1இஸ்ரவேல் புத்திரர் சாபத்தீடானதிலே துரோகம்பண்ணினார்கள்; எப்படியெனில், யூதாகோத்திரத்துச் சேராகுடைய குமாரனாகிய சப்தியின் மகன் கர்மீக்குப் பிறந்த ஆகான் என்பவன், சாபத்தீடானதிலே சிலதை எடுத்துக்கொண்டான்; ஆகையால் இஸ்ரவேல் புத்திரர்மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது.
2யோசுவா எரிகோவிலிருந்து பெத்தேலுக்குக் கிழக்கிலுள்ள பெத்தாவேன் சமீபத்திலிருக்கிற ஆயிபட்டணத்துக்குப் போகும்படி ஆட்களை அனுப்பி: நீங்கள் போய், அந்த நாட்டை வேவுபாருங்கள் என்றான்; அந்த மனுஷர் போய், ஆயியை வேவுபார்த்து,
3யோசுவாவினிடத்தில் திரும்பிவந்து, அவனை நோக்கி: ஜனங்கள் எல்லாரும் போகவேண்டியதில்லை; ஏறக்குறைய இரண்டாயிரம் மூவாயிரம்பேர் போய், ஆயியை முறிய அடிக்கலாம்; எல்லா ஜனங்களையும் அங்கே போகும்படி வருத்தப்படுத்தவேண்டியதில்லை; அவர்கள் கொஞ்சம்பேர்தான் என்றார்கள்.
4அப்படியே ஜனங்களில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் அவ்விடத்திற்குப் போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஆயியின் மனுஷருக்கு முன்பாக முறிந்தோடினார்கள்.
5ஆயியின் மனுஷர் அவர்களில் ஏறக்குறைய முப்பத்தாறுபேரை வெட்டிப்போட்டார்கள்; பட்டணவாசலின் வெளிதுவக்கிச் செபாரீம்மட்டும் அவர்களைத் துரத்தி, மலையிறக்கத்திலே அவர்களை வெட்டினார்கள்; ஜனங்களின் இருதயம் கரைந்து தண்ணீராய்ப்போயிற்று.
6அப்பொழுது யோசுவா தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, அவனும் இஸ்ரவேலின் மூப்பரும் சாயங்காலமட்டும் கர்த்தரின் பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து, தங்கள் தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு கிடந்தார்கள்.
7யோசுவா: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, எங்களை அழிக்கும்படிக்கு எமோரியர் கைகளில் ஒப்புக்கொடுப்பதற்காகவா தேவரீர் இந்த ஜனத்தை யோர்தானைக் கடக்கப்பண்ணினீர்? நாங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் மனத்திருப்தியாக இருந்துவிட்டோமானால் நலமாயிருக்கும்.
8ஆ, ஆண்டவரே, இஸ்ரவேலர் தங்கள் சத்துருக்களுக்கு முதுகைக் காட்டினார்கள்; இப்பொழுது நான் என்ன சொல்லுவேன்.
9கானானியரும் தேசத்துக் குடிகள் யாவரும் இதைக்கேட்டு, எங்களை வளைந்துகொண்டு, எங்கள் பேரை பூமியிலிராதபடிக்கு வேரற்றுப்போகப்பண்ணுவார்களே; அப்பொழுது உமது மகத்தான நாமத்துக்கு என்ன செய்வீர் என்றான்.
10அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: எழுந்திரு, நீ இப்படி முகங்குப்புற விழுந்துகிடக்கிறது என்ன?
11இஸ்ரவேலர் பாவஞ்செய்தார்கள்; நான் அவர்களுக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையை மீறினார்கள்; சாபத்தீடானதில் எடுத்துக்கொண்டதும், களவுசெய்ததும், வஞ்சித்ததும், தங்கள் பண்டம்பாடிகளுக்குள்ளே வைத்ததும் உண்டே.
