1யோர்தானுக்கு இப்புறத்திலே மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் லீபனோனுக்கு எதிரான பெரிய சமுத்திரத்தின் கரையோரமெங்குமுள்ள ஏத்தியரும், எமோரியரும், கானானியரும், பெரிசியரும், ஏவியரும், எபூசியருமானவர்களுடைய சகல ராஜாக்களும் அதைக் கேள்விப்பட்டபோது,
2அவர்கள் ஒருமனப்பட்டு, யோசுவாவோடும் இஸ்ரவேலரோடும் யுத்தம்பண்ண ஏகமாய்க் கூடினார்கள்.
3எரிகோவுக்கும் ஆயிக்கும் யோசுவா செய்ததைக் கிபியோனின் குடிகள் கேள்விப்பட்டபோது,
4ஒரு தந்திரமான யோசனைபண்ணி, தங்களை ஸ்தானாபதிகள்போலக் காண்பித்து, பழைய இரட்டுப் பைகளையும், பீறலும் பொத்தலுமான பழைய திராட்சரசத் துருத்திகளையும் தங்கள் கழுதைகள்மேல் வைத்து,
5பழுதுபார்க்கப்பட்ட பழைய பாதரட்சைகளைத் தங்கள் கால்களில் போட்டு, பழைய வஸ்திரங்களை உடுத்திக்கொண்டார்கள்; வழிக்கு அவர்கள் கொண்டுபோன அப்பமெல்லாம் உலர்ந்ததும் பூசணம் பூத்ததுமாயிருந்தது.
6அவர்கள் கில்காலில் இருக்கிற பாளயத்துக்கு யோசுவாவினிடத்தில் போய், அவனையும் இஸ்ரவேல் மனுஷரையும் நோக்கி: நாங்கள் தூரதேசத்திலிருந்து வந்தவர்கள், எங்களோடே உடன்படிக்கைபண்ணுங்கள் என்றார்கள்.
7அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் அந்த ஏவியரை நோக்கி: நீங்கள் எங்கள் நடுவிலே குடியிருக்கிறவர்களாக்கும்; நாங்கள் எப்படி உங்களோடே உடன்படிக்கை பண்ணலாம் என்றார்கள்.
8அவர்கள் யோசுவாவை நோக்கி: நாங்கள் உமக்கு அடிமைகள் என்றார்கள்; அதற்கு யோசுவா: நீங்கள் யார், எங்கேயிருந்து வந்தீர்கள் என்று கேட்டான்.
9அதற்கு அவர்கள்: உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்தின் பிரஸ்தாபத்தைக் கேட்டு, உமது அடியாராகிய நாங்கள் வெகு தூரதேசத்திலிருந்து வந்தோம்; அவருடைய கீர்த்தியையும், அவர் எகிப்திலே செய்த யாவையும்,
10அவர் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனும் அஸ்தரோத்திலிருந்த பாசானின் ராஜாவாகிய ஓகும் என்கிற யோர்தானுக்கு அப்புறத்திலிருந்த எமோரியரின் இரண்டு ராஜாக்களுக்கும் செய்த யாவையும் கேள்விப்பட்டோம்.
11ஆகையால், எங்கள் மூப்பரும் எங்கள் தேசத்துக் குடிகளெல்லாரும் எங்களை நோக்கி: உங்கள் கைகளில் வழிக்கு ஆகாரம் எடுத்துக்கொண்டு, அவர்களுக்கு எதிர்கொண்டுபோய், அவர்களிடத்தில்: நாங்கள் உங்கள் அடியார், எங்களோடே உடன்படிக்கை பண்ணவேண்டும் என்று சொல்லச்சொன்னார்கள்.
12உங்களிடத்தில் வர நாங்கள் புறப்படுகிற அன்றே, எங்கள் வழிப்பிரயாணத்துக்கு இந்த அப்பத்தைச் சுடச்சுட எங்கள் வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு வந்தோம்; இப்பொழுது, இதோ, உலர்ந்து பூசணம் பூத்திருக்கிறது.
13நாங்கள் இந்தத் திராட்சரசத் துருத்திகளை நிரப்புகையில் புதிதாயிருந்தது; ஆனாலும், இதோ, கிழிந்துபோயிற்று; எங்கள் வஸ்திரங்களும் பாதரட்சைகளும் நெடுந்தூரமான பிரயாணத்தினாலே பழசாய்ப்போயிற்று என்றார்கள்.
