‹ முகப்புமுழுத் திட்டம்

ஜூலை 31 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்ஜூலை 31அடுத்த நாள் ›
குடும்பம்

நியாயாதிபதிகள் 14

முழு அதிகாரம் ›

1சிம்சோன் திம்னாத்துக்குப் போய், திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டு,

2திரும்ப வந்து, தன் தாயையும் தகப்பனையும் நோக்கி: திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டேன்; அவளை எனக்குக் கொள்ளவேண்டும் என்றான்.

3அப்பொழுது அவன் தாயும் அவன் தகப்பனும் அவனை நோக்கி: நீ போய், விருத்தசேதனமில்லாத பெலிஸ்தரிடத்தில் ஒரு பெண்ணைக் கொள்ளவேண்டியதென்ன? உன் சகோதரரின் குமாரத்திகளிலும், எங்கள் ஜனமனைத்திலும் பெண் இல்லையா என்றார்கள். சிம்சோன் தன் தகப்பனை நோக்கி: அவள் என் கண்ணுக்குப் பிரியமானவள், அவளையே எனக்குக் கொள்ளவேண்டும் என்றான்.

4அவன் பெலிஸ்தரிடத்தில் குற்றம் பிடிக்க முகாந்தரம் உண்டாகும்படி, இது கர்த்தரின் செயல் என்று அவன் தாயும் தகப்பனும் அறியாதிருந்தார்கள்: அக்காலத்திலே பெலிஸ்தர் இஸ்ரவேலை ஆண்டார்கள்.

5அப்படியே சிம்சோனும் அவன் தாயும் தகப்பனும் திம்னாத்துக்குப் போகப் புறப்பட்டார்கள்; அவர்கள் திம்னாத் ஊர் திராட்சத்தோட்டங்கள் மட்டும் வந்தபோது, இதோ, கெர்ச்சிக்கிற பாலசிங்கம் ஒன்று அவனுக்கு எதிராக வந்தது.

6அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன் தன் கையில் ஒன்றும் இல்லாதிருந்தும், அதை ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப்போடுகிறதுபோல் கிழித்துப்போட்டான்; ஆனாலும் தான் செய்ததை அவன் தன் தாய் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை.

7அவன் போய் அந்தப் பெண்ணோடே பேசினான்; அவள் சிம்சோனின் கண்ணுக்குப் பிரியமாயிருந்தாள்.

8சில நாளைக்குப்பின்பு, அவன் அவளை விவாகம்பண்ணத் திரும்பிவந்து, சிங்கத்தின் உடலைப் பார்க்கிறதற்கு வழிவிலகிப்போனான்; இதோ, சிங்கத்தின் உடலுக்குள்ளே தேனீக்கூட்டமும் தேனும் இருந்தது.

9அவன் அதைத் தன் கைகளில் எடுத்து, சாப்பிட்டுக்கொண்டே நடந்து, தன் தாய்தகப்பனிடத்தில் வந்து, அவர்களுக்கும் கொடுத்தான்; அவர்களும் சாப்பிட்டார்கள்; ஆனாலும் தான் அந்தத் தேனைச் சிங்கத்தின் உடலிலே எடுத்ததை அவர்களுக்கு அறிவிக்கவில்லை.

10அவன் தகப்பன் அந்தப் பெண் இருக்கும் இடத்தில் போனபோது, சிம்சோன் அங்கே விருந்துசெய்தான்; வாலிபர் அப்படிச் செய்வது வழக்கம்.

11அவர்கள் அவனைக் கண்டபோது, அவனோடேகூட இருக்கும்படி முப்பது தோழரை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்.

12சிம்சோன் அவர்களை நோக்கி: ஒரு விடுகதையை உங்களுக்குச் சொல்லுகிறேன்; அதை நீங்கள் விருந்துண்கிற ஏழுநாளைக்குள்ளே கண்டுபிடித்து எனக்கு விடுவித்தால், நான் உங்களுக்கு முப்பது துப்பட்டிகளையும் முப்பது மாற்று வஸ்திரங்களையும் கொடுப்பேன்.