12ஆதலால், இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக் கூடாமல், தங்கள் சத்துருக்களுக்கு முதுகைக் காட்டினார்கள்; அவர்கள் சாபத்தீடானார்கள்; நீங்கள் சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து நிக்கிரகம்பண்ணாவிட்டால், இனி உங்களோடு இரேன்.
13எழுந்திரு, நீ ஜனங்களைப் பரிசுத்தம்பண்ணிச் சொல்லவேண்டியது என்னவென்றால்: நாளையதினத்துக்கு உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்; இஸ்ரவேலரே, சாபத்தீடானது உங்கள் நடுவே இருக்கிறது; நீங்கள் சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து விலக்காதிருக்குமட்டும், நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக்கூடாது என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.
14காலையிலே நீங்கள் கோத்திரம் கோத்திரமாக வரவேண்டும்; அப்பொழுது கர்த்தர் குறிக்கிற கோத்திரம் வம்சம் வம்சமாக வரவேண்டும்; கர்த்தர் குறிக்கிற வம்சம் குடும்பம் குடும்பமாக வரவேண்டும்; கர்த்தர் குறிக்கிற குடும்பம் பேர்பேராக வரவேண்டும் என்று சொல்.
15அப்பொழுது சாபத்தீடானதை எடுத்தவனாய்க் கண்டுபிடிக்கப்படுகிறவன், கர்த்தரின் உடன்படிக்கையை மீறி, இஸ்ரவேலிலே மதிகேடான காரியத்தைச் செய்தபடியினால், அவனும் அவனுக்குள்ள, யாவும் அக்கினியில் சுட்டெரிக்கப்படக்கடவது என்றார்.
16யோசுவா அதிகாலமே எழுந்திருந்து, இஸ்ரவேலரைக் கோத்திரம் கோத்திரமாக வரப்பண்ணினான்; அப்பொழுது, யூதாவின் கோத்திரம் குறிக்கப்பட்டது.
17அவன் யூதாவின் வம்சங்களை வரப்பண்ணினபோது, சேராகியரின் வம்சம் குறிக்கப்பட்டது; அவன் சேராகியரின் வம்சத்தைப் பேர்பேராக வரப்பண்ணினபோது, சப்தி குறிக்கப்பட்டான்.
18அவன் வீட்டாரை அவன் பேர்பேராக வரப்பண்ணினபோது, யூதா கோத்திரத்துச் சேராகின் குமாரனாகிய சப்திக்குப் பிறந்த கர்மீயின் மகன் ஆகான் குறிக்கப்பட்டான்.
19அப்பொழுது யோசுவா ஆகானை நோக்கி: மகனே, நீ இப்பொழுது இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்து, அவருக்கு முன்பாக அறிக்கைபண்ணி, நீ செய்ததை எனக்குச் சொல்லு; அதை எனக்கு ஒளிக்காதே என்றான்.
20அப்பொழுது ஆகான் யோசுவாவுக்குப் பிரதியுத்தரமாக: மெய்யாகவே நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்; இன்னின்ன பிரகாரமாகச் செய்தேன்.
21கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும் நான் கண்டு, அவைகளை இச்சித்து எடுத்துக்கொண்டேன்; இதோ, அவைகள் என்கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் புதைத்திருக்கிறது, வெள்ளி அதின் அடியிலிருக்கிறது என்றான்.
22உடனே யோசுவா ஆட்களை அனுப்பினான்; அவர்கள் கூடாரத்துக்கு ஓடினார்கள்; அவனுடைய கூடாரத்தில் அது புதைத்திருந்தது, வெள்ளியும் அதின்கீழ் இருந்தது.
23அவைகளைக் கூடாரத்தின் மத்தியிலிருந்து எடுத்து, யோசுவாவினிடத்திலும் இஸ்ரவேல் புத்திரர் எல்லாரிடத்திலும் கொண்டுவந்து, கர்த்தருடைய சமுகத்தில் வைத்தார்கள்.
