ணுகிறவர்களாயிருக்கிறோமே.
20கீரியாத்யாரீம் ஊரானாகிய செமாயாவின் குமாரன் உரியா என்னும் ஒரு மனுஷனும் கர்த்தருடைய நாமத்திலே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவனாயிருந்தான்; அவன் எரேமியாவின் வார்த்தைகளுக்குச் சரியாக இந்த நகரத்துக்கும் இந்த தேசத்துக்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொன்னான்.
21யோயாக்கீம் ராஜாவும் அவனுடைய சகல பராக்கிரமசாலிகளும் பிரபுக்களும் அவன் வார்த்தைகளைக் கேட்டபோது, ராஜா அவனைக் கொன்றுபோடும்படி எத்தனித்தான்; அதை உரியா கேட்டு, பயந்து, ஓடிப்போய், எகிப்திலே சேர்ந்தான்.
22அப்பொழுது யோயாக்கீம் ராஜா அக்போரின் குமாரனாகிய எல்நாத்தானையும் அவனோடேகூட வேறே சிலரையும் எகிப்துவரைக்கும் அனுப்பினான்.
23இவர்கள் உரியாவை எகிப்திலிருந்து கொண்டுவந்து, அவனை யோயாக்கீம் ராஜாவினிடத்தில் விட்டார்கள்; அவன் பட்டயத்தாலே அவனை வெட்டி, அவன் உடலை நீச ஜனங்களின் பிரேதக்குழிகளிடத்திலே எறிந்துவிட்டான் என்றார்கள்.
24ஆகிலும் எரேமியாவைக் கொல்ல ஜனங்களின் கையில் ஒப்புக்கொடாதபடி, சாப்பானுடைய குமாரனாகிய அகீக்காம் அவனுக்குச் சகாயமாயிருந்தான்.
1பின்பு அவர் உவமைகளாய் அவர்களுக்குச் சொல்லத்தொடங்கினதாவது: ஒரு மனுஷன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, இரசத்தொட்டியை உண்டுபண்ணி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு, புறத்தேசத்துக்குப் போயிருந்தான்.
2தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்துக் கனிகளில் தன் பாகத்தை வாங்கிக்கொண்டுவரும்படி, பருவகாலத்திலே அவர்களிடத்தில் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான்.
3அவர்கள் அவனைப் பிடித்து, அடித்து, வெறுமையாய் அனுப்பிவிட்டார்கள்.
4பின்பு வேறொரு ஊழியக்காரனை அவர்களிடத்தில் அனுப்பினான்; அவர்கள் அவன்மேல் கல்லெறிந்து, தலையிலே காயப்படுத்தி, அவமானப்படுத்தி, அனுப்பிவிட்டார்கள்.
5மறுபடியும் வேறொருவனை அனுப்பினான்; அவனை அவர்கள் கொலைசெய்தார்கள். வேறு அநேகரையும் அனுப்பினான்; அவர்களில் சிலரை அடித்து, சிலரைக் கொன்றுபோட்டார்கள்.
6அவனுக்குப் பிரியமான ஒரே குமாரன் இருந்தான்; என் குமாரனுக்கு அஞ்சுவார்களென்று சொல்லி, அவனையும் கடைசியிலே அவர்களிடத்தில் அனுப்பினான்.
7தோட்டக்காரரோ: இவன் சுதந்தரவாளி, இவனைக் கொலைசெய்வோம் வாருங்கள்; அப்பொழுது சுதந்தரம் நம்முடையதாகும் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு;
8அவனைப் பிடித்துக் கொலைசெய்து, திராட்சத்தோட்டத்துக்குப் புறம்பே போட்டுவிட்டார்கள்.
9அப்படியிருக்க, திராட்சத்தோட்டத்துக்கு எஜமான் என்ன செய்வான்? அவன் வந்து அந்தத் தோட்டக்காரரைச் சங்கரித்து, திராட்சத்தோட்டத்தை மற்றவர்களுக்கு ஒப்புக்கொடுப்பான் அல்லவா?
10வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று;
11அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று எழுதியிருக்கிற வாக்கியத்தை நீங்கள் வாசிக்கவில்லையா என்றார்.
12இந்த உவமையைத் தங்களைக்குறித்துச் சொன்னாரென்று அவர்கள் அறிந்து, அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆனாலும் ஜனத்துக்குப் பயந்து, அவரை விட்டுப் போய்விட்டார்கள்.
13அவர்கள், பேச்சிலே அவரை அகப்படுத்தும்படிக்கு, பரிசேயரிலும் ஏரோதியரிலும் சிலரை அவரிடத்தில் அனுப்பினார்கள்.
14அவர்கள் வந்து: போதகரே, நீர் சத்தியமுள்ளவரென்றும், எவனைக்குறித்தும் உமக்குக் கவலையில்லையென்றும் அறிந்திருக்கிறோம், நீர் முகதாட்சிணியம் இல்லாதவராய் தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறீர், இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ அல்லவோ? நாம் கொடுக்கலாமோ, கொடுக்கக்கூடாதோ? என்று கேட்டார்கள்.