13அதை எனக்கு விடுவிக்காதேபோனால், நீங்கள் எனக்கு முப்பது துப்பட்டிகளையும் முப்பது மாற்று வஸ்திரங்களையும் கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு அவர்கள்: உன் விடுகதையைச் சொல்லு; நாங்கள் அதைக் கேட்கட்டும் என்றார்கள்.

14அப்பொழுது அவன்: பட்சிக்கிறவனிடத்திலிருந்து பட்சணமும், பலவானிடத்திலிருந்து மதுரமும் வந்தது என்றான்; அந்த விடுகதை அவர்களால் மூன்று நாள்மட்டும் விடுவிக்கக்கூடாதே போயிற்று.

15ஏழாம்நாளிலே அவர்கள் சிம்சோனின் பெண்சாதியைப் பார்த்து: உன் புருஷன் அந்த விடுகதையை எங்களுக்கு விடுவிக்கும்படிக்கு நீ அவனை நயம்பண்ணு; இல்லாவிட்டால் நாங்கள் உன்னையும் உன் தகப்பன் வீட்டையும் அக்கினியால் சுட்டெரித்துப்போடுவோம்; எங்களுக்குள்ளவைகளைப் பறித்துக்கொள்ளவா எங்களை அழைத்தீர்கள் என்றார்கள்.

16அப்பொழுது சிம்சோனின் பெண்சாதி அவனுக்கு முன்பாக அழுது, நீ என்னை நேசியாமல் என்னைப் பகைக்கிறாய், என் ஜனங்களுக்கு ஒரு விடுகதையைச் சொன்னாய், அதை எனக்காவது விடுவிக்கவில்லையே என்றாள்; அதற்கு அவன்: இதோ, நான் என் தாய்தகப்பனுக்கும் அதை விடுவிக்கவில்லையே, உனக்கு அதை விடுவிப்பேனோ என்றான்.

17விருந்துண்கிற ஏழுநாளும் அவள் அவன் முன்பாக அழுதுகொண்டே இருந்தாள்; ஏழாம் நாளிலே அவள் அவனை அலட்டிக்கொண்டிருந்தபடியால், அதை அவளுக்கு விடுவித்தான்; அப்பொழுது அவள் தன் ஜனங்களுக்கு அந்த விடுகதையை விடுவித்தாள்.

18ஆகையால் ஏழாம் நாளிலே பொழுது போகுமுன்னே, அந்த ஊர் மனுஷர் அவனை நோக்கி: தேனைப்பார்க்கிலும் மதுரமானது என்ன, சிங்கத்தைப்பார்க்கிலும் பலமானதும் என்ன என்றார்கள்; அதற்கு அவன்: நீங்கள் என் கிடாரியால் உழாதிருந்தீர்களானால், என் விடுகதையைக் கண்டுபிடிப்பதில்லை என்றான்.

19கர்த்தருடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால், அவன் அஸ்கலோனுக்குப் போய், அவ்வூராரில் முப்பதுபேரைக் கொன்று, அவர்களுடைய வஸ்திரங்களை உரிந்துகொண்டுவந்து, விடுகதையை விடுவித்தவர்களுக்கு அந்த மாற்று வஸ்திரங்களைக் கொடுத்து, கோபம் மூண்டவனாய்ப் புறப்பட்டு, தன் தகப்பன் வீட்டுக்குப் போய்விட்டான்.

20சிம்சோனின் பெண்சாதியோவென்றால், அவனுடைய தோழரில் அவனோடே சிநேகமாயிருந்த ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாள்.