14அப்பொழுது இஸ்ரவேலர்: கர்த்தருடைய வாக்கைக் கேளாமல் அவர்களுடைய போஜனபதார்த்தத்தில் சிறிது வாங்கிக்கொண்டார்கள்.
15யோசுவா அவர்களோடே சமாதானம்பண்ணி, அவர்களை உயிரோடே காப்பாற்றும் உடன்படிக்கையை அவர்களோடே பண்ணினான்; அதற்காகச் சபையின் பிரபுக்கள் அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்தார்கள்.
16அவர்களோடே உடன்படிக்கைபண்ணி, மூன்று நாள் சென்றபின்பு, அவர்கள் தங்கள் அயலார் என்றும் தங்கள் நடுவே குடியிருக்கிறவர்கள் என்றும் கேள்விப்பட்டார்கள்.
17இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணுகையில், மூன்றாம் நாளில் அவர்கள் பட்டணங்களுக்கு வந்தார்கள்; அந்தப் பட்டணங்கள் கிபியோன், கெபிரா, பெயெரோத், கீரியாத்யெயாரீம் என்பவைகள்.
18சபையின் பிரபுக்கள் அவர்களுக்கு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் பேரில் ஆணையிட்டிருந்தபடியினால், இஸ்ரவேல் புத்திரர் அவர்களைச் சங்காரம்பண்ணவில்லை; ஆனாலும் சபையார் எல்லாரும் பிரபுக்கள்மேல் முறுமுறுத்தார்கள்.
19அப்பொழுது சகல பிரபுக்களும், சபையார் யாவரையும் நோக்கி: நாங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்பேரில் அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்தோம்; ஆதலால் அவர்களை நாம் தொடக்கூடாது.
20கடுங்கோபம் நம்மேல் வராதபடிக்கு, நாம் அவர்களுக்கு இட்ட ஆணையினிமித்தம் நாம் அவர்களை உயிரோடே வைத்து, அவர்களுக்கு ஒன்று செய்வோம்.
21பிரபுக்களாகிய நாங்கள் அவர்களுக்குச் சொன்னபடி அவர்கள் உயிரோடிருந்து, சபையார் எல்லாருக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும், தண்ணீர் எடுக்கிறவர்களாகவும் இருக்கக்கடவர்கள் என்று பிரபுக்கள் அவர்களோடே சொன்னார்கள்.
22பின்பு யோசுவா அவர்களை அழைப்பித்து: நீங்கள் எங்கள் நடுவே குடியிருக்கும்போது: நாங்கள் உங்களுக்கு வெகுதூரமாயிருக்கிறவர்கள் என்று சொல்லி, எங்களை வஞ்சித்தது என்ன?
23இப்பொழுதும் நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; என் தேவனுடைய ஆலயத்துக்கு விறகு வெட்டுகிறவர்களும், தண்ணீர் எடுக்கிறவர்களுமான பணிவிடைக்காரராயிருப்பீர்கள்; இந்த ஊழியம் உங்களைவிட்டு நீங்கமாட்டாது என்றான்.
24அவர்கள் யோசுவாவுக்கு பிரதியுத்தரமாக: தேசத்தையெல்லாம் உங்களுக்கு ஒப்புக்கொடுக்கவும், தேசத்தின் குடிகளையெல்லாம் உங்களுக்கு முன்பாக அழிக்கவும் உம்முடைய தேவனாகிய கர்த்தர் தமது தாசனாகிய மோசேக்குக் கட்டளையிட்டது உமது அடியாருக்கு நிச்சயமாகவே அறிவிக்கப்பட்டதினால், நாங்கள் எங்கள் ஜீவன்நிமித்தம் உங்களுக்கு மிகவும் பயந்து, இந்தக் காரியத்தைச் செய்தோம்.
25இப்பொதும், இதோ, உமது கையிலிருக்கிறோம், உம்முடைய பார்வைக்கு நன்மையும் நியாயமுமாய்த் தோன்றுகிறபடி எங்களுக்குச் செய்யும் என்றார்கள்.
