6அந்தப்படியே நூனின் குமாரனாகிய யோசுவா ஆசாரியரை அழைத்து: உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு போங்கள்; தொனிக்கும் ஏழு எக்காளங்களையும் ஏழு ஆசாரியர்கள் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகப் பிடித்துக்கொண்டு போகக்கடவர்கள் என்று சொல்லி;
7ஜனங்களை நோக்கி: பட்டணத்தைச் சுற்றி நடந்துபோங்கள்; யுத்தசன்னத்தரானவர்கள் கர்த்தரின் பெட்டிக்குமுன் நடக்கக்கடவர்கள் என்றான்.
8யோசுவா ஜனங்களிடத்தில் பேசினவுடனே, தொனிக்கும் ஏழு எக்காளங்களைப் பிடித்திருக்கிற ஏழு ஆசாரியர் கர்த்தருக்கு முன்பாக நடந்து எக்காளங்களை ஊதினார்கள்; கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி அவர்களுக்குப் பின் சென்றது.
9எக்காளங்களை ஊதுகிற ஆசாரியருக்குமுன் யுத்தசன்னத்தரானவர்கள் நடந்தார்கள்; பின்தண்டு எக்காளங்கள் ஊதப்படும்போது பெட்டிக்குப் பின் சென்றது.
10யோசுவா ஜனங்களை நோக்கி: நான் சொல்லும் நாள்மட்டும், நீங்கள் ஆர்ப்பரியாமலும் உங்கள் வாயினால் சத்தங்காட்டாமலும் இருங்கள்; உங்கள் வாயிலிருந்து ஒரு பேச்சும் புறப்படவேண்டாம்; ஆர்ப்பரியுங்கள் என்று உங்களுக்கு நான் சொல்லும் நாளிலே ஆர்ப்பரிப்பீர்களாக என்று கட்டளையிட்டிருந்தான்.
11அப்படியே கர்த்தரின் பெட்டியைப் பட்டணத்தைச் சூழ்ந்து ஒருதரம் சுற்றிவரப்பண்ணினான்; அவர்கள் திரும்பப் பாளயத்திலே வந்து, பாளயத்தில் இராத்தங்கினார்கள்.
12யோசுவா அதிகாலமே எழுந்திருந்தான்; ஆசாரியர்கள் கர்த்தரின் பெட்டியைச் சுமந்துகொண்டு போனார்கள்.
13தொனிக்கும் ஏழு எக்காளங்களைப் பிடிக்கிற ஏழு ஆசாரியர்களும் எக்காளங்களை ஊதிக்கொண்டே கர்த்தரின் பெட்டிக்கு முன்பாக நடந்தார்கள்; யுத்தசன்னத்தரானவர்கள் அவர்களுக்கு முன்னாலே நடந்தார்கள்; பின்தண்டோவெனில் எக்காளங்கள் ஊதப்படுகையில், கர்த்தரின் பெட்டிக்குப் பின்சென்றது.
14இரண்டாம் நாளிலும் பட்டணத்தை ஒருதரம் சுற்றிவந்து, பாளயத்துக்குத் திரும்பினார்கள்; இந்தப்படி ஆறுநாளும் செய்தார்கள்.
15ஏழாம் நாளில், அதிகாலமே கிழக்கு வெளுக்கும்போது எழுந்திருந்து அந்தப் பிரகாரமே பட்டணத்தை ஏழுதரம் சுற்றிவந்தார்கள்; அன்றையத்தினத்தில் மாத்திரம் பட்டணத்தை ஏழுதரம் சுற்றிவந்தார்கள்.
16ஏழாந்தரம் ஆசாரியர் எக்காளங்களை ஊதுகையில், யோசுவா ஜனங்களை நோக்கி: ஆர்ப்பரியுங்கள், பட்டணத்தைக் கர்த்தர் உங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்.
17ஆனாலும் இந்தப் பட்டணமும் இதிலுள்ள யாவும் கர்த்தருக்குச் சாபத்தீடாயிருக்கும்; நாம் அனுப்பின ஆட்களை ராகாப் என்னும் வேசி மறைத்துவைத்தபடியால், அவளும் அவளோடே வீட்டுக்குள் இருக்கிற அனைவரும் மாத்திரம் உயிரோடிருக்கக்கடவர்கள்.