அப்போஸ்தலர் 18

முழு அதிகாரம் ›

1அதன்பின்பு பவுல் அத்தேனே பட்டணத்தை விட்டு, கொரிந்து பட்டணத்துக்கு வந்து;

2யூதரெல்லாரும் ரோமாபுரியை விட்டுப் போகும்படி கிலவுதியுராயன் கட்டளையிட்டபடியினாலே, இத்தாலியாவிலிருந்து புதிதாய் வந்திருந்த பொந்து தேசத்தானாகிய ஆக்கில்லா என்னும் நாமமுள்ள ஒரு யூதனையும் அவன் மனைவியாகிய பிரிஸ்கில்லாளையும் அங்கே கண்டு, அவர்களிடத்திற்குப் போனான்.

3அவர்கள் கூடாரம்பண்ணுகிற தொழிலாளிகளாயிருந்தார்கள்; தானும் அந்தத் தொழில் செய்கிறவனானபடியினாலே அவர்களிடத்தில் தங்கி, வேலைசெய்துகொண்டுவந்தான்.

4ஓய்வு நாள்தோறும் இவன் ஜெப ஆலயத்திலே சம்பாஷணைபண்ணி, யூதருக்கும் கிரேக்கருக்கும் புத்தி சொன்னான்.

5மக்கெதோனியாவிலிருந்து சீலாவும் தீமோத்தேயும் வந்தபோது, பவுல் ஆவியில் வைராக்கியங்கொண்டு, இயேசுவே கிறிஸ்து என்று யூதருக்குத் திருஷ்டாந்தப்படுத்தினான்.

6அவர்கள் எதிர்த்துநின்று தூஷித்தபோது, அவன் தன் வஸ்திரங்களை உதறி: உங்கள் இரத்தப்பழி உங்கள் தலையின்மேல் இருக்கும்; நான் சுத்தமாயிருக்கிறேன்; இதுமுதல் புறஜாதியாரிடத்திற்குப் போகிறேனென்று அவர்களுடனே சொல்லி,

7அவ்விடத்தைவிட்டு, தேவனை வணங்குகிறவனாகிய யுஸ்து என்னும் பேருள்ள ஒருவனுடைய வீட்டிற்கு வந்தான்; அவன் வீடு ஜெப ஆலயத்திற்கு அடுத்ததாயிருந்தது.

8ஜெப ஆலயத்தலைவனாகிய கிறிஸ்பு என்பவன் தன் வீட்டார் அனைவரோடும் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவனானான். கொரிந்தியரில் அநேகரும் சுவிசேஷத்தைக் கேட்டு, விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றார்கள்.

9இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி: நீ பயப்படாமல் பேசு, மவுனமாயிராதே;

10நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை; இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார்.

11அவன் ஒரு வருஷமும் ஆறு மாதமும் அங்கே தங்கி, தேவவசனத்தை அவர்களுக்குள்ளே உபதேசம்பண்ணிக்கொண்டுவந்தான்.

12கல்லியோன் என்பவன் அகாயா நாட்டிற்கு அதிபதியானபோது, யூதர்கள் ஒருமனப்பட்டு, பவுலுக்கு விரோதமாய் எழும்பி, அவனை நியாயாசனத்துக்கு முன்பாகக் கொண்டுபோய்:

13இவன் வேதப்பிரமாணத்துக்கு விகற்பமாய்த் தேவனைச் சேவிக்கும்படி மனுஷருக்குப் போதிக்கிறான் என்றார்கள்.

14பவுல் பேசுவதற்கு எத்தனப்படுகையில், கல்லியோன் யூதரை நோக்கி: யூதர்களே, இது ஒரு அநியாயமாய், அல்லது பொல்லாத நடக்கையாயிருக்குமேயானால் நான் உங்களுக்குப் பொறுமையாய்ச் செவிகொடுப்பது நியாயமாயிருக்கும்.

15இது சொற்களுக்கும், நாமங்களுக்கும், உங்கள் வேதத்துக்கும் அடுத்த தர்க்கமானபடியினாலே, இப்படிப்பட்டவைகளைக்குறித்து, விசாரணைசெய்ய எனக்கு மனதில்லை, நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி,

16அவர்களை நியாயாசனத்தினின்று துரத்திவிட்டான்.