24அப்பொழுது யோசுவாவும் இஸ்ரவேலரெல்லாருங்கூட சேராகின் புத்திரனாகிய ஆகானையும், அந்த வெள்ளியையும், சால்வையையும், பொன்பாளத்தையும், அவன் குமாரரையும், குமாரத்திகளையும், அவன் மாடுகளையும், கழுதைகளையும், ஆடுகளையும், அவன் கூடாரத்தையும், அவனுக்குள்ள யாவையும் எடுத்து, ஆகோர் பள்ளத்தாக்குக்குக் கொண்டுபோனார்கள்.
25அங்கே யோசுவா: நீ எங்களைக் கலங்கப்பண்ணினதென்ன? இன்று கர்த்தர் உன்னைக் கலங்கப்பண்ணுவார் என்றான்; அப்பொழுது இஸ்ரவேலரெல்லாரும் அவன்மேல் கல்லெறிந்து, அவைகளை அக்கினியில் சுட்டெரித்து, கற்களினால் மூடி;
26அவன்மேல் இந்நாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இப்படியே கர்த்தர் தமது கோபத்தின் உக்கிரத்தை விட்டு மாறினார்; ஆகையால் அவ்விடம் இந்நாள்வரைக்கும் ஆகோர் பள்ளத்தாக்கு என்னப்படும்.
1பாபிலோன் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, அங்கே சீயோனை நினைத்து அழுதோம்.
2அதின் நடுவிலிருக்கும் அலரிச்செடிகளின்மேல் எங்கள் கின்னரங்களைத் தூக்கிவைத்தோம்.
3எங்களைச் சிறைபிடித்தவர்கள் அங்கே எங்கள் பாடல்களையும், எங்களைப் பாழாக்கினவர்கள் மங்கள கீதத்தையும் விரும்பி: சீயோனின் பாட்டுகளில் சிலதை எங்களுக்குப் பாடுங்கள் என்று சொன்னார்கள்.
4கர்த்தரின் பாட்டை அந்நிய தேசத்தில் நாங்கள் பாடுவதெப்படி?
5எருசலேமே, நான் உன்னை மறந்தால் என் வலதுகை தன் தொழிலை மறப்பதாக.
6நான் உன்னை நினையாமலும், எருசலேமை என் முக்கியமான மகிழ்ச்சியிலும் அதிகமாக எண்ணாமலும்போனால், என் நாவு என் மேல் வாயோடு ஒட்டிக்கொள்வதாக.
7கர்த்தாவே, எருசலேமின் நாளில் ஏதோமின் புத்திரரை நினையும்; அவர்கள்: அதை இடித்துப்போடுங்கள், அஸ்திபாரமட்டும் இடித்துப்போடுங்கள் என்று சொன்னார்களே.
8பாபிலோன் குமாரத்தியே, பாழாய்ப்போகிறவளே, நீ எங்களுக்குச் செய்தபடி உனக்குப் பதில் செய்கிறவன் பாக்கியவான்.
9உன் குழந்தைகளைப் பிடித்து, கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான்.
1உம்மை என் முழு இருதயத்தோடும் துதிப்பேன்; தேவர்களுக்கு முன்பாக உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன்.
2உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து, உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது நாமத்தைத் துதிப்பேன்; உமது சகல பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்.
3நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர்; என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்;
4கர்த்தாவே, பூமியின் ராஜாக்களெல்லாரும் உமது வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது உம்மைத் துதிப்பார்கள்.
5கர்த்தரின் மகிமை பெரிதாயிருப்பதினால், அவர்கள் கர்த்தரின் வழிகளைப் பாடுவார்கள்.
6கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்; மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்.
7நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்; என் சத்துருக்களின் கோபத்துக்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர்; உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும்.
8கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்; கர்த்தாவே, உமது கிருபை என்றுமுள்ளது; உமது கரத்தின் கிரியைகளை நெகிழவிடாதிருப்பீராக.