18சாபத்தீடானதில் ஏதாகிலும் எடுத்துக்கொள்ளுகிறதினாலே, நீங்கள் சாபத்தீடாகாதபடிக்கும், இஸ்ரவேல் பாளயத்தைச் சாபத்தீடாக்கி அதைக் கலங்கப்பண்ணாதபடிக்கும், நீங்கள் சாபத்தீடானதற்கு மாத்திரம் எச்சரிக்கையாயிருங்கள்.
19சகல வெள்ளியும், பொன்னும், வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்யப்பட்ட பாத்திரங்களும், கர்த்தருக்குப் பரிசுத்தமானவைகள்; அவைகள் கர்த்தரின் பொக்கிஷத்தில் சேரும் என்றான்.
20எக்காளங்களை ஊதுகையில், ஜனங்கள் ஆர்ப்பரித்தார்கள்; எக்காள சத்தத்தை ஜனங்கள் கேட்டு, மகா ஆரவாரத்தோடே முழங்குகையில், அலங்கம் இடிந்து விழுந்தது; உடனே ஜனங்கள் அவரவர் தங்களுக்கு நேராகப் பட்டணத்தில் ஏறி, பட்டணத்தைப் பிடித்து,
21பட்டணத்திலிருந்த புருஷரையும் ஸ்திரீகளையும் வாலிபரையும் கிழவரையும் ஆடுமாடுகளையும் கழுதைகளையும் சகலத்தையும் பட்டயக்கருக்கினால் சங்காரம்பண்ணினார்கள்.
22யோசுவா, தேசத்தை வேவுபார்த்த இரண்டு புருஷரை நோக்கி: நீங்கள் அந்த வேசியின் வீட்டிலே போய், நீங்கள் அவளுக்கு ஆணையிட்டபடி அந்த ஸ்திரீயையும் அவளுக்கு உண்டான யாவையும் அங்கேயிருந்து வெளியே கொண்டுவாருங்கள் என்றான்.
23அப்பொழுது வேவுகாரரான அந்த வாலிபர் உள்ளே போய், ராகாபையும் அவள் தகப்பனையும், அவள் தாயையும், சகோதரர்களையும், அவளுக்குள்ள யாவையும் அவள் குடும்பத்தார் அனைவரையும் வெளியே அழைத்துக்கொண்டுவந்து, அவர்களை இஸ்ரவேல் பாளயத்துக்குப் புறம்பே இருக்கும்படி பண்ணினார்கள்.
24பட்டணத்தையும் அதிலுள்ள யாவையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்; வெள்ளியையும், பொன்னையும், வெண்கலத்தினாலும், இரும்பினாலும் செய்த பாத்திரங்களையும் மாத்திரம் கர்த்தரின் ஆலயப்பொக்கிஷத்தில் சேர்த்தார்கள்.
25எரிகோவை வேவுபார்க்க யோசுவா அனுப்பின ஆட்களை ராகாப் என்னும் வேசி மறைத்துவைத்தபடியினால், அவளையும் அவள் தகப்பன் வீட்டாரையும் அவளுக்குள்ள யாவையும் யோசுவா உயிரோடே வைத்தான்; அவள் இந்நாள் வரைக்கும் இஸ்ரவேலின் நடுவிலே குடியிருக்கிறாள்.
26அக்காலத்திலே யோசுவா: இந்த எரிகோ பட்டணத்தைக் கட்டும்படி எழும்பும் மனுஷன் கர்த்தருக்கு முன்பாகச் சபிக்கப்பட்டிருக்கக்கடவன்; அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது தன் இளைய குமாரனையும் சாகக் கொடுக்கக்கடவன் என்று சாபம் கூறினான்.
27இவ்விதமாய்க் கர்த்தர் யோசுவாவோடேகூட இருந்தார்; அவன் கீர்த்தி தேசமெங்கும் பரம்பிற்று.
1அல்லேலூயா, கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்; கர்த்தரின் ஊழியக்காரரே, துதியுங்கள்.
2கர்த்தருடைய வீட்டிலும், நமது தேவனுடைய ஆலயப்பிராகாரங்களிலும் நிற்கிறவர்களே, கர்த்தரைத் துதியுங்கள்.
3கர்த்தர் நல்லவர்; அவருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; அது இன்பமானது.
4கர்த்தர் யாக்கோபைத் தமக்காகவும், இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாகவும் தெரிந்துகொண்டார்.