17அப்பொழுது கிரேக்கரெல்லாரும் ஜெப ஆலயத்தலைவனாகிய சொஸ்தேனேயைப் பிடித்து, நியாயாசனத்துக்கு முன்பாக அடித்தார்கள். இவைகளில் ஒன்றையுங்குறித்துக் கல்லியோன் கவலைப்படவில்லை.

18பவுல் அநேகநாள் அங்கே தரித்திருந்தபின்பு, சகோதரரிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, தனக்கு ஒரு பிரார்த்தனை உண்டாயிருந்தபடியினால் கெங்கிரேயா பட்டணத்தில் தலைச்சவரம் பண்ணிக்கொண்டு, சீரியா தேசத்துக்குப் போகக் கப்பல் ஏறினான். பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் அவனுடனே கூடப்போனார்கள்.

19அவன் எபேசு பட்டணத்துக்கு வந்தபோது, அங்கே அவர்களை விட்டு நீங்கி, ஜெப ஆலயத்தில் பிரவேசித்து, யூதருடனே சம்பாஷணைபண்ணினான்.

20அவன் இன்னுஞ் சிலகாலம் தங்களுடனே இருக்கவேண்டுமென்று அவர்கள் கேட்டுக்கொண்டபோது அவன் சம்மதியாமல்,,

21வருகிற பண்டிகையிலே எப்படியாயினும் நான் எருசலேமில் இருக்கவேண்டும், தேவனுக்குச் சித்தமானால் திரும்பி உங்களிடத்திற்கு வருவேனென்று சொல்லி, அவர்களிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கப்பல் ஏறி, எபேசுவை விட்டுப் புறப்பட்டு,

22செசரியா பட்டணத்துக்கு வந்து, எருசலேமுக்குப் போய், சபையைச் சந்தித்து, அந்தியோகியாவுக்குப் போனான்.

23அங்கே சிலகாலம் சஞ்சரித்தபின்பு, புறப்பட்டு, கிரமமாய்க் கலாத்தியா நாட்டிலேயும் பிரிகியா நாட்டிலேயும் சுற்றித்திரிந்து, சீஷரெல்லாரையும் திடப்படுத்தினான்.

24அப்பொழுது அலெக்சந்திரியா பட்டணத்தில் பிறந்தவனும் சாதுரியவானும் வேதாகமங்களில் வல்லவனுமான அப்பொல்லோ என்னும் பேர்கொண்ட ஒரு யூதன் எபேசு பட்டணத்துக்கு வந்தான்.

25அவன் கர்த்தருடைய மார்க்கத்திலே உபதேசிக்கப்பட்டு, யோவான் கொடுத்த ஸ்நானத்தைமாத்திரம் அறிந்தவனாயிருந்து, ஆவியில் அனலுள்ளவனாய்க் கர்த்தருக்கு அடுத்தவைகளைத் திட்டமாய்ப் போதகம் பண்ணிக்கொண்டுவந்தான்.

26அவன் ஜெப ஆலயத்தில் தைரியமாய்ப் பேசத்தொடங்கினபோது, ஆக்கில்லாவும், பிரிஸ்கில்லாளும் அவன் பேசுகிறதைக் கேட்டு, அவனைச் சேர்த்துக்கொண்டு, தேவனுடைய மார்க்கத்தை அதிக திட்டமாய் அவனுக்கு விவரித்துக் காண்பித்தார்கள்.

27பின்பு அவன் அகாயா நாட்டிற்குப் போகவேண்டுமென்றிருக்கையில், சீஷர்கள் அவனை ஏற்றுக்கொள்ளும்படி சகோதரர் அவர்களுக்கு எழுதினார்கள்.

28அவன் அங்கே வந்தபின்பு வெளியரங்கமாக யூதர்களுடனே பலமாய்த் தர்க்கம்பண்ணி, இயேசுவே கிறிஸ்து என்று வேதவாக்கியங்களைக் கொண்டு திருஷ்டாந்தப்படுத்தினபடியால், கிருபையினாலே விசுவாசிகளானவர்களுக்கு மிகவும் உதவியாயிருந்தான்.