26அப்படியே யோசுவா அவர்களுக்குச் செய்து, இஸ்ரவேல் புத்திரர் அவர்களைக் கொன்றுபோடாதபடிக்கு, அவர்களை இவர்கள் கைக்குத் தப்புவித்தான்.
27இந்நாள்மட்டும் இருக்கிறபடியே, அந்நாளில் அவர்களைச் சபைக்கும், கர்த்தர் தெரிந்துகொள்ளும் இடத்திலிருக்கும் அவருடைய பலிபீடத்துக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும் தண்ணீர் எடுக்கிறவர்களாகவுமாக்கினான்.
1கர்த்தாவே, பொல்லாத மனுஷனுக்கு என்னைத் தப்புவியும்; கொடுமையுள்ளவனுக்கு என்னை விலக்கி இரட்சியும்.
2அவர்கள் தங்கள் இருதயத்தில் பொல்லாப்புகளைச் சிந்தித்து, யுத்தஞ்செய்ய நாள்தோறும் கூட்டங்கூடுகிறார்கள்.
3சர்ப்பத்தைப்போல் தங்கள் நாவை கூர்மையாக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளின்கீழ் விரியன் பாம்பின் விஷம் இருக்கிறது. (சேலா)
4கர்த்தாவே, துன்மார்க்கனுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி கொடியவனுக்கு என்னை விலக்கி இரட்சியும்; அவர்கள் என் நடைகளைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள்.
5அகங்காரிகள் எனக்குக் கண்ணியையும் கயிறுகளையும் மறைவாய் வைக்கிறார்கள்; வழியோரத்திலே வலையை விரித்து, எனக்குச் சுருக்குகளை வைக்கிறார்கள். (சேலா)
6நான் கர்த்தரை நோக்கி: நீர் என் தேவன் என்றேன்; கர்த்தாவே, என் விண்ணப்பங்களின் சத்தத்துக்குச் செவிகொடும்.
7ஆண்டவராகிய கர்த்தாவே, என் இரட்சிப்பின் பெலனே, யுத்தநாளில் என் தலையை மூடினீர்.
8கர்த்தாவே, துன்மார்க்கனுடைய ஆசைகள் சித்தியாதபடிசெய்யும்; அவன் தன்னை உயர்த்தாதபடி அவனுடைய யோசனையை நடந்தேறவொட்டாதேயும். (சேலா)
9என்னை வளைந்துகொள்ளுகிறவர்களுடைய உதடுகளின் தீவினைகள் அவர்கள் தலைகளையே மூடுவதாக.
10நெருப்புத்தழல் அவர்கள்மேல் விழுவதாக; அக்கினியிலும், அவர்கள் எழுந்திருக்கக்கூடாத படுகுழிகளிலும் தள்ளப்படுவார்களாக.
11பொல்லாத நாவுள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை; கொடுமையான மனுஷனை பறக்கடிக்கப் பொல்லாப்பு அவனை வேட்டையாடும்.
12சிறுமையானவனின் வழக்கையும், எளியவர்களின் நியாயத்தையும் கர்த்தர் விசாரிப்பாரென்று அறிவேன்.
13நீதிமான்கள் உமது நாமத்தைத் துதிப்பார்கள்; செம்மையானவர்கள் உமது சமுகத்தில் வாசம் பண்ணுவார்கள்.
1கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், என்னிடத்திற்கு வரத்தீவிரியும்; நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், என் சத்தத்திற்குச் செவிகொடும்.
2என் விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும், என் கையெடுப்பு அந்திப்பலியாகவும் இருக்கக்கடவது.
3கர்த்தாவே, என் வாய்க்குக் காவல்வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்.
4அக்கிரமஞ்செய்கிற மனுஷரோடே ஆகாமியக் கிரியைகளை நடப்பிக்கும்படி என் இருதயத்தைத் துன்மார்க்கத்திற்கு இணங்கவொட்டாதேயும்; அவர்களுடைய ருசியுள்ள பதார்த்தங்களில் ஒன்றையும் நான் சாப்பிடாமல் இருப்பேனாக.
5நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி, என்னைக் கடிந்துகொள்ளட்டும்; அது என் தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும்; என் தலை அதை அல்லத்தட்டுவதில்லை; அவர்கள் இக்கட்டுகளில் நான் இன்னும் ஜெபம்பண்ணுவேன்.