15அவர்களுடைய மாயத்தை அவர் அறிந்து: நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? நான் பார்க்கும்படிக்கு ஒரு பணத்தை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.
16அவர்கள் அதைக் கொண்டுவந்தார்கள். அப்பொழுது அவர்: இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார்; இராயனுடையது என்றார்கள்.
17அதற்கு இயேசு: இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். அவர்கள் அவரைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
18உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிற சதுசேயர் அவரிடத்தில் வந்து:
19போதகரே, ஒருவனுடைய சகோதரன் சந்தானமில்லாமல் தன் மனைவியை விட்டு இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம்பண்ணி, தன் சகோதனுக்குச் சந்தானம் உண்டாக்கவேண்டுமென்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே.
20இப்படியிருக்க, ஏழுபேர் சகோதரர் இருந்தார்கள்; மூத்தவன் ஒரு பெண்ணை விவாகம்பண்ணி, சந்தானமில்லாமல் இறந்துபோனான்.
21இரண்டாம் சகோதரன் அவளை விவாகம்பண்ணி, அவனும் சந்தானமில்லாமல் இறந்துபோனான். மூன்றாம் சகோதரனும் அப்படியேயானான்.
22ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணி, சந்தானமில்லாமல் இறந்துபோனார்கள். எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள்.
23ஆகையால், உயிர்த்தெழுதலில், அவர்கள் எழுந்திருக்கும்போது, அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? ஏழுபேரும் அவளை மனைவியாகக் கொண்டிருந்தார்களே என்று கேட்டார்கள்.
24இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாததினாலல்லவா தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்?
25மரித்தோர் உயிரோடெழுந்திருக்கும்போது கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை. அவர்கள் பரலோகத்தில் இருக்கிற தேவதூதரைப்போலிருப்பார்கள்.
26மரித்தோர் எழுந்திருப்பதைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாய் இருக்கிறேன் என்று, தேவன் முட்செடியைக்குறித்துச் சொல்லிய இடத்தில், மோசேயின் ஆகமத்தில் அவனுக்குச் சொன்னதை, நீங்கள் வாசிக்கவில்லையா?
27அவர் மரித்தோருக்கு தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்கு தேவனாயிருக்கிறார்; ஆகையால் நீங்கள் மிகவும் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள் என்றார்.
28வேதபாரகரில் ஒருவன் அவர்கள் தர்க்கம்பண்ணுகிறதைக்கேட்டு, அவர்களுக்கு நன்றாய் உத்தரவு சொன்னாரென்று அறிந்து, அவரிடத்தில் வந்து: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்று கேட்டான்.
29இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
30உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை.
31இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார்.
32அதற்கு வேதபாரகன்: சரிதான், போதகரே, நீர் சொன்னது சத்தியம்; ஒரே தேவன் உண்டு, அவரைத்தவிர வேறொரு தேவன் இல்லை.
33முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழுப் பலத்தோடும் அவரிடத்தில் அன்புகூருகிறதும், தன்னிடத்தில் அன்புகூருகிறதுபோல் பிறனிடத்தில் அன்புகூருகிறதுமே சர்வாங்க தகனம் முதலிய பலிகளைப் பார்க்கிலும் முக்கியமாயிருக்கிறது என்றான்.
34அவன் விவேகமாய் உத்தரவுசொன்னதை இயேசு கண்டு: நீ தேவனுடைய ராஜ்யத்துக்குத் தூரமானவனல்ல என்றார். அதன்பின்பு ஒருவரும் அவரிடத்தில் யாதொரு கேள்வியுங்கேட்கத் துணியவில்லை.
35இயேசு தேவாலயத்திலே உபதேசம்பண்ணுகையில், அவர்: கிறிஸ்து தாவீதின் குமாரனென்று வேதபாரகர் எப்படிச் சொல்லுகிறார்கள்?
36நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று தாவீது பரிசுத்த ஆவியினாலே சொல்லியிருக்கிறானே.
37தாவீதுதானே அவரை ஆண்டவரென்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார். அநேக ஜனங்கள் அவருடைய உபதேசத்தை விருப்பத்தோடே கேட்டார்கள்.
38பின்னும் அவர் உபதேசம்பண்ணுகையில் அவர்களை நோக்கி: நீண்ட அங்கிகளைத் தரித்துக்கொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வந்தனங்களை அடையவும்,
39ஜெப ஆலயங்களில் முதன்மையான ஆசனங்களில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி,
40விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிற வேதபாரகரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் அதிக ஆக்கினையை அடைவார்கள் என்றார்.
41இயேசு காணிக்கைப்பெட்டிக்கு எதிராக உட்கார்ந்து, ஜனங்கள் காணிக்கைப் பெட்டியில் பணம் போடுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்; ஐசுவரியவான்கள் அநேகர் அதிகமாய்ப் போட்டார்கள்.
42ஏழையான ஒரு விதவையும் வந்து, ஒரு துட்டுக்குச் சரியான இரண்டுகாசைப் போட்டாள்.
43அப்பொழுது அவர் தம்முடைய சீஷரை அழைத்து, காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்றெல்லாரைப்பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்;
44அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துப் போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com