தனிவாசிப்பு

1யோசியாவின் குமாரனும் யூதாவின் ராஜாவுமாகிய யோயாக்கீமுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை:

2கர்த்தர் என்னை நோக்கி: நீ உனக்குக் கயிறுகளையும் நுகங்களையும் உண்டுபண்ணி, அவைகளை உன் கழுத்திலே பூட்டிக்கொண்டு,

3அவைகளை எருசலேமுக்குச் சிதேக்கியா ராஜாவினிடத்தில் வரும் ஸ்தானாபதிகள் கையிலே ஏதோமின் ராஜாவுக்கும், மோவாபின் ராஜாவுக்கும், அம்மோன் புத்திரரின் ராஜாவுக்கும், தீருவின் ராஜாவுக்கும், சீதோனின் ராஜாவுக்கும் அனுப்பி,

4அவர்கள் தங்கள் எஜமான்களுக்குச் சொல்லும்படிக் கற்பிக்கவேண்டுமென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்,

5நான் பூமியையும் மனுஷனையும் பூமியின்மேலுள்ள மிருகஜீவன்களையும் என் மகா பலத்தினாலும் ஓங்கிய என் புயத்தினாலும் உண்டாக்கினேன்; எனக்கு இஷ்டமானவனுக்கு அதைக் கொடுக்கிறேன்.

6இப்பொழுதும் நான் இந்த தேசங்களையெல்லாம் என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவின் கையிலே கொடுத்தேன்; அவனுக்கு ஊழியஞ்செய்யும்படி வெளியின் மிருகஜீவன்களையும் கொடுத்தேன்.

7அவனுடைய தேசத்துக்குக் காலம் வருகிறவரையில் சகல ஜாதிகளும் அவனையும் அவனுடைய புத்திரபெளத்திரரையும் சேவிப்பார்கள்; அதின்பின்பு அநேகம் ஜாதிகளும் பெரிய ராஜாக்களும் அவனை அடிமைகொள்வார்கள்.

8எந்த ஜாதியாவது, எந்த ராஜ்யமாவது பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்பவனைச் சேவியாமலும், தன் கழுத்தைப் பாபிலோன் ராஜாவின் நுகத்துக்குக் கீழ்ப்படுத்தாமலும்போனால், அந்த ஜாதியை நான் அவன் கையாலே நிர்மூலமாக்குமளவும், பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் தண்டிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

9பாபிலோன் ராஜாவை நீங்கள் சேவிப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிற உங்கள் தீர்க்கதரிசிகளுக்கும், உங்கள் குறிகாரருக்கும், உங்கள் சொப்பனக்காரருக்கும், உங்கள் நாள்பார்க்கிறவர்களுக்கும், உங்கள் சூனியக்காரருக்கும் நீங்கள் செவிகொடாதிருங்கள்.

10நான் உங்களை உங்கள் தேசத்திலிருந்து தூரப்படுத்துகிறதற்கும், உங்களைத் துரத்திவிடுகிறதற்கும், நீங்கள் அழிகிறதற்குமாக அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்.

11ஆனாலும் எந்த ஜாதி தன் கழுத்தை பாபிலோன் ராஜாவின் நுகத்துக்குக் கீழ்ப்படுத்தி, அவனைச் சேவிக்குமோ, அந்த ஜாதியைத் தன் தேசத்தைப் பயிரிட்டு, அதிலே குடியிருந்து தாபரிக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

12இந்த எல்லா வார்த்தைகளின்படியே நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவோடு பேசி: உங்கள் கழுத்தை பாபிலோன் ராஜாவின் நுகத்துக்குக் கீழ்ப்படுத்தி, அவனையும் அவன் ஜனத்தையும் சேவியுங்கள்; அப்பொழுது பிழைப்பீர்கள்.