6அவர்களுடைய நியாயாதிபதிகள் கன்மலைச் சார்புகளிலிருந்து தள்ளுண்டுபோகிறபோது, என் வார்த்தைகள் இன்பமானவைகளென்று கேட்பார்கள்.
7பூமியின்மேல் ஒருவன் மரத்தை வெட்டிப் பிளக்கிறதுபோல, எங்கள் எலும்புகள் பாதாளவாய்க்கு நேராய்ச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது.
8ஆனாலும் ஆண்டவராகிய கர்த்தாவே, என் கண்கள் உம்மை நோக்கியிருக்கிறது; உம்மை நம்யிருக்கிறேன்; என் ஆத்துமாவை வெறுமையாக விடாதேயும்.
9அவர்கள் எனக்கு வைத்த கண்ணியின் சிக்குகளுக்கும், அக்கிரமக்காரரின் சுருக்குகளுக்கும் என்னை விலக்கி இரட்சியும்.
10துன்மார்க்கர் தங்கள் வலைகளில் அகப்படுவார்களாக; நானோ அதற்குத் தப்பிக் கடந்துபோவேன்.
1ஒரு புருஷன் தன் மனைவியைத் தள்ளிவிட, அவள் அவனிடத்திலிருந்து புறப்பட்டுப்போய், அந்நியபுருஷனுக்கு மனைவியானால், அவன் அவளிடத்தில் இனித் திரும்பப் போவானோ? அந்த தேசம் மிகவும் தீட்டுப்படுமல்லவோ? என்று மனுஷர் சொல்லுவார்கள்; நீயோவென்றால் அநேக நேசரோடே வேசித்தனம்பண்ணினாய்; ஆகிலும் என்னிடத்திற்குத் திரும்பிவா என்று கர்த்தர் சொல்லுகிறார்.
2நீ மேடுகளின்மேல் உன் கண்களை ஏறெடுத்து, நீ வேசித்தனம்பண்ணாத இடம் ஒன்று உண்டோ என்று பார்; வனாந்தரத்திலே அரபியன் காத்துக்கொண்டிருக்கிறதுபோல, நீ வழி ஓரங்களில் உன் நேசருக்குக் காத்துக்கொண்டிருந்து, உன் வேசித்தனங்களாலும், உன் அக்கிரமங்களாலும் தேசத்தைத் தீட்டுப்படுத்தினாய்.
3அதினிமித்தம் மழை வருஷியாமலும், பின்மாரியில்லாமலும் போயிற்று; உனக்கோ, சோரஸ்திரீயின் நெற்றியிருக்கிறது; நீயோ: நாணமாட்டேன் என்கிறாய்.
4நீ இதுமுதல் என்னை நோக்கி: என் பிதாவே, தேவரீர் என் இளவயதின் அதிபதியென்று சொல்லி,
5சதாகாலமும் கோபத்தை வைப்பாரோ? அதை என்றென்றைக்கும் காப்பாரோ என்கிறாய் அல்லவோ? இதோ, இப்படி நீ சொல்லியும் பொல்லாப்புகளைச்செய்து, மிஞ்சிப்போகிறாய் என்கிறார்.
6யோசியா ராஜாவின் நாட்களிலே கர்த்தர் என்னை நோக்கி: சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் செய்ததைக் கண்டாயா? அவள் உயரமான சகல மலையின்மேலும், பச்சையான சகல மரத்தின்கீழும் போய், அங்கே வேசித்தனம்பண்ணினாள்.
7அவள் இப்படியெல்லாம் செய்த பின்பு: நீ என்னிடத்தில் திரும்பிவா என்று நான் சொன்னேன்; அவளோ திரும்பவில்லை; இதை அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி கண்டாள்.
8சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் விபசாரம்பண்ணின முகாந்தரங்கள் எல்லாவற்றினிமித்தமும் நான் அவளை அனுப்பிவிட்டு, அவளுடைய தள்ளுதற்சீட்டை அவளுக்குக் கொடுத்தபோதும், அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி பயப்படாமல்; இவளும் போய் வேசித்தனம்பண்ணினாள், இதை நான் கண்டேன்.