5கர்த்தர் பெரியவர் என்றும், நம்முடைய ஆண்டவர் எல்லா தேவர்களுக்கும் மேலானவர் என்றும் நான் அறிவேன்.
6வானத்திலும் பூமியிலும், சமுத்திரங்களிலும், எல்லா ஆழங்களிலும், கர்த்தர் தமக்குச் சித்தமானதையெல்லாம் செய்கிறார்.
7அவர் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடன் மின்னலையும் உண்டாக்கி, காற்றைத் தமது பண்டசாலைகளிலிருந்து புறப்படப்பண்ணுகிறார்.
8அவர் எகிப்திலே மனுஷருடைய தலைப்பிள்ளைகளையும் மிருகத்தின் தலையீற்றுகளையும் அடித்தார்.
9எகிப்துதேசமே, உன் நடுவில் பார்வோன்மேலும் அவனுடைய எல்லா ஊழியக்காரர்மேலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் அனுப்பினார்.
10அவர் அநேகம் ஜாதிகளை அடித்து, பலத்த ராஜாக்களைக் கொன்று;
11எமோரியரின் ராஜாவாகிய சீகோனையும், பாசானின் ராஜாவாகிய ஓகையும், கானானின் சகல ராஜ்யங்களையும் அழித்து,
12அவர்கள் தேசத்தைத் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தார்.
13கர்த்தாவே, உம்முடைய நாமம் என்றைக்குமுள்ளது; கர்த்தாவே, உம்முடைய பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும்.
14கர்த்தர் தம்முடைய ஜனத்தின் நியாயத்தை விசாரித்து, தம்முடைய ஊழியக்காரர்மேல் பரிதாபப்படுவார்.
15அஞ்ஞானிகளுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.
16அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது, அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
17அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது, அவைகளுடைய வாயிலே சுவாசமுமில்லை.
18அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போல் இருக்கிறார்கள்.
19இஸ்ரவேல் குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்; ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.
20லேவி குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்; கர்த்தருக்குப் பயந்தவர்களே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.
21எருசலேமில் வாசம்பண்ணுகிற கர்த்தருக்கு சீயோனிலிருந்து ஸ்தோத்திரமுண்டாவதாக. அல்லேலூயா.
1கர்த்தரை துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
2தேவாதி தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
3கர்த்தாதி கர்த்தரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
4ஒருவராய் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
5வானங்களை ஞானமாய் உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
6தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
7பெரிய சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது;
8பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
9இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது;
10எகிப்தியருடைய தலைச்சன்களைச் சங்கரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
11அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரவேலைப் புறப்படப்பண்ணினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
12பலத்த கையினாலும் ஓங்கிய புயத்தினாலும் அதைச் செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
13சிவந்த சமுத்திரத்தை இரண்டாகப் பிரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
14அதின் நடுவே இஸ்ரவேலைக் கடந்துபோகப்பண்ணினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
15பார்வோனையும் அவன் சேனைகளையும் சிவந்த சமுத்திரத்தில் கவிழ்த்துப்போட்டவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
16தம்முடைய ஜனங்களை வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
17பெரிய ராஜாக்களைச் சங்கரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
18பிரபலமான ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
19எமோரியரின் ராஜாவாகிய சீகோனை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
20பாசானின் ராஜாவாகிய ஓகை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
21அவர்கள் தேசத்தைச் சுதந்தரமாகத் தந்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
22அதைத் தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்திரமாகவே தந்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
23நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
24நம்முடைய சத்துருக்களின் கையிலிருந்து நம்மை விடுதலைபண்ணினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
25மாம்ச தேகமுள்ள யாவுக்கும் ஆகாரங் கொடுக்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
26பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
1கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி; நீங்கள் எனக்குக் கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது? நான் தங்கியிருக்கும் ஸ்தலம் எப்படிப்பட்டது?
2என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்.
3மாட்டை வெட்டுகிறவன் மனுஷனைக் கொல்லுகிறவனாகவும், ஆட்டைப் பலியிடுகிறவன் நாயைக் கழுத்தறுக்கிறவனாகவும், காணிக்கையைப் படைக்கிறவன் பன்றி இரத்தத்தைப் படைக்கிறவனாகவும், தூபங்காட்டுகிறவன் விக்கிரகத்தை ஸ்தோத்திரிக்கிறவனாகவும் இருக்கிறான்; இவர்கள் தங்கள் வழிகளையே தெரிந்துகொள்ளுகிறார்கள்; இவர்களுடைய ஆத்துமா தங்கள் அருவருப்புகளின்மேல் விருப்பமாயிருக்கிறது.