13பாபிலோன் ராஜாவைச் சேவியாமற்போகிற ஜாதிக்கு விரோதமாகக் கர்த்தர் சொன்னதின்படியே, நீயும் உன் ஜனமும் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் சாவானேன்?

14நீங்கள் பாபிலோன் ராஜாவைச் சேவிப்பதில்லையென்று உங்களுடனே சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்.

15நான் அவர்களை அனுப்பினதில்லை; நான் உங்களைத் துரத்திவிடுகிறதற்கும், நீங்களும் உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளும் அழிந்துபோகிறதற்கும் அல்லவோ இவர்கள் என் நாமத்தைச் சொல்லி, பொய்யான தீர்க்கதரிசனம் உரைக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றேன்.

16மேலும் நான் ஆசாரியரையும் இந்த எல்லா ஜனங்களையும் நோக்கி: இதோ, கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகள் இப்பொழுது சீக்கிரத்திலே பாபிலோனிலிருந்து திரும்பக்கொண்டுவரப்படுமென்று, உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற உங்களுடைய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்.

17அவர்களுக்குச் செவிகொடாதிருங்கள்; பாபிலோன் ராஜாவைச் சேவியுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; இந்த நகரம் பாழாய்ப்போகவேண்டியதென்ன?

18அல்லது அவர்கள் தீர்க்கதரிசிகளாயிருந்து, அவர்களிடத்திலே கர்த்தருடைய வார்த்தை இருந்தால், கர்த்தருடைய ஆலயத்திலும், யூதா ராஜாவின் அரமனையிலும், எருசலேமிலும் மீதியான பணிமுட்டுகள் பாபிலோனுக்குப் போகாதபடிக்கு அவர்கள் சேனைகளின் கர்த்தரை நோக்கி மன்றாடட்டுமே.

19பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யோயாக்கீமின் குமாரனாகிய எகொனியா என்னும் யூதாவின் ராஜாவையும், யூதாவிலும் எருசலேமிலிருந்த பெரியோர் அனைவரையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோகையில்,

20எடுக்காமல்விட்ட சகல தூண்களையும், கடல்தொட்டியையும், ஆதாரங்களையும், இந்த நகரத்தில் மீதியான மற்ற பணிமுட்டுகளையுங்குறித்துச் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்,

21கர்த்தருடைய ஆலயத்திலும், யூதா ராஜாவின் அரமனையிலும், எருசலேமிலும் மீதியான அந்தப் பணிமுட்டுகள் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படுமென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

22நான் அவைகளை விசாரிக்கும் நாள்வரைக்கும் அவைகள் அங்கே இருக்கும்; பின்பு அவைகளைத் திரும்ப இந்த ஸ்தலத்திற்குக் கொண்டுவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றேன்.

1அவர் தேவாலயத்தை விட்டுப் புறப்படும்போது, அவருடைய சீஷர்களில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, இதோ, இந்தக் கல்லுகள் எப்படிப்பட்டது! இந்தக் கட்டடங்கள் எப்படிப்பட்டது! பாரும் என்றான்.

2இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இந்தப் பெரிய கட்டடங்களைக் காண்கிறாயே, ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்றார்.

3பின்பு, அவர் தேவாலயத்துக்கு எதிராக ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், பேதுருவும் யாக்கோபும் யோவானும் அந்திரேயாவும் அவரிடத்தில் தனித்துவந்து:

4இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? இவைகளெல்லாம் நிறைவேறுங்காலத்துக்கு அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள்.

5இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

6ஏனெனில் அநேகர் வந்து, என் நாமத்தைக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.

7யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படும்போது கலங்காதேயுங்கள்; இவைகள் சம்பவிக்கவேண்டியதே. ஆனாலும், முடிவு உடனே வராது.

8ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்; பஞ்சங்களும் கலகங்களும் உண்டாகும்; இவைகள் வேதனைகளுக்கு ஆரம்பம்.

9நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்கள், நீங்கள் ஜெபஆலயங்களில் அடிக்கப்படுவீர்கள்; என்னிமித்தம் தேசாதிபதிகளுக்கும் ராஜாக்களுக்கும் சாட்சியாக அவர்களுக்குமுன்பாக நிறுத்தப்படுவீர்கள்.

10சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் முந்திப் பிரசங்கிக்கப்படவேண்டும்.

11அவர்கள் உங்களைக் கொண்டுபோய் ஒப்புக்கொடுக்கும்போது, நீங்கள் என்ன பேசுவோமென்று முன்னதாகக் கவலைப்படாமலும் சிந்தியாமலுமிருங்கள்; அந்நாழிகையிலே உங்களுக்கு எது அருள் செய்யப்படுமோ அதையே பேசுங்கள்; ஏனெனில் பேசுகிறவர்கள் நீங்களல்ல, பரிசுத்த ஆவியே பேசுகிறவர்.

12அன்றியும் சகோதரன் சகோதரனையும், தகப்பன் பிள்ளையையும் மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி, அவர்களைக் கொலைசெய்வார்கள்.

13என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.

14மேலும் பாழாக்குகிற அருவருப்பைக்குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே; வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்; அது நிற்கத்தகாத இடத்திலே நீங்கள் அதை நிற்க காணும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்.

15வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டுக்குள் இறங்காமலும், தன் வீட்டில் எதையாகிலும் எடுத்துக்கொள்ள உள்ளேபோகாமலும் இருக்கக்கடவன்.

16வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரத்தை எடுப்பதற்குப் பின்னிட்டுத் திரும்பாதிருக்கக்கடவன்.

17அந்நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ!

18நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலே சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்.

19ஏனெனில் தேவன் உலகத்தைச் சிருஷ்டித்ததுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான உபத்திரவம் அந்நாட்களில் உண்டாயிருக்கும்.

20கர்த்தர் அந்நாட்களைக் குறைத்திராவிட்டால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தாம் தெரிந்துகொண்டவர்களினிமித்தமோ, அவர் அந்த நாட்களைக் குறைத்திருக்கிறார்.

21அப்பொழுது: இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கேயிருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால், நம்பாதேயுங்கள்.

22ஏனெனில் கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.

23நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள்; இதோ, எல்லாவற்றையும் முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.

24அந்நாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப் பின்பு, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும்;

25வானத்தின் நட்சத்திரங்கள் விழும், வானங்களிலுள்ள சத்துவங்களும் அசைக்கப்படும்.

26அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.

27அப்பொழுது அவர் தம்முடைய தூதரை அனுப்பி, தாம் தெரிந்துகொண்டவர்களை பூமியின் கடைமுனை முதற்கொண்டு, வானத்தின் கடைமுனைமட்டுமுள்ள நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்.

28அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளைதோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்.

29அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்.

30இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

31வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.

32அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.

33அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள், விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்.

34ஒரு மனுஷன் தன் வீட்டைவிட்டு, புறத்தேசத்துக்குப் பிரயாணம்போக எத்தனிக்கும்போது, தன் ஊழியக்காரருக்கு அதிகாரங்கொடுத்து, அவனவனுக்குத் தன்தன் வேலைகளையும், நியமித்து, விழித்திருக்கும்படிக்குக் காவல்காக்கிறவனுக்குக் கற்பிப்பான்.

35அப்படியே நீங்களும் விழித்திருங்கள்; ஏனெனில், வீட்டெஜமான் சாயங்காலத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல் கூவும் நேரத்திலோ, காலையிலோ, எப்பொழுது வருவான் என்று நீங்கள் அறியீர்கள்.

36நீங்கள் நினையாதவேளையில் அவன் வந்து, உங்களைத் தூங்குகிறவர்களாகக் கண்டுபிடியாதபடிக்கு விழித்திருங்கள்.

37நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லாருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள் என்றார்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com