9பிரசித்தமான அவளுடைய வேசித்தனத்தினாலே தேசம் தீட்டுப்பட்டுப்போயிற்று; கல்லோடும் மரத்தோடும் விபசாரம்பண்ணிக்கொண்டிருந்தாள் என்றார்.
10இவைகளையெல்லாம் கண்டும், யூதா என்கிற அவளுடைய சகோதரியாகிய துரோகி, கள்ளத்தனமாய்த் திரும்பினாளேயன்றி, முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்பவில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.
11பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: யூதா என்கிற துரோகியைப்பார்க்கிலும் சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் தன்னை நீதியுள்ளவளாக்கினாள்.
12நீ போய் வடதிசையை நோக்கிக் கூறவேண்டிய வார்த்தைகள் என்னவென்றால்: சீர்கெட்ட இஸ்ரவேலே, திரும்பு என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்கள்மேல் என் கோபத்தை இறங்கப்பண்ணுவதில்லை; நான் கிருபையுள்ளவரென்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் என்றைக்கும் கோபம் வைக்கமாட்டேன்.
13நீயோ, உன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, பச்சையான சகல மரத்தின்கீழும் அந்நியரோடே சோரமார்க்கமாய் நடந்து, உன் அக்கிரமத்தையும், என் சத்தத்துக்குச் செவிகொடாமற்போனதையும் ஒத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
14சீர்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்கள் நாயகர்; நான் உங்களை ஊரில் ஒருவனும், வம்சத்தில் இரண்டு பேருமாகத் தெரிந்து, உங்களைச் சீயோனுக்கு அழைத்துக்கொண்டுவந்து,
15உங்களுக்கு என் இருதயத்துக்கு ஏற்ற மேய்ப்பர்களைக் கொடுப்பேன், அவர்கள் உங்களை அறிவோடும் புத்தியோடும் மேய்ப்பார்கள்.
16நீங்கள் தேசத்திலே பெருகிப் பலுகுகிற அந்நாட்களிலே, அவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியென்று இனிச் சொல்வதில்லை; அது அவர்கள் மனதில் எழும்புவதும் இல்லை; அது அவர்கள் நினைவில் வருவதும் இல்லை; அதைக் குறித்து விசாரிப்பதும் இல்லை; அது இனிச் செப்பனிடப்படுவதும் இல்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.
17அக்காலத்திலே எருசலேமைக் கர்த்தருடைய சிங்காசனம் என்பார்கள்; சகல ஜாதியாரும் எருசலேமில் விளங்கிய கர்த்தருடைய நாமத்தினிமித்தம் அதினிடமாகச் சேர்வார்கள்; அவர்கள் இனித் தங்கள் பொல்லாத இருதயத்தின் இச்சையின்படி நடவார்கள்.
18அந்நாட்களிலே யூதா வம்சத்தார் இஸ்ரவேல் வம்சத்தாரோடே சேர்ந்து, அவர்கள் ஏகமாய் வடதேசத்திலிருந்து புறப்பட்டு, நான் தங்கள் பிதாக்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தேசத்திற்கு வருவார்கள்.
19நான் உன்னைப் பிள்ளைகளின் வரிசையிலே வைத்து, ஜனக்கூட்டங்களுக்குள்ளே நல்ல சுதந்தரமாகிய தேசத்தை உனக்குக் கொடுப்பது எப்படியென்று சொன்னேன்; ஆனாலும் நீ என்னை நோக்கி, என் பிதாவே என்று அழைப்பாய்; நீ என்னைவிட்டு விலகுவதில்லை என்று திரும்பவும் சொன்னேன்.
20ஒரு மனைவி தன் புருஷனுக்குத் துரோகம்செய்வதுபோல, இஸ்ரவேல் வம்சத்தாராகிய நீங்கள் எனக்குத் துரோகம்செய்தது மெய் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
21இஸ்ரவேல் புத்திரர் தங்கள் வழியை மாறுபாடாக்கி, தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்ததினிமித்தம் அழுதுகொண்டு விண்ணப்பஞ்செய்யும் சத்தம் உயர்ந்த ஸ்தானங்களிலே கேட்கப்படும்.
22சீர்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள்; உங்கள் சீர்கேடுகளைக் குணமாக்குவேன் என்றார். இதோ, உம்மிடத்தில் வருகிறோம்; நீரே எங்கள் தேவனாகிய கர்த்தர்.