4நான் கூப்பிட்டும் மறுஉத்தரவு கொடுக்கிறவனில்லாமலும், நான் பேசியும் அவர்கள் கேளாமலும், அவர்கள் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, நான் விரும்பாததைத் தெரிந்துகொண்டதினிமித்தம், நானும் அவர்களுடைய ஆபத்தைத் தெரிந்துகொண்டு, அவர்களுடைய திகில்களை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன்.
5கர்த்தருடைய வசனத்துக்கு நடுங்குகிறவர்களே, அவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; என் நாமத்தினிமித்தம் உங்களைப் பகைத்து, உங்களை அப்புறப்படுத்துகிற உங்கள் சகோதரர், கர்த்தர் மகிமைப்படுவாராக என்கிறார்களே; அவர் உங்களுக்குச் சந்தோஷம் உண்டாகும்படி காணப்படுவார்; அவர்களோ வெட்கப்படுவார்கள்.
6நகரத்திலிருந்து அமளியின் இரைச்சலும் தேவாலயத்திலிருந்து சத்தமும் கேட்கப்படும்; அது தமது சத்துருக்களுக்குச் சரிக்குச் சரிக்கட்டுகிற கர்த்தருடைய சந்தந்தானே.
7பிரசவவேதனைப்படுமுன் பெற்றாள், கர்ப்பவேதனை வருமுன் ஆண்பிள்ளையைப் பெற்றாள்.
8இப்படிப்பட்டவைகளைக் கேள்விப்பட்டது யார்? இப்படிப்பட்டவைகளைக் கண்டது யார்? ஒரு தேசத்துக்கு ஒரே நாளில் பிள்ளைப்பேறு வருமோ? ஒரு ஜாதி ஒருமிக்கப் பிறக்குமோ? சீயோனோவெனில், ஒருமிக்க வேதனைப்பட்டும், தன் குமாரரைப் பெற்றும் இருக்கிறது.
9பெறப்பண்ணுகிறவராகிய நான் பெறச்செய்யாமல் இருப்பேனோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; பிரசவிக்கப்பண்ணுகிறவராகிய நான் பிரசவத்தைத் தடுப்பேனோ என்று உன் தேவன் சொல்லுகிறார்.
10எருசலேமை நேசிக்கிற நீங்களெல்லாரும் அவளோடேகூடச் சந்தோஷப்பட்டு, அவளைக்குறித்துக் களிகூருங்கள்; அவள்நிமித்தம் துக்கித்திருந்த நீங்களெல்லாரும் அவளோடேகூட மிகவும் மகிழுங்கள்.
11நீங்கள் அவளுடைய ஆறுதல்களின் முலைப்பாலை உண்டு திருப்தியாகி, நீங்கள் சூப்பிக்குடித்து, அவளுடைய மகிமையின் பிரகாசத்தினால் மனமகிழ்ச்சியாகுங்கள்;
12கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் சமாதானத்தை ஒரு நதியைப்போலவும், ஜாதிகளின் மகிமையைப் புரண்டு ஓடுகிற ஆற்றைப்போலவும் அவளிடமாகப் பாயும்படி செய்கிறேன்; அப்பொழுது நீங்கள் முலைப்பால் குடிப்பீர்கள்; இடுப்பில் வைத்துச் சுமக்கப்படுவீர்கள்; முழங்காலில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள்.
13ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்.
14நீங்கள் அதைக் காணும்போது, உங்கள் இருதயம் மகிழ்ந்து, உங்கள் எலும்புகள் பசும்புல்லைப்போலச் செழிக்கும்; அப்பொழுது கர்த்தருடைய ஊழியக்காரரிடத்தில் அவருடைய கரமும், அவருடைய சத்துருக்களிடத்தில் அவருடைய சினமும் அறியப்படும்.
15இதோ, தம்முடைய கோபத்தை உக்கிரமாகவும், தம்முடைய கடிந்துகொள்ளுதலை அக்கினிஜூவாலையாகவும் செலுத்தக் கர்த்தர் அக்கினியோடும் வருவார், பெருங்காற்றைப்போன்ற தம்முடைய இரதங்களோடும் வருவார்.