1பென்யமீன் தேசத்திலுள்ள ஆனதோத் ஊரிலிருந்த ஆசாரியர்களில் ஒருவனாகிய இல்க்கியாவின் குமாரன் எரேமியாவினுடைய வசனங்கள்:
2ஆமோனுடைய குமாரனாகிய யோசியா என்கிற யூதாவுடைய ராஜாவின் நாட்களில், அவன் அரசாண்ட பதின்மூன்றாம் வருஷத்தில் இவனுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று.
3அப்புறம் யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவுடைய ராஜாவின் நாட்களிலும், யோசியாவின் குமாரனாகிய சிதேக்கியா என்கிற யூதாவுடைய ராஜாவின் பதினோராம் வருஷத்து முடிவுமட்டாகவும், எருசலேம் ஊரார் ஐந்தாம் மாதத்தில் சிறைப்பட்டுப்போகும்வரைக்கும் கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று.
4கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
5நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார்.
6அப்பொழுது நான்: ஆ கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நான் பேச அறியேன்; சிறுபிள்ளையாயிருக்கிறேன் என்றேன்.
7ஆனாலும் கர்த்தர்: நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய், நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக.
8நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லி,
9கர்த்தர் தமது கரத்தை நீட்டி, என் வாயைத் தொட்டு: இதோ, என் வார்த்தைகளை உன் வாயிலே வைக்கிறேன்.
10பார், பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும் உன்னை நான் இன்றையதினம் ஜாதிகளின்மேலும் ராஜ்யங்களின்மேலும் ஏற்படுத்தினேன் என்று கர்த்தர் என்னுடனே சொன்னார்.
11பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்: எரேமியாவே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்று கேட்டார்; வாதுமை மரத்தின் கிளையைக் காண்கிறேன் என்றேன்.
12அப்பொழுது கர்த்தர்: நீ கண்டது சரியே; என் வார்த்தையைத் தீவிரமாய் நிறைவேற்றுவேன் என்றார்.
13கர்த்தருடைய வார்த்தை இரண்டாந்தரம் எனக்கு உண்டாகி, அவர்: நீ காண்கிறது என்ன என்று கேட்டார்; பொங்குகிற பானையைக் காண்கிறேன், அதின் வாய் வடக்கேயிருந்து நோக்குகிறது என்றேன்.
14அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: வடக்கேயிருந்து தீங்கு தேசத்தினுடைய குடிகள் எல்லார்மேலும் வரும்.
15இதோ, நான் வடதிசை ராஜ்யங்களின் வம்சங்களையெல்லாம் கூப்பிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் வந்து அவனவன் தன்தன் சிங்காசனத்தை எருசலேமின் ஒலிமுகவாசல்களுக்கும், அதின் சுற்றுமதில்கள் எல்லாவற்றிற்கும் விரோதமாகவும், யூதா தேசத்து எல்லாப் பட்டணங்களுக்கும் விரோதமாகவும் வைப்பார்கள்.
16அவர்கள் என்னைவிட்டு அந்நிய தேவர்களுக்குத் தூபங்காட்டி, தங்கள் கைகளின் கிரியையைப் பணிந்துகொண்ட அவர்களுடைய சகல தீமைகளினிமித்தமும் நான் என் நியாயத்தீர்ப்புகளை அவர்களுக்கு விரோதமாகக் கூறுவேன்.
17ஆகையால் நீ உன் அரையைக் கட்டிக்கொண்டு நின்று, நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் அவர்களுக்குச் சொல்; நான் உன்னை அவர்களுக்கு முன்பாகக் கலங்கப்பண்ணாதபடிக்கு, நீ அவர்கள் முகத்துக்கு அஞ்சாதிரு.
18இதோ, தேசமனைத்துக்கும், யூதாவின் ராஜாக்களுக்கும், அதின் பிரபுக்களுக்கும், அதின் ஆசாரியர்களுக்கும், தேசத்தின் ஜனங்களுக்கும் எதிராக நான் உன்னை இன்றையதினம் அரணிப்பான பட்டணமும், இருப்புத்தூணும், வெண்கல அலங்கமும் ஆக்கினேன்.
19அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
1அப்பொழுது, எருசலேமிலிருந்து வந்த வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவினிடத்தில் வந்து:
2உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் போஜனம்பண்ணுகிறார்களே! என்றார்கள்.
3அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்?
4உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கற்பித்திருக்கிறாரே.
5நீங்களோ, எவனாகிலும் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தன் தாயையாவது கனம்பண்ணாமற்போனாலும், அவனுடைய கடமை தீர்ந்ததென்று போதித்து,
6உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள்.
7மாயக்காரரே, உங்களைக்குறித்து:
8இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது;
9மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்.
10பின்பு அவர் ஜனங்களை வரவழைத்து, அவர்களை நோக்கி: நீங்கள் கேட்டு உணருங்கள்.
11வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.
12அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: பரிசேயர் இந்த வசனத்தைக் கேட்டு இடறலடைந்தார்கள் என்று அறிவீரா என்றார்கள்.
13அவர் பிரதியுத்தரமாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும்.
14அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.
15அப்பொழுது, பேதுரு அவரை நோக்கி: இந்த உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டும் என்றான்.
16அதற்கு இயேசு: நீங்களும் இன்னும் உணர்வில்லாதவர்களாயிருக்கிறீர்களா?
17வாய்க்குள்ளே போகிறதெல்லாம் வயிற்றில் சென்று ஆசனவழியாய்க் கழிந்துபோகும் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லையா?
18வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.
19எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்.
20இவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்; கைகழுவாமல் சாப்பிடுகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது என்றார்.
21பின்பு, இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் திசைகளுக்குப் போனார்.
22அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.
23அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.
24அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்லவென்றார்.
25அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப் பணிந்துகொண்டாள்.
26அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.
27அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.
28இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரியது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்.
29இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கலிலேயாக் கடலருகே வந்து, ஒரு மலையின்மேல் ஏறி, அங்கே உட்கார்ந்தார்.
30அப்பொழுது, சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலிய அநேகரை, திரளான ஜனங்கள் கூட்டிக்கொண்டு இயேசுவினிடத்தில் வந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் சொஸ்தப்படுத்தினார்.
31ஊமையர் பேசுகிறதையும், ஊனர் சொஸ்தமடைகிறதையும், சப்பாணிகள் நடக்கிறதையும், குருடர் பார்க்கிறதையும் ஜனங்கள் கண்டு, ஆச்சரியப்பட்டு, இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
32பின்பு, இயேசு தம்முடைய சீஷர்களை அழைத்து: ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் என்னிடத்தில் மூன்றுநாள் தங்கியிருந்து சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிட எனக்கு மனதில்லை, வழியில் சோர்ந்துபோவார்களே என்றார்.
33அதற்கு அவருடைய சீஷர்கள்: இவ்வளவு திரளான ஜனங்களுக்குத் திருப்தியுண்டாகும்படி வேண்டிய அப்பங்கள் இந்த வனாந்தரத்திலே நமக்கு எப்படி அகப்படும் என்றார்கள்.
34அதற்கு இயேசு: உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்களும் சில சிறு மீன்களும் உண்டு என்றார்கள்.
35அப்பொழுது அவர் ஜனங்களைத் தரையில் பந்தியிருக்கக் கட்டளையிட்டு,
36அந்த ஏழு அப்பங்களையும் அந்த மீன்களையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, பிட்டுத் தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குப் பரிமாறினார்கள்.
37எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளை ஏழு கூடைநிறைய எடுத்தார்கள்.
38ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர, சாப்பிட்ட புருஷர் நாலாயிரம்பேராயிருந்தார்கள்.
39அவர் ஜனங்களை அனுப்பிவிட்டு படவில் ஏறி, மக்தலாவின் எல்லைகளில் வந்தார்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com