23குன்றுகளையும், திரளான மலைகளையும் நம்புகிறது விருதா என்பது மெய்; இஸ்ரவேலின் இரட்சிப்பு எங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் இருப்பது என்பது மெய்யே.
24இந்த இலச்சையானது எங்கள் சிறுவயதுமுதல் எங்கள் பிதாக்களுடைய பிரயாசத்தையும், அவர்கள் ஆடுகளையும் மாடுகளையும், அவர்கள் குமாரரையும் குமாரத்திகளையும் பட்சித்துப்போட்டது.
25எங்கள் இலச்சையிலே கிடக்கிறோம்; எங்கள் அவமானம் எங்களை மூடியிருக்கிறது; நாங்களும், எங்கள் பிதாக்களும் எங்கள் சிறுவயது முதல் இந்நாள்வரைக்கும் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; எங்கள் தேவனாகிய கர்த்தருடைய சொல்லைக் கேளாமலும்போனோம்.
1ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல் போய்,
2அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று.
3அப்பொழுது மோசேயும் எலியாவும் அவரோடே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள்.
4அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்குச் சித்தமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப்போடுவோம் என்றான்.
5அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.
6சீஷர்கள் அதைக் கேட்டு, முகங்குப்புற விழுந்து, மிகவும் பயந்தார்கள்.
7அப்பொழுது, இயேசு வந்து, அவர்களைத் தொட்டு: எழுந்திருங்கள், பயப்படாதேயுங்கள் என்றார்.
8அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுத்துப்பார்க்கையில் இயேசுவைத்தவிர வேறொருவரையும் காணவில்லை.
9அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும்வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார்.
10அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படியென்று கேட்டார்கள்.
11இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எலியா முந்திவந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான்.
12ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார்.
13அவர் யோவான்ஸ்நானனைக்குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள்.
14அவர்கள் ஜனங்களிடத்தில் வந்தபோது, ஒரு மனுஷன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு:
15ஆண்டவரே, என் மகனுக்கு இரங்கும், அவன் சந்திரரோகியாய்க் கொடிய வேதனைப்படுகிறான்; அடிக்கடி தீயிலும், அடிக்கடி ஜலத்திலும் விழுகிறான்.
16அவனை உம்முடைய சீஷர்களிடத்தில் கொண்டுவந்தேன்; அவனைச் சொஸ்தமாக்க அவர்களால் கூடாமற்போயிற்று என்றான்.
17இயேசு பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.
18இயேசு பிசாசை அதட்டினார்; உடனே அது அவனை விட்டுப் புறப்பட்டது; அந்நேரமே அந்த இளைஞன் சொஸ்தமானான்.
19அப்பொழுது, சீஷர்கள் இயேசுவினிடத்தில் தனித்துவந்து: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று கேட்டார்கள்.
20அதற்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம்போகும்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
21இந்த ஜாதிப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.
22அவர்கள் கலிலேயாவிலே சஞ்சரிக்கும்போது, இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார்.
23அவர்கள் அவரைக் கொலைசெய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றார். அவர்கள் மிகுந்த துக்கமடைந்தார்கள்.
24அவர்கள் கப்பர்நகூமில்வந்தபோது, வரிப்பணம் வாங்குகிறவர்கள் பேதுருவினிடத்தில்வந்து: உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று கேட்டார்கள்; செலுத்துகிறார் என்றான்.
25அவன் வீட்டிற்குள் வந்தபோது, அவன் பேசுகிறதற்கு முன்னமே இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் தீர்வையையும் வரியையும் தங்கள் பிள்ளைகளிடத்திலோ, அந்நியரிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள் என்று கேட்டார்.
26அதற்குப் பேதுரு: அந்நியரிடத்தில் வாங்குகிறார்கள் என்றான். இயேசு அவனை நோக்கி: அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்தவேண்டுவதில்லையே.
27ஆகிலும், நாம் அவர்களுக்கு இடறலாயிராதபடிக்கு, நீ கடலுக்குப் போய், தூண்டில்போட்டு, முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதின் வாயைத் திறந்துபார்; ஒரு வெள்ளிப்பணத்தைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடத்தில் கொடு என்றார்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com