16கர்த்தர் அக்கினியாலும், தமது பட்டயத்தாலும், மாம்சமான எல்லாரோடும் வழக்காடுவார்; கர்த்தரால் கொலையுண்டவர்கள் அநேகராயிருப்பார்கள்.
17தங்களைத்தாங்களே பரிசுத்தப்படுத்திக்கொள்ளுகிறவர்களும், தோப்புகளின் நடுவிலே தங்களைத் தாங்களே ஒருவர்பின் ஒருவராய்ச் சுத்திகரித்துக்கொள்ளுகிறவர்களும், பன்றியிறைச்சியையும், அருவருப்பானதையும், எலியையும் சாப்பிடுகிறவர்களும் ஏகமாய்ச் சங்கரிக்கப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
18நான் அவர்கள் கிரியைகளையும், அவர்கள் நினைவுகளையும் அறிந்திருக்கிறேன்; நான் சகல ஜாதியாரையும் பாஷைக்காரரையுங் கூட்டிச்சேர்க்குங்காலம் வரும்; அவர்கள் வந்து என் மகிமையைக் காண்பார்கள்.
19நான் அவர்களில் ஒரு அடையாளத்தைக் கட்டளையிடுவேன்; அவர்களில் தப்பினவர்களை, என் கீர்த்தியைக் கேளாமலும், என் மகிமையைக் காணாமலுமிருக்கிற ஜாதிகளின் தேசங்களாகிய தர்ஷீசுக்கும், வில்வீரர் இருக்கிற பூலுக்கும், லூதுக்கும், தூபாலுக்கும், யாவானுக்கும், தூரத்திலுள்ள தீவுகளுக்கும் அனுப்புவேன்; அவர்கள் என் மகிமையை ஜாதிகளுக்குள்ளே அறிவிப்பார்கள்.
20இஸ்ரவேல் புத்திரர் சுத்தமான பாத்திரத்தில் காணிக்கையைக் கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டு வருகிறதுபோல, உங்கள் சகோதரரெல்லாரையும் அவர்கள் குதிரைகளின்மேலும், இரதங்களின்மேலும், குலாரி வண்டிகளின்மேலும், கோவேறு கழுதைகளின்மேலும், வேகமான ஒட்டகங்களின்மேலும், சகல ஜாதிகளிடத்திலுமிருந்து எருசலேமிலுள்ள கர்த்தருக்குக் காணிக்கையாக என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவாருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
21அவர்களிலும் சிலரை ஆசாரியராகவும் லேவியராகவும் தெரிந்துகொள்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
22நான் படைக்கப்போகிற புதிய வானமும் புதிய பூமியும் எனக்கு முன்பாக நிற்பதுபோல, உங்கள் சந்ததியும், உங்கள் நாமமும் நிற்குமென்று கர்த்தர் சொல்லுகிறார்.
23அப்பொழுது: மாதந்தோறும், ஓய்வுநாள்தோறும், மாம்சமான யாவரும் எனக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.
24அவர்கள் வெளியே போய் எனக்கு விரோதமாய்ப் பாதகஞ்செய்த மனுஷருடைய பிரேதங்களைப் பார்ப்பார்கள்; அவர்களுடைய பூச்சி சாகாமலும், அவர்களுடைய அக்கினி அவியாமலும் இருக்கும்; அவர்கள் மாம்சமான யாவருக்கும் அரோசிகமாயிருப்பார்கள்.
1அக்காலத்தில், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது இயேசுவின் கீர்த்தியைக் கேள்விப்பட்டு,
2தன் ஊழியக்காரரை நோக்கி: இவன் யோவான்ஸ்நானன்; இவன் மரித்தோரிலிருந்து எழுந்தான்; ஆகையால், இவனிடத்தில் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்றான்.
3ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தம் யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான்.
4ஏனெனில்: நீர் அவளை வைத்துக்கொள்வது நியாயமல்லவென்று யோவான் அவனுக்குச் சொல்லியிருந்தான்.
5ஏரோது அவனைக் கொலைசெய்ய மனதாயிருந்தும், ஜனங்கள் அவனைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தான்.
6அப்படியிருக்க, ஏரோதின் ஜென்மநாள் கொண்டாடப்படுகிறபோது, ஏரோதியாளின் குமாரத்தி அவர்கள் நடுவே நடனம்பண்ணி ஏரோதைச் சந்தோஷப்படுத்தினாள்.
7அதினிமித்தம் அவன்: நீ எதைக்கேட்டாலும் தருவேன் என்று அவளுக்கு ஆணையிட்டு வாக்குக்கொடுத்தான்.
8அவள் தன் தாயினால் ஏவப்பட்டபடியே: யோவான்ஸ்நானனுடைய தலையை இங்கே ஒரு தாலத்திலே எனக்குத் தாரும் என்று கேட்டாள்.
9ராஜா துக்கமடைந்தான். ஆகிலும், ஆணையினிமித்தமும், பந்தியில் கூட இருந்தவர்களினிமித்தமும், அதைக் கொடுக்கக்கட்டளையிட்டு,
10ஆள் அனுப்பி, காவற்கூடத்திலே யோவானைச் சிரச்சேதம்பண்ணுவித்தான்.
11அவனுடைய சிரசை ஒரு தாலத்திலே கொண்டுவந்து, சிறு பெண்ணுக்குக் கொடுத்தார்கள்; அவள் அதைத் தன் தாயினிடத்தில் கொண்டுபோனாள்.
12அவனுடைய சீஷர்கள் வந்து உடலை எடுத்து அடக்கம்பண்ணி, பின்பு போய் அந்தச் சங்கதியை இயேசுவுக்கு அறிவித்தார்கள்.
13இயேசு அதைக் கேட்டு, அவ்விடம் விட்டு, படவில் ஏறி, வனாந்தரமான ஓர் இடத்துக்குத் தனியே போனார். ஜனங்கள் அதைக் கேள்விப்பட்டு, பட்டணங்களிலிருந்து கால்நடையாய் அவரிடத்திற்குப் போனார்கள்.
14இயேசு வந்து, திரளான ஜனங்களைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் வியாதியஸ்தர்களாயிருந்தவர்களைச் சொஸ்தமாக்கினார்.
15சாயங்காலமானபோது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: இது வனாந்தரமான இடம், நேரமுமாயிற்று; ஜனங்கள் கிராமங்களுக்குப்போய்த் தங்களுக்கு போஜனபதார்த்தங்களைக்கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.
16இயேசு அவர்களை நோக்கி: அவர்கள் போகவேண்டுவதில்லை; நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார்.
17அதற்கு அவர்கள்: இங்கே எங்களிடத்தில் ஐந்து அப்பமும் இரண்டு மீன்களுமேயல்லாமல், வேறொன்றும் இல்லை என்றார்கள்.
18அவைகளை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.
19அப்பொழுது, அவர் ஜனங்களைப் புல்லின்மேல் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டுச் சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குக் கொடுத்தார்கள்.
20எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடைநிறைய எடுத்தார்கள்.
21ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர, சாப்பிட்ட புருஷர்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள்.
22இயேசு ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, தமக்கு முன்னே அக்கரைக்குப் போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார்.
23அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார்.
24அதற்குள்ளாகப் படவு நடுக்கடலிலே சேர்ந்து, எதிர்க்காற்றாயிருந்தபடியால் அலைகளினால் அலைவுபட்டது.
25இரவின் நாலாம் ஜாமத்திலே, இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார்.
26அவர் கடலின்மேல் நடக்கிறதைச் சீஷர்கள் கண்டு, கலக்கமடைந்து, ஆவேசம் என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள்.
27உடனே இயேசு அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார்.
28பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான்.
29அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக ஜலத்தின்மேல் நடந்தான்.
30காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து, அமிழ்ந்துபோகையில்: ஆண்டவரே, என்னை இரட்சியும் என்று கூப்பிட்டான்.
31உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார்.
32அவர்கள் படவில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது.
33அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.
34பின்பு, அவர்கள் கடலைக் கடந்து, கெனேசரேத்து நாட்டில் சேர்ந்தார்கள்.
35அவ்விடத்து மனுஷர் அவரை இன்னார் என்று அறிந்து, சுற்றுப்புறமெங்கும் செய்தி அனுப்பி, பிணியாளிகளெல்லாரையும் அவரிடத்தில் கொண்டுவந்து,
36அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com